கதகளி - சினிமா விமர்சனம்

15-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் பாண்டிராஜ் சமீபத்திய ‘பசங்க-2’ படத்தின் மூலமாக தானும் ஒரு குழந்தைகளுக்கான இயக்குநர் என்பதை நிரூபித்தார். அதற்கடுத்த ஒரு வார இடைவெளியில் ஒரு திரில்லர் படத்தை இயக்கி கமர்ஷியலும் தனக்கு வரும் என்று நிரூபித்திருக்கிறார்.

கடலூர் மாவட்ட மீனவர் சங்கத் தலைவராக இருப்பவர் ‘தம்பா’ என்னும் மதுசூதனன். பெயருக்குத்தான் சங்கத் தலைவர். மற்றபடி மிகப் பெரிய ரவுடி கும்பலின் தலைவர். கட்டப் பஞ்சாயத்தில் துவங்கி கொலைவரையிலும் செய்பவர். ஆளும் கட்சி, போலீஸ், அதிகார வர்க்கம் என்று அனைத்தையும் தனது கரத்தில் ஒளித்து வைத்திருப்பவர். பெயருக்கு மீன்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் விஷால். அமெரிக்காவில் 3 வருடங்கள் வாழ்ந்துவிட்டு கடலூர் திரும்புகிறார். ஒரு மிஸ்டு காலில் சந்தித்த தனது காதலி கேத்ரீன் தெரசாவை திருமணம் செய்து கொள்வதற்காகவே தாயகம் திரும்பியிருக்கிறார்.
விஷாலின் திருமணத்திற்கு 3 நாட்கள் முன்னதாக திடீரென்று தம்பா கொலையாகிறார். இவரை விஷாலும், அவரது அண்ணனும்தான் கொலை செய்திருப்பார்கள் ஓன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தேகப்பட்டு விசாரணைக்காக விஷாலை வரச் சொல்கிறார். விஷால் சென்னையில் இருந்து கடலூர் வருவதற்குள் பிரச்சினைகள் வேறு விதமாக திசை திரும்ப போலீஸிடமிருந்து தப்பிக்கிறார் விஷால்.
தம்பாவை யார்தான் கொலை செய்தது..? விஷாலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பதெல்லாம் கடைசிவரையிலும் வைத்திருக்கும் டிவிஸ்ட்டுகளுடன் இணைந்த சுவாரஸ்யமான திரைக்கதையாக்கத்தில் தெளிவாகிறது..!
விஷால் கொடுத்த மிகக் குறைந்த நாள் கால்ஷீட்டில் அவரை வைத்து இப்படித்தான் படமெடுக்க முடியும். எந்தவொரு இயக்குநரும் நடிகருக்காக கதை செய்து, அதில் தன்னுடைய முத்திரையும் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டால் கிடைக்கும் பலன்தான் இந்தப் படத்திற்குக் கிடைக்கவிருக்கிறது.
விஷாலின் அறிமுகம் சாந்தமாக துவங்கி.. நடுவில் பரபரப்புடன் திசை திரும்பி.. பின்பு அதுவே ஆக்ரோஷமாகி.. பின்பு கடைசியாக அடிக்கும் பக்கா சினிமா டிவிஸ்ட்டில் படத்தின் தன்மை கெட்டுவிட்டது என்னவோ உண்மைதான்..!
கொலை செய்தவன் தப்பிக்கிறான் என்பதெல்லாம் சிறந்த சினிமா கதையாக இருக்க முடியாது.. அந்தக் கொலையை எதற்காக செய்கிறான் என்பதையும் பார்க்க வேண்டும்.  இது கடைசியாக எப்படியெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் கொலை செய்யலாம் என்பதை சினிமாவே கற்பித்துக் கொடுப்பது போலாகிவிடும்..!
கேத்தரீன்-விஷால் காதல் துவங்கும் இடமும், அதனை அவ்வப்போது பத்திரிகை கொடுக்கப் போகும் இடங்களிலெல்லாம் துவங்கி முடிக்கும் சுவாரஸ்யமும் கேட்கவும், பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. கேத்ரீன் தெரசா ‘பாப்பு’ என்றும் ‘பப்பி’ என்றும் அழைக்கும் அளவுக்கு பப்பிஷமாக இருக்கிறார்.
முதல் சில காட்சிகளின் குளோஷப் ஷாட்டுகளின் அழகில் மனதைக் கொள்ளை கொள்கிறார்.  ‘யாருங்க அந்த அமுதன்?’ என்று சலித்துக் கொண்டாலும் ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாமலேயே அப்பாவியாக விஷாலுக்கு போனை போட்டு ‘குட்டி மாமாவுக்கு ஆக்சிடெண்ட்டாம்’ என்று சொல்வதும் நல்ல நடிப்பு.. மனதை ஈர்த்திருக்கிறார். போகப் போக இவருக்கான இடம் இரண்டாம்பட்சமாகிவிட்டாலும் ஹீரோயின் ஓகே..!
விஷாலுக்கு அதிகம் அலட்டலில்லை. சண்டை காட்சிகளில் சண்டை பயிற்சியாளரின் புண்ணியத்தாலும், கேமிராமேன் பாலசுப்ரமணியெம்மின் வித்தையினாலும் பிய்ச்சு உதறியிருக்கிறார். கருணாஸை டபாய்க்கின்ற சில காட்சிகளில் விஷாலை ரசிக்கலாம். ஆனால் எப்போதும் போலவே ஒரே மாதிரியான முக பாவனையுடன் படம் நெடுகிலும் வருவதை எப்போது நிறுத்துவார் என்று தெரியவில்லையே..?
விஷாலின் அண்ணனாக நடித்திருக்கும் மைம் கோபிதான் விஷாலுக்கும் சேர்த்து வைத்து நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பும், மென்மையான, பயப்படும்படியான நடிப்பும் அவரையொரு பண்பட்ட நடிகர் என்று சொல்ல வைக்கிறது. இவரும், இவரது குடும்பத்தினரும் நட்ட நடு இரவில் படும் துயரமும், கஷ்டமும் அதிகார வர்க்கத்தின் கோர முகத்தின் இன்னொரு பக்கத்தை காட்டுகின்றன.
வில்லனாக மதுசூதனன்.. ஒரேயொரு காட்சியில் மட்டுமே வில்லத்தன வசனம் பேசியிருக்கிறார். விஷாலுக்கு கொஞ்சம் ஈடு கொடுத்து இயல்பான நகைச்சுவைக்கு உத்தரவாதம் பெற்றுக் கொடுத்திருக்கிறார் கருணாஸ். இத்தனை இறுக்கமான சமயத்தில் ஒரு ரிலாக்சேஷனுக்காக உள்ளே நுழைக்கப்பட்ட இமான் அண்ணாச்சியும்  தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார்.
நட்புகளாக நடித்தவர்களில் விஷாலை சந்தேகப்படுபவர் மீதே சந்தேகம் வருவது போலவும் ஒரு திரைக்கதை.. விஷாலின் அண்ணன் மீது சந்தேகப்படும் சூழல்.. பவன் குமார் மீது வரும் சந்தேகம்.. இப்படி திரைக்கதையில் சுற்றிச் சுற்றி சந்தேக கதகளியை அவிழ்த்துவிட்டிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதியின் இசையில் ஒன்றுமேயில்லை. இடைவேளைக்கு பின்பு பாடல்களே இல்லாமல் நகர்ந்திருப்பதால் பின்னணி இசைக்காக கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார் போலிருக்கிறது.
இவர்களையும் தாண்டி மனதில் அமர்பவர் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்தான். கேத்தரினை அழகாக காட்டுவதில் துவங்கி.. கடலூரின் மழைக் காலத்தில்கூட துல்லியமாக படமெடுக்க வைத்து அதையும் அழகாக பதிவாக்கியிருக்கிறார். இடைவேளைக்கு பின்பு காட்சிகள் பெரும்பாலும் இரவிலேயே நடப்பதால் எதுவும் அத்துமீறாமல் இயல்பாக படமாகியிருக்கிறது..! பாராட்டுக்கள் ஒளிப்பதிவாளருக்கு..!
ஊருக்கே அநியாயம் செல்பவன் தண்டிக்கப்பட வேண்டியவன்தான் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் அந்தத் தண்டனை கொலையா..? செய்வது அவனால் பாதிக்கப்பட்ட தனியொரு மனிதனா..? இது நியாயம்தானா..? என்கிற பல கேள்விகளை எழுப்புகிறது இந்தப் படம்..!
அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பி கல்யாணத்தை முடித்துவிட்டு திரும்பவும் அமெரிக்கா செல்லவிருக்கும் ஒருவன் செய்யக் கூடிய செயலா இது..? ஏன் இந்தக் கொலை வெறி..? என்பதற்கு விளக்கமெல்லாம் அளிக்காமல் பழிக்குப் பழி வாங்கிய ஹீரோவின் கதையாக படத்தை முடித்திருக்கிறார் என்பதாலும் படத்திற்கு மவுத் டாக் பாராட்டுரைகள் கிடைக்கவில்லை என்பது உண்மை.!
பாண்டிராஜ் முழுக்க, முழுக்க குழந்தைகளுக்கான இயக்குநர் இல்லை. ஆனாலும் ஒரு சமூகத்திற்கு நல்லொழுக்கம் போதிக்கும் ஆசிரிய இயக்குநர் என்று அனைவரும் நம்புகிறோம். அடுத்தடுத்த படங்களில் ஹீரோவுக்காக இல்லையென்றாலும் அது அவருடைய பெயரைச் சொல்லும் படமாக இருக்கும் என்று நம்புகிறோம்..!

0 comments: