எட்டுத்திக்கும் மதயானை - சினிமா விமர்சனம்

28-02-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘ராட்டினம்’ பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார். ‘ஸ்டூடியோ-9’ ஆர்.கே.சுரேஷ் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
சத்யா, ஸ்ரீமுகி, கே.எஸ்.தங்கசாமி, லகுபரன், சாம் ஆண்டர்சன், பானுசந்தர், மதுரை பாலா, ‘அசத்தப் போவது யாரு’ ராஜ்குமார், ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு ஆர்.ஜே.ஜெய். இசை மனுரமேசன். எடிட்டிங் – தீபக் துவாரகநாத். கலை – மணி கார்த்திக்.

ராமேஸ்வரத்தில் பெயிண்ட் கடை வைத்திருக்கிறார் தங்கசாமி. இவரது தம்பி லகுபரன். கல்லூரி மாணவர் ஒரு பெரிய அரசியல்வாதியின் மகளைக் காதலிக்கிறார். இதையறியும் அந்த அரசியல்வாதியின் உறவுக்காரரான உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இதனை அரசியல்வாதியிடம் போட்டுக் கொடுக்க.. லகுபரனை தட்டி வைக்கச் சொல்கிறார் அரசியல்வாதி.
கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர்களுக்குள் மோதல் என்பது போல ஒரு செட்டப் செய்து லகுபரனை அடித்து உதைக்கிறார்கள். இதற்கு இன்ஸ்பெக்டரும் உடந்தையாக இருக்க.. இந்தத் தாக்குதலில் லகுபரன் மரணமடைகிறார்.
உண்மை தெரிந்து தங்கசாமி உள்ளூர் போலீஸில் புகார் செய்ய, அவர்கள் விஷயத்தை அந்த இன்ஸ்பெக்டருக்கு பாஸ் செய்கிறார்கள். கூடவே தங்கசாமி மீதும் பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள்.
இதனால் வெகுண்டெழும் தங்கசாமி உண்மையில் தனது தம்பியின் கொலைக்குக் காரணமான அந்த இன்ஸ்பெக்டரை பழிக்குப் பழி வாங்க துடிக்கிறார். அந்த இன்ஸ்பெக்டர் இப்போது திருநெல்வேலியில் வேலை பார்க்க.. அங்கேயே தனது ஜாகையை மாற்றிக் கொண்டு நல்ல நேரத்திற்காகக் காத்திருக்கிறார்.
இதே நேரம் அதே ஊருக்கு டிரான்ஸ்பராகி வருகிறார் சப்-இன்ஸ்பெக்டர் பானுசந்தர். அவரது மகன் சத்யா. வெட்டி ஆபீஸர். உள்ளூர் டிவியில் அறிவிப்பாளராக இருக்கும் ஹீரோயின் ஸ்ரீமுகியை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். சில, பல துரத்தல்கள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காதல் ஓகேவாகிறது.
இந்த நேரத்தில் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் பானுசந்தர் கொலையாகிறார். அவரை யார் கொலை செய்தது என்பது தெரியாமலேயே இருக்க.. சத்யாவுக்கு கருணை அடிப்படையில் போலீஸ் வேலை கிடைக்கிறது. இவரும் சப்இன்ஸ்பெக்டராகிறார். அதே ஊருக்கே வருகிறார்.
வில்லன் இன்ஸ்பெக்டரும், அரசியல்வாதியும் காரில் செல்லும்போது விபத்து ஏற்பட அரசியல்வாதி சாகிறார். வில்லன் இன்ஸ்பெக்டர் இது தனக்கு வைக்கப்பட்ட குறி என்பதை உணர்ந்து துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்.
இன்னொரு பக்கம் தனது தந்தையின் சாவுக்கு யார் காரணம் என்பதை கண்டறியும் வேலையில் இறங்குகிறார் சப் இன்ஸ்பெக்டர் சத்யா.
வில்லன் இன்ஸ்பெக்டரை தீர்த்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று துடித்துக் கொண்டிருக்கிறார் தங்கசாமி.
இந்த மூன்றும் நடந்ததா இல்லையா என்பதுதான் கதை..!
இந்த இயக்குநரின் முதல் படமான ‘ராட்டினம்’ படம் தந்த ஒரு புதிய அனுபவம்தான் இந்தப் படத்தின் மிகப் பெரிய விளம்பரம். அதனாலேயே இந்தப் படத்தை ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ என்ற சொந்த நிறுவனத்திற்கே பெயர் சூட்டியிருக்கிறார் இயக்குநர் தங்கசாமி.
சத்யா ‘அமரகாவியம்’ படத்திற்கு முன்பேயே நடித்த படம் இது. ஆனால் ‘அமரகாவியம்’ இதைவிட படு வேகமாக தயாரிக்கப்பட்டதால் அந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் மறுபடியும் இந்தப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
மூன்றாவது படத்திலேயே குருவி தலையில் பனங்காயை வைத்தக் கதையாக போலீஸ் கேரக்டர்.. இயக்குநர் ரொம்ப நம்பிட்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. போலீஸ் உடையில் வரும் கம்பீரம் இல்லையென்றாலும் தேடுதல் வேட்டையிலும், புதிய வேலையில் சேரும் ஒரு அப்பாவி சப்-இன்ஸ்பெக்டர் வேடம் இவருக்குப் பொருந்துகிறது. முற்பாதியில் செய்யும் காதல் துரத்தல்களைவிடவும் பிற்பாதியில் பொறுப்பான மகன் கேரக்டரே பெரிதும் ரசிக்க வைக்கிறது.
ஹீரோயின் ஸ்ரீமுகி. மூக்கும், முழியுமாக லட்சணமாக இருக்கிறார். தமிழ்ச் சினிமாவுக்கு புது வரவுதான். நடிப்புக்கென்றே தனியாக ஸ்கோப் இல்லையென்றாலும் சின்னச் சின்ன ஆக்சன்களில் ரசிக்க வைத்திருக்கிறார். கண்ணியமான இயக்குநரின் கைவண்ணத்தில் பாடல் காட்சிகளில் கண்ணியமாகவே வந்து செல்கிறார்.
சாம் ஆண்டர்சன் துணைக்கு வந்து அவ்வப்போது கலகலக்க வைக்கிறார். இயக்குநர் தங்கசாமியும் நடித்திருக்கிறார். படத்தின் பிற்பாதியில் ஒரு பயவுணர்வை கொடுப்பதே இவர்தான். முகத்தில் தெரியும் கோபம் சினிமாத்தனம் இல்லாமல் இயற்கையாக இதுவரையில் பார்க்காததாக இருப்பதுதான் பிளஸ் பாயிண்ட்.  மனைவி கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்திலும் தம்பியின் மரணம் தன்னைத் தூங்கவிடாமல் செய்வதினால் எத்தனை கஷ்டம் வந்தாலும் சமாளிக்கத் தயார் என்று சொல்லும் அந்த காட்சி மிக யதார்த்தம்.
‘ராட்டினம்’ படத்திலும் இவரே லகுபரணின் அண்ணன் வேடத்தில் நடித்திருந்தார். இனி அடுத்த படங்களில் நடிக்காமல் அந்த வாய்ப்பை வேறொரு நடிகருக்கு தாரை வார்த்துவிட்டு இயக்கத்தை செய்தால்,  படத்தின் மார்க்கெட் வேல்யூவிற்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
‘ராட்டினம்’ ஹீரோ லகுபரன் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் சின்னச் சின்ன கேரக்டர்கள்தான் என்றாலும் பானுசந்தர், அவரது மனைவியாக நடித்திருந்த பிரியா, ஹீரோயினின் பாசமான அப்பா.. தங்கசாமியின் மனைவியாக நடித்திருந்த இன்னொரு பிரியா அனைவருமே ரசிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் பாடல்களுக்கான இசை ஓகேதான் என்றாலும் பின்னணி இசை நடித்தவர்களுக்கு உதவியளிக்கவில்லை.
பாழாய்ப் போன இந்தக் காதல் இல்லையேல் தமிழ்ப் படங்கள் ஓடாது என்கிற விநியோகஸ்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக சில விட்டுக் கொடுத்தல்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இதனாலேயே படத்தின் முற்பாதியில் முக்கால் மணி நேரம் கழித்தே கதை என்ன என்பது லேசாக தெரிகிறது. இதுதான் படத்தின் மைனஸாக இருக்கிறது..
இப்போதெல்லாம் படத்தின் முதல் ஷாட்டிலேயே கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் அத்தனை நேரம் பொறுமையாகக் காத்திருக்கும் பக்குவத்தை கடந்துவிட்டார்கள் என்பதை இயக்குநர்களும புரிந்து கொள்ள வேண்டும்.
2008-ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதலை ஞாபகப்படுத்தும்வகையிலான காட்சிதான் படத்தின் முதல் காட்சி.
இதேபோல் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் 2010-ம் ஆண்டு வெற்றிவேல் என்ற சப்-இன்ஸ்பெக்டர் சில ரவுடிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இது ஆள் மாறாட்டத்தினால் நடந்தது. வேறொரு இன்ஸ்பெக்டருக்கு வைத்த குறி, இவர்தான் அவர் என்று நினைத்து தவறுதலாக வெற்றிவேலை கொலை செய்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்தையும் படத்தின் மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட்டாக வருமளவுக்கு திரைக்கதையில் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார் இயக்குநர்.
பழிக்குப் பழி கதைதான்.. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சஸ்பென்ஸ், திரில்லராக கொண்டு போக முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் தங்கசாமி. படத்தின் திரைக்கதையை தலைகீழாக மாற்றி சொல்லியிருந்தால் இன்னமும் சுவராஸ்யப்பட்டிருக்கும்.
‘எட்டுத்திக்கும் மதயானை’ டைட்டிலுக்கேற்ப இந்தப் படத்திற்கும் ‘எட்டுத்திக்கிலும் மத யானைக் கூட்டங்கள்’தான். இவற்றுக்கிடையில் அடித்துப் பிடித்து நுழைந்திருக்கும் இந்தச் சின்னப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..! 

0 comments: