மாலை 4:53

மய்யம் - சினிமா விமர்சனம்

17-10-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முழுக்க, முழுக்க புதிய தலைமுறையைச் சேர்ந்த இளம் படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்து வழங்கியிருக்கிறார்கள்.
பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ஆதித்ய பாஸ்கர் ஒரு கல்லூரி மாணவர். நடித்தவர்களும், பணியாற்றியவர்கள் அனைவருமே கல்லூரி, மற்றும் பள்லி மாணவ, மாணவியர்தான்..
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு ஏ.டி.எம். மையத்தில் ஒரு இரவு வேளையில் நடைபெறும் கதைதான் இந்தப் படம்.

நவீன் சஞ்சய்யும், சுஹாசினியும் காதலர்கள். இவர்களது காதலுக்கு சுஹாசினியின் அப்பா எதிர்க்கிறார். அடியாட்களை அனுப்பி நவீனை நாலு தட்டு தட்டி வைக்கிறார். அப்படியும் காதலர்களைப் பிரிக்க முடியவில்லை. வீட்டைவிட்டு ஓடிப் போய் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள் காதலர்கள்.
முதல் நாள் இரவில் நவீன் தனது நண்பன் குமரனுடன் கிளம்புகிறான். வழியில் செல்போன் உடைந்து விழுகிறது. தொடர்ந்து பணம் எடுக்க ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் ஏடிஎம்மிற்கு வருகிறார்கள். அங்கே ஏற்கெனவே அவனது செல்போன் உடைவதற்குக் காரணமாக இருந்த மாடலிங் பெண் ஜெய் குஹானியும் வருகிறார்.
இவர்கள் மூவரும் ஏடிஎம் அறைக்குள் இருக்கும் நேரத்தில் வாசலில் ஒருவன் கையில் கடப்பாரையுடன் நிற்கிறான். மூவரும் திகைக்கிறார்கள். பின்பு பயப்படுகிறார்கள். அதே நேரம் அந்த ஏடிஎம்மின் வாட்ச்மேன் அந்த ஏடிஎம் அறையின் பின் பக்கத்து அறையிலேயே பூட்டப்பட்டு கிடக்கிறான். அவனது சொந்தக்காரன் ஒருவன் வாங்கி வந்த சரக்கைக் குடிக்கவிடாமல் செய்த்தற்காக அறையை பூட்டிவிட்டுச் செல்ல வாட்ச்மேனும் அந்த அறைக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.
டூட்டி மாறுவதற்கு தயாராக வெளியில் இருந்த வாட்ச்மேனும், ஒரு போலீஸ் கான்ஸ்டபிளும்கூட அந்த கடப்பார்ரை மனிதனால் கொல்லப்படுகிறார்கள். இந்த மூவரும் வெளியில் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். கடைசியில் என்ன ஆனது..? இவர்கள் தப்பித்தார்களா..? இல்லையா என்பதுதான் படத்தின் கதை..!
இந்தப் படத்தில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. அதனை உடைத்தால் படமே புஸ்வாணமானது போல் என்பதால் அதை இங்கே தவிர்க்கிறோம்.

படத்தின் இயக்குநர் ஒரு அறிமுகம் என்பதோடு இல்லாமல் கல்லூரி மாணவரும்கூட என்பதால் நாம் எதிலும் குற்றம், குறை சொல்வதே வீணான விஷயமென்று நினைக்கிறோம்.
ஒரு நல்ல கதைக் கருவைத் தேர்ந்தெடுத்தவர் சுவாரஸ்யமான திரைக்கதையைத் தேர்வு  செய்யாமல் விட்டுவிட்டார்.  கடப்பாரையோடு வெளியில் நிற்பவர் ஒருவர்தான். அதிலும் 40 அடி தூரத்தில் தள்ளி நிற்கிறார். கதவைத் திறந்து ஆளுக்கொரு பக்கமாக ஓடினால் கடப்பாரை என்னதான் செய்யும்..? அவனால் என்ன செய்ய முடியும்..? படத்தின் முக்கியமான விஷயமல்லவா இது..? இதில் போய் கடப்பாரை சைஸுக்கு கோட்டைவிடலாமா..?
இதுதான் லாஜிக் ஓட்டை என்றால் இதைவிட பெரிய ஓட்டை. ரோபோ சங்கரின அறையில் இருக்கும் ஜன்னலே ஆள் உயரத்துக்கு இருக்கிறது. படாரென்று திறந்து வெளியில் குதித்து ஓடி வரலாமே..? ஏன் செய்யவில்லை சங்கர்..? இதையே இரண்டு முறை திறந்து வேறு காட்டுகிறார்கள்.. இயக்குநருக்கு என்னவொரு தைரியம் பாருங்கள்..?
திரைக்கதையாக்கம் என்பது பலர் கூடி உட்கார்ந்து பேசி சின்ன சின்ன விஷயங்களில்கூட தவறுகள் நடக்காமல் பார்த்து எழுதுவது.. இதில் புதியவர்கள் என்பதால் எதையும் ஸ்கிரீனில் பார்த்துக் கொள்வோம் என்று இருந்துவிட்டார்கள் போலும்.. இதுவே மிகப் பெரிய தவறாகிவிட்டது.
வெளியில் ஒரு கொலை நடந்த பின்பு உள்ளேயிருப்பவர்களின் மன நிலை என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் ஸ்டெடி செய்யாமல் வசனங்களை இரு தரப்பினருமே பேசிக் கொண்டேயிருப்பதால் நமக்கே சற்று கோபம் வருகிறது. சூழ்நிலைக்குத் தக்கபடி பேசுவதை போலத்தான் இருந்திருக்க வேண்டும்.
இப்படி கதையின் லாஜிக்கும், திரைக்கதையின் அசுவாரஸ்யமான விஷயமும் படத்தை பலமிழக்க வைத்தாலும், படத்தின் ஒளிப்பதிவும், சிற்சில கவனிப்புகளும், கடைசி நிமிட டிவிஸ்ட்டும் ‘அட’ என்றாவது சொல்ல வைத்திருக்கிறது..!
நடிப்பென்று பார்த்தால் குமரனும், நவீனும் பாதியை சாப்பிட்டாலும் மீதியை ஜெய்குஹானியும், சுஹாசினியுமே நிறைவு செய்திருக்கிறார்கள். ஜெய் குஹானி ஏற்கெனவே சில படங்களில் நடித்தவர் என்பதால் அனாயசமாக எல்லாவற்றையும் தாண்டிச் சென்றுவிட்டார்.
ரோபோ சங்கரின் சின்னச் சின்ன சீண்டல்களுக்கெல்லாம் குஹானி கொடுக்கிற அந்த வெறுப்பான ஆக்சன்கள் ரசிக்க வைத்திருக்கிறது. ரோபோ சங்கரின் பக்கம், பக்கமான வசனங்கள் சிரிப்பை கொடுக்கவில்லையென்றாலும், அவர் மீதான மதிப்பை உயர்த்தியிருக்கிறது. ஒன் மேன் ஷோவை கச்சிதமாகச் செய்திருக்கிறார். எதிராளியின் ரியாக்ஷன் என்ன என்பது தெரியாமலேயே நடிப்பதுதான் மிகக் கடினம் என்பார்கள். ரோபோ சங்கர் இதில் இன்னொரு இடத்திற்கு நகர்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்..! அவருக்கு பெயர் சொல்லும் படமாக இது இருக்கும்.
மார்ட்டின் அப்பு இரட்டையர்களின் ஒளிப்பதிவுதான் படத்தின் பலமே. பாடல் காட்சிகளில் அற்புதமாக படமாக்கியிருக்கிறார்கள். அதேபோல் பல காட்சிகளில் செட் பிராப்பர்ட்டீஸாக இருப்பவைகள் எல்லாம் கலை நயத்தோடு இருப்பதை ரசிக்க முடிகிறது. ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கைவண்ணம்தான் இவை என்பது சொல்லாமலேயே தெரிகிறது.
பின்னணி இசை என்பது இது போன்ற திரில்லர் படங்களுக்கு உயிர் நாடி போன்றது. இசையமைப்பாளர் இளையவர் என்பதால் அதிர வைக்கும் இசையையே கடைசிவரைக்கும் போட்டுத் தாளித்திருக்கிறார். இன்னும் அனுபவம் கிடைத்தால் மட்டுமே எது சரி.. எது தப்பு என்று அவருக்கே தெரியும்..
முன்பே சொன்னதுபோலவே படத்தின் அனைத்து நிலைகளிலும் முற்றிலும் புதியவர்களே பணியாற்றியிருப்பதால் தங்களுடைய அனுபவத்தை வைத்தே ஒரு படத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதுவே இவர்களுக்கொரு மிகப் பெரிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த இளையவர்களின் அடுத்தப் படைப்பை இதைவிட பல மடங்கு உயர்வாக எதிர்பார்க்கிறோம்..!