Showing posts with label சன் டிவி. Show all posts
Showing posts with label சன் டிவி. Show all posts

தயாநிதி மாறனின் டக் அவுட்டு..!

10-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 2-ம் தேதியன்று தினமணி பத்திரிகையில் வெளியாகியிருந்த தயாநிதி மாறனின் தனி டெலிபோன் எக்ஸ்சேஞ் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக நேற்றும் எஸ்.குருமூர்த்தி தயாநிதி மாறனின் மொன்னையான பதிலுக்கு விளக்கமாகப் பதில் சொல்லியிருக்கிறார். அது இதுதான்..!

 
தினமணி - 09-06-2011

"என்னுடைய பெயரிலோ அல்லது 3/1 போட் கிளப் அவென்யூ வீட்டிலோ 24371500 என்ற எண்ணுள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி மட்டுமே உள்ளது. 323 இணைப்புகள் உள்ளன என்று "தினமணி' நாளிதழில் வந்த செய்தி தவறானது. உண்மையை ஏன் அவர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடமிருந்து கேட்டு பெற்றிருக்கக் கூடாது?'' என்று ஜூன் மாதம் 2-ம் தேதி தயாநிதி மாறன் ஏதோ தான் தவறே செய்யாதது போலவும் தன் மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்துவதாகவும் அறிக்கை வெளியிட்டார்.

 பி.எஸ்.என்.எல். இணைய தளத்திலேயே தயாநிதி மாறன் வீட்டில், 24371500 என்ற இணைப்பு தலைமைப் பொது மேலாளர் பெயரிலும், 24371515 என்ற இணைப்பு தயாநிதி மாறன் பெயரிலும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்.லின் 2009-ம் ஆண்டு, ஜூன் 6-ம் தேதியிட்ட கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அளிக்கப்பட்ட 24371500 என்ற தொலைபேசி இணைப்புதான் தயாநிதி மாறன் வீட்டில் உள்ளது என்பது பொய் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து பெறப்பட்ட மேலும் சில புதிய தகவல்களும் தயாநிதி மாறனுக்கு எதிராகவே அமைந்துள்ளன. அரசு கணக்கில், 323 இணைப்புகளுடன் ரகசிய தொலைபேசி இணைப்பகம் அவரது வீட்டில் இயங்கியதற்கான மறுக்க முடியாத பல புதிய ஆதாரங்கள் பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து கிடைத்துள்ளன.

தயாநிதி மாறன் கூறுவது அனைத்தும் பொய் என்பதை பி.எஸ்.என்.எல் சென்னை சர்க்கிளின் 21-6-2007 தேதியிட்ட அலுவலக கடிதம் உறுதிப்படுத்துகிறது.
 
2007-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார். இரு வாரங்களுக்கு பிறகு, பி.எஸ்.என்.எல்.லுக்கு மாறன் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில், அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட 24371515 மற்றும் 24371616 இணைப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதான், பி.எஸ்.என்.எல். உண்மையை வெளிப்படுத்த உதவியது. 323 இணைப்புகள் உள்ளது என்பதுடன், ரகசிய இணைப்பகம் செயல்பட்டதையும் அது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

முதலாவதாக: 24371515, 24371616 ஆகிய எண்கள் குறித்த தகவல்கள், பொது குறை தீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இல்லை. “இந்த எண்கள் குறித்த தகவல்களை மாம்பலம் இணைப்பகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளவும்” என பி.எஸ்.என்.எல். அளித்த முதல் கடிதம் தெரிவித்தது.

ஏன் இந்த இரண்டு இணைப்புகளும் மாம்பலம் இணைப்பகத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன என்கிற கேள்வி எழுகிறது. இதற்குப் பதில் கிடையாது. பொது குறை தீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இந்த எண்கள் குறித்த தகவல்கள் இல்லை என்பதே மோசடி என்பதை உணர்த்துகிறது. இணைப்பக முறையில் இருந்து அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பது பொருளாகிறது. 2437 என்ற பொதுவான இணைப்பக கோடு கொண்ட அவைகள், ரகசிய இணைப்பகத்தில் இடம் பெற்றன.

 இதே போல, தொலைபேசி வாடிக்கையாளருக்கு ஏதாவது தகவல் தேவைப்பட்டால், அவர், "1191'' என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்வார். ஆனால், தயாநிதி மாறனின் இணைப்பகத்தில், 234711911க்கு வரும் அனைத்து அழைப்புகளும் 24311191 க்கு தானாகவே மாற்றப்பட்டு விடும். இது 2437 என்ற ரகசிய இணைப்பகம் செயல்படுவதை பாதுகாக்க செய்யப்பட்ட ஏற்பாடுதான்.

இரண்டாவதாக : பி.எஸ்.என்.எல்.லின் அந்தக் கடிதம், 300 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் உள்ளதை ஒத்துகொண்டு,மாறனின் பொய்யை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

24371515 மற்றும் 24371616 (அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட அவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டவை) ஆகிய இரண்டும், 300 எக்ஸ்டென்ஷன்கள் உள்ள 24371500 என்ற முக்கிய எண்ணின் துணை எண்கள் ஆகும் என்பது தெரிய வருவதாக அக்கடிதம் கூறுகிறது. அந்த முக்கிய எண் 24371500 இணைப்பு, 3/1 போட் கிளப் சாலையில், தலைமைப் பொது மேலாளர் என்ற பெயரில் உள்ளதாகவும் அது மேலும் தெரிவிக்கிறது.

தயாநிதி மாறன், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி 5 வாரங்களுக்கு மேல் இந்த மோசடி தொடர்ந்துள்ளது என்றும் அக்கடிதம் உணர்த்துகிறது. இக்கடிதம் நான்கு முக்கிய உண்மைகளை உறுதிப்படுத்துகிறது.

1. 24371500 என்ற எண்ணுக்குள் 300 இணைப்புகள் கொண்ட சட்ட விரோத இணைப்பகம் மறைக்கப்பட்டிருந்ததையும், அதில் 24371515, 24371616 எண்கள் சேர்ந்திருந்ததையும் அது உறுதிப்படுத்துகிறது.

2. அந்த மோசடி இணைப்பகம், தலைமைப் பொது மேலாளர் பெயரில் செயல்பட்டது. அது மாறனின் பெயரில் இல்லை.

3. அந்த மோசடி இணைப்பகம், 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதிவரை செயல்பட்டுள்ளது.

4. இந்த இணைப்பகத்திற்கான செலவுகளை அரசே ஏற்றுள்ளது - அதாவது "டி.டி.ஐ.எஸ்.டி.(துறை) பிரிவில்'' என்ற கடிதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் உண்மையை ஒப்புக் கொள்கின்றன.

ஆக மொத்தம், 323 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் திருட்டுத்தனமாக தயாநிதி மாறனின் வீட்டில் இருந்தன என்ற உண்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அந்த இரு எண்களையும், கேட்டு கொண்டபடி, இலவச இணைப்புகளிலிருந்து, கட்டண முறையிலான நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டுக்கு மாற்ற, "24371500'' என்ற முக்கிய எண் மறைக்கப்பட்டு, 24341515, 24371616 சாதாரண இணைப்புகளாக, எஸ்.டி.டி. வசதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டில் அளிக்கப்படும் என்று அக்கடிதம் தெரிவிக்கிறது.

அப்படியெனில் ஏன் 24371500 ஐ மறைக்க வேண்டும்..? இது கூடவா தெரியவில்லை? 24371500 முதல் 24371799 வரை உள்ள 300 துணை இணைப்புகளைக் கொண்ட 24371500 முக்கிய எண் தெரியக்கூடாது என்பதற்காகத்தான்.

இரண்டாவதாக அக்கடிதம் மாறனின் வீட்டில் மேலும் 23 இணைப்புகள் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மற்ற இணைப்புகள், தொழில்நுட்ப வார்த்தையில் கூறினால், "பிரா' இணைப்புகள் ஆகும். 7 "பிரா' இணைப்புகளும், போட் கிளப்பில், சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் பெயரில் 2 சாதாரண இணைப்புகளும் இருந்ததை அந்தக் கடிதம் கூறுகிறது''.

ஒவ்வொரு "பிரா' லைனும் ஒரே சமயத்தில், குரல், ஆவணங்கள், விடியோவை அனுப்பும் திறன் கொண்டவை. எனவே, 7 "பிரா' இணைப்புகள் என்பது, 21 இணைப்புகள் ஆகும். 21 இணைப்புகளுடன், 2 சாதாரண இணைப்புகள், 24371500 எண்ணில் உள்ள 300 இணைப்புகள் ஆக மொத்தம் 323 இணைப்புகள் (ஐஎஸ்டிஎன்) திருட்டுத்தனமாக மாறனின் வீட்டில் செயல்பட்டுள்ளன. இதைதான், சிபிஐ தனது அறிக்கையில் வெளிக்கொணர்ந்துள்ளது.

323 இணைப்புகள் கொண்ட இணைப்பகத்தையே தயாநிதி மாறன் மறைத்து விட்டார் என்பதை "தினமணி' நாளிதழ் அம்பலப்படுத்தியது. அவ்வளவே!

பி.எஸ்.என்.எல்.லின் கடிதத்தின் மூலம், தயாநிதி மாறன் தவறு செய்துள்ளார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெளிவாகி விட்டதே, இனிமேலாவது தயாநிதி மாறன், தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு தலைகுனிவை ஏற்றுக் கொள்வாரா? இல்லை, வலுக்கட்டாயமாகப் பதவி பறிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவமானங்களுக்குப்  பிறகுதான் ஏற்றுக் கொள்வாரா?

உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீர வேண்டும். அவரவர் பாவம் அவரவருக்குத்தான் என்றெல்லாம் தமிழில் பல பழமொழிகள் உண்டு. தயாநிதி மாறன் என்பதால் இவையெல்லாம் மாறிவிடுமா என்ன..?

நன்றி : எஸ்.குருமூர்த்தி, தினமணி

தான் இன்னமும் அமைச்சராக இருப்பதால் அந்தச் செல்வாக்கை வைத்து சென்னை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தகவல் சொல்லும் உரிமையில்லாத பெண் அதிகாரி ஒருவரை வைத்து பதில் சொல்லியிருக்கும் தயாநிதி மாறன், செய்திருக்கும் ஊழலை அப்படியே மூடி மறைக்கும்விதமாக 24371500 என்ற ஒரேயொரு நம்பர் மட்டும்தான் தயாநிதி மாறனின் வீட்டில் இருப்பதாக கப்ஸா விட்டிருந்தார்.

ஆனால் 24371515 என்ற நம்பரும் தயாநிதியின் அதே வீட்டு முகவரியையும், அவரையும்தான் அடையாளம் காட்டுகிறது. இதற்கு தயாநிதி எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

இந்த எண்ணுடன் 24371616 என்ற எண்ணுடனும்தான் 300 துணை இணைப்புகள் இணைக்கப்பட்டிருப்பதாக பி.என்.எஸ்.எல். அலுவலக கடிதம் தெரிவிப்பதாக குருமூர்த்தி சொல்லியிருக்கிறார்..!

இதற்கு இன்றுவரையிலும் தயாநிதியோ, சன் டிவியோ பதில் சொல்லவில்லை. ஆக மொத்தம் இது நிச்சயமாக நடந்திருக்கக் கூடிய உண்மை என்றே நாமும் நம்ப வேண்டியுள்ளது..!

தி.மு.க. ஆட்சியில் முறைகேடுகளே னடக்கவில்லை. நல்லாட்சிதான் நடத்தினார் கலைஞர். காலை 5 மணியில் இருந்து நள்ளிரவுவரையிலும் அவர் தமிழகத்திற்காகவே உழைத்தார் என்றால் கப்ஸா விடும் உடன்பிறப்புகள் இதையும் கொஞ்சம் கவனித்தில் வைத்துக் கொண்டால் நல்லது..!

இதுபோல் எத்தனை, எத்தனை கொள்ளைகளை கண்டு கொள்ளாமல், அல்லது தெரிந்து கொள்ளாமல், அல்லது தெரிய வாய்ப்பில்லாமல் இந்த மனிதர் தமிழகத்தை ஆண்டு வந்திருக்கிறார் என்பதே மிகப் பெரிய வெட்கக்கேடு..!

அந்த வகையில் கருணாநிதிக்கு தமிழகத்து மக்கள் கொடுத்திருப்பது ஓய்வு அல்ல.. தண்டனை என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இனியும் கழக உடன்பிறப்புகள் கலைஞரின் 20 மணி நேர கண் முழித்த உழைப்பு, நாட்டுக்காகத்தான் என்று உளறாமல் இருந்தால் உத்தமம்..!

கில்லாடி மாறன்கள்..!

02-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜெயலலிதா கூறியிருந்த குற்றச்சாட்டு ஒன்றினை அத்தனை பேரும் மறந்து போயிருந்தோம். நிஜமாகவே நானும் மறந்துவிட்டேன். ஆத்தாவும் மறந்துவிட்டதோ என்னவோ, கடந்த தேர்தல் பிரச்சாரத்திலும் இந்தச் செய்தியைப் பற்றி யாரும் குறிப்பிடவில்லை.

ஆனால் இன்றைய தினமணியில் முதல் பக்கத்தில் வெளியாகியிருக்கும் இச்செய்தியைப் பார்த்தவுடன் பழைய ஞாபகம் வந்தது..! இந்தச் செய்தியை முதலில் ஜெயா டிவியும், ஆத்தாவும் சொன்னபோது, “சி.பி.ஐ. எங்களை விசாரித்தால் நாங்கள் பதில் சொல்லிக் கொள்கிறோம்.. அதைப் பற்றிய கவலை அம்மையாருக்குத் தேவையில்லை..” என்று தாத்தா கூறியிருந்தார். அதன் பின்பு இதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்ட 2-ஜி வழக்கு வெளியாகி இந்தச் செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது..! இப்போது மறுபடியும் வெளியாகியிருக்கிறது..

முதலில் தினமணி கட்டுரையைப் படியுங்கள்.. பின்பு மீண்டும் பேசுவோம்..!

ஏர்செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல் தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார்.

இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பி.எஸ்.என்.எல்.லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. கணக்கிட்டுள்ளது.

இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது. இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.

இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரில் வைத்துள்ளார் தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காகக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.

இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு ரகசியமாக கேபிள்களையும் பதித்துள்ளனர். பொதுச் சாலையில் இந்த கேபிள் போகிறது. இதுவும் சட்டவிரோதமான வேலையாகும்.


ராசாவுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சத்தம் போடாமல் அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனது குடும்பச் சொத்து போல பாவித்து இப்படி விளையாடியிருக்கிறார் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு.

இது குறித்து விசாரித்த சி.பி.ஐ. இது தொடர்பாக மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2007-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.  அதில் தயாநிதி மாறனின் மோசடிகளை விரிவாக விளக்கியுள்ளது சிபிஐ.

என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில். அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே இந்த மெகா மோசடி குறித்து தி.மு.க. தலைமைக்கும் தெரிந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.

தனது சொந்த பயன்பாட்டுக்கு என்று கூறி வாங்கிய இந்த 323 இணைப்புகளையும், அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்காக, பயன்படுத்தியுள்ளார் தயாநிதி மாறன்.

இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐ.எஸ்.டி.என். இணைப்புகளாகும். அதாவது படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களைவிட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினால் அவை அதி வேகமாக போய்ச் சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.

டிஜிடல் தகவல்களைக் கொண்டு போய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம். இப்படிப்பட்ட இணைப்புகள் தமிழில் வேறு எந்த சானலுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாநிதி மாறன் புண்ணியத்தால் இப்படி ஒரு அசாத்தியமான வசதியை சன் டிவி நிறுவனம் பெற முடிந்துள்ளது.

இந்த வசதியைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை வாடகையாக சன் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு பைசாகூட செலவில்லாமல் ஓசியிலேயே எடுத்து விளையாடியிருக்கிறார்கள் சன் டிவி குடும்பத்தார், தயாநிதி மாறன் மூலமாக.

வழக்கமாக யாராவது சிலர் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தவர் கைது என்று செய்திகளில் படித்திருக்கிறோம். ஆனால் தயாநிதி மாறன் நடத்தி வந்த இந்த ரகசிய இணைப்பகம் எப்படி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

சி.பி.ஐ. இது குறித்து புகார் கூறியும்கூட அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. நியாயஸ்தனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்குக்கு கூடவா இது தெரியாமல் போயிற்று என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ.

சன் டிவிக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கும்கூட இந்த இணைப்புகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர் மாறன் சகோதரர்கள். அது குறித்து தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

தயாநிதி மாறன் செய்ததாக கூறப்படும் இந்த பகிரங்க மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நிச்சயமாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி உள்ள நிலையில், ராசாவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அவரை பதவியை விட்டே ஓட வைத்த காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு தயாநிதி மாறன் விவகாரத்தில் மட்டும் பெருத்த மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

தயாநிதி மாறனின் குடும்ப வர்த்தக நோக்கத்துக்காக இந்த தனி இணைப்பகம் பயன்பட்டது என்ற மோசடியை சி.பி.ஐ. எப்படி, எதனால் விசாரிக்க நேரிட்டது என்பது தனிக்கதை. அதைத் தெரிந்து கொள்வதற்கு, சில சம்பவங்களை நினைவு கூர்வது அவசியம்.

திமுக தலைவர் மு. கருணாநிதியின் அக்கா பேரனான தயாநிதி மாறன் 2004 ஜூன் முதல் 2007 மே வரையில் மத்திய அரசில் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கருணாநிதி குடும்பத்தில் ஹிந்தி மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்த அவர்தான் கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் இடையில் கண்களாகவும் காதுகளாகவும் - தொடர்பாளராக - செயல்பட்டார். இளமையும் துடிப்பும் மிக்க தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தார். அந்தக் கூட்டணியில் திமுகவின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்பட்டது.

 அப்போது மாறன் எவ்வளவு செல்வாக்குடன் திகழ்ந்தார் என்பதற்கு சான்று வேண்டுமா? டி.டி.எச். நிறுவனத்தில் ரத்தன் டாடாவுக்கு இருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பங்கைத் தங்களுடைய குடும்ப நிறுவனத்துக்குத் தர வேண்டும், இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரத்தன் டாடாவையே மிரட்டினார் என்று பேசப்பட்டது. அத்தோடு மட்டும் அல்ல, நான் மிரட்டினேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது என்று கூடுதலாக வேறு மிரட்டியிருக்கிறார்.

அப்படி இருந்த மாறன் திடீரென கோபுரத்திலிருந்து குப்பைமேட்டுக்கு வந்துவிட்டார். எல்லாம் குடும்ப ஊடகங்கள் மிதமிஞ்சிய கர்வத்தில் செய்த கோளாறுதான். தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் யார் என்று வாசகர்களிடையே கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி, அதில் கருணாநிதியின் மற்றொரு மகனான மு.க. அழகிரிக்கு மு.க. ஸ்டாலினைவிட செல்வாக்கு மிகவும் குறைவு என்று முடிவை வெளியிட்டது.

இந்த முடிவு வெளியான 9.5.2007-ல் மதுரையில் மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. கலாநிதி மாறனின் தினகரன் பத்திரிகை அலுவலகத்துக்குள் அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி, பொருள்களைச் சேதப்படுத்தி வன்முறையில் இறங்கியது. அதில் அப்பாவிகளான 3 பேர் உயிரிழந்தனர்.


கருணாநிதி உடனே அழகிரிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தயாநிதி மாறனை மத்திய அரசிலிருந்து விலக்கினார். அந்த நேரத்தில்தான் மத்தியப் புலனாய்வுக் கழகம்(சி.பி.ஐ.) தயாநிதி மாறன் தன்னுடைய குடும்ப வியாபார நோக்கத்துக்குப் பயன்படுத்திய இந்த தனி இணைப்பகம் குறித்த தகவல்களைச் சேகரித்தது.


மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2007 செப்டம்பர் மாதமே சி.பி.ஐ. பரிந்துரைத்தது. ஆனால் அதற்குப் பிறகு கடந்த 44 மாதங்களாக சி.பி.ஐ. இந்த விஷயத்தில் கும்பகர்ண தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.

தயாநிதி மாறன் துறைக்கு ஆ. ராசா அமைச்சரானார். ஆ. ராசாவிடம் ஒப்புதல் பெற்று மேல் நடவடிக்கைக்கு வழி செய்யுமாறு தொலைத் தொடர்புத் துறை செயலருக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியது.


இதற்கிடையே 2009-ல் மக்களவை பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்ததால் கருணாநிதியின் குடும்பத்தில் சமாதானக் கொடி ஏற்றப்பட்டது. மகன்களுக்கும் அக்கா பேரன்களுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தி மீண்டும் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டினார் கருணாநிதி. அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் இக்காட்சியைக் காணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது, கண்கள் பனிக்கின்றன என்று உருகினார் கருணாநிதி. ஒரு வேளை சி.பி.ஐ.யின் அந்த கடிதத்தைக் காட்டித்தான் அக்கா பேரன்களை வழிக்குக் கொண்டு வந்தாரோ  என்னவோ?

2009 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொலைத் தகவல் தொடர்புத் துறையைப் பெற தயாநிதி மாறன் முயற்சி செய்தார், ஆனால் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார், இன்றுவரை அந்தப் பதவியில் நீடிக்கிறார்.

குடும்பத்துக்குள் பூசல் தணிந்துவிட்டபடியால் சி.பி.ஐ. கடிதமும் கவனிக்கப்படாமல் தொலைத் தகவல் தொடர்புத் துறையில் எங்கோ தூங்குகிறது. 2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் காரணமாக 2010 நவம்பரில் ஆ.ராசா பதவியை ராஜிநாமா செய்தார். கபில்சிபல் அத்துறை அமைச்சரானார். அன்றிலிருந்து கபில் சிபலும் சி.பி.ஐ.யின் கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சும்மாவே இருக்கிறார்.

 ஜவுளித்துறை அமைச்சர் என்ற வகையில் தயாநிதி மாறனும் கபில் சிபலோடு சேர்ந்து மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கிறார். சி.பி.ஐ. கடிதம் எழுதி 44 மாதங்களாகியும் ஒரு நடவடிக்கையும் இல்லை.

எங்காவது ஊழல் நடந்தால் கணமும் தாமதிக்காமல் மிகத் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்று ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டும் யோகாசன குரு பாபா ராம்தேவுக்குக் கடிதம் எழுதுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

தயாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் சோனியா காந்தியோ இன்னமும் ஒருபடி மேலேபோய், ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது - அதாவது மற்றவர்களின் ஊழலை - சகித்துக் கொள்ளவே முடியாது என்பதை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.

ஊழலுக்கு எதிராக சோனியா விடுத்துள்ள போர்ப் பரணியும், காலதாமதம் செய்யாமல் ஊழலை ஒழித்தே தீருவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் செய்துள்ள கர்ஜனையும் நம்மை விலா நோகச் சிரிக்க வைக்கின்றன.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியவரை எதிரில் வைத்துக் கொண்டே இவர்கள் செய்யும் அட்டகாச அறிவிப்புகளைக் கண்டு வேறு என்னதான் செய்வது?

பின்குறிப்பு: தயாநிதி மாறன் கடந்த சில நாள்களில் சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தனித்தனியே சந்தித்து நீண்டநேரம் ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. ஊழல் செய்தவரைப் போலவே இவர்களுக்கும் வெட்கம் இல்லை என்று தெரிகிறது.

இனி நான்..!

தெள்ளத் தெளிவாக எழுதியிருக்கிறது தினமணி.

ஒரு மத்திய அமைச்சருக்காக இத்தனை டெலிபோன் கனெக்ஷன்களை கொடுத்துவிட்டு இத்தனை கோடி ரூபாயை ஏப்பம் விடும் அளவுக்கு தரம் தாழ்ந்த நிலையில் ஆட்சி நடத்தியிருக்கும் இவர்கள்தான் இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியாளர்களாம். தாத்தா எதற்காக ஆட்சிப் பொறுப்பில் இருந்தாரென்றால், தனது குடும்பத்திற்காக மட்டுமே என்பதற்கு இது இன்னுமொரு உதாரணம்..!

உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்த நிலையில், ஆசியாவின் மிகப் பெரும் 4-வது பணக்காரர்களாக உருவெடுத்த நிலையிலும் அவருடைய தந்தை முரசொலி மாறனின் சிகிச்சைக்காக மத்திய அரசு செலவிட்ட சில கோடிகளைச் செலவிட்டது.

அந்தச் சில கோடிகளைக் கொடுப்பதினால் இவர்களொன்றும் தெருவுக்கு வந்துவிடப் போவதில்லை..! ஆனாலும் கொடுக்க மனமில்லாத புண்ணிய ஆத்மாக்கள்தான் இவர்கள்..! எப்பாடுபட்டாவது தங்களது தொழிலை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஒரேயொரு அம்சக் கோரிக்கையோடு அரசியல் களத்தில் குதித்த மாறன்கள் இன்றுவரையிலும் அதை நோக்கியே பயணித்தும் வருகின்றனர்.

ஏதோ சன் தொலைக்காட்சியின் நிர்வாகத் திறமையினால்தான் அந்தத் தொலைக்காட்சி முன்னுக்கு வந்தது என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள் சிலர்..! ஆனால் மற்ற சேனல்களைவிடவும் தரத்திலும், காட்சிப்படுத்ததிலும் சன் டிவி எப்படி முதலிடத்தில் இருந்தது என்பதைத்தான் இந்தக் கட்டுரையும் விளக்கியிருக்கிறது..!

இந்த அளவுக்கு முறைகேடுகளையெல்லாம் செய்துவிட்டு இவர்களால் மக்களுக்காக, நல்லதொரு மக்களாட்சியைத்தான் நாங்கள் நடத்தினோம் என்று எப்படி சொல்ல முடிகிறது..?

இந்த அளவுக்கு நடந்திருக்கும் முறைகேடுகளைக்கூட கண்டறியாமல், தெரிந்த பின்பும் கண்டு கொள்ளாமல் ஆட்சி செய்த கலைஞரின் நிர்வாகத் திறமை லட்சணத்தைக் கண்டு, இனியும் கழகத்தினர் நிச்சயம் பெருமைப்படலாம்..!

நன்றி : தினமணி - 02-06-2011

பத்திரமே இல்லாத இடத்தில் சன் டிவி அலுவலகம்..!

10-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'நக்கீரன் அன்பு' என்றால் தெரியாத பத்திரிகையாளர்களே இருக்க முடியாது. 'நக்கீரன்' பத்திரிகையில் மிக நீண்ட காலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். 2007-ம் ஆண்டு நக்கீரனில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது 'நம் தினமதி' நாளிதழிலும். 'புதிய தமிழகம்' பத்திரிகையிலும்  எழுதி வருகிறார்.
 
அன்பு சமீபத்தில் 'மக்கள் ஏமாந்தார்களா? ஏமாற்றப்பட்டார்களா?' என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இதில் 2006 முதல் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியின்  17 விதமான ஊழல்களை, முறைகேடுகளை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்கான ஆதாரங்களைத் தேடியெடுத்து அவற்றினை ஸ்கேன் செய்தும் வெளியிட்டிருக்கிறார். நிச்சயம் இது மிகப் பெரிய விஷயம்தான்.. இதற்காக சகோதரர் அன்புவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..!!!

இந்தப் புத்தகத்தி்ன் விலை வெறும் 25 ரூபாய்தான்..! தமிழகத்து மக்கள் அனைவரும் அவசியம் இப்புத்தகத்தைப் படித்து தி.மு.க. ஊழல் ஆட்சியின் லட்சணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்புத்தகம் கிடைக்குமிடம்

புதிய தமிழகம் வார இதழ்
½-ஏ, வி.கங்காதரன் தெரு
ஜோசியர் தெரு அருகில்
நுங்கம்பாக்கம்
சென்னை-600034.

தி.மு.க. ஆட்சிக்குக் கொடி பிடிக்கும் உடன்பிறப்புக்களும், ஆதரவாளர்களும் இப்புத்தகத்தை வாசித்து இதில் இருக்கும் ஊழல்களைப் படித்துத் தெளிந்து தங்களது கொள்கையை மறுபரிசீலனை செய்யட்டும். இப்போதும் அவர்கள் தி.மு.க.வினர் ஊழல்களே செய்ததில்லை. இவைகளெல்லாம் ஊழல்களே இல்லை.. என்று சொல்வார்களேயானால் இதில் இருக்கும் ஊழல்கள் அனைத்தும் புனைந்து எழுதப்பட்டவை என்பதை ஆதாரங்களோடு அவர்களும் சொல்லட்டும். தெரிந்து கொள்வோம்..!

இந்தப் புத்தகம் கொஞ்சம் முன்கூட்டியே கையில் கிடைத்திருந்தால் அனைத்தையும் சிரமம் பார்க்காமல் தட்டச்சு செய்து பதிவில் ஏற்றியிருப்பேன். நேற்றுதான் கைக்கு கிடைத்தது.. கால அவகாசமில்லை. நானும் 5 மாத காத்திருப்பிற்குப் பின் இப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன். தட்டச்சு செய்ய நேரம் அதிகமில்லை.. ஆகவே தேர்தல் அவசரத்திற்காக இதில் நாம் அதிகம் அறிந்திருக்காத சில ஊழல்களை மட்டும் உடனுக்குடன் வெளியிடலாம் என்று நினைத்துள்ளேன்.

சென்னையில் இருக்கும் பதிவர்கள் வாய்ப்பு கிடைத்தால் புதிய தமிழகம் வார இதழ் அலுவலகத்திற்கு நேரில் சென்று இப்புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த அரிய, ஆதாரமான புத்தகத்தை முதன்முதலாக என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்லி, இதனை வலையில் ஏற்ற ஆக்கமும், ஊக்கமும் வழங்கி உற்சாகப்படுத்திய அருமைத் தம்பி பாலபாரதிக்கு வலையுலகத்தின் சார்பாக கோடானு கோடி நன்றிகள்..!

இனி.. இந்தப் புத்தகத்தில் 13-வது முறைகேடாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் கட்டுரை இது :

பத்திரம் இல்லாத கட்டிடத்தில் சன் டிவி அலுவலகம்

சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ராஜா அண்ணாமலைபுரத்தில் வாங்கிய 30 கிரவுண்ட் இடம் தொடர்பான பத்திரம், தனித் துணை ஆட்சியர்(ஸ்டாம்ப்ஸ்) அலுவலகத்திலேயே கடந்த 12 ஆண்டுகளாக கிடக்கிறது. ஆனால், இந்த இடத்தில்தான் சன் டிவிக்கென தனி அலுவலகம் 10 மாடிக் கட்டிடமாக உருவாகியுள்ளது.

அது எப்படி பத்திரமே இல்லாத இடத்தில், 10 மாடி கட்டிடம் கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி கொடுத்தது..?

சென்னை, மைலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரத்தில் சென்னை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்திற்குச் சொந்தமான 40 கிரவுண்ட் காலி மனை இருந்தது. இதை ஏலம்விட அந்த நிறுவனம் முடிவு செய்தது. அப்போது வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் அந்த இடத்தை ஏலத்திற்கு விடாமல், அடிமாட்டு விலைக்கு சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கிக் கொடுத்தார்.



சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், ஒரு கிரவுண்ட் விலை 39 இலட்சம் என்ற விலையில் 30 கிரவுண்டு காலி மனைக்கு 11 கோடியே 70 லட்சத்திற்கு கிரையம் செய்யப்பட்டு, அதற்கான பத்திரம் 1999-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ம் தேதி மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார்.

பத்திரப் பதிவு செய்யப்படும்போது வழி காட்டி மதிப்பீட்டின்படிதான் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது அரசு ஆணை.

பத்திரப் பதிவு நடந்தபோது, மயிலாப்பூர் பத்திரப் பதிவு அதிகாரி, "ராஜா அண்ணாமலை நகரில் ஒரு சதுர அடி மனையின் விலை 2346 ஆக வழிகாட்டி மதிப்பீடு உள்ளது. அதன்படி 30 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 16 கோடியே 87 இலட்சத்து 71 ஆயிரத்து 240 ரூபாய். இதற்கு 13 சதவிகிதம் முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணமாக 2 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 261 ரூபாயை செலுத்த வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

ஆனால் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாகமோ, பத்திரப் பதிவுத் துறை அதிகாரி கூறிய வழிகாட்டி மதிப்பீட்டு விலைக்கு நிலத்தைப் பதிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டு, ரூபாய் 11.70 கோடிக்கு உரிய 13 சதவிகிதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணமாக ரூபாய் 1 கோடியே 71 லட்சத்து 13 ஆயிரத்து 772 மட்டுமே  செலுத்தியது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 48 லட்சத்து 26 ஆயிரத்து 489 ரூபாய்களாகும்.

ஜெயலலிதா டான்சி நிலத்தை வழிகாட்டு மதி்பபிட்டீற்கு குறைவாக பத்திரப் பதிவு மற்றும் முத்திரைக் கட்டணத்தில் மோசடி செய்ததாக அவர் மீது தி.மு.க. அரசு வழக்குப் பதிவு செய்தது. தனி கோர்ட் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு காலம் சிறைத் தண்டனை வழங்கியது.

இதைக் காரணம் காட்டி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த ஜெயலலிதாவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிறகு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அந்த நிலம் அரசிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

அப்படியென்றால் ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி.. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனுக்கு ஒரு நீதியா..?

மயிலாப்பூர் பத்திரப் பதிவு அதிகாரி, வழிகாட்டு மதிப்புப்படி முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் அரசுக்கு 48 லட்சத்து 26 ஆயிரத்து 489 இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பத்திரத்தை இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47(அ)(1)-ன் கீழ் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருக்கும் தனித்துணை ஆட்சியருக்கு(ஸ்டாம்ப்ஸ்) அனுப்பி வைத்தார்.

பிறகு அந்த நிலத்திற்கு விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டதா? அந்தப் பத்திரத்தை பதிவு அலுவலகத்தில் இருந்து உரியக் கட்டணத்தைச் செலுத்தி சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் திரும்பப் பெற்றதா என்று தெரியவில்லை.

ஆனால் இதே இடத்தில் வெற்றிகரமாக சன் டிவியின் 10 மாடிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. சென்ற ஆண்டு புதிய தலைமைச் செயலகத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த சோனியாகாந்தி, சன் டிவி கட்டிடத்தைத் திறக்கப் போவதாக பரபரப்பாக பேச்சு நிலவியது. ஆனால் அந்தக் கட்டிடம் திறக்கப்படவில்லை.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியின் கட்டிடத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு சன் டிவியின் அலுவலகம் திறக்கப்பட்டுவிட்டது. இப்போது சன் டிவி அங்கிருந்துதான் செயல்பட்டு வருகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் வழிகாட்டி மதிப்பீட்டைவிட குறைவான மதிப்புக்கு பத்திரப்பதிவு செய்த ஆவணம் தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டோம்.

எமது தகவலுக்கு பதில் அளித்த மயிலாப்பூர் சார் பதிவாளர், 1999-ல் வழிகாட்டி மதிப்பீட்டைவிட குறைவான மதிப்பில் ஆவணம் பதிவு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் அந்த சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பதிவு ஆவணத்தை தனித்துணை ஆட்சியருக்கு(ஸ்டாம்ப்ஸ்) அனுப்பி வைத்தோம். இதுவரை மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட ஆவணம் அங்கிருந்து மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

அப்படியென்றால் கடந்த 12 ஆண்டு காலமாக தனித்துறை ஆட்சியர் அலுவலகத்தில் சன் டிவி பத்திரப் பதிவு விவகாரம் முடங்கிக் கிடக்கிறது..

பதிவு ஆவணமே இல்லாத ஒரு இடத்தில் கட்டிடம் கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக் கழகத்தின அனுமதி எப்படி கிடைத்தது..?

அரசுக்கு ரூ.48.26 லட்சம் அளவுக்கு இழப்பினை ஏற்படுத்திய சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாக நியக்குநர் மீது ஏன் வழக்குத் தொடரவில்லை..?

நன்றி : திரு.அன்பு

இனி நாம் பேசுவோம்..!

இதில் எனக்குப் புரியாத ஒரு விஷயம், 12 ஆண்டுகளாக இது தனித்துறை ஆட்சியர் அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது என்றால், 2001 முதல் ஆட்சி செய்த ஜெயலலிதாவின் ஆட்சியில் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்..? ஒருவேளை ஆத்தாகிட்ட யாரும் சொல்லலையா..? இல்லை மறைத்துவிட்டார்களா..? எதுவும் புரியவில்லை. காரணம் என்னவெனில், நானே இப்போதுதான், இந்தப் புத்தகத்தைப் படித்துதான் இந்த விஷயத்தையே தெரிந்து கொண்டேன்..! அவ்வளவு ரகசியமாக வைத்திருந்திருக்கிறார்களே பாவிகள்..!

பொதுவாக நாம் ஓரிடத்தை சொந்தப் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிய பின்பு நம் பெயருக்கு பத்திரத்தை எழுதி பதிவு செய்து கொடுப்பார்கள். இதன் பின்பு, இந்தப் பத்திரத்தை காண்பித்துதான் குறிப்பிட்ட அந்த இடத்தில் நாம் வீடு கட்டவோ, அல்லது பில்டிங் கட்டவோ விண்ணப்பிக்கவே முடியும்.

ஒருவேளை அந்த இடம் நமக்குச் சொந்தமானதாக இல்லை என்றால் உரிமையாளருக்கும், நமக்கும் இது தொடர்பாக இருக்கும் தனி ஒப்பந்தங்களைக் காட்டினால்தான் கட்டிடம் கட்டவே அனுமதி கிடைக்கும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடத்தில் வீடுகள் கட்டவோ, பில்டிங் கட்டவோ சென்னை பெருநகர வளர்ச்சி மன்றத்திற்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அங்கேயும் இந்தப் பத்திரம் இல்லாமல் எந்தக் கதையும் நடக்காது..!

ஆனாலும் உரிமையாளர் பத்திரமே இல்லாமல் சன் டிவி அந்த இடத்தில் 10 மாடி கட்டிடம் கட்டி முடித்திருக்கிறது எனில் இதில் எந்த முறைகேடும் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா..?

சென்னை பெருநகர வளர்ச்சி மன்றத்தின் அனுமதியில்லாமலும் சன் டிவி இதனைக் கட்டி முடித்திருக்க முடியாது. ஆக.. சென்னை பெருநகர வளர்ச்சி மன்றம் எதை வாங்கிக் கொண்டு, என்ன சமரசம் செய்து இந்த முறைகேட்டுக்கு ஒத்துக் கொண்டது என்பதும் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்..!

சாதாரணமாக ஒரு வீடு கட்ட அனுமதி கேட்டு மாநகராட்சிக்குச் சென்றாலே எத்தனை எத்தனை பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது என்பதை வீடு கட்டிய சென்னைவாழ் தமிழர்களிடம் கேட்டுப் பாருங்கள்.. கண்ணீர் விடுவார்கள்.

நாம் சமர்ப்பிக்கும் அனைத்து ஆதாரங்களும் உண்மையானதாக இருந்தாலும், அது சரியில்லை.. இது சரியில்லை என்றெல்லாம் நொட்டை, நொள்ளை சொல்லிவிட்டு நாம் சில காந்தி தாத்தா உள்ள நோட்டுக்களை வீசியெறிந்தால் மட்டுமே நமக்கான அனுமதி கிடைக்கும். இதனை வாங்குவதற்குள் ஒவ்வொரு வீட்டுக்காரனும், பில்டர்ஸும் 10, 15 முறை இந்தியன் தாத்தாவாக ஆகிவிடலாமா என்றுகூட யோசிப்பார்கள். அந்த அளவுக்கு லஞ்ச லாவண்யம் இத்துறையில் விளையாடுகிறது..

தெருவில் தனது வீட்டு முன்பாக 500 செங்கற்களை குவித்துவைத்தால்கூட வட்ட கவுன்சிலரும், வட்டத்தின் ஆளும்கட்சி அடிப்பொடிகளும் ஓடோடி வருவார்கள். அவர்களுக்கு வெட்ட வேண்டியதை வெட்டினால்தான் அந்த செங்கற்கள் நாளை கட்டிடமாக உருவாகும். இல்லையெனில் இரவோடு இரவாக ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட்டு அந்த உரிமையாளரின் அனுமதி ரத்து செய்யப்படும். அல்லது நிறுத்தி வைக்கப்படும். இது சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் நடக்கின்ற விஷயம்.

ஆனால் இங்கே ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக.. பத்திரமே இல்லாத இடத்தில் 10 மாடி கட்டி முடித்து குடியேறியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு இந்த விஷயத்தில் முறைகேட்டை செய்திருக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்..

இதில் சன் டிவி தனது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தித்தான் இந்த முறைகேட்டை செய்திருக்கும் என்பதை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் அதிகம் தெரியாத சிறுவர்கள்கூட சொல்லிவிடுவார்கள்..!

இப்படி சொத்து, சுகத்துக்காக ஆட்சி,  அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இந்தக் கொள்ளைக்காரர்களை மனதில் வைத்து ஏப்ரல் 13 அன்று வாக்களியுங்கள்..!

சின்னத்திரை விருதுகள் - தேர்தல் நேரத்து ஸ்டண்ட்டா..?

27-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தொல்லைக்காட்சிகளின் மூலம் குடும்பத்தைப் பிரிக்கும் சீரியல்கள் என்று காட்டமாக விமர்சிக்கப்படும் சின்னத்திரை தொடர்கள் மற்றும் அதில் நடித்த நடிகர், நடிகையர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் விருதுகள் வழங்கப்படத் துவங்கின.

அந்த ஒரு வருடத்திற்குக் கொடுத்துவிட்டு பின்பு நான்கு வருட இடைவெளிக்குப் பின்பு இப்போதுதான் 2007 மற்றும் 2008-ம் ஆண்டுக்கான விருதுகளை தற்போதுதான் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை ரொம்பக் கஷ்டப்பட்டுத் தேடியலைய வேண்டாம்.. கண்ணை மூடிக் கொண்டு யோசித்தாலே தானாய் புரிந்துவிடும்..!

விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்ய முன்னாள் நீதிபதி மு.மருதமுத்து தலைமையில் இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணி சுப்பு, தயாரிப்பாளர் டி.வி.சங்கர், சின்னத்திரை நடிகர் ராஜசேகர், தமிழ் வளர்ச்சி அற நிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு 2007-ம் ஆண்டுக்காக 7 விண்ணப்பங்களும், 2008-ம் ஆண்டுக்காக 12 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. மொத்தம் 19 சின்னத்திரைத் தொடர்களை இந்தக் குழு பார்வையிட்டு விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்துள்ளது.

காலைல 10 மணிக்கு ஆரம்பிச்சு, ராத்திரி 11 மணிவரைக்கும் எல்லா சேனல்லேயும் மாத்தி, மாத்தி நம்மளை அழுக வைக்குறாங்களே.. ஆனா போட்டிக்குன்னு பார்த்தா 7 சீரியல்கள் மட்டும்தான் போட்டி போட்டிருக்கேன்னு விசாரிச்சேன்..!

தமிழக அரசு இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விதித்திருந்த சில நிபந்தனைகளால்தான் இத்தனைக் குறைவான சீரியல்கள் களத்தில் இருந்திருக்கின்றன.

Ø    அந்தந்த ஆண்டுகளில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை உள்ள காலத்தில் நெடுந்தொடர் மற்றும் வாரத்தொடர் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்பட்டிருக்க வேண்டும்.

Ø    அந்தந்த ஆண்டுகளில் தொடர் ஒளிபரப்பு ஆரம்பித்து முடியாத நிலையில், அத்தொடர் அந்தந்த ஆண்டுகளில் குறைந்தபட்சம் 130 பகுதிகள் ஒளிபரப்பாகியிருக்க வேண்டும்.

Ø    வாரத் தொடர் எனில், அந்தந்த ஆண்டில் குறைந்தபட்சம் 26 பகுதிகள் சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகி இருக்க வேண்டும்.

Ø    தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தொடர்கள் இத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது..

- இவைகள்தான் அந்த நிபந்தனைகள். 
இதன்படி பார்த்தால், ஒரு மாதத்தில் திங்கள் முதல் வெள்ளிவரை ஓட்டினாலே மாதத்திற்கு 20 அல்லது 21 எபிசோடுகள் வரும். இதுவே 130 எபிசோடுகள் எனில் ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 7 மாதங்களாவது இத்தொடர் தொடர்ந்து ஓட்டப்பட்டிருக்க வேண்டும்.

அதாவது இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமெனில் அத்தொடர் 2006-ம் ஆண்டில் ஜூன் மாதத்திற்கு முன்பு  துவக்கப்பட்டிருக்கவேண்டும். அல்லது 2005-ம் ஆண்டு துவக்கப்பட்டு 2006-ம் ஆண்டில் ஜூலை மாதம் வரையிலாவது ஓட்டப்பட்டிருக்க வேண்டும். இப்படி இருந்திருந்தால் மட்டுமே அத்தொடர், இந்த விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டிருக்க முடியும்.

2007-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி துவக்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சி இதில் போட்டியிட வாய்ப்பே இல்லை. நிச்சயமாக சன், ஜெயா, விஜய், ராஜ் டிவிக்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

இதில் ராஜ் டிவி மற்றும் விஜய் டிவிக்களின் பங்களிப்பு என்னவாக இருந்திருக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் இந்த டிவிக்களில் சீரியல்கள் திங்கள் முதல் வியாழன்வரைதான். அது வாரத்துக்கு 4 நாட்கள் என்று கணக்கிட்டால் மாதத்திற்கு அதிகப்பட்சம் 16 அல்லது 17 எபிசோடுகள்தான் வந்திருக்கும்.

தொடர்ச்சியாக ஒரு ஆண்டில் 130 எபிசோடுகள் வரக்கூடிய அளவுக்கு ராஜ் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பானதா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.  ஆனால் விஜய் மற்றும் ராஜ் டிவியிலிருந்து எந்த சீரியல்களும் போட்டிக்கு அனுப்பப்படவில்லை. மிச்சம் இருந்தது சன் டிவியும், ஜெயா டிவியும்..

இதில் சன் டிவியின் சார்பாக 6 தொடர்களும், ஜெயா டிவியின் சார்பில் 1 தொடரும் போட்டியில் கலந்து கொண்டுள்ளன. இந்த 7 தொடர்களுக்குமே ஏதோ ஒரு வகையில் பரிசுகள் கிடைத்திருக்கின்றன என்பது சுவையான விஷயம். போட்டியே இல்லையே.. அப்புறமென்ன..?

2007-ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலைப் பாருங்கள் :

சிறந்த நெடுந்தொடர் முதல் பரிசு : கோலங்கள் (விகடன் டெலிவிஸ்டாஸ்) ரூ 2 லட்சம் ரொக்கம்.

சிறந்த நெடுந்தொடர் இரண்டாம் பரிசு : லட்சுமி (ஹோம் மூவி மேக்கர்ஸ்) 1 லட்சம் ரொக்கம்.

சிறந்த சாதனையாளர் விருதைப் பெறுபவர் நடிகை ராதிகா -பரிசு 1 லட்சம் ரொக்கம்.

2007-ம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுபவர் - நடிகர் வி.எஸ்.ராகவன் - பரிசு 1 லட்சம் ரொக்கம்.

அதேபோல் இவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

சிறந்த கதாநாயகன் : விஜய் ஆதிராஜ் (லட்சுமி)

சிறந்த கதாநாயகி : தேவயானி (கோலங்கள்).

சிறந்த குணச்சித்திர நடிகர் : பிருத்விராஜ் (அரசி).

சிறந்த குணச்சித்திர நடிகை : சத்யபிரியா (கோலங்கள்).

சிறந்த வில்லன் நடிகர் : ராஜ்காந்த் (மேகலா).

சிறந்த வில்லி நடிகை : நளினி (பந்தம்).

சிறந்த குழந்தை நட்சத்திரம் : நிவேதா (அரசி).

சிறந்த இயக்குனர் : சுந்தர் கே.விஜயன் (லட்சுமி).

சிறந்த கதையாசிரியர் : அறிவானந்தம் (அகமும் புறமும்).

சிறந்த திரைக்கதை ஆசிரியர் : முத்துசெல்வம் (மேகலா).

சிறந்த உரையாடல் ஆசிரியர் : பாஸ்கர் சக்தி (மேகலா).

சிறந்த ஒளிப்பதிவாளர் : வசீகரன் (அரசி).

சிறந்த படத் தொகுப்பாளர் : ரமேஷ் (அரசி).

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : ரேகான் (பந்தம்).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(ஆண்) : மதி (லட்சுமி).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(பெண்) :  நித்யா (பாசம்).

விருதுகள் பெறும் இவர்கள் அனைவருக்கும் 3 பவுன் தங்க பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

'கோலங்கள்', 'லட்சுமி', 'அரசி', 'மேகலா', 'பந்தம்', 'பாசம்' - இவை அனைத்துமே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானவைதான். 'அகமும் புறமும்' சீரியல் மட்டுமே ஜெயா தொலைக்காட்சி. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற ரீதியில் 'சிறந்த கதை'க்கான விருதினை ஜெயா டிவி தட்டிச் சென்றுள்ளது ஆச்சரியமானது.

பழம்பெரும் நடிகர் திரு.வி.எஸ்.ராகவனுக்குக் கொடுத்த விருது நிச்சயம் ஏற்கப்பட வேண்டியது. இந்த மனிதரைப் பற்றி நான் தனியாக பதிவு எழுத வேண்டும். இந்த வயதிலும் என்னவொரு டெடிகேஷனோடு இவர் நடிக்கிறார் என்பதை இவருடன் இணைந்து நடித்தவர்களிடத்திலும், இயக்கியவர்களிடத்திலும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். விருதுக்குரிய தேர்வு இவரே..!

இதேபோல் 2008-ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலையும் பாருங்கள் :

சிறந்த நெடுந்தொடர் முதல் பரிசு : ஆனந்தம் (சத்யஜோதி பிலிம்ஸ்) ரூ.2 லட்சம் ரொக்கம்.

சிறந்த நெடுந்தொடர் - இரண்டாம் பரிசு : நம்ம குடும்பம் (எவர் ஸ்மைல் என்டர்பிரைசஸ்) 1 லட்சம் ரொக்கம்.
சிறந்த சாதனையாளர் : வ.கவுதமன் ரூ1 லட்சம் ரொக்கம்.

வாழ்நாள் சாதனையாளர் : ஒய்.ஜி.மகேந்திரா 1 லட்சம் ரொக்கம்.

அதே போல், ரொக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த கதாநாயகன் : சஞ்சீவ் (திருமதி செல்வம்).

சிறந்த கதாநாயகி : சுகன்யா (ஆனந்தம்).

சிறந்த குணச்சித்திர நடிகர் : மோகன் வி.ராமன்(வைர நெஞ்சம்).

சிறந்த குணச்சித்திர நடிகை : அனுராதா கிருஷ்ணமூர்த்தி(அரசி).

சிறந்த வில்லன் நடிகர் : சாக்ஷிசிவா (நம்ம குடும்பம்).


சிறந்த வில்லி நடிகை : மாளவிகா (அரசி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் மோனிகா (ஆனந்தம்).

சிறந்த இயக்குநர் : செய்யாறு ரவி (ஆனந்தம்).

சிறந்த கதையாசிரியர் : குமரன் (திருமதி செல்வம்).

சிறந்த திரைக்கதை ஆசிரியர் : அமிர்தராஜ் மற்றும் அமல்ராஜ் (திருமதி செல்வம்).

சிறந்த உரையாடல் ஆசிரியர்  : லியாகத் அலிகான் (அரசி).

சிறந்த ஒளிப்பதிவாளர் : அசோக்ராஜன் (சிவசக்தி).

சிறந்த படத் தொகுப்பாளர் : ராஜீ (மேகலா).

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : ஆதித்யன் (சந்தனக்காடு).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(ஆண்) : சங்கர் (பந்தம்).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(பெண்) : அனுராதா (தவம்).

விருதுகள் பெறும் இவர்கள் அனைவருக்கும் 3 பவுன் தங்க பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

2008-ம் ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்ட 12 சீரியல்களுமே ஏதேனும் ஒரு விருதினைப் பெற்றிருக்கின்றன.

2007-ம் வருடம் ஜூன் 3-ம் தேதியன்று உதயமான கலைஞர் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் இந்தாண்டுக்கான போட்டியில் கலந்து கொண்டுள்ளன. கூடவே மக்கள் தொலைக்காட்சியின் புகழ் பெற்ற சீரியலான சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையைச் சொன்ன 'சந்தனக்காடு' சீரியலும் போட்டியிட்டுள்ளது.

2008-ல் வெற்றி பெற்றிருக்கும் 'ஆனந்தம்', 'மேகலா', 'திருமதி செல்வம்', 'பந்தம்', 'அரசி', 'சிவசக்தி' ஆகியவை சன் தொலைக்காட்சியின் சீரியல்கள்.

'நம்ம குடும்பம்', 'தவம்', 'வைரநெஞ்சம்' ஆகியவை கலைஞர் தொலைக்காட்சியின் சீரியல்கள். ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என்ற ரீதியில் போட்டியிட்ட 'சந்தனக்காடு' சீரியலுக்கும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது.

தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!

அதே சமயத்தில் முந்தைய ஆண்டுகளில் போட்டியிட்ட சீரியல்களை அடுத்த ஆண்டில் விலக்கி வைப்பது நியாயமானது என்று நினைக்கிறேன்.

ஏனெனில் 2007-ம் ஆண்டில் சில விருதுகளில் பரிசுகளை வென்ற 'பந்தம்', 'அரசி', 'மேகலா' போன்றவைகள் 2008-ம் ஆண்டிலும் வேறு சில பிரிவுகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்தந்த ஆண்டுகளில்தான் போட்டி என்றாலும், ஏற்கெனவே கலந்து கொண்டதால் அவர்களை அடுத்தாண்டில் நீக்கிவிட்டால், புதிய ஆண்டில் புதிய சீரியல்களுக்கு நிறைய விருதுகள் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும்..!

130 எபிசோடுகள் விதிமுறையே சன் டிவியுடன் கலைஞர் தொலைக்காட்சியின் சீரியல்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற காரணமாகவே வைக்கப்பட்டதாக சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசு பேசுகிறார்கள்.

2007 ஜூன் 3 துவங்கி, டிசம்பர் 31-ம் தேதிக்குள் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தொடர்களின் எண்ணிக்கை தோராயமாக 138 நாட்கள் வரும் என்கிறார்கள். இதனால்தான் 130 எபிசோடு விதிமுறை வந்ததாகச் செய்தி.

அதேபோல் 130 எபிசோடுகள் என்பதையும் குறைத்து 80 எபிசோடுகள் என்று வைத்துக் கொண்டால் மற்ற சிறிய டிவிக்களின் சீரியல்களும் இதில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்..! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..? இப்படி மறைமுகமாக அவர்களைத் தடை செய்திருப்பது ஒரு வகையில் இப்போதும் முன்னணியில் இருக்கும் சன், மற்றும் கலைஞர் டி.வி.க்களின் செல்வாக்கை உயர்த்தவே உதவும்..! இது நிச்சயம் ஜனநாயகமானதல்ல..!

ராஜ், விஜய், மக்கள் டிவி மற்றும், தற்போது களத்தில் குதித்திருக்கும் வசந்த், மெகா டிவிக்களுக்கும், சன் டிவிக்கும் விளம்பர கட்டணத்தில் ஏணி வைத்தால்கூட எட்டாது. அந்த வகையில் அவர்களால் சன், கலைஞர் அளவுக்கு 130 எபிசோடுகளாக 8 மாதங்கள் தாக்குப் பிடிக்கும்வகையில் சீரியல்களை ஓட்ட முடிவதில்லை.

மிகச் சிறந்த இயக்குநர்களும், மிகச் சிறந்த நடிகர்களும், மிகச் சிறந்த கதை ஆசிரியர்களும் இப்போது நிறையவே சம்பளம் கேட்பதால் இவர்கள் இந்த சிறிய டிவிக்களின் சீரியல்களில் பணியாற்றவும் முடியாது. அப்படியிருக்கும்போது அவர்களால் தங்களது தரத்துக்கேற்றாற்போலத்தான் சீரியல்களைத் தர முடியும். அவற்றை சன் டிவி  சீரியல்களுடன் போட்டியிட வைப்பது நியாயமாகாது.

ஆனால் பொதுவானது அதுவே என்றால், முந்தைய ஆண்டில் விருது பெற்றவைகளை கழித்தாலாவாவது, புதிய ஆண்டில் சிறிய டி.வி.க்களின் சீரியல்கள் சில பரிசுகளை வெல்ல வாய்ப்பு கிடைக்கும்..! இதனை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கமும், கூட்டமைப்பும் கவனத்தில் கொண்டால் நல்லது..!

தாத்தா நல்லதுதானே செய்திருக்கிறார்.. இதில் என்ன அரசியல் ஸ்டண்ட் என்கிறார்களா..? இருக்கே..! என்னடா இது.. திடீரென்று தேர்தல் வரவிருக்கும் கடைசி நேரத்தில் இப்படியொரு அறிவிப்பு வெளி வருகிறதே என்று யோசித்த நேரத்தில் இன்னொன்றும் ஞாபகத்திற்கு வந்தது..!

கடந்த 23-ம் தேதிதான் 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளுக்குரிய  சின்னத்திரை விருதுகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்திட அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் பிப்ரவரி 18-ம் தேதி என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த அறிவிப்பு வெளியான இரண்டு நாட்கள் இடைவெளியில் முந்தைய இரு ஆண்டுகளுக்கான விருதுகளைப் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. யோசித்துப் பார்த்தால் சநதேகமேயில்லாமல் இதில் இருக்கும் அரசியல் தெரிகிறது.

2007 விருதுகளை 2008-ம் ஆண்டிலும், 2008-ம் ஆண்டுக்குரிய விருதுகளை 2009-ம் ஆண்டிலும், 2009-க்குரிய விருதுகளை 2010-ம் ஆண்டிலும் கொடுத்து முடித்திருந்தால் நிச்சயம் இந்த அரசு, விருதுகளை உண்மையான அக்கறையோடு வழங்கி வருகிறது என்று சொல்லியிருப்பேன்.

ஆனால் கடமைக்கே என்று முதல் வருடம் மட்டும் கொடுத்துவிட்டு அனைத்தையும் சேர்த்து வைத்து தேர்தல் சமயத்தில் கொடுக்க நினைப்பது தங்களின் அரசியல் லாபத்திற்கு இதனைப் பயன்படுத்தும் எண்ணத்தில்தான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை..!

2007-2008 விருதுகள் வழங்கும் விழா மார்ச் மாதத் துவக்கத்தில் கலைஞர் டிவியில் தாத்தாவுக்கு பாராட்டு விழாவாகவும் உருவெடுத்து தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவப் போகிறது என்று நினைக்கிறேன்.

இன்னும் 2009 மற்றும் 2010-ம் ஆண்டுக்குரிய விருதுகள்கூட விரைவாக ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத் துவக்கத்திலோ இன்னுமொரு விழாவாக வைக்கப்படலாம். யார் கண்டது..?

இந்த நேரத்தில் ஒரு சின்ன விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. 2010-ம் ஆண்டுக்கான சிறந்த சீரியல்கள் போட்டியில் 'எங்கே பிராமணன்' போட்டியிட்டுச் சிறந்த கதையாகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டால்(அப்படியொன்று நடந்தால் மட்டுமே..!) தேர்தல் நேரத்தில் சோ-வுடன் முதல்வர் மேடையில் நிற்க வேண்டி வந்து.. ஒரு காமெடி நடக்க வாய்ப்புண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

தாத்தாவின் ஒவ்வொரு ஸ்டெப்பையும் நாங்க உத்து உத்துப் பார்ப்போமாக்கும்..!! எங்களுக்கா தெரியாது அவரைப் பத்தி..? தாத்தா.. நீ இன்றைய சாணியடிக்கிற அரசியல்ல சாணி தட்டுறதுல சாணக்கியன்யா..! இந்த ஒரு விஷயம்தான் எனக்கு உன்கிட்ட ரொம்ப, ரொம்பப் புடிச்சது. எவ்ளோ பிரச்சினை வந்தாலும் தப்பிக்கிறதுக்கு எல்லா வழியையும் தேடிப் பிடிச்சு ஓடுற பாரு..? அரசியல்ல நீயொரு கில்லி..! உன் அளவுக்கு தில்லாலங்கடி செய்யத் தெரியாதவங்கதான் இப்ப உனக்கு அரசியல் எதிரிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் உன்னோட பலமே..! ஜமாய் தாத்தா ஜமாய்..!

(டிஸ்கி : தாத்தாவின் இன்னொரு ‘கில்லி’ வேலை, நாளைய பதிவில்..!)

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-08-01-2011

08-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழ்மணத்திற்கு நன்றி..

நான் எழுதிய இந்தப் பதிவிற்குப் பின்பு தமிழ்மண நிர்வாகம் அவசரம், அவசரமாக நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இப்போது தமிழ்மணம் கருவிப் பட்டையில் எந்த இடத்தில் இருந்து ஓட்டளித்தாலும் அது மீண்டும் ஒரு முறை லாகின், பாஸ்வேர்டு கேட்கும் வகையில் மாற்றியிருக்கிறார்கள். இது நிச்சயம் என்னைப் போன்றவர்களுக்கு பலனளிக்கும் என்றே நம்புகிறேன்.. விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு எனது நன்றி..


தலீபான்களின் தனித்துவ ஆட்சி

மதத்தின் பெயரால், அல்லாவின் பெயரால் ஆட்சி நடத்தப் போகிறோம் என்று கூக்குரலிட்டு ஆட்சியைப் பிடித்த ஆப்கானிஸ்தானில் நடந்த ஜனநாயக ஆட்சியின் லட்சணம் நாம் அறிந்ததே..

நபி சொல்லியிருக்கிறார்.. குரானில் சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் சல்ஜாப்பு சொல்லிய தலீபான் கொடுங்கோலர்களின் ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்களாகத்தான் இருந்தார்கள். இவர்கள் நடத்திய நீதி பரிபாலனையில் இரண்டு பெண்களுக்குக் கிடைத்த நீதி இதுதான்..



சன் டிவியின் வெட்டி, ஒட்டும் வேலை..

ஒரு தொழிலை நடத்த பணம் மட்டும் இருந்தால் போதாது.. அத்தொழிலையே சிறப்பாக நடத்தும் அளவுக்கு திறமையும் வேண்டும் என்பார்கள். சன் டிவிக்காரர்களிடம் அது அமோகமாக இருக்கிறது..

இயக்குநர்கள் சங்க ஆண்டு விழாவின் நிகழ்ச்சி நிரலை 6 மணி நேரம் நடத்துவதாக திட்டமிட்டவர்கள் கடைசியாக 9 மணி நேரமாக்கி முடித்தார்கள். நள்ளிரவு 11.30 மணிக்குத்தான் மூன்று முகம் இயக்குநர் ஏ.ஜெகன்னாதனை மேடையேற்றினார்கள். அதற்குப் பின்புதான் பிரியாமணியையும், தமன்னாவையும் மேடையேற்றினார்கள். இருந்த கொஞ்சூண்டு கூட்டத்தைப் பார்த்து கையசைத்த பிரியாமணியை அப்போது பார்க்கவே பாவமாக இருந்தது.


அதே அளவுக்கு வசூல் ஒன்று மட்டுமே குறிக்கோள் என்பதாக நிகழ்ச்சியை திறமையாக எடிட் செய்து வெளியிடுவதிலும் கர்மச் சிரத்தையாக இருக்கிறார்கள் சன் டிவிக்காரர்கள். போன வாரம் ஒளிபரப்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரஜினியும் விஜய்யும், அருகருகே அமர்ந்திருப்பது போலவும், ராதிகா பேசிய பேச்சு, பாரதிராஜா-இளையராஜா பேச்சு, மம்மூட்டி பேச்சுக்களை ரஜினி ரசித்துப் பார்ப்பதுபோலவும், கை தட்டுவது போலவும் கிளிப்பிங்ஸை விட்டு அசத்திவிட்டார்கள்.

உண்மையில் ரஜினி இரவு 7 மணிக்குத்தான் அரங்கத்திற்கு வந்தார். ராதிகா-சரத்குமார் பேச்சு, மம்மூட்டி, பாரதிராஜா-இளையராஜா, கங்கை அமரன் பேச்சுக்கள் ஆகியவை அனைத்தும் காலை நிகழ்ச்சியில்தான் நடந்தன. மாலை நிகழ்ச்சியின்போது ரஜினி காட்டிய அத்தனை முகபாவனைகளையும் ஒரு ஷாட்கூட விடாமல் கட் செய்து,  ரஜினி காலையில் இருந்தே அத்தனை நிகழ்ச்சிகளையும் விடாமல் பார்த்து கை தட்டி, ரசித்ததாக ஒரு பில்டப்பு கொடுத்து வருகிறது சன் டிவி. வாழ்க வளமுடன்..

நான் எதிர்பார்த்ததுபோலவே ராதிகா பேசியவற்றில் சன் டிவியைத் தொடர்புபடுத்தியும், சரத்குமாரைப் பற்றி பேசியதையும் சுத்தமாக கட் செய்துவிட்டார்கள். ஆனாலும் மிச்சம், மீதியாக ஒளிபரப்பானதைக் கேட்டே "டூ மச்" என்ற குரல்கள் இணையத்தளங்களின் அன்றைக்கே ஒலித்தன.

9 மணி நேர நிகழ்ச்சிகளில் பாதியை ஏற்கெனவே 8 மணி நேரமாக இரண்டு நாட்களில் காட்டி கல்லா கட்டிவிட்டது சன் டிவி. இப்போது இன்றும், நாளையும் மீதி 8 மணி நேரத்தில் காட்டப் போகிறது. இன்னும் வர வேண்டியது தமன்னா, பிரியாமணி மேடையேற்றம், சில இயக்குநர்களின் பேச்சு, ராதாரவியின் 'ரத்தக்கண்ணீர்' நாடகம், கடைசியாக கே.பி.-ரஜினி நேரடி பேட்டி - இவைதான்..

தொழிலை நடத்துவது எப்படி என்பதை இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.


கையும், களவுமாகப் பிடித்த கணவன்

கணவனுக்கு மனைவி மீது ரொம்ப நாட்களாக சந்தேகம்.. தனக்குத் தெரியாமல் வேறு ஒருவன் தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்று.. தானே இதனைக் கண்டறியும் பொருட்டு பொறி வைத்துப் பிடித்திருக்கிறான் மனைவியையும், அவளது காதலனையும். தான் மட்டும் தெரிந்து கொண்டால் போதாது.. உலகமே பார்க்க வேண்டும் என்று சொல்லி டிவிக்காரர்களையும் தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்கள் முன்பாகவே மனைவியையும், காதலனையும் பிடித்து பீஸ் பீஸாக்கியிருக்கிறான். டிவிக்காரர்கள் எது, எதுக்கெல்லாம் உதவுகிறார்கள் பாருங்கள்..!



ஜீ தமிழ்த் தொலைக்காட்சியின் செய்திகள் நிறுத்தம்

இதுவும் சன் டிவி தொடர்பான செய்திதான். முந்தைய செய்தி அவர்களுடைய தொழிலில் செய்யும் ஏமாற்றும் வித்தை என்றால் இது அதையும் தாண்டி தனது ஆக்டோபஸ் கரத்தினால் எளிமையானவர்களின் கழுத்தை நெறிக்கும் வித்தை பற்றியது.

ஏற்கெனவே ஹாத்வே நிறுவனத்தின் கேபிள்களை அறுத்தெறிந்து, அது தொடர்பான வழக்குகளை போலீஸ் ஸ்டேஷனில் பதியக்கூட விடாமல் தனது அரசியல் பலத்தால் கட்டிப் போட்டு ஒரு வழியாக அவர்களைத் தமிழ்நாட்டைவிட்டே துரத்திய அகசாய பேரன்கள் தற்போது ஜீ தமிழ்த் தொலைக்காட்சியையும் ஒரு வழி செய்துவிட்டார்கள்.

ஏற்கெனவே அந்த டிவி துவங்கியபோதே சுமங்கலியில் லின்க் தர மாட்டேன் என்று கொஞ்ச நாள் அடம் பிடித்தார்கள். தாத்தாவரையிலும் இந்த விஷயத்தைக் கொண்டு சென்று புகார் செய்த பின்புதான் போனால் போகிறதென்று கொடுத்தார்கள்.
பின்பு 'நாடோடிகள்', 'சுப்ரமணியபுரம்' படங்களை ஜீ தமிழ்த் தொலைக்காட்சி வாங்கி ஒளிபரப்பக் காத்திருந்த நேரத்தில் சன் டி.டி.ஹெச்.சில் ஜீ தமிழ்த் தொலைக்காட்சியை இணைக்க இதனை ஒரு நிபந்தனையாக விதித்து அந்த இரண்டு படங்களையும் கைப்பற்றியது சன் டிவி.

தற்போது கடைசியாக ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கே அழகாக இருந்த அதனுடைய செய்திகள் பிரிவை இழுத்து மூடும்படி அழுத்தம் கொடுத்து அதனை செய்து காட்டிவிட்டார்கள் பேரன்மார்கள்.

மிகக் குறுகியக் காலத்தில் சன் செய்திகளுக்குப் பிறகு அடுத்த நிலைக்கு வந்திருந்தது ஜீ தமிழ்த் தொலைக்காட்சியின் செய்திகள். இரவு பத்து மணி செய்திகள் ஜீ-யில் மிகப் பிரபலம். அதனை ஒழித்தால்தான் ஆயிற்று என்ற பேரன்களின் நெருக்கடியினால் ஜீ நிறுவனம் வேறு வழியில்லாமல் பணிந்து போக வேண்டிய கட்டாயம். இப்போது வல்லான் வகுத்ததுதானே நீதி..

ஜீ-யில் நிறுத்தப்படவிருக்கும் செய்திகள் அடுத்து அதேபோல் சன் செய்திகளில் வெளிவருகிறது என்பதை மறைமுகமாகச் சொல்லாமல் சொல்லி ஒரு மாதத்திற்கு முன்பாகவே சன் செய்திகளும் தனது  பத்து மணி செய்திகளை ஜீ செய்திகளைப் போலவே மாற்றியிருந்தது. சென்ற டிசம்பர் 17-ம் தேதியோடு ஜீ தமிழ்ச் செய்திகள் நிறுத்தப்பட்டு டிசம்பர் 31-ம் தேதியோடு செய்திப் பிரிவுக்கு சங்கு ஊதப்பட்டுவிட்டது.

இந்த விஷயத்தில் எதிர்த்துப் போராட வேண்டியதுதானே என்று நாம் சொல்லலாம். ஆனால் ஜீ-க்கும் இது தொழில் பிரச்சினை. அவர்களுடைய குறிக்கோளும் லாபம்தான். ஆக அவர்களுக்கும் பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. நேர்மையாக, தங்களது தொழில் திறமையினால்தான் சன் டிவி முன்னேறியது.. இப்போதும் முன்னேறி வருகிறது என்பவர்கள் எப்போதும்போல தங்களது வீட்டுக் கண்ணாடியில் பார்த்தபடியே மீண்டும் அவற்றைச் சொல்லிக் கொள்வது நல்லது..

லேடி கான்ஸ்டபிளின் ருத்ரதாண்டவம்..!

ஆந்திராவில் ஒரு லேடி கான்ஸ்டபிள் ஏதோ ஒரு காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய சஸ்பென்ஷனை ரத்து செய்ய வேண்டுமெனில் அவர் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என ஸ்டேஷன் எஸ்.ஐ. வற்புறுத்தியிருக்கிறார். இவர் மட்டுமில்லாமல் இவருக்குத் துணையாக இன்னொரு எஸ்.ஐ.யும்  படுக்கையில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார்.

லேடி கான்ஸ்டபிள் இதனை ஏற்க மறுக்கவே, அவருக்குப் பணியில் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் கொடுத்துத் துன்புறுத்தியிருக்கிறார் எஸ்.ஐ. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த லேடி கான்ஸ்டபிள் ஒரு நாள் பொங்கியெழுந்து சேனல்காரர்களுடன் திட்டம் போட்டுப் பேசி அந்த எஸ்.ஐ.யைத் தன் வீட்டுக்கு வரவழைத்து அனைவரின் முன்பாகவும் நொங்கு உரித்துவிட்டார். இதுவும் வழக்கம்போல ரொம்பவே பேமஸாகியிருக்கிறது.



பேசிக் கொண்டிருக்கும்போதே மரணம்..!

இந்த மாதிரியான மரணம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்..? இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

2007-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதியன்று நடந்த சம்பவம் இது. மலையாளத்தின் பிரபலமான பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளரான திரு.எம்.என்.விஜயன் திருச்சூர் பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேரில் வந்திருந்தார்.

 

அன்றைய சமயத்தில் விஜயன் மீது அரசு அமைப்பான கேரள சாஸ்திர சாகத்ய பரிஷத்தின் தலைவர் பாப்பூட்டி நீதிமன்றத்தில் தொடுத்திருந்த மான நஷ்ட வழக்குத் தொடர்பான உண்மைகளை பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்காக அவர் வந்திருந்தார்.
 
பல்வேறு தொலைக்காட்சி சேனல்களும் அதனை ஒளிப்பதிவு செய்தன. தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த டம்ளரை எடுத்து  அதிலிருந்த நீரை அருந்திவிட்டு மேலும் பேசத் தொடங்கினார். சில வினாடிகள்தான்.. நொடியில் நின்று போன அவரது இதயத் துடிப்பு அவரை மரணமடைந்தவராக அறிவித்தது.

 
எனக்குத் தெரிந்து இதுபோல் ஒருவரின் மரணம் வீடியோக்களில் எதிர்பாராமல் பதிவு செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.
 
விஜயன் தனது இளமைக் காலத்தில் மார்க்சியத்தின் மீது ஆர்வம் கொண்டு அந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அவர்களுடைய பத்திரிகையின் எடிட்டராகவும் பணியாற்றியிருக்கிறார். பின்பு மார்க்சிய சிந்தாந்தங்களை கேரள மார்க்சிஸ்ட்டு கட்சி சீரழிப்பதாகச் சொல்லிவிட்டு கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். படோம் என்ற பத்திரிகையை நடத்தி வந்திருக்கிறார். இதில்தான் மார்க்சியம் சம்பந்தமான சூடான கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறார்.
 
இது மட்டுமில்லாமல் 'ஜனசக்தி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் வீக்லி பத்திரிகையான 'சமகலினா மலையாளம்', மற்றும் 'தேசபிமானி' போன்ற பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார். 'மறுவாக்கு' பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து வந்திருக்கிறார்.

 

விஜயனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக 'கேரள கெளமுதி' இதழ் “இந்த மரணத்திற்கு எந்தத் தலைப்பும் வைக்க முடியாது” என்ற டைட்டிலோடு தனது ஹெட்லைன்ஸ் இடத்தை வெற்றிடமாக காட்டி வெளியிட்டிருந்தது. இதேபோல் 'ஜனசக்தி' வார இதழும் தனது தலையங்கத்தை வெறுமையாகக் காட்டி விஜயனுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறது.

 

ஒரு கலைஞனுக்கு பெரும் பெருமையே பணியில் இருக்கும்போதே ஏற்படும் மரணம்தான்.. இவருக்கு அது வாய்த்திருக்கிறது..

கேரளாவில் பெண் தோழருக்கு நேர்ந்த அவமானம்..!

எந்த நாடாக இருந்தாலென்ன..? எந்த மதமாக இருந்தாலென்ன? எந்த கட்சியாக இருந்தாலென்ன..? பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர வேண்டுமெனில் எத்தனை, எத்தனை பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது தெரியுமா..?

வீடியோவைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்..!



பிரதீபா பாட்டிலை புகைப்படம் எடுக்கக் கூடாது.. மிரட்டிய போலீஸ்..

பிரபலங்கள் எங்கே சென்றாலும் பத்திரிகையாளர்கள் பின்னாடியே விரட்டுவது உலகம் முழுவதும் இருப்பதுதான். நம்மூரில் சினிமா பிரபலங்களைவிட அதிகம் அலட்டிக் கொள்பவர்கள் அரசியல்வியாதிகளான பிரபலங்கள்தான். தாங்கள் அதிகம் கண்காணிக்கப்படுகிறோம் என்கிற எச்சரிக்கை உணர்வினாலேயே தங்களது தனிமை பாதிக்கப்படுவதாகப் புலம்பித் தள்ளுகிறார்கள்.


நேற்று நமது இந்தியாவின் முதல் குடிமகளும் இப்படித்தான் புலம்பியிருக்கிறார். நமது ஜனாதிபதியம்மாவுக்கு வருடத்தில் இரண்டு வாரங்கள்தான் விடுமுறையாம். அதுக்குள்ள போற இடத்துக்கெல்லாம் போய் அனுபவிச்சுக்கணுமாம். அந்தம்மாவுக்கு இந்த வயசுல கோவா போய் ஜாலியா இருக்கணும்னு ஆசை. வந்துட்டாங்க..

இவங்க வர்றாங்கன்றதுக்காக கடற்கரையே சுத்தமாக கிளின் செய்யப்பட்டதாம். அது சரிதான். உள்ளூர்க்கார மக்களை விரட்டியடித்த உடன் வந்த அல்லக்கை போலீஸார் வெளிநாட்டுக்காரர்களை மட்டும் விட்டுவிட்டார்கள். அங்கே கை வைத்தால் வெளிநாடுகளில் பொழப்பு நாறிவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருந்திருக்கிறார்கள்.


ஜனாதிபதியம்மா கோவா பீச்சில் உட்கார்ந்திருக்கும்போது யாரும் புகைப்படம் எடுத்துவிடாமல் கண்காணித்திருக்கிறார்கள் அரசு சம்பளம் வாங்கும் போலீஸ்காரர்கள். அப்படியும் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நமது பத்திரிகையாளர்கள் புகைப்படத்தை எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டுவிட்டார்கள்.

மேலிடத்தில் இருந்து போலீஸுக்கு டோஸ் விட.. அவர்களோ புகைப்படம் எடுத்தவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று "ஏன் எடுத்தீங்க? யாரைக் கேட்டு எடுத்தீங்க?" என்று கேள்விகளால் துளைத்தெடுத்தார்களாம்.


இந்தம்மாவை யார் ஓய்வெடுக்க வெளில வரச் சொன்னது..? வெளில வந்தா புகைப்படம் எடுக்கத்தான் செய்வாங்க.. அந்தம்மாவுக்கு அந்தப் பக்கமா உக்காந்திருந்த வெளிநாட்டுக்காரங்களும் போட்டோ எடுத்திருக்காங்க. அவங்களையெல்லாம் விட்டுட்டு உள்ளூர்காரங்களை மட்டும் கொஸ்டீன் கேக்குறது என்ன நியாயம்..? அடப் போங்கப்பா.. அம்மாம் பெரிய மாளிகைல உக்கார்றதுக்கு ரூமா இல்லை. உள்ளேயே குந்திக்கச் சொல்ல வேண்டியதுதானே.. நல்லா குதிக்கிறாங்கய்யா இவங்க..!

 
படித்ததில் பிடித்தது

"....இலங்கையில் இருக்கிற தமிழ் இளைஞர்கள், இலங்கையில் இன்று ஆயுதம் ஏந்துகிறார்கள். துப்பாக்கி ஏந்துகிறார்கள். இலங்கையில் இருக்கிற தமிழ் இனம் - தமிழ் இளைஞன் - விடுதலை வீரன் - விடுதலைப் புலி கையில் துப்பாக்கி ஏந்துகிறான் என்றால் அவனுக்கு அதை ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை. அது வன்முறை என்றாலுங்கூட அது இந்த நேரத்துக்குத் தேவையான முறையாக இருக்கிறது. எனவே அதை நான் ஆதரிக்கிறேன். ஆமோதிக்கிறேன். அங்கீகரிக்கிறேன். ஒப்புதல் தருகிறேன். வேறு என்ன செய்வான் அவன்..? அவன் தாயும், தங்கையும் அவனுக்கு நேராகக் கற்பழிக்கப்படுகிறார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருக்க அவன் கோழையா..? தமிழனுக்குப் பிறக்காதவனா? அந்த ஈழ நாட்டில் வாழ்கின்ற தமிழன் - அவனென்ன தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழனா..? அவன் இலங்கையில் வாழ்கின்ற தமிழன். தமிழ்நாட்டுத் தமிழன் என்றால் அவன் சொரணை கெட்டுப் போய் சோற்றால் அடித்த பிண்டமாக இருப்பான். இலங்கையில் வாழ்கின்ற தமிழனுக்கு வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்த பிறகுதான் அவன் கையில் ஆயுதம் ஏந்துகிறான். அப்படி ஆயுதம் ஏந்தும் இளைஞனுக்கு - அந்த விடுதலைப் பட்டாளத்துக்கு இந்திய துணைக் கண்டம் இன்றைக்கு உதவி செய்தாக வேண்டும்..."

- கலைஞர் கருணாநிதி ஒரு காலத்தில் கூறியதாக திராவிட இயக்க வரலாறு - பாகம்-2 நூலில் - பக்கங்கள் 214-215

 
பார்த்ததில் பிடித்தது
அருமைத் தம்பி குசும்பனுக்காக..


மீண்டும் அடுத்த இட்லி-வடையில் சந்திப்போம்..!

சாருவின் எந்திரன் புலம்பல் விமர்சனம் படுமுட்டாள்தனம்..!

07-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
"நாடோடிகள்' படத்தைப் பார்க்க முடியாமல் பாதியிலேயே எழுந்து வந்துவிட்டேன்" என்று சாரு எழுதியிருந்ததைப் படித்தபோதே, இனி இந்த மனிதரின் சினிமா விமர்சனங்களை பொருட்படுத்தவே தேவையில்லை என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் முடியவில்லை..!

எதிர்பார்த்தது போலவே சாருவின் எந்திரன் புலம்பல் வரைமுறையே இல்லாமல் ஒப்பாரிப் புலம்பலாக இருக்கிறது..!


முதலில் 'எந்திரன்' திரைப்படம் ஒரு அக்மார்க் ஹை டெக் மசாலா திரைப்படம் என்பதை சாரு ஏன் உணர மறுக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை.

இது அவருக்கான படமும் அல்ல என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தும் படத்தைப் பார்த்துவிட்டு இது சரியல்ல.. அது சரியல்ல... என்று நொட்டைச் சாக்கு சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடிய செயல் அல்ல..!

அவர் “ஆபாசம்” என்று அவர் திருப்பித் திருப்பிச் சொல்வது ஒரேயொரு விஷயத்தைத்தான். அது 61 வயதான ரஜினியும், 37 வயதான ஐஸ்வர்யாவும் காதலிப்பதை மட்டும்.

முதலில் சாரு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 61 வயதான ரஜினி கல்லூரி மாணவனாக இதே தோற்றத்தில் நடித்திருந்தால் நிச்சயமாக ரசிகர்களே அதனை நிராகரித்திருப்பார்கள். ஆனால் இதில் அப்படியல்ல..

ரஜினி தற்போது ஒரு மாஸ் ஹீரோ.. அந்த ஹீரோ தமிழ்ச் சினிமாவின் இலக்கணப்படி படத்தில் காதலிக்கப்பட வேண்டும். காதலிக்க வேண்டும். டூயட் பாட வேண்டும். சண்டையிட வேண்டும். இதுதான் மாஸ் ஹீரோவிடம் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பது. இதைத்தான் ரஜினி தன்னையொரு தொழிலாளியாக நினைத்துக் கொண்டு செய்திருக்கிறார்.

ரஜினியின் உண்மையான வயதையும், ஐஸ்வர்யாவின் உண்மையான வயதையும் மனதில் வைத்துக் கொண்டு இங்கே கதை செய்யப்படுவதில்லை. ரசிகர்களும் அதனை விரும்புவதில்லை. அவர்களுக்குத் தேவை ஒரு ஹீரோயிஸம். அந்த இஸத்தை எதிர்பார்த்துதான் எந்திரனுக்கு வந்தார்கள். கிடைத்தது. மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். அவ்வளவுதான்..

இது பல வருடங்களாக இந்திய சினிமாவில் நடைபெற்று வருவதுதான். இதில் அப்படியென்ன ஆபாசத்தைக் கண்டுவிட்டார் சாரு..?

1971-ல் 'ரிக்ஷாக்காரனில்' மஞ்சுளா அறிமுகமானபோது அவருடைய வயது 15. ஆனால் அப்போது எம்.ஜி.ஆரின் வயது 54. இதன் பின் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்த நடிகைகள் அனைவருமே அவரது வயதில் பாதியானவர்கள்தான். 'வாழ்க்கை' படத்தில் நடித்தபோது அம்பிகாவுக்கு வயது 25. சிவாஜியின் வயது 58. வயதைப் பார்த்தா அப்போது படத்தைப் பார்த்தார்கள்..?


அதுவொரு மாயவுலகம். கனவுலகம்.. இரண்டரை மணி நேரம் பொழுது போகிறதே என்ற நோக்கத்திலும், தன்னால் முடியாததை தன் ஆதர்ச நாயகன் செய்கிறானே என்ற கடைக்கோடி மனிதனின் பிரமிப்பாலும்தான் இந்த சினிமா வளர்ந்தது..! இப்போதும் வளர்ந்து கொண்டிருக்கிறது..!

நாயகன் திரைப்படத்தில் சின்னப் பையனாக, விபச்சார விடுதிக்குச் செல்லும் இளைஞனாக, ஒரு கணவனாக, ஒரு அப்பாவாக, ஒரு தாத்தாவாக என்று அத்தனையையும் தனது மேக்கப்பின் துணையோடு கமல் செய்து காட்டியபோது அதனை நடிப்பு என்றுதான் நம்மால் பார்க்க முடிந்ததே தவிர.. என்ன இப்படி 32 வயசுக்காரர் 70 வயது தாத்தா மாதிரி மேக்கப் போட்டு நடிச்சிருக்காரு..? என்றெல்லாம் அப்போது யாரும் யோசித்ததில்லை. அவர்களுக்கு வேண்டியது அந்த வயதுக்கேற்ற நடிப்பு. கிடைத்தது. பார்த்தார்கள்.

கனவுலகம் என்பதையெல்லாம் தாண்டி 20 வயதான பெண், 50 வயதான பெண் போல மேக்கப் போட்டு எப்படி நடித்திருக்கிறார் என்பதில்தான் நடிப்பு என்கிற வார்த்தை ஒளிந்திருக்கிறது. அதனை ஏன் உண்மையாக்கிப் பார்க்க வேண்டும்? பிறகு நடிப்புத் தொழில், திறமை என்கிற பேச்சுக்கே இடமில்லையே..?

சாரு அதே கட்டுரையில் மார்லன் பிராண்டோவை பற்றிச் சிலாகித்துச் சொல்லும்போது 'Last Tango in Paris' என்னும் திரைப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கும்போது மார்லன் பிராண்டோவின் வயது 49. உடன் நடித்த மரியா ஷிண்டரின் வயது 21. கிட்டத்தட்ட 28 வயது வித்தியாசம். ஏன் இது மட்டும் சாருவின் கண்ணுக்கு ஆபாசமாகத் தெரியவில்லை.?

தமிழ்ப் படம் என்றால் ஒரு அளவுகோல்.. மற்ற மொழிப் படங்கள் என்றால் வேறொரு அளவுகோலா..? அதிலும் 'எந்திரனில்' ஐஸ்வர்யாராயுடன் மரத்தைச் சுற்றி டூயட்தானே பாடியிருக்கிறார் ரஜினி. குடும்பத்தோடு இதைப் பார்க்கலாமே..? இதிலென்ன ஆபாசம் இருக்கிறது..? ஆனால் Last Tango-வில் பிராண்டோவும் அந்தப் பெண்ணும் செய்வது என்ன..? அதை எவனாவது குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியுமா..?(நான் தனிமையில்தான் பார்த்தேன்) இந்த இரண்டில் உண்மையில் எது ஆபாசம்..?

தன் அறிவுக்கு ஒத்து வராத தமிழ்த் திரைப்படத்தை பார்த்துவிட்டு, தனக்குப் பிடித்ததுபோல் எடுக்கவில்லையே என்ற சாருவின் புலம்பல் சுத்த முட்டாள்தனம்..!


'ராவணன்' படத்திலாவது இறுதிக் காட்சியில் லோ நெக் டிரெஸ்ஸில் ஐஸ்வர்யாவைக் காட்டியிருக்கும் விதத்தை வைத்து 'ஒரு துளி ஆபாசம் 'என்று சொல்லலாம். ஆனால் எந்திரனில் அப்படியென்ன ஆபாசத்தைக் கண்டுவிட்டார் சாரு..?

இவர் எதை 'ஆபாசம்' என்கிறார் என்பதே தெரியவில்லை. அதை முதலில் தெரிந்து கொண்டு பின்புதான் இவரிடம் பேச வேண்டும் போலிருக்கிறது..!

சென்ற மாதம் தனக்குக் கடிதம் அனுப்பியிருந்த ஒரு வாசகருக்கு சாரு எழுதியிருந்த பதிலில் சொல்லியிருப்பதுதான் உண்மையிலேயே ஆபாசம்.

தனி உரையாடல்களில் நண்பர்களிடத்தில், உரிமையுள்ளவர்களிடத்தில் கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகளையும், வீட்டுக்குள் புழுங்கும், புழங்கும் வார்த்தைகளையும் பொதுவில் வைத்து தான் எழுதியிருந்த ஆபாசத்தையெல்லாம் மறந்துவிட்டு இப்போது ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்தை ஆபாசம்  என்று சொல்லி மேலும், கீழுமாகக் குதிக்கிறார்.

“அருவருப்பும் இருக்கிறது” என்கிறார். கரப்பான்பூச்சி கையில் ஊர்கின்றபோது நமக்கு வருவது அருவருப்பு. காலில் மலம் ஒட்டிக் கொண்டால் நாம் முகம் சுழிப்பது அருவருப்பில்..! பிட்டு பட சீன்களை குடும்பத்துடன் பார்க்கும்படியான படத்தில் பார்க்கும்போது நமக்குத் தோன்றுவதும் இதுதான். ஆனால் 'எந்திரனில்' அது போன்ற காட்சியமைப்புகளே இல்லையே..?

தீக்காயம் பட்ட அந்தப் பெண்ணைத் தூக்கி வரும்போதுகூட நிர்வாணத்தை மறைத்துத்தான் காட்டியிருக்கிறார் ஷங்கர். “செக்ஸ்” என்ற வசனத்தைக்கூட வாய்ஸ் ஓவர் லேப்பாக ரோபோவின் மீதே திணித்திருப்பதால் அதுவும் எதையும் நமக்குத் தோற்றுவிக்கவில்லை..! வேறு எந்த வகை உணர்ச்சியை அருவருப்பு என்கிறார் சாரு...?

எந்திரன் திரைப்படத்தின் விளம்பரப்படுத்ததலைப் பற்றி இவர் மட்டுமல்ல ஒட்டு மொத்தப் பதிவுலகமே எழுதிச் சுட்டிக் காட்டியாகிவிட்டது. அசுர பலத்துடன் அரசாட்சி செய்யும் ஒரு அரசு அமைப்பைப் போல சன் டிவி விஸ்வரூபமெடுத்தாகிவிட்டது. இதை அவர்கள் செய்யாமல் விட்டால்தான் ஆச்சரியம்..!

இதனால் மற்ற திரைப்படங்களுக்கு வசூல் குறைவும், கவன ஈர்ப்பும் இல்லை என்பதை ஒத்துக் கொண்டாலும், ரஜினி மீதான கவர்ச்சி அம்சமாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை..!


ரஜினியைத் தவிர வேறு எந்த ஹீரோவை வைத்து 150 கோடியில் தைரியமாக படமெடுக்க முடியும்..? போட்ட காசுக்கு மேலேயே இரண்டு மடங்கு தொகையை இப்போது சன் டிவி அள்ளிவிட்டது. வியாபாரம் நுணுக்கம் தெரிந்தவர்கள்.. தந்திரக்காரர்கள்.. அள்ளுகிறார்கள்.

ஒரு பக்கம் இதனை மறைமுகமான கொள்ளை என்று மற்றவர்கள் சொன்னாலும், அனைத்து வியாபாரத் துறைகளும் இப்படித்தானே இருக்கிறது. 

'உயிர்மை' பதிப்பகம் அல்லாமல் வேறு அட்ரஸ் தெரியாத, அறிமுகமில்லாத பதிப்பகங்களுக்கு சாரு தனது புத்தகங்களை விற்பனை செய்யும் உரிமையைத் தருவாரா...? மாட்டார் அல்லவா...?

பதிப்பாளர் தன்னையொத்த சிந்தனையாளராக இருப்பாரா? யாரிடம் தன்னால் சரிக்குச் சமமமாக பேச முடியும்..? நம் பெயருக்கு ஏற்றாற்போல் மார்க்கெட்டிங்கை அவரால் செய்ய முடியுமா..? நம்பிக்கையா ராயல்டி தொகை நமக்குக் வருடாவருடம் கிடைக்குமா..? நூல் வெளியீட்டு விழாவை காமராஜர் அரங்கத்தில் செலவு செய்து நடத்தும் அளவுக்கு வல்லமை படைத்தவரா..? கூட்டத்தை அவரால் சேர்க்க முடியுமா..? நண்பர்களுடன் அளவளாவுவதற்கு இரவு நேர தண்ணி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வாரா..?   என்பதையெல்லாம் யோசிச்சுத்தானே கொடுப்பார்..? கொடுத்திருப்பார்..?.

இதைத்தான் ரஜினியும் செய்திருக்கிறார். ஒரு நடிகர் என்ற முறையில் ரஜினி எதிர்பார்ப்பது வெற்றியை.. அதற்குத் தோதான ஆட்கள் யார் என்று தேடி, தேடித்தான் சன், ரஹ்மான், ஷங்கர் இணைந்திருக்கிறார்கள். ஒருவகையில் வியாபாரத்தின்படி இது சக்ஸஸ்புல் ஜோடிதான்..!

வேறு எந்த தமிழ் ஹீரோவுக்கும் இல்லாத எதிர்பார்ப்பும், ஆதரவும் ரஜினிக்கு இருக்கிறது. கார்த்திக்கும், ராதாவும் மேடையேறி ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ரஜினியின் தலை தென்படுகிறது. அவ்வளவுதான் அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு கைதட்டலைத் தவிர வேறில்லை நேரு ஸ்டேடியத்தில்..! இதையெல்லாம் யார் செய்யச் சொன்னது..? "ரஜினி வந்ததும் அனைவரும் கை தட்டுங்கள்" என்று இயக்குநர்கள் சங்கமா சொன்னது..?

ரசிகர்களின் மனதில் அந்த நேரத்தில் தோன்றிய மயிர்க்கூச்செறியும் தூண்டுதல் அது. எப்படி, யாரால் என்றெல்லாம் யாராவது ஆராய்ச்சி செய்ய முடியுமா? இதற்கு ரஜினி எப்படி பொறுப்பாக முடியும்..? அதற்கு ரசிகர்கள்தானே காரணம்..? “எழுத்துலகின் சூப்பர் ஸ்டார் சாரு அவர்களே..” என்று சாருவை அழைத்தபோது, பிலிம் சேம்பர் தியேட்டரில் இதேபோல்தானே கை தட்டல் கிடைத்தது. இரண்டிலும் என்ன தவறு இருக்கிறது..? அவரவர் உணர்ச்சிகளை அவரவர் ரசிகர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இதில் ரஜினியை மட்டும் குறை சொன்னால் எப்படி?

இதற்கு முன்பு தான் வாங்கி, விநியோகம் செய்த கூட்டமே வராத படங்களுக்கு எப்படி, எப்படியோ விளம்பரங்களை வெளியிட்டு ஓட்டிப் பார்த்தது சன் டிவி. அப்போதெல்லாம் சன் டிவியின் விளம்பரத்தைப் பார்த்தா ரசிகர்கள் கூட்டம் தியேட்டருக்கு ஓடியது..?

'எந்திரன்' படம், ரஜினி ரசிகர்களையும் தாண்டிய பொதுவான மக்கள் மத்தியிலும் சூப்பர் ஹிட்டானது சன் டிவியே எதிர்பார்க்காத ஒன்று. பொதுவாக ரஜினி ரசிகர்களுக்குத்தான் பிடிக்கும்.. முதல் ஒரு வாரத்தில் அவருடைய அனைத்து ரசிகர்களையும் பார்க்க வைததுவிட வேண்டும் என்று நினைத்துதான் அவர்கள் தங்களது விளம்பர யுத்தத்தை ஆரம்பித்தார்கள்.

ஆனால் முதல் காட்சியிலேயே இது ரசிகர்களையும் தாண்டிப் பொதுவான மக்களையும் கவரப் போகிறது என்பது புரிந்து, அதற்கேற்றாற் போல் தங்களது வியாபார தந்திரத்தை மாற்றிக் கொண்டார்கள்.

மக்களுடைய கருத்து என்ன..? “ரெண்டரை மணி நேரம் நல்லா பொழுது போச்சு ஸார்.! குட் எண்ட்டர்டெயிண்மெண்ட். இது மாதிரி இன்னொரு தமிழ்ப் படம் வரணும்னா அந்த இயக்குநர் ஷங்கரைவிட டேலண்ட்டாத்தான் இருக்கணும்.. கண்டிப்பா அதுலேயும் ரஜினிதான் நடிக்க முடியும்” என்கிறார்கள்.

சன் டிவியைத் திட்டுகின்ற சாக்கில் ரஜினியின் உழைப்பையும், சங்கரின் உழைப்பையும் முட்டாள்தனம் என்று சொல்லும் முட்டாள்தனத்தைத்தான் சாரு செய்திருக்கிறார்.


'எந்திரன்' மேக்கிங் காட்சிகளைப் பார்த்தபோது ரஜினியின் உழைப்பும், ஷங்கரின் மேக்கிங் திறமையும் நன்கு தெரிந்தது. இதற்கடுத்த பேட்டியில் “2 மணி நேரத்துல பானு மேக்கப் போட்டுட்டாங்க...” என்று அலட்சியமாக ரஜினி சொன்னதைக் கேட்டு வாயருகே சோறுடன் சென்ற எனது கை ,அப்படியே அனிச்சை செயலாக நின்றுவிட்டது. அவ்வளவு அதிர்ச்சி.!

ரஜினி எந்த விஷயத்தை எப்படி சொல்கிறார் பாருங்கள். இதுதான் அவரது வெற்றியின் ரகசியம். இந்த வெற்றிக் கோடு  ஒன்றை மட்டுமே அளவுகோலாக வைத்துத்தான் அவரவர், அவரவர் துறைகளில் புலிப்பாய்ச்சல் காட்டுகிறார்கள். இதில் சன் டிவி, கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, அம்பானிகள், விஸ்வநாதன் ஆனந்த், சானியா மிர்சா என்று அனைவருமே அடக்கம்..!

அந்த ஒரு உழைப்பை சாரு எவ்வளவு தூரம் கொச்சைப்படுத்தியிருக்கிறார் என்பது அவரது விமர்சனத்தைப் படித்தாலே புரிகிறது. தெரிகிறது. இவர் மட்டும் “நான் நாளொன்றுக்கு 18 மணி நேரம் எழுதுகிறேன். படிக்கிறேன்.. தமிழ் எழுத்துலகத்துக்காக உழைக்கிறேன். ஆனால் பதிலுக்கு இந்த பாழாய்ப் போன தமிழ்ச் சமூகம் எனக்கு எந்த அங்கீகாரத்தையும் அளிக்கவில்லை..” என்று புலம்புகிறாரே..?

ரஜினியும், ஷங்கரும்தான் ஒரு நாளைக்கு 18 மணி நேரத்தை இந்தப் படத்திற்காக கொடுத்து உழைத்திருக்கிறார்கள். அந்த உழைப்பையாவது பாராட்ட வேண்டாமா? இவருக்கென்றால் ஒன்று.. மற்றவருக்கென்றால் வேறா..? 

61 வயதிலும் ஒரு மனிதரை இவ்வளவு தூரம் படத்தில் இன்வால்வாக வைத்து, உழைக்க வைத்து, சண்டையிட வைத்து, இயக்கியிருக்கிறாரே ஷங்கர்.. உண்மையில் இந்த இருவரின் கடின உழைப்பு சாருவின் கண்ணுக்குத் தெரியவில்லையா..? தமிழ்ச் சினிமாவில் இவருடைய பிரச்சினைதான் என்ன..?

"எந்திரன் படம் காப்பியடிக்கப்பட்டது" என்கிறார். நிச்சயமாக இந்த விஷயத்தில் மட்டும் சாருவுடன் நான் ஒத்துப் போகிறேன். ஹாலிவுட் படங்களின் தாக்கம் இல்லாமல் இந்தப் படத்தின் கதையை ஷங்கரால் சிந்தித்திருக்கவே முடியாது என்பது நூற்றுக்கு நூறு உண்மையான வாதம்.

இதில் பல ஹாலிவுட் படங்களின் காட்சியமைப்புகள் தெரிந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகளில் அந்த பாம்பைத் தவிர மீதியெல்லாம் ஹாலிவுட்டுக்கும் புதுசுதான்.. நான் பார்த்தவரையில்..!


பொதுவாக அனைத்து வகை திரைப்படங்களுமே காப்பிதான்.. புத்தகம், இலக்கியம், புராணம், மக்கள் கதை, பத்திரிகைகள் என்ற பல்வேறு பிரிவுகளில் கதைகளை எடுத்தாண்டிருக்கிறார்கள் நமது முன்னோர்களான இயக்குநர்கள்.

இது இப்போது சற்று முன்னேறி மற்ற மொழி திரைப்படங்களின் கதையை காப்பியடிப்பது என்னும் கட்டத்திற்கு வந்துவிட்டது..! 'இன்ஸ்பிரேஷன்' என்கிறார்கள் தமிழ் இயக்குநர்கள். இதற்கும் காப்பி செய்வித்தலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. சில படங்களில் கதை,. சில படங்களில் சீன்கள் என்று நமக்கு முன்பே அறிமுகமான காட்சிகளெல்லாம் சுட்டிருப்பது ஹாலிவுட் படங்களை பார்க்கும் இரண்டாயிரம் பேர் கொண்ட சமூகத்திற்கு மட்டுமே தெரியும். பெருவாரியான முன் பெஞ்சு ரசிகர்களுக்குத் தெரியாது.

'எந்திரன்' படம் பற்றிய செய்தியை பத்தாண்டுகளுக்கு முன்பாகவே தமிழுகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் சாருவின் குருவும் நமது வாத்தியாருமான சுஜாதாதான். இப்போது இந்தப் படம் பற்றிய செய்திகளும், சர்ச்சைகளும், வழக்குகளும் வரிசை கட்டி நிற்பதைப் பார்த்தால் சிந்தனைச் சிற்பிகள் அத்தனை பேரின் சிந்தனைகளும் ஒரே மாதிரி இருக்குமா? இருக்காதா? என்பதற்கு கோர்ட்டுதான் முடிவு சொல்ல வேண்டும் போலிருக்கிறது.

ஆனாலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் அத்தனை சுலபத்தில் முடிந்துவிடாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் படம் ஆரம்பித்த நேரத்தில் 2000 பக்கங்கள் கொண்ட ஸ்கிரிப்ட்டை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ஷங்கரின் உதவியாளர்கள் கொண்டு வந்து இரண்டு நாட்கள் முழுவதுமாக அமர்ந்து பதிவு செய்துவிட்டுப் போனார்கள். ஸோ.. என் கற்பனை.. உன் கற்பனை.. என்ற ரீதியில் இந்த வழக்கு அல்லல்படத்தான் போகிறது..!

இந்தப் படத்தில் பல இடங்களில் சுஜாதாவின் வசனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை ஷங்கரும் ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சாருவோ வசனங்களையும் காறித் துப்பியிருக்கிறார். சுஜாதா எழுதியது எது என்று அவருக்குத் தெரியாது என்பதால் இதனை ஒதுக்கிவிடுவோம்..! ஆனாலும் சில ஷார்ப்பான வசனங்கள் எனக்கு வாத்தியாரை ஞாபகப்படுத்தியது. இது சாருவுக்கும் நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். நான்  நம்புகிறேன் நமது வாத்தியாரின் கைவண்ணம் இப்படத்தில் இருக்கிறது என்று..!

ஒருவேளை வாத்தியார் சுஜாதா இன்று உயிருடன் இருந்திருந்தால், சாருவின் இந்த 'எந்திரன்' விமர்சனம், நிச்சயம் வேறு மாதிரியாகத்தான் இருந்திருக்கும் என்று என் உள் மனது சொல்கிறது..!

“இதுவரை என் தமிழ் சினிமா அனுபவத்தில் இவ்வளவு ஆபாசமான,  அருவருப்பான காட்சிகளை நான் பார்த்ததில்லை” என்று சொல்லியிருக்கிறார் சாரு..!

எந்திரன் படத்தில் ஆபாசமான காட்சிகள், அருவருப்பான காட்சிகள் என்று ஒரு காட்சியையாவது இவரால் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? பின் எதற்கு அந்த வார்த்தைகளை இரவல் வாங்கி, சினிமா விமர்சனத்தில் திணித்து வைத்துக் குதிக்கிறார்..?

எனது வாழ்க்கையிலும் இந்த அளவுக்கு அவதூறான, பொய்யான ஒரு விமர்சனத்தை இதுவரையிலும் நான் கண்டதேயில்லை..!