Showing posts with label சி.பி.ஐ.. Show all posts
Showing posts with label சி.பி.ஐ.. Show all posts

சி.பி.ஐ. ஸ்கேனரில் சிங்கப்பூர் திக்திக்!

15-07-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் பூதம் தயாநிதி மாற​னையும் கவ்விக் கொண்டது!  ஆ.ராசா, கனிமொழி இருவ​ருடன் இது முடிந்துவிடும்... என்று நினைத்து இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அதிர்ச்சியின் எல்லைக்குத் தள்ளப்​பட்டுள்ளார். தயாநிதியின் பெயரை சி.பி.ஐ. தனது அறிக்கை​யில் தாக்கல் செய்ததுமே டெல்லி காங்கிரஸ் பிரமுகர் அடித்த கமென்ட், 'தி.மு.க-வின் கரன்சி ஆக்ஸிஜன் இதன் மூலம் அடைக்கப்பட்டுவிட்டது!’ என்பதுதான். அந்த அளவுக்கு, சென்னையையும் டெல்லியையும் அதிரவைத்துள்ளது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்​பட்டு, டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னால் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில் ஆ.ராசா நீங்க​லாகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாருக்கும் கிடைக்கவில்லை என்பதால், திகார் சிறையிலேயே இருக்கிறார்கள்.

ஜூன் 3-ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கி, ஜூலை 4-ம் தேதி மீண்டும் கோர்ட் நடவடிக்கைகள் தொடங்கியது. கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ-யைப் பார்த்து நீதிபதி சைனி சீறினார் - ''குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? தொடர்ந்து அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பது உங்களது விருப்பமா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தர வேண்டிய ஆவணங்களை இதுவரை ஏன் தரவில்லை? இனியும் தாமதம் செய்தால், சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!'' என்றதும், சி.பி.ஐ. தரப்பு கொஞ்சம் ஆடிப்போனது.

ஆனால், மறு நாள் உச்ச நீதிமன்றத்தில் சிலிர்த்துக் கிளம்பியது சி.பி.ஐ. ''இந்த வழக்கு, இதுவரை கைதான 14 பேருடன் முடியப்போகும் சமாசாரம் அல்ல. இதோ வருகிறது அடுத்த அஸ்திரம்!'' என்று சி.பி.ஐ. வைத்த வெடிகுண்டுதான்... முதல்கட்டமாக தயாநிதி மாறனின் மந்திரி பதவிக்கு வேட்டுவைத்துள்ளது. ஆ.ராசா, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த விவகாரங்களை மட்டும் அல்ல... அதற்கு முன்னால் தயாநிதி மாறன் பதவியில் இருந்த காலத்தையும் சி.பி.ஐ. தோண்ட ஆரம்பித்து உள்ளது.


தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தநேரத்தில் நடந்ததாக சில விஷயங்களை, மத்திய அரசு அமைத்த ஒரு நபர் கமிஷன் முன்னால் அருண் ஷோரி வரிசையாக எடுத்து வைத்தார். அவர் அளித்த மனுவை அப்படியே சி.பி.ஐ-க்கு, விசாரணை அதிகாரியான நீதிபதி சிவராஜ் பாட்டீல் அனுப்பி​வைத்தார். உடனடியாக, சி.பி.ஐ. இதனை விசாரிக்க ஆரம்பித்தது. இதன் மையப் புள்ளியாக 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரனை, சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக விசாரிக்கத் தொடங்கினார்கள். இதுபற்றி, ஜூன் 8, 15, 16 தேதியிட்ட ஜூ.வி. இதழ்களில் தொடர்ந்து விவரங்கள் வெளியாகின.

இதுதொடர்பான குற்றச்சாட்டை 'பொது நல வழக்கு தொடர்பான சமூக சேவை அமைப்பு’ உச்ச நீதிமன்றத்தில் மனுவாகத்  தாக்கல் செய்தது. வக்கீல் பிரசாந்த் பூஷண் நடத்தி வரும் அமைப்பு இது.

சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தைக் கையில் எடுக்கும் என்று தெரிந்ததுமே, சிவசங்கரனை அதிகாரபூர்வமாக அழைத்து ஜூன் 6-ம் தேதி வாக்குமூலம் வாங்கியது சி.பி.ஐ. அவரது வாக்கு​மூலத்தை அடிப்படையாக வைத்துதான், கடந்த 6-ம் தேதி சி.பி.ஐ. ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி இருவரும்​தான், 2ஜி வழக்கை வைத்துக் கலக்கி வரும் நீதிபதிகள். இவர்களிடம் சி.பி.ஐ. சார்பில் மூடிய கவர் ஒன்றை சி.பி.ஐ. வக்கீல் கே.கே.வேணுகோபால் கொடுத்தார். மொத்தம் 71 பக்கங்களைக்கொண்ட அந்த அறிக்கையின் சாராம்சத்தை வேணுகோபால் சொல்லச் சொல்ல... அதிர்வலைகள் பலமாகின.

இந்த அறிக்கையில் தயாநிதி மாறனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்ததாக சில விஷயங்களை அவர் பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்டார் வேணுகோபால். ''2004 - 2007 காலகட்டத்தில் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முயற்சித்தது. ஆனால், கிடைக்கவில்லை. ஏர்செல் நிறுவனத்திடம் தேவை இல்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. அவசியமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. ஏர்செல்லைப் போலவே வேறு இரண்டு நிறுவனங்களும் இதே போன்று விண்ணப்​பம் செய்திருந்தன. அந்த நிறுவனங்களிடம் இது மாதிரியான கெடுபிடிகள் காட்டப்படவில்லை. உடனடியாக அந்த இரண்டு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைத்தது.

தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் ஏதோ ஒரு நிர்பந்தத்தை ஏர்செல் நிறுவனத்​துக்குக் கொடுத்திருக்கிறார் என்பது சி.பி.ஐ-யின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் அனந்தகிருஷ்ணன்  நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளைத் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளார்கள். சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

 

சிவசங்கரன் தனது கம்பெனிப் பங்குகளை விற்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதன் பிறகு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கிறது. இந்தப் பரிமாற்றத்தில் என்ன நடந்து இருக்கிறது என்பது குறித்துத்தான் சி.பி.ஐ. இப்போது விசாரித்து வருகிறது. பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரித்து வருகிறோம்!'' என்று சொன்னார் கே.கே. வேணுகோபால்.

அதாவது, இந்த விவகாரத்தில் இறங்கி சி.பி.ஐ. விசாரிப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகளிடம் சொன்னார் வேணுகோபால். சிவசங்கரன் பற்றிக் குறிப்பிடும்போதும், 'திஸ் ஜென்டில்மேன்’ என்று மட்டும் சொன்னார். ''பணப் பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. தனது விசாரணைகளை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூரில் இருக்கும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலமாகத்தான் இதற்கான பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன என்று சந்தேகப்படுகிறோம். சிங்கப்பூரில் உள்ள அதன் அதிகாரியை ஜூலை 13-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்து உள்ளோம். மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, சன் டைரக்ட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மத்தியிலும் இந்தக் கால கட்டங்களில் நடந்துள்ள டீலிங்குகளை வைத்து, என்ன நடந்துள்ளது என்பதை முழுமையாக அறிய முடியும். அந்த அதிகாரி எங்கள் முன்பு ஆஜராகி விவரங்களை கூறியபிறகு எங்கள் விசாரணை வேகம் பிடிக்கும்!'' என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிந்துவிடும். 2001 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான லைசென்ஸ் முறைகேடுகள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிந்துவிடும்!'' என்று வக்கீல் கே.கே.வேணுகோபால் சொல்லியதை வைத்துப் பார்க்கும்போது, தயாநிதி மாறன் மீது முழுமையான குற்றப் பத்திரிகை செப்டம்பர் மாதத்துக்குள் தாக்கல் ஆகிவிடும் போலிருக்கிறது!'' என்கிறார்கள் டெல்லி நீதித் துறை வட்டாரங்களில்.


''ராசா அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்தவை குறித்து அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டன. ராசாவின் சொத்துகள் மற்றும் பண முதலீடுகள் குறித்து வெளிநாட்டு வங்கிகளில் தகவல்கள் திரட்டுவது மட்டுமே பாக்கி. அது தொடர்பாக பல குளுகுளு தீவுகளுக்கெல்லாம் கடிதப் பரிமாற்றங்களைத் தொடங்கி உள்ளோம். எங்களில் சில அதிகாரிகளும் நேரடியாகப் போய் அங்குள்ள முதலீடுகள் பற்றி தகவல்கள் சேர்த்துக் கொண்டு வந்துள்ளனர். அந்த வேலைகள் இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் முடியும். தயாநிதி மாறன் தொடர்பான விவரங்களுக்குள் இப்போதுதான் நுழைய ஆரம்பித்துள்ளோம். அதில் மேக்சிஸ் நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றையும் இனி மேல்தான் விசாரிக்க வேண்டி உள்ளது. தயாநிதி மாறனை முதல் கட்டமாக விசாரிப்போம். அவரது ஒத்துழைப்பைப் பொறுத்தே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள்.

சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக எந்தக் கருத்தையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொல்லவில்லை. ''இந்த அறிக்கை பற்றிய விசாரணை வரும் 11-ம் தேதி நடக்கும்!'' என்று மட்டும் கூறினார்கள். இதனால், 11-ம் தேதிக்குள் சி.பி.ஐ. தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ''தயாநிதி மாறனை 11-ம் தேதிக்குள் விசாரிக்க வாய்ப்பு இல்லை. 13-ம் தேதி சிங்கப்பூர் வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ. முன்னால் ஆஜராக இருக்கிறார்கள். அவர்களது வாக்குமூலங்களையும் வாங்கி வைத்துக்கொண்டுதான், சி.பி.ஐ. தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும்.

அதே சமயம்,  நீதிபதிகள் 11-ம் தேதி என்ன உத்தரவிடுகிறார்கள் என்பதையும் வைத்தே சி.பி.ஐ. செயல்படும்...'' என்று டெல்லியில் ஒரு தரப்பினர் சொல்ல... ''அதற்கு முன்பேகூட சி.பி.ஐ. தன் செயல்பாட்டை தொடங்கிவிடும். அதைப் புரிந்துகொண்டுதான், பிரதமர் தரப்பிலிருந்து தயாநிதி மாறனின் மந்திரி பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசினார்கள். 'ஆ.ராசா விஷயத்தில் நடந்ததுபோல் இதில் அடம் பிடிக்க வேண்டாம். ராஜினாமாவை ஒத்திப் போடுவது காங்கிரஸ் - தி.மு.க. ஆகிய இரு தரப்புகளுக்குமே மேலும் மேலும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று எடுத்துச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்தே ராஜினாமா கடிதத்தை தயாநிதி மாறன் ஒப்படைத்தார். மந்திரி பதவியிலிருந்து விலகிய பிறகுதான் ஆ.ராசா தொடர்பாக சி.பி.ஐ-யின் நேரடி நடவடிக்கைகள் தொடங்கின. அதுபோலவே இதிலும் ஆக்ஷன்கள் வேகம் பெறும்'' என்றும் கூறப்படுகிறது.

''இந்த நிகழ்வுகள் சூடு பிடித்த சமயத்தில் டெல்லியில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 'பிரதமர் இனியும் சும்மா இருக்கக்கூடாது' என்ற பாணியில் உசுப்பிக் கொண்டே இருந்ததை சுட்டிக் காட்டும் சிலர், ''மந்திரி பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலகிய பிறகு தமிழக அரசு தரப்பிலிருந்து சில நடவடிக்கைகளை எடுப்பதே ஜெயலலிதாவின் நோக்கம்!'' என்றும் கூறத் தொடங்கியுள்ளனர்.

''தயாநிதி தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் சன் டைரக்ட்டில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம், சன் டைரக்டில் முதலீடு செய்தபோது தயாநிதி அமைச்சராகவே இல்லை. இந்த நிறுவனங்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை!'' என்று தயாநிதிமாறன் தரப்பு தனது விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்துள்ளது.

ஜூலை 13-க்குப் பிறகு விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும்!

- சரோஜ் கண்பத்

நன்றி : ஜூனியர்விகடன்-10-07-2011

தயாநிதி மாறனைப் பற்றி பேசியது ஏன்...? - நீரா ராடியாவின் வாக்குமூலம்

16-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நீரா ராடியா கடந்த 2010 டிசம்பர் மாதம் சி.பி.ஐ-க்குக் கொடுத்துள்ள வாக்குமூலங்களைத் தவிர, ஜனவரி 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் (சி.ஆர்.பி.சி. 161 படி) வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

ராடியாவின் பேச்சு, தொலைபேசி ஒட்டுக்​கேட்பில் பதிவாகி இருப்பதால், சி.பி.ஐ. விளக்கமாக விசாரித்து வாக்குமூலம் பெற்றுத்தான்  குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது.

நீரா ராடியா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரின்  உதவியாளர்கள், அதிகாரிகள், டெலிகாம் நிறுவனத்தினர், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இவை.

நாள்: 25.1.2011

இடம்: டெல்லி பாராகம்பா ரோடு, கோபால்தாஸ் பவன், ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன் அலு​வலகம்.

விசாரணை அதிகாரி: டி.எஸ்.பி. ராஜேஷ் ஷகால், சி.பி.ஐ.

ராடியாவின் மொபைல் (எண் 9810723015), அவருடைய நிறுவனத்தின் லேண்ட்லைன் (எண் 42393500), ஃபார்ம் ஹவுஸ் லேண்ட்லைன் (எண் 26806188 - சகோதரி கருணா மேனன் பெயரில் உள்ளவை) ஆகிய தொலைபேசி எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது.

வருவாய் புலனாய்வுத் துறையினர் ரகசியமாகப் பதிவு செய்த தொலைபேசி உரையாடல்களை, ஒவ்வொன்றாக சி.பி.ஐ. அதிகாரி ராஜேஷ், லேப்டாப்பில் போட்டுக்காட்ட, ராடியா எதற்காக... யாரிடம்... என்ன பேசினார் என்பதை விளக்குகிறார்.

ஆயிரக்கணக்கான உரையாடல்களில் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து சி.பி.ஐ. கேள்வி கேட்டது. இதில் நாம் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்!

கால் எண்: 1 (நவ.3, 2008)

ஸ்பெக்ட்ரம் ரேட்: யுனிடெக் டெலினார்

ராடியா மற்றும் யுனிடெக் நிறுவனத் தலைவர் ரமேஷ் சந்திரா.

யுனிடெக் நிறுவனத்தில் நார்வேயைச் சேர்ந்த டெலினார் நிறுவனம் முதலீடு செய்து இருந்தது. இந்த முதலீட்டை வைத்தே ஸ்பெக்ட்ரம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு வந்தது. இதையட்டி ராடியா, யுனிடெக் தலைவரை அழைத்து அவர்கள் பெற்றுள்ள முதலீடுகள் குறித்து பத்திரிகைகளுக்கும் மத்திய அரசுக்கும் விளக்கம் கொடுக்கச் சொல்கிறார். இது பற்றி சி.பி.ஐ-யிடம் ராடியா விளக்குகிறார்.

''பிரதமரும், நிதி அமைச்சரும் யுனிடெக்கில் டெலினார் முதலீடு செய்தது குறித்து விளக்கம் கேட்டிருந்தனர். இதை நான் பத்திரிகைகள் மூலமாகவே தெரிந்து கொண்டேன்.  யுனிடெக் நிறுவனத்துக்கு நாங்கள் 2005 முதல் ஆலோசகராக இருக்கிறோம். அதனால், யுனிடெக் நிறுவனத்துக்கு வந்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தொலைத் தொடர்புத் துறைக்கு விளக்கமாகக் கடிதம் எழுதுமாறு யோசனை கூறினேன்.

ரமேஷ் சந்திரா ஏற்கெனவே என்னை அழைத்து இது குறித்து, 'வெளிநாட்டில் இருந்து பணம் கொடுத்தவர்கள், நிறுவனத்தின் பங்குகளை வாங்கி உள்ளனர். இது கம்பெனிக்கு வந்த நேரடி வெளிநாட்டு முதலீடு தவிர வேறொன்றும் இல்லை. இதில் நானோ... என் குடும்பமோ பயன் அடையவில்லை’ என்று கூறி இருந்தார். பத்திரிகைச் செய்திகளுக்கு விளக்கம் கொடுக்கவும் தொலைத் தொடர்புத் துறைக்கு இந்த பணப் பரிமாற்றம் குறித்து தகவல் கொடுக்கவும் யோசனை கூறினேன்.

தொடர்ந்து நான் தயாநிதி மாறனைப் பற்றிப் பேசியதற்கு காரணம், அந்த சமயத்தில் அவருடைய சன் டி.வி-யும் ஜெயா டி.வி-யும்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து ஆ.ராசா பயன் அடைந்ததாகச் சொல்லிக்​ கொண்டிருந்தனர். ஜெயா டி.வி-யாவது அ.தி.மு.க-வைச் சேர்ந்தது. ஆனால், சன் டி.வி., மாறன் குரூப்பைச் சேர்ந்தது என்பதால் அது குறித்தும் பேசினோம்.''

கால் எண்: 2 (நவ.3, 2008)

எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையாளர் கணபதி சுப்பிர​மணியத்துடன்...

''ரிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுக்க 14,000 பெட்ரோல் பங்க்குகளைத் திறப்பதாகச் செய்தி வந்தது. இது குறித்து கணுவோடு(கணபதி சுப்பிரமணியம்) பொதுவாகப் பேசினேன். இந்த செய்தியினால் என்ன அபிப்ராயம் ஏற்படும்? என்பது குறித்துப் பேசினேன். அடுத்து யுனிடெக் எஃப்.டி.ஐ. பெற்றது குறித்து தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது பற்றி கணு என்னிடம் சொன்னார்.
இந்தியாவிலுள்ள போட்டி டெலிகாம் கம்பெனிகள் (ஏர்டெல்?) வெளிநாடுகளில் இருந்து பெரிய கம்பெனிகள் இந்தியாவுக்கு வருவதைத் தடுக்க முயற்சித்து வருவதைப் பற்றியும் என்னோடு பேசினார்...''

கால் எண்: 3 (நவ.3, 2008)

ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலி​யாவுடன்...

''கலைஞர் டி.வி. ஒளிபரப்பை டாடா ஸ்கை பிளாட்​பாரத்துக்குள் கொண்டு வருவதற்கும், அவர்களுடைய மனு டாடா கம்யூனிகேஷனில் டிரான்ஸ்பாண்டர் பேண்ட்வித் ஒதுக்கீடு செய்வதில் நிலுவையில் இருப்பது குறித்தும் பேசினோம்.

நான் சந்தோலியாவுடன் 'பாஸ்’ என்று குறிப்பிட்டது, அமைச்சராக இருந்த ஆ.ராசாவைத்தான். நான் இது குறித்து ஆ.ராசாவுடன் பேசி இருந்தேன். ஆ.ராசா, டாடா ஸ்கையையும் டாடா கம்யூனிகேஷனையும் இது சம்பந்தமான நடவடிக்கையில் விரைவுபடுத்துமாறு கூறி இருந்தார்.

நானும் இது சம்பந்தமான நடவடிக்கை எடுத்து, டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்திடம் இருந்து டிரான்ஸ்பாண்டர் பேண்ட்வித் கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்டது சம்பந்தமாக லெட்டர் வர, அதை அமைச்சரின் வீட்டுக்கு அனுப்பி உள்ளதைத்தான் சந்தோலியாவிடம் தெரிவித்தேன். அமைச்சர் வீட்டில் டெலிவரி செய்யப்பட்டு உள்ளது என்று நான் தொலைபேசியில் சொன்னது இந்த 'லெட்டரை’த்தானே தவிர 'வேறு’ ஒன்றும் இல்லை''

கால் எண்: 4 பி (நவ.25, 2008)

ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோ​லியாவுடன்...

ஆ.ராசாவின் தனி உதவியாளரான அவரிடம், மீடியாக்​களிடம் எச்சரிக்கையாகப் பேசும்படி சொன்னேன்.  மறுநாள் ஆ.ராசா வீட்டில் நடக்க இருந்த மீட்டிங் குறித்தும் பேசினோம்.

டாடா கம்யூனிகேஷன் நிறுவனத்தில் அரசின் பங்கு 26 சதவிகிதம் இருக்கிறது. டாடா கம்யூனிகேஷன், டாடா டெலிசர்வீஸிலும் பங்குகளைப் பெற்றுள்ளது. இந்த டெலி சர்வீஸ் நிறுவனத்தின் சில பங்குகளை டொகோமோ நிறுவனத்துக்கு கொடுக்க இருப்பது சம்பந்தமான மீட்டிங், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா வீட்டில் நடக்க இருந்தது.

இது சம்பந்தமாக சந்தோலியா, ரத்தன் டாடா உதவியாளர் ஆர்.வெங்கட் ஆகியோரிடம் பேசினேன். அப்போது வெங்கட் சி.என்.என். ஐ.பி.என். டி.வி-யில் ஆ.ராசா மற்றும் டி.ஆர்.பாலு மீது பிரதமர் கோபமாக இருக்கிறார் என்றும் இவர்கள் மீதான ஊழல் புகார்தான் கோபத்துக்குக் காரணம் என்றும் செய்தி வெளியிட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.

இது குறித்தும் மறுநாள் 26-ம் தேதி சந்தோலியா என்னிடம் பேசினார். 'பிரதமர் அலுவலகம் இந்த செய்தி குறித்து சி.என்.என்., ஐ.பி.என். வசம் விளக்கம் கேட்டுள்ளது என்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட விதம் குறித்து பிரதமருக்கு அமைச்சர் ஆ.ராசா தகவல் கொடுத்து ஒப்புதலும் பெற்று உள்ளார் என்பதை பத்திரிகைகளிடம் அமைச்சர் விளக்கி உள்ளார்’ என்றும் சந்தோலியா தெரிவித்தார்.

கால் எண்: 5 (நவ.18, 2008)

பிசினஸ் ஜீரோ பத்திரிகை ஆசிரியர் சதீஷ் ஓரியுடன் பேசியது...

''அப்போதைய அரசியல் நிலவரம்... நாடாளுமன்ற நிலைமை போன்ற பொது விஷயங்கள் குறித்துத்தான் நான் சதீஷ§டன் பேசினேன். 

என்னுடைய முதல் பேச்சில், விஜய மல்லையாவின் வெளிநாட்டு முதலீடு குறித்தும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் வெளிநாட்டு விமான கம்பெனிகள் பங்கெடுக்காதது குறித்தும் பேசினேன்.

இரண்டாவது பேச்சில் சதீஷ் என்னிடம், அனில் அம்பானி மற்றும் ஆ.ராசாவைப் பற்றி சில தகவல்களைச் சொன்னார். ஸ்வான் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் குறித்த புகார்கள் மத்திய விஜிலென்ஸ் கமிஷனரிடம் நிலுவையில் இருப்பது மற்றும் பொது நலன் வழக்குகளாக தொடரப்பட்டு உள்ளதைக் குறிப்பிட்டார்.

ஸ்வான் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளுக்காக ஆ.ராசாவுக்கு லண்டனில் வைத்து பணம் கொடுக்கப்பட்டது... கருணாநிதிக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஆனால் இவை எல்லாம் அவர் சொன்ன தகவல்கள். இந்த பணப் பரிவர்த்தனை குறித்து எனக்கு எதுவும் தெரியாது!''

கால் எண்: 6 (நவ.19, 2008)

டைம்ஸ் நவ் டி.வி-யின் மூத்த பொலிடிகல் எடிட்டர் நவிகா குமாருடன்...

''நவிகா பொதுவாக அரசியல் விவகாரங்களை கவனிப்பவர். நான் அவரோடு பேசும்போது தெரிந்து கொண்டது சரத்பவார், ஆ.ராசாவை தொடர்பு கொண்டு பேசியதின் மூலமே ஸ்வானுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கிடைத்து உள்ளது என்றும் இதில் அனில் அம்பானியின் இன்வால்வ்மென்ட் இருப்பதால் பவார் தலையிட்டு உள்ளார் என்பது குறித்தும் பேசப்பட்டது.

டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தில் பால்வா மற்றும் கோயங்கா முக்கியப் பிரமுகர்கள். ஆனால், மும்பையில் பொதுவாக சொல்லிக் கொள்வது, டி.பி. ரியாலிட்டியை நேர்முகமாகவும் மறைமுகமாகவும் கன்ட்ரோல் செய்வது சரத்பவாரும் அவரது குடும்பதினரும்தான் என்று. இதனால்தான் சரத்பவார், ஸ்வானுக்கும் அனில் அம்பானிக்கும் முறையே ஸ்பெக்ட்ரம் உரிமமும் இரட்டை தொழில் நுட்ப ஸ்பெக்ட்ரம் உரிமமும் பெற்றுத் தருவதில் உதவி புரிந்துள்ளார் என்று தொலைபேசியில் குறிப்பிட்டேன்.''

வாக்குமூலம் தொடரும்..

நன்றி : ஜூனியர்விகடன்-15-06-2011

தயாநிதி மாறன் இப்போது செய்ய வேண்டியவைகள்..!

04-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 2-ம் தேதியன்று 'தினமணி' மற்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகள் வெளியிட்ட தயாநிதியின் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஊழல் பற்றிய செய்திக்கு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணி புரியும் மீனலோசனி என்ற உயரதிகாரி ஒருவர் மறுப்பு அறிக்கை வெளியிட்டார்..!

தயாநிதி மாறனின் வீட்டில் ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பு இருந்தது என்றும், அந்த இணைப்பின் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உச்சக்கட்ட அளவை விடவும் குறைவாகத்தான் தயாநிதி மாறன் பேசியிருப்பதாகச் சான்றிதழ் வழங்கியிருந்தார்.

இச்செய்தி வெளியான பின்பு 2-ம் தேதி காலையில் இருந்தே தயாநிதியை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்த டெல்லிவாலா டிவிக்கள் அவர் கையில் சிக்காததால் "தயாநிதி தலைமறைவு" என்றெல்லாம் நியூஸ் போட ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் அன்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது 'தினமணி'யில் வந்த செய்தி முற்றிலும் தவறு என்று மறுத்தார் தயாநிதி.

“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் வீண் பழி சுமத்துவதற்காக பொய்யான குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி இருக்கிறார்கள். 2008-ம் ஆண்டு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி பதவியை நான் ராஜினாமா செய்த பிறகு, அப்போது விசாரணை நடத்தி இருக்க முடியும். அந்த சமயத்தில் நான் அரசியலில் தீண்டத்தகாதவனாக இருந்தேன். நான் மந்திரி பதவியில் இல்லாத அந்த சமயத்தில், யாரும் என்னுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை.

யாருக்கும் நான் ஒரு போதும் எந்த உதவியும் செய்தது கிடையாது, எந்த சலுகையும் பெற்றது கிடையாது. அரசியல் வட்டாரத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டு இருந்தேன். நான் ஏதாவது தவறு செய்து இருப்பதாக கருதினால் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்.

எனது குடும்ப தொழில் சம்பந்தமாக எனது சென்னை இல்லத்துக்கு 300-க்கும் அதிகமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது ஆகும். இது தொடர்பாக எழுப்பும் கேள்விகள் மூலம் எனது நேர்மையை மட்டு-ன்றி எனது குடும்பம் மற்றும் எனது கட்சியின் நேர்மையையும் பற்றி சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

எனது இல்லத்துக்கு ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் இருந்தது. எனக்குள்ள குறிப்பிட்ட தொகையை காட்டிலும் குறைவான தொகைக்குத்தான் நான் பேசினேன். இதை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து எனக்கு வந்துள்ள கடிதம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எனது போட் கிளப் இல்லத்தில் எத்தனை தொலைபேசி இணைப்புகள் உள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளருக்கு நான் கடிதம் எழுதினேன். மந்திரி என்ற முறையில் எனது இல்லத்துக்கு ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் (எண் 24375100) வழங்கப்பட்டு இருந்தது.

நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் எந்த தண்டனையையும் ஏற்க தயாராக இருக்கிறேன். யாருடைய தயவையும் நான் எதிர்பார்க்கவில்லை. என் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். நான் ஒரு அப்பாவி. என்னையும் எனது நேர்மையையும் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையும் எனக்கு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.

இந்த விளக்கத்தை அளித்துவிட்டு கூடவே 'தினமணி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியிருக்கிறார் தயாநிதி மாறன்..!

ஏற்கெனவே 'ஏர்செல்' கம்பெனி சன் டி.டி.ஹெ.ச்சில் முதலீடு செய்தது சம்பந்தமாக செய்தியை வெளியிட்ட தெஹல்கா மீது மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். (கவனிக்க : வெறும் நோட்டீஸ்தான். கோர்ட்டில் வழக்குத் தொடரவில்லை)

தயாநிதி அளித்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கும்விதமாக இன்றைய 'தினமணி' மற்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அது இங்கே பாலோ அப்புக்காக..!

"தூங்குகிறது சிபிஐ அறிக்கை'  (தினமணி, ஜூன் 2, 2011) என்ற செய்தி முழுக்க முழுக்க தயாநிதி மாறனின் வீட்டு தொலைபேசி இணைப்பகம் குறித்த சிபிஐ-யின் ரகசிய அறிக்கையை பிரதானமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானது சுமார் ரூ. 440 கோடி இழப்பானது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்ட 323 ஐ.எஸ்.டி.என். இணைப்புகளால் ஏற்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் மீது தயாநிதி மாறன் வெளிப்படுத்தியுள்ள கோபம் நகைப்புக்குரிய கேலிக்கூத்தாகும்.

தயாநிதி மாறனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சி.பி.ஐ. அளித்த அறிக்கையை யாருமே மறுக்க முடியாது. ஏனென்றால் சி.பி.ஐ.-யும் அரசு அமைப்புதான். இரண்டாவதாக இந்த விசாரணையை சி.பி.ஐ. தானாகவே மேற்கொண்டு நடத்தியுள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தயாநிதி மாறனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று இதைக் கூற முடியாது.

மூன்றாவதாக, மத்திய அரசின் சி.பி.ஐ. அறிக்கைக்கு பதில் அளிக்காமல், அறிக்கையை பட்டவர்த்தனமாக வெளியிட்ட 'தினமணி' மீது குற்றம் காண்கிறார் தயாநிதி மாறன்.

தான் குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி பொதுமேலாளர் வி. மீனலோசனி 6-4-2009-ல் அளித்த கடிதத்தைக் காட்டுகிறார் தயாநிதி மாறன்.

இந்தக் கடிதம் தயாநிதி மாறன் எழுதி அனுப்பி பெறப்பட்ட பதில் கடிதமாகும். பி.எஸ்.என்.எல். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்பு மட்டும் தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது; அந்த தொலைபேசி எண் 24371500 ஐ.எஸ்.டி.என்.-பி.ஆர்.ஏ. என்றும், வேறு எந்த பி.எஸ்.என்.எல். இணைப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 4,50,000 அலகுகள்வரை மூன்று ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கே அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அவர் பயன்படுத்திய கோடிக்கணக்கான அழைப்புகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவானது. இந்த கடிதத்தின்படி ஒரு எம்.பி.-க்கு அனுமதிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளின் அளவுக்குக் குறைவாக அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே அது. மீனலோசனியின் கடிதத்தின் அடிப்படையில் 'தினமணி'யில் குறிப்பிட்டபடி அவரது வீட்டில் நிறுவப்பட்ட 323 பி.எஸ்.என்.எல். இணைப்புகளும் தவறு என்பதாகும். அது தவறா, சரியா என்பதை இப்போது பார்க்கலாம்.

சி.பி.ஐ. அறிக்கையின்படி குறிப்பிட்ட 323 பி.எஸ்.என்.எல்., ஐ.எஸ்.டி.என். இணைப்புகளும் தயாநிதி மாறனின் போட்கிளப் வீட்டில் நிறுவப்பட்டது. ஆனால் மீனலோசனியின் கடிதத்தில் ஒரே ஒரு இணைப்பு அதாவது 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறெந்த இணைப்பும் வழங்கப்படவில்லை என அவர் கூறுவது உண்மையல்ல. இதைக் காட்டி தப்பிக்க நினைக்கும் தயாநிதி மாறனின் திட்டமும் இதனால் தகர்ந்துவிட்டது. மீனலோசனியின் கடிதமும் தவறானது.

சென்னை தொலைபேசி டைரக்டரியில் விவரம் அறிய அதன் இணையதளத்திற்குச் சென்று தயாநிதி மாறன் எம்.பி. என்று டைப் செய்தாலே உங்களுக்கு பின்வரும் விவரங்கள் கிடைக்கும். தொலைபேசி எண் 24371515, தயாநிதி மாறன் எம்.பி., 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028 என்ற முகவரி கிடைக்கும். தொலைபேசி டைரக்டரியில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் 24371515 என்றிருப்பதைக் காணலாம்.

ஆனால் மீனலோசனி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது 24371500 என்ற தொலைபேசி எண்ணைப் பற்றிய விவரம்தான். ஆனால் அவர் 24371515 என்ற மாறன் வீட்டு தொலைபேசி எண்ணைப் பற்றி குறிப்பிடவில்லை.

இதே இணைய பக்கத்தில் சி.ஜி.எம். சென்னை டெலிபோன்ஸ் என்ற எண்ணுடன் தயாநிதி மாறனின் போட் கிளப் முகவரியைப் பதிவு செய்தால் உங்களுக்கு தொலைபேசி எண் 24371500, சி.ஜி.எம். சென்னை டெலிபோன்ஸ், வீட்டு முகவரி 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணமலைபுரம், சென்னை - 600 028 என்ற விவரம் இருக்கும். இதிலிருந்தே ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்புதான் மாறன் வீட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் என்று தெரிய வருகிறது.

24371500 என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறனின் வீட்டில் இல்லை, அது சி.ஜி.எம். சென்னை டெலிபோன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இதன்படி தயாநிதி மாறனின் வீட்டில் இன்று வரை செயல்படும் தொலைபேசி எண் 24371515. இதுவே மீனலோசனி கடிதத்தில் குறிப்பிடும் 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டுமே தயாநிதி மாறனின் வீட்டில் செயல்படுவதாகக் குறிப்பிடும் கடிதத் தகவல் தவறு என்பதை நிரூபிக்க போதுமானது.

24371515 என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சி.பி.ஐ. பட்டியலிட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் சி.பி.ஐ. மேற்கொண்ட ஆய்வில் 48,72,027 அலகு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24371515 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை அலகுகள் கொண்ட தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்தே எந்த அளவுக்கு மல்டி-மீடியா தகவல் பரிமாற்றம் இந்த இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது  என்பதை உணரலாம்.

48 மணி நேரத்திற்குள் தயாநிதி மாறனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக கடிதம் தயாரித்த மீனலோசனி, தொலைபேசி எண் 24371515 என்ற எண்ணை முற்றிலுமாக மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த எண்ணை சி.பி.ஐ. ஆய்வுக்குள்படுத்தியுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டு அதை விட்டிருக்கலாம்.

மேலும் இந்த எண் புழக்கத்தில் உள்ளது என்ற விவரம் சென்னை டெலிபோன்ஸ் இணையத்தளத்தில் இன்றளவும் உள்ளது. இருப்பினும் இது விடுபட்டு போனது எப்படி..? ஏனெனில் இந்த எண் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா..? மேலும் பார்க்கலாம்.

"2437' என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சி.பி.ஐ. முதலில் கண்டறிந்து, 323 லைன்களைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகமே தயாநிதி மாறனின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது.

சென்னை டெலிபோன்ஸில் உள்ள மொத்த 323 இணைப்புகளும் மொத்தம் 2437 என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவேளை மீனலோசனியின் வாதம் சரி என்று ஏற்றுக் கொண்டால், சென்னை வட்டார தொலைபேசி எண்கள் அனைத்துமே 2437 என்ற எண்ணில் தொடங்குவதாக இருக்கும். தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேக, தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது…? அதற்கான காரணத்தை மீனலோசனிதான் விளக்க வேண்டும்.

அல்லது அவரது கடிதத்தை தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் தயாநிதி மாறன்தான் விளக்கி, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.

மேலும் மீனலோசனி இப்போது நிர்வாகப் பிரிவு பொதுமேலாளர் அல்ல, ஆனால் அவர் இன்னமும் சென்னை டெலிபோன்ஸில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தயாநிதி மாறனின் ஆலோசனையால் ஈடேறவில்லை. குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வீணாகிப்போனது.

மேலும் சி.பி.ஐ. அறிக்கையில் 2437 எனத் தொடங்குவதில் 23 இணைப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் பின்வரும் எண்களில் அதாவது 2211 முதல் 2213 வரை (3 இணைப்புகள்); 2222; 2233; 2244 முதல் 2246 வரை (3 லைன்); 2255 முதல் 2257 வரை (3 லைன்); 2266 முதல் 2268 வரை (3 லைன்); 2277 முதல் 2279 வரை (3 லைன்); 2288 முதல் 2290 வரை (3 லைன்); 2290; 2299; 2300; 2301; இதன்படி மொத்தம் 300 தொலைபேசி எண்கள் 2437 என்ற முதல் நான்கு இலக்கங்களில் தொடங்கும். மேலும் இந்த நான்கு இலக்கங்களில் தொடரும் பிற எண்கள் 1500-ல் தொடங்கி 1799-ல் 300 இணைப்புகள் முடியும். இந்த எண்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்லை. காரணம் அவை ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.

ஆனால் அவை எங்கே இருக்கின்றன..? தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி..? அது தயாநிதி மாறன் எம்.பி. பெயரில்தானே போட்கிளப் வீட்டு முகவரியில் மார்ச் 2007 முதல் உள்ளது.

இந்த இணைப்பு மூலம் 48 லட்சம் அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை அவர் பயன்படுத்தியிருக்க முடியாது. அதை சன் டிவி பயன்படுத்தியிருக்கிறது என சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. இதை மாறன் கவனிக்கவும்.

இனி, தயாநிதி மாறன் தாராளமாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் அது அவரது பதவிக்கு சரியான படிப்பினையை அளிக்கும். உண்மையை மறைக்க முற்படாமல் மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது.

நன்றி:  எஸ். குருமூர்த்தி. , தினமணி-04-06-2011

இதற்கிடையில்  அன்றைய தினமே தி.மு.க. தலைமையில் இருந்து ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ளது.

அதில், “நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக, அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி, சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகாவிட்டால் பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

ஜெயலலிதா இன்றும் அவர் மீது பெங்களூர் நீதிமன்றத்தில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் சொத்துக் குவிப்பு, ஊழல் வழக்குகளின் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், இவர் தன்னுடைய முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டுத்தான் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்தாரா? என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக, அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க மாட்டார்.

ஆனால் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்திக்க வேண்டுமா? மக்கள் இந்த விதண்டாவாதத்தை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். தமிழகத்தில் ஒரு பழமையான முதுமொழி உண்டு. அதுதான் ‘தன்னைப் பார்த்து பின்னே பேசு...’ என்பதாகும். ஜெயலலிதா இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கும் முன், தன்னை பற்றியும் தன் மீது உள்ள ஊழல் வழக்குகள் பற்றியும் சிந்திக்காமல் பேட்டியளிப்பது அறிவுடைமையாகாது..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக.. வழக்கம்போல இந்தப் பிரச்சினை தீர்வு வேண்டி கோர்ட்டுக்கு போவதற்கு முன்பாகவே அவதூறு வழக்குகளுக்காக கோர்ட் படியேறும்போல தோன்றுகிறது..!

மீனலோசனி என்ற அந்த ஜெனரல் மேனேஜர் வெளியிட்ட தகவலே பாதி பொய்யாக இருக்கிறதே..! டெலிபோன் டைரக்டரியிலும், இணையத்தளத்திலும் பொய்யான எண்களையா வைத்திருப்பார்கள்...? இப்போதும் பொதுமக்கள் அதைத்தானே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. பின்பு எப்படி இது பொய்யாகும்..?

இந்த ஒரேயொரு நம்பர்தான் தயாநிதி மாறனின் வீட்டில் உள்ளது திரும்பத் திரும்ப மீனலோசனி பொய்யை உரைத்திருக்கிறாரே..? அவரை இப்படி பொய் சொல்ல வைத்திருப்பது யார்? எது..? ஏன்..? எதனால்..?

ஒரே மாதத்தில் 48 லட்சம் யூனிட் பேசியிருக்கிறார்கள் என்றால் இதனை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது. அதுவும் வீட்டில்.. அந்த வீட்டில் இருப்பதே 4 பேர். ஒரு யூனிட் என்பது 3 நிமிடங்கள். 48 லட்சம் யூனிட்டுகள் என்றால் 1 கோடியே 44 லட்சம் நிமிடங்கள் வருகின்றன. இவைகளை நேரக் கணக்கில், நாள் கணக்கில் வகுத்தால்..?  ம்ஹும்.. தலை சுற்றுகிறது..!

இந்த ஒரு துப்பை வைத்துதான் சி.பி.ஐ., தோண்டித் துருவி சன் டிவி தனது ஒளிபரப்புகளுக்காக தயாநிதியின் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த இந்த தனி டெலிபோன் எக்சேஞ்சின் உயர்தர கேபிள் கனெக்ஷனை பயன்படுத்தியிருக்கிறது என்று கண்டறிந்து அறிக்கையாக சமர்ப்பித்திருக்கிறது..!

தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டுவிட்டார்கள் என்று இன்று கதறும் தயாநிதி மாறன் 'தினமணி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மீது கோபப்படும் முன் வேறு சில வேலைகளை அவர் செய்தாக வேண்டும்..!

1. தன் மீது இந்தப் புகாரை எழுப்பி சி.பி.ஐ. மூலமாக விசாரிக்கச் சொன்ன தனது சக அமைச்சர்களில் ஒருவராக இருந்த ஆ.ராசா மீதுதான் முதலில் வழக்குத் தொடர வேண்டும்..!

2. அடுத்து சி.பி.ஐ. தன்னைப் பற்றி அவதூறாக, தப்புத் தப்பாக அறிக்கையைத் தயார் செய்து கொடுத்திருக்கிறது என்று சி.பி.ஐ. மீதுதான் தயாநிதி மாறன் வழக்குத் தொடர வேண்டும்..! இந்த  அறிக்கையை மையமாக வைத்துதான் இப்போது  தினமணியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன..!

3. மூன்றாவது, 2009-ம் ஆண்டே இச்செய்தியை தனது கட்சிப் பத்திரிகையான நமது எம்.ஜி.ஆரிலும், ஜெயா டிவியிலும் ஒளிபரப்பி, வெளியாகச் செய்து பல கூட்டங்களில் இது பற்றிப் பேசிய ஜெயலலிதா மீதுதான் மான நஷ்ட வழக்கு போட வேண்டும்..!

4. சி.பி.ஐ. பதில் அளிக்கவில்லையெனில் அதற்குப் பொறுப்பான பிரதமர் மீதுதான் தயாநிதி மாறன் குற்றம் சுமத்த வேண்டும்..!

5. தனது ஆதரவை வைத்துக் கொண்டு ஆட்சியில் அமர்ந்திருந்தும் தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்திய சி.பி.ஐ.யை கண்டிக்கத் தவறிய பிரதமர் மன்னமோகனசிங்கை தயாநிதி மாறன் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்..!

6. தங்களது கட்சியின் ஆதரவினால் வாழ்ந்து கொண்டு லீகலாக நீங்களே கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எகத்தாளத்துடன் கூறியிருக்கும் பிரதமர், இந்தியாவின் அன்னை சோனியா ஆகிய இருவரையும் தனது கட்சி ஏன் கண்டிக்கவில்லை என்று தனது கட்சித் தலைவரான தாத்தாவின் சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும்..!

7. தனது கூட்டணி கட்சியை இப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் சர்வாதிகார காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து தி.மு.க. கழகம் விலக வேண்டும் என்று தயாநிதி மாறன் அக்கட்சித் தலைவர்களிடம் போராட வேண்டும்..!

8. தாத்தாவும் கண்டு கொள்ளவில்லையெனில் தன்னை தேர்ந்தெடுத்த கட்சியே தன்னை கைவிட்டுவிட்டது. தாத்தாவே புறந்தள்ளுகிறார். தனக்கு மரியாதை இல்லை. தான் திருடன் என்று தனது கட்சியை மறைமுகமாக ஒத்துக் கொள்கிறது என்று பத்திரிகைகளிடம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்..!

இவைகளைச் செய்து முடித்துவிட்டு பின்பு கடைசியாக 'தினமணி,' 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மீது பாய்வதுதான், தயாநிதி மாறனின் நேர்மையான செயலாக இருக்கும்..!

டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கோபாலபுரம்..!

30-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கைது செய்யப்படும்வரையிலும் கைதாவாரா என்றெல்லாம் எழுதிக் கொண்டிருந்த ஜூனியர்விகடன், தற்போது டெல்லியில் நடக்கும் குடும்பச் சந்திப்புகளை உருக்கமாக விவரித்து வருகிறது. அது அவர்களுக்குத் தேவைதான் என்று நாம் நினைக்கலாம். சொல்லலாம். ஆனால் பரம்பரை பத்திரிகைகள் அப்படி வெளிப்படையாக எழுத மாட்டார்கள். அது பத்திரிகா தர்மத்திற்கு எதிரானதாம்..!

வழக்கம்போல ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் பதிவு செய்து வைப்பதற்காக மட்டுமே இந்த பாச, அழுகை காவியமும் இங்கே பதிவு செய்யப்படுகிறது..! தோழர்கள் பொறுத்தருள்வீராக..!

அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே நிலவிய மனக் கசப்பு முடிவுக்கு வந்தபோது, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது!’ என மனம் உருகிச் சொன்னார் கருணாநிதி. மீண்டும் மொத்தக் குடும்ப உறவுகளும் ஒன்று கூடும் வைபோகம் பாட்டியாலா நீதிமன்றத்திலும். திகார் சிறைச்சாலையிலும் கடந்த சில நாட்களாக நடந்தது.

அதாவது கோபாலபுரமே டெல்லிக்கு இடம் பெயர்ந்தது மாதிரி இருந்தது. அழுகை, ஆதங்கம், கோபம், கூச்சல் என மீடியாக்களின் பார்வைக்கு அப்பால் நடந்த அத்தனை நிகழ்வுகளும் அப்படியே இங்கே...

 சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு 23-ம் தேதி வந்த கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரி சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 'மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் சந்திக்கக் கூடாது’ என்பதால், தன் மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் துரை தயாநிதி ஆகியோரை அங்கே அனுப்பி வைத்தார் அழகிரி.

கனிமொழி மீது மிகுந்த அன்பு பாராட்டுபவர் கயல்விழி. அதனாலோ என்னவோ... கனிமொழியைக் கண்டதும் 'அத்தே...’ எனக் கதறத் தொடங்கிவிட்டார் கயல். கனிமொழியைத் தோளோடு சாய்த்து காந்தி ஆறுதல் சொல்ல, ராஜாத்தி அம்மாளுக்கும் கண் கலங்கிவிட்டது. மதுரையில் துரை தயாநிதியின் திருமணத்துக்குப் பிறகு, காந்தியும் ராஜாத்தியும் அன்றுதான் சந்தித்தனர். நடுவில் கனிமொழி, இடப்புறம் காந்தி, வலப்புறம் கயல்விழி என அமர்ந்து நிறைய நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.


''இந்த விவகாரத்தில் என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியவே இல்லை அண்ணி. கலைஞர் டி.வி-யில் நான் பங்கு கேட்கலை. கையெழுத்துப் போடச் சொன்னாங்க, போட்டேன்...!'' என காந்தியிடம் கனிமொழி உருக்கமாகச் சொல்ல, ''எல்லாத்தையும் அண்ணன் பார்த்துப்பார். நீ தைரியமா இரு!'' என்றார் அவர் ஆறுதலாக!

கயல்விழியிடம் நெடுநேரம் பேசிய கனிமொழி, சகஜ நிலைக்கு வந்தார். சரத்குமாரின் உறவினர்களிடம், 'தைரியமாக இருங்கள்!’ என கனிமொழியே ஆறுதல் வார்த்தார். ''கோர்ட்டில் விசாரணை தொடங்க இன்னும் நேரம் ஆகுமா?'' என காந்தி அப்பாவியாகக் கேட்க, ''தாமதம் ஆகுறது நல்லதுதான் அண்ணி. உங்களோட இன்னும் கொஞ்ச நேரம் இங்கே பேசிக்கிட்டு இருக்கலாம். இல்லேன்னா, சீக்கிரமே ஜெயில்ல போய்த் தனி ஆளா உட்கார்ந்து இருக்கணும்!'' எனச் சொல்லி கனி சிரிக்க, எல்லோருக்குமே கண்ணில் நீர் கோத்துக்கொண்டது.
 
நீதிமன்ற நிகழ்வுகள் முடிந்து சிறைக்குச் செல்லும் நேரம் வந்ததும், ''ஆதியைப் பத்திரமா பார்த்துக்கோங்க!'' என்றபடியே கையசைத்துக் கிளம்பினார் கனி.

அன்று மாலை திகார் சிறைக்கு கருணாநிதி வர, அங்கே பெரிய பாசப் போராட்டமே நடந்தது. கனிமொழிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, 'நான் டெல்லியிலேயே தங்கிடவாம்மா?’ எனக் கருணாநிதி தழுதழுக்க, 'எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்பா... நீங்க தைரியமாப் போங்க!’ என நம்பிக்கை ஊட்டினார்.

சிறை சந்திப்பு முடிந்தும் கருணாநிதிக்கு சென்னை திரும்ப மனம் இல்லை. ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரிடம், 'சட்ட ரீதியா மேற்கொண்டு என்ன செய்ய முடியும்?’ என்பது குறித்து விசாரித்தார். இதற்கிடையில், அடுத்த நாள் ஸ்டாலின் டெல்லிக்கு வந்தார். சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழியிடம் இந்தத் தகவல் சொல்லப்பட, அவருக்கு நம்ப முடியாத ஆச்சர்யம்.


ஸ்டாலினை சந்தித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார் கனி. ''என்னால் அப்பா ரொம்ப சங்கடப்படுறார். அதான் வருத்தமா இருக்கு!'' என்பது மட்டுமே கனி காட்டிய ஆதங்கம். கனி, ஸ்டாலின், ஆதித்யன் மூவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, அதனை ஒருவர் செல்போனில் படம் எடுத்தார். இதில் கடுப்பான ஸ்டாலின், 'அவனைப் பிடிங்கய்யா...’ என்றார் ஆவேசமாக. தி.மு.க. புள்ளிகள் அந்த நபரைத் துரத்திப் பிடித்து அந்தப் படத்தை அழித்தனர்.

அடுத்த கட்ட சட்டரீதியான முன்னேற்பாடுகள் குறித்து சொல்லி, ஸ்டாலின் கனிமொழியைத் தேற்ற, ''அவ்ளோ சீக்கிரம் பெயில் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். சிறையில் இருப்பதை ஒரு புது அனுபவமா நினைச்சு என்னை நானே தேத்திக்கிறேன்!'' என்றார் கனி. ராஜாத்தி அம்மாளும் ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் பேசினார்.

அன்று மாலை... டெல்லி மீடியாக்களுக்கே தெரியாதபடி முக்கியமான ஒரு சந்திப்பு திகார் சிறைச்சாலையில் நடந்தது. மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரியும் தயாநிதி மாறனும் சிறையில் கனியை சந்திக்க அனுமதி கேட்டனர். தயாநிதி மாறன் வந்திருப்பதை, கனியால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை!

ஸ்பெக்ட்ரம் பிரச்னைக்குப் பிறகு தயாநிதியை,  கனிமொழி சந்திப்பதே இப்போதுதான். அழகிரியிடம் மனம்விட்டுப் பேசிய கனிமொழி, தயாநிதியிடம் நலம் விசாரித்தார். அப்போது ஆறுதலாக தயாநிதி சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறார். இருவரையும் சமாதானப்படுத்தும்விதமாக அழகிரி, குடும்ப விவகாரங்களை உரக்கப் பேசி இருக்கிறார்.

இறுதியில் கனிமொழியைத் தட்டிக் கொடுத்து, ''நானும் சிறைவாசம் அனுபவிச்சவன்தான். ஆனா, அப்போகூட இந்த அளவுக்கு சங்கடப்பட்டது இல்லை. நீ தைரியமாப் பேசினாலும் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா. சீக்கிரமே உன்னை வெளியே எடுத்திடுவோம். குடும்ப ரீதியான அத்தனை கசப்புகளும் நிச்சயம் முடிவுக்கு வந்திடும்!'' எனச் சொன்னாராம். தயாநிதி அதிகம் பேசவில்லை என்றாலும், குடும்ப சமாதானத்துக்கான முதல் முயற்சி அங்கே நிகழ்ந்ததாக அடித்துச் சொல்கிறார்கள் டெல்லிவாலாக்கள்.

அடுத்து நிகழ்ந்த சந்திப்புதான் நம்ப முடியாத ஆச்சர்யம். ஆ.ராசா உடனான சந்திப்புதான் அது. ஆ.ராசா சகஜமாகப் பேசவில்லை என்றாலும், அழகிரியின் ஆறுதல் அவரைத் தெம்பாக்கி இருக்கிறது. தயாநிதி மாறனும் ராசாவுடன் கை குலுக்கி நிறையப் பேசி இருக்கிறார். 'சரத்குமாரை வரச் சொல்லுங்கள். நாங்கள் பார்க்க வேண்டும்!’ என ஆ.ராசாவிடம் சொல்லி அனுப்பினர் இருவரும். 'தயாநிதி மாறனை சந்திக்கும் நிலையில் நான் இல்லை!’ எனச் சரத்குமார் சொல்லிவிட்டதாக டெல்லி நிருபர்கள் வட்டாரம் சொல்கிறது. 

சரத்குமாரின் சகோதரியின் வீடு டெல்லியில்தான் இருக்கிறது. அங்கே இருந்தும்  கனிமொழிக்கும், சரத்துக்கும் சாப்பாடு வருகிறது. துணிமணிகள் பரிமாற்றமும் சரத் மூலமே நடக்கிறது. மூன்று வேளையும் வீட்டு சாப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தும், மதியம் தவிர்த்து இரு வேளைகளும் சிறை உணவைத்தான் கனிமொழியும் சரத்தும் சாப்பிடுகிறார்கள்.

25-ம் தேதி, சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழியை, மு.க.தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின், மோகனா என பெரிய உறவு வட்டாரமே சந்தித்தது.

குடும்ப ரீதியான பிரச்னையில் பெரிய பனிப் போர் நிகழ்ந்தது, செல்விக்கும் கனிமொழிக்கும் இடையேதான். ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு அத்தனை பேர் மத்தியிலும், ''உனக்கு இப்படி ஆயிடுச்சேம்மா'' என செல்வி தழுதழுத்தார். கனிமொழிக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்தது செல்வியின் வார்த்தைகள்தான். செல்வியின் கைகளைப் பற்றியபடியே துர்காவிடம் சிறை வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்  கனிமொழி. அடுத்த சில நிமிடங்களில் முரசொலி மாறனின் மனைவி மல்லிகாவும் அங்கே ஆஜர். ''என்னைப் பார்க்க நீங்க எல்லாம் வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. கெட்டதிலும் ஒரு நல்லதுன்னு சொல்வாங்களே... அதை நினைச்சே மனசைத் தேத்திக்கிறேன்!'' என அவரைப் பார்த்து கலங்கிவிட்டார் கனி.

ஆனால், ராஜாத்தி என்ன நினைத்தாரோ... செல்வி, துர்கா உள்ளிட்ட உறவுகள் வந்த உடனேயே அவர் பட்டும்படாமல் ஒதுங்கிக்கொண்டார்.

உறவுகளின் சந்திப்புகள் குறித்துப் பேசும் தி.மு.க-வின் டெல்லிப் புள்ளிகள், ''கனிமொழிக்கு இந்த அளவுக்கு சிக்கல் வராது என்ற நம்பிக்கையில்தான் ஆரம்பத்தில் உறவினர்கள் பலரும் அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள். கனிமொழியின் பிறந்த நாளுக்குக்கூட வாழ்த்து சொல்லாத அழகிரி, இப்படித் தேடி வந்து சந்தித்ததில், கனி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். குறிப்பாக தயாநிதி மாறனும், செல்வியும்  நேரில் வந்து சந்தித்ததை எங்களால்  இன்னமும் நம்ப முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் இருந்து வெளியே வர, முதலில் குடும்ப மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என தலைவர் நினைக்கிறார். அதற்குத் தக்கபடி குடும்ப உறவுகள் கைகோத்து இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரம், சிறைக்குள் தயாநிதி மாறனை சந்திக்க சரத்குமார் மறுத்ததும், செல்வி, துர்கா ஆகியோருடன் ராஜாத்தி அம்மாள் சரிவரப் பேசாமல் முறுக்கிக் கொண்டு நின்றதும்... குடும்ப மோதல்களை இன்னமும் பெரிதாக்கிவிடும் என்றே தோன்றுகிறது.

'எனக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என சிறைக்குள் புலம்பித் தவிக்கிறார் சரத். இவற்றை எல்லாம் தாண்டி, சட்ட ரீதியாகவும் இன்னும் சில திருப்பங்கள் இருக்கும்....'' என்கிறார்கள் டெல்லி சிறைத் துறை வட்டாரத்தில்!

நன்றி : ஜூனியர்விகடன்-01-06-2011

தாயுள்ளம் கொண்டவர் கனிமொழி - கண்டுபிடித்த ராம்ஜெத்மலானி

12-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அகில இந்திய மீடியாவும் ஆவலுடன் எதிர்பார்த்த கனிமொழியின் நீதிமன்ற வருகை, கடந்த 6-ம் தேதி டெல்லியில் நடந்தது. கனிமொழிக்கான வக்கீல் சண்முகசுந்தரம்தான் என்றாலும், ஆஜரானவர் ராம்ஜெத்மலானி. அவரது ஸ்டார் வேல்யூவும் சேர்ந்து, மீடியாக்களை பாட்டியாலா நீதிமன்றத்தை நோக்கி மொய்க்க வைத்தது!
 

ராம்ஜெத்மலானி பேசப் பேச... அங்கு இருந்த பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அல்ல, கனிமொழி மற்றும் தி.மு.க. பிரமுகர்களுக்கும் வியர்க்க ஆரம்பித்தது.


''கலைஞர் டி.வி-யின் சி.இ.ஓ. சரத்குமார்தான் எல்லா போர்டு மீட்டிங்குகளிலும் கலந்து கொண்டு முடிவெடுத்துள்ளார். அவர்தான் சினியுக் நிறுவனம் கடன் வழங்கிய ஆவணம் உட்பட அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். கனிமொழி ஒருபோதும் கலைஞர் டி.வி-யின் அன்றாட நடவடிக்​கைகளில் கலந்து கொண்டதில்லை. கனிமொழி என்ன தவறு செய்தார்? அவருக்கு அந்த டி.வி-யில் பங்கு இருக்கிறது... அதிலும் பெரும்பான்மைப் பங்குகள் இல்லை. அப்படிப்பட்டவரை, கலைஞர் டி.வி-யின் 'ஆக்டிவ் பிரைன்’ என்று குற்றம் சாட்டுகிறீர்கள்! ஆக்டிவ் பிரைன் என்றால் என்ன? என்ன அர்த்தம் என்று சி.பி.ஐ-க்குத் தெரியுமா? கனிமொழியின் துரதிர்ஷ்டம், அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் என்பது மட்டும்தான். இந்த ஒரு காரணத்துக்காகவே,  குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். அவருக்கு எதிராக ஒரே ஓர் ஆதாரத்தையாவது காட்டுங்கள். உயிரையும் கௌரவத்தையும் காக்கும் பண்பு உள்ளவர் கனிமொழி. தாயுள்ளம் கொண்டவர். எந்தவிதமான தவறுகளுக்கும் உள்ளாகாமல் தூய்மையாக இருக்கும் ஒரு பெண் என்பதால், ஜாமீனில் வெளிவர அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உண்டு. இந்தக் குற்றப் பத்திரிகை ஓர் அநாகரிகமான அறிக்கை. கனிமொழிதான் கலைஞர் டி.வி-யைக்  கட்டுப்படுத்திவைத்து உள்ளார் என்றும், அவர்தான் எல்லா டைரக்ஷனையும் கொடுக்கிறார் என்றும், அவர்தான் நிறுவனத்தின் மூளை என்றும் சி.பி.ஐ. சொல்கிறது. ஆனால், ஏன் நிரூபிக்கவில்லை? சி.பி.ஐ. சொல்வது எல்லாம், 'அவர் ராசாவோடு ரெகுலராகத் தொடர்பில் இருந்தார்’ என்று. ஆமாம், எங்களுக்கு(டி.வி.) மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையில் இருந்து லைசென்ஸ் வேண்டும். அதற்காக, அவரைத் தொடர்பு கொண்டோம். அது எப்படித் தவறாகும்?'' - கேட்டு நிறுத்தினார் ஜெத்மலானி!     

கனிமொழி விவகாரத்தில் ராம்ஜெத்மலானியும் சரி, மற்ற குற்றவாளிகளின் வழக்கறிஞர்களும் ஒருவரை ஒருவர் குறை சொல்லியாவது பெயிலில் வந்துவிட வேண்டும் என்று கடுமையாக வாதாடினர். ராம்ஜெத்மலானி, குற்றப் பத்திரிகையை முழுமையாகப் படித்துவிட்டு, ஆ.ராசாவைப் பற்றி சி.பி.ஐ. என்னென்ன குற்றங்கள் கூறுகிறதோ அவற்றை, ஒவ்வொன்றாக நீதிபதியிடம் படித்துக் காட்டினார்.

அதில் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி-க்கு  200 கோடி டிரான்ஸ்ஃபர் ஆவதற்கு ராசாவே காரணமாக இருப்பதைக் குறிப்பிட்டு, ''இப்படிக் குற்றப்பத்திரிகையில் இருப்பது எல்லாம் உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், அவர்தான் இதற்குப் பொறுப்பு. இதற்கும் என்னுடைய கட்சிக்காரரான கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை!'' என்று வாதாடினார். அவர்தான் என்று ராம் ஜெத்மலானி சொன்னது, ஆ.ராசாவை. இதை சி.பி.ஐ. தரப்பு கவனமாகக் குறித்துக் கொண்டது.

தன்னுடைய கட்சிக்காரரைக் காப்பாற்ற, அடுத்தவரைக் காவு கொடுப்பது என்பது, எல்லாக் குற்ற வழக்குகளிலும் நடப்பதுதான். அதே தந்திரத்தைதான் இந்த வழக்கிலும் ஜெத்மலானி கையாண்டார். இது முதலில் கனிமொழிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் அமர்ந்தபடி இதைக் கேட்ட ராசா, சலனம் இல்லாமல் உட்கார்ந்து இருந்தார்.

விவாதங்கள் முடிந்த பிறகு, ஆறு முறை கனிமொழியும் ஆ.ராசாவும் பேசிக் கொண்டனர். 2-ஜி வழக்கின் விசாரணைப் படலம் தொடங்கிய 9-ம் தேதி அன்று, குற்றவாளிகளுக்கு சாட்சியங்கள், வாக்குமூலங்கள் அடங்கிய 8,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கொடுக்கப்பட்டன. இதைப் பெற்றுக்கொண்ட ஆ.ராசாவும் கனிமொழியும் ஒன்றாகவே ஒரே வரிசையில் உட்கார்ந்து இருந்தார்கள். இருவரும் பேசினார்கள். எனவே ராம்ஜெத்மலானியின் வாதம், ஏற்கெனவே சொல்லி வைத்துக் கொண்டு  சொன்னதாகவே கருதத் தோன்றுகிறது.

அதனால்தான், ஜாக்கிரதையாக ஒரு வரியை ராம் ஜெத்மலானி, நீதிபதி ஒ.பி.சைனியை பார்த்துச் சொன்னார். அதாவது, “என்னுடைய வாதங்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது...” என்று சொன்னது, ஒருவகையில் ராசாவைக் காப்பாற்றத்தான் என்று டெல்லி வக்கீல்கள் நினைக்கிறார்கள்.

கலைஞர் டி.வி-யின் சி.இ.ஓ. சரத்குமாருக்கு ஆஜரானவர் வி.ஜி.பிரகாசம். அவர் சார்பில் பேசியவர் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும் மூத்த வழக்கறிஞருமான அல்டாஃப் அகமது. ''சரத்குமார் ஒரு அப்பாவி. இந்தச் சமயத்தில், அதை நாங்கள் நிரூபிக்க முடியாது. இப்போது அனுப்பப்பட்டு உள்ள சம்மன் மூலம் அவரை சிறைக்கு அனுப்ப முடியாது. கலைஞர் டி.வி-யை வழக்கில் சேர்க்காமல், தனிப்பட்ட சரத்குமார் மீது  குற்றச்சாட்டுகள் வைப்​பதை ஏற்றுக்கொள்ள முடியாது!'' என்றார்.

கிட்டதட்ட ஒரு நாள் முழுக்க, கனிமொழி மற்றும் சரத்குமார் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. மறு நாள் 7-ம் தேதிதான் சி.பி.ஐ. வழக்கறிஞர் யு.யு.லலித் பதில் கொடுத்தார்.
 

ராம் ஜெத்மலானி மாதிரி, லலித் வசனம் பேசவில்லை. நிதானமாகப் பேசினார். ''ஒரு புலனாய்வுத் துறையால் என்ன செய்ய முடியுமோ... அவற்றை எல்லாம் சி.பி.ஐ. இந்த வழக்கில் செய்து, குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி உள்ளது. எந்த வழக்கிலும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யாமல் சம்மன் அனுப்பும்போதுதான், சி.ஆர்.பி.சி. 88-வது பிரிவின்படி பெயிலுக்கு மனு செய்ய முடியும். ஆனால், இங்கே குற்றச்சாட்டு, பதிவு செய்யப்பட்டு உள்ளது. 'வீட்டில் இருந்து வந்தோம், திரும்பவும் வீட்டுக்கே அனுப்புங்கள்’ என்று குற்றவாளிகள் சொல்ல முடியாது. அவர்களை ஜாமீனில் விடுவது, நீதிமன்றத்தின் பொறுப்பு. ஆனால், ரிமாண்டில் வைத்த பின்னர்தான் ஜாமீனில் விடுவிக்க முடியும். இவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, தவறான வழியில் தங்கள் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்து உள்ளனர். பாண்ட் பத்திரத்தின்படி, ஜாமீன் பெற முடியாது. அவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமானால், வேறு வழியில் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்!'' என்று சொன்னார்.

அவரும் கனிமொழி, சரத்குமார் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ''இப்படிப்பட்ட ஒரு சீரியஸான வழக்கில், பெண் என்ற காரணத்தால் மட்டுமே ஜாமீனில் செல்ல முடியாது. இவர்களை நீதிமன்றக் காவலில் (சிறையில்) வைக்கவேண்டும்!'' என்று குறிப்பிட்டார்.
 
டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து, இரண்டு நிறுவனங்களைத் தாண்டி, கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த தேதிகள், பின்னர் எஃப்.ஐ.ஆர். போட்ட பின்னர் நடந்த திடீர் ஒப்பந்தங்கள், ராசா கைதானவுடன் பணத்தைத் திரும்ப ஒப்படைத்தது, அதே தேதிகளில் இந்தப் பணம் 'ரிவர்ஸாக’ மற்ற கம்பெனிகளுக்குத் திரும்பிச் சென்ற விதங்களை சி.பி.ஐ. வக்கீல் விளக்கினார்.

''இந்த ஊழல் பகிரங்கமாக நடந்து உள்ளது. இவர்கள் ஊழல் பணத்தைப் பெற்றுக் கொண்டு, பின்னர் ஆவணங்களைத் தயாரித்து உள்ளனர். ஒரு குற்றத்தை மறைப்பதற்காக, இப்படிப்பட்ட போலி ஆவணங்களைத் தயாரிப்பது மற்றொரு குற்றம். இது இந்த வழக்கின் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளது!'' என்று, குற்றப்பத்திரிகையில் இருந்து மிக சென்சிட்டிவான விஷயங்களை விளக்கினார். 

''கனிமொழிக்கு 20 சதவிகிதப் பங்குகள் இருக்கின்றன. தயாளு அம்மாளுக்கு 60 சதவிகிதப் பங்குகள் இருக்கின்றன. இப்படி ஒரு குடும்பத்துக்கு 80 சதவிகிதப் பங்குகள் இந்த டி.வி. நிறுவனத்தில் இருக்கிறது என்றால், இவர்களைத் தவிர வேறு யாருக்கு இதில் சம்பந்தம் இருக்க முடியும்? யாரால் இந்த கம்பெனி நடக்கும்? தயாளு அம்மாள் தனக்கு உள்ள பிரச்னைகளை ரிக்கார்டுபூர்வமாக எழுதிக் கொடுத்து ஒதுங்கிவிட்டார். 2007 முதல் நடந்துள்ள சம்பவங்கள், சாட்சியங்கள், ஆதாரங்களைப் பார்க்கும்போது, இந்தப் பெண்ணைத்(கனிமொழி) தவிர, வேறு யாருக்கும் இதில் சம்பந்தம் இல்லை!'' என்று கடுமையான வாதங்களை வைத்தார் லலித். 

இதே 2-ஜி வழக்கில் சில குற்றவாளிகளுக்குக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டு, ஆஜராகும்போது முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால், அவர்கள் ஜாமீன் மனு தள்ளுபடியாக, நீதிமன்றக் காவலில் வைத்து, சிறைக்கு அனுப்பப்பட்டனர். இதே மாதிரி, எடுத்த எடுப்பிலேயே கனிமொழி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த சி.ஆர்.பி.சி. 88-ன்படி சம்மனுக்கு பாண்ட் பெற்றுக் கொண்டு ஜாமீனில் அனுப்புங்கள் என்பதுதான் கனிமொழி தரப்பு வாதம். இதற்குத்தான் வாதங்கள் கடுமையாக நடந்தன.

வருகிற 14-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்க இருக்கிறது. ஒருவேளை இந்த வாதங்களை ஏற்றுக் கொள்ளாமல், நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, கனிமொழியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டால், அப்போது ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று கனிமொழி மற்றும் சரத்குமார் தரப்புகளில் திட்டம் இடப்படுகிறது!

14-ம் தேதி, கனிமொழிக்கு மற்றொரு முறை ஜாமீன் கேட்க வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகமே!     

நன்றி :  ஜூனியர்விகடன்- 

கனிமொழி கைது உறுதிதானா..?

05-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை வரும் மே-31 அன்று கோர்ட்டில் தாக்கல் செய்ய இருக்கிறது சி.பி.ஐ. இந்த ஊழல் வழக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு, சட்டப்படி கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், ஆயுள் முழுக்கவும்கூட சிறையில் கழிக்க வேண்டி இருக்குமாம். அதனால், இந்தக் கோணத்திலும் தனியாக வழக்குப் போட ஆதாரங்களை சி.பி.ஐ. சேகரிக்கிறது.

யார் இந்த அமிர்தராஜ்?

ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த, மறைந்த சாதிக் பாட்சாவிடம் பி.ஏ-வாக இருந்தவர் அமிர்தராஜ். சாதிக் சம்பந்தப்​பட்ட அனைத்து விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் முழுமையாக விசாரணை செய்ததாக அறிந்து, டெல்லி அதிகாரிகளிடம் பேசினோம்.

''ஷாகித் பால்வாவின் டி.பி. ரியாலிட்டி நிறுவனமும், சாதிக்கின் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனமும் கிட்டத்தட்ட ஒரே நிர்வாகத்தின் கீழ்தான் இயங்கி வந்ததாக அமிர்தராஜ் சி.பி.ஐ-யிடம் சொல்லி இருக்கிறார்.

உலகத் தரத்தில் ஊழியர்கள் வேண்டும் என்பதற்காகவே, நேர்முகத் தேர்வு நடத்தி ஆட்களைத் தேர்வு செய்து கொடுத்து க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு பால்வாவின் மும்பை நிறுவன அதிகாரிகள் உதவி செய்தார்களாம். சாதிக்கின் நிறுவனத்துக்கு பால்வாவின் நிறுவனங்களில் இருந்து பல கோடிகளில் பணப் பரிவர்த்தனையும் நடந்திருக்கிறது.

மும்பைத் தொழிலதிபர்கள் ஷாகித் பால்வாவும், வினோத் கோயங்காவும், தொழில் முறை நண்பர்கள். இருவரும் இப்போது திகார் சிறையில் இருக்கிறார்கள். வினோத்தின் தந்தை கிருஷ்ணன் முராரி, அவரது இளைய சகோதரர் பிரமோத் கோயங்கா ஆகியோரி பின்னணி​களையும் சி.பி.ஐ. தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறது. இவர்களுடன் சாதிக் பாட்சா நெருக்கமான தொடர்பு வைத்திருந்த ஆதாரங்கள் சி.பி.ஐ. வசம் வந்துவிட்டன...'' என்கிறார்கள்.

தாவூத் ஆல்பத்தில் பிரமோத் கோயங்கா

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பலத்த பாதுகாப்புடன் இருந்து​கொண்டு, இந்தியாவில் பயங்கரவாதத்தை ரிமோட்டில் இயக்கி வருகிறார் தாவூத் இப்ராஹிம். அப்படிப்பட்ட தாவூத்தின் இளைய சகோதரன் ஹுமாயுனின் திருமண நிகழ்ச்சியில் முக்கிய விருந்தாளியாக பிரமோத் கலந்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையை மிரட்டிவிட்டு, போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்று பதுங்கிய அபுசலீமை, அந்த நாட்டு போலீஸ் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைத்தது. அபுசலீம் தன் வாக்குமூலத்தில், ஹூமாயூன் திருமணத்தில் பிரமோத் கலந்து கொண்டதைச் சொல்லி இருக்கிறார்.

மும்பையைச் சேர்ந்த பில்டர் ராஜேஷ் என்பவரை, கடந்த 2003-ம் ஆண்டு நிழல் உலக தாதாக்கள் சுட்டுக் கொன்றனர். அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், தனது மரணத்தின் பின்னணியில் கிருஷ்ண முராரி இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தாரிக் பாய் என்று அழைக்கப்படும் கராச்சியைப் பூர்வீகமாகக்​கொண்ட தொழிலதிபர் ஒருவர், இந்திய போலீஸாரிடம் பிடிபட்டபோது, 'கிருஷ்ணன் முராரி, வினோத் கோயங்கா, பிரமோத் கோயங்கா ஆகிய மூவருக்கும் தாவூத்தின் 'டி' கம்பெனிக்கும் தொடர்பு உண்டு.  இவர்களின் ரியல் எஸ்டேட் தொழிலில் தாவூத்தின் பணம் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது’ என்றும் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது. அதனால், சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் பிரமோத்தையும் தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வர இருக்கிறார்களாம்.

தயார் நிலையில் 6-ம் எண் சிறை?

 


மே 6-ம் தேதி கனிமொழியும், கலைஞர் டி.வி-யின் நிர்வாகி சரத்குமாரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜ​ராகிறார்கள். அன்றைய தினமே, அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படலாம் என்று டெல்லியில் திடுக்கிடும் வகையில் பேச்சு வலம் வருகிறது.

திஹார் சிறையில் பெண்களுக்கென்று தனியாக 6-ம் எண் சிறை இருக்கிறது. இங்கே 1,200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் இருக்கிறார்கள். 'கனிமொழி கைது செய்யப்பட்டால் இங்கேதான் அடைக்கப்படுவார்’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். இந்த சிறையில் தமிழக போலீஸின் ஆயுதப் படையைச் சேர்ந்த 30 பெண் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்கே இரண்டு ஃபைல்கள்?

“ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய ஃபைல்கள் காணவில்லை. அதற்குக் காரணமானவர்களை முதலில் பிடித்து திகார் சிறையில் தள்ளினால்தான், மற்றவர்கள் திருந்துவார்கள்போல் தெரிகிறது...'' என்று டென்ஷன் ஆகிறார் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர்.

'ஊழல் செய்த உயர் அதிகாரிகள் சிலரைக் காப்பாற்றும் நோக்கில் அந்த இரண்டு ஃபைல்கள் எங்காவது ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறதா... அல்லது, ஒரேயடியாக எரித்துவிட்டார்களா?’ என்று சி.பி.ஐ. தேடுகிறது.

அதில் ஒரு ஃபைல், ஆ.ராசா மந்திரியாக இருந்தபோது, தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் தினசரி அலுவலகப் பணிகளைப் பதிவு செய்த விவரங்களை உள்ளடக்கியது. மற்றொரு ஃபைல், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று, ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி அரசுக்கு விண்ணப்பித்தது தொடர்பானது. இந்த இரண்டு ஃபைல்களுடன் தொடர்புடைய வேறு சில விவரங்கள் சி.பி.ஐ-க்குக் கிடைத்துவிட்டது. என்றாலும், ஒரிஜினல் ஃபைல்களைத் தேடும் பணி மும்முரமாக நடக்கிறது.

இந்த ஃபைல்களை வைத்திருந்த அதிகாரிகளிடம் சி.பி.ஐ. வாக்குமூலம் பதிவு செய்துவிட்டது. ஒருவேளை, காணாமல்போன ஃபைல்கள் கிடைக்கவில்லை என்றால், இந்த வாக்குமூலத்தை ஆதாரமாகப் பயன்படுத்தவும் சி.பி.ஐ.யிடம் திட்டம் இருக்கிறது!

நன்றி : ஜூனியர்விகடன், மே-8, 2011

தன் அரசியல் வாழ்வின் மிகக் கடினமான காலகட்டத்தை தி.மு.க., கடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க., என்றால், கருணாநிதி. கருணாநிதி என்றால் கனிமொழி. அந்த வகையில், கனிமொழி என்றாலே கழகம்தான். கட்சிக்கு வந்த களங்கம் என்று மட்டுமில்லாமல், தன் அருமை மகள் கனிமொழி என்பதால், தனிப்பட்ட முறையில் முதல்வருக்கும் இது நெருக்கடிதான்.

உயர்மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் இது பற்றி விலாவாரியாகவே விளக்கினார் கருணாநிதி. "சில நாட்களாகவே சி.ஐ.டி., காலனி இல்லத்துக்குப் போகவில்லை. தாயும், மகளும், மற்றுமுள்ளவர்களும் படும் வேதனையைக் காணச் சகிக்கவில்லை' என்பதாக அவர் கவலைப்பட்டிருந்தார்.

கனிமொழி கைதாவாரா? கருணை காட்டப்படுமா? சட்டம் கைகொடுக்குமா? மத்திய அரசு கைவிடுமா? என, ஏராளமான கேள்விக்குறிகள் அறிவாலயத்தைச் சுற்றி எழுந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல் முடிவைப் போலவே, ஆளாளுக்கு, தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். எனக்கு கிடைத்த தகவலின்படி, கனிமொழியின் கைது, எந்த வகையிலும் தவிர்க்கப்பட முடியாது என்பதுதான் உண்மை. இது குறித்து, சட்டவல்லுனர்களிடமும், சி.பி.ஐ., அதிகாரிகளிடமும் விசாரித்த வகையில் கிடைத்த தகவல்கள் :

"2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பொறுத்தவரை, இதுவரை யார் யாரெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனரோ, அவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  கனிமொழி ஒருவரைத் தவிர, குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவருமே வெளியில் இல்லை.

இவர்களில், முதல் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள ராஜா ஒருவர்தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்பே கைது செய்யப்பட்டவர்கள். மற்றனைவரும் குற்றப்பத்திரிகைக்குப் பிறகு கைதானவர்களே. அந்த வகையில், கனிமொழி கைதாவதற்கும் அதிகளவு வாய்ப்புகள் உள்ளன.

"குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே, விசாரணை அதிகாரியின் வேலையில் பாதி முடிந்துவிடுகிறது. அதன் பிறகும் கைதின் அவசியம் என்ன?' என்ற வினா எழுப்பப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு, இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. ஒன்று, விசாரணை. இன்னொன்று சாட்சிகள். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதன் மூலம், விசாரணை வேண்டுமானால் பெருமளவு முடிந்திருக்கலாமே தவிர, சாட்சிகள் கலைக்கப்படும் அபாயம் தொடரவே செய்யும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் கைது நடவடிக்கை மற்றும் சிறைவாசம் கொண்ட வழக்குகள், ஏராளமான முன்னுதாரணங்களாக உள்ளன.

சாதாரண வழக்குகளில் மட்டும்தான், குற்றப்பத்திரிகை தாக்கலும், கைதி விடுவிப்பும் தொடர்புபடுத்தப்படுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட கடும் குற்றங்களில் அவ்வாறு செய்யப்படுவதில்லை.  ஒருவர் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், அவர் ஜாமீன் பெறுவதற்கு இயல்பாகவே தகுதியாகிறார் என்பது சாதாரண நடைமுறைதானே தவிர, எல்லா வழக்குகளுக்கும் பொருந்துவதல்ல.

ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பொறுத்தவரை, குற்றம்சாட்டப்பட்ட எல்லாருமே, சமூகத்தில் பெரும் செல்வாக்கு உடையவர்கள். இவர்கள், சாட்சியைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர் என்றால், நீதிமன்றம் இதை மிகச் சுலபமாக ஏற்றுக்கொள்ளும். இவர்கள் வெளியில் நடமாடுவதன் மூலம், சாட்சிகள் கலைக்கப்படலாம்; மிரட்டப்படலாம்; வழக்கில் தலையீடு அதிகரிக்கலாம் என்பன போன்றவை, சி.பி.ஐ.,யின் வாதமாக இருக்கும்.

சரணடையச் சொல்லியோ, கைதாகும்படியோ நீதிமன்றம் உத்தரவிடும்போது, ஜாமீன் கேட்டு கனிமொழி தரப்பு மனுத் தாக்கல் செய்யலாம். இதிலும், ராஜா ஒருவரைத் தவிர, மற்ற அனைவருமே ஜாமீன் கேட்டு, மனு தள்ளுபடி செய்யப்பட்டு, சிறையில் இருப்பவர்கள்தான். ராஜா மட்டுமே, இதுவரை ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, கனிமொழியின் ஜாமீன் மனுவும் ஏற்றுக் கொள்ளப்படும் வாய்ப்பு குறைவு.

"இவர் வெளியில் நடமாடுவதால் வழக்குக்கு குந்தகம் இல்லை' என சி.பி.ஐ., உத்தரவாதம் தந்தால், ஜாமீன் தருவது பற்றி நீதிமன்றம் பரிசீலிக்கலாம். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேரின் ஜாமீனுக்கும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, கனிமொழிக்கு மட்டும் சி.பி.ஐ.,யால் கருணை காட்ட முடியாது.

மிகப் பெரிய உடல்நலக் குறைவோ, சிறைவாசம் அனுபவிக்க முடியாத, தள்ளாத வயதோ கூட கனிமொழிக்கு இல்லை. எனவே, உடல்நிலையைக் காரணம் காட்டியும் அவர் ஜாமீன் கோர முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டும், சுப்பிரமணியசாமியும், இந்தியாவில் உள்ள அத்தனை ஊடகங்களும் நேரடியாகக் கண்காணிக்கின்றன. விசாரணை நீதிமன்றத்திலோ, விசாரணை அதிகாரிகளிடத்திலோ ஏதேனும் சின்னச் சலனம் தென்பட்டால்கூட, மிகப் பெரிய கூச்சல் கிளம்பிவிடும்; சுப்ரீம் கோர்ட் விளாசிவிடும். அந்த வகையிலும், கனிமொழி விட்டுவைக்கப்படுவது சிரமமே.

இப்படி எல்லா அம்சங்களும் விரல் நீட்டுவது, திஹார் சிறைச்சாலையே நோக்கியே!

இருந்தாலும், "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்' என்ற பொது விதி இருப்பதால்தான், திட்டவட்டமான இந்த விஷயம்கூட,  இப்போதுவரையிலும் சஸ்பென்சாகவே நீடிக்கிறது!

[[இந்த விஷயத்தில் நான் என்ன நினைத்தேனோ, அதனையே இன்றைய ‘தினமலரும்’ இப்படி எழுதியிருக்கிறது. இதனை நான் எழுதியதாகவே நினைத்துக் கொள்ளுங்கள்]]

கொள்ளையடித்தது 30,983 கோடிகள்தானா...? மீதம் எங்கே..?

13-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்             பத்திரி​​கையில் ஐந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. முதல் இரண்டு குற்றச்சாட்டுகள்  பற்றி, மார்ச் 13, 2011 ஜூ.வி-யில் விரிவாக எழுதி இருந்தோம். அடுத்த மூன்று குற்றச்சாட்டுகள் இங்கே...!

மாற்றுத் தொழில்  நுட்பத்துக்கு இரட்டை ஸ்பெக்ட்ரம் ஒதுக்​கீடு!
ஏற்கெனவே உள்ள மொபைல் ஆபரேட்டர்களுக்கு மாற்றுத் தொழில்நுட்பத்தின்படி, இரட்டை முறையில் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்​தும் உரிமங்கள்   கொடுக்க   டிராய்   அமைப்பு,   ஆகஸ்ட்   2007-ல்             அனுமதி   கொடுத்தது.

இரண்டு டாடா டெலி சர்வீஸஸ் நிறுவனங்கள் இதற்கு விண்​ணப்​பித்தன. இவர்கள் ஏற்கெனவே சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தின்படி மொ​பைல் கனெக்ஷன் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்று இருந்தனர். ஆனால், டிராய் செய்த சிபாரிசு தொலைத் தொடர்புத் துறைக்கு வருவதற்கு முன்பே ரிலையன்ஸ் நிறுவனம் (18 சர்க்கிள்கள்), ஷியாம் டெலி லிங்க்ஸ், ஹெச்.எஃப்.சி.எல். இன்ஃபோடெல் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்தது. டாடா நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை. 'டாடா நிறுவனத்தைப் படாதபாடுபடுத்தினர்’ என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டுகிறது.


'தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் அவரது கூட்டாளி சந்தோலியாவும்... ஸ்வான் டெலிகாமையும், யுனிடெக் டெலிகாமையும் முன்னுக்குக் கொண்டு  வரவே, டாடா டெலி சர்வீஸைப் பின்னுக்குத் தள்ளினார்கள்’ என்கிறது சி.பி.ஐ.

டாடா கொடுத்த விண்ணப்பப் படிவங்கள்​கூட தொலைத் தொடர்புத் துறையில் காணாமல் போய்​விட்டதாக சி.பி.ஐ. தெரிவித்து இருக்கிறது. 'டாடாவுக்கு உரிமங்கள் கொடுக்கப்பட்டால், டெல்லி, மும்பையில் ஷாகித் பால்வாவின் ஸ்வான் டெலிகாமும், சஞ்சய் சந்திராவின் யுனிடெக் நிறுவனமும் பயன் அடைய முடியாமல் போகும் என்று ஆ.ராசா கருதினார். அதனால், டாடா​வின் விண்ணப்பங்கள் மூடி              மறைக்கப்​பட்டுவிட்டன.

அவர்கள் 10.1.2008 அன்று கட்டணம் செலுத்தி, அதற்கான ரசீது கொடுக்கப்பட்டு, சீனியாரிட்டி பட்டியலில் பெயர் இருந்தாலும், டாடா கொடுத்த விண்ணப்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மாயமாக மறைந்துவிட்டது’ என்று சி.பி.ஐ. சொல்கிறது. ஆ.ராசா இந்த அளவுக்கு டாடாவை இழுத்தடித்த பிறகும், அவரை சீராட்டி, பாராட்டி கருணாநிதிக்கு டாடா கடிதம் எழுதியது ஏன் என்ற மர்மம் பற்றி சி.பி.ஐ. ஏனோ குறிப்பிடவில்லை.

ஸ்வான் நிறுவனத்துக்குச் சொந்த​மான டி.பி. ரியாலிட்டியின் சகோதர நிறுவனத்துக்கு ஆர்.கே. சந்தோலியா, அவரது வீட்டை வாடகைக்குக் கொடுத்து இருக்கிறார். அதன் மூலம், மாதம்தோறும் 63,000 ரூபாயை சந்தோலியாவுக்கு ரியாலிட்டி கொடுக்கிறது. 2008 டிசம்பரில் ஸ்வானின் பங்குகள் வாங்கப்பட்டது குறித்து நீளமான பட்டியலை குற்றப் பத்திரிகையில் வைத்துள்ளது சி.பி.ஐ.

ஐக்கிய அரேபிய நிறுவனமான எடிஸாலட் நிறுவனம், ஸ்வான் டெலிகாமின் பங்குகளை 3,200 கோடிக்கு வாங்கியது. சென்னையைச் சேர்ந்த ஜினெக்ஸ் எக்ஸ்ம் வென்சர் நிறுவனம் 380 கோடிக்கு ஸ்வானின் பங்குகளை வாங்கியது. இந்த பணம் வந்த வழியையும் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் வைத்து இருக்கிறது.

தகுதியில்லாத நிறுவனங்கள்!

ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, இதன் மூலம் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற அரசியல் செல்வாக்கோடு ரிலையன்ஸ் இறங்கியது. இதற்கு ரிலையன்ஸின் மற்ற நிறுவனங்கள் பணம் முதலீடு செய்துள்ளன.

இந்த விவரங்களை முழுமையாக சி.பி.ஐ. பட்டியல் போட்டு, 45 பக்கங்களுக்குப் படம் போட்டு விளக்கி இருக்கிறது. இதில், ரிலையன்ஸின் நிர்வாகிகள் கௌதம் டோஸி, சுரேந்திர பைப்பாரா, ஹரி நாராயணன் ஆகியோர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அதனால், இவர்கள் மூன்று பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அனில் அம்பானியை விசாரித்த சி.பி.ஐ., அவரிடம் பணி புரிபவர்களை மட்டுமே குற்றவாளிகளாகச் சிக்க வைத்துள்ளது.

இதேபோல், ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருந்த யுனிடெக் நிறு​வனத்தின் சில துணை நிறுவனங்கள், டெலிகாம் உரிமத்துக்கான தகுதியைப் பெறுவதற்காக, சில மோசடியான தகவல்​களைக் கொடுத்து இருப்பதாகவும் சி.பி.ஐ. கண்டுபிடித்து உள்ளது.

அந்தத் தகவல்களை ஆராயாமல், தொலைத் தொடர்புத் துறை அனுமதி கொடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமங்களுக்கான விண்ணப்பம் செய்த​போது, ஸ்வானுக்கும் யுனிடெக் நிறுவனத்துக்கும் முறையான தகுதிகள் இல்லை. இவர்களது விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இவர்களுக்கு உரிமங்கள் கொடுக்கவே கட்-ஆஃப் தேதி முதல் ஸ்பெக்ட்ரம் விலை மதிப்புவரை அனைத்திலும் தில்லுமுல்லுகள் நடந்து உள்ளதாக சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் குறிப்பிடுகிறது.

நுழைவுக் கட்டணத்தில் தில்லுமுல்லு!

அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு குறித்து சி.பி.ஐ. ஒரு கணக்கைச் சொல்கிறது!

செல்லுலார் சேவை நிறுவனங்களிடம் இருந்து ஒரு மெகா ஹெட் வீதம் ஆண்டுதோறும் வசூல் செய்யப்படும் வருவாய்ப் பங்குத் தொகை 2002-03 முதல் 2007 வரை கணக்கிடும்போது, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. இதை  வைத்துக் கணக்கிடும்போது, 2008-ம் ஆண்டு புதிய உரிமங்கள் வழங்கப்பட்டதில், 22,535 கோடி நுழைவுக் கட்டணத்தில் நஷ்டம்.

இதே மாதிரி, இரட்டைத் தொழில் நுட்பத்துக்கான நுழைவுக் கட்டணத்தை உயர்த்தாத காரணத்தால், 8,448 கோடி அரசுக்கு இழப்பு. ஒட்டு  மொத்தமாக, அரசுக்கு 30,983 கோடி நஷ்டம் என்கிறது சி.பி.ஐ.

தொலைத் தொடர்புத் துறை, ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான நுழைவுக் கட்டணத்தை 1,650 கோடி என நிர்ணயித்தது. இது 2001-ல் நான்காவது செல்லுலார் மொபைல் டெலிபோன் சர்வீஸுக்கு(சி.எம்.டி.எஸ்.) விடப்பட்ட ஏலத் தொகை. இந்த ஏலத் தொகையை உயர்த்தாமல், 2008-ல் கொடுக்கப்பட்ட உரிமங்களுக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயித்தது தவறு என்கிறது சி.பி.ஐ..

'தொலைத் தொடர்புத் துறை எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதனால், 2001-க்குப் பிறகு ஏற்பட்டுள்ள தொலைபேசிகளின் அடர்த்தி, வளர்ச்சி, ஆண்டுதோறும் வசூல் செய்யப்படும் வருவாய்ப் பங்குத் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டு, இந்த ஏலத் தொகையை அரசு உயர்த்தி இருக்க வேண்டும்.

2003-ல் பீகார், ஒரிஸ்ஸா, வட கிழக்கு மாநிலங்களில் யாருமே ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால், 2001-ம் ஆண்டு முறையே பின்பற்றப்பட்டது. ஆனால், கடுமையான போட்டி உருவான பிறகும் அதையே எப்படிப் பின்பற்ற முடியும்?’ என்று சி.பி.ஐ. கேள்வி எழுப்புகிறது.

'நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம், அதற்கும் மேலாக பிரதமர் கூறிய ஆலோசனைகளையெல்லாம் ஆ.ராசா புறக்கணித்தார். எல்லோருடைய கருத்துகளையும் மீறி தன்னிச்சையாக ஆ.ராசா முடிவு எடுத்தார். தனக்கு வேண்டியவர்களான ஸ்வான் டெலிகாம் ஷாகித் பால்வா, வினோத் கோயங்காவோடு, யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திராவும் பயனடையவே, அரசுக்கு ஆ.ராசா நஷ்டம் ஏற்படுத்தினார்!’ என்கிறது  சி.பி.ஐ.

இந்த விவகாரத்தில் கட்டுக்கட்டான ஆவணங்களை மட்டுமின்றி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் தவிர, குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரையும் சாட்சிகளாக நிறுத்துகிறது.

தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், டிராய் தலைவர்கள், சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதி, முன்னாள் தொலைத் தொடர்புச் செயலாளர் மாத்தூர், சட்டத் துறை செயலாளராக இருந்த டி.கே. விஸ்வநாதன், முன்னாள் நிதிச் செயலாளர் டி.சுப்பா ராவ் என்று பெரிய படையே சிறப்பு நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது.

இதில் முக்கியமான ஏழு பேர் ஆ.ராசாவுக்கு எதிராக மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலங்களும் கொடுத்து இருக்கிறார்கள். இதில் சி.பி.ஐ. ரெய்டுக்கு உள்ளான ஏ.கே.ஸ்ரீவத்சவா மற்றும் சுமார் ஒன்பது வருடங்களாக, கூடுதல் பிரைவேட் செக்ரெட்டரி அந்தஸ்தில் ஆ.ராசாவுடன் பணியாற்றிய ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவரும் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். (இதில் ஆசிர்வாதம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. அல்லது காங்கிரஸ் சார்பில் போட்டியிடவும் முயற்சி செய்தவர் என்பது தனி விவகாரம்)

இந்த இருவரது வாக்குமூலங்களை  வைத்து ஆ.ராசாவுக்கு எதிராக வழக்கை சி.பி.ஐ. வலிமைப்படுத்தி உள்ளது. மோசடி, கூட்டுச் சதி, தில்லுமுல்லு, திட்டமிட்டு ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் கொடுத்தது, லஞ்ச ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடத்தில் இருந்து அதிகபட்சம் ஏழு வருடங்கள்வரை தண்டனை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், சாட்சிகளில் எத்தனை பேர் பல்டி அடிப்பார்கள், யார் பிறழ் சாட்சிகளாக மாறுவார்கள் என்பதைப் பொறுத்தும்... இனி தாக்கல் செய்யப்பட இருக்கும் கூடுதல் குற்றப் பத்திரிகையைப் பொறுத்தும், 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதித் தீர்ப்பு அமையும். இதுவரை கலைஞர் டி.வி. பெற்ற 200 கோடியைத் தவிர, வேறு எந்த ஆதாயங்களையும் சி.பி.ஐ. இந்தக் குற்றப் பத்திரிகையில் முன் வைக்கவில்லை.

இந்த வழக்கைப் புலன் விசாரணை செய்த விவேக் ப்ரியதர்சினியிடம் இது குறித்துக் கேட்டபோது, ''பொறுத்திருங்கள்... அடுத்தடுத்த குற்றப் பத்திரிகைகளில் ஒவ்வொன்றாக வெளிவரும்!'' என்கிறார்.

காத்திருப்போம்!

 சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத் துறை!

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேடுகளை சி.பி.ஐ-யும், பணப் பரிமாற்றம் தொடர்பான மோசடிகளை அமலாக்கப் பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.

சி.பி.ஐ. கடந்த 2-ம் தேதி முதல் கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், வெளிநாட்டு நிதி மேலாண்மை சட்டத்தின் கீழ் 4,300 கோடி முதலீடு பற்றிய மோசடிகள் பற்றி குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

'2ஜி முறைகேடு பற்றி சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அடுத்த நாள், அதாவது கடந்த 9-4-11 அன்று அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த குற்றப் பத்திரிகையில் ஸ்வான் டெலிகாம், லூப் மொபைல், லூப் டெலிகாம் மற்றும் எஸ்.டெல் பற்றி கூறப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஆ.ராசா அண்ட் கோவுக்கு அமலாக்கத் துறையில் இருந்து சம்மன்கள் வழங்கப்பட்டனவாம். மேலும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள யுனிடெக், ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டன.

இதில் ஆ.ராசா, சித்தார்த் பெஹுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் சிறையில் உள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்படும். மற்றவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை தொடங்குமாம்!

நன்றி : ஜூனியர்விகடன்-17-04-2011