நம்பியார் - சினிமா விமர்சனம்

19-08-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கும். அந்த மிருகம் நம்முடைய நல்ல செயல்களைக் கட்டுப்படுத்த நினைக்கும். கெட்ட செயல்களைச் செய்ய தூண்டிவிடும். அந்த மிருகத்தை அடக்கி ஆள்பவன் மனிதனாக இருப்பான். ஆடவிட்டு அதன் போக்கில் ஆடுபவன் கெட்டவனாகிவிடுவான் என்பதையே இந்த ‘நம்பியார்’ சொல்லியிருக்கிறார்.
நடிகர் ஸ்ரீகாந்த் தனது தயாரிப்பில் இரண்டாண்டுகளுக்கு முன்பாக தயாரித்து முடித்த படம்.. இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது..!

அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா வனிதா, அண்ணன் சுப்பு பஞ்சு, அண்ணி தேவதர்ஷிணி என்கிற கூட்டுக் குடும்பத்தில் வாழ்கிறார் ஹீரோ ஸ்ரீகாந்த். ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதையே சில ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருவதால் இவரது தந்தைக்கு ஸ்ரீகாந்த் மீது கோபம்.. ஆத்திரம்.. இதன் விளைவால் பக்கத்து வீடு, எதிர் வீடு என்று எல்லாரிடமும் ஸ்ரீகாந்த் பற்றி தப்பும், தவறுமாக செய்தி பரப்புகிறார் அப்பா ஜெயப்பிரகாஷ்.
ஹீரோ ஸ்ரீகாந்துக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. அவ்வப்போது அவருக்குள் இருக்கும் சைத்தான் வெளியே எட்டிப் பார்ப்பார். அவருக்கு இல்லாத கோக்கு மாக்கு ஐடியாவையெல்லாம் சொல்லிக் கொடுத்து அவரது மனதை சிதைத்துக் கொண்டிருக்கிறது அந்த சைத்தான். அந்த சைத்தான் வடிவத்தில் சந்தானம் திரையில் தோன்றுகிறார்.
தற்செயலாக இரண்டு, மூன்று இடங்களில் ஸ்ரீகாந்துடன் ஒன்றாக அருகருகே இருக்கும் சூழலில் மாட்டிக் கொள்ளும் ஹீரோயின் சுனைனாவுக்கு, இதுவே பெரிய தீராத தலைவலியாக போகிறது. அவரது அப்பாவும், அம்மாவும் அவர் ஸ்ரீகாந்துடன் காதல் வலையில் சிக்கியிருப்பதாகச் சொல்லி திட்டுகிறார்கள்.
எதேச்சையாக மீண்டும் கண்ணில் மாட்டும் ஸ்ரீகாந்தை வறுத்தெடுக்கிறார் சுனைனா. முதலில் அமைதியாக போக நினைக்கும் ஸ்ரீகாந்த் தனது சைத்தான் சந்தானத்தின் தவறான அட்வைஸால் அவரை பாலோ செய்கிறார். காதலிக்கத் துவங்குகிறார். காதலும் ஒகேவாகி போகும் நிலையில் சைத்தான் ருத்ரதாண்டவம் ஆடிவிடுகிறார்..
ஒரு நாள் இரவில் வீட்டின் அருகில் நடு ரோட்டில் குடித்துவிட்டு பெரும் ரகளை செய்கிறார் ஸ்ரீகாந்த்.. இதன் தொடர்ச்சியாய் போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் ஜான் விஜய்யையும் தாக்குகிறார். ஹீரோயினின் வீட்டுக்கும் சென்று தகராறு செய்து காதலை தானே அழித்துக் கொள்கிறார் ஸ்ரீகாந்த்.
இந்த மூன்றும் சிக்கலில் வந்த பின்பும் சைத்தானின் பிடியில் இருந்து அவரால் மீள முடியவில்லை. அது முடிந்ததா.. இல்லையா.. என்பதுதான் படத்தின் திரைக்கதை.
தயாரிப்பாளர்கள் வீடு தேடி வரவில்லை என்பதால் சொந்தப் படத்திற்கு தயாராகிவிட்டார் ஸ்ரீகாந்த். இது பாராட்டுக்குரியதுதான் என்றாலும் கதை,  இயக்குநர் தேர்வில் கோட்டைவிட்டுவிட்டார்.
இந்தாண்டு இதுவரையில் வெளியான படங்களிலேயே அதிகமான வசனங்களை கொட்டியிருப்பது இந்தப் படத்தில்தான் இருக்கும். அதேபோல் சந்தானம் அதிகமான வசனங்களை பேசித் தீர்த்திருப்பதும் இந்தப் படமாகத்தான் இருக்கும்..!
ஒரு பாடல் காட்சி.. ஒரு சில காட்சிகள் என்றால்கூட ஓகேதான்.. படம் முழுவதும் சைத்தானாக வரும் சந்தானம் பேசும் பேச்சுக்களைக்  கேட்டால், கடைசியில் படம் பார்த்த ரசிகர்களுக்கும் சைத்தானாகிவிட்டார் சந்தானம்.
இரவு நேரத்தில் தனது வீட்டினரை நடு ரோட்டில் வைத்து அவமானப்படுத்தும் காட்சியில் மனம் பிசைகிறது.. இவ்வளவு கேவலமாக அந்தக் காட்சியை படமாக்கியிருக்க வேண்டுமா இயக்குநரே..? இத்தனை செய்த பின்பும் அடுத்த நாளே அது எதுவும் அவர்களை பாதிக்காதவகையில் இருப்பதும், தேவதர்ஷிணி நடனமாடுவதும் என்னவொரு இயக்கம்..? வாட் எ ஸ்கிரீன்பிளே என்று கேட்க வைக்கிறது..
‘ராமச்சந்திரன்’, ‘சரோஜாதேவி’ என்று பொருத்தமாக ஹீரோ, ஹீரோயின்களுக்கு பெயர் வைத்தவர்கள்.. அதே அளவுக்கு ருசிப்பான காதல் காட்சிகளை வைத்திருக்க வேண்டாமா..?  சுனைனா – ஸ்ரீகாந்த் இடையே ஏன் மோதல் உருவாகிறது.. இத்தனை சண்டைக்கு பின்பும் சுனைனா ஏன் ஸ்ரீகாந்தை விரும்புகிறார் என்பதையெல்லாம் சைக்காலஜிக்கலாக சொல்லிப் புரிய வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால் இது இயக்குநருக்கு மட்டுமே புரிந்த கதையாகிவிட்டது..!
ஸ்ரீகாந்துக்கு என்ன நடிப்பு வருமோ அதை மட்டுமே கொடுத்திருக்கிறார். தன்னை தனது அப்பாவே வெளியில் மற்றவர்களிடத்தில் கேவலப்படுத்தி பேசுவதாக பொறுமுகிற காட்சியில் உண்மையில் தனது நடிப்பைக் கொட்டியிருக்க வேண்டும். ஆனால் இங்கயோ டாஸ்மாக் சரக்கின் புண்ணியத்தில் வெறும் வசனமாகவே பேசிக் காட்டி தப்பித்துவிட்டார். ரொமான்ஸ் காட்சிகளில் மட்டுமே மனிதர் நின்று கவனிக்க வைத்திருக்கிறார். மற்றபடி ஸ்ரீகாந்துக்கென்று ஒன்றுமில்லை..
இன்னொரு பக்கம் சைத்தான் சந்தானம்.. ஊசிப் போன உளுந்து வடையான பல வசனங்களை கூசாமல் பேசியிருக்கிறார். பக்கத்திற்கு பக்கம் பன்ச் வைத்து பேசியிருந்தாலும் எதுவும் அந்த சிச்சுவேஷனுக்கு ஏற்றதாக இல்லை என்று வருத்தமான விஷயம். கடைசியாக ஒரு கட்டத்தில் இவரை அடித்துவிரட்டினால்தான் என்ன என்று யோசிக்க வைத்துவிட்டார் இயக்குநர்.
சுனைனாவை எந்தெந்த கோணத்தில் காட்டினால் அவர் அழகற்றவராக தெரிவாரோ அதையெல்லாம் இதில் செய்திருக்கிறார்கள். ஹீரோயினை காட்டுங்கப்பான்னு சொன்னால்.. ஒரு துணை கேரக்டரில் நடிக்க வந்தவரை போல டீஸ் செய்திருக்கிறார்கள். கடைசியாக இவருக்கு வந்தது காதலா இல்லையா என்பதே நமக்கு தெரியாததால் எதுவும் மனதில் ஒட்டவில்லை.
சுனைனாவின் சந்தேக அப்பாவாக டெல்லி கணேஷ், ஸ்ரீகாந்தின் அப்பாவாக ஜெயப்பிரகாஷ், அண்ணன் சுப்பு பஞ்சு, தேவதர்ஷிணி என்று பல துணை நடிகர்களும் அவரவர் கதாபாத்திரத்திற்கேற்றாற்போல் நடித்திருக்கிறார்கள். தப்பில்லைதான்..!
நட்புக்காக விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இதில் அவரே நடித்திருக்கும், சந்தானம் பாடியிருக்கும் ‘ஆற அமர பாடல்’ ஒன்றுதான் மனதில் நிற்கிறது. அதுவும் சந்தானத்தின் வாய்ஸுக்காக..! மற்றபடி பாடல்களும், பாடல் காட்சிகளும் வழக்கமான சம்பிரதாயமாகத்தான் இருக்கின்றன..!
படத்தில் ஒரேயொரு ஆறுதல் இறுதிக் காட்சிகள்தான். அதிலும் ஆர்யா சம்பந்தப்பட்ட ஸ்டோரிதான். மிக கச்சிதமாக நறுக்கப்பட்ட எடிட்டிங்கில் அழகாகத் தெரிந்தது சிறுகதையை போல்..! இதையே படம் முழுவதும் செய்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்..
கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆரின் சிலையைச் சுற்றி சுற்றி வந்து சுடுவதெல்லாம் எந்தக் காலத்து திரைக்கதை..? இயக்குநர் இன்னும் கொஞ்ச நாள் உட்கார்ந்து திரைக்கதைக்காக டிஸ்கஸ் செய்திருக்கலாம். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இன்ஸ்பெக்டர் இது போன்று ஏனோதானோவென்று என்கவுண்ட்டரில் ஈடுபட முடியுமா..? யோசிக்க வேண்டாமா இயக்குநர் ஸார்..?
புதுமையில்லாத கதை.. சுவாரசியமில்லாத திரைக்கதை.. சவ சவ.. வள வள.. என்ற வசனங்கள்.. எல்லாவற்றுக்கும் மேலாக அழுத்தமில்லாத இயக்கம்.. இதெல்லாம் சேர்ந்து படத்தையே நம்பியாராக்கிவிட்டது..!

0 comments: