இருக்கு ஆனா இல்ல - சினிமா விமர்சனம்

29-07-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1990-ல் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான டெமிமூர் நடித்த ‘ghost’ ஆங்கில படத்தில் இடம் பெற்ற ‘பேய் ஒருவரின் கண்களுக்கு மட்டும் தெரிவது’ என்ற ஒரு சுவாரஸ்யத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு அதில் புதிய திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஐ,டி. நிறுவனத்தில் பணிபுரியும் நாயகன் விவாந்த். இவருடைய நண்பன் ஆதவன். இவர்களுடன் கதாநாயகி மனிஷாஸ்ரீயும் அதே கம்பெனியில்தான் வேலை பார்த்து வருகிறார்.
சுவாரஸ்யமே இல்லாத வாழ்க்கையை வாழும் விரக்தியில் தினமும் குடியும், கும்மாளமுமாக இருக்கிறார் ஹீரோ. ஒரு நாள் விவாந்த் மது அருந்திவிட்டு வீடு திரும்பும்போது விபத்து ஏற்படுகிறது. ஹீரோவின் பைக்குடன் மோதிய ஒரு ஆட்டோவில் இன்னொரு ஹீரோயின் ஈடன் இறந்து கிடக்கிறார்.
உடனேயே தனது நண்பன் ஆதவனுக்கு போன் செய்து என்ன செய்வது என்று கேட்கிறார் ஹீரோ. உடனேயே அங்கேயிருந்து தப்பித்து போயிரு என்கிறான் நண்பன். அப்படியே சத்தமில்லாமல் வீட்டுக்கு வந்து படுக்கிறான் ஹீரோ. ஆனால் பின்னாலேயே ஸ்பாட்டில் இறந்து போன ஈடனின் ஆவியும் அந்த வீட்டில் குடியேறுகிறது..
யாரோ வீட்டில் நடமாடுகிறார்கள் என்று தெரிந்து பயப்படுகிறார் ஹீரோ. நண்பனிடம் சொல்கிறார். நண்பன் இல்லை என்கிறான். ஹீரோவை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான். அந்த மனநல மருத்துவரான ஒய்.ஜி.மகேந்திரனோ, “பேய் இருக்கிறதெல்லாம் உண்மைதான். நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போகின்ற ஆன்மாக்கள் பேயாக நம் கூடவேதான் இருக்கும்” என்று அவர் பங்குக்கு கொஞ்சம் பயமுறுத்துகிறார்.
கடைசியில் பேய் ஹீரோவின் கண்களுக்கு மட்டும் புலப்படுகிறது.. தான்தான் அந்த விபத்தில் இறந்து போன பெண் என்கிறது பேய். தான் யார் என்பதை கண்டுபிடித்துக் கொடுத்தால்தான் அந்த வீட்டைவிட்டு போவேன் என்று அடம்பிடிக்கிறது பேய்.
அந்தப் பேயை துரத்த பல்வேறு வழிகளையும் கையாள்கிறான் ஹீரோ. பலிக்கவில்லை. “அந்த பேயின் ஆசையை நிறைவேற்றி வைத்தால்தான் பேய் அவனைவிட்டு விலகும்…” என்று மருத்துவர் அறிவுரை சொல்ல.. பேய் யாரென்று கண்டறிய போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி என்று அலைகிறான்.
அப்போது, அந்த விபத்தில் இறந்து போன ஈடனின் உடன் பிறந்த சகோதரியும் அதே மருத்துவமனையில் கோமா நிலையில் இருப்பதை கண்டறிகிறார்கள். தனது தாயையும் பேய் கண்டுபிடித்துவிட அவர்களது வீட்டில் கொண்டு போய் பேயை விட்டுவிட்டு வருகிறான் ஹீரோ.
ஈடனின் தாய் மருத்துவமனையில் இருக்கும் தனது இன்னொரு மகளை மீட்க பெரும் முயற்சி செய்து வருவதை அறிந்து அவர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறான் ஹீரோ. இதற்காக கம்பெனியில் இருந்து அமெரிக்காவுக்கு போகும் வாய்ப்பைக்கூட நிராகரிக்கிறான் ஹீரோ.
இடையில் பேய் அந்த மருத்துவமனை மருத்துவர் தன்னுடைய அக்காவுக்கு ரகசியமான முறையில் ஊசி போடுவதாக வந்து புலம்புகிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் ஹீரோ ஒய்.ஜி.மகேந்திரனிடம் சென்று அந்த மருந்து பற்றி எடுத்துச் சொல்ல.. அவர் அதைப் பார்த்துவிட்டு.. இந்த மருந்தை தொடர்ந்து செலுத்தினால் நோயாளி கோமா நிலையிலேதான் இருப்பான். சுயநினைவு திரும்பாது. அந்தப் பெண்ணுக்கு நினைவு திரும்பாலேயே இருக்க ஏதோ செய்கிறார் அந்த மருத்துவர் என்று சந்தேகத்தைக் கிளப்புகிறார்.
பேயும் ஹீரோவும் அந்த மருத்துவரை பாலோ செய்ய.. அவர் ஒரு பெரிய பிராடு வேலையைச் செய்வது இவர்களுக்குத் தெரிய வருகிறது. ஒரு மிகப் பெரிய பணக்காரருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் மருத்துவமனையில் இருக்கும் ஈடனின் சகோதரியை கொலை செய்துவிட்டு அவளுடைய இதயத்தை எடுத்து அந்தப் பணக்காரருக்கு பொருத்த திட்டம் தீட்டுவதை கண்டறிகிறார்கள்.
இந்த்த் திட்டத்தை ஹீரோவும், நண்பனும், பேயும் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் மிச்சம் மீதி கதை..!
நாயகன் விவாந்த் டிவி தொடர்களில் நடித்த அனுபவத்துடன் அழுத்தமாக நடித்திருக்கிறார். சில இடங்களில் புதுமுகம் என்பதே தெரியவில்லை. பண்பட்ட நடிப்பு தெரிகிறது. இன்னமும் நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்தால் நல்லது.. சில இடங்களில் நடிகர் ஜெய் போலவே தெரிகிறார். நடித்திருக்கிறார்.
ஹீரோயின் ஈடன் படம் முழுக்க பேயாக வருவதால் ஒரே காஸ்ட்யூம்தான்.. ஆனாலும் அதில்கூட அழகாக இருக்கிறார். பேய் என்பதால் காதல் காட்சிகளும் இல்லாமல், கண்ணீர்க் காட்சிகளும் இல்லாமல் நடுவாந்திரமாக திரைக்கதை இருப்பதால் இதில் அதிகம் திறமை காட்ட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்.. ஆனாலும் இவருடைய கண்கள் ஏதோ சொல்ல வருகிறது..
ஆதவன் முழு நீள காமெடியனாக வந்து போகிறார். மனிஷாஸ்ரீ என்ற இன்னொரு ஹீரோயின் ஒரு சில காட்சிகளே வந்து செல்கிறார். முதலில் டாஸ்மாக்கில் அறிமுகமாகும் ஒய்.ஜி.மகேந்திரனின் காட்சிகள் ரசிக்கத்தக்கவை. மனோதத்துவ மருத்துவர்கள் தோற்றத்திலும் அப்படியே இருப்பார்கள் என்பதை இயக்குநர் காட்டியிருப்பது கொஞ்சம் வித்தியாசம்தான்.
இது போன்ற படங்களுக்கு பின்னணி இசையின் உதவிதான் மிகப் பெரிய உதவியாக இருக்க வேண்டும். இதில் கொஞ்சமே உதவி செய்திருக்கிறார் இசையமைப்பாளர்.. ஒரு பயமுறுத்துதல்கூட இல்லாமல் பேயை காட்டியிருப்பது இந்தப் படமாகத்தான் இருக்கும்.. இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்..!
சஸ்பென்ஸ், திரில்லர் படத்திற்கு அவசியமான தேவை வேகவேகமாகச் செல்லும் திரைக்கதைதான். ஆனால் இதில் அதுதான் இல்லை.. இயக்கத்தை இன்னமும் கொஞ்சம் கிரிப்பாக செய்திருந்தால் யாவரும் நலம் அளவுக்கு பேசப்பட்டிருக்கும்.. அந்த திரில்லர் திரைக்கதையில் இருக்கும் ஓட்டையினால் இரண்டாம் பாதியில் வேகம் கூடவே இல்லை.. படமும் நீளமா இருக்கேப்பா என்கிற உணர்வை தோற்றுவித்து அலுப்பைக் கொடுத்துவிட்டது..!
ஆனாலும் ஒரு முறை ரசிக்கலாம்..!

0 comments: