‘ஆரண்யகாண்டம்’ படத்திற்கு தேசிய விருதுகள் கிடைத்தது எப்படி..?

15-07-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
2011-ம் ஆண்டு வெளியான ‘ஆரண்யகாண்டம்’ திரைப்படம் இப்போதும் தமிழ்ச் சினிமாவில் மாற்று சினிமாவை விரும்பும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது. ‘தமிழ்ச் சினிமாவில் வெளிவந்த முதல் உலக சினிமா இதுதான்’ என்றுகூட பலரும் இணையத்திலும், இதழ்களிலும் எழுதி வருகின்றனர். இருந்தாலும், படம் தியேட்டர்களில் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்த ‘ஆரண்யகாண்டம்’ திரைப்படம் 2011-ம் ஆண்டிற்கான தேசிய அளவில் ‘சிறந்த அறிமுக இயக்குநர் விருது’, மற்றும் ‘சிறந்த எடிட்டருக்கான விருது’ என்று இரண்டு விருதுகளை மட்டுமே பெற்றிருந்தது. முக்கியமாக அந்த ஆண்டின் தமிழில் மிகச் சிறந்த படத்திற்கான விருதும், நடிகர், நடிகையருக்கான விருதுகளில் எதுவும் அதற்குக் கிடைக்கவில்லை.. மாறாக ‘வாகை சூட வா’ படத்திற்கு சிறந்த தமிழ் சினிமாவுக்கான விருது கிடைத்தது.
ஒருவேளை, அந்த வருடம் இதைவிட சிறந்த படங்கள் வந்திருந்ததோ என்றெண்ணி சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் அமைதியாகவே இருக்கிறார்கள்.
ஆனால் நேற்றைக்கு ‘திருடன் போலீஸ்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் வெளியிட்ட ஒரு தகவலைக் கேட்டவுடன் அநியாயமாக ஒரு படம் தன்னுடைய புகழையும், பெயரையும் இழந்திருக்கிறது என்பதுடன் இதற்கு படைப்பாளிகள் சிலரே துணை போயிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது..
முதலில் எஸ்.பி.ஜனநாதனின் பேச்சு..
“2011-ம் வருஷத்திய சிறந்த படங்களைத் தேர்வு செய்யும் ஐந்து நீதிபதிகளில் நானும் ஒருவன். அப்போ ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படமும் தேசிய விருதுக்காக வந்திருந்தது. எங்களுக்காக அந்தப் படத்தை போட்டுக் காட்டினாங்க. படம் ஓடிட்டிருக்கும்போதே 4 நீதிபதிகள் படத்தை நிறுத்தச் சொல்லிட்டு, எந்திரிச்சு போயிட்டாங்க..
நீதிபதிகளுக்கு படம் பிடிக்கலைன்னா நிறுத்தலாம்னு ஒரு விதியிருக்கு. ஆனா எந்தவொரு நீதிபதிக்கும் படம் படிச்சிருந்தா அவர் தொடர்ந்து பார்க்கலாம்னு விதி இருக்கு. அதன்படி நான் அந்தப் படத்தை தொடர்ந்து பார்த்தேன். ஆனால் சிறந்த படத்தின் தேர்வுக்காக நான் ஒருவன் மட்டுமே சிபாரிசு செய்ய முடியாது.  மத்தவங்களும் சொல்லணும்.. அதுனால அந்தப் படத்தை சிறந்த படத்தோட லிஸ்ட்ல சேர்க்க முடியலை..
ஆனாலும் இயக்குனர் ஹரிஹரன்கிட்ட நான் பேசுனப்போ, ‘நீங்க எது, எதுல வருதோ அதுக்கு ரெகமண்ட் பண்ணுங்க.. மேல பேசிக்கலாம்’னு சொன்னார். அதுக்கப்புறம்தான் அந்தப் படத்துக்கு இரண்டு பிரிவுகளில் சிபாரிசு செய்யப்பட்டு சிறந்த அறிமுக இயக்குனர் விருதும், சிறந்த எடிட்டர் விருதும் கிடைத்தது. இதுவே எனக்கு கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது..” என்றார்.
என்ன கொடுமைய்யா இது..? படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள் பார்த்துவிட்டு பிடிக்கலைன்னு சொல்லிட்டுப் போவதுதான் நல்ல படைப்பாளிகளின் செயலா..? ஒரு திரைப்படத்தின் ஆக்கம் என்பது ஒரு சில நிமிடங்களில் முடிந்துவிடுவதில்லை என்பது இவர்களுக்கா தெரியாது..? இறுதிவரையில் பார்த்தால்தான் அந்தப் படத்தின் சிறப்புக்களும், தன்மைகளும் புரியும். இப்படி தாங்கள் எப்போதும் எதிர்பார்க்கும் ‘டிரெண்ட்டில்’ படம் இல்லை என்றவுடன் படத்தை நிறுத்திவிட்டு சென்ற நீதிபதிகள், உண்மையிலேயே படைப்பாளிகள்தானா என்று கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.
இதில் வெட்கப்பட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம்..
இந்த 2011-ம் ஆண்டில் தமிழ், மலையாள மொழிகளில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் Alaknanda Roy(Head), Sashi Paravoor(Director), S.P.Jananathan(Director), T.G.Thyagarajan(Producer), Bela Negi(Film maker and editor) ஆகியோர்தான்..!
இதில் மற்றவர்களை விடுங்கள்.. எஸ்.பி.ஜனநாதனைத் தவிர இன்னொரு தமிழரும் இதில் நீதிபதியாக இருந்திருக்கிறார். அவர் தற்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் துணைத் தலைவராக இருக்கும் பிரபல தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன்.
எஸ்.பி.ஜனநாதன் சொன்னபடி பார்த்தால் இவரும்தான் படத்தைப் புறக்கணித்து வெளியேறியிருக்கிறார்..
தமிழனுக்கு தமிழனே எதிரி என்பதற்கு இதைவிடவும் சிறந்த உதாரணம் வேண்டுமா..?

0 comments: