தொண்டன் - சினிமா விமர்சனம்

27-05-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘அப்பா’ படத்தை தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் படம் ‘தொண்டன்’.
இதில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். அவரது தங்கை வேடத்தில் அர்த்தனா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.  மேலும் விக்ராந்த், சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, ஞானசம்பந்தம், வேல ராம்மூர்த்தி, நமோ நாராயணன், அனில் முரளி, திலீபன், பிச்சைக்காரன் மூர்த்தி, நசாத், பாபூஸ், செளந்தர்ராஜன், படவா கோபி, நித்யா, ஈரோடு கோபால், பல்லவா ராஜா, முருகன், தேவி, கெளரி என்று பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – என்.கே.ஏகாம்பரம், ரிச்சர்டு எம்.நாதன், படத் தொகுப்பு – ஏ.எல்.ரமேஷ், இசை – ஜஸ்டின் பிரபாகரன், கலை இயக்கம் – ஜாக்கி, நடனம் – ஜானி, பாடல்கள் – யுகபாரதி, விவேக், சண்டை பயிற்சி – விஜய் ஜாகுவார், தயாரிப்பு நிர்வாகம் – ஏ.எஸ்.ரவிச்சந்திரன், உடைகள் – நட்ராஜ், ஒப்பனை – சந்துரு, ஸ்டில்ஸ் – ஏ.ஆர்.முருகன், பி.ஆர்.ஓ. – நிகில், D.T.S. மிக்ஸிங் – டி.உதயகுமார், 4 பிரேம்ஸ், டிஸைன்ஸ் – சேவியோ, எழுத்து, இயக்கம் – பி.சமுத்திரக்கனி.
‘நாடோடிகள்’, ‘சாட்டை’, ‘நிமிர்ந்து நில்’, ‘அப்பா’ என்று தனது படங்களில் தொடர்ச்சியாக சமூகப் பிரச்சினைகளை பற்றியே பேசி வரும் சமுத்திரக்கனி, இந்தப் படத்தில் அத்தனைக்கும் முத்தாய்ப்பாக அனைத்தும் கலந்த ஒரு சமூகக் கலவையை கொடுத்திருக்கிறார்.

ராணுவத்தில் பணியாற்றிவிட்டு சமூக சேவையாற்ற வேண்டுமே என்கிற நோக்கத்தில் இப்போது ஆம்புலன்ஸ் வேனை இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. இவருக்கு உதவியாளராக இருக்கிறார் கஞ்சா கருப்பு.
ஒரு நாள் மகாத்மா காந்தி சிலையருகே நடந்த கொலை முயற்சியில் சிக்கி உயிருக்குப் போராடி வரும் பாபூஸை தனது ஆம்புலன்ஸ் வேனில் மிக வேகமாக வந்து தூக்கிச் செல்கிறார் கனி.
ஆனால் பாபூஸை கொலை செய்ய முயற்சித்த அந்த மாவட்ட மந்திரியின் மகனான நமோ நாராயணன் தனது அடியாட்களை ஏவி ஆம்புலன்ஸை மறிக்கச் சொல்கிறார். ஆனால் கனி தந்திரமாகச் செயல்பட்டு பாபூஸை குறித்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்ப்பித்து அவரது உயிரைக் காப்பாற்றுகிறார். இதனால் நமோ நாராயணன் கனி மீது ஆத்திரப்படுகிறார்.
இதற்கிடையில் கனியின் நெருங்கிய நண்பனான விக்ராந்த், கனியின் தங்கை அர்த்தனாவை பல இடங்களில் சந்தித்து ஈவ் டீஸிங் செய்கிறார். இதற்கு மந்திரியின் இன்னொரு மகனான செளந்தர்ராஜன் உடந்தையாக இருக்கிறார். இதேபோல் பேருந்தில் இந்த சேட்டையை விக்ராந்தும், செளந்தர்ராஜனும் செய்ய.. கோபமடையும் அர்த்தனாவின் தோழி செளந்தர்ராஜனை செருப்பால் அடித்துவிட.. அவமானத்தில் குன்றிப் போகிறார் செளந்தர்ராஜன்.
விக்ராந்துடன் பேசி பேசி அவரது மனதை மாற்றி அவரையும் தன்னைப் போன்ற ஆம்புலன்ஸ் வேன் இயக்குநராக்க பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார் கனி. இந்த சிகிச்சையினால் மனம் மாறும் விக்ராந்தும் கனியை போலவே ஆம்புலன்ஸ் வேனை இயக்கும் வேலையில் சேர்கிறார்.
கனி, தனது வீட்டுக்கருகிலேயே இருக்கும் பள்ளி ஆசிரியையான சுனைனாவை காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார். நல்லவனாகி இப்போது பொறுப்பான வேலைக்குப் போகும் விக்ராந்த், கனியின் தங்கை அர்த்தனாவை காதலிக்கிறார்.
இந்த நேரத்தில் செளந்தர்ராஜன் திடீரென்று மகளிர் கல்லூரிக்குள் நுழைந்து அர்த்தனாவின் தோழியை தாக்குகிறான். கோபம் கொண்ட மாணவிகள் பதிலுக்கு செளந்தர்ராஜனை தாக்கியதில் அவர் மரணமடைகிறார். இதனால் கோபமடையும் நமோ நாராயணன் தனது தம்பியின் மரணத்துக்கு கனிதான் காரணம் என்று சொல்லி அவரை மருத்துவமனை வாசலில் வைத்து தாக்குகிறார். இரு தரப்பினருக்கும் இடையில் பகை வளர்கிறது.
எப்படியாவது சமுத்திரக்கனியை பழி வாங்கத் துடிக்கிறார் மந்திரியின் மகனான நமோ நாராயணன். இதற்கு அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரும் உடந்தையாக இருக்கிறார். செளந்தர்ராஜன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டாம் என்று காவல்துறை உயர் அதிகாரி, இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட கனியை எதுவும் செய்ய முடியாமல் போகிறது. இதனால் குறுக்கு வழியில் கனியைத் தீர்த்துக் கட்ட கேஸ் சிலிண்டரை வைத்து வெடிக்க வைக்கிறார் நமோ நாராயணன்.
இந்தச் சதிச் செயலில் சிக்கி கனியின் தந்தை தனது இரண்டு காதுகளிலும் கேட்கும் திறனை இழக்கிறார். கனியின் மனைவி சுனைனா காப்பாற்றப்பட்டாலும், அவரது கரு கலைந்து போகிறது. இதற்கெல்லாம் காரணம் நமோ நாராயணன் என்று தெரிந்தாலும் கனியின் இயல்பான குணம் அவரை தடுத்துவிட.. நமோ நாராயணனை வீடு தேடி வந்து எச்சரிக்கை மட்டுமே செய்துவிட்டு வருகிறார் கனி.
இதை இப்படியேவிடக் கூடாது என்று நினைத்து நமோ நாராயணன் காய் நகர்த்த.. நமோ நாராயணனை வேறு விதமாக பழி வாங்க கனியும் துடிக்கிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் படமே..!
இந்தப் படத்தில் கேரக்டர்களுக்கு வைத்திருக்கும் பெயர்களே படத்திற்கான குறியீடுகளாக இருக்கின்றன. சமுத்திரக்கனியின் பெயர் மகா விஷ்ணு. படத்தில் சமுத்திரக்கனி ஆம்புலன்ஸ் டிரைவராக இருப்பதால் காக்கும் கடவுளின் பெயரை வைத்திருக்கிறாராம். அவரது தங்கையான அர்த்தனாவின் பெயர் மஹிஷா சூரமர்த்தினியாம். அம்மன் பெயர். ஆம்புலன்ஸில் அட்டெண்டராக வரும் விக்ராந்தின் பெயர் விக்னேஷ். சமுத்திரக்கனியின் காதலி சுனைனாவின் பெயர் பகழமுகி. பெயர்களே படத்தின் வித்தியாசத்தை உணர்த்துகின்றன.
நமது அண்ணன், நமது தம்பி என்கிற அதே எண்ணவோட்டத்துடன்கூடிய நடிப்பையே கனியிடத்தில் பார்க்க முடிகிறது. கொஞ்சம் கூடுதலாக நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதிலும் கனியே ஸ்கோர் செய்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.
ஒரு சமூகப் போராளி என்னும் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதால் அதற்கேற்றவாறு தனது கேரக்டர் ஸ்கெட்ச்சை கொஞ்சமும் சிதைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் கனி. வீட்டில் பொறுப்பான மகனாக பேசும்போதும், ஆம்புலன்ஸ் வேனின் டிரைவராக தனது பணியில் நேர்மையாக இருப்பதுடன், அதையும் கண்ணியமாக பேசி பதிலளிப்பதும்.. விக்ராந்தை தேடிப் பிடித்து அக்கறையுடன் விசாரித்து “என் தங்கச்சியைவிடவும் நீதாண்டா எனக்கு முக்கியம்…” என்று சொல்லி அவரை மனமாற்றம் அடையச் செய்யும் காட்சியிலும் கனியின் நடிப்பு மிகையில்லாதது..!
ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளரிடத்தில் தற்போதைய நாட்டு நிலைமையை எடுத்துரைத்து அவர்கள் செய்து வரும் அனைத்துவித மக்கள் விரோதச் செயல்களையும் பட்டியலிட்டு சொல்லும் காட்சியில், தமிழகத்தின் ஒரே பிரதிநிதியாகவே காட்சியளிக்கிறார் கனி. தமிழகத்தில் இருந்த 87 வகையான மாடுகளின் பெயர்களை உணர்ச்சிபூர்வமாக பேசி கொந்தளிக்கும் காட்சியில் தியேட்டர்களில் கைதட்டல்கள் பறக்கின்றன.
நமோ நாராயணனை வீடு தேடி சென்று அவரை தாக்கி கொலை செய்ய முயற்சித்தும் கடைசி நொடியில் மனதை மாற்றிக் கொண்டு வன்முறையைத் தவிர்க்கும் பொருட்டு எச்சரித்துவிட்டுச் செல்லும் காட்சியிலும் ஒரு சாத்வீக போராளியைக் காண முடிகிறது.. வெல்டன் கனி ஸார்..!
மிக, மிக வித்தியாசமான முறையில் அறிமுகமாகிறார் சுனைனா. ஏன் காதல்.. எதற்கு காதல்.. எப்படி காதல் என்றெல்லாம் சொல்லி நேரத்தை வீணாக்காமல் பட்டென்று காதலைச் சொல்லி கனியை கலவரப்படுத்துகிறார் சுனைனா. ஸ்கிரீனில் அழகோ அழகு. பாடல் காட்சிகளில் மிக அழகு.
கனியின் அப்பாவாக எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி பல இடங்களில் கணீர் குரலில் அழுத்தமாக நடித்திருக்கிறார். சுனைனாவை பெண் கேட்கப் போகுமிடத்தில் அமைதியாய் பேசி, சட்டென்று கோபம் வந்து “தூக்குடா பொண்ணை…” என்று சொல்லிவிட்டு வருமிடத்தில் எல்லாருக்கும் பிடித்தமான அப்பாவாகிவிட்டார்..!
விக்ராந்த் தனது சோகத்தை மறைக்க வெறித்தனமான செயல்களில் ஈடுபட்டவர்.. கனியின் அன்பான, அனுசரணையான பேச்சால் மனம் மாறி நல்லவராக மாறுகிறார். “இன்னைக்கு ஒரு உசிரை காப்பாத்திட்டேண்ணே…” என்று அவர் கனிக்கு போன் செய்து சொல்லும் காட்சியில் ஒரு நெகிழ்ச்சி தென்படுகிறது..! இது போன்று கிடைக்கும் நல்ல வேடங்களில் நடிப்பதுதான் விக்ராந்த் போன்றவர்களுக்கு நல்லது..!
காதல், கோபம், சோகம் எல்லாவற்றையும் அனுபவ நடிகை போல் நடித்திருக்கிறார் புதுமுகமான அர்த்தனா.  கஞ்சா கருப்பா இது என்று கேட்பதுபோல பல காட்சிகளில் டைமிங் சென்ஸ் வசனங்களை அள்ளி வீசியிருக்கிறார் கஞ்சா கருப்பு ஸார்.. நல்ல போலீஸாக வரும் திலீபன் கவனிக்க வைத்திருக்கிறார். ஒரு கெட்ட போலீஸிடம் சிக்கியிருப்பதை உணர்ந்து எல்லா பிரச்சினைகளில் இருந்து நாசூக்காக கழன்று கொள்ளும் டெக்னிக்கோடு அவர் பேசும் பாங்கு அருமை. நடிக்க வைத்திருக்கும் இயக்குநரின் திறமையோடு திலீபனுடைய பங்களிப்பும் அதிகம்தான்..!
சில காட்சிகளே என்றாலும் சூரியும், தம்பி ராமையாவும் வெகுவாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். டைமிங் சென்ஸ் காமெடியில் இருவருமே கில்லிகள். அற்புதமாக நடித்து கலகலப்பை கூட்டியிருக்கிறார்கள்.
இதேபோல் நமோ நாராயணன்.. கெட்டவர் என்பதற்காக தனி கெட்டப்பே இல்லாமல் வெறும் வசனத்திலேயே தனது தந்தை ஞானசம்பந்தனை வைத்து காசு சம்பாதித்து அதில் தனது தாய்க்கும், மனைவிக்கும் தங்க நகைகளை வாங்கிக் கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று இவர் ஆடும் ஆட்டமும்.. முடிவில் இவருக்குக் கிடைக்கும் தண்டனையும் ‘கெட்டவன் வீழ்வான்’ என்னும் நன்னெறிக் கதையை போதிப்பது போலத்தான் இருக்கிறது.
இயக்குநர் சமுத்திரக்கனியின் இதற்கு முந்தைய படங்களைவிடவும் இந்தப் படத்தில் நகைச்சுவைக்கும் அதிக அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். கஞ்சா கருப்புவுடன் கனி பேசும் சில உரையாடல்கள்.. இரவு நேரத்தில் திருடனை தேடி அலையும் காட்சிகள், சுனைனா வீட்டுக்கு பெண் கேட்டு போகும் காட்சி.. வருமான வரித்துறை ரெய்டில் நடக்கும் அட்டகாசங்கள்.. சூரியின் அலட்டல் இல்லாத நடிப்பு.. என்று இந்தப் படத்தில் இழையோடியிருக்கும் நகைச்சுவை காட்சிகளும் படத்திற்கு இன்னொரு பலமாக அமைந்திருக்கின்றன.
மறைமுகமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்களை சேர்த்து வைத்திருந்து, கடைசியில் யாருக்குமே கொடுக்காமல் அவர் போய்ச் சேர்ந்துவிட்ட கதையை சொல்லியிருக்கும் தைரியத்தை மனதாரப் பாராட்டத்தான் வேண்டும்..!
சாத்வீக போராட்டமாக ஒரு பிரச்சினையில் இருந்து தப்பிக்க அதிலிருந்து விலகிவிட வேண்டும். முடியாவிட்டால் அந்தப் பிரச்சினையை திசை திருப்பிவிட வேண்டும் என்கிற அறிவுரை, நாட்டு மக்களுக்கு அவசியம் தெரிய வேண்டிய விஷயம்தான்.
இதனை முன் வைத்து நமோ நாராயணனை லஞ்சம் வாங்கிய கூட்டாளிகளிடமே மாட்டிவிடுவதும்.. போலீஸில் சிக்க வைப்பதும் ஒரு சுவையான திரைக்கதை.
நமோ நாராயணனின் சொத்துக் குவிப்பு பைல்கள் கனியைத் தேடி வரும் கதையெல்லாம் மிக எளிதாக அமைக்கப்பட்ட திரைக்கதைதான் என்றாலும் வேறு வழியில்லை என்பதால் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..!
இப்படி இயக்குநரின் வசதிக்காகவே பாஸிட்டிவ்வான திரைக்கதையாக அமைக்கப்பட்டிருப்பது ஒரு பெரிய குறையாகத் தெரிந்தாலும், இது போன்ற மக்கள் நலனுக்காக எடுக்கப்படும் படங்களில் அது தப்பில்லை என்பதால் நாமும் அதனை மறப்போம்.. மன்னிப்போம்..!
ஏகாம்பரம் மற்றும் ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் நெய்வேலி, கடலூர் மாவட்ட பகுதிகளை அழகு குறையாமல் காண்பித்திருக்கிறார். பாடல் காட்சிகளில்கூட அத்தனை வெயிலிலும் எப்படி துளிகூட அழகு குறையாமல் படமாக்கினார்களோ தெரியவில்லை. அத்தனை ஷாட்டுகளும் அழகு..!
விஜய் ஜாக்குவாரின் சண்டை பயிற்சியில் ஆம்புலன்ஸ் மோதலை மிக விறுவிறுப்பாக படமாக்கியிருக்கிறார். படத் தொகுப்பாளர் ஏ.எல்.ரமேஷின் உதவியால் இடைவேளைக்கு பின்பு மிக இறுக்கமான விதத்தில் ஒரு திரில்லர் சேஸிங் டைப் படமாக மாற்றி அதையும் ரசிக்கும்விதத்தில் காண்பித்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் இரண்டு பாடல்களும் ஓகே ரகம்தான். பாடல் காட்சிகளை வைத்தே கதையை நகர்த்தியிருப்பதால் பாடல்களை தனியே கேட்டுக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
சமுத்திரக்கனியை இனிமேல் ‘மக்கள் தொண்டன்’ என்றும் குறிப்பிடலாம். தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் மக்கள் நலப் பிரச்சினைகளை மட்டுமே முன் வைத்து அவர் செய்து வரும் இந்த சேவை போற்றத்தக்கது. புகழத்தக்கது..!
‘ஒரு சினிமாவினால் என்ன செய்ய முடியும்?’ என்ற  சொத்தை வாதத்தை சொத்தையாக்கும்விதமாக இயக்குநர் சமுத்திரக்கனி போன்றவர்கள் செய்யும் இந்த சமூக சேவைதான், தமிழ்ச் சினிமாவின் பெயரை இன்றைய தலைமுறையிடம் ஆழமாக பதிய வைக்கும்..!
அந்த வகையில் இந்தத் ‘தொண்டன்’ திரைப்படம் நிஜமாகவே ஒரு ‘மக்கள் தொண்டன்’ பற்றிய கதைதான். நாட்டு மக்கள் அனைவரும் அவசியம் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடமும்கூட என்பதை அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறோம்..!

0 comments: