குருவை மிஞ்சிய சிஷ்யன் மணிவண்ணன்..!

20-06-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வாடகை வீடுதான்.. அந்த வீட்டின் பெயரே சரஸ்வதிதான்.. வாசலில் ஒரு பிள்ளையார் கோவில். பழுத்த நாத்திகரான, பெரியாரின் அருட்பெருந்தொண்டரான நாத்திக மணிவண்ணனின் வீடு ஆத்திகமும் கலந்துதான் இருக்கிறது.. ஒரு பக்கச் சுவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டார்வின், காரல்மாக்ஸ், ஏங்கல்ஸ், தந்தை பெரியார், தம்பி பிரபாகரன் இவர்களைச் சுமந்து கொண்டு நிற்கிறது. இதனாலேயே அந்த வீட்டுக்குள் யாரும் செருப்பு சுமந்து நடக்கக் கூடாது என்பது விதியாம்..! அதே சுவரின் அடுத்தப் பக்கம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து சாமிகளின் புகைப்படங்களும் அணிவகுத்திருக்கின்றன..! தன் பாதியான திருமதியாருக்கு உரிய மரியாதையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறார் மணிவண்ணன்..! பக்திப் பழம் சொட்டுகிறது வீட்டின் மற்ற பகுதிகளில்..!

பாவம் இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன். தான் தலைவராக வெற்றி பெற்ற பின்பு முதலில் செய்யும் சங்கத்தின் நடவடிக்கையே தனது குருவானவர்களில் ஒருவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதுதான் என்பதையறிந்து ரொம்பவே சோகமாக வீட்டு வாசலில் நின்று பேட்டியளித்துக் கொண்டிருந்தார். (‘குவா குவா வாத்துக்கள்’ என்ற ஒரேயொரு படத்தில் மட்டும் மணிவண்ணனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் விக்ரமன்) பக்கத்தில் வீ.சேகர், ஈ.ராமதாஸ், டி.கே.சண்முகசுந்தரமும்..! நடிகர் இளவரசுதான் இரண்டு நாட்களும் இறுதிச் சடங்கு காரியங்களை நாம் தமிழர் தோழர்களுடன் இணைந்து நடத்திக் கொடுத்தார்..


நான் வீட்டிற்குள் நுழைந்தபோது தனது ஆரூயிர் நண்பனை இழந்த சோகத்தில் குமுறி, குமுறி அழுது கொண்டிருந்தார் சத்யராஜ். அருகில் நின்று கொண்டிருந்த இயக்குநர் சீமானின் கண்ணில் இருந்து கண்ணீர் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருந்தது..! மனோபாலாவின் கதறல் வீடு முழுக்கக் கேட்டது..! இயக்குநர் சுந்தர்.சி சுவரோரம் சாய்ந்து சோகத்தில் ஆழ்ந்திருந்தார். ரகு மணிவண்ணனை இயக்குநர் பி.வாசுவின் மகன் ஷக்தி ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார்.. இவர்களுக்கிடையில் சேரில் அமர்ந்திருந்த திருமதி மணிவண்ணன், அருகில் நின்றபடியே கண்ணீர்விட்டுக் கொண்டிருந்த திருமதி சத்யராஜிடம் என்னென்னமோ சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்.

செங்கோட்டை சசிகுமாரை நீண்ட வருடங்கள் கழித்துப் பார்த்தும் சட்டென அடையாளம் கண்டு.. “வாடா சசி.. உங்க ஸாரை பாரு. அக்கா நிலைமையை பாரு..” என்று சொல்லிச் சொல்லி அழுதார் திருமதி செங்கமலம். ஓடோடி வந்த மன்சூரலிகான், ரகுமணிவண்ணனை கட்டிப் பிடித்து அழுது தீர்த்தார்..!

இந்த நேரத்திலும் போலீஸின் உளவுப் பிரிவு கனகச்சிதமாக தனது வேலையைச் செய்து கொண்டிருந்த்து. அன்றைய தினம் இரண்டு வடநாட்டு செய்தி நிறுவனங்களின் இணையத்தளங்களில் மணிவண்ணனின் மரணம் குறித்து வேறு மாதிரியான செய்திகளை போட்டுவிட.. வழக்கமான, அறிமுகமான உளவுப் பிரிவு போலீஸ்காரர், “எத்தனை மணிக்கு இறந்தார்..? எப்படி இறந்தார்...? கூட யார், யாரெல்லாம் இருந்தாங்க..? இப்போ இருக்கிறவங்கள்லாம் யாரு..? எப்போ தூக்குவீங்க..?” என்றெல்லாம் வீட்டு வேலைக்காரம்மா முதற்கொண்டு நாம் தமிழர் தம்பிகளிடமும் விசாரித்துவிட்டுத்தான் வெளியேறினார்..!


59 வயதெல்லாம் சாகுற வயசா..? கண்ணதாசனும் இதே வயதில்தான் இறந்தாராம்..! ஒரே மகள் ஜோதி.. கல்யாணமாகி மலேசியாவில் வசிக்கிறார்.. மகனுக்கு நிச்சயத்தார்த்தம் முடித்தாகிவிட்டது..! மகனை வைத்து ‘தாலாட்டு மச்சி தாலாட்டு’ என்ற பெயரில் அடுத்தப் படம் செய்யவும் தயாராகவே இருந்தார். ஸ்கிரிப்ட் ரெடி.. படப்பிடிப்புக்கு புறப்பட வேண்டியதுதான் பாக்கி. ஆனால் அதற்குள்ளாக போய்ச் சேர்ந்த இடம்தான் வேறாகிவிட்டது..!

கடந்த சில வருடங்களாகவே.. குறிப்பாக அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்த பின்பு கிடைத்த மேடைகளிலெல்லாம் தன்னுடைய மரணத்தை தான் எதிர்நோக்கி காத்திருப்பது போலவேதான் பேசி வந்தார் மணிவண்ணன். தான் இறந்தால் தனது உடலை தனது மகன்-தலைவன் சீமானிடம்தான் ஒப்படைக்க வேண்டும். அவர்தான் இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கையாகவே சொல்லி வந்தார். தனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தி கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருந்தார். இதனை செவ்வனே செய்தார் சீமான்.

அவசரத்தில் புலிக்கொடி தாங்கிய துணி கிடைக்காததால் சிறிது நேர கால தாமத்த்திற்குப் பின் அது வந்தவுடன் தனது அப்பாவின் உடலில் உடல் குலுங்கிய அழுகையுடன் போர்த்தி தனது கடமையைச் செய்தார் சீமான்..!  மணிவண்ணனின் உடலை படமெடுக்க அப்போதுவரையிலும் மீடியாக்களுக்கு அனுமதியில்லை என்றார்கள்..! பெட்டிக்குள் வைத்த பின்பே மீடியாக்கள் வீட்டினுள் அனுமதிக்கப்பட்டன..!

அதற்குள்ளாக அந்த வீடே நாம் தமிழர் கட்சித் தொண்டர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது..! வாசலின் ஒரு பக்கக் கதவை மூடிவிட்டு பார்வையாளர்களுக்காக ஒரு பக்கம் மட்டுமே திறக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்கள். உள்ளே வந்தவர்களை வெளியே இழுக்கின்ற வேலையையும் தொண்டர்களே செய்தார்கள்..! 

இப்போதுதான் அந்தப் பகுதி மக்களுக்கே மணிவண்ணன் இங்கேதான் குடியிருக்கிறார் என்பது தெரிந்திருக்கிறது.. முதலில் அந்தத் தெருவில் வசித்தவர்கள் வந்தார்கள். அக்கம்பக்கத்தினர் வந்தார்கள். பின்பு வந்த கூட்டம் இருக்கிறதே..!? எங்கேயிருந்துதான் இத்தனை கூட்டமோ தெரியவில்லை.. அன்றைய இரவு நான் அங்கேயிருந்த 10.30 மணிவரையிலும் மக்கள் வந்து கொண்டேதான் இருந்தார்கள்..!

எம்ஜிஆர் நகர், சத்யா கார்டன், அசோக் நகர் பகுதியில் இருந்துகூட மக்கள் பொடி நடையாக நடந்தே வந்திருந்தார்கள். மணிவண்ணன் என்னும் நடிகரை பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்திருந்த அவர்களின் முகத்தில் தெரிந்த ஆர்வமும், பார்த்து முடித்து வெளியில் வரும்போது பலரின் முகத்தில் தெரிந்த சிரிப்பும், பூரிப்பும் இது வேறுவகையான அஞ்சலி என்பதையும்தான் சொல்லியது..!

நான் அந்த வீட்டிற்கு இதற்கு முன் 2 முறை சென்றிருக்கிறேன்.. முதல் முறை ‘அமைதிப்படை’ இரண்டாம் பாகத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சிக்காக.. வீட்டு ஹாலில் சோபாவில் அமர்ந்த நிலையில் அனைத்து சேனல்களுக்கும் தனித்தனியாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கே கொஞ்சம் போரடித்து, “மொத்தமா கொடுத்திரவா..?” என்றார். “ஸார்.. ஆபீஸ்ல திட்டுவாங்க ஸார்..” என்று இழுத்தவுடன், “ஓகே.. ஓகே.. அப்ப யாராச்சும் கேள்வி கேளுங்களேன்.. நானே பேசிக்கிட்டிருக்கேன். சொன்னதையே எப்படி திருப்பித் திருப்பிச் சொல்றது..?” என்றார்..! 

“இடைல கொஞ்சம் கேப் விட்டுட்டீங்க.. இப்போ மறுபடியும் இதுல வர்றீங்க..! இந்த ஒரு படம்தானா.. இல்லை அவ்ளோதானா..?” என்றேன்.. “அதெப்படிப்பா விட முடியும்.. இந்த மணிவண்ணன் சாகுறவரைக்கும் சினிமாதான்.. நடிகன்தான்.. எனக்கு நடிப்புதான் தெரியும்.. அதைத்தான் செய்யப் போறேன்.. நான் எங்கேயும் போக மாட்டேன்.. அடுத்தடுத்து படங்களையும் இயக்கத்தான் போறேன்..” என்றார் உறுதியாக..!

மீண்டும் ஒரு முறை தனிப்பட்ட பேட்டிக்காக அதே வீட்டிற்குச் சென்றிருந்தேன். பார்த்தவுடன் “வாங்க..” என்றார் புன்சிரிப்புடன். அந்தப் பேட்டி 5 நிமிடத்தில் முடிய.. “அவ்ளோதானா..? இதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தீங்க..?” என்றார். “ஆமா ஸார்.. நியூஸ்ல போடப் போறோம். அதுக்காகத்தான்..” என்றேன்..! “வந்தது வந்துட்டீங்க.. அமைதிப்படை பத்தியும் ஏதாச்சும் கேளுங்க.. அதை தனி எக்ஸ்கிளூஸிவ்வா போடுங்க..” என்று ஐடியா கொடுத்தார். அதையும் செய்துவிட்டுத்தான் கிளம்பினேன்..! 

“வாங்க.. போங்க..” எந்த வயதினராக இருந்தாலும் இந்த மரியாதையைக் கொடுக்க மணிவண்ணன் ஸார் தவறியதே இல்லை..! சின்ன வயது கேமிராமேனாக இருந்தால்கூட அவர்களை தம்பிகளா இப்படி வாங்க.. உக்காருங்க என்று “ங்க” போட்டுத்தான் அழைப்பார். பேசுவார்..! 

எந்த விழாக்களுக்கு வந்தாலும் கை குடுக்க மறக்க மாட்டார். நெருங்கிய நட்பாளர்கள் எனில் பெயரைச் சொல்லி அழைத்து, இரண்டு கரங்களையும் சேர்த்துப் பிடித்துப் பாசத்துடன் பேசுவார்..! அந்த ஸ்டைலே தனி அழகு.. சினிமாவில்கூட அவர் காட்டாதது..! 

பொது மேடைகளில் “உட்கார்ந்து பேசுங்கள்” என்றால் “கூடாது..” என்பார். “தமிழ்நாட்டுல உக்காந்து பேசுறதுக்கு தகுதியுள்ள ஒரே ஆள் தந்தை பெரியார் மட்டும்தான்” என்பார்.. இந்த பெரியாரின் வெறியும், மார்க்சிய சிந்தனையும் சேர்ந்துதான் அவரை பண்பட்ட மனிதராக சேமித்த்து..! கடைசிவரையிலும் மதுரை பக்கம் சென்றால் தான் முன்பு வேலை பார்த்த தீக்கதிர் அலுவலகத்திற்குப் போகாமல் திரும்ப மாட்டாராம்..! கொஞ்ச நேரமாவது அலுவலகம் சென்று அமர்ந்துவிட்டுத்தான் வருவாராம்.. அந்த அளவுக்கு பழசை மறக்காதவர்..!


அன்றைய பொழுதில் பல பிரபலங்களும் வந்து அஞ்சலியை செலுத்திக் கொண்டிருக்க ஒரேயொரு பிரபலத்தின் வருகைக்காக இரவு 10 மணிவரையிலும் மீடியாக்கள் காத்திருந்தன. ஆனால் அந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா வரவேயில்லை. இத்தனைக்கும் தனது சிஷ்யன் மணிவண்ணனின் இறப்புச் செய்தி அவரின் காதுக்கு எட்டியபோது, அவர் அண்ணா சாலை அருகேயுள்ள பார்சன் காம்ப்ளக்ஸில் இருந்த தனது அலுவலகத்தில்தான் இருந்தாராம். மறுநாள் மணிவண்ணனின் உடல் தகனம் செய்யப்பட்ட நாளில் தேனிக்கு பயணமாகிவிட்டாராம் தனது சீரியலின் படப்பிடிப்புக்காக..! ஒரு குரு இந்த அளவுக்கு பிடிவாதம் பிடிக்க.. அந்த சிஷ்யன் அப்படியென்ன தப்பு செஞ்சுட்டார்..?

நெய்வேலியில் நடந்த காவிரி பிரச்சினைக்கான ஆர்ப்பாட்டத்தின்போது தன்னைத் தவிர வேறு யாரும் அறிக்கைவிடக் கூடாது.. மீடியாக்களிடம் பேசக் கூடாது.. தானேதான் தலைமை தாங்குவேன் என்றெல்லாம் சொல்லி ஒட்டு மொத்தத் தமிழ்த் திரையுலகத்தினரை பாரதிராஜா டென்ஷனாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், ம.தி.மு.க.வில் இருந்த காரணத்தினாலும், தமிழ்ப் பற்றாளர் என்ற முறையிலும் மணிவண்ணன் அந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தது குருவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.. 

சிஷ்யன் தன்னை மிஞ்சிவிட்டானே என்ற கோபம் ஒரு குருவுக்கு வரவேகூடாது.. ஆனால் இந்தக் குரு கொஞ்சம் வித்தியாசமானவர் என்பதால் அனைத்திற்கும் கோபப்பட்டார். இந்தக் கோபத்தில்தான் மணிவண்ணன் அவரிடமிருந்து தூர தேசத்திற்கு தள்ளி வைக்கப்பட்டார்..!

அடுத்த வினை.. மணிவண்ணனின் மகள் ஜோதி திருமணத்தின்போது நடந்தது..! அன்றைய திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்திவைக்கும் பொறுப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சென்றது.. இதைத் தெரிந்து கொண்ட பாரதிராஜா கடும் கோபத்துடன் கல்யாணத்துக்கு போகவே கூடாது என்றுதான் இருந்தாராம்.. கடைசியில் வரவேற்புக்கு மட்டும் வந்து தலையைக் காட்டிவிட்டு அவசரமாக வெளியேறிவிட்டார்..! தான் பார்த்து, தன் செலவில் கல்யாணம் செய்து வைத்தவனின் மகள் கல்யாணத்தில் தனக்கு இரண்டாமிடமா என்ற கோபம் கொப்பளித்த்து குருவுக்கு..! ஆனால் சிஷ்யனோ "இது ஒருவகை நன்றிக் கடன்.." என்றார். 

‘கொடி பறக்குது’ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது வில்லன் அரசியல்வாதி கேரக்டர் யார் என்றே முடிவு செய்யாமல் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளையே படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் படத்தில் வசனம் எழுதிய கையோடு, இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருந்த மணிவண்ணனின் மாடுலேஷனை கவனித்த ரஜினி, “அந்த அரசியல்வாதி கேரக்டருக்கு நம்ம மணியையே நடிக்க வைச்சா என்ன..? வசன உச்சரிப்புல பின்னுறாரே..?” என்று அழுத்தமாக சிபாரிசு செய்ய.. பாரதிராஜாவால் தட்ட முடியாத நிலையில் நடிகரானார் மணிவண்ணன். அதன் பின்பு அவர் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாம் அடுத்தடுத்த வருடங்களில் இருந்து கடைசிவரையிலும் அவர் நடித்த 400 படங்களின் மூலமாக வந்ததுதான்..! இந்த நன்றிக் கடனுக்காகத்தான் தாலி எடுத்துக் கொடுக்கும் பாக்கியத்தை ரஜினிக்கு தந்தார்..! இதுவும் வினையானது..!

இந்தக் கதையை மீடியாக்களிடம் சொல்லி, “இதுல என்ன ஈகோ வேண்டிக் கிடக்கு..? நான் என் நன்றியைத்தானே செலுத்தினேன்..?” என்று மணிவண்ணன் சொன்ன பின்பு, இது பெரிதாகி பேச்சுவார்த்தை அற்ற நிலைமைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது..! நெய்வேலி கூட்டத்தை புறக்கணித்து ரஜினி சென்னையில் தனியே ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதும் பாரதிராஜாவுக்கு கடும் கோபத்தை எழுப்பியது. இதற்காகவே பல முறை ரஜினியைத் தாக்கி பாரதிராஜா அறிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு முறை "கொடி பறக்குது படத்துல எல்லாம் ரஜினியை நடிக்க வைச்சப்போ அவர் கன்னடர்ன்னு தெரியலையா..? அப்போ அவரை வைச்சு நாம சம்பாதிச்சிட்டு... இப்போ நாம வசதியா வந்த பின்னாடி அவர் கன்னடன்னு, தெலுங்கர்ன்னு பேசுறது பச்சை சந்தர்ப்பவாதம்.." என்று பாரதிராஜாவுக்கு பதிலடியே கொடுத்தார் மணிவண்ணன்.


வைகோவிடமிருந்து மணிவண்ணன் விலகி வந்த பின்பு அப்போதுதான் கொஞ்சம், கொஞ்சமாக தலையெடுத்துக் கொண்டிருந்த தனது சீடன் சீமான் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார். சீமான் தொடர்புடன் ஈழம், காவிரி, தமிழகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலெல்லாம் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்ததும் சிஷ்யனை யார் என்று கேட்கும் நிலைமைக்கு குருவையும் கொண்டு போனது..!

ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரைப்படத் துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த சீமானின் தம்பிமார்கள் காட்டிய ஆவேசத்தையும், எழுச்சியையும் பார்த்து பயந்துதான் போனார் பாரதிராஜா. இது அவர் கூட்டிய கூட்டமல்ல.. சீமான் கூட்டிய கூட்டம் என்பதுபோலாகிவிட.. குருவுக்கு சீமானைவிட அவரைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் சிஷ்யன் மீதுதான் கோபம் அதிகமானது..!

ஆனாலும் 4 வருடங்களுக்கு முன்னால் பாரதிராஜா தலைமையேற்று நடத்திய ஈழப் போரின் இறுதிக் கட்ட ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் மணிவண்ணனும் கலந்து கொண்டு “புலி நம்ம தேசிய விலங்கு.. அதை ஆதரிக்க வேண்டியது நமது கடமை.. தம்பி பிரபாகரன் நம்ம அண்ணன் மாதிரி.. அவரும் ஒரு புலிதான்.. அப்போ அவரையும் ஆதரிக்க வேண்டியது நம்ம கடமை..” என்றெல்லாம் முழங்கிவிட்டுத்தான் சென்றார்..! அடுத்தடுத்த கூட்டங்களில் இவருக்கு அழைப்பு இல்லாவிட்டாலும்கூட இன்னொரு பக்கம் சீமானின் மேடைகளில் ஈழத்திற்காக தொண்டை கிழிய பேசி தனது நேரத்தை செலவிட்டவர் இந்த இயக்குநர்..!

“எந்த பிரபாகரன்?” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எகத்தாளமாகக் கேட்டபோது ஈரோட்டில், கோவையில் மேடை போட்டு இளங்கோவனை அர்ச்சித்தார்கள் சீமானின் தம்பிகள்.. இயக்குநர் மணிவண்ணனும் “யார் இந்த இளங்கோவன்?” என்ற தலைப்பில் பேட்டியெல்லாம் கொடுத்தார். அதே இளங்கோவன், பார்.. பார்.. நீ போயிட்ட.. நான் இருக்கேன்..” என்பதுபோல மணிவண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்து போனார்.

விகடனில் பாரதிராஜாவின் அந்த கேள்வி பதில் வந்த பின்பு அதைப் படித்து நிறையவே வருத்தப்பட்டிருக்கிறார் மணிவண்ணன். தனது குரு இன்னமும் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறார். இதற்கு பதில் கேட்டு பல பத்திரிகைகள் முயன்றபோது அவருடைய போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பாரதிராஜாவும் இந்த அளவுக்கு கீழிறங்கி எழுதியிருக்கக் கூடாது.. ஒரு குரு பிச்சைக்காரனை கோடீஸ்வரனாக்கினேன் என்று சிஷ்யனை பார்த்துச் சொன்னதாக நான் எங்கேயும் இதுவரையில் படித்ததில்லை. முதல்முறையாக இப்போதுதான் பாரதிராஜா என்று குரு வாயிலாக அறிகிறேன்.. இதனால் இந்தக் குருவுக்கு நிச்சயம் பெருமையில்லை. தீராத பழியைச் சுமந்து கொண்டுவிட்டார் பாரதிராஜா..! 

ரேடியோ சிட்டிக்கு மணிவண்ணன் கொடுத்திருக்கும் பேட்டியை கேட்ட அனைவரும் திகைத்துதான் போனார்கள்.. துடித்துதான் போனார்கள்.. ஆனால் அறிய வேண்டியவரோ இதெல்லாம் நடிப்பு என்பதாகவே எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது..!  பாரதிராஜாவின் கேரக்டரே இப்படித்தான் என்பதால் மீடியாக்களிடம் மட்டும் எந்த மாறுதலுமில்லை.. 

இயக்குநர் விக்ரமனின் ‘நினைத்தது யாரோ’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ், தான் பாரதிராஜாவை விட்டு விலகி ஓடிய 2 தருணங்களிலும், தன்னைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து பணியில் சேர்த்தார் பாரதிராஜா என்பதை சுவையான திரைக்கதையோடு சொன்னார். இதைக் கேட்டபோது சுவாரஸ்யமே இல்லாமல், முகத்தில் எந்த பீலிங்கையும் காட்டாமல் இருந்தார் பாரதிராஜா. தன்னுடைய பேச்சில் பாக்யராஜ் பேசியதைக் குறிப்பிட்ட பாரதிராஜா, “பாக்யராஜ் சொன்னதெல்லாம் கரெக்ட்டுதான்.. ஆனா கொஞ்சம் ஆங்காங்கே தூவி தூவி பெரிசாக்கியிருக்கான்.. என்ன.. மணிவண்ணன் நிறைய பொய் பேசுவான். அதுலேயும் என்னை பக்கத்துல வைச்சுக்கிட்டே நிறைய பொய் பேசுவான் அவன்.. இவன்(கே.பாக்யராஜ்) கொஞ்சமா கலந்து பேசுவான். அவ்ளோதான்...” என்று பட்டவர்த்தனமாக பதில் சொல்ல பாக்யராஜ் வெறுத்தே போனார்..  பாக்யராஜை கண்டு கொள்ளாமலேயே விழாவில் இருந்து வெளியேறியவரை பார்த்து நமக்கும்தான் வெறுப்பாக இருந்தது..! இதுதான் பாரதிராஜா..!

அன்றைய தினம் 12 மணி முதல் மறுநாள் 12 மணிவரையிலும் கிட்டத்தட்ட 24 மணி நேரமும் மணிவண்ணனின் உடலைவிட்டு அகலாத நிலையில் அருகிலேயே அமர்ந்திருந்தார்கள் சத்யராஜ், சீமான், மனோபாலா மூவரும்..!  நாம் தமிழர் தம்பிமார்கள் எத்தனையோ முயற்சிகள் எடுத்தாலும், வருகின்ற கூட்டம் நிற்காமல் போக.. போலீஸை வரவழைத்தும் கூட்டத்தை நிறுத்தத்தான் முடியவில்லை..!

வந்திருந்த பிரபலங்களை வாசலிலேயே மடக்கிப் பிடித்து மீடியாக்கள் தங்களது கடமையைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருந்தன.. இளமை காலங்களை தயாரித்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி மணிவண்ணனின் நேர்மை பற்றிச் சொல்லிச் சிலாகித்தார்..!   

மலேசியாவில் இருந்து அவசரம் அவசரமாக ஓடி வந்த மகள் ஜோதியின் கதறல் தெருவிலேயே ஆரம்பித்தது.. வீட்டு ஹாலில் தரையில் விழுந்து அழுது புரண்டபோது உள்ளே ஹாலில் இருந்த அத்தனை பேருமே கதறினார்கள்..! 


இசைஞானி இளையராஜா கனத்த சோகத்தோடு வந்து அஞ்சலி செலுத்தினார். குரு வரவில்லை. ஆனால் மகேந்திரன் வந்திருந்தார். உடலுக்கு அருகில் சேர் போட்டு ஒரு மணி நேரம் அமைதியாக அமர்ந்திருந்துவிட்டுத்தான் எழுந்து போனார். பேட்டி கேட்டபோது, “என்ன சொல்றதுன்னே தெரியலப்பா.. சாகுற வயசா இவருக்கு..? இன்னமும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு.. எனக்கு ரொம்பவும் புடிச்ச இயக்குநர் இவர்.. இயக்கம் என்ற வார்த்தையே இவரது படங்களில் இருக்காது. அது வெளியில் தெரியாமலேயே இயக்கியிருப்பார்..  என்னை நிரம்பவும் பாதித்தவர் மணி..” என்று உருக்கத்துடன் அஞ்சலிகளை தெரிவித்தார். முதல் நாள் இரவில் விஜய் வந்தபோதே ஒரு சில ரசிகர்கள் கை தட்டியும், விசிலடித்தும் அவரை பயமுறுத்திவிட திரும்பிச் செல்லும்போது பேட்டியளிக்க மறுத்துவிட்டு ஓட்டமாய் ஓடி காரில் ஏறி அமர்ந்து தப்பிச் சென்றார்..!

மறுநாளும் வெயிலும் கூடி, வெப்பம் கொளுத்தியெடுக்க.. அந்தப் பகுதியே மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது..!  காலையில் மு.க.ஸ்டாலினும், விஜயகாந்த்தும், கவுண்டமணியும் வந்து சென்றனர்..! பாரதிராஜாவின் சார்பில் அவரது மகன் மனோஜ் வந்து சென்றதாகச் சொன்னார்கள். நான் பார்க்கவில்லை..! நேரம் கருதி சீக்கிரமாகவே கொண்டு சென்றுவிடலாம் என்றெண்ணி, 12 மணியோடு பார்வையாளர்களை தடுத்து நிறுத்திவிட்டு தூக்குவதற்கான பணிகளைச் செய்தார்கள் தம்பிமார்கள்..!

இந்த நேரத்தில்தான் கோவையில் இருந்து அவசரம் அவசரமாக விமானம் பிடித்து வந்து சேர்ந்தார் நடிகர் சிவக்குமார். உடன் கார்த்தியும்.. உள்ளே நுழைவதற்கே 10 நிமிடங்களானது..! இதற்கு மேல் யாரும் உள்ளே போக முடியவில்லை. ‘அமைதிப்படை’யை வாங்கி வெளியிட்ட தயாரிப்பாளர் டாக்டர் ராமே நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது..!

மகளின் கதறல்.. தங்கை, அக்காளின் அழுகை.. மனைவியின் சன்னமான கூப்பாடு.. இது அத்தனையையும் கேட்டுக் கொண்டு சுடுகாடு நோக்கிப் பயணமானார் மணிவண்ணன். நாம் தமிழர் தம்பிமார்கள் அணிவகுத்து நடக்கத் துவங்க.. ஊர்வலமும் மெதுவாகத்தான் ஊர்ந்தது..! போரூர் சுடுகாட்டிற்கு திருமதி சத்யராஜூம், சிபிராஜும் வந்து காத்திருக்க.. பல பிரபலங்கள் நேராக சுடுகாட்டிற்கே வந்திருந்தனர்..! ஆர்.கே.செல்வமணி, சுந்தர் சி., நடிகர்கள் விச்சு, வையாபுரி, சின்னத்திரை எழுத்தாளர் ராஜ்பிரபு, இயக்குநர் விடுதலை, என்று வந்திருந்த பிரபலங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதுதான் சினிமாவுலகம்..!  

ராஜ்யசபா தேர்தல் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்ட கையோடு வலது கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், சி.மகேந்திரன் மூவரணி உள்ளே வந்தது. இவர்கள் வந்த சில நிமிடங்களில் வைகோவும் வந்து சேர்ந்தார்.. மணிவண்ணனின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வேனில் இருந்து உடலை இறக்கவே பெரும் இழுபறியானது..! அத்தனை கூட்டம்..! ஆற்காடு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையிலும் தொண்டர்கள் கூட்டம் தொடர்ந்து நிற்க.. மரக்கிளைகள்.. காம்பவுண்ட் சுவர்கள்.. பக்கத்து வீட்டு மாடிகள் என்று அனைத்திலும் மனிதத் தலைகள்..

மணிவண்ணன் நாத்திகரே ஆனாலும், குடும்பத்தாரின் வேண்டுகோளுக்காக சிறிய அளவுக்கு சடங்குகள் செய்யப்பட்டன.. எப்போதும் பாடப்படும் சிவபுராணத்தின் பாடல்கள் நிறுத்தப்பட்டன. சடங்கு நடக்குமிடத்தில் நடந்த கூட்ட நெரிசலை பார்த்து வைகோவை வெறுத்துவிட்டார்.. உள்ளே நுழையவே பிரயத்தனம் செய்ய வேண்டியதாகியிருந்தது..! சீமான் பெரும்பாடுபட்டு வைகோவை உள்ளே அழைத்துச் சென்றார்..! இந்தக் களேபரத்தில் வெறுத்துப் போன சத்யராஜ் வெளியேறி வந்து ஓரமாய் நின்றுகொண்டார்.. தனது குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தவர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்துபோய் அவரே களத்தில் குதிக்க.. பின்பு நாம் தமிழர் கட்சிக்கார பிரமுகர் ஒருவர் மைக்கை பிடித்து தம்பிமார்களை விலகிக் கொள்ளும்படி பல முறை அழுத்தமாகக் கேட்டுக் கேட்டு வழிகளை உண்டாக்கினார்..!

உற்ற நண்பன் சத்யராஜ் முன்னே செல்ல.. தனது குடும்பத்தினரும், நெருங்கிய நட்புகள் மட்டுமே பின் தொடர.. மணிவண்ணனின் உடல் மேலே எரியூட்ட கொண்டு செல்லப்பட்டது.. பல கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில்தான் இரும்புக் கதவு சாத்தப்பட்டு தடுக்கப்பட்டார்கள் தொண்டர்கள்..! மிகச் சரியாக 3.10 மணிக்கு ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கூச்சலும், இடையே பெண்களின் ‘ஐயோ.. ஐயோ’ என்ற சத்தமும் வர.. மணிவண்ணன் என்ற நமக்குப் பிடித்தமான ஒரு தோழர் அக்னியில் கரைந்து போனார்..!

உள்ளொன்று வைத்து பிறிதொன்றை பேசத் தெரியாத அவருடைய குணம் மட்டும்தான், கடைசியில் அவருக்கு பெரிய மன பாரத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்..! ‘அமைதிப்படை’ இரண்டாம் பாகத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் “எங்க டைரக்டருக்கு தான் மட்டுமே டைரக்டருன்னு நினைப்பு.. வேற யாரையும் அவர் மதிக்க மாட்டாரு. அதுலேயும் பாக்யராஜை அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது.. பாக்யராஜ்கிட்ட நான் ஏதாவது பேசிட்டிருந்தா உடனே கூப்பிட்டு திட்டுவார்.. அவன்கூட உனக்கென்ன பேச்சுன்னு கண்டிப்பார்..” என்றெல்லாம் வெளிப்படையாகப் பேசியிருந்தார்..!

அதே கூட்டத்தில்தான் தன்னை இயக்குநராக்கியது இசைஞானி இளையராஜாதான் என்று அழுத்தமாக பதிவு செய்திருந்தார் மணிவண்ணன். ‘ஜோதி’ என்றொரு படத்தை மோகன், அம்பிகா நடிப்பில் உருவாக்கி அது பாதியிலேயே நின்று போன நிலைமையில் தவித்துக் கொண்டிருந்த மணிவண்ணனை கலைமணியிடம் அறிமுகப்படுத்தி வைத்து, “இவரை வைச்சு படமெடு. நான் உடனே மியூஸிக் போட்டுத் தரேன்..” என்று இளையராஜா வாக்குறுதி அளிக்க, கலைமணியின் தயாரிப்பில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தை இயக்கி பெரும் வெற்றி பெற்றார் மணிவண்ணன். இந்த நன்றியையும் இசைஞானிக்கு இவர் தெரிவிக்க.. போதாதா குருவுக்கு..?! இதற்குப் பிறகு ‘ஜோதி’யையும் முடித்து வெளியிட்டார். இந்த பாதிப்பில்தான் தன்னுடைய முதல் குழந்தைக்கு ‘ஜோதி’ என்றே பெயரிட்டாராம்..!

அதே கூட்டத்தில் தனது முதல் படத்தில் இருந்து ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ வரையிலுமான 40 படங்களில் கேமிராமேனாக இருந்த சபாபதியை பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொல்லி முடித்துக் கொண்டார் மணிவண்ணன். நகமும், சதையுமாக.. புருஷனும் பொண்டாட்டி போலவே இருந்து வந்த இந்தக் கூட்டணி, மதுவின் போதையால் எழுந்த சச்சரவால் ஒரு நாள் இரவில் முறித்துக் கொண்டபோது திரையுலகமே பெரிதும் ஆச்சரியப்பட்டுப் போனதாம்.. சபாபதி இல்லாமல் மணிவண்ணனா என்று..!? 

அதன் பின்பு சபாபதி ஆஸ்திரேலியா சென்று ஏதேதோ வேலை பார்த்து எதுவும் செட்டாகாமல் மீண்டும் சென்னை திரும்பி கோடம்பாக்கத்திலேயே கால் வைத்தார். அப்போதும் மணிவண்ணனுடன் இணையாமல் சில சீரியல்களுக்கும், படங்களுக்கும் பணியாற்றினார்.. சபாபதியின் பிரதான சீடர் சங்கர்தான் அதற்குப் பின்பு மணிவண்ணனின் அனைத்துப் படங்களுக்கும் கேமிராமேன்..! இந்தக் கூட்டணி அமைதிப்படை 2-ம் பாகத்தின் ஷூட்டிங்கை கோவையில் துவக்கிய அதே நாளில் சென்னையில் ஒளிப்பதிவாளர் சபாபதி தற்கொலை செய்து கொண்டது அசந்தர்ப்பமானது..! நடந்திருக்கவே கூடாதுதான். ஆனால் நடந்தேறியது.. 

400 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.. எத்தனை படங்களை நாம் பார்த்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஆனாலும் மணிவண்ணனின் நடிப்பு ஸ்டைலும், பேச்சு ஸ்டைலும் வேறு யாராலும் பின்பற்ற முடியாதது என்பது மட்டுமே நமக்குத் தெரிகிறது..!

ஒரு நாள் மதியப் பொழுதில் திண்டுக்கள் கணேஷ் தியேட்டரில் ‘நூறாவது நாள்’ படம் பார்த்தேன். பொழுது போக்குக்காக படம் பார்க்கத் துவங்கியிருந்த காலக்கட்டம். ஒரு திரில்லராக எடுத்துக் காண்பித்து விஜயகாந்த் அந்த சுவரைத் தட்டிப் பார்க்கும்போது நெஞ்சுக்குள் ஒரு கல்லெறிந்தது போன்ற ஒரு உணர்வைத் தூண்டிவிட்டது அவரது இயக்கம்..! ‘மணிவண்ணன்’ என்ற பெயர் நமக்குள்ளும் ஆழமாகப் பதிந்தது..! இதற்குப் பின்புதான் இவரது முந்தைய படங்களையே பார்க்கத் துவங்கினேன்..!

அடுத்த படமான ‘24 மணி நேரம்’. திண்டுக்கல் அபிராமி தியேட்டரில். எனக்குப் பிடிக்கவேயில்லை. எனக்கு முன் வரிசையில் ஒரு ஐயராத்து மாமி தனது மகள்கள் 4 பேரையும் அழைத்து வந்திருந்தார். சத்யராஜ் பெட்ரூமில் வரிசையா 7 பெண்களுடன் படுத்திருக்கும் காட்சியின்போது அவர்கள் பட்ட அவஸ்தை படத்தைவிட சுவாரஸ்யமாகவே இருந்தது..!

‘பாலைவன ரோஜாக்கள்’தான் மணிவண்ணனை மிக மிக பிடித்த இயக்கநராகக் கொண்டு வந்தது..! மலையாளப் படத்தின் தமிழாக்கம் என்றாலும், திரைக்கதையில் அதே விறுவிறுப்புடன் அப்போது நடந்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கிண்டல் செய்யும்வண்ணம் “இங்க யாரும் பாலம் கட்ட வரலை போலிருக்கு...” என்ற வசனத்திலும், “கமிஷன் கொடுக்கலை போலிருக்கு. அதான் கட்டாம விட்டிருக்காங்க..” என்ற வசனத்தை பயன்படுத்திய இடத்திலும் அந்தப் படத்தின் பாதிப்பு அன்றைய அரசியலையே நினைவுபடுத்தியிருந்தது..!

இதன் பிறகு இவரது படங்களை விரட்டிப் பிடித்தபோதுதான் ‘முதல் வசந்தம்’ கிடைத்தது..! சத்யராஜ் அண்ட் மலேசியா வாசுதேவனின் எகத்தாளமான அந்த மாடுலேஷனும்... அதுக்கேற்றது போன்ற அந்த திரைக்கதையும் இப்போதும் அந்தப் படத்தை மறக்க முடியாத்தாக மாற்றியது.. இவரும் சத்யராஜும் சேர்ந்தால் லொள்ளோடு ஜொள்ளும் சேர்ந்த்து என்பதை இந்தப் படத்திலும் சொல்லிக் காட்டினார்கள்..! ஒரு இடத்தில் வசனம் இப்படி : விபச்சாரத் தொழில் செய்யும் பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருவார்கள். அந்தப் பெண் ஜலதோஷம் பிடிச்சிருக்கு என்று சிணுங்குவார்.. “பல ஊர் தண்ணி பாயுதுல்ல..!” என்று அலட்சியமாக வசனத்தை தெளித்திருந்தார் மணிவண்ணன். தியேட்டர் குலுங்கியது இந்த இரட்டை அர்த்த வசனத்தில்.. “ஆறு அது ஆழமில்லை” பாடலை எடுத்திருக்கும்விதம் மறக்க முடியாதது..!

‘உள்ளத்தை அள்ளித் தா’ படத்தில் தனது குருநாதரின் நடிப்புத் திறமையை வெளிக்காட்ட வேண்டியே இரட்டை வேடத்தில் நடிக்க வைத்திருந்தார் சுந்தர் சி. ‘டேய்’ என்று அவர் பேசும் வசனமே ஒரு கவன ஈர்ப்புதான்..! ஒரு வசனத்தை எத்தனை விதமாக பேசலாம் என்பதைப் பேசிக் காட்ட மணிவண்ணனால்தான் முடியும்..!  டி.பி. கஜேந்திரனின் ஒரு படத்தில் வினுசக்கரவர்த்தியின் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு இவர் செய்யும் காமெடிகளும், அலம்பல்களும் இன்றைக்கும் கண்ணிலேயே இருக்கிறது..!

எனக்கு அவருடைய படங்களில் அதிகம் பிடித்தது ‘அமைதிப்படை’யும், ‘தெற்குத் தெரு மச்சானும்’தான்..! ‘அமைதிப்படை’ டிரெண்ட் செட்டர் படம். அதனை முறியடிக்க இன்னொரு அரசியல் படம் இனிமேல் வருமென்று எனக்குத் தோன்றவில்லை..! ‘தெற்குத் தெரு மச்சானில்’ சத்யராஜ்-பானுபிரியா காதல் காட்சிகளில் இருக்கும் லவ்வை, இப்போதைய இயக்குநர்கள்கூட காட்ட முடியாது..!  அவ்வளவு அழகு.. அந்த போர்ஷனுக்காகாவே நான் அந்தப் படத்தை பல முறை பார்த்திருக்கிறேன்..! அன்பாலயா பிரபாகரன் தயாரித்த அந்தப் படம் காதல், சமூகம் என்பதையும் தாண்டி இயக்குநராக அவருக்குப் பெருமை சேர்த்த படம்..!

‘இனி ஒரு சுதந்திரம்’. அவரது பெயர் சொல்லும் இன்னொரு படம். நடிகர் திலகத்தை படம் பார்க்க அழைத்து.. அவரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு.. “நானும் கப்பலோட்டிய தமிழன்ல நடிச்சேன். மூஞ்சில கரியைப் பூசிட்டானுக.. உனக்கு குழைச்சிட்டிருக்கானுகடி..” என்று சிவக்குமாரிடம் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டுப் போனாராம். கடைசியில் சிவாஜி சொன்னதுதான் நடந்தது..! சிவக்குமாருக்கு மட்டுமே பெயரை சம்பாதித்துக் கொடுத்த இந்தப் படம், மணிவண்ணனுக்கு பெரும் நஷ்டத்தைத்தான் கொடுத்தது..!

சத்யராஜுக்கு இவரைப் போன்றதொரு இயக்குநர் இனிமேலும் கிடைக்க மாட்டார். “மணிவண்ணனை போல அரசியல் டயலாக்.. ஒரு டயலாக்.. வேற யாரையாச்சும் எழுதச் சொல்லுங்க பார்ப்போம்.. யாராலேயும் முடியாது.. மணிவண்ணனால் மட்டும்தான் முடியும். அதுனால அவர் படத்துல மட்டும்தான் நான் வில்லனா நடிக்க முடியும்..” என்றார் சத்யராஜ். இனிமேல் அவருடைய சினிமா கேரியரில் வில்லன் நடிப்பு இருக்காது என்றே நானும் நம்புகிறேன்..!

லொள்ளு, ஜொள்ளு என்று இந்தக் கூட்டணி காட்டியவைகள் பற்றி பலருக்கும் பலவித கருத்துகள் இருக்கலாம். ஒரு பகுத்தறிவு சிந்தனையாளர் இப்படியெல்லாம் படம் எடுக்கலாமா என்று கேட்கும் லெவலுக்கெல்லாம் அமைதிப்படையின் முதல், இரண்டாம் பாகங்களில் பல காட்சிகள் இருந்தன.  “சினிமாவை சினிமாவாக மட்டுமே நான் பார்க்கிறேன்..! அதில் அல்வாவோடு சேர்த்துதான் மருந்தை கொடுக்க வேண்டும். ஒரேயடியாக மருந்தை மட்டுமே கொடுத்தால் அப்புறம் நானே மருந்து சாப்பிட வேண்டி வரும்..” என்று பதில் சொன்னார் மணிவண்ணன்.

அவர் கடைசியாக கலந்து கொண்ட விழா ஆபாவாணனின் சீடர் இயக்கிய ‘மறுமுகம்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா. இதிலும் வழக்கம்போல தனது குருநாதரை கொஞ்சம் வாரிவிட்டார் மணிவண்ணன். முந்தைய இரவில் தண்ணியடித்திருக்கும்போது தான் எழுதிய வசனங்களை படித்துவிட்டு “உன்னை மாதிரி எவண்டா எழுதுறான்..? பிச்சுட்டடா மணி..” என்று கட்டிப் பிடித்து கொஞ்சும் பாரதிராஜா, மறுநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டில் அதே வசன பேப்பரை மூஞ்சியில் விசிறியடித்து, “இதெல்லாம் ஒரு டயலாக்கா..? குப்பை..? என்ன மயிறு மாதிரி எழுதியிருக்க?” என்று திட்டுவாராம்..! “டயலாக்கை திருத்தித் திருத்தி எழுதி, எழுதி பழகினதால நமக்கு இப்பவும் எழுத்து நல்லாவே வருது.. இதெல்லாம் ஒரு டிரெயினிங்குதான்..” என்றார்.

அதே கூட்டத்தில் பேசிய ஆபாவாணன், தான் தயாரித்து அளித்த ‘கங்கா யமுனா சரஸ்வதி’ தொலைக்காட்சித் தொடரில் பணம் ஏதும் வாங்கிக் கொள்ளாமல் இலவசமாக நடித்துக் கொடுத்த மணிவண்ணனின் நல்ல மனதை பாராட்டித் தீர்த்தார். “இது ஆபாவாணன் என்ற திறமைசாலிக்கு நான் கொடுத்த மரியாதை” என்றார் மணிவண்ணன். அன்றைய தினம் ஒரு நெகிழ்ச்சியான விழாவாகத்தான் இது தெரிந்தது.. நன்றிக் கடனை தெரிவித்த கையோடு, “எனக்குத் தெரிஞ்சது சினிமாதான்.. நான் இனிமேலும் சினிமாக்குள்ளதான் இருக்கப் போறேன்.. என்னைத் தூக்கி வெளில போட்டாலும், திரும்பவும் சினிமாக்குள்ளதான் வருவேன்..” என்று தன்னம்பிக்கையுடன் சொல்லிவிட்டுப் போனார்.. இனி அவரது திரைப்படங்கள் மட்டுமே இங்கே பேசப்படும்..!

தனது குருநாதரை போலவே தானும் நல்ல சிஷ்யர்களை உருவாக்கிவிட்டுத்தான் போயிருக்கிறார் மணிவண்ணன். இதில் சுந்தர் சி.யும், ஆர்.கே.செல்வமணியும், சீமானும் முக்கியமானவர்கள். செல்வபாரதி, சி.வி.சசிகுமார், ஈ.ராமதாஸ், விக்ரமன், ஜீவபாலன் என்று இந்த லிஸ்ட் நீண்டுதான் செல்கிறது..! அனைவருமே இப்போதும் பலவித வேலைகளில் சினிமாக்குள்ளேயேதான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

படித்தவர்.. பல வரலாற்று நூல்களையும், அரசியல் நூல்களையும் கரைத்துக் குடித்தவர்.. இதன் போக்கிலேயே தனது காலத்தில் தான் நம்பிய அரசியல் கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல்.. வெளிப்படையாக பேசியவர்.. ஈழம், காவிரி பிரச்சினை, தமிழ் தேசம் என்றெல்லாம் பல விஷயங்களை பேசினாலும் விஷயத்தோடு பேசியிருக்கிறார்..! அவருடைய பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள் இப்போதும் நாம் தமிழர் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும்..! இனிமேலும் இந்த சிடிக்கள் மூலமாகவும் அவர் தான் நம்பிய கொள்கைகளை பரப்பிக் கொண்டேயிருப்பார்.. 

மனுஷனுக்கு கஷ்டம் வந்தால் தொடர்ந்து வரும் என்பார்கள்.. மணிவண்ணனுக்கும் இதுதான் நடந்திருக்கிறது.. அவருடைய மனைவி செங்கமலமும் இப்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருடன் போராடி வருகிறார்.. இந்த்த் துயரத்தைக்கூட தாங்கிக் கொண்டு இவரால் எப்படி சிரித்தபடியே விழாக்களுக்கு வர முடிந்தது என்று இப்போது நினைத்துப் பார்த்து பிரமிக்க வேண்டியிருக்கிறது..! அந்தக் குடும்பத்திற்கு ஒரு நல்ல ஆறுதலையும், அரவணைப்பையும் முருகப் பெருமான் வழங்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்..!

54 comments:

Unknown said...

நல்ல மனிதர் நடிகர் இயக்குனர்

Jackiesekar said...

அற்புதமான அஞ்சலி கட்டுரை....

RAJESH said...

அருமையான பதிவு

AAR said...

Great personality!!

I have a doubt, these atheist karunanidhi, Manivannan they comment about others' belief in God. Do they also comment about their spouses belief in God?

ARAN said...

மிக மிக பொருத்தமான அஞ்சலி.படித்து முடித்தவுடன் மனதை நிறைந்திருக்கிறார் மணிவண்ணன்.

Muthalib said...

நிறைவான பதிவு. தெற்கு தெரு மச்சான் மணிவண்ணன் இயக்கம் என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். சத்யராஜ் - பானுப்ரியா விருந்து காட்சி மிகவும் நகைச்சுவையாகவும் ரொமாண்டிக்காகவும் எடுத்திருப்பார்.

தென்ன மர தோப்புக்குள்ளே குயிலே குயிலே - இளையராஜாவின் அதி அற்புத மெலடி இருக்கும் படம்.

மிக்க நன்றி உண்மைத்தமிழன் அவர்களே.

மணி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம். மணி இருந்தால் இந்த வரிக்கு செம லொள்ளாய் ஒரு கமெண்ட் அடித்திருப்பார் :'(

Unknown said...

ஐயா இது போன்ற ஒரு முழுமையான நினைவு கட்டுரையை நீங்கள் எழுதி ஒரு பெருமகனாருக்கு சிறந்த அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். நன்றி!

சேக்காளி said...

//மணிவண்ணனின் நடிப்பு ஸ்டைலும், பேச்சு ஸ்டைலும் வேறு யாராலும் பின்பற்ற முடியாதது//
நிச்சயமாக.
அப்புறம் தன் பின்னே வந்தவன், வழி நடத்தி செல்பவனாக மாறிய பின்பு அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனம் படைத்தவர்களை குரு என்று எப்படி சொல்ல முடியும்?.தலைப்பில் மாற்றம் செய்ய முடியுமா என்று பாருங்கள்.
மணியை போன்றே அவரை விரும்புபவர்களும் என்பதை இந்த பதிவின் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள்.

சேக்காளி said...

//தென்ன மர தோப்புக்குள்ளே குயிலே குயிலே - இளையராஜாவின் அதி அற்புத மெலடி இருக்கும் படம்//
இதற்கு இசையமைத்தவர் இளையராஜா அல்ல.தேவா

k.rahman said...

அருமையான பதிவு - RIP MANI

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - மறைந்த இயக்குனர் மணிவண்ணனுக்கு ஒரு அருமையான அஞ்சலி - எத்த்னை எத்த்னை நிகழ்வுகள் அவரின் புகழ் பாட..... தங்களீன் நினைவாற்றல் பாராட்டுக்குரியது. இருப்பினும் அஞ்சலி செலுத்தும் பதிவி இவ்வளவிஉ நீண்டுடுடுடுடுடூடுடூடுடுடு இருக்க வேண்டுமா ... பொதுவாக அஞ்சலி செலுத்தும் பதிவு சுருக்கமாக இருக்க வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

Very good article.

”தளிர் சுரேஷ்” said...

இயக்குனர் மணிவண்ணன் குறித்து பல நல்ல தகவல்களை அறியவைத்து அருமையான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது பதிவில்! நன்றி! இயக்குனர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

Nondavan said...

அருமையான பதிவு...மனம் பூரா மணிவண்ணன் என்ற நல்ல மனிதர் நம்மில் நிறைந்து இருக்கார்...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

ஜோதிஜி said...

மிக அழகாக பதிவு செய்து இருக்குறீங்க. நிச்சயமாக இதுவொரு ஆவண கண்ணீர் அஞ்சலி பதிவு.

kanavuthirutan said...

இயக்குநர் மணிவண்ணனைப் பற்றி பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. எப்போதுமே அவரது துணிச்சல் பாராட்டுக்குரியது. அவரது இயக்கத்தை விட எனக்கு அவரது நடிப்பு மிகவும் பிடிக்கும்... அவர் இல்லாமல் போனது அவரது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் மட்டும் இன்றி தமிழ் சினிமாவுக்கும் பெரிய இழப்பே.. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

Jayadev Das said...

very elaborate, written without boring. thanks

நாடோடிப் பையன் said...

Very good article. I came to know a lot about Mr Manivannan that I was not aware of. Thanks.

SANKAR said...

மணிவண்ணன் இயக்கத்தில் தோழர் பாண்டியன் மதிமுக ஆரம்பித்த போது எடுத்த படம்.

நம்பள்கி said...

பொத்தாம் பொதுவா அன்னாரின் ஆத்மா சாந்திடையனும் என்று 'கும்பலில் கோவிந்தா' போடாமல்---அவரைப் பற்றி இவ்வளவு எழுதினதிலிருந்து நீங்கள் அவர் மேல் எவ்வளவவு மரியாதை வைத்து இருக்கிறீர்கள் என்று புரிகிறது.

சுருங்கச் சொல்லி விளங்க வைக்கவேண்டும் என்றால் ஒரே வரியில்...

இதுதாண்டா [உண்மையான-உண்மைத் தமிழனின்] அஞ்சலி...!

ராஜ் said...

சரியான இறுதி அஞ்சலி.

anandhakumar said...

Good article..

கந்தப்பு said...

மணிவண்ணன் அவர்களின் மறைவுக்குப் பிறகு சென்ற திங்கள் கிழமை உங்கள் வலைப்பதிவில் வந்து பார்த்தேன். வலைப்பதிவில் மணிவண்ணன் அவர்களைப் பற்றிய ஆக்கம் நிச்சயம் இருக்கும் என்று எதிர்ப்பார்த்து எமாந்துவிட்டேன். ஆனால் இன்று இப்பதிவினைப் பார்த்ததும் நீங்கள் என்னை ஏமாற்றவில்லை என்று தெரிந்துகொண்டேன். மணிவண்ணன் அவர்களுக்கு தமிழகத்துக்கு வெளியே பல இடங்களில் குறிப்பாக பிரான்ஸ், ரொண்டோ, இலண்டன் என ஈழத்தமிழர்களினால் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுவருகின்றது. அவுஸ்திரெலியாவில் சிட்னியில் வரும் சனிக்கிழமை அவருக்கு நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. மணிவண்ணனின் அவர்களின் இழப்பினை எண்ணி வேதனைப்படும் ஈழத்தமிழர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

விழித்துக்கொள் said...

இயக்குனர் மணிவண்ணன் குறித்து பல நல்ல தகவல்களை அறியவைத்து அருமையான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது பதிவில்! நன்றி! இயக்குனர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
surendran

Jacks said...

மிக நல்ல பதிவு. அன்னாரது ஆத்மா சாந்தி அடைவதாக.
இதற்காக நேரமெடுத்து இதனை பதிவு செய்த கரங்களுக்கு நன்றிகள் பல.

உண்மைத்தமிழன் said...

[[[சக்கர கட்டி said...

நல்ல மனிதர் நடிகர் இயக்குனர்.]]]

முறைப்படி வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Jackiesekar said...

அற்புதமான அஞ்சலி கட்டுரை....]]]

மிக்க நன்றி ஜாக்கி..!

உண்மைத்தமிழன் said...

[[[RAJESH said...

அருமையான பதிவு.]]]

மி்கக நன்றி ராஜேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[AAR said...

Great personality!!]]]

தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர் என்பதால்தான் இவ்வளவு கூட்டம்..!

[[[I have a doubt, these atheist karunanidhi, Manivannan they comment about others' belief in God. Do they also comment about their spouses belief in God?]]]

பேசியிருப்பார்கள்..! ஆனால் பதில் என்ன வந்திருக்கும் என்று நமக்குத் தெரியாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[ARAN said...

மிக மிக பொருத்தமான அஞ்சலி. படித்து முடித்தவுடன் மனதை நிறைந்திருக்கிறார் மணிவண்ணன்.]]]

மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Muthalib said...

நிறைவான பதிவு. தெற்கு தெரு மச்சான் மணிவண்ணன் இயக்கம் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். சத்யராஜ் - பானுப்ரியா விருந்து காட்சி மிகவும் நகைச்சுவையாகவும் ரொமாண்டிக்காகவும் எடுத்திருப்பார்.]]]

இதனால்தான் எனக்கும் பிடித்திருந்தது..!

[[[தென்ன மர தோப்புக்குள்ளே குயிலே குயிலே - இளையராஜாவின் அதி அற்புத மெலடி இருக்கும் படம்.]]]

தேவாவின் இசை..!

உண்மைத்தமிழன் said...

[[[நிஷா - பிரதீபன் said...

ஐயா இது போன்ற ஒரு முழுமையான நினைவு கட்டுரையை நீங்கள் எழுதி ஒரு பெருமகனாருக்கு சிறந்த அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். நன்றி!]]]

வருகைக்கு நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

சேக்காளி said...

//மணிவண்ணனின் நடிப்பு ஸ்டைலும், பேச்சு ஸ்டைலும் வேறு யாராலும் பின்பற்ற முடியாதது//

நிச்சயமாக. அப்புறம் தன் பின்னே வந்தவன், வழி நடத்தி செல்பவனாக மாறிய பின்பு அதனை ஏற்றுக் கொள்ள முடியாத மனம் படைத்தவர்களை குரு என்று எப்படி சொல்ல முடியும்? தலைப்பில் மாற்றம் செய்ய முடியுமா என்று பாருங்கள். மணியை போன்றே அவரை விரும்புபவர்களும் என்பதை இந்த பதிவின் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள்.]]]

தொழில் கற்றுக் கொடுத்த குரு என்பதை தனது ஆடியோ பேட்டியிலும் சொல்லியிருக்கிறார் மணி.. அதனையே நாங்களும் பாலோ செய்வதுதான் அவருக்குச் செய்யும் சிறப்பு..!

உண்மைத்தமிழன் said...

[[[சேக்காளி said...

//தென்ன மர தோப்புக்குள்ளே குயிலே குயிலே - இளையராஜாவின் அதி அற்புத மெலடி இருக்கும் படம்//

இதற்கு இசையமைத்தவர் இளையராஜா அல்ல. தேவா.]]]

தகவலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[k.rahman said...

அருமையான பதிவு - RIP MANI.]]]

நன்றி ரஹ்மான் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - மறைந்த இயக்குனர் மணிவண்ணனுக்கு ஒரு அருமையான அஞ்சலி - எத்த்னை எத்த்னை நிகழ்வுகள் அவரின் புகழ் பாட..... தங்களீன் நினைவாற்றல் பாராட்டுக்குரியது. இருப்பினும் அஞ்சலி செலுத்தும் பதிவி இவ்வளவிஉ நீண்டுடுடுடுடுடூடுடூடுடுடு இருக்க வேண்டுமா ... பொதுவாக அஞ்சலி செலுத்தும் பதிவு சுருக்கமாக இருக்க வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா]]]

இருக்கணும் ஸார்.. ஆனால் அவரைப் பற்றிச் சொல்ல இன்னமும் நிறைய செய்திகள் இருக்கின்றன.. இதுவே குறைவுதான்.. கொஞ்சம், கொஞ்சமாக அஞ்சலி பதிவுகளை எழுத முடியுமா..? அதுதான் கை வலிக்கும்வரையில் டைப் செய்து போட்டுவிட்டேன்..

வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா..!

உண்மைத்தமிழன் said...

[[[suresh kumar said...

Very good article.]]]

மிக்க நன்றி சுரேஷ் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

இயக்குனர் மணிவண்ணன் குறித்து பல நல்ல தகவல்களை அறியவைத்து அருமையான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது பதிவில்! நன்றி! இயக்குனர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!]]]

வருகைக்கு நன்றிகள் சுரேஷ் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அருமையான பதிவு... மனம் பூரா மணிவண்ணன் என்ற நல்ல மனிதர் நம்மில் நிறைந்து இருக்கார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை...]]]

அவருடைய படைப்புகள் மீது நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் தெரியும் அவரைப் பற்றி..! நல்ல மனிதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி திருப்பூர் said...

மிக அழகாக பதிவு செய்து இருக்குறீங்க. நிச்சயமாக இதுவொரு ஆவண கண்ணீர் அஞ்சலி பதிவு.]]]

அப்படியே இருக்கட்டும் என்றுதான் மிக நீளமாகவே எழுதியிருக்கிறேன் ஜோதியண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[kanavuthirutan said...

இயக்குநர் மணிவண்ணனைப் பற்றி பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. எப்போதுமே அவரது துணிச்சல் பாராட்டுக்குரியது. அவரது இயக்கத்தைவிட எனக்கு அவரது நடிப்பு மிகவும் பிடிக்கும். அவர் இல்லாமல் போனது அவரது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் மட்டும் இன்றி தமிழ் சினிமாவுக்கும் பெரிய இழப்பே..]]]

வருகைக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

very elaborate, written without boring. thanks.]]]

மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[நாடோடிப் பையன் said...

Very good article. I came to know a lot about Mr Manivannan that I was not aware of. Thanks.]]]

எனக்குத் தெரிந்தது பலருக்கும் தெரியட்டுமே என்பதற்காகத்தான் இது..!

உண்மைத்தமிழன் said...

[[[SANKAR said...

மணிவண்ணன் இயக்கத்தில் தோழர் பாண்டியன் மதிமுக ஆரம்பித்த போது எடுத்த படம்.]]]

ம.தி.மு.க.வுக்காக நிறையவே செய்திருக்கிறார். இழந்திருக்கிறார். அதில் இதுவும் ஒன்று..!

உண்மைத்தமிழன் said...

[[[நம்பள்கி said...

பொத்தாம் பொதுவா அன்னாரின் ஆத்மா சாந்திடையனும் என்று 'கும்பலில் கோவிந்தா' போடாமல்---அவரைப் பற்றி இவ்வளவு எழுதினதிலிருந்து நீங்கள் அவர் மேல் எவ்வளவவு மரியாதை வைத்து இருக்கிறீர்கள் என்று புரிகிறது.
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கவேண்டும் என்றால் ஒரே வரியில்...

இதுதாண்டா [உண்மையான-உண்மைத் தமிழனின்] அஞ்சலி!]]]

நமக்குத் தெரிஞ்சதை.. பார்க்க வாய்ப்பு கிடைத்ததை பதிவு செய்ய நினைத்தேன். செய்துவிட்டேன்..! நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ் said...

சரியான இறுதி அஞ்சலி.]]]

வருகைக்கு நன்றி ராஜ்..!

உண்மைத்தமிழன் said...

[[[anandhakumar said...

Good article..]]]

நன்றி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[கந்தப்பு said...

மணிவண்ணன் அவர்களின் மறைவுக்குப் பிறகு சென்ற திங்கள் கிழமை உங்கள் வலைப்பதிவில் வந்து பார்த்தேன். வலைப்பதிவில் மணிவண்ணன் அவர்களைப் பற்றிய ஆக்கம் நிச்சயம் இருக்கும் என்று எதிர்ப்பார்த்து எமாந்துவிட்டேன். ஆனால் இன்று இப்பதிவினைப் பார்த்ததும் நீங்கள் என்னை ஏமாற்றவில்லை என்று தெரிந்துகொண்டேன். மணிவண்ணன் அவர்களுக்கு தமிழகத்துக்கு வெளியே பல இடங்களில் குறிப்பாக பிரான்ஸ், ரொண்டோ, இலண்டன் என ஈழத்தமிழர்களினால் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. அவுஸ்திரெலியாவில் சிட்னியில் வரும் சனிக்கிழமை அவருக்கு நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. மணிவண்ணனின் அவர்களின் இழப்பினை எண்ணி வேதனைப்படும் ஈழத்தமிழர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.]]]

மிக்க நன்றிகள் ஈழத் தமிழர்களுக்கு.. உள்ளது உள்ளபடியே எந்த உள் நோக்கமும் இல்லாமல், தனக்கிருக்கும் தமிழ் கொள்கையினாலேயே தமிழ் ஈழத்தை ஆதரித்தவர் அவர்.. கொஞ்சமும் அதிலிருந்து அவர் விலகியதில்லை..! அவருடைய மறைவு நிச்சயமாக ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்புதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[விழித்துக்கொள் said...

இயக்குனர் மணிவண்ணன் குறித்து பல நல்ல தகவல்களை அறிய வைத்து அருமையான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது பதிவில்! நன்றி! இயக்குனர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
surendran]]]

மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jacks said...

மிக நல்ல பதிவு. அன்னாரது ஆத்மா சாந்தி அடைவதாக. இதற்காக நேரமெடுத்து இதனை பதிவு செய்த கரங்களுக்கு நன்றிகள் பல.]]]

மிக்க நன்றி ஜாக்ஸ்..!

Babu Palamalai said...

அருமையான ,அவரைப் பற்றிய பல அறிய தகவலுடன் கூடிய அஞ்சலி கட்டுரை !!!

Ganapathi.vv said...



​சொல்வதற்க்கு வார்த்தை இல்லை என் இடம் .​முடிவில் என் கண்களில்
கண்ணீர் மட்டும் .

உண்மைத்தமிழன் said...

[[[Babu Palamalai said...

அருமையான, அவரைப் பற்றிய பல அறிய தகவலுடன் கூடிய அஞ்சலி கட்டுரை!!!]]]

வருகைக்கு மிக்க நன்றிண்ணே..!

அஹோரி said...

மணிவண்ணனை பிடிக்காத சினிமா ரசிகன் இருக்க முடியாது.

RIP.

நேரில் சென்று பார்க்காத குறையை தீர்த்தத்துக்கு நன்றி தல.