ராமானுஜன் - சினிமா விமர்சனம்

15-07-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
வாழ்க்கை வரலாற்று கதைகளை படமாக்குவதில் அனுபவம் வாய்ந்த இயக்குநர் ஞானராஜசேகரன் ஆச்சரியமாக யாருமே நினைத்துப் பார்க்காத கணித மேதை ராமானுஜனை செல்லுலாய்ட் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த நல்லெண்ணத்திற்காகவே அவருக்கு ஒரு பாராட்டு..!

1887 டிசம்பர் 22-ம் தேதி ஈரோட்டில் பிறந்த சீனிவாசன் ராமானுஜனின் பால்ய வயதில் இருந்து, 1920 ஏப்ரல் 20-ம் தேதி தன்னுடைய 32-வது வயதில் மரணமடையும் காலம்வரையிலும் நடந்தவைகளை எவ்வளவு சுருக்க வேண்டுமோ அவ்வளவு சுருக்கி தந்திருக்கிறார்.. இதற்காக பலதரப்பட்ட தகவல்களையும் பல இடங்களில் அலைந்து, திரிந்து கண்டறிந்து எழுதியிருக்கிறார் ஞானராஜசேகரன். மறைந்த எழுத்தாளர் ரகமி எழுதிய ராமானுஜன் பற்றிய புத்தகமும் மிகவும் உதவியாக இருந்திருக்கிறது..!
ராமானுஜனாக சாவித்திரி-ஜெமினிகணேசன் தம்பதியரின் பேரன் அபிநயர் நடித்திருக்கிறார். அம்மாவாக சுஹாசினி, அப்பாவாக நிழல்கள் ரவி.. அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்த விலைவாசி மற்றும் குடும்ப நிலவரங்களை ஓரளவுக்கு இந்தப் படத்தில் இந்தக் குடும்பத்தின் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குநர்..!
மிகவும் பயந்த சுபாவமுடையாவராக.. அதே சமயம் சட்டென்று மனம் உடையும் தன்மை கொண்டவராக இருக்கும் ராமானுஜனா கணிதத்தில் புலியாக இருந்தார்..? ஆச்சரியமாக இருக்கிறது.. கல்லூரி படிப்பில் கோட்டைவிடுகிறார். அழுகிறார். ஸ்காலர்ஷிப் பெறும் போட்டியிலும் கோட்டை விடுகிறார்.. அழுகிறார்.. திருமணத்திற்குப் பிறகும்கூட அழுகிறார். ஆனால் கணிதத்தைவிடவில்லை.. கச்சிதமாக அதன் கூடவே பயணித்திருக்கிறார்.
கணித்த்தில் வழிமுறைகள் இல்லாமல் விடையை சட்டென சொல்லும் வித்தையை வைத்திருக்கும் ராமானுஜன் அதனை வசன வடிவில் வெளிப்படுத்தும் காட்சி கச்சிதம்.. ராமானுஜன் தியரி எனப்படும் அந்த கணித சூத்திரங்களை விரிவாக்கம் செய்து அலசி, ஆராய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணிதத் துறை வல்லுநர்கள் பல ஆண்டுகள் முயற்சி செய்துதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த எளிய வழிமுறையை நீங்களே சொல்லலாமே என்று கேட்பதற்கு, அந்த நேரத்தில் நான் அடுத்த சூத்திரத்தை ஆராய்ந்து விடுவனே என்று பதில் சொல்கிறார்..  மேதைகளின் பதில் இப்படித்தான் இருக்கும்..!
ராமானுஜன் எப்படியிருந்தார் என்பது தெரியாமல் நாம் அவர் சார்பில் நடித்தவரை எடை போட முடியாது.. அந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றாற்போல் நடித்திருக்கிறார் என்பதுதான் சரியான பதமாக இருக்க முடியும்..! அக்கால பிராமண பாஷையுடன் அவருடைய அமைதியான நடவடிக்கையும், பேச்சும் அவர் மீது ஒரு பரிதாபத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்துகிறது.
சென்னை துறைமுக அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது கணித சூத்திரத்தை எழுதி வைத்திருந்த 2 பேப்பர்கள் பிரிட்டிஷ் அதிகாரியின் கையில் சிக்கி அவர் கேள்வி கேட்டு.. இவர் தட்டுத் தடுமாறி கண் கலங்கி சமாளிக்கும் இடம் இன்னும் இவரை வைத்து என்னென்ன செய்யப் போகிறார் இயக்குநர் என்ற லேசான கோபத்தைக்கூட ஏற்படுத்தியது..!
லண்டன் சென்ற பின்பு அவருடைய அந்த அமைதியான வாழ்க்கையையும்,  நண்பர் ஹார்டி கொடுக்கும் ஒத்துழைப்பு, ஊக்கத்தில் ராமானுஜனத்தின் கணித சாதனை தொடர்வதையும் கச்சிதமாகக் காட்டியிருக்கிறார்கள்.  மற்றவர்கள் தன்னை கவனிக்கிறார்கள். பரிகாசிக்கிறார்கள் என்கிற உள்ளுணர்வே அவரை ஒரு நோயாளிக்குவதும்.. இந்த மேதையின் சேவை இந்த அளவுக்கே போதும் என்று நினைத்து டிபி நோயுடன் சென்னை திரும்புகின்ற காட்சிகளெல்லாம் கனமானவை.
வழக்கமான டிபிகல் தமிழ்நாட்டு குடும்பம் போல மாமியார், மருமகள் சண்ட.. மருமகளை அருகிலேயே விடாமல் தடுக்கும் மாமியார் என்று குடும்பச் சண்டையையும் பிய்த்து பிய்த்து வைத்திருக்கிறார் இயக்குநர். கணக்கு பண்ணுவது என்பதில் இருக்கும் இரட்டை அர்த்த வசனத்தைக்கூட அதன் அர்த்தம் தெரியாமலேயே சில இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதுக்குத்தான் சொல்றது கொஞ்சம் கமர்ஷியல் படமும் செய்யணும்னு..!?
நிழல்கள் ரவி, ராதாரவி, மனோபாலா, தலைவாசல் விஜய், சரத்பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், அப்பாஸ், டெல்லி கணேஷ், மோகன்ராம், டி.பி.கஜேந்திரன் என்று முக்கிய நடிகர்கள் ஓரிரு காட்சிகள் வந்தாலும் படத்தில் இவர்களுடைய பங்களிப்பு முக்கியமானதாகவே இருக்கிறது..!
மனைவியாக நடித்திருக்கும் பாமா.. அந்தச் சின்னப் பொண்ணான கேரக்டருக்கு கச்சிதம்.. கணவர் தன்னிடம் பேசுவதே இல்லை என்ற வருத்தத்தில் இருப்பதும், மாமியார் அவளைத் தடுக்கும்போது வரும் கோபமும் இந்தப் பெண்ணையும் இந்தச் சிக்கலில் போட்டு வாட்டியிருக்கும் காலத்தின் கொடுமையை நினைத்து வையத்தான் தோன்றுகிறது..!
லண்டனில் இருந்து கணவர் எழுதும் கடிதங்கள் கப்பல் மூலமாக வீடுவரைக்கும் வந்தும் மாமியாரால் மறைக்கப்படுவதும், பாமா கணவரை நினைத்து உருகுவதும், அங்கே பதில் கடிதம் வரவில்லையே என்று ராமானுஜன் வருத்தப்படுவதும் டிராஜிடி..! உண்மையில் இந்த கணித மேதைக்கு எதிரிகள் வெளியில் இல்லை.. வீட்டிற்குள்ளேதான்..!
பூஜ்ஜியம் என்கிற ஒரு சின்ன விஷயத்தை 1 என்ற நம்பருக்கு அருகில் போடப் போட.. அது எத்தனை மதிப்பாகிறது என்பதை சொல்வதில் துவங்கும் இந்த ராமானுஜனத்தின் கணித ஆற்றல் லண்டனில் ஹார்டி தனது சக ஆராய்ச்சியாளர்களிடத்தில் ராமானுஜத்தை அறிமுகப்படுத்துவதில்தான் முடிவடைகிறது.. “நான் கணிதப் பேராசிரியராக இருந்து எதையும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், கணிதத்தில் பல உண்மைகளைக் கண்ட ராமானுஜனைக் கண்டுபிடித்திருக்கிறேன்..!” என்கிறார் ஹார்டி. நச் என்ற வசனம்..!
இவருடைய இறுதி காலமும் இப்படித்தான் இருக்க வேண்டுமா..? பாரதிக்கு எண்ணி எட்டு பேர் என்றார்கள். இவருக்கும் அதே எண்ணிக்கைதான்.. அத்தோடு அந்தக் கால பிராமணர்கள் வழக்கப்படி கடல் கடந்து செல்வது தோஷம் என்று சொல்லி ராமானுஜத்தின் சாவுக்கு காரணம் சொல்லும் அக்கால மனிதர்களை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையேதான்..! உலகத்துக்கே ஒரு கணித சூத்திரத்தை உருவாக்கிக் கொடுத்த அந்த மேதையின் இறுதிக் காரியம் செய்யக்கூட சொந்த ஜாதியினர் முன் வராமல் வேறு சாதியினர் முன் வந்து செய்திருப்பது வரலாற்று ஆவணம்..!
குறைகளே இல்லாமலெல்லாம் இல்லை.. 1900-களில் எந்தத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் வாத்தியார்களை ஸார் என்று அழைத்தார்கள்..? ராமானுஜன் ஸார் என்று சொல்லி அழைத்துதான் திரையில் அறிமுகமாகிறார். படத்தின் மிகப் பெரிய பலவீனமே ஆங்கிலேயர்களும் தமிழ் பேசியதுதான்.. உண்மையை உள்ளதுபடி சொல்ல வேண்டுமெனில் அதை ஆங்கிலமாகவே வைத்திருந்து சப் டைட்டில் தமிழில் போட்டிருக்கலாம்.. ஆங்கிலேயர்களும் தமிழிலேயே பேசுவதினால் படம் சில நேரங்களில் டப்பிங் சீரியல் போலாகிவிட்டது..!
ரமேஷ் விநாயகத்தின் பின்னணி இசை கொஞ்சமும் சோகத்தைக் கொடுக்கவில்லை. ஏற்கெனவே மெதுவான திரைக்கதை.. நாடகத்தனமான காட்சிகள் என்று போய்க் கொண்டிருக்கும் நிலையில் இசையும் இப்படி சேர்ந்து கொண்டால் என்ன பீலீங் கிடைக்கும்..? ஒளிப்பதிவு ஒன்றுதான் ஆறுதல்.. சன்னி ஜோஸப்புக்கு நமது பாராட்டுக்கள்..!
மிகக் குறைந்த பட்ஜெட்டில் இருக்கின்ற வசதிகளை வைத்து இவ்வளவுதான் எடுக்க முடியும்.. ஏற்கெனவே ‘பாரதி’, ‘பெரியார்’ எடுத்த அனுபவம் இயக்குநருக்கு கை கொடுத்திருக்கிறது. அதிகமாக வெளிப்புறக் காட்சிகளை வைக்காமல், மிக எளிமையாக கதையே பிரதானம் என்றெண்ணி ஒரு படைப்பை தன்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாக அளித்திருக்கிறார்.
ராமானுஜன், அவரது மனைவி, குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்சம் எடிட்  செய்திருந்தால், இதனை பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்றே சொல்லியிருக்கலாம்..!
நிச்சயமாக இதுவொரு வரலாற்றுப் படைப்புதான்.. தமிழ்ச் சினிமாவில் பத்திரப்படுத்தப்பட வேண்டிய ஒன்று..!

0 comments: