ஸ்பெக்டரம் ஊழல் - தரகர்களுடன் தமிழக அரசியல் மாபியாக்கள் ஆ. ராசாவும், கனிமொழியும்

14-07-2010


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜூன் மாதத்திய காலச்சுவடு பத்திரிகையில் வெளி வந்திருந்த கட்டுரை இது..! பார்த்தேன்.. படித்தேன்.. தெளிந்தேன்.. உங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.. காப்பிபேஸ்ட் செய்திருக்கிறேன்..! படித்துப் பாருங்கள்..!

ஸ்பெக்டரம் ஊழல் -  தரகர்களுடன் தமிழக அரசியல் மாபியாக்கள் ஆ. ராசாவும், கனிமொழியும் 

ஆங்கில மூலம் - பரஞ்சய் குகா தாகுர்த்தா

- தமிழில் : தேவிபாரதி

‘நீரா ராடியா என்னும் கார்ப்பரேட் தரகருக்கும் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவுக்குமிடையே நடைபெற்ற அரசு முறையில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் வெளியே கசிந்ததற்குப் பின்னர் ராசாவின் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்  பிடித்திருக்கிறது.

நாட்டுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்திய ஒரு ஊழலை மூடி மறைத்து அதற்குப் போதிய ஆதாரங்கள் எதுவுமில்லை எனத் தந்திரமாக அவரைப் பாதுகாக்க முயல்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள். இப்போது வெளிப்பட்டிருக்கும் உண்மைகள் தேசத்தின் கவனத்திற்குரியவை.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை(2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு, விலை நிர்ணயம் (Allotment and pricing) சார்ந்த நடைமுறைகளில் ஆ. ராசா எடுத்த முடிவுகளில் பல முறைகேடானவை மட்டுமல்ல, சட்டவிரோதமானவையுங்கூட என்பது அம்பலமாகியிருக்கிறது.

உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை முந்தைய தேதி ஒன்றுக்கு மாற்றியதன் மூலம் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (Telecom Regulatory Authority of India)த்தின் விதிகள் வெளிப்படையாக மீறப்பட்டதோடு இத்தகைய ஒதுக்கீடுகளில் பாரபட்சமற்ற வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்னும் நீதிமன்ற வழிகாட்டுதல்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.


மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின்படி தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், அவரது துறை சகாக்கள், அமைச்சரின் முடிவால் பயனடைந்ததாகக் கூறப்படும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தொடங்கியது மத்தியப் புலனாய்வு அமைப்பு(சிபிஐ). முக்கியத்துவம் வாய்ந்த சிபிஐயின் ஒரு விசாரணை அதிகாரி சமீபத்தில் மாற்றப்பட்டிருப்பது ராசா மீதான விசாரணை சரியான முறையில் நடைபெறுமா என்னும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி(Comptroller and Auditor Genaral of India)யின் விரிவான அறிக்கை இன்னும் கிடைக்கப் பெற வேண்டியிருக்கிறது.

3ஜி அலைக்கற்றை என அழைக்கப்படும் மூன்றாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டுக்குப் பொது ஏல முறையைப் பின் பற்றுவதன் மூலம் அரசுக்கு சுமார் 50,000* கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்னும் அரசு மதிப்பீட்டின்படி பார்த்தால்கூட 2008 ஜனவரியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறையில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்னும் விதியைக் கடைபிடித்ததால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, குறைந்தபட்சம் அந்த அளவுக்கு இருக்கும் என்பது தெளிவு.

இத்துறையில் தனக்கு முன்பிருந்தவர்கள் பின்பற்றிய அதே நடைமுறைகளைத்தான் தானும் பின்பற்றியதாகச் சொல்வதன் மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு நடைமுறைகளில் தான் எடுத்த முடிவுகளை நியாயப்படுத்த ராசாவால் முடியாது.

ஸ்பெக்ட்ரம் அலை வரிசைகள் சினிமா டிக்கட்டுகளைப் போல விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அந்த ஒதுக்கீட்டால் யார் யார் பயனடைந்தனரோ அவர்களுக்குச் சாதகமாக விளையாட்டின் விதிகள் மாற்றப்பட்டன.

அது மட்டுமல்ல, தன் அமைச்சரவைச் சகாக்கள், அவரது துறையின் உயரதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை ராசா வேண்டுமென்றே புறக்கணித்தார். பிரதமர் மன்மோகன்சிங்கின் குறிப்பான சில வழிகாட்டுதல்களையுங்கூட ராசா பொருட்படுத்தவில்லை. இவற்றினூடாக அனைத்து நடை முறைகளைப் பற்றியும் பிரதமருடன் ஆலோசிப்பதாக வெளிப்படையாக அறிவித்துக் கொண்டிருந்தார் ராசா.

கூட்டணி அரசியலின் நிர்ப்பந்தங்களும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, கனிமொழி ஆகியோருடன் அவருக்குள்ள நெருக்கமும் அவர் ஒரு தலித் என்பதால் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என அவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரமும் 47 வயதுடைய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினரின் மீது யாராலும் கைவைக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ராசா மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருந்தாலும் அவருக்குச் செல்வாக்கும் கவர்ச்சியும் நீடித்திருக்கும்வரை அவை போதுமானதல்ல எனத் தட்டிக் கழிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஜனவரி 2008-ல் தொலைத் தொடர்புத் துறை தான் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்த நிறுவனங்களின் குழு ஒன்றுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான உரிமங்களை வழங்கியது. ஒவ்வொரு அனைத்திந்திய அளவிலான உரிமமும் 1651 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இத்தொகை 2001-இல் நிர்ணயிக்கப்பட்டது. ராசா தொலைத் தொடர்புத் துறையில் எந்த அனுபவமுமற்ற நிறுவனங்களிடமிருந்து உரிமம் கோருவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றார்.

அவற்றில் யுனிடெக்(Unitech) போன்ற தொலைத் தொடர்புத் துறைக்குச் சம்பந்தமில்லாத கட்டுமான நிறுவனங்களும் அடக்கம். சுற்றுச் சூழல் துறையின் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவரது முந்தைய அவதாரத்தில் அவர்களோடு ராசா வர்த்தக ரீதியில் தொடர்புகொண்டிருந்தார்.

2007 செப்டம்பர் 25 அன்று யுனிடெக் நிறுவனம் தன் எட்டுத் துணை நிறுவனங்களின் பெயரில் 22 விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த சில மணி நேரங்களுக்குள் தொலைத் தொடர்புத் துறை அவசர அவசரமாகவும் தன்னிச்சையாகவும் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி ஒன்றின் மூலம் 2007, அக்டோபர் ஒன்றுக்குப் பிறகு வரும் எந்த விண்ணப்பத்தையும் ஏற்கப்போவதில்லை என அறிவித்தது.

அதற்குப் பிறகு மூன்று வேலை நாட்களுக்குள் மேலும் 373 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கெடு நாளை முன் தேதியிட்டு மாற்றியமைத்ததன் மூலம் பல நிறுவனங்களை உரிமம் கோரி விண்ணப்பிப்பதிலிருந்து தடை செய்தது தொலைத் தொடர்புத் துறை.

பெறப்பட்ட 575 விண்ணப்பங்களிலிருந்து வேண்டப்பட்ட 120 நிறுவனங்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்புக் கிடைப்பதற்கு இதன் மூலம் உதவியது. பிறகு நீதிமன்றம் பாரபட்சமான முறையில் கெடு தேதியை முன் தேதியிட்டு மாற்றியமைத்த தொலைத் தொடர்புத் துறையின் செயலைக் கடுமையாக விமர்சித்தது.

எஸ் டெல் (S Tel) தொடர்ந்த வழக்கில் அவ்வாறு கெடு தேதியை மாற்றியமைத்தது சட்ட விரோதம் என அறிவித்தது தில்லி உயர் நீதிமன்றம். ஒற்றை நீதிபதி (single judge) அளித்த தீர்ப்பைத் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் அங்கீகரித்தது.

இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தொலைத் தொடர்புத் துறை சார்பாக முன் வைத்த வாதங்களை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். அதற்குப் பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு எஸ் டெல் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரிய அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படவே  இல்லை.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்குத் தன்னிச்சையாக விளக்கமளித்து அவற்றைத் தனக்குச் சாதகமான சில நிறுவனங்கள் ஆதாயம் பெறுவதற்கு உதவியிருக்கிறார் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர். அவற்றில் சில தம் பங்குகளைத் தனிப்பட்ட பேரங்களின் மூலம் விற்பதற்கும் அனுமதிக்கப்பட்டன.

செப்டம்பர் 2008-ல் ஸ்வான் டெலிகாம் (Swan Telecom) நிறுவனம் தன் 45 சதவிகிதப் பங்குகளை ஐக்கிய அரபு எமிரேட் நிறுவனமான எடிசாலட்(Etisalat)டுக்கு 900 மில்லியன் டாலருக்கு (சுமார் 4200 கோடி ரூபாய்) விற்றது. ஸ்வான் தன் உரிமத்தை வெறும் 1537 கோடி ரூபாயில் பெற்றிருந்தது. உரிமம் அளிக்கும் ஒரு துண்டுத்தாளைத் (licence) தவிர அந்த நிறுவனத்திடம் வேறு உடைமைகளும் இருந்திருக்கவில்லை.

ஒரு மாதத்திற்குப் பிறகு யுனிடெக் வயர்லெஸ் நிறுவனம் தன் 60 சதவிகிதப் பங்குகளை நார்வேயைச் சேர்ந்த டெலிநார் (Telenor) நிறுவனத்துக்கு 6200 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த நிறுவனத்துக்கும் 1651 கோடி ரூபாயில் 2008 ஜனவரியில் பெறப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமம் தவிர வேறு உடைமைகள் இல்லை.

அதற்குப் பிறகு டாடா டெலி சர்வீசஸ்(Tata Tele Services) தன் 26 சதவிகிதப் பங்குகளை ஜப்பானின் என்டிடி-டொகோமோ(NTT DoCoMo) நிறுவனத்துக்கு 13200 கோடி ரூபாய்க்கு விற்றது. 

இவற்றிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் ராசாவின் தலைமையிலான தொலைத் தொடர்புத் துறை குறைந்தபட்சம் ஒன்பது நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தைச் சந்தை மதிப்பைவிட ஏழு மடங்கு குறைத்து விற்றிருக்கிறது என்பதுதான்.

ராசா தன் துறை அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பொருட்படுத்தாதது மட்டுமல்ல, அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்காகக் காத்திருக்கவும் செய்தார். ராசாவுக்கு ஆலோசனை சொன்னவர்களில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் டி. எஸ். மாத்தூர், முன்னாள் நிதி, தொலைத் தொடர்பு ஆணையத்தின் உறுப்பினர் மஞ்சு மாதவன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

மஞ்சுமாதவன் உரிய காலத்துக்கு முன்னதாகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சித்தார்த்த பரூவாவைத் தொலைத் தொடர்புத் துறைக்குக் கொண்டுவருவதற்கு முன்பாக இந்த அதிகாரிகள் இருவரும் ராசாவின் விருப்பப்படி ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் உரிமங்கள் ஒதுக்கும் முடிவைக் கடுமையாக எதிர்த்தனர்.

பரூவா உரிமங்கள் வழங்குவது தொடர்பான ராசாவின் சந்தேகத்துக்குரிய முடிவை ஆதரித்தவர். இப்போதைய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரும் அப்போதைய நிதித் துறைச் செயலாளருமான டி. சுப்பாராவின் ஆலோசனைகளையும் அமைச்சர் அலட்சியப்படுத்தினார். 

தவிர இந்த விவகாரம் பற்றி அமைச்சரவைக் குழு(Empowered Group of Ministers)விடம் ஆலோசிக்குமாறு சட்ட அமைச்சகம் கூறிய யோசனையை இது பல்வேறு துறைகளுக்கிடையே விவாதிக்கப்பட வேண்டிய விஷயமல்ல எனக் காரணம் கூறி, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை பொருத்தமற்றது என நிராகரித்தார் ராசா.

2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கும் நடைமுறைகள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் திறமை அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்தும்படியும் கட்டணத் தொகை சரியானபடி திருத்தியமைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்கும்படியும் வலியுறுத்தி நவம்பர் 2-ம் தேதி ராசாவுக்குப் பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தின் மீது அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தன் கொள்கைகள் காரணமாகத் தொலைபேசிக் கட்டணம் குறைக்கப்பட்டு நுகர்வோர் லாபமடைந்திருப்பதாகவும் அந்தத் துறையில் ஏற்கனவே இருந்து வந்தவர்களின் ஆதிக்கத்தைத் தகர்த்திருப்பதாகவும் சொல்கிறார் ராசா. அவரது வாதத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவரைச் சுற்றியுள்ளவர்களில் பலரே இப்போது தயாராக இல்லை.

பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களில் ஒன்றுமே இல்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற ஒரு நிறுவனத்தின் அதிகாரத் தரகரோடு தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சர் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் என்னும் விவகாரம் ராசாவை துரத்தத் தொடங்கியிருப்பது ஒரு நகைமுரண்.

உரையாடல் தொடர்கிறது

மே மாதம் முதல் வாரம் ‘Headlines Today’ தொலைக்காட்சி மத்தியத் தகவல் துறை அமைச்சர் ஆ. ராசாவும் கனிமொழி கருணாநிதியும் தில்லியின் முக்கிய அதிகாரத் தரகராகக் கருதப்படும் நீரா ராடியாவும் பேசிய சில உரையாடல்களை ஒலிபரப்பியது.

முதலில் பிறரால் வாசிக்கப்பட்டு, தொலைக்காட்சியிலும் நாளிதழ்களில் பிரதியாகவும் வெளியான உரையாடல் சம்பந்தப்பட்டவர்களின் மறுப்புகளைத் தொடர்ந்து நேரடிக் குரல் பதிவாக ஒலிபரப்பப்பட்டது. இதன் பின்னர் இவற்றின் அசல் தன்மையைச் சம்பந்தப்பட்ட யாரும் மறுக்கவில்லை.

காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் வெற்றி பெற்றதற்கும் ஆட்சி அமைத்ததற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அடுத்த நாட்களில், கருணாநிதி தில்லிக்குச் சென்று குடும்பத்தினருக்காக அமைச்சரவையில் இடம் கேட்டு மன்றாடிவிட்டு வந்த பின்னர் நடந்த உரையாடல்கள் இவை.


அதிகாரத் தரகர் ராடியா வருமான வரி ஏய்ப்பில் பல நூறு கோடிகள் அளவு ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகப்பட்ட வருமானவரித் துறை ஆகஸ்ட் 20, 2008-லிருந்து 300 நாட்களுக்கு அவருடைய பல தொலைபேசி உரையாடல்களைக் கண்காணித்துப் பதிவு செய்தது.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஓராண்டு நிறைவுத் தருணத்தில் கருணாநிதி இரண்டாம் முறையாகத் தில்லி சென்று கனிமொழி கருணாநிதிக்கு அமைச்சரவையில் இடம் கேட்டதாகவும், அவரது கோரிக்கையை சோனியாவும் மன்மோகன்சிங்கும் ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்த தருணத்தில் இந்த ஒலிப்பதிவுகள் வெளியாகியுள்ளன.

சம்பந்தப்பட்டவர்கள் ஒலிபரப்பை ஏற்றுக் கொண்டு, அமைச்சர் பதவியைத் தற்காலிகமாக மறந்துவிட்டு, அமைதி காப்பதைப் பார்க்கும்போது 300 நாட்கள் ஒலிப்பதிவில் இன்னும் பல சூடான விஷயங்கள் இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

உரையாடல் ஒன்று: அகம் புறம்


கனிமொழி கருணாநிதியுடன் - மே 21, 2009, காலை 8:41

கனிமொழி : ஹெலோ

ராடியா : பிரதமர் காரியம் இன்னும் உறுதிப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இன்றும் அது பற்றிய விவாதங்களில்தான்  இருக்கிறார்கள்.

கனிமொழி : தொலைத்தொடர்புத் துறை எங்களுக்கு என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். இனி அதில் மாற்றங்கள் . . .

ராடியா : என்ன?

கனிமொழி : எங்களுக்குத் தொலைத் தொடர்பு என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள். ஆனால் அது ‘அவருக்குப்’ போய்விடக் கூடாது. ஏனென்றால் அவர் ஊடகங்களில் அப்படியான செய்திகளை வரவழைத்துக் கொண்டிருக்கிறார்.  (‘அவருக்கு’ என்பது தயாநிதி மாறன் என்பது வெளிப்படை)


ராடியா : நீங்கள் விமானத்திலிருந்தபோது அவர் அதை எல்லா ஊடகங்களிலும் வரவழைத்துக் கொண்டிருந்தார்.

கனிமொழி : ஆமாம். எனக்கு அது தெரியும்.

ராடியா : ஆனால் கனி, பிரதமர் இப்போது ராஜாவுடனும் பாலுவுடனும் எனக்குப் பிரச்சினை எதுவும் இல்லை, அவர்கள் என் மதிப்பிற்குரிய சகாக்கள் என அறிக்கை வெளியிட்டிருக்காரே.

கனிமொழி : அவர் அறிக்கை விடுவார். ஆனால் இதுபற்றி அப்பாவிடம் பேச வருபவர்கள் மாற்றிப் பேசக் கூடாது. ஒருவர் வெளியே பேசுவதற்கும் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதும் வேறுபடும். அரசியலில் உள்ள நம்மனைவருக்குமே அது தெரியும்.

ராடியா : கனி, காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு தகவல். அவர்கள் சொல்வது: ‘திமுகவின் பிரச்சினைகள் அகப்பிரச்சினைகள். குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினைகள். அவர்களுடைய தலைவர்களுக்கிடையிலான பிரச்சினைகள். திமுக 5 அமைச்சரவைகளுக்கான பட்டியலைக் கொடுத்துள்ளது. அதை நாங்கள் ஏற்க முடியாது’

கனிமொழி : ஆமாம்.

ராடியா : ‘அவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைச் சொல்லிவிட்டோம்’.

கனிமொழி : மூன்றும் நான்கும் (அமைச்சரவைகள்)

ராடியா : ‘பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது என்பதை உணர்கிறோம். ஆனால் நாங்கள் அவர்களிடம் போக முடியாது. எங்களைப் பொறுத்தவரை, அரைமணிக்கொருமுறை மாறன் குலாம் நபி ஆசாதை அழைத்து என்னென்னவோ கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். எங்களை அழைப்பதில் பலன் இருக்காது என்று அவரிடம் சொல்லி விட்டார்கள்’.

கனிமொழி : அவருடைய கோரிக்கைகள் என்னவாம்?

ராடியா : எங்களுக்கு ஐந்து இடங்கள் தாருங்கள் என்று கேட்கிறார். அல்லது அமைச்சரவையில் சேர மாட்டோம் என்கிறார். இல்லையென்றால் ரயில்வே வேண்டுமாம். அல்லது நிலக்கரி மற்றும் கனிமவளம் வேண்டுமாம். எனவே அவர்கள் சொல்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இது திமுகவின் அகப்பிரச்சினை. காங்கிரசுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். யார் வேண்டும், வேண்டாம் என்பதைக் கருணா முடிவு செய்யட்டும். அதை அவரிடமே விட்டுவிட்டோம். அவரே முடிவு செய்யட்டும். ஆனால் மாறனைப் போல் பலர் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

காங்கிரஸ் சார்பாகக் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது தலைவர்கள் மட்டுமல்ல, தரகர்களும்தான் என்பது தெளிவு. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறியவும், என்ன நடக்க வேண்டுமோ அதைச் செயல்படுத்தவும் தரகர்களைத் திமுக பயன்படுத்துவதும் தெளிவு. இத்தரகர்களுக்கு இப்பணிக்காகக் கொடுக்கப்பட்ட தொகை என்ன? அல்லது கைமாறாகக் காட்டப்பட்ட சலுகை என்ன?


சராசரி அரசியல்வாதிகள் மத்திய அரசில் நல்ல ‘வளமான’ அமைச்சரவைகளுக்கு ஆசைப்படுவது இயல்பு. கலைகளைப் புனருத்தாரணம் செய்வதற்காகவே தோன்றி அதிகார ஆசையின்றி ஒரு துறவியைப் போல் வாழ்பவர்கள் அதிகாரத்தின் சூதாட்டத்தில் இறங்குவதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும்: தமிழ் மக்களின் நலன். மண்பாண்டம் செய்தால் கை மண்ணாகத்தானே செய்யும்? உயரிய நோக்கங்களுக்காக எளிய சமரசங்கள் செய்வது, தவிர்க்க முடியாதவைதானே?

உரையாடல் இரண்டு: காயா? பழமா?

மே 24, 2009 காலை: 11:05

ராசா : என் பெயரை ‘கிளியர்’ பண்ணியாச்சா?

ராடியா : நேற்றிரவு உங்கள் பெயரை கிளியர் பண்ணியாச்சு.

ராசா : சரி, தயாநிதி விஷயம் என்னாச்சு? ஜவுளித் துறையா அல்லது ரசாயனம் / உரத்துறையா?

ராடியா : ஆனால் தயாவுக்குக் கிடைக்காது, அழகிரி, தயா இருவரில் ஒருவர்தான் நுழைய முடியும்.

ராசா : இல்லை, இருவருமே நுழையலாம்.

ராடியா : இருவருமா? பாலு(டி.ஆர்)வால்தான் பிரச்சினை இருக்குமென்று நினைக்கிறேன். தலைவருக்கு மூன்று குடும்ப உறுப்பினர்களை நுழைப்பதில் கஷ்டம்தான்.

ராசா : (சிரிக்கிறார்) ஆமாம். ஆனால் எல்லோருக்கும் தெரியுமே . 

ராடியா : இல்லை, கனி(மொழி) என்னிடம் நேற்றிரவு சொன்னார், அவர் தந்தை அவரிடம் நேற்று கூறியதாக, மூன்று குடும்ப உறுப்பினர்களை உள்ளே நுழைப்பது கஷ்டம், இதிலுள்ள பிரச்சினையை அவரால் உணரமுடிகிறது . . .

ராசா : பொறுத்திருந்து பார்ப்போம். நாம் போராடிப் பார்ப்போம்.

மத்திய அரசில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைக் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களால் நிரப்புவது பற்றிய உறுத்தல் எல்லா மட்டங்களிலும் இருப்பது இவ்வுரையாடல்களில் வெளிப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் ஆ. ராசாவுக்கு இடம் உறுதி எனும் செய்தியை மன்மோகன்சிங் அறிவிப்பதற்குப் பல நாட்களுக்கும் முன்னர், அதை ராடியா வழி தெரிந்து கொள்வது கவனத்திற்குரியது.

தமிழகத்தின் தன்மானத் தலைவர்கள் மத்திய அரசுடன் எதற்காகப் ‘போராடு’வார்கள் என்பதும் தெளிவு பெறுகிறது. மேலும் யாருக்கு அமைச்சர் பதவி உண்டு, எந்த அமைச்சரவை யாருக்கு என்பது போன்ற தகவல்களை ஆ. ராசா ஒரு அதிகாரத் தரகருடன் விவாதிப்பது ஏன்?

மொழி பெயர்ப்பும் குறிப்பும் : கண்ணன்.

* மே 20 அன்று 3-ஜி உரிமம் ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு 67,719 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது. (ஆசிரியர்)

நன்றி: The New Indian Express மே 19, 2010 இதழில் வந்த Raja’s nightmare continues என்னும் கட்டுரையின் தமிழாக்கம்.

நன்றி : காலச்சுவடு, ஜூன்-2010

30 comments:

Unknown said...

old story. naalu maasam old.

Unknown said...

அண்ணே இதைப் பத்தி எல்லாம் மக்கள் யோசிப்பங்கன்னு நினைக்கிறீங்க... ?

அபி அப்பா said...

விரைவில் ராஜீவ் கொலை விஷயம் எதிர்பார்க்கிறேன்:-)))

பாலா said...

ஏண்ணே.... காப்பி-பேஸ்ட்டை கூட இம்மாம் பெரிசாவா போடனும்?

நீங்க மொதல்ல இருந்து வாங்கண்ணே!

ஸ்பெக்ட்ரம்னா என்ன??

உண்மைத்தமிழன் said...

[[[kulasekaram said...

old story. naalu maasam old.]]]

உண்மைதான்.. ஆனால் எனது தளத்தில் இந்தச் செய்திகளை இப்போதுதான் முதல் முறையாகப் பதிவிடுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே இதைப் பத்தி எல்லாம் மக்கள் யோசிப்பங்கன்னு நினைக்கிறீங்க... ?]]]

அடுத்து என்ன ஓசில கொடுப்பாங்க.. வாங்கிட்டு ஓட்டைக் குத்திட்டுப் போய் குப்புறப் படுத்துக்கலாம்னு யோசிக்கிறாங்க..!

நல்லாவே தெரியுது செந்தில்.. நாலு பேருக்குத் தெரிஞ்சதை நாப்பது பேருக்குத் தெரியறதுகூட நல்லதுதானே.. அதுக்காகத்தான்..!

பிரபல பதிவர் said...

அண்ணே! ஹர்ஷத் மேத்தா பங்கு சந்தை ஊழலை பத்தி ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்

Ravichandran Somu said...

தொலைத்தொடர்பு (Telecommunications) துறையில் பணியாற்றுவன், பல இந்திய தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோசகனாக (Consultant) பணியாற்றுபவன் என்கிற முறையில் நான் சொல்லிக்கொள்வது ராசா இன்னமும் இந்தியாவின் தொலைபேசித்துறை மந்திரியாக பணியாற்றுவது இந்தியாவின் சாபக்கேடு! அவ்வளவுதான் சொல்ல முடியும்:(

manasu said...

இதுக்கு அப்புறம் ஜுவில ராஜாவின் ஒரு பேட்டி வந்தது. அதுல இதெல்லாம் டூப்பு கந்தசாமி தான் டாப்புன்னு சொல்லிருந்தார்.

சதீஷ் said...

இதுபோன்ற செய்திகள் ஆங்கிலத்தில் வருகின்றன. ஆனால் தமிழகத்திலுள்ள ஆங்கிலம் தெரியாத மக்களுக்கு இதுபோன்ற பதிவுகள் மிகவும் உதவும். தொடர்ந்து இதே போல பதிவுகள் இடவும்.

உங்களுக்கு Investigative Blogger என்ற பட்டம் தருவது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடப்பதாகக் கேள்வி.

ராம்ஜி_யாஹூ said...

பழைய கதை

இப்போது தேர்தல் வைத்தாலும் நீலகிரியில் தி மு க வே ஜெயிக்கும்

அபி அப்பா வின் பின்னூட்டம் அருமை. போபார்ஸ் ஊழல் செய்தி அடுத்த மாத பதிவில் வருமா

டவுசர் பாண்டி... said...

மகாத்மா காந்தியின் கொலை வழக்கின் பல அம்சங்கள் தமிழர்களுக்கு தெரியவில்லை.

இதை பத்தி விளக்கி ஒரு பதிவு போட்டீங்கன்னா தமிழகமே தங்களை நன்றியுடன் நினைக்கும்.

காத்திருக்கிறோம்... :)

ரிஷபன்Meena said...

தமிழ்மணத்தில் ஓட்டளித்தேன் ஆனால் அதன் பிறகும் அது 10 என்றே காட்டுகிறது.

கருவிப் பட்டையில் தம்ஸ் அப் ஐகானைத் தானே பாசிட்டீவ் ஓட்டிற்க்கு அழுத்தவேண்டும் ?

வால்பையன் said...

அடடே!

மக்களுக்காக உழைக்கும் அரசை அல்லவா தேர்ந்தெடுத்துள்ளோம்!

தமிழ் உதயன் said...

அண்ணே... இது ரொம்ப பழசு... புதுசா ஸ்டார் ஹல்த் இன்ஸ்சுரன்ஸ் கமிஷன் பத்தி எதாவது எழுதுங்க...

பழைய ஊழலுக்கு மவுசு கம்மின்ணே..

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...
விரைவில் ராஜீவ் கொலை விஷயம் எதிர்பார்க்கிறேன்:-)))]]]

போட்டுட்டா போச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

ஏண்ணே.... காப்பி-பேஸ்ட்டை கூட இம்மாம் பெரிசாவா போடனும்?

நீங்க மொதல்ல இருந்து வாங்கண்ணே!

ஸ்பெக்ட்ரம்னா என்ன??]]]

இன்னும் ஒரு பத்து வருஷத்துல யாராவது ஒரு டைரக்டர் இதை வைச்சு படம் பண்ணுவாருன்னு நினைக்கிறேன்..!

அப்போ விமர்சனம் எழுதறதுக்காக படம் பார்ப்பீக பாருங்க.. அப்போ பார்த்து தெரிஞ்சுக்குங்க பாலா..!

உண்மைத்தமிழன் said...

[[[sivakasi maappillai said...
அண்ணே! ஹர்ஷத் மேத்தா பங்கு சந்தை ஊழலை பத்தி ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்.]]]

மேட்டர் கிடைச்சா கண்டிப்பா போடுறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரவிச்சந்திரன் said...

தொலைத்தொடர்பு (Telecommunications) துறையில் பணியாற்றுவன், பல இந்திய தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோசகனாக (Consultant) பணியாற்றுபவன் என்கிற முறையில் நான் சொல்லிக்கொள்வது ராசா இன்னமும் இந்தியாவின் தொலைபேசித்துறை மந்திரியாக பணியாற்றுவது இந்தியாவின் சாபக்கேடு! அவ்வளவுதான் சொல்ல முடியும்:(]]]

தமிழ்நாட்டின் சாபக்கேடு கருணாநிதி.. என்ன செய்யறது..? தலையே சரியில்லையே ரவி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[manasu said...
இதுக்கு அப்புறம் ஜுவில ராஜாவின் ஒரு பேட்டி வந்தது. அதுல இதெல்லாம் டூப்பு கந்தசாமிதான் டாப்புன்னு சொல்லிருந்தார்.]]]

ஆமாம்.. அது ஏன்யா கியூ வரிசைன்னு கேட்டதுக்கு மட்டும் இன்னிவரைக்கும் உருப்படியா பதில் சொல்லத் தெரியலை..!

உண்மைத்தமிழன் said...

[[[சதீஷ் said...

இது போன்ற செய்திகள் ஆங்கிலத்தில் வருகின்றன. ஆனால் தமிழகத்திலுள்ள ஆங்கிலம் தெரியாத மக்களுக்கு இதுபோன்ற பதிவுகள் மிகவும் உதவும். தொடர்ந்து இதே போல பதிவுகள் இடவும்.]]]

இந்த ஒரு காரணத்துக்காகத்தான் இந்தப் பதிவையே இட்டேன்.

தோழர் சதீஷுக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

பழைய கதை

இப்போது தேர்தல் வைத்தாலும் நீலகிரியில் தி மு க வே ஜெயிக்கும்

அபி அப்பாவின் பின்னூட்டம் அருமை. போபார்ஸ் ஊழல் செய்தி அடுத்த மாத பதிவில் வருமா?]]]

ஜெயிக்கட்டும்.. மக்கள் திருந்தினால் ஒழிய இவர்களைப் போன்ற கொள்ளைக்காரர்களை விரட்டுவது கஷ்டம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[டவுசர் பாண்டி... said...

மகாத்மா காந்தியின் கொலை வழக்கின் பல அம்சங்கள் தமிழர்களுக்கு தெரியவில்லை.

இதை பத்தி விளக்கி ஒரு பதிவு போட்டீங்கன்னா தமிழகமே தங்களை நன்றியுடன் நினைக்கும்.

காத்திருக்கிறோம்... :)]]]

தாராளமாகப் போடலாம்.. ஆனா நிறைய ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்..

நமக்கு அந்த அளவுக்கு அறிவில்லையே தோழா..!

pichaikaaran said...

எது எப்படியோ... இது போன்ற ஊழலை ஆதரிப்பவர் களுடன் ஒரே மேடையில் தோன்றாமல் ( உடல் நிலையை காரணம் காட்டி !!!! ) , உங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்து விட்டீர்கள்..நன்

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷபன்Meena said...
தமிழ்மணத்தில் ஓட்டளித்தேன் ஆனால் அதன் பிறகும் அது 10 என்றே காட்டுகிறது. கருவிப் பட்டையில் தம்ஸ் அப் ஐகானைத்தானே பாசிட்டீவ் ஓட்டிற்க்கு அழுத்த வேண்டும்?]]]

சரியாகத்தான் குத்தியிருக்கிறீர்கள் ரிஷபன்..!

குத்திய பின்பு மீண்டும் தளத்தை ஒரு முறை ரீலோடு செய்தீர்களேயானால் அது எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...
அடடே! மக்களுக்காக உழைக்கும் அரசை அல்லவா தேர்ந்தெடுத்துள்ளோம்!]]]

கரெக்ட்..

இப்படி நம்பிக்கிட்டுத்தான் நாட்டுல அத்தனை பேரும் வீட்டுக்குள்ள உக்காந்திருக்கான்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ் உதயன் said...
அண்ணே... இது ரொம்ப பழசு... புதுசா ஸ்டார் ஹல்த் இன்ஸ்சுரன்ஸ் கமிஷன் பத்தி எதாவது எழுதுங்க...
பழைய ஊழலுக்கு மவுசு கம்மின்ணே..]]]

எழுதிருவோம்..! டோண்ட் வொர்ரி..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...
எது எப்படியோ... இது போன்ற ஊழலை ஆதரிப்பவர்களுடன் ஒரே மேடையில் தோன்றாமல்( உடல் நிலையை காரணம் காட்டி !!!! ) , உங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்து விட்டீர்கள்..]]]

பார்வையாளன் ஸார்..!

நீங்கள் உடனடியாக ஏதாவது புலனாய்வு பத்திரிகையில் சேர்ந்து கழுகார் பாணியில் கிசுகிசு எழுதலாம். உங்களுக்குத் தகுதி உண்டு.. புரிந்து கொண்டேன்..!

abeer ahmed said...

See who owns gwdowiak.com or any other website:
http://whois.domaintasks.com/gwdowiak.com

abeer ahmed said...

See who owns videos-de-patinando.com.ar or any other website.