விழித்திரு - சினிமா விமர்சனம்

04-11-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்னையின்  மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் மீரா கதிரவனின்  ‘விழித்திரு’ திரைப்படம்.
‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் இயக்குநர் மீரா கதிரவன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். செளந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜூ இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
மேலும் தம்பி ராமைய்யா, எஸ்.பி.பி.சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு, ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

4 கதைகளில் 13 மாந்தர்களை கொண்டு 1 இரவில் நடைபெறும் வித்தியாசமான கதையாடலில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
“ஒருவருக்கு நாம் நல்லது, கெட்டது இரண்டுமே செய்யாதவரைதான் அவர் நமக்கு அந்நியமானவர்.
இரண்டில் ஏதேனும் ஒன்றை நாம்  செய்து விட்டாலும் அவர் நமக்கு வேண்டியவர் ஆகி விடுகிறார்..” – இதுதான் இந்தப் படம் சொல்லியிருக்கும் நீதி.
வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று சம்பாதித்து தனது அம்மாவையும், தங்கையையும் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கும் டிரைவரான கிருஷ்ணா சென்னையில் இருந்து ஊருக்கு செல்வதற்காக ரயில்வே ஸ்டேஷன் வருகிறார். வரும் வழியில் தங்கைக்காக புதிய செல்போன் வாங்க நினைப்பவர் அப்போதுதான் தனது பர்ஸ் களவாடப்பட்டதை அறிகிறார்.
உடனேயே ஊருக்குப் போக நினைத்தவர் காசில்லாமல் அன்றைய இரவில் ஒரு பத்திரிகையாளருக்கு டிரைவர் வேலை செய்கிறார். அந்த பத்திரிகையாளர் ஒரு அமைச்சரின் வீட்டிற்கு செல்கிறார்.
ஒரு காதல் விஷயத்திற்காக தனது சொந்த சாதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இன்னொரு சாதி பிரிவினரிடையே மோதலை உருவாக்கி மாவட்டம் முழுவதும் கலவரத்தை உண்டாக்கியிருக்கிறார் அமைச்சர் ஆர்.என்.ஆர்.மனோகர்.
இதன் உண்மைத்தனம் முழுவதையும் ரிக்கார்டு செய்து வைத்திருக்கும் பத்திரிகையாளர் சரண் இதனை மக்கள் முன் கொண்டு செல்லப் போவதாகச் சொல்ல… அமைச்சரின் உத்தரவினால் சரண் சுடப்படுகிறார். அவரைக் காப்பாற்ற வேண்டி கிருஷ்ணா அதே டாக்ஸியில் ரோடு, ரோடாக அலைகிறார்.
இன்னொரு பக்கம் திருட்டுத் தொழில் செய்யும் விதார்த் ஒரு வீட்டுக்கு திருடப் போக அங்கே மணப்பெண் கோலத்தில் கட்டிப் போடப்பட்ட நிலையில் இருக்கும் தன்ஷிகாவை காப்பாற்றி அழைத்து வருகிறார். அதோடு அந்த வீட்டில் இருக்கும் அனைத்து நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு வருகிறார்கள். வரும் வழியில் தன்ஷிகா தப்பிக்கப் பார்க்க.. விதார்த் அவரை விடாமல் துரத்த.. இவர்களிடையே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் குறுக்கே வர.. இவர்கள் கதை இப்படிச் செல்கிறது.
தங்களது ‘செல்ல குழந்தை’யை தேடி சாரா என்னும் சிறுமியும், அவரது கண் தெரியாத அப்பாவான வெங்கட் பிரபுவும் அந்த அர்த்த ராத்திரியில் தேடியலைகிறார்கள். இந்தத் தேடுதலில் திடீரென்று சாராவும் காணாமல் போக வெங்கட் பிரபு இவர்கள் இருவரையும் தேடியலைகிறார்.
மிகப் பெரும் கோடீஸ்வரக் குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசான ராகுல் பாஸ்கரன் தனது பிறந்த நாளுக்கு பார்ட்டி கொடுப்பதற்காக தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு வந்திருக்கிறான். வந்த இடத்தில் அவன் கண்ணில்படும் எரிக்காவை படுக்கைக்கு அழைக்கிறான்.
தன்னுடன் வெளியில் ஆறு மணி நேரம் டிராவல் செய்து தன்னை மனரீதியாக கவர்ந்தால் தான் ‘அதற்கு’ சம்மதிப்பதாக எரிக்கா சொல்ல.. இதற்காகவே எரிக்காவை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வருகிறான் ராகுல்.
இந்த நான்கு கதைகளின் முடிவுகள்தான் இந்தப் பரபரப்பான திரைக்கதையில் அமைத்திருக்கும் இத்திரைப்படம்.
நேர்த்தியான திரைக்கதைதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம். ஒவ்வொரு கதைக்கும் ஒரு வலுவான, அழுத்தமான கதையினைக் கொடுத்து அதற்கேற்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுகளுடன் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஒவ்வொரு கதையின் மாந்தர்களையும் கிளைமாக்ஸில் இணைத்திருக்கும் காட்சிகள்தான் படத்தின் பிற்பாதியின் பேயோட்டத்திற்கு காரணம்.
கிருஷ்ணாவின் காணாமல் போன பர்ஸ் கடைசியில் இருக்குமிடம் தெரிவதும்.. ராகுலின் பர்ஸை எரிக்கா திருப்பிக் கொடுத்து “உனக்கு வெளில இருக்குற உலகத்தைக் காட்டுறதுக்காகத்தான் இதையெல்லாம் செய்தேன்…” என்று சொல்லிவிட்டுப் போவதும், தனது அண்ணனின் வருகைக்காக காத்திருக்கும் தங்கையிடம் “அண்ணன் வருவாம்மா” என்று விதார்த் சொல்வதும்.. போலீஸிடமிருந்து தப்பிக்கப் போன இடத்தில் பார்க்கும் சாராவை கிருஷ்ணா பத்திரமாக அழைத்து வர… அவர் வெங்கட் பிரபுவிடம் சேருமிடமும் போலீஸ் மூலமாக இவர்கள் இணைகின்ற காட்சியும் மிக, மிக யதார்த்தமான காட்சிகள்..!
படத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்கள் இன்றைய தமிழகத்தின் அரசியல் நிலைமையை பிரதிபலிக்கின்றன. 3 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய தர்மபுரி இளவரசன் – திவ்யா காதல் வாழ்க்கையையும், அது தொடர்பான கலவரங்களையும் நினைவுபடுத்துகிறது. அது தொடர்பான அரசியல் சம்பவங்களை தைரியமாக படைப்பாக்கம் செய்திருக்கும் இயக்குநர் மீரா கதிரனுக்கு ஒரு பொக்கே பார்சல்..!
ஈழத்திற்காய் உயிர் நீத்து தமிழகத்தில் ஒரு பெரும் பிரளயத்தையே உண்டாக்கிய முத்துக்குமாரின் பெயரையே கிருஷ்ணாவுக்கு வைத்து அவருடைய இறப்பையும் ஒரு பொதுநலனுக்காக உயிர்விடும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பதும் இயக்குநரின் சமூக நல நோக்குடன் இருக்கும் படைப்பாற்றலுக்கு உதாரணமாக இருக்கிறது.
எதிர்பாராமல் தாங்கள் தேடி வந்த ‘செல்லம்’ கிடைத்ததும் வீடு திரும்பும் வெங்கட் பிரபுவிடம் “எந்த இழப்பும் நிரந்தரமானதில்லை” என்று வ.ஜெ.செ.ஜெயபாலன் ஈழத்து தமிழில் சொல்வதும் அனைத்து ஈழத்து சொந்தங்களுக்கும் சொல்வது போலத்தான் தெரிகிறது.
கிருஷ்ணா யதார்த்தமாக நடித்திருக்கிறார். அவருக்கும், அபிநயாவுக்கும் இடையேயான பேச்சில் தென்படும் சினேகமும், நட்பும் பட்டென்று உதவியாய் அவருக்கு கை நீட்டும்வகையில் இருப்பதும் அந்தக் காட்சிகளில் கிருஷ்ணா அந்த வயதுக்கேற்ற நடிப்பைக் காட்டியிருக்கிறார். பார்வையாளர்களை ஒரு நிமிடம் ‘ஐயோ’ என்று சொல்ல வைத்திருக்கிறது இவருடைய முடிவு.
சீரியஸ் கதையாகவே போகிறதே என்கிற பிரச்சினைக்கு முடிவு கட்டும் விதமாக இடையிடையே வரும் விதார்த்-தன்ஷிகா ஜோடியின் திருட்டுப் பிரச்சினையும் காமெடியை இயல்பாகவே கொண்டு வந்திருக்கிறது. இந்த இரண்டு ஜோடிகளின் பிரச்சினையையும், இது கடைசியாக காதலில் கொண்டு போய் முடியும்வரையிலும் இவர்களின் நடிப்பை ரசிக்கவே முடிகிறது. தன்ஷிகாவின் அந்த அலட்சியமான குரலும் அவருடைய நடிப்புக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் என்றே சொல்லலாம்.
இன்னொரு பக்கம் தங்களது ‘செல்ல’த்தைத் தேடியலையும் வெங்கட் பிரபுவும், அவரது மகள் சாராவும் ஒரு அனுதாபத்தை உண்டாக்குகிறார்கள். அந்தச் ‘செல்லம்’ எது என்பதை அறிந்த பின்பும் லேசான கோபம்கூட வராத அளவுக்கு குழந்தையும், வெங்கட் பிரபுவும் தேர்ந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.
தனது பெயரான ‘விக்ரம் விஸ்வநாத்’ என்பதை நொடிக்கு ஒரு தடவை சொல்லி டாம்பீகம் பேசும் ராகுல் பாஸ்கரன் கடைசியாக ஒரு ரூபாய்கூட இல்லாமல் திண்டாடுவதெல்லாம் அட்டகாசமான திரைக்கதை. பணத்தைப் பற்றியே கவலைப்படாதவன் அது இருந்தும் ஒரு தருணத்தில் எதற்கும் பயன்படாமல் இருக்கும் காலத்தை உணர்ந்தால் என்ன ஆவான் என்பதை இந்தக் கேரக்டர் மூலமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
இவருக்கு வாழ்க்கையை உணர வைக்கும்விதமாய் நடித்திருக்கும் எரிக்காவின் கேரக்டர் ஸ்கெட்ச்சும், அவருடைய நடிப்பும் எளிமை. கடைசியாய் சண்டை வருமோ என்று நினைக்குமிடத்தில் உண்மை புரிந்து உணர்வுப்பூர்வமாய் ராகுல் அமைதியாவது யதார்த்தான காட்சி.
சுதா சந்திரன், அமைச்சராக ஆர்.என்.ஆர்.மனோகர், துணை கமிஷனராக நாகபாபு என்று இன்னொரு கூட்டணியும் பரபரப்பாக நடித்துள்ளது. சரணின் டேப்லட்டை பாஸ்வேர்டு இல்லாமல் திறக்க முடியாமல் தவித்த நிலையில் ‘செல்லம்’ அதை தனது நாவால் பட்டென்று திறப்பதும், டேப்லட்டில் இருக்கும் வீடியோ விவகாரங்களை வைத்து அமைச்சர், துணை கமிஷனர் அனைவரும் கைதாவதும் மட்டும்தான் திரைக்கதையின் வேகத்தில் இருக்கும் சில குறைகள்.
இது போன்ற திரைக்கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்திற்கு, பாடல்கள் தேவையே இல்லை. இதில் டி.ராஜேந்தரின் ஆடலும், பாடலும் திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. அது இல்லாமல் இருந்திருந்தாலும் படம் நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் இந்தப் பாடலும், ஆடலும் ஏ ஒன் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் இன்னொரு நாயகனாகவே வலம் வந்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் விஜய் மில்டனும், ஆர்.வி.சரணும். படம் முழுக்கவே இரவு நேரக் காட்சிகள்தான் என்பதால் கலர் டோன்களை மாற்றாமலேயே இருக்கின்ற ஒளியிலேயே படத்தை மிக அழகாக பதிவாக்கியிருக்கிறார்கள்.
சத்யன் மகாலிங்கத்தின் இசையில்  ‘பப்பரப்ப’ பாடலும் ‘ஆழி மலை மேல’ பாடலும், இந்தப் பாடல்களை படமாக்கியவிதமும் சிம்ப்ளி சூப்பர்ப்.
படத்தின் முற்பாதி இந்தக் கதைகளையும், கதையின் மாந்தர்களையும் நமக்குள் புகுத்துவதற்கான திரைக்கதை என்பதால் கொஞ்சம் நீளமானதாகவே தோன்றியது. ஆனால் படத்தின் பிற்பாதி ஜெட்வேகத்தில் சென்று முடிகிறது..!
“ஒருவருக்கு நாம் நல்லது, கெட்டது இரண்டுமே செய்யாதவரைதான் அவர் நமக்கு அந்நியமானவர்.  இரண்டில் ஏதேனும் ஒன்றை நாம் அவருக்கு செய்துவிட்டால் அவர் நமக்கு வேண்டியவராகி விடுவார்..” என்பதைத்தான் இந்தப் படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
யாரோ சிலர்.. நமக்கு அந்நியமானவர்கள்தானே என்றெல்லாம் ஒதுங்கிப் போக முடியாத அளவுக்கு சிலருக்கு ஒரு நாளில் சக மனிதர்களோடு ஏதாவது ஒரு வகையில் ஒரு பந்தம் ஏற்பட்டுவிடும். அதுவெல்லாம் மனித நேயத்தை வளர்க்கவும், அது தெரியாதவர்களுக்கு புரிய வைப்பதற்காகவும்தான்.
இந்த எளிய நீதிக் கதையை சஸ்பென்ஸ், திரில்லர் டைப் கதையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன். இந்த நற்செயலுக்காக அவரை பெரிதும் பாராட்டுகிறோம்..!
மிகப் பெரிய குறைகளோ, விதிமீறல்களோ இல்லாமல் ஒரு நேர்த்தியான படைப்பு என்று சொல்லும் அளவுக்கு மிக நேர்மையாக இந்தப் படத்தினை பதிவாக்கம் செய்திருக்கிறார் இயக்குநர்.
விழித்திரு – அவசியம் பாருங்கள் மக்களே..!

0 comments: