நமது - சினிமா விமர்சனம்

07-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மலையாளத்தில் சமீப ஆண்டுகளாக மிக யதார்த்தமான குடும்பக் கதைகளில் அவர்களை அலைக்கழிக்கும் பொருளாதார ஏற்றச் சூழல், படிப்பு, குழந்தை வளர்ப்பு, கல்வி இதையெல்லாம் வைத்து பார்வையாளர்களையும் படத்திற்குள் இழுத்து வெற்றியைப் பெற்ற படங்கள் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன. இதில் ‘திருஷ்யம்’ படம் உச்சக்கட்ட வெற்றியை ஏற்கெனவே பெற்றிருக்கிறது.

அந்த வரிசையில் இடம் பெற வேண்டி, மோகன்லாலுக்காகவே செய்யப்பட்ட கதை போல.. அதே பார்மெட்டில் உருவாகியிருக்கிறது இந்த ‘நமது’ திரைப்படம். தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வெளியிடப்பட்டிருக்கிறது.
படம் எப்படி..?
மோகன்லால் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் உதவி மேனேஜர். குடும்பச் சுமைக்காக ஊரெல்லாம் கடன் வாங்கி வைத்திருக்கிறார். அதே சூப்பர் மார்க்கெட்டில் 10 வருடங்களாக வேலை பார்த்து வருவதால், அடுத்து மேனேஜர் போஸ்ட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதேபோல் அதே கடையில் இன்னொரு உதவி மேனேஜராக வேலை செய்யும் விஸ்வநாதனும் பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
இந்த நேரத்தில் ஏற்கெனவே இருக்கும் மேனேஜர் ரிட்டையர்ட்மெண்ட்டில் வெளியேற புதிய மேனேஜர் யார் என்கிற போட்டி ஏற்படுகிறது. பொது மேலாளர் ஒரு நாளில் இண்டர்வியூ செய்ய கடைக்கு வருகிறார்.
விஸ்வநாதன் தன்னைவிட அதிகம் படித்தும், ஆங்கில அறிவோடும் இருப்பதால் அவருக்கே மேனேஜர் போஸ்ட்டு கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதை அறியும் மோகன்லாலுக்கு திடீரென்று புத்தி வேறுவிதமாக வேலை செய்கிறது.
ஏற்கெனவே தன்னை ஒரு முறை கடன் பாக்கிக்காக நடுரோட்டில் வைத்து மிரட்டிய ரவுடியை தொடர்பு கொள்கிறார் மோகன்லால். நேர்முகத் தேர்வன்று விஸ்வநாதனை மூன்று மணி நேரத்திற்கு மட்டும் கடத்தி வைக்கும்படி சொல்கிறார். ரவுடியும் சரியென்று சொல்ல.. விஸ்வநாதனால் நேர்முகத் தேர்வுக்கு வர முடியவில்லை. மோகன்லாலே மேனேஜராக தேர்வாகிறார்.
அதே நேரம் ரவுடிக்கு உண்மையாகவே வேறொரு பிரச்சினை. அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதால் அதை ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம். ஒண்ணே கால் லட்சம் ரூபாய் இருந்தால் ஆபரேஷன் செய்ய முடியும் என்பதால் இந்தச் சந்தர்ப்பத்தை வைத்து மோகன்லாலிடமே காசு பார்க்க முடிவு செய்த ரவுடி, “ஒண்ணே கால் லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் விஸ்வநாதனை விடுவிப்பேன்..” என்று சொல்ல மோகன்லால் திகைக்கிறார்.
ரவுடி தனது கொள்கையில் தீர்மானமாக இருப்பதால் வேறு வழியில்லாமல் இதற்கு ஒத்துக் கொள்கிறார். மோகன்லால் கையில் பணத்துடன் செல்கையில் ரவுடி இறந்து கிடக்கிறான். இப்போது விஸ்வநாதன் எங்கே என்று மோகன்லாலுக்கே தெரியவில்லை.
இன்னொரு பக்கம் இளைஞன் விஷ்வாந்த் ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணை ஒருதலையாய் காதலித்து பல்பு வாங்குகிறான். இறுதியில் இத்தனை நாட்களாய் தான் நட்பாகத்தான் பழகினேன் என்று அந்தப் பெண் சொல்லிவிட, அவளை மறக்க முடியாமல் தவிப்பவன், ஒரு விபரீத முடிவுக்குச் செல்கிறான்.
சிறுமி ஹனிஷாவோ ரோட்டோரமாக வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சின்னப் பையன் மீது மிகுந்த பாசம் கொண்டு அவனைத் தன் பள்ளியில் படிக்க வைக்கிறாள். அந்தச் சின்னப் பையன் திடீரென்று காணாமல் போய்விட அவனைத் தேடி அலைகிறாள். தானே முயற்சியெடுத்து தேடுகிறாள்.
கடைசியாக கவுதமி.. மிடில் கிளாஸ் வர்க்கத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கும் கவுதமி அதற்கே உரித்தான பொருளாதாரச் சுமையில் சிக்கித் தவிக்கிறார். கல்லூரி காலத்தில் கவுதமியிடமே அடிக்கடி பணம் கேட்டு வாங்கி செல்லும் பழக்கமுடைய அவளுடைய புரொபஸர் இன்றைக்கு மிகப் பெரிய கோடீஸ்வரராக அவர் முன் நிற்கிறார். வாங்கிய பணத்துக்கு வட்டியும் முதலுமாய் கவுதமிக்கு திருப்பிக் கொடுக்க தயாராக இருப்பதாகச் சொல்கிறார்.
மலேசியாவில் தன் மகன் ஆரம்பித்திருக்கும் புதிய நிறுவனத்தில் கவுதமிக்கு மிகப் பெரிய வேலை காத்திருப்பதாகச் சொல்லி அவரை மலேசியாவுக்கு கிளம்ப வைக்கிறார். இத்தனை பிரச்சினைகளும் இந்த நால்வரையும் சுற்றிச் சுற்றி வர.. கடைசியில் இதெல்லாம் முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்த நமது படத்தின் திரைக்கதை.
படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அது கடைசியில்தான் தெரிய வரும் என்பதெல்லாம் இந்தக் காலத்தில் ஏற்கக்கூடிய விதமா என்ன..? இதையெல்லாம் தாண்டிய சஸ்பென்ஸ் படத்தையெல்லாம் மக்கள் பார்த்து அலுத்துப் போயுள்ளார். இந்த நேரத்தில் அந்த சஸ்பென்ஸை வைத்து என்ன சாதிக்க முடிந்திருக்கிறது என்று தெரியவில்லை. இதை முன்பேயே சொல்லிவிட்டே செய்திருந்தால்கூட இன்னும் நன்றாகத்தான் இருந்திருக்கும்.
மோகன்லாலின் கதையில் ஒரு உண்மைத்தனம் உண்டு.. பரபரப்பு, திரில்லிங், ஆர்வம்.. எல்லாம் இருந்தது.. ஆனால் மற்ற மூன்று கதைகளுமே யதார்த்தத்தைவிட்டு வெகுதூரம் தள்ளிப் போய் மெலோ டிராமா லெவலுக்கு போய்விட்டது.
இடைவேளை பிளாக்கில்தான் மோகன்லாலின் தரிசனம் நமக்குத் தெரிகிறது. இதன் பின்பு அவருடைய தேடலும், ஓடலும் ஒரு அப்பாவியின் அல்லலுக்கு ஒப்பனாவது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். விஸ்வநாதன் குடும்பத்தின் கதையும், அதில் மோகன்லால் மாட்டிக் கொள்வதும் சிறப்பு.
மோகன்லாலின் தமிழ் உச்சரிப்பு காலம்காலமாக தமிழ்நாட்டில் கிண்டலுக்கு உள்ளானது. 4 வருடங்களுக்கு ஒரு முறை படத்தில் நடிப்பவரின் குரல் நமக்குள் நிச்சயம் பதியாததுதான்.. ஆனாலும் “நான்தான் டப்பிங் பேசுவேன்” என்று ஒற்றைக் காலில் நிற்கும் அந்தக் கலைஞனுக்கு நமது சல்யூட்..
அந்தச் சின்னப் பொண்ணு, பையன் கதை, சீரியலில்கூட ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒரு பள்ளி மாணவி நினைத்தால் ஒரு சிறுவனை பள்ளியில் கொண்டு வந்து சேர்த்துவிட முடியுமா..? “ஓ புது ஸ்டூடண்ட்டா..” என்று ஒரு சிறுமியிடமே கேட்டு வகுப்பறைக்குள் அனுமதிக்கும் பள்ளிக்கூடம் இந்தியாவில் எங்கேயிருக்கிறது என்று இயக்குநர் சொன்னால் தேவலை..!
500 ரூபாய் அந்தச் சிறுமிக்கு எப்படி கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால் கடனாகக் கேட்கிறாராம். எப்படியும் 2 நாளில் திருப்பிக் கொடுத்துவிடுவாராம்.. எல்லாம் அந்த ரோட்டோர பையனுக்காகவாம்.. அந்தப் பையனை தேடியலையும் விதமும், அதற்கான வழிமுறைகளும் காமெடிதான்.. திரைக்கதை இயக்குநருக்காக வளைந்து கொடுத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.
கணினி அறிவியலில் பேராசிரியருக்கே பாடம் புகட்டும் அளவுக்கு வல்லமை படைத்த விஷ்வாந்த், காதலில் தோல்வியடைகிறார். இந்த்த் தோல்வி அவரை வாழ்க்கையின் ஓரத்திற்கே கொண்டு செல்கிறது என்பதும், அங்கே ஆற்றில் கிடைக்கும் ஒரு பழைய பேக் அவரது வாழ்க்கையை மீட்டெடுக்கிறது என்பதும் கதையாக புத்தகத்தில் படித்தால் ஓகே.. காட்சியில் எப்படிங்க ஸார்..?
கவுதமியின் கேரக்டர்தான் குழப்படித்துவிட்டது. இதில் ஊர்வசி எதற்கு என்று தெரியவில்லை. அவ்வப்போது சின்னச் சின்ன வசனங்களிலும், நடிப்பிலும் ஊர்வசிதான் சிரிக்க வைத்திருக்கிறார். கவுதமிக்கு சீரியஸ் நடிப்புகூட இப்போது கஷ்டமாக வருகிறது. இதில் அவர் “சிரிச்சிக்கிட்டே இருக்கணும்…” என்று வசனங்கள் வேறு..
கவுதமி வேலை பார்த்த முன் அனுபவமே இல்லாமல் வேலைக்காக மலேசியாவுக்கு கிளம்புகிறார். ஏர்போர்ட்வரைக்கும் வந்த பின்பு திடீரென்று மோகன்லால் பயணத்தைத் தடுத்து நிறுத்துவது ஏன் என்றுதான் தெரியவில்லை. அந்த நேர மாறுதலுக்கான காரணத்தை இயக்குநர் பதிவாக்க மறந்துவிட்டாரோ..? எதுவும் புரியவில்லை..!
இயக்குநர் சந்திரேசேகர் எலட்டி குடும்பத்தினரை முன் வைத்து படத்தின் கதையைத் தீர்மானித்திருக்கிறார். ஆனால் இயக்கம் கவரவில்லை. அதே நேரம் திருஷ்யத்தின் பாதிப்பில் மோகன்லாலும் ஒரு ஆர்வத்தில் நடிக்க ஒத்துக் கொண்டுவிட்டார் போலும். திருஷ்யத்தில் பத்து சதவிகிதம்கூட இல்லாமல் போய்விட்டது..!
நமது பழுதாகிவிட்டது என்பது மட்டும் உண்மை..!

0 comments: