இப்படை வெல்லும் - சினிமா விமர்சனம்

08-11-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை லைகா புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் தயாரித்துள்ளார்.
படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும்  ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் கெளரவ், ரவி மரியா, ஸ்ரீமன், மலேசியா ஹரிதாஸ், ரோகிணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஸ்டில்ஸ் – ஆனந்த், உடை வடிவமைப்பு – ஜெனிபர் ராஜ், ஒப்பனை – ஹரிநாத், விளம்பர வடிவமைப்பு – மணிகண்டன், மக்கள் தொடர்பு – நிகில், ஒலி கலப்பு – கண்ணன் கன்பத், ஒலி வடிவமைப்பு – சச்சின், ஹரிஹர சுதன், கிராபிக்ஸ் – ஹரிஹர சுதன், நடனம் – பிருந்தா, பாடல்கள் – அருண்ராஜா காமராஜ், மதன் கார்க்கி, இணை தயாரிப்பு – எஸ்.பிரேம், கலை இயக்கம் – விதேஷ், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், ஒளிப்பதிவு – ரிச்சர்டு எம்.நாதன், இசை – டி.இமான், எழுத்து, இயக்கம் – கெளரவ் நாராயணன், தயாரிப்பு – லைகா புரொடெக்சன்ஸ்.

‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களை இயக்கிய கெளரவ் நாராயணன் எழுதி இயக்கி இருக்கும் மூன்றாவது படம் இது.
 உத்திரப்பிரதேசத்தில் மிகவும் பாதுகாப்பான சிறையில் இருக்கிறான் பயங்கரவாதி சோட்டா என்னும் டேனியல் பாலாஜி. இந்தியாவின் பல இடங்களில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன் என்பதால், மிக பாதுகாப்பாக அவனை அங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள்.
வெளியில் இருந்து கிடைக்கும் சில உதவிகளோடு சிறையில் இருந்து தப்பிக்க நினைக்கிறான் சோட்டா. அதன்படி சமையலறையில் வெடிகுண்டுகளை பொருத்தி வெடிக்க வைக்கிறான். அந்தக் குண்டு வெடிப்பில் காயம்பட்ட கையோடு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் தப்பிக்கிறான் சோட்டா.
அவனுடைய அடுத்த டார்கெட்டை உடனேயே ஆரம்பிக்கிறான். நாக்பூர் மற்றும் ஹைதராபாத்தில் குண்டு வெடிக்க ஏற்பாடு செய்கிறான். நாக்பூர் செல்லும் ரயிலில் அவன் வைக்கும் குண்டு வெடிக்காமல் போனாலும், ஹைதராபாத்திற்கு செல்லும் ஒரு லாரியில் இருந்த குண்டு வெடித்ததில் மிகப் பெரிய சேதம் ஏற்படுகிறது. இதனை செய்தது சோட்டாதான் என்பதையறியும் மத்திய புலனாய்வு துறை அனைத்து மாநில அரசுகளையும் அலர்ட் செய்கிறது. இதற்கிடையில் சோட்டா தனது அடுத்த டார்கெட்டாக சென்னையைத் தேர்ந்தெடுக்கிறான்.
தன் கணவர் பணியில் இருந்தபோதே இறந்ததால் கருணையின் அடிப்படையில் வேலை கேட்கிறார் மனைவி ராதிகா. அதன்படி போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்து தனது மகன், மகள்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார் ராதிகா.
மகன் உதயநிதி ஸ்டாலின் இப்போது கம்ப்யூட்டர் என்ஜீனியர். ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் மாதம் 75000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தவர். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நிறுவனத்தின் ஆட் குறைப்புத் திட்டத்தினால் வேலையை இழந்தவர்.
ஆனால் தனக்கு வேலை இழந்த விஷயத்தை தனது குடும்பத்தாரிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார் உதயநிதி. இந்த நேரத்தில் சொந்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் ராதிகா. இந்தப் புதிய வீட்டுக்காக மாதம் 65,000 ரூபாய் தவணைத் தொகையையும் கட்டி வருகிறார் உதயநிதி.
இவருக்குள்ளும் ஒரு காதல். காதலி பார்கவி என்னும் மஞ்சிமா மோகன். இவருடைய அண்ணனான தீனா செபாஸ்டியன் போலீஸில் உதவி கமிஷனர். இந்தக் காதல் போலீஸ் அண்ணனுக்கு பிடிக்காமல் போகிறது. இதனால் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்கள். இதற்காக நவம்பர் 15-ம் தேதியை தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள் காதலர்கள்.
தன்னுடைய கர்ப்பிணி மனைவியை ஊரில் விட்டுவிட்டு சென்னையில் டப்பிங் பேசும் கலைஞராக வாழ்ந்து வருகிறார் சூரி. மனைவியை பார்க்க நவம்பர் 15-ம் தேதி ஊருக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார்.
நவம்பர் 14-ம் தேதி இரவில் ஹைதராபாத்தில் இருந்து தப்பிக்கும் டேனியல் பாலாஜி சாலை மார்க்கமாக சென்னைக்குள் ஊடுருவ நினைக்கிறார். வழியில் டூவிலரில் வரும் சூரியிடம் லிப்ட் கேட்டு ஏறிக் கொள்கிறார். ஆனால் வழியில் போலீஸ் சோதனை செய்வதை பார்த்துவிட்டு சூரியிடம்கூட சொல்லிக் கொள்ளாமல் தப்பிக்கிறார் டேனியல்.
தனது நண்பனின் காரை ஓசி வாங்கிக் கொண்டு காலையில் நடக்கவிருக்கும் கல்யாணத்துக்காக சந்தோஷமாக வரும் உதயநிதியின் காரில் அடிபட்டு வீழ்கிறார் டேனியல். யாரும் பார்க்கவில்லை என்றாலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் டேனியலை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்கிறார் உதயநிதி.
ஆனால் மருத்துவ சிகிச்சை கட்டணாக நான்காயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என்றவுடன், கையில் காசில்லாமல் மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்பாகுகிறார் உதயநிதி. அதேபோல் டேனியலும் யாருடனும் சொல்லாமல் மருத்துவமனையில் இருந்து தப்பிக்கிறார்.
அதே நேரம் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் டேனியலின் புகைப்படத்தைப் பார்த்து பயப்படும் மருத்துவர் போலீஸுக்கு தகவல் சொல்கிறார். அவர்கள் வந்து பார்த்துவிட்டு சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த தகவல்களை வைத்து விசாரிக்கிறார்கள்.
உதயநிதி வந்த காரின் நம்பர், சூரியின் டூவீலரின் நம்பர் இவற்றை வைத்து சூரியையும், உதயநிதியையும் பயங்கரவாதிகளுக்கு துணை போனவர்கள் என்றெண்ணி பிடிக்கிறார்கள்.
அதே நேரம் அங்கே பதிவாளர் அலுவலகத்தில் மஞ்சிமா மோகன் மாலையும், கையுமாக காத்திருக்க.. மோப்பம் பிடித்த மஞ்சிமாவின் அண்ணன் ஆர்.கே.சுரேஷ் அங்கே வந்து தனது தங்கையை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
உதயநிதியையும், சூரியையும் கமிஷனர் அலுவலகத்திற்குக் கொண்டு வரும் வழியில் வாகன விபத்து ஏற்பட இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கேதான் உதயநிதியை பார்த்து அதிர்ச்சியாகிறார் ஆர்.கே.சுரேஷ்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைக்கும் சுரேஷ், உதயநிதியையும், சூரியையும் என்கவுண்ட்டரில் கொலை செய்ய திட்டமிடுகிறார். இதையறியும் உதயநிதி அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார்.
அதே நேரம் மருத்துவமனையில் இருந்து தப்பித்த டேனியல் சென்னையில் நான்கு இடங்களில் குண்டு வைக்கத் திட்டமிடுகிறார். இன்னொரு பக்கம் உதயநிதியும், சூரியும் தப்பிக்க.. இவர்கள்தான் பயங்கரவாதிகளுக்கு துணை போகிறவர்கள் என்றெண்ணி போலீஸ் இவர்களைத் துரத்துகிறது. இனி நடப்பது என்ன என்பதுதான் படத்தின் திரைக்கதை.
முதல் இரண்டு படங்களையும் சஸ்பென்ஸ், திரில்லராக.. சுவையான திரைக்கதையிலும், அழுத்தமான இயக்கத்தினாலும் வெற்றிப் படங்களாக்கியவர் இயக்குநர் கெளரவ் நாராயணன் என்பதால், நிறைய எதிர்பார்ப்புடன் இந்தப் படம் திரைக்கு வந்திருக்கிறது.
உதயநிதியின் நிஜ கேரக்டருக்கு பொருத்தமான வேடம்தான். இது போன்ற மெல்லிய ஹீரோத்தனம்தான் அவருக்குப் பொருந்தும். இந்தப் படத்தில் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் ஒருவித அலாதியானது. எதிரிகளிடமிருந்து தப்பிக்க நினைக்கும்போது, இவர் பயன்படுத்தும் சமயோசித புத்திதான் இவரது மிகப் பெரிய பலம்.
இந்த புத்தியைப் பயன்படுத்தி கந்து வட்டிக் கும்பலிடமிருந்து தப்பிப்பதும், டேனியல் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதும், மஞ்சிமாவை கிண்டல் செய்த சர்வரை பழிக்குப் பழி வாங்குவதும் சுவாரஸ்யமானது. தனக்கு என்ன வருமோ..? எப்படி வருமோ..? அதை மட்டுமே நடிப்பில் காட்டியிருக்கிறார் உதயநிதி. இது போதுமே இது போன்ற கமர்ஷியல் படங்களுக்கு..!?
மஞ்சிமா மோகன் படு பாந்தமான குடும்பத் தோற்றத்தில்கூட அட இவ்வளவு அழகா என்று கேட்க வைத்திருக்கிறார். ஆடைகளைக் குறைக்காமலேயே கிளாமராக இருப்பது எப்படி என்பதை மஞ்சிமாவை பார்த்துகூட தெரிந்து கொள்ளலாம். பாடல் காட்சிகளிலும், சில குளோஸப்புகளிலும் மஞ்சிமாவின் அழகு, சூரியின் வார்த்தைகளில் ‘அடி சண்டாளி’ என்றுதான் சொல்ல வைத்திருக்கிறது. உதயநிதிக்கும் சேர்த்து வைத்து நடித்திருக்கிறார் மஞ்சிமா.
சூரியின் நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கொஞ்சம், கொஞ்சம் இந்தப் படத்தில் சிரிக்க வைத்திருக்கிறார். படத்தின் மீது சலிப்பு ஏற்படாதவண்ணம் திரைக்கதையை நகர்த்த அண்ணன் சூரிதான் பெரிதும் உதவியிருக்கிறார். ஆனாலும் ஒரு நகைச்சுவையைக் கொண்டு வருவதற்கு ‘உச்சா’தான் கிடைத்ததா இயக்குநரே..?!
சோட்டாவாக நடித்திருக்கும் டேனியலுக்கு மிகப் பெரிய பாராட்டு. வசன உச்சரிப்பிலும், நடிப்பிலும் வில்லனுக்கே உரித்தான வித்தையைக் காட்டியிருக்கிறார். தான் பிடிபட்டவுடன் சென்னையில் குண்டு வெடிக்கப் போகிறது என்பதை போலீஸாரிடம் சொல்லும் ஸ்டைலிலேயே தான் ஒரு அகாசய வில்லன் என்பதை நிரூபித்திருக்கிறார்.
சூரியின் மனைவியாக நடித்திருக்கும் ரோகிணி உண்மையிலேயே தான் ஒரு சிறந்த நடிகைதான் என்பதை நிரூபித்திருக்கிறார். கர்ப்பிணிகளுக்கே உரித்தான மெல்லிய சுமை தாங்கிய வசன உச்சரிப்புடனும், தளர்வுடனும் அவருடைய தோற்றமும், நடிப்பும் கச்சிதமாக அவருக்குப் பொருந்தியுள்ளது. பாராட்டுக்கள்..!
ராதிகா எப்போதும்போல் அசால்ட்டு நடிப்பை காண்பித்திருக்கிறார். தனது மகனை தான் எந்தவிதத்திலும் தவறானவனாக வளர்க்கவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் காட்சியில் ராதிகாவை இந்தப் படத்திற்கு எதற்காக இயக்குநர் தேர்வு செய்தார் என்பது தானாகவே தெரிகிறது.
கந்துவட்டி முருகேஷாக ரவி மரியாவும் அவரது கூட்டாளிகளும் மூன்று காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
படத்தின் துவக்கத்தில் டேனியல் சிறையில் இருந்து தப்பித்து வெடிகுண்டுகள் வெடிக்கும்வரையிலும் பரபரப்பாக நகரும் திரைக்கதை, அதன் பின்புதான் கொஞ்சம் மந்தமாகிறது. பின்பு மீண்டும் டேனியல் நுழைந்தவுடன் சீரியஸாக போகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில் காமெடியாகவே கதையை நகர்த்தியது ஏன் இயக்குநரே..?
நாடே பதைபதைத்துப் போயிருக்கும் அந்த நேரத்தில் அந்த ‘பாம்’ காமெடியெல்லாம் தேவைதானா..? அதோடு மிகப் பெரிய லாஜிக் ஓட்டையாக மருத்துவமனையில் இப்படியொரு அலட்சியமான பாதுகாப்பையா போட்டு வைத்திருப்பார்கள்..? அவர்கள் மிகப் பெரிய பயங்கரவாதிகளுக்கு துணையானவர்கள் இல்லையா..?
உதயநிதி, சூரி தப்பித்துப் போக அவர்களை விரட்டிப் பிடித்து சுட்டுக் கொல்ல நினைக்கும் ஆர்.கே.சுரேஷின் நடவடிக்கைகள் எல்லாமே காமெடிதான். போலீஸ் டிபார்ட்மெண்ட் மீதான பார்வையை கேலிக்கூத்தாகுகிறது இந்தத் திரைக்கதை.
டேனியலை ராமானுஜம் அபார்ட்மெண்ட்டுக்குள் கண்டுபிடிக்கும் உதயநிதி அண்ட் கோ-வை ஆர்.கே.சுரேஷ் கண்டுபிடிக்கவே முயலவில்லை என்பது இன்னொரு காமெடி.
இன்னொரு பக்கம் அவ்வளவு பெரிய சந்தோஷ் மருத்துவமனையின் தலைமை மருத்துவரான எம்.எஸ்.பாஸ்கரை அவ்வளவு காமெடியாக காட்டியிருக்க தேவையில்லை. அதேபோல் சூரியின் மெமரி லாஸ் விஷயத்தையும் சின்னப்புள்ளத்தனமாக உடனேயே திரும்பக் கிடைத்துவிட்டது போலவும் கொண்டு வந்திருக்க வேண்டாம். சீரியஸாக வந்திருக்க வேண்டிய விஷயம் இது.. ஆனால் காமெடியாக்கிவிட்டதால் அதன் மீதான நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது.
அதே சமயம் உதயநிதியின் சமயோசித புத்தியின் செயல்பாட்டால் ஜிமெயிலில் இருக்கும் டிராப்ட்டை திருத்தி குண்டு வைக்கும் இடத்தை ஒரே இடமாக மாற்றி, ஒரே பேருந்தாகவும் மாற்றி அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் குண்டு கட்டாக பிடிக்கும் காட்சி இயக்குநரின் திரைக்கதை திறமைக்கு ஒரு சான்று. பாராட்டுக்கள் ஸார்..!
ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் ஓமன் நாட்டின் அழகு பளிச்சிடுகிறது. கந்து வட்டி கும்பலிடமிருந்து தப்பிக்க உதயநிதி ஓடும் ஓட்டமும், உதயநிதி, சூரியின் ஓட்டத்தையும் படமாக்கியவிதம் அருமை. கேமிராமேன் எப்பாடுபட்டாரோ தெரியவில்லை. ஆனால் நிரம்பவே நிறைய விழுப்புண்களோடுதான் இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஒளிப்பதிவாளருக்கு நமது வாழ்த்துகள்.
டி.இமானின் இசையில் பாடல்கள் ஒலித்தன. ஆனால் தியேட்டரைவிட்டு வெளியில் வந்தவுடன் வழக்கம்போல் மறந்துவிட்டன. ஆனால் பாடல் காட்சிகள் அப்படியே மனதில் நிலைத்திருக்கின்றன. படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீனின் கத்திரி தாக்குதலில் இன்னும் சில காட்சிகளை நறுக்கியிருந்தால்கூட தேவலைதான்.
ஒரு கமர்ஷியல் படத்துக்குண்டான அனைத்து அம்சங்களுடனும், பரபர திரைக்கதையிலும், சிறப்பான நடிகர்களை கொண்டு, அழுத்தமான இயக்கத்திலும் “பார்க்கலாம்பா” என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படத்தைக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் கெளரவ் நாராயணன்.
தனது மூன்றாவது படத்திலும் தொடர்ச்சியான வெற்றியையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்கும் இயக்குநர் கெளரவ் நாராயணனுக்கு நமது வாழ்த்துகள்..!

0 comments: