சதுரன் - சினிமா விமர்சனம்

11-10-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு நாள் பொழுதில் அமைதியான வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஒரு சம்பவம் நடந்து அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து ரசிகர்களுக்கு பிபி எகிறும் அளவுக்கு தாறுமாறான, டென்ஷனான திரைக்கதையமைப்பில் படபடக்க வைக்கும் காட்சிகளுடன் விரியும் திரைப்படங்கள் இந்தாண்டு நிறையவே வந்துவிட்டன.
இதோ இப்போது இந்த ‘சதுரனும்’ அதே வகையில் வெளிவந்திருக்கும் ஒரு படம்தான்.

நாயகன் ராஜாஜ் ஆட்டோ டிரைவர். அம்மா இல்லை. அப்பா மட்டுமே.. நல்லவர்.. தற்செயலாக ஒரு நாள் ஹீரோயினை பார்த்த மாத்திரத்திலேயே வழக்கமான சினிமா பாணியில் லவ்விட துடிக்கிறார். இவர் ஒவ்வொரு முறையும் ஹீரோயினை ஏடாகூடா நிலைமையிலேயே பார்த்துவிடுவதால் ஹீரோயின் இவர் மீது எக்கச்சக்க கோபத்தில் இருக்கிறார். காதல் ஒன் சைடாகவே இருக்கிறது..
இந்த நேரத்தில் ஒரு நாள் ஹீரோயினையும் அவளது நண்பிகளையும் ஆட்டோவில் அழைத்துப் போகையில் ஒரு சைக்கோ இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக் கொள்கிறான். அதே நேரம் ஹீரோவின் நண்பரான காளி வெங்கட் வேறொரு இடத்தில் வேறொரு பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். ஒரு வீட்டில் தான் அழைத்து வந்த பிரயாணிகள் இறக்கிவிட்ட வீட்டில் ஒருவரை கொலை செய்வதை கண்ணால் பார்த்துவிட்டு தன்னை காப்பாற்ற வரும்படி ஹீரோவை அழைக்கிறார் காளி.
ஹீரோவோ சைக்கோ இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக் கொண்ட தன் காதலியை மீட்க வேண்டி இன்ஸ்பெக்டரை அடித்துவிட.. அது கை கலப்பாகி போலீஸ் வண்டிக்குள் தூக்கிவீசப்படுகிறார்.
அன்றைய இரவில் தொடர்ச்சியாக 3 கொலைகள் நடந்தேற..  இன்ஸ்பெக்டருக்கு தகவல் வந்து அங்கே செல்கிறார். வழியிலேயே ஜீப்பில் இருந்து ஹீரோ குதித்து தப்பித்து தன் நண்பன் காளியைத் தேடி ஓடுகிறார். அங்கே நண்பனும் கொலையாகிக்கிடக்க திக்கென்றாகிறது ஹீரோவுக்கு..
இப்போது சைக்கோ இன்ஸ்பெக்டர் தான் குறி வைத்திருந்த ஹீரோவை இந்த மூன்று கொலைகளிலுமே சிக்க வைத்துவிட நினைத்து பிளான் போடுகிறார். ஹீரோவோ முதலில் எதுவுமே புரியாமல் முழிப்பவர்.. இந்தக் கொலைகளுக்கும், ஹீரோயினுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது மட்டும் தெரிந்து ஹீரோயினைத் தேடி ஓடுகிறார்.
கடைசியில் என்ன ஆனது என்பது இந்த சஸ்பென்ஸ்-திரில்லர் படத்தின் மகா சஸ்பென்ஸ்.
ஏன் இந்தக் கொலைகள்..? யார் செய்வது..? கொலை செய்யச் சொன்னது யார் என்பதையெல்லாம் சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடும் என்பதால் அவற்றை முற்றிலும் தவிர்க்கிறோம்..
ஆனால் இயக்குநர் இதில் சொல்லியிருக்கும் படத்தின் அடித்தளமான ஒரு வரி கதைக்கருவின் உண்மையை, இன்றைக்கு உலகம் முழுவதிலும் இருக்கின்ற மூன்றாந்தர நாடுகள் உணர்ந்திருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளில் மிக அதிகமாக பலவிதமான நோய்கள் அதிக எண்ணிக்கையில் பரவி வருவதற்கு யார் காரணம் என்று யுனிசெப் நிறுவனமும் பன்னாட்டு சுகாதா கண்காணிப்பகமும் தீவிர விசாரணை நடத்தின.
விசாரணையில் அவர்களுக்குக் கிடைத்த உண்மைகள் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது புதிய மருந்துகளை சோதனைக்குள்ளாக்கவும், அவற்றை பரிசோதித்து பார்க்கவும் ஏழ்மை நிலையில் இருக்கும் ஆப்பிரிக்க தேசங்களையே குறி வைத்திருப்பது தெரிய வந்தது..
இருந்தும் என்ன செய்ய..? பணம் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் உலளாகவிய அரசியலும் சேர்ந்து கொள்ள இந்தக் கொடுமைக்கு இப்போதுவரையிலும் முடிவு கிடைக்கவில்லை.
மருந்து கம்பெனிகளின் செல்வாக்கு இன்றைக்கு இந்தியாவில்கூட அரசியல், அதிகாரம் இரண்டையுமே ஆட்டிப் படைக்கிறது..! விலை குறைந்த மருந்துகள் உள்நாட்டில் தயாரானாலும் அவற்றை பயன்படுத்த மருத்துவர்கள் முன் வருவதில்லை. மாறாக, விலையுயர்ந்த மருந்துகள் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்டு இந்தியா முழுவதிலும் உள்ள தனியார் மருத்துவமனைகள் இதன் மூலம் செல்வம் கொழிக்கும் நிறுவனங்களாக வளர்ச்சியடைந்து வருகின்றன.
இந்த ஒரு பொறியை இந்தப் படத்தின் மைய நாதமாக தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர். இதற்காகவே இவருக்கு ஒரு பாராட்டு.
அந்தக் கொலைகளும், அதற்கான காட்சியமைப்புகளும்.. சிக்கலான கதையில் சற்றும் குழப்பமில்லாத வகையில் கொண்டு போகப்பட்டிருக்கும் திரைக்கதையினால் படம் இடைவேளைக்கு பின்பு சுறுசுறுப்பாகிறது.
ஹீரோயின் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதும் அவரைத் தேடி அலைவதும், பின்னாலேயே போலீஸும் ஓடுவதும்.. இன்னொரு பக்கம் கொலையாளிகளும் துரத்துவதுமாக ஒரு சேஸிங்கை கண் முன்பே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் இயக்குநர்.  ஹீரோவின் வீட்டுக்கு போலீஸ் வருவதும், பின் தொடர்ந்து ஹீரோவும், கொலையாளிகளும் வருவதும் பரபர தீப்பொறி திரைக்கதை..
ஒரு திருஷ்டிப் பொட்டு போன்று கிளைமாக்ஸ் காட்சிதான் கொஞ்சம் இழுத்துவிட்டது. அதனை இன்னும் கச்சிதமாக கத்திரி போட்டிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். அதிலும் அதுவரைக்கும் டார்ச்சர் பார்ட்டியாக இருந்த இன்ஸ்பெக்டர், ஹீரோயினிடம் ‘ஸாரி சிஸ்டர்’ என்று சொல்லும்போதுதான் தியேட்டரே கை தட்டலில் அதிர்கிறது. அது கிண்டலுக்காகவா அல்லது நகைச்சுவைக்காகவா என்பது தெரியவில்லை. கூடவே தன் உயிரைக் காப்பாற்றியதால் டபாரென்று பல்டியடித்து ஹீரோவை நல்லவன் என்கிறார் வில்லன் இன்ஸ்பெக்டர்.
‘மூடர் கூடம்’ ராஜாஜிதான் இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தக் கேரக்டருக்கு பொருத்தமானவர்தான். நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிற கேரக்டர். காளி வெங்கட் எடுத்து வைத்திருக்கும் நகையை அந்தக் குடும்பத்தாரிடம் கொடுக்க வைத்துவிட்டு திரும்பவும் ஆட்டோவில் வரும்போது எதுவுமே நடக்காதது போல காளிக்கு சிரித்தபடியே ஆறுதல் சொல்லி தேற்றுகிறார். இந்தக் காட்சியில் நடிப்பிலும்  தேறியிருக்கிறார்.
ஹீரோயின் வர்ஷா.. ஹீரோவை பார்த்தவுடன் முதலில் அலறியடித்து ஓடுகிறார். சங்கடப்படுகிறார். முகத்தைச் சுழிக்கிறார். ஏன் என்று படத்தைப் பார்த்தால்தான் புரியும். அந்த உணர்வை முகத்தில் கச்சிதமாகக் காட்டியிருக்கிறார். கடைசிவரையிலும் பயத்துடனேயே ஓடிக் கொண்டிருப்பதால் அதிகம் கவரவில்லை..!
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொருவர் டார்ச்சர் இன்ஸ்பெக்டர் பசுபதியாக நடித்திருக்கும் இயக்குநர் ராஜூ ஈஸ்வரன்.. இவரது உருவத்துக்கேற்ற கேரக்டர். பேசுகின்ற ஒவ்வொரு டயலாக்கும் பெனாயிலை வாயில் ஊற்றி கொப்பளித்துவிட்டு வந்ததுபோல இருக்க.. நமக்கே கோபம் தலைக்கேறுகிறது.. இதுதான் இவரது கேரக்டருக்கு கிடைத்த வெற்றி.. அந்த வில்லன் கேரக்டரை நன்றாகவே செய்திருக்கிறார். கடைசியான அந்த ‘ஸாரி சிஸ்டர்’ டயலாக்கில் இவரது கேரக்டரும் பணாலது என்னவோ உண்மை..! தொடர்ச்சியாக நடிக்கலாமே ஸார்..? இயக்குநர்கள் இவரைக் கவனித்தால் நலம்..!  ஒரு  அருமையான வில்லன் கிடைத்திருக்கிறார்.

அதிகமான இரவு நேரக் காட்சிகளை ரசிக்க வைத்திருப்பதில் ஒளிப்பதிவாளருக்கு பெரும் பங்குண்டு.. மோனிக் குமார் என்ற இந்த ஒளிப்பதிவாளர் ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவராம்.  வெல்டன் ஸார்.
எடிட்டர் சுரேஷ் அர்ஸின் கத்திரி வேலையும் படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. தேடுதல் வேட்டையின்போது ஏற்றப்பட்ட ஒரு வேகத்தை கடைசிவரையிலும் இறக்காமலேயே கொண்டு செல்ல உதவியிருக்கிறார் எடிட்டர் ஸார்.
ரிஷால் சாயின் பாடல்கள் கேட்கும் ரகம். படமாக்கியவிதம் அருமை என்பதால் பாடல்களை கேட்க முடிகிறது. உதட்டசைவை வைத்தே பாடல் வரிகளை சொல்லிவிடலாம் என்கிற அளவுக்கு, ஆர்ட்டிஸ்டுகளை நடிக்க வைத்திருக்கும் இயக்குநருக்கு இதற்காகவே ஒரு ஷொட்டு.
சமீபமாக வெளிவரும் நிறைய படங்களில் கூத்துக் கலையைப் பற்றி ஏதாவது ஒரு சீனாவது வந்தவிடுகிறது. ஏனென்றுதான் தெரியவில்லை. இதிலும் அப்படியொரு காட்சி. இருந்தும், அந்த சில நிமிடக் காட்சியையும் மெனக்கெட்டு கடின உழைப்புடன் எடுத்திருக்கிறார் இயக்குநர்.
படம் எந்த இடத்திலும் கதையை மீறி வெளியில் போகவிடாமல் பார்த்துக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில், கொடுக்கப்பட்ட சுதந்திரத்தில், தன்னால் முடிந்த அளவுக்கு நியாயமான ஒரு படத்தை சமர்ப்பித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கே.ராஜீவ் பிரசாத்.
லாஜிக இடிக்குது என்று இந்தப் படத்தில் எதையும் சொல்ல முடியாத அளவுக்கு திரைக்கதையில் பலவீனம் இல்லாமல் பார்த்துக் கொண்டு, தன்னுடைய சிறப்பான இயக்கத்தினால் படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார்.
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!  

1 comments:

லகுட பாண்டி said...

தலைவரே,

நடிகர் சங்க தேர்தல் மற்றும் முடிவுகள் பற்றிய உங்கள் பதிவை எதிர்பார்கிறேன்.

உங்க ஸ்டைல் கவரேஜ் நல்லா இருக்கும்.

ப்ளீஸ்