02-10-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சில சமயங்களில் இதழ்களில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளைவிட அதற்கு வரும் எதிர்வினைகள்தான் அருமையாக இருக்கும்.
அதேபோன்று நான் சமீபத்தில் படித்த 'குமுதம் தீராநதி'யில், வெளி வந்திருக்கும் எதிர்வினை இது. படித்துப் பாருங்கள்.
"கடந்த தீராநதி இதழில் அ.மார்க்ஸ் அவர்கள் குடி சம்பந்தமாக எழுதியிருந்தார். 'மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு தினமும் இரண்டு பெக் விஸ்கி குடிப்பார்' என்று வேறு சொல்லியிருந்தார்.
இதைப் படித்ததும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. அண்மையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், விஜயகாந்தை 'குடிகாரன்' என்று சொல்ல பதிலுக்கு 'அவர் பக்கத்திலிருந்து ஊத்திக் கொடுத்தாரா..?' என்று கேட்க, குடிமக்கள் பிரச்சினையைவிட இவர்களுக்கு குடிப் பிரச்சினை பெரியதாய் போயிருந்தது.
சமீபத்தில் ஒரு முறை கலைஞர்கூட ஜெயலலிதாவை விமர்சிக்கையில், 'நேத்து கொஞ்சம் அதிகமா போச்சு' என்று சொல்லியிருந்தார்.
'இ.பி.கோ. 326-வது பிரிவின் கீழும் மதுவிலக்கு சட்டத்தின் கீழும் புதுக்கோட்டையில் பிரபல நடிகர் கைது. மது அருந்தின குற்றத்திற்காகவும் தனது சொந்த வீட்டில் மதுவகை பாட்டில்கள் வைத்திருந்ததாகவும் மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரர்களான செல்லையா, சந்தானம் பிள்ளை ஆகியோரிடம் சண்டைக்குச் சென்று அவர்களுக்குப் பலத்தக் காயத்தை ஏற்படுத்தியதாலும் கைது செய்யப்பட்டார்' என்று அன்றைய ஒரு சினிமா பத்திரிகையில் செய்தி வந்தது.
யார் அந்தப் பிரபலமான நடிகர்? அன்றைக்கு சூப்பர் ஸ்டாராக விளங்கிய பி.யூ.சின்னப்பாதான் அந்த பிரபல நடிகர்.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் மாதம் 15 ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தவர் பி.யூ.சின்னப்பா. பிறகு ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து டைரக்டர் பி.கே.ராஜா சாண்டோ இயக்கிய 'சந்திரகாந்தா' படத்தில் இணை கதாநாயகனாக சினிமா உலகத்திற்குள் வந்தவர் பி.யூ.சின்னப்பா. இந்தப் படத்தில் அவரது சொந்தப் பெயர் புதுக்கோட்டை சின்னச்சாமி.
அடுத்து வந்த 'ராஜமோகன்', 'அனாதைப் பெண்',' ய்யாதி', 'பஞ்சாப் கேசரி', 'மாத்ருபூமி' போன்ற எல்லாப் படங்களும் ஹிட். அதனால் புதுக்கோட்டை சின்னச்சாமி, 'பி.யூ.சின்னச்சாமி' என்று பெயர் மாறுகிறது.
1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளிவந்த 'உத்தமபுத்திரன்' என்ற படம் சூப்பர் ஹிட். இதனால் சின்னப்பாவும் சூப்பர் ஹிட்டானார். சின்னப்பாவிற்கு சினிமாவிற்குள் வந்த காலத்திலிருந்தே மதுப் பழக்கம் இருந்திருக்கிறது. பிறகு அவரது புகழ் வளர வளர மதுப் பழக்கமும் வளர்ந்துவிட்டது.
முடிவு, புதுக்கோட்டையில் தனது நண்பர்களுடன் 'மணமகள்' படத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய பி.யூ.சின்னப்பா அன்றிரவே சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது மயக்கமாக வருகிறது என்று ரத்தம், ரத்தமாக வாந்தியெடுத்து மயக்கமடைந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் அவரைப் பரிசோதித்த டாக்டர், கையை விரித்து விட்டார். ஆமாம், மிதமிஞ்சிய குடியால் பி.யூ.சின்னப்பா இறந்து போனார்.
இதேபோல், 1948-ல் 'குண்டூசி' என்ற இதழில் ஒரு செய்தி. 'நாதஸ்வர வித்வான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை திருமலையில் சென்ற பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மதுவிலக்கு விதிகளை மீறி நடந்து கொண்டதற்காக சித்தூர் அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டால் இம்மாதம் 17-ம் தேதியன்று ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டார்..'
1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. இதை நாட்டு மக்களுக்கு பிரகடனப்படுத்த பிரமாண்டமான சுதந்திர விழா டெல்லியில் நடந்தது. அந்த விழா மேடையில் சுமார் 10 நிமிடம் மட்டுமே தனது நாதஸ்வரத்தை வாசித்துக் காட்டினார் ராஜரத்தினம் பிள்ளை. இதைக் கேட்டு இந்திய முதல் பிரதமர் நேரு அசந்து போனார். இவரது நாதஸ்வர இசைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் பிரகடனத்தை நேரு வாசித்தார்.
'சினிமா ராணி' என்று போற்றப்பட்ட டி.பி.இராஜலட்சுமிதான் முதன் முதலில் இயக்கிய 'மிஸ் கமலா(1936)' படத்தில் கடைசியில் வரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் வாசித்தார். இதுதான் சினிமாவுக்கு அவர் அறிமுகமான விதம்.
பிறகு 1940-ல் அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய 'காளமேகம்' படத்தில் டி.என்.இராஜரத்தினம் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார்.
இப்படி புகழ் பெற்றிருந்த டி.என்.இராஜரத்தினம் ஒரு மணி நேரத்தில் ஒரு கேஸ் அதாவது 12 பாட்டில்கள் மதுவை அருந்தும் அளவுக்கு மதுவிற்கு அடிமையாக இருந்தார். 1930-லிருந்து 1950-வரை அவர் சம்பாதித்த தொகை 5 கோடி. முதலில் கார் வாங்கிய நாதஸ்வர வித்வான்.
ஆனால் மிதமிஞ்சிய குடியினால் 1956 டிசம்பர் மாதம் 12-ம் தேதி மாரடைப்பால் இறந்து போனார். தன் வாழ்நாளில் 5 கோடி சம்பாதித்த டி.என்.இராஜரத்தினம் இறந்தபோது அவரது ஈமச்சடங்கு செலவை என்.எஸ்.கிருஷ்ணன்தான் செய்தார்.
மதுவிலக்குப் பிரச்சாரத்தைப் பற்றி மக்களுக்கு புத்திமதி சொல்லி படம் எடுத்த என்.எஸ்.கிருஷ்ணன், அதிக மது அருந்தி வந்ததன் காரணமாக ஏற்பட்ட மஞ்சள் காமாலை, குலை வீக்கம் நோயினால் 1957 ஆகஸ்ட் 30-ம் தேதியன்று சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இறந்து போனார்.
அடுத்து என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி டி.ஏ.மதுரம். என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாப் பிரவேசம் செய்தது 1935-ம் ஆண்டு ன்றால், அதே வருடம் வெளியான 'ரத்னாவளி' படத்தின் மூலம்தான் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மதுரமும் சினிமா நடிகையானார்.
'வஸந்தசேனா' என்ற படத்தில் நடிக்கும்போதுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், டி.ஏ.மதுரத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. பிறகு, இந்தப் படத்தின் ஷ¥ட்டிங்கிற்காக பீகார் சென்றபோதுதான் அங்கே டி.ஏ.மதுரத்தை என்.எஸ்.கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். கலைவாணர் இறந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்த டி.ஏ.மதுரம், அவருக்கும் ஏற்பட்ட குடிப்பழக்கத்தால் உடல் நலிவுற்று இறந்து போனார். அவர் இறந்தது 23.05.1974-ல்.
அடுத்ததாக நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி. அன்றைய காலத்தில் புகழ் பெற்ற நாடக சபாக்களில் ஒன்றான மங்கள கான சபா பெரும் நஷ்டத்தில் யங்கி வந்தது. இதை என்.எஸ்.கிருஷ்ணன் விலைக்கு வாங்கி, என்.எஸ்.கே. நாடகசபா என்று பெயர் மாற்றி கே.ஆர்.ராமசாமியிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார். கே.ஆர்.இராமசாமி குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்ததால், கம்பெனி மீண்டும் அதே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.
இந்த நாடக சபா மூலமாகத்தான் அண்ணாவின் 'வேலைக்காரி' நாடகம் பிரபலமடைந்தது. இந்த நாடக சபாவிற்காக காஞ்சிபுரத்தில் 'திராவிட நாடு' ஏட்டை நடத்தி வந்த அண்ணாவிடம் ஒரு நாடகம் எழுதித் தருமாறு கே.ஆர்.இராமசாமி வேண்டினார். அண்ணாவைச் சந்திக்கும்போதுகூட கே.ஆர்.இராசாமி போதையிலேயே இருந்திருக்கிறார். இதைப் பார்த்து அண்ணாவே அப்பவே கண்டித்திருக்கிறார்.
பிறகு அண்ணா 'ஓர் இரவு' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார். கே.ஆர்.இராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் சிபாரிசில் 'சிவசக்தி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். பிறகு 1969-ல் வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த 'நம் நாடு' படம்வரையிலும் நடித்துப் பெரும் புகழைப் பெற்று வந்தார். அடுத்த இரண்டு வருடத்திலேயே அதாவது 1971 செப்டம்பர் மாதத்தில் தனது அதிகப்பட்ச குடியினால் இறந்து போனார்.
சரி அடுத்த நபர் யார்..? சாவித்திரி..
தமிழில்-85, தெலுங்கில்-92, இந்தியி-3, கன்னடத்தில்-1, மலையாளத்தில்-1. இதெல்லாம் அவர் நடித்தப் படங்கள்.
'·பாரின் ஸ்காட்ச்', 'வாட் 69', 'ஜின்', 'விஸ்கி', 'ரம்', 'பிராந்தி', 'பீர்', 'சர்க்கார் சாராயம்', 'ஜிஞ்சர் பிரிஸ்'.. இதெல்லாம் அவர் குடித்து முடித்த மதுவகைகள்.
இவர் காதல் மன்னன் ஜெமினிகணேசனின் இரண்டாவது மனைவி. 1951-ல் நடிகையான சாவித்திரி தனது சொந்த நிறுவனமான ஸ்ரீசாவித்திரி புரொடெக்ஷன்ஸ் சார்பில் 'குழந்தை உள்ளம்' என்ற படம் எடுத்தார். ஜெமினிகணேசன் கதாநாயகன். சவுகார்ஜானகி, வாணிஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகள். படம் படு தோல்வி.
இரண்டாவதாக சிவாஜியை வைத்து 'பிரதாப்' (1971) என்ற படத்தைத் தயாரித்தார். இந்தப் படமும் படு தோல்வி. இதனால் தனது சொத்து பெரியளவிற்குத் தொலைந்தன. துக்கம் தாளாமல் எப்போதும் மதுவுடனேயே இருந்தார் நடிகையர் திலகம் சாவித்திரி.
வாழ்வின் ஒட்டு மொத்த நிம்மதியும் இழந்த சாவித்திரி, 1981 டிசம்பர் 26 நள்ளிரவில் இறந்து போனார்.
தனது உழைப்பால் வெற்றி முகத்தில் இருந்த சமயத்தில்தான் சொந்தப் படம் எடுத்து அதில் தனது சொத்துக்களையெல்லாம் இழந்து, கடைசியில் குடியில் மூழ்கி கல்லீரல் வீங்கி இறந்து போனார் சந்திரபாபு.
குடியினால் அழிந்த சினிமா பிரபலங்கள் இவர்கள் மட்டுமல்ல, கவியரசு கண்ணதாசன், கவிஞர் வயலார், ராமவர்மா, கம்பதாசன் இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
- தமிழ் உத்தம்சிங்
புனல்குளம்
|
Tweet |
10 comments:
அட போங்க உண்மை தமிழா!நான் உங்களுக்கு போடும் முதல் பின்னூட்டம். மகிழ்ச்சி, ஆனால் எல்லா பதிவும் படித்து இருக்கிறேன். நன்றி! இந்த பதிவில் பல விஷயங்கள் அபத்தமாக இருக்கின்றது. ஒரு குடிகாரனை பத்தி கேக்கனும்ன்னா அவன் குடும்பத்திடம் கேட்கவும்! சும்மா வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு நீங்க கலைஞர் குடும்ப டிராயிங் போட்டப்பவே தெரியும் நீங்க எப்படியாவது உந்திகிட்டு மேலே வரும் உங்க எண்ணம் நான் ரெடி என் கை பிடிச்ச்சுக்க நீங்க ரெடியா??????
//அபி அப்பா said...
அட போங்க உண்மை தமிழா!நான் உங்களுக்கு போடும் முதல் பின்னூட்டம். மகிழ்ச்சி, ஆனால் எல்லா பதிவும் படித்து இருக்கிறேன். நன்றி!//
அட போங்க அபிஅப்பா.. சும்மா பொய் சொல்லாதீங்க.. ஏற்கெனவே 5 மாசத்துக்கு முன்னாடி (http://truetamilans.blogspot.com/2007/04/22.html) இந்தப் பதிவுக்கு வந்து அசத்தலான கமெண்ட்ஸ் ஒண்ணு போட்டிருக்கீங்க.. மறந்துட்டீங்க போலிருக்கு..
//இந்த பதிவில் பல விஷயங்கள் அபத்தமாக இருக்கின்றது. ஒரு குடிகாரனை பத்தி கேக்கனும்ன்னா அவன் குடும்பத்திடம் கேட்கவும்!//
எந்த விஷயங்கள் அபத்தம் ஸார்..? அவரவர் இறப்பைத் தேடிக் கொண்டது குடிப் பழக்கத்தினால்தான் என்பது கண்கூடு. இப்போது நாம் மறைந்த பெரியவர்களைப் பற்றிப் பேசுவதே எழுதி வைத்திருக்கும் குறிப்புகளைப் பார்த்துத்தானே.. அந்தக் குறிப்புகளைக் கொண்டுதான் இந்த நபரும் எழுதியிருக்கிறார். இதிலென்ன அபத்தம்..? அவரது குடும்பத்தாரிடம் என்ன கேட்கச் சொல்கிறீர்கள்..? சம்பந்தப்பட்டவருக்கு குடிப்பழக்கம் உண்டா இல்லையா என்றா..?
அதீதமான குடிப் பழக்கம்தான் அவர்களுடைய மற்ற அனைத்துவித நடவடிக்கைகளுக்கும், முரண்பட்ட நடத்தைகளுக்கும் காரணமாகி அவர்களுடைய தொழில் நசிந்து அதன் விளைவாக மீண்டும், மீண்டும் மீள முடியாத மதுக் கிண்ணத்திற்குள் குதித்துவிட்ட அபாக்கியவான்கள்தான் இவர்கள்..அப்படித்தான் நான் நினைக்கிறேன்..
//சும்மா வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு நீங்க கலைஞர் குடும்ப டிராயிங் போட்டப்பவே தெரியும் நீங்க எப்படியாவது உந்திகிட்டு மேலே வரும் உங்க எண்ணம் நான் ரெடி என் கை பிடிச்ச்சுக்க நீங்க ரெடியா??????//
சத்தியமா புரியலை ஸார்.. உங்களது கையைப் பிடிச்சுக்க நான் ரெடி.. ஆனால் எதற்கு..? 'உந்திக்கிட்டு மேலே வரும் என் எண்ணம்' என்பது என்ன..?
முதலில் நீ குடிப்பாய்
பின் குடி குடிக்கும்
பின் குடி உன்னைக் குடித்து விடும்!
குடிப்பவர்கள் எல்லாம் குடிகாரர்கள் அல்ல.ஆனால் நான் குடிகாரன் என்று சொல்ல வேண்டியிருப்பவர்கள் குடிகாரர்களாக இருப்பது அவர்களுக்கே தெரியாது.அவர்களால் எந்தக் காரண்த்தாலும் நிறுத்தவும் முடியாது!
குடி ஒரு மன நோய் என்று மருத்துவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.அதிலும் எளிதில் குணப்படுத்த முடியாத கொடும் நோய்.அவர்களை மட்டுமல்லாது,குடும்பத்தையே அழித்துவிடும் குடும்ப்பப் புற்று நோய்.
உலகெங்கும் ஆல்கஹாலிக் அனானிமஸ் என்று குடிப்பவர்களுக்கும்,ஆல் அனான் என்று குடிப்பவரின் குடும்பத்தினருக்கும் உள்ள இயக்கங்கள்தாம் பெரும் பணி செய்து வருகின்றனர்.
From Mahesh:
in the current set of actor/actresses in tamil cinema who are the drunkards ?
V..kanth ?
T..sha ?
R..kanth ?
K..san ? (for past few years)
Vadi..u ?
Viv..k ?
அதே A.Marx கட்டுரை பற்றி அதே இதழில் வெளி வந்த Lakshmi Manivannan எதிர்வினை பற்றி
உங்கள் கருத்தென்ன.
//Thamizhan said...
முதலில் நீ குடிப்பாய்
பின் குடி குடிக்கும்
பின் குடி உன்னைக் குடித்து விடும்!
குடிப்பவர்கள் எல்லாம் குடிகாரர்கள் அல்ல.ஆனால் நான் குடிகாரன் என்று சொல்ல வேண்டியிருப்பவர்கள் குடிகாரர்களாக இருப்பது அவர்களுக்கே தெரியாது.அவர்களால் எந்தக் காரண்த்தாலும் நிறுத்தவும் முடியாது!
குடி ஒரு மன நோய் என்று மருத்துவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.அதிலும் எளிதில் குணப்படுத்த முடியாத கொடும் நோய்.அவர்களை மட்டுமல்லாது,குடும்பத்தையே அழித்துவிடும் குடும்ப்பப் புற்று நோய்.
உலகெங்கும் ஆல்கஹாலிக் அனானிமஸ் என்று குடிப்பவர்களுக்கும்,ஆல் அனான் என்று குடிப்பவரின் குடும்பத்தினருக்கும் உள்ள இயக்கங்கள்தாம் பெரும் பணி செய்து வருகின்றனர்.//
தமிழன் ஸார்.. குடிப்பழக்கம் ஒரு போதைப் பழக்கம்.. தொடர்ந்து அதைக் கைவிட முடியாத மனநோயாக்கு கொண்டு செல்லும் என்பதை அனைவருமே ஒத்துக் கொள்கிறார்கள். நீங்கள் சொல்வதும் நூற்றுக்கு நூறு சரி.. ஆல்ஹாலிக் அனானிமஸ், மற்றும் ஆல் அனான் அமைப்புகள் பற்றி இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்.. தகவலுக்கு நன்றி..
//Anonymous said...
From Mahesh:
in the current set of actor/actresses in tamil cinema who are the drunkards ?
V..kanth ? T..sha ? R..kanth ? K..san ? (for past few years) Vadi..u ? Viv..k ?//
இன்னும் 30 வருஷம் கழிச்சு யாராச்சும் புத்தகம் எழுதுவாங்க. அதுல படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்..
//Jyovram Sundar said...
அதே A.Marx கட்டுரை பற்றி அதே இதழில் வெளி வந்த Lakshmi Manivannan எதிர்வினை பற்றி உங்கள் கருத்தென்ன.?//
நண்பரே.. அதைப் பற்றித் தனிப் பதிவாக எழுதலாம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். விரைவில் எழுதுகிறேன்..
படிக்கும்போதே அந்த கால நினைவுகள்! அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும், அந்த காலம் எப்படி இருந்திருக்கும் அதுபோன்ற நினைவுகள் தோன்றுகிறது. எழுதுங்கள் இதுபோன்று நிறைய அந்த கால நினைவுகளை எழுதுங்கள். படிக்க, படிக்க இனிமையாக இருக்கிறது. நன்றீ.
See who owns getprice.com.au or any other website:
http://whois.domaintasks.com/getprice.com.au
Post a Comment