பாலை - சினிமா விமர்சனம்..!

27-11-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நம் அனைவரின் ஒரு தலைமுறையைத் தாண்டி பின்னோக்கிப் பார்த்தால் எத்தனை பேர் நமக்குத் தெரிவார்கள்..?  நம்மில் எத்தனை பேரின் மூதாதையர்களின் பெயர்களின் நமக்கும், நமது வாரிசுகளுக்கும் தெரிந்திருக்கக் கூடும்..?

இப்படி ஒவ்வொருத்தரையும் கணக்கில் கொண்டு யோசிக்கும்போது நமது தமிழ் மொழியையும், வாரிசுகளையும் முதன்முதலில் உய்வித்தது யாராக இருக்கும் என்று நாம் எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா..? இன்றைக்கு இருக்கின்ற வசதிகளை வைத்து எத்தனையோவிதமான வாழ்க்கையை அனுபவிக்கும் நாம், நமது முன்னோர்கள் எப்படிப்பட்ட காலக்கட்டத்தில் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்திருப்போமோ..? இதைத்தான் தோழர் செந்தமிழன் தனது பாலை படத்தில் எடுத்துக் காண்பித்திருக்கிறார்.

இப்படியொரு திரைப்படத்தை எடுக்கத் துணிந்த இப்படத்தின் தயாரிப்பாளர் நாகை தி.இரவி அவர்களுக்கு எனது முதற்கண் நன்றி..! 

கற்றது தமிழ் திரைப்படத்தில் இயக்குநர் ராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர், சின்னத்திரை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல்வேறு முகங்களுடன் அறியப்பட்ட செந்தமிழனின் முதல் படமான பாலை, தமிழ் வரலாறு சொல்லும் முதல் திரைப்படமாக உருவாகி அவருக்கும், தமிழ்ச் சினிமாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.


ஒரு கூட்டமாக மூத்தோர் ஒருவரின் வழி காட்டுதலில், தலைவன் ஒருவனின் அரவணைப்பில் வாழும் தமிழர்கள். ஆயர்குடி என்னும் பகுதியில் வாழ்ந்த இவர்கள், அந்தப் பகுதியை ஆக்கிரமிக்கும் வந்தேறிகளால் விரட்டப்பட்டு முல்லைக்கொடிக்கு இடம் மாறுகிறார்கள். முல்லைக்கொடி இருக்கும் நிலமோ பாலை. பாலைவனத்தில் பண்பட்டா வாழ முடியும்..!? அங்கே வாழ்பவர்கள் ஒன்று கொள்ளையடித்து வாழ வேண்டும். இல்லையேல் இடம்விட்டுத் தாவ வேண்டும்..! இந்த இரண்டில் ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் தமிழ் மக்களுக்கு..! மோதி விடுவது என்றே முடிவு செய்கிறார்கள். ஆனால் கிடைத்த முடிவு என்ன என்பதைத்தான் 2 மணி நேர படமாக உருவாக்கியிருக்கிறார்..!

காயாம்பூ என்ற இளம் பெண், எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடியில் தன்னைப் பற்றியும், தனது கூட்டத்தினரைப் பற்றியும் எழுதுவதில்தான் கதை துவங்குகிறது.. இன்றிலிருந்து 2000 வருடக் காலக் கட்டத்தின் பின்னோக்கிய வரலாற்றை நமது தமிழின் பழம் பெரும் பாடல்களின் மூலம்தான் அறிய முடிந்துள்ளது.

5 ஆண்டு காலமாக தமிழகத்தின் பல்வேறு நூலகங்கள், வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள் என்று பலரையும் சந்தித்து தகவல்களைச் சேகரித்து அதன் பின்பே இந்த பாலை வரலாற்றை செல்லூலாய்டில் பதிவு செய்யத் துவங்கியிருக்கிறார் இயக்குநர். 

பழந்தமிழரின் வாழ்க்கை முறைகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், உடைகள், உணவு முறைகள், வந்தேறிகள் என்று சொல்லப்படும் அந்நிய மொழியாளர்களின் வாழ்க்கை என்று நாம் இதுவரையில் காணாத காட்சியமைப்புகளே திரையில் ஓடுகின்றன.

என்னை அதிகம் கவர்ந்தது இயக்கம்தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கேற்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை கொடுத்து அவற்றை யாரும் மீறாமல் இருக்கும்படியாக வசனங்களை வைத்திருக்கும் பாங்கு, அவற்றை அவர்கள் உச்சரித்திருக்கும் விதம்.. அனைத்துமே அசர வைக்கிறது.. உதாரணமாக தலைவரின் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டும் என்கிற அவரது கீழ்ப்படியும்தன்மை, காயாம்பூவின் கணவன் கடத்தப்பட்டபோதும் மறுபேச்சில்லாமல் அடங்கிப் போவதை வெகு இயல்பாகக் காட்டியிருக்கிறார். தலைவர் என்று உணர்ச்சியுடன் உச்சரிக்கும் அந்த வார்த்தைகளில் இருக்கும் தயக்கம், பயம் இரண்டையும் உணர முடிகிறது..!

இளையோருக்குள் இருக்கும் காதல்.. அதை அவர்கள் வெளிப்படுத்தும்விதம், பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்களில்லை.. கீழேயும் இல்லை.. மேலேயும் இல்லை என்பதை காட்டும்விதமாக பெண்கள் ஆண்களை தாக்குவதைப் போன்ற காட்சிகள், காயாம்பூ தனது காதலனை கன்னத்தில் அறைவது.. கள் என்ற போதையை பெண்களும் அருந்துவது என்ற அக்கால வாழ்க்கையை சமரசமில்லாமல் பகிர்ந்துள்ளார் இயக்குநர். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவைகள் நமது பெண்குலத்தின் தலையில் விழுந்தது எப்படி என்ற கேள்விக்குறியையும் இப்படம் எழுப்புகிறது..!

ஆயர்குடியை மீட்டால் ஒழிய நாம் வழிப்பறியை கைவிட முடியாது என்ற முதுவனின் நடவடிக்கையும், அதன் பின்னான சண்டையில் தனது இனம் தாக்கப்பட்டதையும் கண்டு அவர் படும் அவலத்தை குடித்தே தீர்க்க முயல்வதையும் தெளிவாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர். அக்காலத்திலேயே இப்படித்தான் என்பது தமிழச் சமூகத்திற்கு இழுக்காக இல்லை.. மனித குல குணத்திற்கு இதுவே பொதுவான பண்பாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சின்னத்திரையில் ஷார்ப்பான வசனங்களுக்காகவே பேசப்பட்ட செந்தமிழினின் படைப்பில் வசனங்களுக்கு சொல்லியா தர வேண்டும்..? அழகுத் தமிழில் அத்தனையும் நிறுத்தி, நிதானமாக செவிகளில் மிக எளிதாக நுழையும்வகையில் எழுதியிருக்கிறார்.

ஆமைகளின் அணிவகுப்பை பார்த்துவிட்டு முதுவனின் பாலை வரப் போகுதுடா என்ற புலம்பல் துவங்குகிறது.. இதன் பின்புதான் அத்தனை ரணகளமும் தொடர்கிறது. வந்தேறிகளின் பிடியில் சிக்கினால் இறுதிவரையில் அடிமைகளாகவே வாழ வேண்டியிருக்கும் என்பதுதான் சிக்கியவனை மீட்டெடுக்க நினைக்கும் தமிழ்ச சமூகத்தின் முன் நிற்கும் ஒரே காரணம்.. எக்காரணம் கொண்டும் நம் இனம் அடிமையாகக் கூடாது என்றே அப்போதும் நினைக்கிறார்கள். அதே சமயம் நாம் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை என்பதோடு, நாமும் யாரையும் அடிமைப்படுத்தவும் கூடாது என்பதையும் தமிழனின் மரபாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அவசரப்படக் கூடாது.. வீரம் மட்டுமே போதாது.. சூழ்ச்சியும் வேணும் என்ற முதுவனின் கூற்று இப்போதைய தமிழர்களின் வாழ்க்கைக்கும் மிகவும் அவசியம். அந்த சூழ்ச்சி வலையை உணரத் தெரியாமல்தான் தற்போது அழிந்தோம் என்பதை அடுத்தடுத்த வசனங்களில் குறிப்பிட்டுக் காட்டுகிறார் இயக்குநர். புலி, சிங்கம் என்று பிரித்தெடுத்து அவர் குறிப்பிடும்போது யாரை அப்படிக் குறிப்பிடுகிறார் என்பதையும், பூர்வகுடி மக்கள் யார், வந்தேறிகள் யார் என்பதும் புரிகிறது. 

படத்தில் 3 முக்கிய நபர்களின் பங்களிப்பும் அசத்துகிறது. முதல் நபர் எடிட்டர் ரிச்சர்ட். இது போன்ற கதை சொல்லும் படங்களில் ஏற்படும் ஆயாசம் இந்தப் படத்தில் எந்த இடத்திலும் ஏற்படவில்லை. தங்குத் தடையில்லாமல் தெளிந்த நீரோட்டம் போன்று செல்கிறது திரைப்படம். பெரிதும் உதவியிருக்கிறார் எடிட்டர். அடுத்து இசையமைப்பாளர் வேத்சங்கர்.  பாடல் காட்சிகளில் அத்தனை வரிகளிலும் தமிழ் விளையாடியிருக்கிறது. கொல்லாரே கொல்லாரே பாடல் கொண்டாட்டத்தைக் கொடுக்கிறது எனில், யாதே யாதே பாடல் கிளர்ச்சியைத் தூண்டுகிறது..! 3 பாடல்களையும் செந்தமிழனே எழுதியிருக்கிறார். அத்தனையும் அட்சரப் பிசகாத தமிழ் வார்த்தைகள்..! புதுமையான இசையாக பாலையின் தீம் மியூஸிக்கே கவர்ந்திழுக்கிறது..! படத்தின் இசையமைப்பாளர் வேத்சங்கர் மிக இளம் வயதுடையவர். இவர் மட்டுமல்ல படத்தில் பங்கு கொண்ட அத்தனை பேருமே 35 வயதுக்குட்பட்ட இளையோர் என்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம். மூன்றாவதாக ஒளிப்பதிவாளர் அபிநந்தனின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப் பெரும் பலம்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் பொட்டல்வெளி, சிறிய காடு, மணல்வெளிகள், வயற்காடுகள், ஏரிகள், கரைகள் என்று கேமிரா எங்கு சென்றாலும் அதுவொரு தமிழர்களின் வாழ்வியல் இருப்பிடமாகவே காண்பிக்கப்பட்டுள்ளது..! சண்டைகளின்போது தமிழர்கள் பயன்படுத்திய கவண்கல், ஈட்டி, சிறிய கத்தி, அவற்றை பெண்களும் பயன்படுத்தியதான உண்மை வரலாறு இதில் சொல்லப்பட்டுள்ளது. இதற்குத்தான் பெண்கள் என்றில்லாமல் ஆண்களுக்கு சளைக்காமல் அவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை..!

காயாம்பூவாக நடித்திருக்கும் ஷம்முதான் இப்படத்தில் நடித்திருப்பவர்களில் சினிமா வட்டாரத்தில் தெரிந்த முகம்., சுனில், முதுவன், தலைவனாக நடித்திருக்கும் நடிகர் என்று அனைவருமே தத்தமது வேலைகளைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். இருளர் இன மக்கள், பூம்பூம் மாட்டுக்கார்ர்கள், லோக்கல் கிராமத்து மக்கள் என்று சினிமா முகங்கள் 2 பேரைத் தவிர மீதி அத்தனை பேருமே அந்நியம்தான். ஆனால் அனைவரையுமே தனது முத்தான இயக்கத்தால் முத்திரை பதிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்..!

கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஒண்ணே கால் கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் ஆவணப் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றிருக்கும். ஆனாலும் அந்தக் கவசக் குண்டலத்தில் போய் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே சில சமரசங்களுடன், நமது அரசியல்வியாதிகளின் கைப்பாவையாக இருக்கும் சென்சார் அதிகாரிகளுக்காக தமிழர்களின் உடை விஷயத்தில் விட்டுக் கொடுத்தும் வெளிவந்திருக்கிறது இப்படம்.

வணிக ரீதியான திரைப்படங்களும், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் மசாலா படங்களுமே சூழ்ந்திருக்கும் இன்றைய சினிமாவில் இது போன்ற சிறந்த, தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் வரலாறுக்கும் தேவையான திரைப்படங்களை ஆதரிப்பதும், வரவேற்பு கொடுப்பதும் நமது கடமை..! நல்ல சினிமாக்கள் வரவில்லையே என்று புலம்புவதைவிட, வந்ததை பெருமகிழ்ச்சியோடு கொண்டாடுவதே சிறந்தது..!

“நாம் காலடி வைக்கும் ஒவ்வொரு அடி மண்ணுக்காகவும், நம் முன்னோர்கள் போராடியிருக்கிறார்கள் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது...” என்று படத்தின் முடிவில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்த இரண்டு வரி வசனமே ஒரு வரலாறாகியிருக்கிறது இப்படத்தில்..!

இப்படத்திற்கு இந்த நேரத்தில் நமது ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை என்பதை மனதில் கொண்டு படம் பார்த்து பரப்புரை செய்து உதவுங்கள் மக்களே..!


12 comments:

ஜோதிஜி said...

திருப்பூரில் தான் இயக்குநர் இருக்கிறார். சற்று நேரத்திற்கு முன்பு பேசினேன். நீங்க முந்திட்டீங்க. நான் எழுதியது வேறொரு இடத்தில் இருந்து வரும் என்று நினைக்கின்றேன். நாளை தெரியும்.

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி திருப்பூர் said...

திருப்பூரில்தான் இயக்குநர் இருக்கிறார். சற்று நேரத்திற்கு முன்பு பேசினேன். நீங்க முந்திட்டீங்க. நான் எழுதியது வேறொரு இடத்தில் இருந்து வரும் என்று நினைக்கின்றேன். நாளை தெரியும்.]]]

நல்லது ஜோதிஜி..

நெல்லை கபே said...

இந்தப் படத்திற்கான விரிவான முதல் விமர்சனம் இதுவே. நன்றி!

என் வலையில்;

யானை ஆடி நின்றிருந்த காலியான கொட்டில்...!

உண்மைத்தமிழன் said...

[[[மாயன் : அகமும் புறமும் said...

இந்தப் படத்திற்கான விரிவான முதல் விமர்சனம் இதுவே. நன்றி!]]]

நன்றி மாயன் ஸார்..!

Unknown said...

அருமையான விமர்சனம், தமிழர் பண்பாட்டை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சி, கண்டிப்பாக அனைவரும் ஆதரிக்க வேண்டும்

பாரதி மணி said...

சரவணா! அன்னியன் படப்பிடிப்பின் போது, சங்கரிடம் செந்தமிழன் என்ற ஒரு உதவி இயக்குநர் இருந்தார். அவர் தானா இவர்?

maithriim said...

இந்தப் பதிவுக்கு நன்றி! கண்டிப்பாகப் பார்க்கிறேன்.
amas32

உண்மைத்தமிழன் said...

[[[இரவு வானம் said...

அருமையான விமர்சனம், தமிழர் பண்பாட்டை ஆவணப்படுத்தும் ஒரு முயற்சி, கண்டிப்பாக அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

ஒருமித்தக் கருத்திற்கு நன்றிகள் வானம் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பாரதி மணி said...

சரவணா! அன்னியன் படப்பிடிப்பின் போது, சங்கரிடம் செந்தமிழன் என்ற ஒரு உதவி இயக்குநர் இருந்தார். அவர்தானா இவர்?]]]

இல்லை ஸார்.. இவர் சங்கரிடம் எப்போதும் உதவியாளராக இருந்தவரில்லை. கற்றது தமிழ் படத்தில் மட்டுமே உதவி இயக்குநராக வேலை பார்த்தார்..!

உண்மைத்தமிழன் said...

[[[amas said...

இந்தப் பதிவுக்கு நன்றி! கண்டிப்பாகப் பார்க்கிறேன்.]]]

அவசியம் பாருங்கள் நண்பரே..!

குடிமகன் said...

இந்த படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று இரு தினங்களுக்கு முன் ஒரு செய்தியை படித்தேன்.. வருத்தமாக உள்ளது.. நிச்சயம் தியேட்டரில் பார்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

[[[குடிமகன் said...

இந்த படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று இரு தினங்களுக்கு முன் ஒரு செய்தியை படித்தேன்.. வருத்தமாக உள்ளது.. நிச்சயம் தியேட்டரில் பார்கிறேன்..]]]

அவசியம் பாருங்கள் நண்பரே..!