Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-22-01-2011

22-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சாதனை படைத்த புத்தகக் கண்காட்சி

ஒரு வழியாக 34-வது புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்துள்ளது. 14 நாட்கள் நடைபெற்றுள்ள இந்தக் கண்காட்சிக்கு ஏறக்குறைய 12 லட்சம் மக்கள் வந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 80000 பேர் வந்து சென்றுள்ளனர். மொத்தமாக 7.5 கோடி ரூபாய்க்கு புத்தக விற்பனை நடந்துள்ளது. இதுவரையில் நடந்துள்ள கண்காட்சிகளின் விற்பனையைக் கணக்கிட்டால் இதுதான் அதிகம் என்று 'பபாப்ஸி' சொல்கிறது.. வாழ்த்துக்கள்..

மக்கள் இந்த அளவுக்கு புத்தகங்களுக்காக பணத்தைச் செலவழித்திருப்பது பாராட்டுக்குரியது. வரவேற்புக்குரியது. புத்தக எழுத்தும், பதிப்பும் இன்னமும் தமிழ்நாட்டில் ஒரு சீரான தொழிலாக வளரவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் நிச்சயமாக அது நடைபெற்றே தீரும்போல தெரிகிறது..

646 பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். புத்தகங்களின் தலைப்பே 2 லட்சமாம். மொத்தமாக 5 கோடி புத்தகங்கள்  பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கைகள் நிச்சயமாக உயரும் என்றே நினைக்கிறேன். இந்த உயர்வுக்கு இந்த வருடத்திய விற்பனைத் தொகையும் ஒரு காரணமாக இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. 

இந்த வருடத்திய விற்பனையில் டாப் 5 லிஸ்ட் புத்தகங்கள் இது :

1. ஆனந்த விகடனின் "காலப்பெட்டகம்'
 2. தினத்தந்தியின் "வரலாற்றுச் சுவடுகள்'
 3. கல்கியின் "பொன்னியின் செல்வன்'
 4. கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்'
 5. ச.ந. கண்ணனின் "ராஜராஜசோழன்'

எத்தனை வருடங்கள் கடந்தாலும், புத்தகங்கள் புதிது, புதிதாக வந்தாலும் 'பொன்னியின் செல்வனும்', 'அர்த்தமுள்ள இந்து மதமும்' இப்போதும் சக்கைப் போடு போடுகின்றன என்பதே பெருமைக்குரிய விஷயம்..!

அதே சமயத்தில் நாஞ்சில் நாடனின் 'சூடிய பூ சூடற்க'  சிறுகதைத் தொகுப்பு 2650 பிரதிகள் விற்று இலக்கிய உலகில் சாதனை படைத்திருப்பதற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


லீனா மணிமேகலையின் செங்கடலுக்கு சென்சார் சான்றிதழ் மறுப்பு

கவிஞர் லீனா மணிமேகலை தற்போது இயக்கியிருக்கும் செங்கடல் படத்திற்கு தென் மண்டல சென்சார் போர்டும், மத்திய சென்சார் போர்டும் சான்றிதழ் தர மறுத்துள்ளன.

மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் சில திரைப்படங்களை சென்சார் போர்டு உறுப்பினர்களாக இருந்து தொலையும் சில அரசியல்வியாதிகள் தங்களது சக்தியை வைத்துத் தடுப்பது படைப்புத் திறனை முடக்குவதற்குச் சமமானது..!

அந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். ஒரே ஒரு இடத்தில் ஒரு வசனத்தைத் தவிர மற்றவைகள் ஏற்புடையவைதான்.. மாநில, மத்திய, சிங்கள அரசுகளை இடித்துரைக்கும் வசனங்கள் நிறையவே உள்ளன. ஆனால் இவைகள் அனைத்தும் உண்மையைத்தான் சொல்கின்றன. இங்கேதான் உண்மைக்கு மதிப்பில்லையே..!

தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில் திரையிட வேண்டி இந்தச் சான்றிதழ் அவசியம் தேவைப்படுகிறது. தியேட்டர்களில் திரையிடும் அளவுக்கான தகுதியுடனும், பொருட்செலவுடனும் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கும் வேறு வழியில்லை..!

இலங்கை அகதிகளின் ராமேஸ்வர வருகையையும், அகதிகளின் பிரச்சினையையும், ராமேஸ்வர மீனவர்களின் அவதி வாழ்க்கையையும், சிங்கள துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியா மீனவர்களின் வாழ்க்கையையும், நமது அரசியல்வியாதிகளும், அதிகார வர்க்கமும், மீடியாக்களும் இலங்கை பிரச்சினையை அணுகுகின்றவிதமும் இத்திரைப்படத்தில் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

மீடியாக்களுக்கு போடப்படும் வாய்ப்பூட்டு என்கிற வகையில் இல்லாது, ஈழப் போராட்ட வரலாற்றில் சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் மத்திய, மாநில அரசுகளின் எதேச்சதிகாரத்தில் இதுவும் ஒன்று என்ற வகையிலாவது படைப்பாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்..!




எழுத்தாளர் தாமிராவின் கதைக்கு எதிர்ப்பு

எழுத்தாளரும், சினிமா இயக்குநருமான அண்ணன் தாமிரா சென்ற மாதம் தினமணி கதிரில் எழுதிய கல்லறை நகரம் என்ற சிறுகதையை எதிர்த்து நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதுவே இந்தக் கதையின் உயிர்ப்பை நிலை நாட்டுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.


திருநெல்வேலி அருகேயுள்ள ஓரிடத்தில் விளைநிலங்களையெல்லாம் பிளாட் போட்டு விற்கும் இன்றைய வியாபார உலகத்தனத்தை அந்தச் சிறுகதையில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அதே ஊரில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அந்த இடத்தின் வரலாறு தெரிந்துதான் எழுதியிருக்கிறார்.

நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் இருக்கிறதாம் இந்த இடம். முற்றிலும் விளைநிலங்களாக இருந்தப் பகுதி ரியல் எஸ்டேட்காரர்களின் கண்களில் பட்டுவிட்டதால் தற்போது இடமே பட்டுப் போய்விட்டது.




கை நிறைய கரன்சியைக் காட்டி நில உரிமையாளர்களிடம் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக வாங்கிவிட்டார்கள் புரோக்கர்கள். இன்னும் கொஞ்ச நிலம்தான் பாக்கி. தற்போது விளைந்திருக்கும் நெல்மணிகள் அறுவடை செய்யப்பட்டவுடன் அந்த நிலங்களும் ஸ்வாகா ஆகிவிடும் என்கிறார்கள். 

இந்தக் கதை தாங்கள் வீடு கட்டியிருக்கும் சாதனைக்கு பங்கம் விளைவித்திருக்கிறது என்று சொல்லி இப்படியொரு போஸ்டரை ஒட்டி தங்களது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். கூடவே அண்ணன் தாமிராவை போனில் தொடர்பு கொண்டு அவர் மீது வழக்குப் போடப் போவதாகவும் மிரட்டுகிறார்களாம்.

ஒரு பேனா.. ஒரு எழுத்து, ஒரு கதை.. என்ன செய்ய முடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்..!

கல்லறை நகரம் சிறுகதைக்கான லின்க் இது :

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Kadhir&artid=352578&SectionID=146&MainSectionID=146&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88:%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

ஒரு மனைவியின் கோபம்


தனக்கு ஏற்கெனவே திருமணமானதை மறைத்துவிட்டுத் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிய அப்பாவி கணவன் மீது ஒரு கொடுங்கோல் மனைவி காவல்துறையில் புகார் கொடுத்திருந்தாராம்..!
 
விசாரணைக்காக அழைத்தவுடன் சட்டத்தை மதித்து போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதித்து உள்ளே வந்திருந்த கணவனை, ஒரு மரியாதைக்குரிய 40 வயதான ஆண் என்றுகூட பாராமல் கட்டிய மனைவியே அவனை அடுத்தாள் முன்பாக கை நீட்டி அடிக்கும் கொடுமையைப் பாரீர்..! பாரீர்..! 

இந்தக் கொடுமையைக் கேட்பாரே இல்லையா..? இந்தக் கொடுமைக்கார மனைவிகளிடமிருந்து அப்பாவி கணவர்களைக் காப்பாற்றுவது எப்படியோ..? இப்படியிருந்தால் நாட்டில் எப்படி மழை பொழியும்..? விளைச்சல் பெருகும்..! கட்டிய கணவன் மீது கை நீட்டும் சீதைகள் நிறைந்த பாரதமா இது..? ஐயகோ.. ராம ராஜ்ஜியத்தில் இப்படியெல்லாம் நடக்கலாமா..? 

ராமா. ராமா.. ராமா..!





திருட்டுப் போகாத சாகித்ய அகாடமி விருது

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு சாரல் விருது வழங்கும் விழாவில் பேசிய எழுத்தாளர் பாரதிமணி ஒரு சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அது உங்களுக்காக இங்கே :

“எண்பதுகளில் க.நா.சு. இறந்த பிறகு அவரது பரிசுப் பொருட்கள், மானுஸ்க்ரிப்ட் முதலியவை சென்னையிலிருந்து தில்லிக்கு வந்தன. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கொண்டு வந்த அட்டைப் பெட்டிகள் என் காரில் இருந்தன. காலையில் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து நானும் அவற்றை காரிலேயே வைத்திருந்தேன்.

அன்றைய நாள் இரவில் அங்கு வந்த ஒரு திருடர், காருக்குள் இருந்த பெட்டிகளை  கிழித்துப் பார்த்திருக்கிறார். அதில் க.நா.சு.வுக்குப் பரிசாகக் கிடைத்த மூன்று வெள்ளித் தட்டுகள் - அதில் ஒன்று மறைந்த நம் எம்.ஜி.ஆர். கொடுத்தது - அதுவே சுமார் ஒன்றரை கிலோ எடையிருக்கும். - இன்னும் கையை விட்டு துழாவியதில் க.நா.சு.வின் சாகித்ய அகாடெமி பித்தளைப் பட்டயம்.. அதுவும் இருந்திருக்கிறது.

அதைப் பார்த்தவுடன், இந்த பித்தளை யாருக்கு வேண்டும் என்று அதை காருக்கடியில் வீசிவிட்டு, காரின் ஸ்டீரியோ செட், மூன்று வெள்ளித் தட்டுகள்.. இவற்றுடன் போனஸாக, காரில் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய்  விலையுள்ள ஜெர்மன் பைப் லைட்டரையும் சுருட்டிக் கொண்டு போனார் அந்த மரியாதைக்குரிய திருடர்..!

அடுத்த நாள் காலையில் நான் வந்து பார்த்தபோது அந்தத் திருடருக்குக்கூட வேண்டாத சாகித்ய அகாடமியின் பித்தளைப் பட்டயம், சிவனே என்று காரின் அருகே கீழே கிடந்தது. க.நா.சு. பெற்ற விருதுகளில் அது ஒன்றுதான் இப்போது உருப்படியாக என் வீட்டில் இருக்கிறது!..”

நல்ல விஷயம்.. அரசு அமைப்புகள் தாமிர, பித்தளைப் பட்டயங்களை கொடுப்பதில் திருடர்களுக்குக்கூட உடன்பாடில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது.. கொஞ்சம் தங்கத்தில் கொடுத்தாலாவது திருடர்களிடமாவது பரிசு வாங்கியவர்களுக்கு மரியாதை இருக்கும்..! அரசாளர்கள் சற்று யோசிக்கட்டும்..!


துக்ளக்கில் வந்த அவதூறு

நமது வலையுலகப் பதிவர் முகில் தனது வலைத்தளத்தில் சினிமா தலைப்புகளை அரசியல்வாதிகளின் புகைப்படங்களுக்கு வைத்து ஒரு காமெடி செய்திருந்தார்.

இதனை இந்த வாரம் வெளிவந்திருக்கும் துக்ளக் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார் அதன் ரிப்போர்ட்டர் எஸ்.ஜே.இதயா. ஆனால் அதனுடன் சில தேவையற்ற வார்த்தைகளையும் எழுதியுள்ளார்.

இதயா எழுதியிருப்பது : "கம்ப்யூட்டர் அறிவை முதலீடாகக் கொண்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றாலும், ஓய்வு நேரங்களில் (அல்லது அலுவலக நேரங்களிலேயே திருட்டுத்தனமாய்) அந்த  கம்ப்யூட்டர் அறிவைப் பயன்படுத்தி நம்ம ஊர் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்வது நமது என்.ஆர்.ஐ.க்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..! கடந்த வாரம் என் கண்ணில்பட்ட சில கற்பனைகள் இங்கே :" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது முகிலின் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை அவர் அறிந்தாரா? அறியவில்லையா என்று தெரியவில்லை..! முகிலைத் தெரியவில்லை என்றால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அதென்ன “அந்த ஊர் கம்ப்யூட்டர் அறிவைப் பயன்படுத்தி நம்ம ஊர் அரசியல்வியாதிகளைக் கிண்டல் செய்வது..” என்கிற வார்த்தை..!

இதைப் படித்தவுடன் எனக்குச் சிரிப்புதான் வந்தது. “அந்த  கம்ப்யூட்டர் அறிவு..” என்று இதயா எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. முகில் போட்டோஷாப்பில் செய்திருக்கும் டகால்டி வேலைகளைத்தான் இப்படி குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். எப்படி இந்தக் கார்ட்டூன்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதுகூட தெரியாதவரா இதயா..?

துக்ளக்கில் அட்டைப் படத்தை கையாலேயே வரைவதால் கணினியில் பயன்படுத்துவதெல்லாம் நம் வேலை அல்ல என்று அவர் நினைத்துவிட்டாரோ..? துக்ளக்கின் தயாரிப்பு வேலைகளுக்கு கணினியைப் பயன்படுத்தாமல் இப்போதும் எழுத்துக் கூட்டி, பிளாக் வைத்துதான் தயாரிக்கிறார்கள் போலிருக்கிறது.

அப்புறம் இன்னொரு வார்த்தை.. “அலுவலக நேரங்களிலேயே திருட்டுத்தனமாய்..” என்றும் பயன்படுத்தியிருக்கிறார். முகிலின் இந்தக் கார்ட்டூன் எப்படி இதயாவின் கண்களுக்குப் பட்டது என்று தெரியவில்லை. இவர் இணையத் தளங்களைத் துழாவியது மட்டும் திருட்டுத்தனம் இல்லாமல் வேறென்னவாம்..? இவர் பாட்டுக்கு துக்ளக்கிற்கு கட்டுரை எழுத வேண்டியதுதானே..? ம்ஹூம்.. என்.ஆர்.ஐ.க்கள் என்றால் எல்லாருக்கும் இளக்காரமாத்தான் இருக்கு..!

(உஷ்.. அப்பாடா.. துக்ளக்கை மட்டும்தான் இதுவரைக்கும் திட்டாமல் இருந்தேன். இப்போது அதுவும் நிறைவேறிவிட்டது.)


ஆஸ்திரேலியாவில் வெள்ளம்

புயல், மழை, வெள்ளம் என்று அதிகம் நான் கேள்விப்பட்டிருக்காத ஆஸ்திரேயா தற்போது வெள்ளத்தில் மிதக்கிறது. பல்வேறு நகரங்களிலும் வெள்ள நீர் உட்புகுந்து நகரங்களை நாசமாக்கியிருக்கிறது.

தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தபோது இந்த அரியக் காட்சியும் எனக்குக் காணக் கிடைத்தது..


ஒரு வெற்றி - இரட்டை மகிழ்ச்சி

சூடான் நாட்டில் அதன் தென் பகுதி மட்டும் தனி நாடாகப் பிரிவடைவது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு கிடைத்துள்ளது இந்த ஆண்டின் துவக்கத்தில் கிடைத்திருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தி.


இதுநாள்வரைக்கும் அந்த நாட்டில் நடந்த இனப் படுகொலைகள், பிரிவினை கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், எதிர் போராட்டங்கள் என்று நாடே அழிவுப் பாதைக்கு வந்து ஐ.நா. அமைதி காப்புப் படையும், ஆப்பிரிக்க படைகளும் களமிறங்கியும் கட்டுக்குள் அடங்கவில்லை.

ஒரு வழியாக இப்போதுதான் ஐ.நா.வின் ஏற்பாட்டின்படி நடத்தப்பட்ட இந்த தேசம் தழுவிய வாக்குப் பதிவில் தேசத்தைப் பிரித்துவிடலாம் என்று மெஜாரிட்டியான மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஐ.நா.வின் 193-வது நாடாக மிக விரைவில் உருவாக உள்ளது தென் சூடான் நாடு. 

இது முதல் சந்தோஷம் எனில் இரண்டாவது இது தொடர்பானதுதான்..

விடுதலைப்புலிகளின் தற்காலிகமான தற்போதைய வீழ்ச்சிக்குப் பிறகு தனி நாடு கோரிக்கையை இலங்கையில் வசிக்கும் தமிழர்களே எழுப்பாத சூழலில் தனி நாடு கேட்டும், தனி அரசாங்கமே அமைத்தும் தமிழர்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள்.

உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஓட்டளித்து தேர்வாகியிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு தென் சூடான் உருவாகும் வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இது நிச்சயம் மிகப் பெரிய விஷயம்.

நாடு கடந்த தமிழீழப் பிரதிநிதிகளுக்கு இராஜதந்திர அந்தஸ்து இதன் மூலம் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். தென் சூடானைத் தொடர்ந்து வரும் காலங்களில் மற்றைய நாடுகளும் நமக்கு அங்கீகாரம் அளிக்கும்படியான சூழ்நிலைகள் வரும் என்றே நினைக்கிறேன். 


விபச்சார வழக்கில் ஒரு பிரபலம்

இந்தச் செய்தியைக் கேட்டவுடன் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இந்தம்மாவுக்கு அப்படியென்ன பிரச்சினை என்று இன்று காலை முதல் பரபரப்பாக பேசி வருகிறார்கள். எழுதி வருகிறார்கள்.


யமுனா என்ற இந்த தெலுங்கு திரையுலக நடிகை ராமாநாயுடு இயக்கிய 'மெளனப் போராட்டம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். 'மனதில் உறுதி வேண்டும்' - தமிழ்த் திரைப்படத்தில் சுஹாசினிக்கு தங்கையாக நடித்தவர் இவர்.

இப்போது கொஞ்சம் வயதான காரணத்தினால் அனைத்து சினிமா ரிட்டையர்ட்மெண்ட் பார்ட்டிகளும் செய்வதைப் போல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து தனது திறமையைக் காட்டி வருகிறார். நானும் பார்த்திருக்கிறேன். அம்மா, அக்கா கேரக்டர்களில் திரைப்படங்களில்கூட நடித்திருக்கிறார். தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான 'அரசி,' 'செல்வி' சீரியல்களின் கன்னட பதிப்பில் இவர்தான் ராதிகா நடித்த கேரக்டரில் நடித்தவர்..!

ஆனால் நேற்று இரவு இவர் பெங்களூரில் விட்டல் மல்லையா சாலையில் இருக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டலான I.T.C.  Royal
Gardenia ஹோட்டலில் 4-வது மாடியில் 1402-வது எண் கொண்ட அறையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குறி வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளார். இவருடன் 'பணி'யில் இருந்த  நந்தகுமார் என்பவர் Transoft Call Centre என்னும் சாப்ட்வேர் கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரியாம்.  

ஹோட்டலுக்கு வந்த போலீஸ் படை, நேராக இவர்கள் இருந்த அறைக்கே சென்று கைது செய்திருக்கிறார்கள். போட்டுக் கொடுத்த துரோகி யார் என்று தெரியவில்லை. யமுனா அப்போது கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயையும் போலீஸ் கைப்பற்றியுள்ளது. அந்த அறையில் இருந்த புரோக்கரும் பிடிபட்டிருக்கிறார்..! இதில் புரோக்கருக்குக் கிடைத்த கமிஷன் தொகையான 46,000 ரூபாயையும் போலீஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் அதே ஹோட்டலில் விபச்சாரம் தொடர்பாக 7 பேரையும் கைது செய்துள்ளது பெங்களூர் போலீஸ்.

யமுனா இப்போதும் 'அன்வேஷிதா', 'ரத்த சம்பந்தம்' என்று சில சீரியல்களில் நடித்து வருகிறாராம். இந்தம்மாவுக்கு அப்படியொண்ணும் சோத்துக்குப் பஞ்சமில்லை. பெயரும் ரிப்பேரில்லை. ஆனாலும் ஏன் இப்படி என்பதுதான் இன்றைய டாலிவுட்டின் ஹாட் டாபிக்..!

ஏதோ வலுக்கட்டாயமாக, வேறு வழியில்லாமல், சோத்துக்கே அல்லாடியதால் என்றெல்லாம் வசனம் பேசி விபச்சாரத்திற்கு உச்சுக் கொட்டுபவர்கள் இதற்கு என்ன சொல்வார்களோ..?


படித்ததில் ரசித்தது 



“நான் சில படங்களுக்கு வசனம் எழுதியிருப்பதாக நீங்கள் எண்ணம் கொண்டிருப்பது சரியில்லை. ஒரேயொரு படம்தான்.. பாலாஜி பிக்சர்ஸின் லைலா மஜ்னு படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். அதுவும் ஒரு சில காட்சிகளுக்கு மட்டும்தான். படத்தின் டைட்டிலில் வசனம் : வல்லிக்கண்ணம் என்று பெரிதாக போட்டிருந்தார்கள். ஸ்வர்ணலதா நடித்து வெற்றிகரமாக ஓடிய இந்தி லைலா மஜ்னுவை அப்படியே பிரேமுக்கு பிரேம் தமிழ்ப்படுத்தியிருந்தார்கள். அதில் ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே வெவ்வேறு எழுத்தாளர்களை வசனம் எழுதச் சொல்லிப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  இதற்காக எனக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் கொடுத்தார் படத்தின் இயக்குநர் நாகூர்..”

- எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் நேர்காணலில் இருந்து...

பார்த்ததில் ரசித்தது 


கீற்று இணையத்தளத்திற்கு உதவுங்கள் தோழர்களே..!

13-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த ஐந்தாண்டு காலத்திற்குள்தான் தமிழில் பல சிற்றிதழ்கள் மிக அதிகமாக வெளி வரத் துவங்கின என்று நினைக்கிறேன். அவைகளைப் பற்றிய விளம்பரங்களே அதிகம் வெளிவராத சூழலில் சிற்றிதழர் ஆர்வலர்களும், படிப்பாளர்களும் அவற்றை முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

அப்படியான காலக்கட்டத்தில்தான் இது போன்றவைகள்  அனைத்திற்குமான ஒரு முகவரித் தளமாக, இருப்பிட முகவரியாகத் திகழ்ந்து வந்தது கீற்று.காம். அனைத்து வகை சிற்றிதழ்களுக்கு இடமளித்து, அவைகளைப் பற்றிய தள முகவரிகளைத் தனக்குள் வைத்திருந்து சேவையளித்த கீற்றுவை மறுப்பதற்கில்லை.
 

 கீற்றுவில் வெளி வந்த சில கட்டுரைகளில், அதில் பொதிந்திருந்த விஷயங்களின் பின்னணியில் முழுமையாக எனக்கு உடன்பாடில்லை என்றாலும், கீற்றுவில் நடந்து வந்த விவாதங்கள் அத்தனையும் படிப்பதற்குரியவைதான். கீற்றுவின் சேவை, தமிழ் இலக்கிய உலகத்திற்கு மிகத் தேவையான ஒன்று என்றே நான் கருதுகிறேன்..!

சிறந்த விவாத மேடையாகத் திகழ்ந்த கீற்றுவில் இருந்து இப்படியொரு கடிதம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 
எனது ஜி.மெயிலுக்கு வந்த கடிதம்  இது..

அன்புடையீர்..!

கீற்று இணையதளம் இதுவரை shared server-ல் இயங்கி வந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வரும் கீற்று வாசகர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் வெளியான படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் பாதுகாத்து வருவதால் அதிகரித்திருக்கும் Memory usage & MySQL usage காரணமாக‌ dedicated server-க்கு மாறியாக வேண்டியுள்ளது. Dedicated server என்றால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்ட‌வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பதிவு செய்வதாக இருந்தால் இரண்டு லட்சம் வேண்டும். இது கீற்று இணையத்தளத்திற்கு மிகப் பெரிய தொகை.

கீற்றில் இணையும் சிற்றிதழ்களின் எண்ணிக்கையும், கீற்றிற்கு வரும் படைப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. முழு நேர ஊழியர் இல்லாமல், இவற்றை எல்லாம் வலையேற்றுவது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது. முழு நேர ஊழியர் என்றால், குறைந்தது மாதம் ரூபாய் ஐயாயிரம் சம்பளம் தர வேண்டும்.

கடந்த ஜூலை மாதம் ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்’ கருத்தரங்கை நடத்திய வகையில் ரூ.10,000 கடன் என்பதுதான் கீற்றின் நிதிநிலைமை. எனவே கீற்று தொடர்ந்து வெளிவருவது வாசகர்கள் கையில்தான் உள்ளது. கீற்று வெளிவருவது அவசியம் என்று கருதும் வாசகர்கள் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகிறோம்.

தற்காலிகமாக கீற்றின் செயல்பாட்டை நிறுத்தியுள்ளோம். கீற்று இணையதளத்தின் படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் backup எடுத்துள்ளோம். போதிய அளவு நன்கொடை கிடைத்தால், நிச்சயம் கீற்று பழையபடி வெளிவரும் என்று நம்புகிறோம்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு:

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண்: 603801511669

கணக்கு வைத்திருப்பவர் பெயர்: இரமேஷ்

வங்கிக் கிளை: அண்ணா சாலை, சென்னை

IFSC Code / MICR Code: ICIC0006038 / 600229017

Credit card மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், paypal-ஐ பயன்படுத்தவும்.



Cheque / DD அனுப்ப வேண்டிய முகவரி:

Ramesh,

22/34, Saraswathi Nagar 5th street,

Adambakkam

Chennai - 88

நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து editor@keetru.com ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

என்றும் அன்புடன்

கீற்று நந்தன்.
கைப்பேசி: 99400 97994

கடந்த ஐந்தாண்டு காலமாய் இலக்கியம், அரசியல், புனைவு என்று அனைத்துத் தளங்களிலும் பயணப்பட்டிருக்கும் இந்தக் கீற்றுவை நாம் மனம் வைத்தால் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறேன்..!

நம்மில் பலருக்கும் இது போன்ற இலக்கிய ஆர்வங்கள் இருக்கலாம்.. படிப்பார்வம் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கலாம். ஆனால் முழு மூச்சாக செயல்படுத்த விடாத அளவுக்கு பிரச்சினைகளால் ஆழ்ந்திருக்கலாம். ஆனால் செயல்படுத்தும் ஒரு இடம் இருக்கின்றபோது அதனை நாம் ஆதரிப்பதுகூட நாமே அதனுள் பங்கு பெறுவது போலத்தான்..!

உங்களுடைய ஆதரவுகளை கீற்றுக்கு கொடுங்கள்..! உங்களால் முடிந்த உதவிகளை கீற்றுவுக்கு அளிப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவிகளைப் போலத்தான்..!

நன்றி..!


கிழக்கு வாசல் உதயம்..! புதிய இலக்கிய இதழ்..!

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான இலக்கிய இதழ்' என்று விளம்பரத்துடன் 'கிழக்கு வாசல் உதயம்' என்கிற மாதாந்திர இலக்கிய பத்திரிகை திருத்துறைப்பூண்டியில் இருந்து வெளிவருகிறது.

எழுத்தாளர் உத்தமசோழனை ஆசிரியராகக் கொண்ட இந்த இதழ் சமீபத்தில்தான் எனக்குக் கிடைக்கப் பெற்றது. உத்தமசோழனின் எழுத்துக்களை கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பாகத்தான் படிக்க நேர்ந்தது. அதில் ஏதோ ஒருவித ஈர்ப்பு இருந்தது. இன்னமும் இருக்கிறது.

அவருடைய 'கசக்கும் இனிமை' என்கிற சிறுகதை 'ஆயிரத்தில் ஒருவனும், நூறில் ஒருத்தியும்' என்கிற வித்தியாசமான தலைப்போடு மின்பிம்பங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ராஜ் டிவியின் மைக்ரோ தொடர்களில் ஒன்றாக திரையிடப்பட்டது. அந்தக் கதையை முழுவதுமாக தட்டச்சு செய்யும் பணி எனக்குக் கிட்டியதால் அப்போதே உத்தமச்சோழனின் இலக்கிய உலகம் எனக்குப் பரிச்சயமானது.

இந்த இதழில் சிறுகதை, கவிதை, சிகரம் தொட்ட கதை, இலக்கிய வீதி, பேட்டிகள், தொடர்கதை என்று பரந்துபட்ட விஷயத்தை மிக எளிமையான தமிழில் கொடுத்திருக்கிறார். ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம்.

விலை பதினைந்து ரூபாய். தொடர்புக்கு ஆசிரியர் உத்தமச்சோழன், செல்போன் எண் - 9443343292.


வளரட்டும் கிழக்கு வாசலின் படைப்பிலக்கியம்..!