செஞ்சிட்டாளே என் காதல - சினிமா விமர்சனம்

10-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

SB Entertainment சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பாலசுப்ரமணியன் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் எழில் துரை, மதுமிலா, அபிநயா, கயல் வின்சென்ட், ராகவ் உமாசீனிவாசன், வனிதா, மெட்ராஸ் ரமா, திவ்யா, அஜய் ரத்னம், மைம் கோபி, அர்ஜூன்ன், மகாநதி சங்கர், வேலன், ஷம்மி, பூஜா, மோனிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எம்.மனீஷ், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், இசை – எஃப்.ராஜ்பரத், சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், மக்கள் தொடர்பு – யுவராஜ்.

நாயகன் எழில் துரை கல்லூரி மாணவர். வழக்கறிஞரான இவரது தந்தை அஜய் ரத்னம், பெரும்பாலும் டெல்லியிலேயே தங்கியிருந்து சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி வருகிறார். தாய், தங்கை என்று தனது குடும்பத்துடன் சென்னையில் இருக்கிறார் எழில்.
ஒருநாள் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் ஹீரோயின் மதுமிலாவை பார்த்தவுடன் ஹீரோவுக்கு பிடித்துப் போய்விடுகிறது. அந்த மதுமிலா தனது தங்கையின் பள்ளிக் காலத் தோழி என்பதும், அவர் பள்ளியில் படிக்கும்போது நண்பர்களுடன் அவரை விரட்டி விரட்டி சைட் அடித்த ஞாபகமெல்லாம் ஹீரோவுக்குள் வந்துவிட.. மதுமிலாவை காதலிக்கவே துவங்குகிறார். கல்லூரியில் இருவரும் பேசிப் பழகி வரும்வேளையில் ஒரு கட்டத்தில் தனது காதலை ஹீரோயினிடம் சொல்ல அவரும் சம்மதிக்கிறார்.
கல்லூரி முடிந்து வெளியில் வரும் எழில் இன்னமும் சரியான வேலையில் இருக்காமல் தனது ஹீரோயினிடமே காசு வாங்கிக் கொண்டு அவரை தினமும் சந்திப்பதையே தொழிலாக வைத்திருக்கிறார். ஹீரோயினின் தந்தைக்கு காதல் என்றாலே பிடிக்காது என்பதும், காதலியின் அக்கா காதலித்த பையனை கொலை செய்து பிணத்தைக்கூட கைக்கு கிடைக்காமல் பார்த்துக் கொண்டவர் என்கிற தகவலும் ஹீரோவுக்குக் கிடைக்க.. இப்போது அவர் பயப்படுகிறார்.
இந்த நிலையில், மதுமிலாவின் கல்லூரியில் மாணவர் பேரவைக்கு தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு மதுமிலா போட்டியிடுகிறார். இதற்காக தன்னால் முடிந்த அனைத்துவித உதவிகளையும் செய்கிறார் ஹீரோ. மதுமிலாவும் வெற்றி பெறுகிறார்.
ஆனாலும் ஹீரோயினை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த ராகவ்விடமும் பழகுகிறாள் ஹீரோயின். இதனை எதிர்பார்க்காத ஹீரோ கண்டிக்கிறார். ஹீரோ கண்டிப்பதை தன்மானப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளும் ஹீரோயின் காதலுக்கு பிரேக்கப் சொல்கிறார்.
காதலியின் பிரிவு ஹீரோவுக்கு ஒரு உண்மையை உணர்த்த தான் பெரிய ஆளாக வேண்டும் என்கிற நினைப்பில் ஒரு புதிய கால் சென்டர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். அங்கே பணிபுரியும் அபிநயா, எழிலை ஒருதலையாய் காதலிக்கிறார்.
இந்த நேரத்தில் மீண்டும் மதுமிலாவுடன் ஹீரோவுக்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்தச் சோகத்தைத் தாங்க முடியாமல் ஒரு நாள் வீட்டில் இருந்து காணாமல் போகிறார் ஹீரோ. அவரைத் தேடி அவரது அம்மாவும், தங்கையும் அலைகிறார்கள். நண்பர்களும்கூட தேடுகிறார்கள்.
காணாமல் போன ஹீரோ திரும்பி வந்தாரா..? அவர் யாரை கல்யாணம் செய்தார்..? என்பதுதான் படத்தின் இரண்டாம் பகுதியில் நடக்கும் சுவையான திரைக்கதை.
‘ஐ லவ் யூ’ என்கிற வார்த்தையை போலவே ‘பிரேக்கப்’ என்கிற வார்த்தையும் காதல் என்கிற டிக்சனரியில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைதான். இந்த ‘பிரேக்கப்பு’தான் இந்தப் படத்தில் பாடாய் படுகிறது. ஹீரோ – ஹீரோயின் ‘பிரேக்கப்பு’க்கு பிறகு ஹீரோயின் தொடர்ச்சியான அடுத்தடுத்த காதல்களும் பிரேக்கப்பாக கடைசியாக காதல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வைத்துவிட்டார் இயக்குநர்.
படத்தின் ஹீரோவான எழில்துரைதான் படத்தை இயக்கியிருக்கிறார். குறும்படம் இயக்கிய அனுபவத்தோடு பெரிய திரையில் கால் வைத்திருக்கும் எழில், இந்தக் கதைக்கு வேறு ஒருவரை நடிகராக வைத்து தான் வெறுமனே இயக்கியிருந்தால்கூட படத்தை இன்னும் அதிகம் ரசித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
அவருடைய நடிப்பில் வித்தியாசங்களை தேடி, தேடி கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான முக பாவனைகள்… ஒரு சமயத்தில் மிகவும் போரடித்துவிட.. பேசுகின்ற வசனத்தைக்கூட ஒப்பிப்பது போல பேசியிருப்பதுதான் கொடுமை.
ஆனால் திரைக்கதையில் சில காட்சிகளைக மிக ரம்மியமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பேட்மிண்டன் கிரவுண்டில் அடுத்த நாள் ராகவ்வுடன் பைக்கில் செல்வதை ஹீரோயின் சொல்லும்போது அவர்கள் இருவருக்குமிடையே ஏற்படும் மோதல் ஒரு சுவையான காட்சி. இதில் பேசிய வசனங்களும், ஹீரோயினின் முகபாவங்களும் அட்டகாசம் என்ற லிஸ்ட்டில் இடம் பிடிக்கின்றன.
ஹீரோயின் மதுமிலாதான் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். கொஞ்சம் கருப்புதான் என்றாலும் களையான முகம். சினிமாவுக்கேற்ற முகவெட்டு. பல காட்சிகளில் வைக்கப்பட்டிருக்கும் கேமிரா கோணங்கள் அவரை இன்னமும் அழகாக காட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளில் அழகோ அழகு..
குறைவில்லாமல் நடித்திருக்கிறார். “நீ என்ன எனக்கு பெர்மிஷன் கொடுக்குறது..?” என்று சிரித்துக் கொண்டே கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்கும் அந்த காதலியை யாருக்குத்தான் பிடிக்காது..?
அதேபோல் நட்புகளை காதல் என்று தப்பாக அர்த்தம் எடுத்துக் கொள்ளும் காதலன்களையும், காதல் என்ற பெயரிலேயே அளவுக்கு அதிகமாக உரிமையெடுத்துக் கொள்ளும் காதலன்களையும் வெளுத்து வாங்கியிருக்கிறார் வசனத்தில்..! இயக்குநருக்கு இந்த சப்ஜெக்ட்டிற்காக ஒரு ஷொட்டு..!
தங்கையாக நடித்த பெண், நண்பர்களாக நடித்தவர்கள், இன்னொரு காதலியாக நடித்திருக்கும் அபிநயா, அம்மாவான ரமா, அப்பா அஜய் ரத்னம் என்று அனைவருமே அவர்களது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்றவாறே நடித்திருக்கிறார்கள்.
செல்பிஷ்ஷான அப்பா அஜய் ரத்னம் வீட்டுக்குள் வந்தவுடன் துப்பாக்கியை பற்றியே கேட்பதும்.. தங்கை மதுமிலாவை பிடிக்காமல் அவரைப் பற்றி தப்பும், தவறுமான செய்திகளை வீட்டுக்கு வந்து போட்டுக் கொடுப்பதும்.. யதார்த்தமான காட்சியமைப்புகள்..!
அன் அபீஷியலாக எஃப்.ஐ.ஆர். போடாமல் விசாரிக்க துணைக்கு வரும் இன்ஸ்பெக்டர் ‘மகாநதி’ சங்கரின் சில, பல எக்ஸ்பிரஷன்கள் எரிச்சலுடன், அளவுக்கதிகமான லாஜிக் மீறலையும் உணர்த்துகிறது. காணாமல் போனவரை கண்டுபிடிக்க எத்தனையோ வழிகள்தான் இருக்கே..? அதைச் செய்யாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் எப்படிங்கோ ஸார்..?
இப்போதைய யதார்த்த நிலைமையைச் சொல்கிறோம் என்கிற போர்வையில் அபிநயாவிடம் டாஸ்மாக் சரக்கை வாங்கி வரச் சொல்லும் காட்சியெல்லாம் ரொம்பவே ஓவர் இயக்குநரே..! 
ராஜ்பரத்தின் இசையில் பாடல்களில் இருக்கும் அக்மார்க் தமிழ் வார்த்தைகள் புரிகின்றன என்றாலும் ஈர்க்கவில்லை. பாடல் இசையைவிடவும் பின்னணி இசை ரம்மியம். அதிகம் காதைக் கிழிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் எம்.மணீஷின் ஒளிப்பதிவில் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளை சொல்லவே வேண்டாம். இயக்குநருக்கு மிகப் பெரிய உதவியை ஒளிப்பதிவாளர்தான் செய்திருக்கிறார் என்று சொல்லலாம்.
இன்றைய யூத்துகளுக்கு அட்வைஸ் செய்யும்விதமாக ஒரு காதல் போனால்.. இன்னொரு காதல் நிச்சயம் வரும். அல்லது நாமளே ஏற்படுத்திக் கொள்ளலாம். இதற்காக விபரீத முயற்சியெல்லாம் வேண்டாம் என்பதையும், காதல் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதையும் தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
முதல் பாதியின் அலைபாய்ந்த ஓட்டத்தை இரண்டாம் பாதியில் இருக்கும் சுவையான திரைக்கதைதான் காப்பாற்றியிருக்கிறது. முதற்பாதியில் நகரும் காட்சிகள் நிஜமாகவே பொறுமையை சோதிக்கின்றன. இடையிடையே வந்த பிளாஷ்பேக் காட்சிகளால் படத்தை முழுமையாக ரசிக்க முடியாமல் போய்விட்டது.
ஹீரோ இன்னும் கொஞ்சம் பிரயத்தனப்பட்டு தன்னுடைய எண்ணத்தை நேரடியாக வெளிப்படுத்தியிருப்பது போல் காட்சிகளை வைத்திருந்தால் நாமும் எது சரி.. எது தப்பு என்று சொல்லியிருக்கலாம். தேவையில்லாமல் காட்சிகளை நீட்டிக்க வேண்டி வசனங்களை சுருக்கியதால் தேவையற்ற நீண்ட காட்சிகளால் படம் தொய்வாக இருக்கிறது.
காதல் தோல்வியை பெரிதாக சொல்லிய வசனங்கள் இந்தப் படத்தில் அதிகம் இருந்தும், அதற்கான காரணங்களை ஆராயாமல், காதலி மீதே பழியைப் போட்டுவிட்டு தப்பிக்கும் காட்சியாகவும் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. வசனத்தின் மூலமாக இரு தரப்பையும் பேலன்ஸ் செய்திருக்கலாம்..!
இருப்பினும் காதலிகளை தரக்குறைவாக பேசாமலும், காதலன்களை ‘துரோகிகள்’, ‘மனித குல விரோதிகள்’, ‘பெண்ணாதிக்க வல்லுநர்கள்’ என்றாகவும் பேசாமல் மிகவும் டீஸண்ட்டாக வசனத்தை வைத்து சமாளித்திருக்கும்விதத்திற்கு இயக்குநருக்கு நமது நன்றிகள்..!
காதல் பிரேக்கப்பானால் வாழ்க்கையே முடிந்தது போல் உட்கார வேண்டாம் என்று காதலிகள் மற்றும் காதலன்களுக்கும் அழுத்தமாக சொல்லியிருக்கிறது இந்த ‘செஞ்சிட்டாளே என் காதலை’ திரைப்படம்..!

0 comments: