பொங்கியெழு மனோகரா - சினிமா விமர்சனம்

06-02-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



ஈரோடு பக்கமுள்ள ஒரு கிராமம். அந்த ஊரில் ‘கலைவாணி நாடகக் குழு’வை நடத்துகிறார் சிங்கம்புலி. அந்த நாடகத்தில் அவ்வப்போது சின்ன வேடங்களில் நடிக்கிறார் ஹீரோ இர்பான்.  இவருடைய அப்பா சம்பத்ராம் ஒரு பால் வியாபாரி. அம்மாவை அப்பாவே விரட்டிவிட்டார். அம்மாவின் முகமே மறந்துவிட்டது ஹீரோவுக்கு..
இப்போதும் வாலிப வயதில் அடி, உதைக்கு அஞ்சாத அப்பாவிடம்… பாசமென்றால் என்னவென்று சொல்லிக் கொடுக்காத தந்தைக்கு பால் வியாபாரத்தில் கூட மாட ஒத்தாசை செய்து அப்படியே நாடகத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஹீரோ.
இந்த நேரத்தில்தான் சிங்கம்புலிக்கு பொண்ணு பார்க்கப் போன இடத்தில் ஹீரோயின் அர்ச்சனாவை பார்த்து பேச வேண்டிய கட்டாயம் ஹீரோவுக்கு. அர்ச்சனா பக்கத்து ஊரில் இருக்கும் பஞ்சு மில்லுக்கு வேலைக்குச் செல்லும்போது இருவரும் தினமும் சந்திக்கத் துவங்க.. ஹீரோயின் மேல் ஹீரோவுக்கு காதல் தானாக பிறக்கிறது.
இந்தக் காதலை வாழ வைக்க சிங்கம்புலி அண்ட் கோ மிகவும் கடுமையாக உழைக்கிறது. காதல் வந்துவிட்டது என்று ஹீரோ நினைத்த நேரத்தில் டிவிஸ்ட்டாக  ஹீரோயினுக்கு  திருமணம்.  ஹீரோயினே திருமணத்திற்கு தானாகவே ஒத்துக் கொண்டது தெரிந்து கடும்கோபமாகிறார் மனோகரன்.
“அவ என்ன என்னை வேண்டாம்ன்னு சொல்றது.. நான் இனிமேல் ஆனந்தியை காதலிக்கிறேன்…” என்று சொல்லி இன்னொரு ஹீரோயினை ஒருதலையாகக் காதலிக்கத் துவங்குகிறார். ஹீரோவின் இந்தக் காதலாவது ஜெயித்ததா..? அவரது அம்மாவின் நிலை என்ன..? அம்மாவை ஹீரோ கடைசியாக சந்தித்தாரா என்பதுதான் மீதி படம்..
இர்பான்.. பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர். இதுதான் அவரது முதல் ஹீரோயிஸ படம் என்று நினைக்கிறோம். டிவி சீரியில் நடிப்பு கை கொடுத்திருப்பதால் பல காட்சிகளில் இவரை ரசிக்க முடிகிறது.. கிளைமாக்ஸில் மிக பரிதாபமான உணர்வை வரவழைத்துவிட்டார். அந்தக் காட்சி எமோஷனலானதுதான் என்றாலும் மேலும் ஒரு அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் வரவழைத்தது இர்பானின் நடிப்பினால்.. இவர் மென்மேலும் உயர வாழ்த்துகிறோம்.
ஹீரோயின்கள் இருவரில் தேன்மொழியாக நடித்த அர்ச்சனாவைவிடவும் ஆனந்தியாக நடித்த அருந்ததி நாயருக்கு ஸ்கோப் அதிகம். அழகும்கூட.. காதலை ரிஜக்ட் செய்துவிட்டுப் போகும் காட்சியில் அருந்ததி நாயருக்கு ஒரு ‘ஜே’ போட வேண்டும். அழுத்தமான நடிப்பு. மலையாள வரவுகள் எப்போதும் சோடை போனதில்லை..
சிங்கம்புலியின் நான் ஸ்டாப் காமெடி வசனங்களில் பல இடங்களில் சிரிப்பே வரவில்லையென்றாலும், சில இடங்களில் வந்துவிட்டது.. அதிலும் அந்த முடி திருத்துனரை அடித்து உதைக்கும் காட்சி முழுக்கவே சிரிப்பலைதான்.. இயக்குநரின் இயக்கத் திறமைக்கு இந்த காட்சியும், கிளைமாக்ஸும் ஒரு சான்று..!
படத்தின் துவக்கத்தில் இருந்து இடைவேளைவரையிலும் ஒரு காதலை வளர்ப்பதிலேயே போய்விடுகிறது. இடைவேளைக்கு பின்பு அடுத்த காதலை வளர்ப்பதும் அதை அடையும் வழியுமாகவே திரைக்கதை செல்கிறது. திடீரென்று அம்மா சென்டிமெண்ட்டில் படம் திசை மாறி கிளைமாக்ஸ் படு சோகமாக முடிந்திருப்பதை சட்டென்று ஏற்க முடியவில்லை.
படம் காதலைச் சொல்கிறதா அல்லது அம்மா பாசத்தைச் சொல்கிறதா என்கிற முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறார்கள் பார்வையாளர்கள். ஏதாவது ஒரு திசையில் பயணித்திருக்கலாம்..
சி.ஜெ.ராஜ்குமாரின் ஒளிப்பதிவில் குறைவில்லை. முதல் டூயட் பாடலே சான்று.. சின்ன பட்ஜெட் படங்களில் இப்போதெல்லாம் ஒளிப்பதிவு மட்டும் முதல் தரமானதாகவே இருக்கிறது. இந்த நல்ல விஷயங்களை இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்வதுதான் குறைவாகவும் இருக்கிறது..! கிளைமாக்ஸில் அந்த சோகத்தை படப்பதிவு செய்திருப்பதில் ஒளிப்பதிவாளரின் பங்கும் அதிகம்தான்..! வாழ்த்துகள்..!
கண்ணனின் இசையில் அம்மா பற்றிய சோகப்பாடல் பிழிய வைக்கும் காட்சிகளுடன் உருக வைக்கும் குரலில் ஒலிக்கிறது. கேட்கலாம். முதல் டூயட்டும் ஓகேதான்..
ஹீரோவின் அப்பாவான சம்பத்ராமின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் “இப்படியெல்லாம் ஒரு அப்பன் இருந்தால் எந்த மகனும் கூட இருக்க மாட்டான்…” என்கிற ஒரு வசனத்தை அவரை நோக்கி வீசுவதாக வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். பையனை போட்டு அந்த மிதி மிதிக்கிறார். பாசத்தைக் கொட்டி வளர்ப்பதைவிட்டு அடித்து, உதைத்து வளர்க்கும் அப்பன்களின் கடைசி காலம் எப்படியிருக்கும் என்பதை கோடிட்டு காட்டியிருக்கலாம்..!
ஹீரோவின் அம்மா-அப்பா கதையை சம்பத்ராமின் நண்பர் கடைசியில் சொல்லி அதன் விளைவாகவே ஹீரோ அம்மாவைத் தேடி போவதாக திரைக்கதை செல்கிறது. இதற்கு முந்தைய காட்சியில் காதலும் இல்லை என்றாகிறது. இதனாலேயே அம்மாவைத் தேடிச் செல்வது போல போக.. முன்னதையும் ரசிக்க முடியவில்லை. பின்னதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை..!
அவ்வளவு எளிதாக ஒரு காதலை தூக்கியெறிந்துவிட்டு அடுத்தக் காதலை கையில் எடுத்துக் கொள்ளும்விதத்தை எப்படித்தான் ஏற்பது..? டாஸ்மாக்கில் இடையிடையே இந்த திசைமாற்றலை நயத்துடன் சொல்லி திரைக்கதை நகர்த்தியிருப்பது ரசிக்கும்படி இருந்தாலும், நம்பும்படியாக இல்லை..!
சின்ன பட்ஜெட் படங்களை ஓவராக எழுதி கொலை செய்துவிடாதீர்கள் என்கிறார்கள். படத்தில் நல்லவிதமாக எடுத்துச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தால் இந்தப் பேச்சு வராதே..?!
இயக்குநர் ரமேஷ் ரங்கசாமி அடுத்த படத்தில் இன்னும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

0 comments: