15-10-2007
AGANTHUKAYA (OUTCAST)
சிங்களத் திரைப்பட விமர்சனம்
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
எந்த நாடாக இருந்தாலென்ன..?
எந்த மொழியாக இருந்தாலென்ன..?
எந்த இனமாக இருந்தாலென்ன..?
கலைஞர்கள் மட்டும் ஒரே ஜாதிதான்..
மக்களை மகிழ்விப்பதற்கு மட்டுமே கூத்தாடிகளாக தொன்மையான காலத்திலிருந்து உலகக் களத்தில் நிற்கும் கலைஞர்கள், இன்றைக்கு சமூகத்திற்கு ஒரு மருந்தாகவும், விழிப்புணர்வாகவும் மாறிக் கொண்டே செல்கிறார்கள்.
ஜனநாயகம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் செய்கின்ற கேலிக்கூத்துக்களை மக்களிடம் அம்பலமாக்குவதில் ஊடகத் துறையில் இந்தக் கலைஞர்களே முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். தொகை குறைவாக இருந்தாலும் இக்கலைஞர்களின் வீச்சு அளப்பரியது.. நாடு விட்டு நாடு.. அல்ல கண்டம் விட்டு கண்டம் தவ்வக்கூடிய ஏவுகணைகள் போன்றது இக்கலைஞர்களின் வீரிய சக்தி.
தமிழ் தவிர மற்ற மொழிப் படங்களில் கிட்டத்தட்ட நம் ஊர் வாசனையோடு பார்ப்பதற்கு ஒரு ஆவலையும் தூண்டுவதைப் போல் இருப்பவை மலையாள மொழிப் படங்களும், சிங்கள மொழித் திரைப்படங்களும்தான்.
மலையாளத் திரைப்படங்களுக்குப் பிறகு என்னை அதிகம் கவர்ந்திழுப்பது சிங்கள மொழித் திரைப்படங்கள்தான்.. வேறு வேறு நாடாக இருந்தாலும், உணவு, உடை, பழக்கவழக்கங்களில் கிட்டத்தட்ட நம்மைத் தொட்ட கதை, விட்ட கதையாக வியாபித்திருப்பது அவர்களுடைய வாழ்க்கை களம்.
எம்மைப் போலவே சென்டிமெண்ட், குடும்பம், காதல் என்று சில படங்கள் இருந்தாலும் பெரும்பாலான படங்கள் யதார்த்தைத் தூக்கிச் சாப்பிடுவதைப் போல் அமைந்துவிடுகின்றன.
அப்படி என் நெஞ்சைத் தொட்ட ஒரு சிங்களத் திரைப்படத்தைப் பற்றி இந்தப்(http://truetamilans.blogspot.com/2007/08/blog-post.html) பதிவில் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.. அந்த வரிசையில் மற்றுமொரு திரைப்படம்தான் 'AGANTHUKAYA' என்கின்ற இந்த சிங்களத் திரைப்படம்.
ஜனநாயகத்தின் பெயரால் மறைமுகமாக சர்வாதிகார ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொண்டால், ஜனநாயக நாட்டில் என்ன நடக்கும் என்பதனை மிக அழகாகவும், அதே சமயம் உண்மையாகவும் சொல்லியுள்ளார் படத்தின் இயக்குநர் Vasantha Obeyesekere.
சம்பத் முனவீரா ஒரு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்.. கண்டிப்பு மிகுந்தவர். அதே சமயம் நேர்மையும் வாய்ந்தவர். அவருடைய மனைவி குசும் முனவீராவும் வேறொரு பள்ளியில் பாட்டு டீச்சர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள்.
நீதி, நேர்மை, நியாயம், நாணயம் என்பதையெல்லாம் சாதாரண குடிமக்களுக்கு மட்டும்தான்.. அரசாளும் ஆட்சியாளர்களுக்கு அல்ல என்பதை இந்த சாதாரண தலைமையாசிரியர் மூலமாக நமக்கு உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் துவக்கமே இந்த சம்பத் என்கின்ற தலைமையாசிரியரின் தற்கொலையில்தான் துவங்குகிறது.
“சாயந்தரம் சீக்கிரம் வந்து என்னை வெளில கூட்டிட்டுப் போகணும்ப்பா..” என்று பேகில் தன் புத்தகத்தை வைத்தபடி கேட்கும் மகளிடம் “அப்படியே ஆகட்டும்..” என்கிறான் சம்பத். “எந்தப் பிரச்சினையும் வேண்டாம்.. ஸ்கூலுக்கு போயிட்டு சாயந்திரம் சீக்கிரமா வீட்டுக்கு வந்திருங்க..” என்று சொல்லி தானும் ஸ்கூலுக்கு கிளம்புகிறாள் மனைவி.
இருவரையும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைக்கிறான் சம்பத். மகளோ திடீரென்று ஓடி வந்து அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டுச் செல்கிறாள். மனைவியும் திரும்பி வந்து “எதையும் மனசுல நினைச்சுக்காதீங்க.. நான் இருக்கேன்.. பார்த்துக்கலாம்..” என்று ஏதோ ஒரு தைரியம் சொல்லிவிட்டுப் போகிறாள்.
முகத்தில் எந்த வித்தியாசத்தையும் காட்டாமல் வாசலில் நிற்கும் ஸ்கூட்டரை எடுத்து வீட்டுக்குள் வைக்கிறான் சம்பத். வாசலின் கண்ணாடிக் கதவுகளை மெதுவாக மூடுகிறான்.
அவ்வளவுதான்.. இறுக மூடிய மேகக்கூட்டத்தின் அரவணைப்பில், இயற்கை எழில் கொஞ்சும் அந்த வீட்டின் முன்புறத்தை இறுக்கமான குளோஸ்அப்பில் காட்டுவதோடு ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என்பதைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறார் இயக்குநர்.
அடுத்த காட்சியில் கல்வித்துறை அமைச்சர் தன்னைச் சுற்றி நிற்பவர்களிடம் இப்படி கேட்கிறார், “சம்பத் ஏன் தற்கொலை செய்து கொண்டான்..?” என்று..
இப்போது ஆரம்பிக்கின்ற திரைப்படம் இறந்து போன சம்பத்தின் உடல் வீட்டில் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலியில் கரைந்து கொண்டிருக்க.. இடையிடையே அவனது தற்கொலைக்கு முன்புவரையில் நடந்தவைகள் ஒன்றன் பின் ஒன்றாக காட்சிக்கு காட்சி கதையின் அழுத்தத்தைக் கூட்டிக் கொண்டே செல்வது சிறப்பானதாக இருந்தது.
அமைச்சரிடம், “சம்பத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த போக வேண்டாம். அங்கே மக்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள்” என்று கைத்தடிகள் சிலர் சொல்வதிலேயே அத்திரைப்படம் அதிகார வர்க்கத்திற்கும், சாமான்ய மக்களுக்குமான போரைக் குறித்தது என்பது தெளிவாகத் தெரிந்தது.
‘பள்ளி ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும். மது, சிகரெட் பழக்கத்தை அடியோடு மாணவர்களுக்கே தெரியாத அளவுக்கு நாம் நடந்து கொள்ள வேண்டும்’ என்று ஆசிரியர்களுக்கும் அட்வைஸ் செய்கிறார் சம்பத்.
ஆனால், அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே “வந்துட்டான்யா புத்தன்.. எங்கிட்டிருந்துதான் இப்படி கூட்டியார்றானுகளோ..” என்று சொல்லியபடியே ஒரு புவியியல் ஆசிரியர் சிகரெட்டை பற்ற வைத்தபடியே பள்ளிக்குள் உலாத்துகிறார். ஒரு விஷயம் தவறு என்றால் அதை சரி என்று சொல்பவனும் இருக்கத்தானே செய்வான்..
அமைச்சருக்கும், சம்பத்திற்கும் முதல் பிரச்சினை அரசியல் பின்னணியுடன் துவங்குகிறது. 10 மில்லியன் நன்கொடைத் தொகையுடன் அப்பள்ளிக்கு புது பில்டிங் கட்டுவதற்கான ஆணை அரசிடமிருந்து வெளியாகிறது. அந்த கான்ட்ராக்ட்டை தனக்கு நெருக்கமான கட்சிக்காரர் ஒருவருக்குக் கொடுக்கும்படி அமைச்சர் ‘அன்பாகவே’ சொல்கிறார். “அதற்கென செலக்ஷன் கமிட்டி பள்ளியில் உள்ளது என்பதால் அது முடிவெடுக்கும்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறார் சம்பத்.
வீட்டிலும் அதே கான்ட்ராக்டர் அமைச்சர் சொன்னதாகச் சொல்லி ‘கமிஷன் தருகிறேன்’ என்று சொல்லி ஆசை காட்டுகிறார். ‘அமைச்சருக்கும் இதில் தொடர்பு உண்டே’ என்று தன் மனைவியிடம் சொல்லிப் புலம்புகிறார் சம்பத். “உங்க ஒருத்தரால இந்த சமூகத்தைத் திருத்த முடியாது. ஊரோடு ஓத்துப் போங்கள்..” என்கிறார் மனைவி. சம்பத் தெளிவாகவே சொல்கிறார் “முடியாது” என்று.
செலக்ஷன் கமிட்டி, அமைச்சர் சிபாரிசு செய்த கான்ட்ராக்டரை நிராகரித்து வேறு ஒருவருக்கு பணியினைத் தருகிறது. அமைச்சர் கூப்பிட்டனுப்புகிறார். “என் ஆளுக்கு அந்த வேலையைத் தரலைன்னா நாளைக்கு எவன்யா எனக்கு அங்க ஆதரவா இருப்பான்..? யார் எனக்கு நாளைக்கு ஓட்டுப் போடுவா.. நீ என்னை ரொம்ப அவமானப்படுத்திட்ட..” என்று கொந்தளிக்கிறார்.
சம்பத் அமைச்சரை எதிர்த்துப் பேச தயங்குகிறார். ஏற்கெனவே நான்கு டிரான்ஸ்பர்களை சந்தித்து அல்லல்பட்ட அனுபவத்தால் பக்குவத்துடன் பேசுகிறார். “அது ஸ்கூல் செலக்ஷன் கமிட்டி செய்த செயல் ஸார்.. நான் ஒருவனே முடிவு எடுத்ததல்ல..” என்கிறார். அமைச்சரைவிட கைத்தடிகளின் கோபம்தான் உச்சத்தில் இருக்கிறது.
விஷயம் வெளியே தெரிந்தால் பதவிக்கு ஆபத்து என்பதால் அப்போதைக்கு அதை கை விடுகிறார் அமைச்சர். ஆனாலும் அரசியல்வாதிகளை பகைத்துக் கொண்டால் என்னென்ன நடக்கும் என்பதையெல்லாம் அடுத்தடுத்து உணர்கிறார் சம்பத்.
பள்ளியில் அமைச்சரின் ஆதரவாளர்களான ஆசிரியர்கள் சம்பத்தை மதிக்காமல் பேசவும், நடக்கவும் துவங்குகிறார்கள். அதில் ஒரு ஆசிரியர் அமைச்சரின் அடியாள் வேலையுடன் லஞ்சம் வாங்கிக் கொண்டு மாணவர்களை சேர்க்கும் வேலையையும் சேர்த்தே செய்து கொண்டிருக்கிறார்.
கஷ்டப்பட்டு இதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தில் கட்டத் துவங்கும் அவருடைய புது வீட்டை, கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள்.
பள்ளியில் கட்டிக் கொண்டிருக்கும் புது பில்டிங் பற்றிய பைல் ஒரே நாளில் பள்ளியிலேயே காணாமல் போகிறது. இப்படியாகும் என்று நினைத்து ஒரு காப்பியை மறைத்து வைத்திருக்கும் சம்பத், அதை சோதனை செய்ய வரும் மேலதிகாரிகளிடம் கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்.
அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை துவங்குகிறது. அதற்கும் ஒரு செலக்ஷன் கமிட்டி இருக்கிறது. அந்தக் கமிட்டிக்கு அமைச்சரின் அடியாளான புவியியல் ஆசிரியர்தான் செயலாளர். தன் வீட்டிலேயே ஒரு அலுவலகத்தைத் திறந்து, “உன் பையனுக்குத்தான் சீட்..” என்று கேட்காமலேயே வரம் வழங்கி அந்த வரத்திற்கு காணிக்கையாக சில ரூபாய் தாள்களை கத்தையாக வாங்கி ஜோப்பியில் போட்டுக் கொள்கிறார்.
இந்த விவகாரம் சம்பத்திற்குத் தெரிய வர, அந்த புவியியல் ஆசிரியரை செயலாளர் பதவியிலிருந்து அகற்றுகிறார். கைத்தடிக்கு கோபம் கொப்பளிக்கிறது. சம்பத்திடம் வந்து நியாயம் கேட்கிறான். சம்பத் நாகரிகமாக அவனது லஞ்ச லாவண்ய பிஸினஸை குறிப்பிட்டுச் சொல்கிறார். “எனக்கும் ஒரு நேரம் வரும்..” என்று கருவிக் கொண்டே செல்கிறான் அந்த கைத்தடி.
கல்வித்துறையின் செயலாளரின் மகளுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. ஆனால் அந்த ஊரிலேயே மிகப் பெரிய ரெளடி என்று பெயரெடுத்தவனின் மகளுக்கு சீட் கிடைக்கிறது. செயலாளர் நேரிலேயே வந்து சம்பத்தை மிரட்டுகிறார். சம்பத் எதற்கும் பயப்படவில்லை.
புவியியல் ஆசிரியரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அந்த ஆசிரியரின் குருவான அமைச்சரிடம் சொல்லிப் புலம்புகிறார்கள். தன் தொகுதி மக்களின் கண்ணீரைத் துடைக்க அமைச்சர் சம்பத்தை வரவழைக்கிறார். தன் ஆதரவாளர்களுக்கு கொடுக்காததைவிட செயலாளரின் மகளுக்குக் கொடுக்காததை அமைச்சர் விமர்சிக்கிறார்.
“லஞ்சத்தை வாங்கிட்டுப் போயிட்டு இருக்கிறதைவிட்டுட்டு நீ எதுக்கு காந்தி வேஷம் போடுறே..” என்கிறார் அமைச்சர். சம்பத் தன் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்கிறார். “செயலாளருக்கு என்ன பதில்..” என்று கேட்கிறார் அமைச்சர். “கல்வி அமைச்சரவை சிபாரிசு கடிதம் கொடுத்தால் சீட் தருகிறேன்..” என்கிறார் சம்பத். இதுவே அமைச்சருக்கு மிகப் பெரிய அவமானமாகப் போகிறது.
அமைச்சரின் நெற்றிக்கண் திறக்கிறது.. ஏவுகணைகளாக உத்தரவு பறக்க.. ஒரு உத்தரவின்படி மறுநாள் காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும்போது ஒரு வேன் அவரை இடிப்பதைப் போல் இடித்து பயத்தை உண்டு பண்ணுகிறது.
அடுத்த நாள் முதல் தன் மனைவி, மகளை தனியே வேனில் செல்லும்படி பணிக்கிறார் சம்பத். மனைவிக்கு பயம் கொள்ளுகிறது. கணவனுக்கு அட்வைஸ் செய்கிறாள். “நமக்கு குடும்பம்னு ஒண்ணு இருக்கு..” என்கிறாள். சம்பத் காந்தீயத்தில் மூழ்கிவிட்டான். இனி முத்தெடுக்காமல் வெளியில் வர மாட்டான் என்பது தெரிகிறது மனைவிக்கு.
மறுநாளை சம்பத்தை அமைச்சரின் அடியாட்கள் போட்டுத் தாக்குகிறார்கள். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் சம்பத் அசராமல் இருக்கிறான். “எத்தனை தாக்குதல்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வேன்..” என்கிறான். அவனுக்காக பள்ளி மாணவ, மாணவிகள் போர்க்கொடி தூக்குகிறார்கள்.
பள்ளியில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடக்கிறது.. ஆசிரியர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டுவிடுகிறது. விஷயம் அமைச்சருக்குப் போக.. பள்ளியை தற்போதைக்கு இழுத்து மூடும்படி உத்தரவிடுகிறார். ஆனாலும் சம்பத்தின் அசராத போக்கு அவருக்கு கவலையைத் தருகிறது.
இடத்தைக் கொடுத்தால் மடத்தையே கேட்பவர்களாயிற்றே அரசியல்வாதிகள். அமைச்சரின் அரசியல் புத்தி யோசிக்கிறது. மும்முனைத் தாக்குதலைத் துவக்குகிறார்.
சம்பத்தின் மனைவி வேலை செய்யும் பள்ளியின் தலைமை ஆசிரியை அவளை அழைத்து, “இது வேண்டாத வேலை.. குடும்பத்தை பார்த்துக்க..” என்று சொல்லி அட்வைஸ் செய்கிறாள்.
சம்பத் குடியிருக்கும் வீட்டு ஓனர், “ஒரு மாத கால அவகாசத்தில் வீட்டைக் காலி செய்யும்படியும் என்ன காரணம் என்று தயவு செய்து கேட்காதீர்கள். புரிந்து கொள்ளுங்கள்..” என்று முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலேயே சொல்கிறாள். புரிந்து கொள்கிறாள் சம்பத்தின் மனைவி.
இப்போது பாதியில் நிற்கும் புது வீட்டின் நிலைமை என்ன? இன்னொரு டிரான்ஸ்பர் கணவருக்கு வந்து விடுமோ என்று மனைவி பயந்து கொண்டிருக்க சம்பத்தின் மன அமைதிக்கு கையெறி குண்டையே வீசுகிறார் அமைச்சர் வேறு ரூபத்தில்.
அமைதியாக பள்ளி நடந்து கொண்டிருக்க தனது படை, பரிவாரங்களுடன் பள்ளிக்கு வரும் அமைச்சர் உடனடியாக அசெம்பளியைக் கூட்டும்படி சம்பத்திடம் சொல்கிறார். சம்பத்தும் அதை கடமையேற்று செய்ய..
அனைத்து மாணவ மாணவிகளும் கூடியிருக்க அமைச்சர் பேசத் துவங்குகிறார்.
“இந்தப் பள்ளி இப்போது மேல்நிலைப் பள்ளியாக கிரேடு உயர்த்தப்பட்டுள்ளது..” என்கிறார். அனைவரும் மகிழ்ச்சியாகிறார்கள். தொடர்ந்து தனது பேச்சில் குண்டை வீசுகிறார் அமைச்சர். “மேல்நிலைப் பள்ளியானதால், இனிமேல் சம்பத் இங்கே தலைமை ஆசிரியராக வேலை பார்க்க முடியாது. அவருக்குப் பதிலாக ஏற்கெனவே அங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு ஆசிரியருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு என்பதால் சம்பத் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறார்” என்கிறார்.
சம்பத் சிலையாகிப் போய் நிற்கிறார். கூடவே அமைச்சரின் ஆணவம் பேசுகிறது இப்படி, “இப்போதைய தலைமை ஆசிரியர் சம்பத், இனிமேல் இதே பள்ளியில் விளையாட்டுத் துறை ஆசிரியராக வேலை பார்ப்பார்.. இது அரசு முடிவு..” என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.
செத்த பிணம் போல் வீடு திரும்பும் சம்பத்திடம் வீட்டைக் காலி செய்யும் உத்தரவு வந்துள்ளதை மனைவி சொல்ல, வீடு இருளடைகிறது..
தொடர்ந்ததுதான் மறுநாள் காலை நிகழும் சம்பத்தின் தற்கொலை..
படத்தினை கோர்வையாக இதே போல் எடுத்திருந்தால் நிச்சயம் படம் அலுப்பைத் தந்திருக்கும். ஆனால் அதைப் போக்கும்விதத்தில் Cut to Scene-களாக இப்போது நடப்பவைகளையும், முன்பு நடந்தவைகளையும் மாற்றி மாற்றிக் காண்பித்ததில் படம் தொய்வில்லாமல் சென்றது.
நடிப்பைப் பொறுத்தமட்டில் இதில் ஹீரோவாக சம்பத்தாக, நடித்த சம்பத் முனீவீரா என்ற நடிகரின் முகத்தில் அப்படி ஒரு சாந்தம். அமைதியான நடிப்பு.
அதிலும் இறுதிக் காட்சியில் அவர் இதே பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் சொல்லிவிட்டு அவரைப் பார்க்கின்ற போது அவர் காட்டும் முகபாவத்தை சொல்லியே ஆக வேண்டும்.
ஏதோ திரைப்படங்கள் என்றால் அநியாயம் நடக்கின்றபோது அதை ஆரவாரமாக எதிர்த்துக் கூச்சலிட்டு, கூப்பாடு போட்டால்தான் படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் நிற்கும் என்றில்லை. அமைதியான ஒரு பார்வையே போதும் என்பது உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
அதே போல் இதே காட்சியில் தொடர்ந்து கை தட்டிக் கொண்டே வரும் மாணவ, மாணவிகள் சம்பத் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று அமைச்சர் சொன்னவுடன் புரியாத குழப்பத்தில் கை தட்டலை மறந்து நிற்கின்றபோது படம் பார்த்த எனக்குத்தான் கை தட்ட வேண்டும் போலிருந்தது. தட்டினேன்..
அமைச்சராக நடித்தவரும் அலட்டலான மனிதர். இவர் நடிப்பில் ஏற்கெனவே சில திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். போலியாகப் பேசுகிறோம், போலியாகவே பாராட்டுகிறோம்.. போலியாகவே மக்களிடம் பழகுகிறோம் என்பதை வஞ்சகமில்லாமல் நிஜமாகவே தன் நடிப்பில் காட்டியிருக்கிறார் அவர்.
சம்பத்தின் உடல் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்க பத்திரிகைகள் அவரது மரணத்தைப் பற்றி எழுதத் துவங்குகின்றன. அதைத் தடுக்கப் பார்க்கும் அமைச்சர் சில பத்திரிகைகளை மிரட்டால் அரவணைக்கிறார்.
இதைப் பார்த்து இன்னொரு பத்திரிகை ‘இந்த ஒரே காரணத்துக்காகவே இதை கவர் செய்யப் போவதாக’ தனது பத்திரிகா தர்மத்தை வெளிப்படுத்துகிறது. அதையும் கச்சிதமாக இறப்பு வீட்டில் செய்கிறார்கள்.
சம்பத்தின் மாமனார் தன் மருமகனுக்கு மாலை, மரியாதை செய்வது, அஞ்சலி செலுத்திப் பேசுவது என்பதெல்லாம் பிடிக்காது என்று சொல்லியும் எதிர்க்கட்சியும், ஆளும்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு அதையே செய்வது தனி மனிதர்களைவிட அரசியல்வாதிகள் என்ற இனத்திற்கு தனியே ஒரு குணமுண்டு என்பதை உணர்த்துகிறது.
பத்திரிகைகள் மாணவ, மாணவிகளின் எதிர்ப்பை பதிவு செய்து வெளியிடுகின்றன. சம்பத்தின் வீட்டில் அஞ்சலி செலுத்த வருபவர்களிடம் பேட்டி காண்கிறார் நிருபர். முதலில் எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி செலுத்த வரும்போது யாரும் கேட்காமலேயே ஒரு அஞ்சலி பேச்சை நடுவீட்டில் சம்பத்தின் உடலருகே உரையாற்றுகிறார்.
“இது நிச்சயமாக அரசியல் பாஸிஸத்தின் விளைவு. ஆளும் கட்சியின் அச்சுறுத்தல், மிரட்டல் காரணமாகத்தான் இந்த அப்பாவியின் மரணம் விளைந்திருக்கிறது..” என்று எதிர்க்கட்சிகளுக்கே உரித்தான குணத்தை காட்டிவிட்டுச் செல்கிறார் அதன் தலைவர்.
இதை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு “இப்போது நான் அங்கே போகவில்லையெனில் மக்கள் நிஜமாகவே நான்தான் கொலைகாரன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்பதால் நான் போயே ஆக வேண்டும்.” என்று சொல்லும் அமைச்சர், அஞ்சலி செலுத்த சம்பத் வீட்டிற்கு வருகிறார்.
வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட புன்னகை சிரிப்புடன், எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களை ஒப்புவிக்கும் நடிப்புடன் அமைச்சர் அந்த வீட்டில் நடந்து கொள்ளும்விதம் அரசியல் காமெடிக்கு ஒப்பானதாக எடுக்கப்பட்டிருக்கிறது.
அறைக் கதவைச் சாத்திக் கொண்டு தன் மகளுடன் அழுது கொண்டிருக்கும் சம்பத்தின் மனைவியைத் தேடி கைத்தடிகளுடன் உள்ளே வருகிறார் அமைச்சர். சம்பத்தின் மனைவி அவரை நிமிர்ந்துகூட பார்க்காமல் வெளியே போகும்படி சொல்ல..
அமைச்சர் ஆர்வமிகுதியிலும், கேமிராமேன் அருகில் நிற்பதைப் பார்த்தும் ஓடோடிச் சென்று சம்பத்தின் மகளை வாஞ்சையுடன் அணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காட்சி ஒன்றுதான் இப்படத்தின் ஒரேயரு காமெடி சீன் என்றே சொல்லலாம்.
ஒன்றன் பின் ஒன்றாக சம்பத் சந்திக்கும் சோதனைகளை இறப்பு வீட்டில் அந்த நேரம் நிகழும் சம்பவங்களுக்குப் பிறகு துண்டு, துண்டாகக் காட்டிவிட்டு கடைசியில்தான் சம்பத்தின் தற்கொலைக்குக் காரணமான அவருடைய பதவி இறப்பு நிகழ்ச்சியைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இதுதான் இத்திரைப்படத்தின் மையப்புள்ளி. அரசியல்வாதிகளும், அரசியலும் நினைத்தால் ஒரு சாதாரண குடிமகனை என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு இத்திரைப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இத்திரைப்படத்தின் வசனங்கள் குறிப்பாக அமைச்சர் பேசுகின்ற வசனங்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலையை பிரதிபலிப்பதைப் போலத்தான் எனக்குத் தோன்றியது.
அங்கே மட்டுமல்ல.. இந்தியாவில், ஏன் தமிழ்நாட்டிற்குக்கூட அந்த வசனங்கள் கச்சிதமாகப் பொருந்தும்தான்.
“நீங்க ஒருத்தர் மட்டுமே இந்தச் சமூகத்தைத் திருத்த முடியாது..” என்கின்ற மனைவியின் எதிர்ப்புக்கு பதில் சொல்லும் சம்பத், “எனக்கும் தெரியும்.. ஆனால் அப்படி ஒரு முயற்சி நடந்திருக்கிறது என்ற அளவிலாவது என் பெயர் குறிக்கப்படுமே..” என்கிறான்.
ஆம்.. நிச்சயம்.. பொறிக்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.
|
Tweet |
18 comments:
சிங்களப்படமெல்லாம் உங்களுக்கு எப்படிக் கிடைக்குது. சொன்னா நாங்களும் பாப்பம்ல
முழுக்கதையையும் அழகாகக் கூறினீர்கள் நண்பரே!! - படம் முழுவதையும் கண்ட மகிழ்ச்சி - நெகிழ்ச்சி மனதில்.
சிறு சிறு சம்பவங்களாக கோர்வையாக படம் முழுவதையும் கண் முன்னால் நிறுத்திய இடுகை மிக அருமை.
கை தட்டிய மாணவர்கள் கை தட்ட மறந்த நிலையில் கை தட்டிய நண்பரே !! அருமையான படத்தை ரசித்துப் பார்க்கும் ஆனந்தம் அளவிட முடியாது.
ஒரு சாதாரணக் குடிமகனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அறவழிப் போராட்டம் பல திரைப்படங்களில் காட்டப்பட்டிருந்தாலும் இப்படம் ஒரு தனித்தன்மை வாய்ந்த படமாகத் தோன்றுகிறது.
நல்ல நடை.....
ஆமா,எங்கே பிடிக்கிறீங்க சிங்களப் படமெல்லாம்?????????
நல்லாயிருந்தது.எப்படி நேரம் கிடைக்கிறது.
நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க..
//Anonymous said...
சிங்களப் படமெல்லாம் உங்களுக்கு எப்படிக் கிடைக்குது. சொன்னா நாங்களும் பாப்பம்ல..//
சென்னையில் தற்போது சிங்களத் திரைப்பட விழா நடக்கிறது அனானி.. சென்னை பிலிம் சேம்பர் தியேட்டரில் மாலை நேரங்களில். நேரம் இருந்தால் வாருங்கள்..
//cheena (சீனா) said...
முழுக்கதையையும் அழகாகக் கூறினீர்கள் நண்பரே!! - படம் முழுவதையும் கண்ட மகிழ்ச்சி - நெகிழ்ச்சி மனதில். சிறு சிறு சம்பவங்களாக கோர்வையாக படம் முழுவதையும் கண் முன்னால் நிறுத்திய இடுகை மிக அருமை.கை தட்டிய மாணவர்கள் கை தட்ட மறந்த நிலையில் கை தட்டிய நண்பரே !! அருமையான படத்தை ரசித்துப் பார்க்கும் ஆனந்தம் அளவிட முடியாது.ஒரு சாதாரணக் குடிமகனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அறவழிப் போராட்டம் பல திரைப்படங்களில் காட்டப்பட்டிருந்தாலும் இப்படம் ஒரு தனித்தன்மை வாய்ந்த படமாகத் தோன்றுகிறது.//
உண்மை சீனா.. என்னைப் போலவே அனுபவித்துப் படித்திருப்பீர்கள் போலிருக்கிறது. எனது மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போன்றோரின் ஆசியும், உற்சாகமூட்டலும்தான் என்னைப் போன்றவர்களுக்கு வேண்டும்..
//நல்ல நடை.....
ஆமா,எங்கே பிடிக்கிறீங்க சிங்களப் படமெல்லாம்?????????//
செல்வன் ஸார்.. நீங்களும் ஒரு முறை பாருங்கள்.. பிடித்துப் போய் விடும்.. எல்லாம் பிலிம் பெஸ்டிவல் மாதிரியான இடங்களில் பார்ப்பதுதான்.. இப்போது சென்னையில் சிங்களத் திரைப்பட விழா நடக்கிறது..
//ரசிகன் said...
நல்லாயிருந்தது.எப்படி நேரம் கிடைக்கிறது. நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க..//
வாழ்த்துக்கள் ரசிகன்.. வருக.. வருக..
உங்கள் பதிவிற்குள் வந்தேன். வேறு டெம்ப்ளேட் மாற்றி Font Size-ஐ குறைத்து எழுதினால் படிப்பதற்கு நன்றாக இருக்கும்.
// சென்னையில் தற்போது சிங்களத் திரைப்பட விழா நடக்கிறது //
மிகவும் மகிழ்ச்சி நானும் இடைக்கிடை சிங்களப்படங்கள் பார்ப்பதுன்டு அனேக சிங்களப்படங்களில் ஒருவித அமைதி காணப்படும் {தேவையில்லாத இசைக்கலப்புகளில்லை}
///மாயா said...
// சென்னையில் தற்போது சிங்களத் திரைப்பட விழா நடக்கிறது //
மிகவும் மகிழ்ச்சி நானும் இடைக்கிடை சிங்களப் படங்கள் பார்ப்பதுன்டு அனேக சிங்களப் படங்களில் ஒருவித அமைதி காணப்படும் {தேவையில்லாத இசைக் கலப்புகளில்லை}///
உண்மைதான் மாயா. இந்தத் திரைப்படத்திலும் இதேதான்.. பல இடங்களில் மெளனத்தையே ஒலியாக வைத்திருக்கிறார் இயக்குநர். மெளனத்தைவிட ஒரு குறிப்பானை வேறு எதுவுமில்லை. சிங்களப் படங்களின் போர் குறித்த திரைப்படங்கள் அனைத்திலுமே துப்பாக்கி சப்தத்தைத் தவிர வேறு இடங்களில் ஒலியே இருக்காது.. அதுதான் அந்த இயக்குநர்களுடைய எதிர்ப்பின் மெளனக் குறியீடு என்று நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றிகள்..
நண்பரே,
பேரை மாத்திட்டிங்க :-)
நல்ல விமர்சனம்..நானும் Highway-9 என்ற ஒரு தமிழ்-சிங்கள திரைப்படம் பார்த்தேன்.வித்தியாசமாக இருந்தது. இன்னும் சற்று முயற்சி செய்தால் இலங்கையில் தயாராகும் தமிழ் மற்றும் சிங்கள படங்கள் தரத்தில் இந்திய படங்களை பின் தள்ளிவிடும்.
HIGHWAY-9 படம் பார்க்க இந்த சுட்டிக்கு செல்லவும்.
http://desifun.co.uk/player.php?url=2759
//அறிவன் /#11802717200764379909/ said...
நண்பரே, பேரை மாத்திட்டிங்க :-)//
மன்னிக்கவும் நண்பரே.. தொடர்ந்து செல்வனுக்கு கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டிருந்ததால் அதே ஞாபகம். ஸாரி..
//பாபு மனோகர் said...
நல்ல விமர்சனம்..நானும் Highway-9 என்ற ஒரு தமிழ்-சிங்கள திரைப்படம் பார்த்தேன்.வித்தியாசமாக இருந்தது. இன்னும் சற்று முயற்சி செய்தால் இலங்கையில் தயாராகும் தமிழ் மற்றும் சிங்கள படங்கள் தரத்தில் இந்திய படங்களை பின் தள்ளிவிடும். HIGHWAY-9 படம் பார்க்க இந்த சுட்டிக்கு செல்லவும். http://desifun.co.uk/player.php?url=2759//
பாபு ஸார், நானும் அந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். சுட்டிக்குள் சென்றால் 2 மணி நேரம் செல்லும்போல் தோன்றியது.. 70MM Screne-ல் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். அப்போதுதான் முழுமையும் புரியும்..
உண்மையாகவே சிங்களத் திரைப்படங்கள் பல தமிழ்த் திரைப்படங்களையெல்லாம் தரத்தில் தூக்கிச் சாப்பிட்டுவிடக் கூடிய அளவுக்குத்தான் இருக்கின்றன. இனி வரும் காலங்களில் ஈரான் படங்களைப் போல் உலகத் தரத்தில் சிங்களப் படங்கள் இருக்கலாம் என்பது எனது கருத்து.
தங்களது வருகைக்கும், பாராட்டுக்கும் எனது நன்றிகள்.
Very nice comments. i like u r way of vimarsanam.
கலக்கல் கண்ணா கலக்கல்! படத்தையே கண்முன்னாடி நிப்பாட்டிட்டியே ராசா.. ஆனா ஒழுங்கா என் செல்லுக்கு ஒரு போன்போடு.. இல்லை மருவாதி கெட்டுடும்.. ( அடக்கமா சொன்னா ஆர்ட் பிலிம் மாதிரி ஆகிடும்ல.. என்னமோ போ.. நம்மளுக்கு போக்கிரி மாதிரி எகிறுனாத்தானே படமே பாத்த மாதிரி இருக்கு!)
மிக அழகான விமர்சனம்.சிங்களப் படங்கள் மிக நேர்த்தியாக ஒரு கலை நயத்தோடு எடுக்கப்பட்டிருக்கின்றன.எனக்கு இன்னும் இப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை.உங்கள் தெளிவான விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.
'சுலங்க,சுலங்க் கிரில்லி,புரஹந்த கலுவர' சிங்களப்படங்களையும் பாருங்கள்.மிக நல்ல படங்கள்.உலக விருதுகள் பலவற்றையும் பெற்றுக் கொண்டவை.
See who owns metacam.ru or any other website:
http://whois.domaintasks.com/metacam.ru
Post a Comment