01-06-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எது சிறந்த படம் என்று தீர்மானிப்பதில் பலருக்கும், பலவித அளவுகோல்கள் உண்டுதான்.. என்னளவில் ஏற்கெனவே பார்த்துச் சலித்த கதையாக இருந்தாலும், வித்தியாசமான ஒரு கோணத்தில் அதனை அணுகியிருக்க வேண்டும்.. திரைக்கதை கடிகாரத்தை பார்க்கவிடாதவாறு செய்திருக்க வேண்டும்.. வசனங்கள் கதைக்கு அழுத்தம் கொடுப்பதாய் இருத்தல் வேண்டும்.. எல்லாவற்றிற்கும் மேலாக இயக்கம் நம் மனதுக்குள் கொஞ்சமேனும் ஊடுறுவல் செய்திருக்க வேண்டும்.. இது அனைத்தையும் இந்தப் படம் பூர்த்தி செய்துள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் இந்தப் படத்தை ஒரு முறையாவது பார்க்கக் கூடிய படம் என்று அடித்துச் சொல்கிறேன்..!
சென்னையில் இருந்து நிலம் வாங்குவதற்காக தனது கார் டிரைவர் ஹீரோவுடன் மதுரை வருகிறார் முதலாளி சித்ரா லட்சுமணன். வந்த இடத்தில் ஸ்கூட்டியில் மதுரையை வலம்வரும் ஹீரோயினை பார்த்தவுடனேயே விரட்டுகிறார் ஹீரோ.. தன் மனதுக்குள் அவள் இருப்பதாக தனது முதலாளியிடம் சொல்ல.. முதலாளி ஹீரோவை அழைத்துக் கொண்டு ஹீரோயின் வீட்டுக்கு நேரில் சென்று பெண் கேட்கிறார். ஹீரோயினின் அப்பா ஏற்கெனவே ஒரு மாப்பிள்ளை பார்த்து வைத்திருப்பதால் இவர்களை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.
அப்படியும் ஹீரோ ஹீரோயினை மறக்க முடியாமல் அவள் பின்னால் அலைய.. இப்போது ஹீரோயினே ஹீரோவைத் திட்டுகிறாள். தன் பின்னால் அவன் வரக்கூடாது என்று..! ஆனால் ஹீரோ வந்தே தீருவேன் என்று ஹீரோயினை கடத்த.. அதே நேரம் ஹீரோயினுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை ஜெயிலில் இருந்து வீட்டுக்கு வர.. ஹீரோயினின் அப்பாவும் தனது மகளை வலைவீசித் தேட.. என்ன ஆகிறது என்பதுதான் கதை. ஹீரோ ஏன் ஹீரோயினை பின் தொடர்கிறார் என்பது மகா சஸ்பென்ஸ்.. அதனை இங்கே உடைக்க நான் விரும்பவில்லை. தியேட்டருக்குச் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!
முதலில் எனக்குப் பிடித்தது திரைக்கதைதான்..! ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்து கதையை கொண்டு போய் அதனை உடைத்த இடமும், அதனை வைத்து முந்தின கதையை அழகான குழப்பமில்லாத வகையில் சொல்லியிருப்பதும் படத்தினை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறது..!
இதைவிடவும் ஹீரோ, ஹீரோயின், வில்லன் நடிகர், அப்பாவாக நடித்திருக்கும் 'பசங்க' சிவக்குமார், இவரது தங்கை என்று அனைவருமே அவரவர் கேரக்டருக்கு பங்கமில்லாமல் நடித்திருக்கிறார்கள். பாஸ் என்கிற பாஸ்கரனைவிடவும் நல்ல கேரக்டர் சித்ரா லட்சுமணனுக்கு.. நிஜமாகவே பெண் கேட்டு போகுமிடத்தில் அவரது பேச்சும், ஆக்சனும்தான் அந்த காட்சியை வெகுவாக ரசிக்க வைக்கிறது. இதைவிடவும் தண்ணியடித்துவிட்டு பாதி உளறலுடன், மீதி தெளிவுடனும் ஹீரோவுக்கு சமாதானம் சொல்லும் அந்தக் காட்சியிலும் சித்ரா ஸார் பலே.. பலே.. தண்ணியடிச்சா எல்லாருக்கும் நடிப்பு தானா வந்திரும்போல..!
ஹீரோ புதுமுகம்.. பார்த்தால் அப்படித் தெரியவில்லை. முதற்பாதியில் வருபவரைவிட, இரண்டாம் பாதியில் வரும் ஹீரோ அசத்தல் நடிப்பு.. அந்த மேக்கப்பும், அப்பாவித்தனமும் அவருக்கு சிறப்பாக பொருந்தியிருக்கிறது..! சண்டை காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இவரைக் குறை சொல்ல ஒரு வாய்ப்பும் இல்லை..!
ஆத்ரிஷா என்ற தெலுங்கு நடிகை இதில் அறிமுகம். ஏற்கெனவே கன்னட, தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறாராம்.. அதான பார்த்தோம் என்று படம் முடிந்தவுடன் பேசிக் கொண்டார்கள் பத்திரிகையாளர்கள். நன்கு நடித்திருக்கிறார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சி.. அது ஒன்றே போதும்..! சின்னச் சின்ன ஆக்சன்களிலேயே இப்போதெல்லாம் நடிப்பை கிளாஸாக கொண்டு வரலாம் என்று திரையுலகத்தினர் கண்டறிந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. நேரம் படத்திற்குப் பிறகு இதிலும் பார்த்த இடத்திலெல்லாம் சின்ன சின்ன ஷாட்டுகளில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஆத்ரிஷா. கூடவே இந்தப் பொண்ணுக்கு டப்பிங் பேசிய அந்தப் பெண் கலைஞருக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும், பிசிறு இல்லாமல் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது உதட்டசைவு..
'பசங்க' சிவக்குமார், வில்லனாக நடித்தவர், ஹீரோயினின் அத்தை என்று யாரும் சோடை போகவில்லை..! சிவக்குமாருக்கு ஏன் இத்தனை வில்லத்தனம் என்பதற்கு கேரக்டரே அப்படித்தான் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். இதற்காக தனி ஸ்கெட்ச் எதையும் செய்யாமல் விட்டதற்கே இயக்குநருக்கு ஒரு தேங்க்ஸ்..!
நான்காவதாக பெரிய பாராட்டு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு.. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களின் வரிகளும் தெள்ளத் தெளிவாக காதுகளில் விழுகின்றன..! ஒரு பாடலில்கூட இசையின் இரைச்சல் காதுகளைத் துளைக்கவில்லை.. மெலடி பாடல்களின் ரசிகர்கள் அவசியம் இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுப் பார்க்கவும்.. பின்னணி இசையில்கூட முதன்முதலாக ஹீரோ, ஹீரோயினைத் தேடியலையும் காட்சியிலும், ஹீரோயினை பார்க்கும்போதெல்லாமும் பின்னணியில் ராகத்தைத் தாலாட்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த்தேவா.. இந்தப் படத்தில் தனியே தெரியுமளவுக்கு சுதந்திரமாக இசையமைத்திருக்கிறார் போலும்..!
கிராமத்துக் கதை.. வழக்கமான சாதி, ஸ்டேட்டஸ் பார்க்கும் அப்பா.. கெட்ட வில்லன்.. ஹீரோயின் ஹீரோவை முதலில் வெறுப்பது. பின்பு திடீரென ஹீரோ மீது காதல் கொள்வது.. பரிதாப உணர்ச்சி காதலாக மாறுவது.. வில்லன் பெண் கேட்பது.. அந்தஸ்துக்காக அப்பன் ஒத்துக் கொள்வது.. செய்த தவறுக்காக வில்லனை ஹீரோயினே மாட்டிவிடுவது.. திருமண ஏற்பாடுகள்.. ஹீரோ தப்பிப்பது.. இறுதியில் உண்மை தெரிவது என்று வழக்கமான கதைதான் என்று ஈஸியாக சொல்லிவிட முடியும்.. ஆனால் தியேட்டரில் படம் பார்க்கும்போது யாரும் அப்படி நினைக்கவிடாத அளவுக்கு திரைக்கதையால் நம்மை ஈர்த்திருக்கிறார் இயக்குநர் கணேசன்..! பாராட்டுக்கள்..!
அனைத்து கலைஞர்களுமே மிகச் சிறப்பான முறையில் நடித்துக் காண்பித்திருப்பதால் இந்தப் படம் ஒரு முறை உட்கார்ந்து பார்க்குமளவுக்கு சிறப்பாக இருப்பதாக, மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன்..
இதற்கு மேல் அவரவர் விருப்பம்..!
|
Tweet |
8 comments:
ஊக்கமூட்டும் விமர்சனம் . . .
ஆனா சனங்க கடிச்சாலும் பரவாயில்லன்னு
புலி கூண்டு உள்ளதான் நுழயிறாங்க போல
இது தெரியாம குட்டிப் புலிகிட்ட கடி வாங்கிட்டு வந்தேனே..
அண்ணாச்சி, அருமையான விமர்சனம்..
குறிப்பா சஸ்பன்ஸ் உடைக்காம சொன்ன விதம் ஹைலைட்... :) :) :)
கடைசியில் ஏதோ சலித்துக்கொள்வது போல இருக்கே??? அப்படியா???
அண்ணா எந்த தியெட்டர் ர ணா படம் ஓடுது
[[[குரங்குபெடல் said...
ஊக்கமூட்டும் விமர்சனம். ஆனா சனங்க கடிச்சாலும் பரவாயில்லன்னு புலி கூண்டு உள்ளதான் நுழயிறாங்க போல..]]]
அதான் சினிமா.. நம்ம மக்கள்ஸ் எப்பவுமே நேர்ல பார்த்துதான் துயரத்தைத் தெரிஞ்சுக்குவாங்க.. அடுத்தவங்க சொல்லி கேக்கவே மாட்டாங்க..!
[[[கோவை ஆவி said...
இது தெரியாம குட்டிப் புலிகிட்ட கடி வாங்கிட்டு வந்தேனே..]]]
சரி.. பரவாயில்லை.. இதையும் பார்த்திருங்களேன்..!
[[[Nondavan said...
அண்ணாச்சி, அருமையான விமர்சனம்..
குறிப்பா சஸ்பன்ஸ் உடைக்காம சொன்னவிதம் ஹைலைட்... :) :) :)]]]
சஸ்பென்ஸை உடைக்க மனசில்லை..!
[[[கடைசியில் ஏதோ சலித்துக் கொள்வது போல இருக்கே??? அப்படியா???]]]
அது எழுத்து வடிவில் தானாகவே வந்துவிட்டது.. நீங்கள் அதைப் பத்தி கவலைப்பட வேண்டாம். அவசியம் இந்தப் படத்தைப் பாருங்கள்..!
[[[Hemanth said...
அண்ணா எந்த தியெட்டர் ர ணா படம் ஓடுது?]]]
தினத்தந்தியை பார்த்தீங்கன்னா தெரிஞ்சுரப் போவுது..?
Post a Comment