சென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை..!

19-10-2010            

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரொம்ப நாட்களாகவே இந்தக் கதையை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தபடியேதான் இருந்தேன். ஆனால் நிறைய சோம்பேறித்தனத்திற்கு அடிமைப்பட்டுவிட்டதால் பாதி எழுதி, மீதியை விட்டு வைத்திருந்தேன். இப்போதுதான் நேரம் வந்தது. எழுதுகிறேன்.

2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்தான் எனது 'புனிதப்போர்' என்னும் குறும்படத்தை எடுத்து முடித்திருந்தேன். அதற்கடுத்த மாதம் எடிட்டிங் செய்து முதல் காப்பி எடுத்து நான் மட்டுமே பார்த்து திருப்திபட்டிருந்த நிலையில், சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் இதை தள்ளிவிட்டு அவர்களையும் கொடுமையில் ஆழ்த்தலாமே என்ற நல்லெண்ணம் எனக்குள் பிறந்தது.

அப்படி என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான 'நிழல்' பத்திரிகையின் ஆசிரியர் திருநாவுக்கரசிடம் இதனை கொடுத்து பார்த்து அனுபவிக்கும்படி சொல்லியிருந்தேன். அவரும் பார்த்துவிட்டு “முதல் முயற்சிதானே.. நல்லாத்தான் இருக்கு. எல்லாருக்குமே இதே மாதிரியொரு எண்ணம் இருக்கும். ஏன்னா அவங்கவங்களுக்கு முதல் முதல்லா மனதுக்குள் எழுந்த கதை அவ்வளவு சீக்கிரம்  அவங்களை விட்டு வெளில போகாது. ஆனால் அது காலம் கடந்ததாகவும் இருக்கும். எடுக்கவும் முடியாது. இது போன்ற பிரச்சினைகள் எல்லா படைப்பாளிகளுக்கும் உண்டு. மனதைத் தளர விடாதீங்க. அடுத்தப் படைப்பை உருவாக்குற வழியைப் பாருங்க..” என்று உற்சாகமூட்டினார்.

அப்படியே கூடவே, தமிழ்நாட்டில் எங்கெங்கு ஆவணப் பட, குறும்பட விழாக்கள் நடைபெறுகின்றன என்பதைச் சொல்லி அங்கேயெல்லாம் எனது படத்தை போட்டிக்கு அனுப்பச் சொன்னார். நானும் திருப்பூர், மதுரை, டெல்லி, மும்பை என்றெல்லாம் எனது 'புனிதப்போர்' படத்தினை போட்டிக்கு அனுப்பி வைத்தேன். பரிசை பத்தி கேட்டு என் வயித்தெரிச்சலை கொட்டிக்காதீங்க. அதனால இதோட விட்ருங்க..!

இப்போதுதான் ஒரு நப்பாசை. ஏதோ 'தேசிய விருது' , 'தேசிய விருது'ன்னு சொல்றாங்களே.. அதுக்கு இதை அனுப்பி பார்க்கலாமே என்று ஒரு ஆசை தோன்றியது. லோக்கல் விருதுகள் கிடைக்காமல் போனாலும் போகலாம். ஆனால் எனது 'புனிதப்போரு'க்கு தேசிய விருது கண்டிப்பாக கிடைக்கும் என்ற எனது அசைக்க முடியாத நம்பிக்கையை தினமும் உரம் ஊற்றி வளர்த்தான் என் அப்பன் முருகன்.

தேசிய விருதுக்கு படங்களை அனுப்ப விரும்பினால் அது முதலில் சென்சார் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்ததால் சென்சார் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டேன். சாஸ்திரி பவனில் நான் கால் வைத்தபோது, கூடவே சனீஸ்வர பகவானும் என்னுடன் தொற்றிக் கொண்டது எனக்கு அப்போது தெரியவில்லை.

டிடி எடுத்துத் தரச் சொன்னார்கள். அதைக் கொடுத்தவுடன் அப்ளிகேஷனை கொடுத்தார்கள். டிவிடிக்கள்-2, எடிட்டிங் செய்த இடத்தில் இருந்து சர்டிபிகேட், தயாரிப்பாளரிடம் இருந்து சான்றிதழ் என்று நிபந்தனைகள் பல இருந்தன. இதில் கொடுமையானது முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதித் தர வேண்டும் என்பதுதான்.

ஸ்கிரிப்ட் என்றால் வசனம் மட்டுமல்ல.. கதாபாத்திரங்களின் அசைவுகளையும் சேர்த்து, கேமிரா கோணங்களின் இருப்பு, எந்த வகையான ஷாட்டுகளை வைத்திருக்கிறோம்.. காட்சியில் இருக்கும் மற்றவர்களின் ரியாக்ஷன் என்ன என்பது முதற்கொண்டு அத்தனையும் பதிவு செய்யப்பட வேண்டும்.

இதுபோல் சென்சார் ஸ்கிரிப்ட் எழுதுவதற்காகவே ஸ்பெஷலான எழுத்தாளர்கள் சென்சார் அலுவலகத்தின் வாசலில் நின்றிருப்பார்கள். இதற்குத் தனியாக புரோக்கர்களும் இருக்கிறார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகம் போலவே.. சென்சார் போர்டு அலுவலகத்திலும் இந்த புரோக்கர்கள் சகல துறைகளிலும் புகுந்து வருவார்கள். நாம் வரவேற்பறையோடு நிற்க வேண்டியதுதான்.

“இவர்களைப் பிடித்தால் உடனே காரியம் முடிந்துவிடும்” என்று என்னிடம் சென்சார் அலுவலக அதிகாரி ஒருவர் நான் அப்ளிகேஷனை வாங்கிக் கொண்டு வெளியில் வரும்போதே சொன்னார். வெளியில் என்னை வரவேற்ற அந்த புரோக்கரிடம் எனது குறும்படம் பற்றிச் சொல்லி “படம் மொத்தமே 12 நிமிடங்கள்தான்.. எவ்வளவு ஆகும்..?” என்று கேட்டேன். வாய் நிறைய பான்பராக்கை குதப்பியபடியே, “12 நிமிஷம்னா கொஞ்சம் குறைச்சுக்கலாம். ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க. போதும்.. நான் சொல்லும்போது வந்தால் போதும். ஸ்கிரீனிங்கப்போகூட நீங்க வர வேண்டாம். சர்டிபிகேட்டை கைல வாங்கி வைச்சுக்கிட்டுத்தான் நான் உங்களைக் கூப்பிடுவேன்” என்று உறுதிமொழியளித்தார்.

ஆனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கே இரண்டாயிரம் ரூபாய்தான் சென்சார் ஸ்கிரிப்ட்டுக்கு கொடுக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியும் என்பதால் “சரி.. யோசிக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அன்றைய என்னுடைய வாழ்க்கை நிலைமையே பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தது. எதுக்கு வீணா 2000 ரூபாயை வேஸ்ட் செய்யணும் என்று நினைத்து நானே ஸ்கிரிப்ட்டை எழுதிவிட்டேன்.

டி.வி.டி. மற்றும் அனைத்து ஆவணங்களுடனும் நேரில் சென்று எனது விண்ணப்பத்தினை சமர்ப்பித்தேன். வாங்கிக் கொண்ட ஒரு பெண்மணி.. “என்ன நீங்களே ரெடி பண்ணிட்டீங்களாக்கும்..?” என்று அலுத்தபடியே கேட்டார். “ஆமாம்.. ஏன் மேடம்..?” என்றேன். “அதான் வாசல்ல எழுதறவங்க இருந்தாங்களே..? அவங்ககிட்ட சொல்லியிருக்கலாமே?” என்றார். “எனக்கே எழுதத் தெரியுங்க.. அதான் நானே எழுதிட்டேன்” என்றேன். பட்டென்று சுட்டெரித்துவிடுவதைப் போல் முறைத்தார் அவர். “என்ன மேடம் அப்படி பார்க்குறீங்க..?” என்றேன் கூலாக.. “உங்களுக்குத் தெரியாதுங்க.. உங்க ஸ்கிரிப்ட்டுல ஏதாச்சும் ஒரு சின்ன தப்புன்னாலும் 'இங்க சர்டிபிகேட் தர முடியாது'ன்னு சொல்லிருவாங்க.. அப்புறம் நீங்க கட்டின பணம்கூட வேஸ்ட்டுதான்.. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்” என்று சொல்லிவிட்டு ஏதோ வேண்டா வெறுப்பாக வாங்கி உள்ளே வைத்துக் கொண்டார்.

நாம பார்க்காத கவர்ன்மெண்ட் ஆபீஸா..? என்ற நினைப்பில் வீடு வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து சென்சார் ஆபீஸில் இருந்து என்னை போனில் அழைத்தார்கள். “இன்னிக்கு சாயந்தரம் 5 மணிக்கு ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர்ல இருக்குற எங்க பிராஞ்ச் ஆபீஸ்ல உங்க படத்தை பார்க்கப் போறாங்க. நேரா அங்க 5 மணிக்கு போயிருங்க..” என்றார்கள்.

நானும் மிகச் சரியாக ஐந்து மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தேன். திரைப்படங்களை சென்சார் செய்யும்போது அதிகாரிகள் சொல்லும் நாளில், அவர்கள் சொல்லும் பிரிவியூ தியேட்டர்களில் தயாரிப்பாளர்கள் சகல வசதிகளுடன் படத்தைத் திரையிட்டுக் காட்டுவார்கள்.

ஆனால் ஆவணப்படங்கள், குறும்படங்களை மட்டும் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரின் உள்புறம் இருந்த ஒரு அலுவலகத்தில்தான் பார்த்து வந்தார்கள். இப்போதும் இது தொடர்கிறதா என்று தெரியவில்லை. அங்கு சென்றவுடன் ரிசப்ஷன் பெண்ணிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கேட்டபோது உள் அறைக்குள் போகச் சொன்னார். அறையில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தார்கள். என் பெயர், எனது தொழில், என்னைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டு “சரி.. நீங்க கிளம்புங்க. நாங்க படம் பார்த்துட்டு நாளைக்குச் சொல்லியனுப்புறோம்..” என்றனர். கிளம்பி வந்துவிட்டேன்.

மறுநாள் காலை 12 மணியிருக்கும். சென்சார் அலுவலகத்தில் இருந்து போன் செய்த ஒரு அம்மணி, “ஸார் உங்க ‘புனிதப்போர்' படத்துக்கு ‘சர்டிபிகேட் தர மாட்டேன்'னு சொல்லிட்டாங்க. நீங்க நேர்ல வந்து பேசுங்க..” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்..

“ஏன்.. ஏன்..?” என்று நான் கேட்டதற்கு, “எனக்கே தெரியாது ஸார்.. அதை நீங்க பெரிய ஆபீஸர்கிட்டதான் கேக்கணும்.. நேர்ல வாங்க..” என்றார் மறுபடியும். விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன். மறுபடியும் அதே அம்மணி.

இம்முறை என்னைப் பார்த்தவுடன் தலையில் அடித்துக் கொண்டவர், “நான்தான் முன்னாடியே சொன்னேன்லங்க.. ‘புரோக்கரை வைச்சு ரெடி பண்ணுங்க'ன்னு.. பாருங்க இப்போ ‘உங்களுக்குக் கொடுக்கவே கூடாது'ன்னு எழுதி வைச்சிருக்காங்க..” என்று சொல்லி சர்டிபிகேட் மறுக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்கும் அந்த நோட்டைக் காட்டினார்.

அதில் ஆங்கிலத்தில், “வசனங்கள் முழுவதும் பெண்களை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதப்பட்டிருக்கிறது. எந்தவிதத்திலும் சர்டிபிகேட் கொடுக்கத் தகுதியில்லாதது இந்தப் படம்..” என்று எழுதப்பட்டிருந்தது. படம் பார்த்தது மூன்று பேர். இரண்டு ஆண்கள். ஒரு பெண். அதில் இரண்டு ஆண்கள் எதுவும் சொல்லாமல் போக.. இந்தப் பெண்மணி ஏதோ அதிசயத்தைக் கண்டுபிடித்ததுபோல் இதை எழுதி வைத்திருக்கிறார். அவர் பெயர் நிகிலா அசோக்குமார்.

“இப்ப நான் என்னங்க செய்யணும்?” என்றேன் அந்தம்மாவிடம். “பாபு ஸாரை பார்க்கணும்.. வெயிட் பண்ணுங்க. அவர் இன்னொரு படம் பார்த்துக்கிட்டிருக்காரு..” என்று சொல்லி அமர வைத்தார்கள்.

வேறொரு லேடி வந்தாங்க. “பாருங்க ஸார்.. அந்தம்மா ரொம்ப ஸ்டிரிக்ட். பிடிக்கலைன்னா அவங்க உறுதியா இருப்பாங்க. நீங்க அந்தம்மாகிட்ட போன்ல பேசிப் பாருங்க.. ‘ஏதாவது டயலாக்கை கட் செய்யணும்னா சொல்லுங்கம்மா கட் செஞ்சிடறேன்'னு சொல்லுங்க. அவங்க சொல்றதையெல்லாம் கட் செஞ்சிருங்க.. உடனே சர்டிபிகேட் கைக்கு வந்திரும். வீணா பிரச்சினையை பெரிசாக்காதீங்க..” என்று அட்வைஸ் மழை பொழிந்தார்.

“எடுத்ததே 12 நிமிஷ படம். அதுல ஒரு பொம்பளைகூட கிடையாது. எல்லாரும் ஆம்பளைங்கதான். அதுலேயும் அவங்க முகத்தைக்கூட காட்டாம கட் பண்ணியாச்சு. மிச்சம் இருக்கிறது வசனம்தான். அதுவும் இருக்கக் கூடாதுன்னு அப்புறம் அதுல என்னதாங்க இருக்கும்..?” என்றேன். “அந்த வசனத்துலதான பிரச்சினை.. பேசாம அந்தம்மா சொன்ன மாதிரியே செய்யுங்க.. இல்லைன்னா உங்களோட 1500 ரூபாய் வேஸ்ட்டாயிரும். அதுக்காகச் சொல்றேன்.. உங்களையும் பார்த்தா பாவமா இருக்கு..” என்று என்னை ஏதோ பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு கற்பனை செய்து பார்த்துவிட்டுச் சொன்னார் அந்தப் பெண்.

நானும் ஆஹா.. அரசு அலுவலகத்தில் நம்மளையும் மனுஷனா மதிக்கிறதுக்கு ஒரு ஜீவன் இருக்கேன்னு சந்தோஷத்துல இருந்தேன். ரெண்டே நிமிஷத்துல இடி விழுந்துச்சு. என்னை உள்ளே அழைத்தார்கள். அங்கே நான்கைந்து ஊழியர்கள் நின்றிருந்தார்கள். “உக்காருங்க ஸார்..” என்றார்கள். உட்கார்ந்தேன். “இங்க பாருங்க ஸார்.. உங்களுக்கா எவ்ளோ கஷ்டப்பட்டாவது, அந்தம்மாகிட்ட பேசி நாங்க சர்டிபிகேட் வாங்கித் தர்றோம்.. கவலையை விடுங்க..” என்றார் அட்வைஸ் செய்த அதே அம்மணி. பிட்டு படம் பார்க்கத் தியேட்டருக்கு போய், ஷகிலாவே நேரில் வந்து பக்கத்தில் அமர்ந்தது போல் சிலிர்ப்பாக இருந்தது எனக்கு..

பட்டென்று என் முன்னால் ஒரு ரசீது புத்தகத்தை வைத்த அந்தப் பெண், “இது எங்க குவார்ட்டர்ஸ் பக்கத்துல இருக்குற கோவில்.. அதை கொஞ்சம் பெரிசா கட்டலாம்ன்னு இருக்கோம். நீங்க உங்களால முடிஞ்சதை கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும். எவ்ளோ ஸார் எழுத? 500, ஆயிரம்..” என்று அவராகவே முடிவெடுத்ததைப் போல பேச.. பொசுக்கென்று போனது எனக்கு..

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, “இல்ல.. இப்ப பணம் எதுவும் கொண்டு வரலையே..?” என்று இழுத்தேன். “சரி.. பரவாயில்லை ஸார்.. நாளைக்கு வந்து பணத்தைக் கொடுத்திட்டு சர்டிபிகேட்டை  வாங்கிட்டு போங்க..” என்றார். கோடு எங்கே இழுத்து எங்கே போடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். “சரி.. நாளைக்கு பார்ப்போம்ங்க..” என்று கொஞ்சம் கடுப்போடு சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்து அமர்ந்தேன்.

அவர்களுடைய ஏமாற்றமோ என்னமோ.. கிட்டத்தட்ட 2 மணி நேரமாகியும் அழைக்கப்படாமலேயே இருந்தேன். எனக்குப் பின்னால் வந்தமர்ந்த தயாரிப்பாளர் வி.சேகர், தேனப்பன் ஆகியோர் தங்களது வேலையை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள்.

சாவகாசமாக சென்சார் அதிகாரி பாபுராமசாமியின் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அவரும் என்னை மரியாதையுடன் அமர வைத்து என்னைப் பற்றிய முழுத் தகவலையும் தெரிந்து கொண்டவர், “உங்க படத்தை இப்பத்தான் பார்த்தேன். எனக்குப் புரியுது. (அருகில் இருந்த அலுவலர்களைக் காட்டி) இவங்க எல்லாருக்கும் புரிஞ்சது. அந்தம்மாவுக்கு மட்டும் புரியலை. விடுங்க. நான் அவங்களோட போன்ல பேசி புரிய வைச்சிட்டேன். சர்டிபிகேட் கொடுக்கச் சொல்லிட்டேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. குட் வொர்க்.. நல்லாத்தான் இருக்கு. வித்தியாசமான முயற்சி.. இது மாதிரி நிறைய பண்ணுங்க.. எட்டு பேரு நல்லாயில்லைம்பாங்க.. நாலு பேரு நல்லாயிருக்கும்பாங்க.. உங்க மனசுக்கு படம் பிடிச்சிருக்கா.. அது போதும். வெளில கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. இப்பவே சர்டிபிகேட் தரச் சொல்றேன்..” என்று சொன்னவர் இண்டர்காமில் யாரிடமோ எனக்கு சர்டிபிகேட் தரச் சொல்லி உத்தரவிட்டார்.

நானும் நிம்மதிப் பெருமூச்சுடன் வந்து அமர்ந்தேன். மறுபடியும் அதே ரசீது புக் அம்மணிகள் வேகமாக என்னிடத்தில் வந்து, “என்ன ஸார்.. உங்களுக்காக ஸார்கிட்ட எவ்ளோ ஸ்டிராங்கா பேசியிருக்கோம்.. நீங்க கவனிக்க மாட்டேன்றீங்க..?” என்றார்கள். நானும் பணிவாக, “நிஜமா என்னிடம் இப்ப பணம் எதுவும் இல்லீங்க... அதோட இந்த மாதிரி கோவிலுக்கு நன்கொடை கொடுக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயம்..” என்று முகத்திலடித்தாற்போல் சொன்னேன். ஏதோ நாத்தனாரிடம் முறைத்துக் கொண்டு போவதைப் போல் பதிலே சொல்லாமல் முகத்தை மட்டும் வெட்டிக் காட்டிவிட்டுப் போனார்கள் அந்தப் பெண்மணிகள்.

'யு' சர்டிபிகேட்டுடன் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதியன்று பிற்பகலில் எனது முதல் கன்னி முயற்சிக்கான அரசு அங்கீகாரத்தை நான் வாங்கிய கதை இதுதான்.

எனது அந்தக் குறும்படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே 'பக்கம், பக்கமான வசனங்கள்' என்றார்களே தவிர.. 'நீக்கப்பட வேண்டிய வசனங்கள்' என்று சொல்லவில்லை. இது இயல்பாக தினம்தோறும் பெண்கள் மீது ஊடகங்களின் மூலம் சுமத்தப்படும் வார்த்தைகள்தான். இத்தனைக்கும், இன்றைக்கும் டிவி சீரியல்களில் வரும் வசனங்களில் கால்வாசிகூட நான் எழுதியதில் இல்லை.  ஆனாலும் இதை குரூரம் என்கிறார் அந்த அம்மையார்.

இதன் பின்பு நான் எந்தத் திரைப்படத்திற்குச் சென்றாலும் சென்சார் சர்டிபிகேட்டில் இந்த அம்மையார் பெயர் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பேன். இருந்தது நிறைய படங்களில்..

அத்தனைப் படங்களிலும் ஆபாச வசனங்களும், குலுக்கல் காட்சிகளும், அங்கங்களை குளோஸப்பில் அசைக்கும் காட்சிகளை வைத்திருந்து அந்தப் படத்திற்கு 'யு' சர்டிபிகேட்டும் கொடுத்து கையொப்பமிட்டிருக்கும் கொடுமையையும் கண்டு கொண்டே வருகிறேன்.

என்னால் பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்..? 

இவ்வளவு நேரம் இதனை பொறுமையாகப் படித்து முடித்திருக்கும் தோழர்களுக்கு எனது 'புனிதப்போர்' குறும்படத்தைக் காணும் வாய்ப்பை கொடுக்கவில்லையெனில் நான் நன்றி மறந்தவனாகி விடுவேன்..

இந்த மூன்றாண்டுகளில் நிறைய புதிய பதிவர்கள் வலையுலகில் நுழைந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இதைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதைப் போல அவர்களும் இதனைப் பார்த்து பரவசமடைய வேண்டும் என்று எண்ணுகிறேன்.

புதிய பதிவர்களே.. என் இனிய தோழர்களே.. என் மீது பொறாமைத் தீயில் வெந்து உருகும் ஒரு சில பழைய பதிவர்கள், “பார்க்காதீங்க.. பேய் அடிச்சிரும்.. பிசாசு கடிச்சிரும்.. பூதம் தூக்கிட்டுப் போயிரும்..” என்றெல்லாம் உங்களை பயமுறுத்தக் கூடும். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், காதில் வாங்கிக் கொள்ளாமல் தைரியமாக இங்கே போய் எனது அந்த தேசிய விருதுக்குரிய, ஆஸ்கார் விருதை மயிரிழையில் தவறவிட்ட குறும்படத்தைப் பார்த்து பரவசமடையுங்கள்...

உங்களுடைய விலை மதிப்பில்லாத விமர்சனங்களை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

அன்புடன்

உண்மைத்தமிழன்

39 comments:

எஸ்.கே said...

படத்தை ரசித்தேன். ஆனால் ஏதோ தடைகளுடன்(பட்ஜெட், கால்சீட் போன்று) எடுத்ததை போல் உள்ளது. இப்பதிவை படித்தவுடன் இன்னும் பல பிரச்சினைகளுடன் தான் படத்தை எடுத்துள்ளீர்கள் என புரிகிறது. தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக படைப்புகளை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! வாழ்த்துக்கள் சார்!

நசரேயன் said...

வீட்டுல போய் பத்திட்டு விமர்சனம் எழுதுறேன்

rse said...

SIr,

எனது அந்த தேசிய விருதுக்குரிய, ஆஸ்கார் விருதை மயிரிழையில் தவறவிட்ட குறும்படத்தைப் பார்த்து பரவசமடையுங்கள்...



கண்டிப்பா பார்க்கிறேன்

உங்க முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

அந்த லூசு பெண்மணி யாரு சார்

Julir

ISR Selvakumar said...

உங்க குறும்படத்தின் கதை எதைப் பற்றி என்று தெரியாது. ஆனால் சென்சாருக்கு அலைந்த இந்தக் கதை சூப்பர்!

கபீஷ் said...

கோயில் ரசீது சீட்டு பகல் கொள்ளையா இருக்கே.

a said...

anne.......

neenka cirtificate vanka patta kaztatha compar pannumpothu padam pakkura kaztam perusa tehriyala........

vetukku poyi pathuttu thiruppi comment poduren...

பிச்சைப்பாத்திரம் said...

அன்பான சரவணன்,

சான்றிதழ் வாங்குவது பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா? விளக்கமாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நாமக்கல் சிபி said...

அண்ணே! உடம்பு கிடம்பு சுகமில்லையா? பதிவு ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப சின்னதா இருக்கு! :(

அந்த அம்மையார் குறும்படத்தை நிஜமாகவெ பார்த்திருந்தார் என்றால் வேறொரு தண்டனை தேவையில்லை! :)) ச்சும்மா!

டுபாக்கூர் பதிவர் said...

இதுக்குத்தான் நியுமராலஜி, நேமாலஜி எல்லாம் பார்த்து படத்துக்கு பேர் வைக்கணும்ங்கறது....பாருங்க தலைப்பு மாதிரியே போராடி சர்ட்டிஃபிகேட் வாங்கியிருக்கீங்க...

:))

எல் கே said...

ரெண்டுமே இப்ப பண்ணலாம்னு துவங்கினா, படிக்கவே இவ்ளோ நேரம். இருங்க இன்னிக்கு நைட் பாக்கறேன்

டுபாக்கூர் பதிவர் said...

ஒருவேளை தான் பட்ட கஷ்டத்தை மத்தவங்களும் படவேணாம்னு அந்த அம்மா நினைச்சிருப்பாங்களோ...

ஏந்தான் எனக்கு இப்படில்லாம் தோணுதோ!

:))

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
படத்தை ரசித்தேன். ஆனால் ஏதோ தடைகளுடன் (பட்ஜெட், கால்சீட் போன்று) எடுத்ததை போல் உள்ளது. இப்பதிவை படித்தவுடன் இன்னும் பல பிரச்சினைகளுடன்தான் படத்தை எடுத்துள்ளீர்கள் என புரிகிறது. தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக படைப்புகளை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! வாழ்த்துக்கள் சார்!]]]

தங்களின் அக்கறையான பரிவுக்கும், பாசத்திற்கும் மிக்க நன்றிகள் ஸார்..!

அந்தப் படத்தின் ஷூட்டிங்கே மிகப் பெரிய அக்கப்போருடன்தான் நடந்தது. முதல் முயற்சி என்பதால் மிகுந்த பிரயத்தனப்பட்டுத்தான் எடுத்து முடித்தேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[நசரேயன் said...
வீட்டுல போய் பத்திட்டு விமர்சனம் எழுதுறேன்.]]]

அட அடடா.. என்னவொரு கரிசனம்.. நண்பன்டா..!

உண்மைத்தமிழன் said...

[[[julie said...

SIr,

எனது அந்த தேசிய விருதுக்குரிய, ஆஸ்கார் விருதை மயிரிழையில் தவறவிட்ட குறும்படத்தைப் பார்த்து பரவசமடையுங்கள்...

கண்டிப்பா பார்க்கிறேன். உங்க முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

அந்த லூசு பெண்மணி யாரு சார்

Julir]]]

எந்த லூஸை கேட்கிறீர்கள் என்று தெரியவில்லையே ஜூலி..?

உண்மைத்தமிழன் said...

[[[r.selvakkumar said...
உங்க குறும்படத்தின் கதை எதைப் பற்றி என்று தெரியாது. ஆனால் சென்சாருக்கு அலைந்த இந்தக் கதை சூப்பர்!]]]

படத்தைப் பார்த்துட்டுச் சொல்லுங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ILA(@)இளா said...
போன வாரம் சிறந்த பதிவு என் பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன், நன்றி!]]]

ஆஹா.. அண்ணன் இளாவுக்கு எனது நன்றிகள் கோடி..! இன்னும் பல பேருக்கு எனது இந்தப் படைப்பு போய்ச் சேருமே..!

உண்மைத்தமிழன் said...

[[[கபீஷ் said...
கோயில் ரசீது சீட்டு பகல் கொள்ளையா இருக்கே.]]]

நிச்சயம் கொள்ளைதான்.. முக்கியமான அரசு அலுவலகங்களில் இப்படியும் நடக்கும் கபீஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

anne.......

neenka cirtificate vanka patta kaztatha compar pannumpothu padam pakkura kaztam perusa tehriyala........

vetukku poyi pathuttu thiruppi comment poduren.]]]

நன்றி யோகேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[சுரேஷ் கண்ணன் said...
அன்பான சரவணன், சான்றிதழ் வாங்குவது பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா? விளக்கமாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.]]]

அன்பின் சுரேஷ் ஸார்.. நீங்களும் ஏதாவது ஒரு சினிமா தொடர்பாக அந்த அலுவலகம் சென்று வாருங்கள்.. உங்களுக்கும் வேறு ஏதாவது ஒரு நல்ல அனுபவம் வாய்க்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[என்.ஆர்.சிபி said...

அண்ணே! உடம்பு கிடம்பு சுகமில்லையா? பதிவு ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரொம்ப சின்னதா இருக்கு! :(

அந்த அம்மையார் குறும்படத்தை நிஜமாகவெ பார்த்திருந்தார் என்றால் வேறொரு தண்டனை தேவையில்லை! :)) ச்சும்மா!]]]

யோவ் சிபியாரே.. ஆஸ்திரேலியால இருந்தெல்லாம் மெயில் அனுப்பி காய்ச்சல் எப்படியிருக்குன்னு விசாரிக்குறாக..

நீ என்னடான்னா உடம்பு சரியில்லைன்னா நக்கல் வேற விடுறீரு..

இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிப்புட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[டுபாக்கூர் பதிவர் said...
இதுக்குத்தான் நியுமராலஜி, நேமாலஜி எல்லாம் பார்த்து படத்துக்கு பேர் வைக்கணும்ங்கறது. பாருங்க தலைப்பு மாதிரியே போராடி சர்ட்டிஃபிகேட் வாங்கியிருக்கீங்க.:))]]]

எப்படி வைச்சாலும் அங்கேயிருக்கும் அரசு ஊழியர்களும் கொஞ்சம் மனசு வைக்கணும் சாமி.. இல்லைன்னா அம்புட்டுத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[LK said...
ரெண்டுமே இப்ப பண்ணலாம்னு துவங்கினா, படிக்கவே இவ்ளோ நேரம். இருங்க இன்னிக்கு நைட் பாக்கறேன்.]]]

மெதுவா, பொறுமையா படிச்சிட்டு வாங்க எல்.கே.

உண்மைத்தமிழன் said...

[[[டுபாக்கூர் பதிவர் said...
ஒருவேளை தான் பட்ட கஷ்டத்தை மத்தவங்களும் படவேணாம்னு அந்த அம்மா நினைச்சிருப்பாங்களோ... ஏந்தான் எனக்கு இப்படில்லாம் தோணுதோ!))

வஞ்சப் புகழ்ச்சியை ஒத்துக் கொள்கிறேன்..!

பித்தன் said...

ரொம்ப கஷ்டப் பட்டிருக்கீக போல...., படத்த வீட்டுக்கு போயி பார்த்துட்டு கமெண்ட் போடுறேன். காரி துப்பிட்டு வர வேண்டியதுதானே என்ன ஜென்மங்களோ......

முரளிகண்ணன் said...

அண்ணே

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை உறுதிப்படுத்திட்டீங்கண்ணே

pichaikaaran said...

"பிட்டு படம் பார்க்கத் தியேட்டருக்கு போய், ஷகிலாவே நேரில் வந்து பக்கத்தில் அமர்ந்தது போல் சிலிர்ப்பாக இருந்தது எனக்கு.."

அப்படியே கிக் ஏறி, ஏதாவது ஏடாகூடம் செஞ்சு இருப்பீங்க.. அவங்களும் பதிலடி கொடுத்து இருப்பாங்க.. இந்த வரலாற்றை மாத்தி , உங்க மேல அனுதாபம் வர மாதிரி எழுதிய உங்க கற்பனை சக்தியை பாராற்றேன்..
அப்படியே உண்மையான வரலாற்றை அடுத்த பதிவுல எழுதுனா , நீங்க அடைந்த சிலிர்ப்பை நாங்களும் அடைய வசதியா இருக்கும் ..இங்கே சொல்ல வெட்கமா இருந்தா, தனியா எனக்கு மட்டும் மெயில் அனுப்பவும்.. நான் என்னோட கற்பனை கதை மாதிரி பதிவு போட்டுக்றேன் ( பேர் , இடம் , நேரம் எல்லாத்தையும் மாத்திடுவேன் )

எனது அந்தக் குறும்படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே 'பக்கம், பக்கமான வசனங்கள்' என்றார்களே தவிர..

I know.. I know.. I know...

குறும்படத்தைப் பார்த்து பரவசமடையுங்கள்..."
பார்துடீன்.. பார்ப்பதை விட இன்னும் ஒரு முறை "கேட்டு" விட்டு என் கருத்தை சொல்கிறேன்

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீக போல, படத்த வீட்டுக்கு போயி பார்த்துட்டு கமெண்ட் போடுறேன். காரி துப்பிட்டு வர வேண்டியதுதானே என்ன ஜென்மங்களோ.]]]

அரசு அலுவலகங்களே இப்படித்தாண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...
அண்ணே.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை உறுதிப்படுத்திட்டீங்கண்ணே.]]]

அதெப்படி வாங்காம விடுறது..? ஒரு கை பார்த்திர மாட்டோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"பிட்டு படம் பார்க்கத் தியேட்டருக்கு போய், ஷகிலாவே நேரில் வந்து பக்கத்தில் அமர்ந்தது போல் சிலிர்ப்பாக இருந்தது எனக்கு.."

அப்படியே கிக் ஏறி, ஏதாவது ஏடாகூடம் செஞ்சு இருப்பீங்க.. அவங்களும் பதிலடி கொடுத்து இருப்பாங்க. இந்த வரலாற்றை மாத்தி, உங்க மேல அனுதாபம் வர மாதிரி எழுதிய உங்க கற்பனை சக்தியை பாராற்றேன்..

அப்படியே உண்மையான வரலாற்றை அடுத்த பதிவுல எழுதுனா, நீங்க அடைந்த சிலிர்ப்பை நாங்களும் அடைய வசதியா இருக்கும். இங்கே சொல்ல வெட்கமா இருந்தா, தனியா எனக்கு மட்டும் மெயில் அனுப்பவும். நான் என்னோட கற்பனை கதை மாதிரி பதிவு போட்டுக்றேன் ( பேர் , இடம் , நேரம் எல்லாத்தையும் மாத்திடுவேன் )

எனது அந்தக் குறும்படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே 'பக்கம், பக்கமான வசனங்கள்' என்றார்களே தவிர.. I know.. I know.. I know...

குறும்படத்தைப் பார்த்து பரவசமடையுங்கள்..."

பார்துடீன்.. பார்ப்பதை விட இன்னும் ஒரு முறை "கேட்டு" விட்டு என் கருத்தை சொல்கிறேன்.]]]

காத்திருக்கிறேன்..!

தியேட்டர் விஷயம் வெறும் கற்பனையே..

மாறாக நீங்கள் ஏதேனும் கற்பனை செய்து கொண்டால் அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது..!

Anonymous said...

இந்த கட்டுரையே ஒரு குறும் படத்திற்கான கதை உள்ளது...இதை எடுக்க முயலுங்கள்...ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில். சான்றிதழ் ரொம்ப சுலபம்.

ராம்ஜி_யாஹூ said...

பணம் இல்லாமல் எந்த விருதும் கிடைக்காது சாமி.

உண்மைத்தமிழன் said...

[[[சாரு புழிஞ்சதா said...
இந்த கட்டுரையே ஒரு குறும் படத்திற்கான கதை உள்ளது. இதை எடுக்க முயலுங்கள். ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில். சான்றிதழ் ரொம்ப சுலபம்.]]]

எடுத்திருவோம்.. நல்ல யோசனை ஸார்..! நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...
பணம் இல்லாமல் எந்த விருதும் கிடைக்காது சாமி.]]]

உண்மைதான் ஸார்..! அதே சமயம் எந்த விருதுக்குமே இங்கே உண்மையான மரியாதை இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

DHANS said...

அண்ணே இதையே நீங்க இன்னொரு படமா எடுக்கலாம் அந்த அளவுக்கு ஸ்கிரிப்ட் தூக்கலா இருக்கு போங்க

Butter_cutter said...

yenna panrathu? india fulla ippadithan irruku

உண்மைத்தமிழன் said...

[[[DHANS said...
அண்ணே இதையே நீங்க இன்னொரு படமா எடுக்கலாம் அந்த அளவுக்கு ஸ்கிரிப்ட் தூக்கலா இருக்கு போங்க.]]]

எடுக்கலாம்தான். ஆனால் சர்டிபிகேட் கிடைக்குமான்றதுதான் தெரியலை..!

உண்மைத்தமிழன் said...

[[[winstea said...
yenna panrathu? india fulla ippadithan irruku.]]]

அதுக்காக ச்சும்மா விட்ரக் கூடாது.. நாம இப்படி வெளிப்படையா எழுதி வைச்சாத்தான் அடுத்து வர்ற சந்ததிகள் இதைப் பார்த்து படித்துத் தெரிந்து கொள்வார்கள்..! தப்பிக்க என்ன வழி என்பதையும் அறிந்து கொள்வார்கள்..! எப்படி நம்ம டயலாக்கு..?

abeer ahmed said...

See who owns land.ru or any other website:
http://whois.domaintasks.com/land.ru

abeer ahmed said...

See who owns mswebtechnology.com or any other website.