அம்பாசமுத்திரம் அம்பானி - திரை விமர்சனம்

05-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, அஸ்ஸாமி, போஜ்பூரி, ஒரியா, வங்காளம் இன்னும் இந்தியாவில் எந்தெந்த மொழிகளில் சினிமா எடுக்கிறார்களோ.. அத்தனை மொழிகளிலும் தைரியமாக இந்தப் படத்தை ரீமேக் செய்யலாம். அவ்வளவு தோதான கதை..!

விதியின் வசத்தால் சொந்த ஊரான அம்பாசமுத்திரத்தில் அனாதையாக்கப்பட்ட தண்டபாணி பிழைப்புக்காக சென்னைக்கு ஓடி வருகிறான்..! வந்தவனுக்கு அடைக்கலம் தருவது விடியற்காலையில் பேப்பர் போடும் தொழில். அத்தொழிலிலேயே கரை கண்டு போன நிலையில் 15 வருடங்களாக உழைத்து, இப்போது அந்தப் பகுதியின் பேப்பர் ஏஜெண்ட்டாகவே மாறி விடுகிறான்.


அவனது தற்போதைய லட்சியம் அம்பானியைப் போல் பெரும் தொழிலதிபராகிவிட வேண்டும் என்பதுதான். இதற்காக குறுக்கு வழிகளையெல்லாம் அவன் நாடவில்லை. நேர்மையாக உழைத்தே முன்னுக்கு வரத் துடிக்கிறான். இவனது இந்த முயற்சியின்போது குறுக்கே வரும் ஒரு பெண் அவனைக் காதலிக்கத் துவங்க.. தனது லட்சியம் இதனால் கெட்டுப் போய்விடும் என்று அதனை மறுக்கிறான்.

ஆனால் சூழ்நிலைகள் அந்தப் பெண்ணையே அவன் திருமணம் செய்யும் நிலைமைக்குக் கொண்டுபோக.. அம்பானியாக அவன் உருவெடுத்தானா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

திண்டுக்கல் சாரதி வெற்றிக்குப் பிறகு தனக்குத் தோதான கதைக்காக உக்கார்ந்து யோசித்ததோ இல்லை.. ரூம் போட்டு யோசித்ததோ தெரியவில்லை.. ஆனால் இப்படியொரு கதையின் தேர்வுக்கு கருணாஸூக்கு ஒரு சபாஷ் போட்டே ஆக வேண்டும்..!

பெரிய ஹீரோக்களிடமெல்லாம் இந்தக் கதை சென்றிருந்தால் ஒரே ஒரு பாடலில் அவன் அம்பானியைவிடவும் பெரும் பணக்காரனாகிவிடுவதாகக் காட்டி முடித்திருப்பார்கள்.

கருணாஸின் இந்த முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் தனது மகன் கென் பெயரிலேயே தானே தயாரிப்பாளராகி படத்தை எடுத்து முடித்திருக்கிறார்..!

அப்படியும் படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்ததுதான்.. பணம் கிடைக்க, கிடைக்க படத்தை ஷூட் செய்திருக்கிறார். மற்ற திரைப்படங்களில் தான் நடித்ததன் மூலம் கிடைத்த பணத்தை வைத்துத்தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். கருணாஸின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்..!

அம்பானி ஆவதற்காக நடு இரவில் எழுந்து ஒற்றைக் காலில் தவம் செய்வது.. இதைப் பார்த்து காலனியே எழுந்து ஆளாளுக்கு ஒரு கோரிக்கை வைத்து தவம் செய்வது என்ற காட்சிகளை ஏற்கெனவே பார்த்திருந்தாலும் இதில் சுவை குன்றவில்லை..!


உழைத்துதான் முன்னேற வேண்டும் என்பதை சொன்ன பின்பு எந்த வேலையாக இருந்தாலும் பார்த்தாகணும் ஸார் என்று கருணாஸ் சொல்வதும்... டிரைலிங் சைக்கிளில் முறுக்கு விற்பனை, பூக்களை பார்சல் செய்வது.. பேப்பர் போடுவது..! காய்கறி வியாபாரம் செய்வது.. என்று சகலத்தையும் செய்துதான் முன்னேறி வருவதாகக் காட்டியிருப்பது உருப்படியான ஒன்று..!

விடியற்காலையில் பேப்பரை போடவரும்போது கோட்டா சீனிவாசராவிடம் “கொட்டுற மழைல கைல டீயோட பேப்பர் படிக்கிறதே ஒரு தனி சுகம் அண்ணாச்சி..” என்று சொல்வது.. “நான் உட்கார்றதுன்னா சன் டிவியோட வணக்கம் தமிழகம் நிகழ்ச்சில மட்டும்தான் அண்ணாச்சி..” என்று தைரியமாக சொல்லிவிட்டுப் போவதும் ரசிக்கத்தக்கது.

அதேபோல் எதுக்காக போற வர்றவங்களையெல்லாம் கூப்பிட்டு காபி, டீ வாங்கிக் கொடுக்குற என்ற கேள்விக்கு கருணாஸ் சொல்லும் பதில் அக்மார்க் இயல்பான மனிதத்தனம் உள்ள விஷயம்.. “இவர்களில் யாராவது ஒருவராவது இதனை ஞாபகம் வைத்திருந்து பிற்காலத்தில் தனக்கு உதவி செய்ய மாட்டார்களா?” என்கிறார் கருணாஸ்.. நியாயம்தானே..?

புதிதாக குடியேறும் வீட்டில் மகளை போலீஸாக்கியே தீருவது என்ற கொலைவெறியில் இருக்கும் டெர்ரர் அப்பாவாக மறைந்த எனது அபிமான நடிகர் வி.எம்.சி.ஹனீபா. நோய்த் தாக்கிய நிலையில் நடித்தத் திரைப்படம் என்பதால் அவருடைய உடல் நலிவை  அவருடைய முகமே காட்டிக் கொடுக்கிறது..!


சென்னையில் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற வேண்டியிருந்ததால் கடைசிக் காலங்களில் மலையாளத் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஹனீபா கருணாஸிற்காக இந்தப் படத்தில் நடத்திருக்கிறார். மனிதரை சாவு என்னும் கொள்ளை நோய் கொண்டு போனது எவ்வளவு பெரிய கொடுமை என்பது படத்தில் ஹனீபாவின் நடிப்பைப் பார்த்தாலே தெரிகிறது.. தன்னுடைய கடைசிப் படமான இதிலும் அவர் சவமாக நடித்திருப்பது துரதிருஷ்டவசமான ஒரு ஒற்றுமை..!???? 


ஹீரோயின் நந்தினியாக நவ்னீத்கவுர்.. நடிப்பும் நன்றாகவே வருகிறது..! பொதுவாக அழகாக இருப்பவர்களிடம் நடிப்பை வலிந்து வரவழைக்க வேண்டியிருக்கும். இப்படி எக்குத்தப்பான தோற்றமுடையவர்களுக்கு ஏதோ ஒரு ஸ்டைலில் நடிப்பு தானாகவே வரும்.

இவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளில் இருக்கும் இரட்டை அர்த்த வசனங்களை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.. ஆனாலும் அதற்கு விளக்கம் சொல்லும் வகையில் உங்கள் மனதில்தான் அசிங்கம் உள்ளது என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்..! இதையெல்லாம் பேசிவிட்டு கேமிரா காட்டும் கோணம் உவ்வே ரகம்தான்..!


தாய், தந்தையரை இழந்து கருணாஸை விரட்டித் தேடிப் போகும் இடத்தில் லாஜிக் இடிக்கத்தான் செய்கிறது என்றாலும் கதையை மேற்கொண்டும் நகர்த்தணுமே என்கிற இயக்குநரின் கவலை இருப்பதால் நம்மால் மேற்கொண்டு ஒண்ணும் சொல்ல முடியாது..!


அம்பானி ஆவதற்கும்,. திருமணம் செய்து செட்டிலாவதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையே.. பின்பு எதற்கு திருமண வாழ்க்கையில் ஈடுபட மறுப்பது போன்ற காட்சிகள். இது வெறுமனே நவ்னீத்தின் கவர்ச்சிக்காக வைத்ததுபோலத்தான் தோன்றுகிறது..!

எவ்வளவுதான் திறமைக்காரனாக இருந்தாலும் அவனை உலகத்தில் அடையாளப்படுத்த ஒரு ஆள் நிச்சயம் தேவைப்படுவான். அப்படியொரு அண்ணாச்சியாக கோட்டா சீனிவாசராவ். கருணாஸின் கடை வைக்கும் ஆசை அளவுக்கதிகமானது என்பதைச் சுட்டிக் காட்டி கோபப்படுவதும், பின்பு மனமிரங்கி அவனுக்காக கடையை ஒதுக்கிக் கொடுப்பதும் நம்மைச் சுற்றி நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டியது.

பின்பு சில காட்சிகளிலேயே மகனுடன் சேர்ந்து ஒருவனை கோட்டா கொலை செய்வதும், அதனை மறைத்து வைப்பதையும் தேவையில்லாமல் எதற்காக காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை. கிளைமாக்ஸ் டிவிஸ்ட் சூப்பர்.. நானும் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை..!

எல்லாரும் மனிதர்கள்தான். ஆனால் அவர்களுக்கும் சைலண்ட்டாக ஒரு வாழ்க்கை இருக்கும் என்பதை கோட்டா மற்றும் அவரது மகன் மூலமாக இயக்குநர் சொல்லியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது..!

கருணாஸின் கூடவே இருக்கும் அந்தப் பையனின் கதையும், அவனே திடீரென்று வில்லனாக உருமாறுவதும் திரைக்கதையில் வேகத்தைக் கூட்டியிருக்கிறது..! பையன்கிட்ட நல்ல நடிப்பு இருக்குங்கோ..!


இதில் நந்தினியை ஒரு தலையாய் காதலிக்கும் காதலனாக லிவிங்ஸ்டனின் நடிப்பு ரொம்பவே ஓவர். இவரைப் பார்த்து ஜொள்ளுவிடும் இன்ஸ்பெக்டர் வேடத்தில் டி.பி.கஜேந்திரனையும் பார்த்து எரிச்சல்தான் வந்தது..! அந்தக் குடும்பத்தின் கதையைச் சொல்லும் ஒரு ஆளாக சுந்தர்ராஜனும், கூடவே டெல்லி கணேஷும் ஒரு கூட்டமே இருந்தாலும் எல்லாம் ஜஸ்ட் லைக் தேட்..

புரோக்கராக வரும் நடிகர் சிங்கமுத்துவின் பேச்சில் இருக்கும் ஒரு பொடி, நிச்சயம் வடிவேலுவை எரிச்சலடைய வைக்கும் என்றே நினைக்கிறேன்.. நகைச்சுவையில் தனக்கென ஒரு பாதையை வைத்திருக்கும் கருணாஸுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?

எல்லாம் இருந்தும், எல்லாம் இருந்தும் கவர்ச்சியாட்டமும், குத்தாட்டமும் இல்லாவிட்டால் படம் போணியாகாது என்பதை தயாரிப்பாளராக உணர்ந்திருக்கும் காரணத்தால், ரகசியாவை வைத்து ஒரு குத்துப் பாட்டையும், ஹீரோயினை வைத்தே ஒரு கவர்ச்சி பாட்டையும் வைத்து விநியோகஸ்தர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்..!


ரகசியாவுடன் கருணாஸ் ஆடும் குத்துப் பாட்டில் கருணாஸின் நிஜ மனைவியான கிரேஸே உடன் ஆடியிருக்கும்போது நாம என்னத்த சொல்றது..? இந்தக் குத்தைவிட நவ்னீத்துடன் ஆடும் குத்துதான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது போலும்..! விசில் சப்தம் காதைப் பிளந்தது..!

பணம் சம்பாதிப்பது வெறுமனே வாழ்வதற்காக அல்ல.. அதில் ஒரு லட்சியத்தை வைத்திருக்கிறேன்.. அதற்காகத்தான் என்று அறிவுரையுடன் பணத்தை வீசியெறியும் நவ்னீத்திடம் கருணாஸ் கூறுகின்ற காட்சி உண்மையானதுதான்.

தான் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சொந்தக்காரனாக வேண்டும் என்று உழைப்பதென்ன தகுதிக்கு மீறிய ஆசையா..? இல்லையே.. அதையே லட்சியமாக நினைத்து உழைத்தால் ஒரு நாள் அடைந்துவிடக்கூடியதுதான். ஆனால் அதற்காக பேப்பர் ஏஜெண்டு என்ற ஒரு வேலையை வைத்தே லட்சம், லட்சமாக பணம் சம்பாதிக்க முடியுமா என்கிற ஒரு லாஜிக் இடிக்கிறது. வேறு ஒரு ஐடியாவும் ரூம் போட்டு யோசித்தவர்களுக்குக் கிடைக்கவில்லை போலும்..!

சன் டிவி படத்தை 1 கோடிக்கு மேல் விலை வைத்து ரைட்ஸ் வாங்கியதால் ஓரளவுக்குத் தப்பியிருக்கும் கருணாஸ் நல்ல தியேட்டர்கள் கிடைக்காமல் அல்லாடி ஒரு வழியாக ரிலீஸ் செய்து முடித்து மூச்சு விட்டிருக்கிறார்..!

வெளுத்துக் கட்டு படத்திற்குக்கூட நல்ல தியேட்டர்கள் கிடைத்திருக்கும்போது இந்தப் படத்திற்கு பகல் காட்சியாக மட்டுமே சில முக்கியத் தியேட்டர்கள் சென்னையில் கிடைத்திருப்பது வருத்தத்திற்குரியதுதான்..! ஆனாலும் மாநிலம் முழுக்க ஓரளவுக்குக் கூட்டம் திரண்டு வருவதாக வந்திருக்கும் செய்திகள் கருணாஸிற்கு மகிழ்ச்சியைத் தரக் கூடும்..! இது போக மற்ற மொழி ராயல்டிகளில் கருணாஸிற்கு சில லட்சங்கள் நிச்சயம் கிடைக்கும்..!

நம்ம கருணாஸிற்காக தயவு செய்து தியேட்டருக்கு போய்ப் படத்தைப் பாருங்க..!

படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

23 comments:

Cable சங்கர் said...

படத்திற்கு ரிப்போர்ட் பரவாயில்லை. தப்பிச்சிரும்னுதான் தெரியுது..

பாலா said...

இவ்வளவு சின்னதா பதிவு போட்டதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு....

... எப்பொழுதும் போல படிக்காமலேயே கமெண்ட் போட்டுவிட்டு செல்கிறேன்.

--

ஏன்னா.. நம்மாளுங்க திரும்ப மேட்டரை ஆரம்பிச்சிட்டாங்க. இனிமே ஒரே துப்பல், நெஞ்சு நக்கல்-ன்னு போகும். இதெல்லாம் படிக்க டைம் இல்லைங்கண்ணா!!

வி ஆர் ஸோ பிஜி..!

Unknown said...

அரசியல் விமர்சனத்திற்கு கும்பிடு போட்டு விட்டு முழு நேர திரைப் பட விமர்சனத்திற்கு வந்து விட்டீர்கள் போலிருக்கிறது. நமக்கெதற்கு ஊர் வம்பு.

Praveenkumar said...

விமர்சனம் அருமை..!

உண்மைத்தமிழன் said...

[[[Cable Sankar said...
படத்திற்கு ரிப்போர்ட் பரவாயில்லை. தப்பிச்சிரும்னுதான் தெரியுது..]]]

எனக்கு வந்த நியூஸும் இதுதான் கேபிளு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...

இவ்வளவு சின்னதா பதிவு போட்டதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு....
... எப்பொழுதும் போல படிக்காமலேயே கமெண்ட் போட்டுவிட்டு செல்கிறேன்.]]]

எங்களுக்கும் ஒரு நேரம் வரும்ண்ணே.. அப்ப வைச்சுக்குறோம்..!

வெடிகுண்டு வெங்கட் said...

படம் நன்றாகவே செல்கிறது. நல்ல படம். டைம் பாஸ்.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

"உளவாளியும், கத்துக்குட்டியும் From Paris With Love 2010 - சினிமா விமர்சனம்

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...
அரசியல் விமர்சனத்திற்கு கும்பிடு போட்டுவிட்டு முழு நேர திரைப் பட விமர்சனத்திற்கு வந்து விட்டீர்கள் போலிருக்கிறது. நமக்கெதற்கு ஊர் வம்பு.]]]

அரசியல் விமர்சனம்தானே..?

இன்னிக்குப் போட்டுட்டா போச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரவின்குமார் said...
விமர்சனம் அருமை..!]]]

நன்றி பிரவின்குமார்..!

MR.BOO said...

நல்ல விமர்சனம்.
கூடவே எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு நீண்ட பதிவுகளை தொடர்ந்து எழுத முடிகின்றது என்ற ரகசியத்தையும் தயவு செய்து சொல்லி விடுங்கள்
நன்றி.

MR.BOO said...

நல்ல விமர்சனம்.
கூடவே எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு நீண்ட பதிவுகளை தொடர்ந்து எழுத முடிகின்றது என்ற ரகசியத்தையும் தயவு செய்து சொல்லி விடுங்கள்
நன்றி.

உண்மைத்தமிழன் said...

[[[வெடிகுண்டு வெங்கட் said...

படம் நன்றாகவே செல்கிறது. நல்ல படம். டைம் பாஸ்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.]]]

நிச்சயம் நல்ல படம்தான்.. நன்றாகவே செல்கிறது.. செல்லும்..! ஓடணும்.. ஓடுனாத்தான் தமிழ்ச் சினிமாவுக்கு நல்லது வெங்கட்டு..!

அன்புடன் நான் said...

தெளிவான பார்வை.. கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் தான்....... திரையரங்கிலேயே பார்க்க போகிறேன். நன்றிங்க.

பார்கவி said...

very good review

Thenammai Lakshmanan said...

நம்ம கருணாஸிற்காக தயவு செய்து தியேட்டருக்கு போய்ப் படத்தைப் பாருங்க..!//

ஏன் சரவணா போகாதீங்கன்னு சொல்ல பாவமா இருக்கா..:))

உண்மைத்தமிழன் said...

[[[MR.BOO said...
நல்ல விமர்சனம். கூடவே எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு நீண்ட பதிவுகளை தொடர்ந்து எழுத முடிகின்றது என்ற ரகசியத்தையும் தயவு செய்து சொல்லி விடுங்கள். நன்றி.]]]

தட்டச்சு செய்து பழகிப் பாருங்கள்.. தானாகவே ஸ்பீடு வரும்..

எனக்குப் பதினொரு வருடப் பழக்கம்..!

உண்மைத்தமிழன் said...

[[[சி. கருணாகரசு said...
தெளிவான பார்வை.. கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய படம்தான். திரையரங்கிலேயே பார்க்க போகிறேன். நன்றிங்க.]]]

நன்றி கருணாகரசு..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்கவி said...
very good review]]]

நன்றி பார்கவி..!

தருமி said...

படங்கள் எல்லாம் பார்த்துட்டேன். ஒரே ஒரு படம் நல்லா இருந்தது.
நன்றி

Kite said...

நம்ம கருணாஸிற்காக தயவு செய்து தியேட்டருக்கு போய்ப் படத்தைப் பாருங்க..! //

எங்கண்ணே பாக்கறது. முக்கியமான திரையரங்குல எல்லாம் மதியம், மாலை காட்சிகள் இல்லை. படம் வெளியானதிலிருந்தே இப்படித்தானா?

உண்மைத்தமிழன் said...

[[[thenammailakshmanan said...

நம்ம கருணாஸிற்காக தயவு செய்து தியேட்டருக்கு போய்ப் படத்தைப் பாருங்க..!//

ஏன் சரவணா போகாதீங்கன்னு சொல்ல பாவமா இருக்கா..:))]]]

அப்படி இல்லக்கா..! பாவம் கருணாஸ்.. சொந்தப் பணத்துல இருக்கிறதையெல்லாம் வித்து கொஞ்சம் உருப்படியா எடுத்திருக்காரு..!

எத்தனையோ வீணாப் போன படங்களையெல்லாம் டிவிடி பார்க்கும்போது இதை மட்டும் தியேட்டருக்கு போய் பார்த்தா அவருடைய இந்த தனிப்பட்ட முயற்சிக்கு நாம கொடுக்குற உற்சாகமா இருக்கும்ல.. அதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[தருமி said...
படங்கள் எல்லாம் பார்த்துட்டேன். ஒரே ஒரு படம் நல்லா இருந்தது.
நன்றி]]]

ஓகே தாத்தா.. களவாணியைச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்..!

ரொம்ப நாள் கழிச்சு வூட்டுக்குள்ள வந்ததுக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Jagannath said...

நம்ம கருணாஸிற்காக தயவு செய்து தியேட்டருக்கு போய்ப் படத்தைப் பாருங்க..! //

எங்கண்ணே பாக்கறது. முக்கியமான திரையரங்குல எல்லாம் மதியம், மாலை காட்சிகள் இல்லை. படம் வெளியானதிலிருந்தே இப்படித்தானா?]]]

ஆமாம்.. பெரிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.. இது கொஞ்சம் பெரிய குறைதான்..!