புலன் விசாரணை -2 - சினிமா விமர்சனம்

02-02-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஆர்.கே.செல்வமணி என்னும் பிரமாண்டமான இயக்குநர் சற்று ஓய்வெடுத்திருந்தாலும் அவருடைய இடம் அவருக்கே மட்டுமானது என்பதை இத்தனையாண்டுகள் கழித்து வந்திருக்கும் அவருடைய இந்தப் படமே சாட்சியமளிக்கிறது.
காதல், கமர்ஷியல், கருமாந்திரங்களுக்கு நிறைய இயக்குநர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள். நாட்டின் இன்றைய நிலைமை.. முக்கிய விஷயங்கள்.. மக்களை பாதிக்கும் அரசுகளின் கொள்கைகள் இவற்றை விமர்சிக்கும் படங்கள் மிக குறைவு. அப்படியே வந்தாலும் பேருக்கு பொத்தாம் பொதுவாக குறையைச் சொல்லிவிட்டு போகின்றன.
இந்தப் படத்தில் நேரடியாக பெயரைச் சொன்னால் சென்சார் போர்டின் அனுமதி கிடைக்காது என்கிற ஒரே காரணத்தால் யாரை தாக்கியிருக்கிறார் என்பதை நமது யூகத்திற்கே விட்டுவிட்ட இயக்குநர் தன்னால் முடிந்த அளவுக்கு மிகச் சிறப்பான ஒரு படத்தைத் தந்திருக்கிறார்.
எண்ணெய் எரி வாயு கழகம் ஆந்திர கோதாவரி ஆற்றுப் படுகையில் கண்டுபிடித்த எரிவாயு கிணற்றை அப்படியே ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்தது எப்படி என்பதை யாராவது கண்டறிந்து சொன்னால் என்ன என்கிற கேள்வியை இந்தப் படத்தின் மூலமாக எழுப்பியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.


எண்ணெய் எரி வாயு கழகத்தைச் சேர்ந்த சில பொறியாளர்கள் குளுமனாலிக்கு டூர் செல்கிறார்கள். சென்ற இடத்தில் பேருந்து கவிழ்ந்து ஒரு பெண் பொறியாளரைத் தவிர மற்ற அனைவருமே மரணமடைகிறார்கள்.  அந்தப் பெண் பொறியாளர் குளுமனாலியில் இருந்து தப்பித்து டெல்லிக்கு வருகையில் அவரை நடு ரோட்டில் சுடுகிறார்கள் சிலர்.
காவல்துறை அதிகாரி பிரசாந்த் அவர்களை விரட்டிவிட்டு அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கிறார். ஆனால் மருத்துவமனையிலும் விடாமல் தொடர்ந்து வந்து அந்தப் பெண்ணை கொலை செய்கிறது ஒரு டீம்.
யார் இந்தப் பெண்..? எதற்கு இந்த கொலை என்று நூல் பிடித்து மேலே போகப் போக.. மிகப் பெரிய ஊழல் மற்றும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களெல்லாம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. பிரசாந்த் இந்த வழக்கைத் தோண்டத் தோண்ட.. கோபப்படும் அந்த தொழிலதிபர் கொம்பானி, பிரசாந்தின் குடும்பத்தினரை கொலை செய்கிறார்.  இந்த நேரத்தில் தனது வாழ்க்கையையே இழந்தவிட்டதாக கருதும் பிரசாந்த் மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்து அவர்களை எப்படி பழி வாங்கி இந்த ஊழலை நாட்டு மக்களிடத்தில் வெளிப்படுத்துகிறார் என்பதுதான் படம்.
படத்தின் மிகப் பெரிய பலமே வசனகர்த்தா லியாகத் அலிகானின் பொறி பறக்கும் வசனங்கள்தான். அதிலும் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகள்.. மன்சூரலிகான் கோர்ட்டில் முன் வைக்கும் வாதங்களெல்லாம் இன்றைய டிவி நிகழ்ச்சிகளின் விவாத மேடைக்கு உரம் கொடுப்பவை.
பெட்ரோல் விலையுர்வில் பின்பற்றப்படும் மறைமுகமான ஊழல்கள்.. 'நம்மைவிட சின்ன நாடுகளிலெல்லாம் விலை குறைந்திருக்கும் நிலையில் நம்ம நாட்டில் மட்டும் ஏன் நிறைய வரிகளை சேர்த்து விலையை உயர்த்த வேண்டும்..?' என்று மன்சூரலிகான் கேட்கும் கேள்வியெல்லாம் இங்கே வடபழனி பெட்ரோல் பங்க் அருகே ஒலிக்கும் ஒரு சமான்யனின் குரல்தான்..!
ராதாரவி, பிரகாஷ்ராஜ் என்ற இரண்டு ஜாம்பவான்களின் நடிப்பில் கிளைமாக்ஸில் நடக்கும் கோர்ட் சீன்களெல்லாம் பொறி பறக்க வைக்கின்றன.
இந்த நாட்டில் லஞ்சமும், ஊழலும் எந்த அளவுக்கு வியாபித்திருக்கின்றன. அவைகள் அரசியல்வாதிகளால் எந்த அளவுக்கு ஆராதிக்கப்படுகின்றன. மறைக்கப்படுகின்றன என்பதை அந்த தொழிலதிபர் கொம்பானியின் கேரக்டர் மூலமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
“காலைல தேய்க்குற பிரஷ்ல இருந்து ராத்திரிவரைக்கும் இந்தியால இருக்குற ஒவ்வொருத்தனும் யூஸ் பண்றது என்னோடதாத்தான் இருக்கணும். சுருக்கமா சொல்லணும்ன்னா இந்த இந்தியாவையே நான்தான் தினமும் இயக்கணும்..” என்று கொதிக்கிறார்  கொம்பானி. இது உண்மைதானே..? இப்போதும் இதுதானே நடக்கிறது..
சில, பல சினிமாத்தனமான காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளைத் தவிர படத்தில் குறை சொல்ல ஏதுமில்லை. இந்தப் படத்திற்கு பாடல் காட்சிகளே தேவையில்லை. அனைத்தையுமே நீக்கியிருக்கலாம். பாடல் காட்சிகள் படத்தின் வேகத்தையும் குறைக்கின்றன.
அப்போதைய அறிமுக நடிகரான ஆர்.கே. வசனத்தில் போடும் சண்டைகளே புல்லரிக்க வைக்கின்றன. ஒரு வசனகர்த்தாவின் வெற்றியே நல்லவன், கெட்டவன் இருவருக்குமே அவரவர் தரப்பு நியாயங்களை வெளிப்படையாக சொல்ல வைப்பதுதான். இதில் அதை முழுமையாகச் செய்திருக்கும் வசனகர்த்தாவுக்கு சிறப்பு விருதே அளிக்க வேண்டும்..!
பிரசாந்த் இன்னொரு ரவுண்டு வரணும்.. ஏன் தாமதிக்கிறார் என்று தெரியவில்லை. பிரமிட் நடராஜனுடன் வாக்குவாதம் செய்யும்போது துணை கமிஷனர் கெத்து குறையாமலேயே இருக்கிறது. வித்தியாசம் தெரியவில்லை.  பாடல் காட்சிகள், சண்டை காட்சிகளில் குறையே வைக்கவில்லை.
விசாரணை கமிஷன் நீதிபதியே கடைசி நிமிடத்தில் சறுக்கி விழுக.. அதற்காக அவரது மகளை கடத்திச் சென்று வைத்துவிட்டு டிராமா போடுவது செமத்தியான டிவிஸ்ட். இதேபோல் கோர்ட்டில் பிரகாஷ்ராஜ் கடைசியாக செய்யும் ‘நோ கொஸ்டீன் டிராமா’வும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.
பாடல் காட்சிக்காக மட்டுமே ஹீரோயின் கார்த்திகா. இப்போது கல்யாணமாகி குழந்தையே பெற்றுவிட்டார். நான்காண்டு கால தாமதம் என்பதால் இந்த நிலைமை..
இந்திய அளவில் இந்த ஊழலை வெளிக்கொணர தா.பாண்டியனையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் நிஜமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்.. ஆனால் இன்றைக்கு தா.பாண்டியன் மீதே இதே போன்ற குற்றச்சாட்டுக்களை அவரது கட்சியினரே வைத்திருக்கிறார்கள். என்ன கொடுமை இது..?
இது போன்ற படங்களில் திரைக்கதையில் வேகம் இருந்தால் படமும் விறுவிறுப்பாக இருக்கும். அது இந்தப் படத்திலும் இருக்கிறது. பாடல் காட்சிகளை மட்டும் நீக்கியிருந்தால் இன்னமும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
ராஜராஜனின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் அதகளம். அது போல சிம்லா காட்சிகளும் அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றன. பாடல் காட்சிகளில் நடனத்தின் வேகத்தை படமாக்கியிருப்பதில் ராஜராஜன் இப்போதைய ஒளிப்பதிவாளர்களுக்கு சவாலே விட்டிருக்கிறார். படத்தின் வேகத்தைக் கூட்டியதில் எடிட்டருக்கும் பெரும் பங்குண்டு. அவருக்கும் நமது பாராட்டுக்கள்..!
சினிமாவுலகம் நாட்டுக்கு என்ன செய்தது என்று கேட்பவர்களும், கேட்டவர்களும், நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்களும் நிச்சயம் காண வேண்டிய படம்..!
நான்காண்டுகள் கால இடைவெளியாகியும் படத்தை எப்படியும் ரிலீஸ் செய்தே தீருவேன் என்று உறுதியுடன் இருந்து அதனைச் செயல்படுத்தியுள்ள படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தருக்கு நமது பாராட்டுக்களும், நன்றிகளும்..!

3 comments:

எம்.ஞானசேகரன் said...

விமர்சனம் படத்தைப் பார்க்க ஆவலைத் தூண்டுகிறது.பகிர்விற்கு நன்றி. த.ம.+

Unknown said...

Parkalam

ரிஷி said...

இசை படத்திற்கு விமர்சனத்தை காணவில்லையே?