Showing posts with label வடிவேலு. Show all posts
Showing posts with label வடிவேலு. Show all posts

தெனாலிராமன் - சினிமா விமர்சனம்

19-04-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!





கிட்டத்தட்ட 3 ஆண்டு கால வனவாசத்திற்குப் பிறகு வைகைப் புயல் நடித்திருக்கும் படம் என்பதால் முதல் நாளே பார்க்க வேண்டும் என்று ஆவலை தமிழகம் முழுவதிலும் இருக்கும் சினிமா ரசிகர்களிடத்தில் இப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைக்கு மட்டுமே 95 சதவிகித சென்டர்களில் ஹவுஸ்புல் என்று பாக்ஸ் ஆபீஸ் அறிக்கை தயாரிக்கும் பிரபலங்கள் சொல்கிறார்கள்.
தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டு, படம் பார்க்கும் சராசரி ரசிகனின் சார்பில் திரையில் பேசும் சக அண்ணனாக, தம்பியாக வடிவேலு காட்சியளிப்பதுதான் அவரது மிகப் பெரிய பலம். இந்தப் படத்திலும் அதையே செய்திருக்கிறார். ஆனால் நகைச்சுவைதான் கொஞ்சம் குறைவாக இருக்கிறது.
அரசனுக்குரிய கடமைகளைத் துறந்த தனது மனைவிகள், குழந்தைகள் நலனையே முக்கியம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு அரசனின் அமைச்சரவையில் திட்டம் போட்டு அமைச்சராக சேரும் ஒரு புரட்சியாளன், தனது மதியூக அறிவினால் அந்த அரசனை எப்படி திருத்தி நல்வழிப்படுத்துகிறான் என்பதுதான் படத்தின் கதை.
விகடபுரம் அரசரின் அமைச்சரவையில் நவரத்தின மந்திரிகளாக வீற்றிருக்கும் 9 அமைச்சர்களும் பக்கத்து ஊர் குறுநில மன்னரான ராதாரவியின் பேச்சைக் கேட்டு சீன நாட்டு வர்த்தகர்களை தங்களது நாட்டில் வணிகம் செய்ய அனுமதிக்க நினைக்கிறார்கள். இதனை எதிர்க்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் கொல்லப்படுகிறார். அவர் இடத்திற்குத்தான் தெனாலிராமன் தேர்வாகிறார்.
இவர் அரசவைக்கு வந்த பின்பு இவர் யார் என்பதைத் தெரிந்து கொண்ட மந்திரிகள் குழு, சதித் திட்டம் போட்டு தெனாலிராமனை நாடு கடத்துகிறார்கள். ஆனால் ஏற்கெனவே தெனாலிராமன் மேல் மையல் கொண்டு காதல் பித்தம் தலைக்கேறி புலம்பிக் கொண்டிருக்கும் அரசரின் மகள், தன் தந்தையின் மனதை மாற்றி தெனாலிராமனை மீண்டும் நாட்டிற்கே அழைத்து வரச் செய்கிறாள்.
அதற்குள்ளாக சீன வணிகர்கள் நாட்டுக்குள் வந்துவிட.. நாடு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று நினைத்த தெனாலிராமன் அரசனை திட்டம்போட்டு சாதா மனிதனாக்கி நாட்டுக்குள் அனுப்பி வைக்க.. அங்கே உண்மைகள் தெரிந்து அரசன் என்ன செய்கிறான் என்பதுதான் மிச்சம், மீதிக் கதை..!
அரசனாகவும், மதியூக தெனாலிராமனாகவும் வடிவேலுவே இரட்டை வேடங்களில் ஜொலித்திருக்கிறார். இரண்டுக்கும் அதிகப்பட்ச வித்தியாசம் அந்த மீசைதான். அரசனிடம் இருக்கும் படபடப்பு, அவசரம், திமிர்.. இவையெல்லாம் தெனாலிராமனிடம் இல்லை. ஆனால் குசும்பு நிறையவே இருக்கிறது.
சீரியஸாக பேசுகிறாரா அல்லது காமெடியாக பேசுகிறாரா என்பதையே உணர முடியாத அளவுக்கு சில காட்சிகளில் தெனாலிராமனின் நடிப்பு இருப்பதால்தான் நகைச்சுவை காட்சிகளில் நமக்கு சிரிக்க வராமலேயே போய்விட்டது.
கோவில் உண்டியலை திருட வரும் திருடர்களை தந்திரமாக கிணறு தோண்ட வைத்து மாட்டுவது.. பின்பு அவர்களை கழுதையை வைத்து உதைக்க வைப்பது..
அரண்மனை தலைமை வாயிற்காப்பாளன் லஞ்சம் கேட்டான் என்பதற்காக அவனைச் சிக்க வைத்து சவுக்கடி கொடுக்க வைப்பது..
ஒரு அமைச்சர் தெலுங்கர் என்று கண்டுபிடிப்பது..
யானைக்குள் பானையை திணிக்க வேண்டும் என்று சொல்வது..
மன்சூரலிகானிடம் போய்ச் சிக்கிக் கொள்ளும் அரசனிடம் தப்பிப்பது..
தெனாலிராமனை சாகடிக்க மன்னன் போடும் கனவு திட்டத்தை அதே பாணியில் முறியடிப்பது..
கிளைமாக்ஸில் டிவிஸ்ட் செய்து தப்பிப்பது..
என்று பல இடங்களிலும் தெனாலிராமன் கதையை எளிதாகப் புகுத்தியிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையை கொண்டு வராததுதான் குறையே தவிர.. படமாக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பாகத்தான் இருக்கிறது..
தெனாலிராமனாக அமைதியான நடிப்புடன் வரும் வடிவேலு, அரசனாக தனது அனைத்துவித கோபத்தையும், பதற்றத்தையும் முகத்தில் காட்டியபடியே அசுர வேகத்தில் டயலாக்கை ஒப்புவிக்கும் காட்சியெல்லாம் எப்படி இவரால் முடிகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இப்போதும் சிரிப்பு வரவில்லை.
36 மனைவிகள், 52 குழந்தைகள் என்று சொல்லி இவர்களுக்குச் சொல்லும் ஒரு கதை.. மற்றபடி மேலே சொல்லப்பட்ட பல கதைகளிலும் கொஞ்சத்தை குறைத்துக் கொண்டிருந்தால் இன்னமும் நன்றாகவே இருந்திருக்கும்..
மீனாட்சி தீட்சித் என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். எப்போதும் தனது மத்தியப் பிரதேசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியபடியே இருக்கும் இவருக்கு லிப்ஸ் டங்க்ஸ் ஆவது ஒண்ணுதான் பிரச்சினை. மொழி தெரியாதவர்களை நடிக்க வைத்தால் வரும் சிரமம் இதுதான். குரல் கொடுத்திருக்கும் தீபா வெங்கட்டிற்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..!
தமிழ்ச் சினிமாவின் அனைத்து குணச்சித்திர கேரக்டர்கள், நகைச்சுவை கேரக்டர்களையும் இழுத்துப் பிடித்து இதில் நடிக்க வைத்திருக்கிறார்கள். ஜி.எம்.குமார், ராதாரவி, பாலாசிங், மனோபாலா, ஷண்முகராஜா, கிருஷ்ணமூர்த்தி, நமோ நாராயணன், ஜோ மல்லூரி, சக்திவேல், செல்லத்துரை, சந்தானபாரதி, ராஜேஷ், போஸ் வெங்கட், மன்சூரலிகான், தேவதர்ஷிணி என்று குவிந்திருக்கும் நட்சத்திர பட்டாளங்களை ஒரே ஸ்கிரீனில் பார்க்க வைத்திருப்பதும் இந்தப் படத்தின் சாதனைதான்..!
இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் போலவே இதுவும் சிறந்த நகைச்சுவையாக இருக்குமென்று நினைத்துதான் அனைவரும் ஓடியிருக்கிறார்கள். ஆனால் அது போல இல்லையென்றாலும் இந்திரலோகத்தில் நா அழகப்பனைவிட கொஞ்சம் நன்றாகவே இருப்பதால்.. லேசான நிம்மதிப் பெருமூச்சு ரசிகர்களிடத்தில் இருந்து கிளம்பியுள்ளது.
பழம்பெரும் கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸின் மிக எளிமையான தமிழ் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம். ஒரு அமைச்சர் தெலுங்கர் என்பதை கண்டுபிடிக்க வடிவேலு போடும் டிராமா காட்சி நிச்சயமாக விஜயகாந்தை குறி வைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதேபோல் வடிவேலுவின் இப்போதைய அரசியல் நிலைப்பாடுகளை அவ்வப்போது சில வசனங்கள் மூலமே தெளிவுப்படுத்தியுள்ளார். இதை நோட் செய்து வைத்து அடுத்து ஆட்சிக்கு வரும்போது நம்மை கவனிப்பார்களே என்ற பயமே இல்லாமல் அனைத்து கட்சியினரையும், ஊழல்வாதிகளையும் அடித்து ஆடியிருக்கும் வடிவேலுவின் தைரியம் பாராட்டுக்குரியது.
அந்நிய நாட்டு முதலீடு என்பதே எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை ரத்தினச்சுருக்கமாக உரைப்பது போல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சீன தேசத்து உணவுகளை காசு கொடுத்து வாங்கிச் சாப்பிட்டும் கூட்டம், கஞ்சி குடிக்க வருவதில்லை என்பதையும், இருந்த கடையை காலி செய்யச் சொல்லி.. அந்த இடத்தில் சீன கடைகள் வந்து வியாபாரம் செய்யும் தந்திரத்தையும் காட்டியிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இப்போதைய இந்தியாவில் கார் கம்பெனிகள், குளிர்பான நிறுவனங்கள், உடைகள், அணிகலன்கள் என்று எல்லாவற்றிலும் வெளியில் இருந்து வருபவையே மக்கள் முன் அதிகம் வைக்கப்படுவதும், உள்ளூரில் தயாராவது கண் பார்வையிலேயே படாமல் இருப்பதும் இந்த அந்நிய ஆதிக்கத்தின் காரணமாகத்தான்.. சரியான சமயத்தில், சரியான விஷயத்தை கையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் வடிவேலு. அந்த வகையில் அவருக்கு ஒரு சல்யூட்..
இமானின் இசையில் ‘ஆணழகன்’, ‘ரம்ப்பப்பா’, ‘நெஞ்சே நெஞ்சே’ மூன்று பாடல்களுமே கேட்க வைக்கின்றன. குழந்தைகளை மையமாகவே வைத்தே படம் முழுவதும் காட்சிகளை செதுக்கியிருப்பதால் டூயட்டை தவிர மற்றவற்றில் சிறுசுகளின் ஆட்டம்தான் அதிகம்..!
ராம்நாத்ஷெட்டியின் ஒளிப்பதிவு படத்தின் இன்னுமொரு சிறப்பு. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். இத்தனை பெரிய பட்ஜெட் செட்டுகளை அழகுற எடுத்துக் காண்பித்தால்தான் செய்த செலவுக்காச்சும் புண்ணியம் கிடைக்கும். அதனை ராம்நாத் ஷெட்டி கச்சிதமாகச் செய்திருக்கிறார். அதிலும் ஒரு காட்சியில் புறா ஒன்றை பறக்கவிட்டுவிட்டு பின்னால் வடிவேலு நடந்து வரும் காட்சி ஒன்று வருகிறது.. அற்புதம் என்றே சொல்ல வேண்டும். மிக அழகான ஷாட் அது.. வெல்டன் ஸார்..
பக்கம் பக்கமாக வசனம் பேசுவதில் நகைச்சுவை வராது என்பது வடிவேலுவுக்கு தெரிந்ததுதான். இந்திரலோகத்தில் படத்தின் தோல்விக்கும் அதுதான் காரணம். ஆனால் அதையே இந்தப் படத்திலும் தொடர்ந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை. தெனாலிராமனின் அனைத்து நாடகங்களிலும் வசனங்கள்தான் பேசிக் கொண்டேயிருக்கிறார்களே தவிர.. சிரிப்புதான் வரவில்லை.. சிற்சில இடங்களில் மட்டுமே வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் சிரிப்பை வரவழைக்கிறது என்பதை மட்டுமே ஒப்புக் கொள்ள வேண்டும். அரசரின் தந்தை கனவில் வந்து தெனாலிராமனை சாகச் சொன்னார் என்ற கதை இதற்கு மிக சிறந்த உதாரணம். நிறைய கத்திரி போட்டிருக்கலாம் இந்தக் காட்சியில்.
அரசனாக நடிக்கும் வடிவேலு பல முறை வாயைத் திறக்காமலேயே விடுக்கும் ஒரு ஒலி.. அட அடடா.. அட அடடா.. என்று அடிக்கொரு தரம் சொல்லும் ஸ்டைலும் ரசனைக்குரியது.. அமைச்சர்கள் பலரும் அவ்வப்போது கூடி கூடி பேசும் காட்சிகளும், ராதாரவி சமரசம் செய்யும் காட்சிகளும் மட்டும்தான் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தன.
தனது இரண்டாவது படத்தை இயக்கியிருக்கும் 25 வயதான யுவராஜ் தயாளன் என்ற இந்த இயக்குநரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். இத்தனை பெரியவர்களை வைத்து.. இத்தனை பெரிய நடிகரை வைத்து.. இத்தனை பெரிய பட்ஜெட்டில் சாதித்துக் காட்ட வேண்டுமென்பது சாதாரண விஷயமல்ல.. யுவராஜ் நிச்சயமாக அவரளவுக்கு மிகக் கடுமையாக உழைத்துதான் இதனை படைத்திருக்கிறார். அவருக்கு நமது வாழ்த்துகள்..!
இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போக இந்த ஒரு படம்தான் இப்போதைக்கு வந்திருக்கிறது. அடுத்த வாரம் அமேஸிங் ஸ்பைடர்மேன் வந்துவிடும். ஆனாலும் இதையும் அவசியம் பார்த்துவிடுங்கள்.
அட்லீஸ்ட் அரசரின் 36 மனைவிகள்.. 52 பிள்ளைகள் கதையாவது.. உங்களது பிள்ளைகள் உங்களிடம் பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்குமான ஒரு காரணமாக அமையலாம்..!

அறிவாலயத்தில் கட்டிப் போட நானென்ன காயடிக்கப்பட்ட மாடா..?

05-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது ஒரு திரையுலக அரசியல்வியாதியின் அழுகை கட்டுரை..!

தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் தியாகு. ஆனால், சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தியாகுவைக் காண முடியவில்லை. ஏன் என்ற கேள்வியோடு தியாகுவைச் சந்தித்தோம். பதிலுக்குக் கண்ணீரும், கம்பலையுமாகக் கொட்டித் தீர்த்துவிட்டார்.


“எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்து விலகிய காலத்தில் இருந்தே மிகவும் தீவிரமாகக் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.  இப்போது கட்சியிலேயே இல்லாத வடிவேலுவுக்கு தி.மு.க.வில் உயர்ந்த அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். அவருக்கும் கழகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது..? நேற்று வந்த குஷ்பூவுக்கு ராஜ உபச்சாரம் நடக்கிறது. ஆனால் கட்சிக்காக ஓடாய்த் தேய்ந்த எனக்கு என்ன அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்..?

அறிவாலயத்தில் கட்டிப் போடுவதற்கு நானென்ன காயடிக்கப்பட்ட மாடா..? தலைவர் கலைஞரை மட்டும் நம்பி என் வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேனோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எஸ்.எஸ்.சந்திரன் வீட்டில் பெட்ரோல் பாம் போட்டதாக என் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டது. வளசரவாக்கம் பகுதிக்கே சம்பந்தம் இல்லாத அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ரூரல் எஸ்.பி.யான பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீஸ் படை என்னை கைது செய்ய என் வீட்டிற்கு முன்னால் வந்து நிற்கிறது.

என் மனைவி “அவரைக் கைது செய்ய வேண்டுமென்றால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வாருங்கள்” என்று சொல்லிவிட்டார். போலீஸாரின் மிரட்டலைப் பார்த்து என் மகனுக்கு வலிப்பு வந்துவிட்டது. பத்திரிகையாளர்கள் சூழ்ந்துவிட்டார்கள். அந்த நள்ளிரவு நேரத்தில் இல.கணேசன் எனக்கு போன் செய்து பேசுகிறார். ஒரு போலீஸ் அதிகாரி எனக்கு போன் செய்து “பொன்.மாணிக்கவேலுக்கு வளசரவாக்கம் ஏரியா கிடையாதே..? அவர் ஏன் அங்கு வந்தார்?” என்று என்னிடம் கேட்டார்.

நான் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறிக் குதித்து வீட்டின் பின்பக்கமாகத் தப்பி ஊருக்குப் போய்விட்டேன். 22 நாட்களாக அவர்களின் கண்களில் நான் படவில்லை. பின்பு ஐயா மூப்பனார் ஜெயலலிதாவிடம் பேசி என்னை வழக்கில் இருந்து விடுவித்தார். ஆனால், தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது முதல் குரல் கொடுத்தவன் நான்தான்.

நான் நினைத்திருந்தால் என் நண்பர் விஜயகாந்த் பக்கம் போயிருக்கலாம். இன்றைக்கு எனக்கு தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயருக்கு உளவுத் துறை அதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டுதான் காரணம். அவருடைய பேச்சைக் கேட்டு என்னை ஓரம் கட்டுகிறார்கள். தலைவரோ, துணை முதல்வரோ என்னைக் கண்டு கொள்ளவில்லை. அண்ணன் அழகிரி மட்டும்தான் என்னை அழைத்து ஆதரவுடன் பரிவாகப் பேசினார்.

“அவரைப் பார்க்காதே.. இவரிடம் பேசாதே..” என்று பல பிரிவுகளைத் தாண்டித்தான் இன்று தி.மு.க.வில் வாழ வேண்டியிருக்கிறது. ஆகையால், நான் இன்று ஓரம் கட்டப்பட்டிருக்கிறேன். என்னை வாழ வைத்தவர் தலைவர் கலைஞர்.. என்றைக்கும் அவரைவிட்டு வெளியேற மாட்டேன்..” என்கிறார் தியாகு.

இவருக்கும், இவருடைய தம்பிக்கும் நடந்த சொத்துப் பிரச்சினையில் தியாகு ஏமாற்றப்பட்டார். தம்பிக்கு ஆதரவாக ஸ்டாலின் குடும்பத்தார் இருந்ததுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

நடிகை விந்தியான்னா யாருண்ணே..?

05-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது திரையுலக அரசியல்வியாதிகளின் இரண்டாவது மோதல் கட்டுரை..!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு அழப் போறார் வடிவேலு!

அனல் வெயிலில் அரசியல்வாதிகளுக்கு நிகராகப் பிரசாரத்தில் பின்னி எடுக்கிறார்​கள் கோலிவுட் பிரபலங்கள்!

கோவை தெற்குத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சேலஞ்சர் துரைக்காக மைக் பிடித்த நடிகை விந்தியா பேசுவதைக் கேளுங்களேன்...


''வடிவேலு சினிமாவில் காமெடியன். நிஜத்தில் அதைவிடப் பெரிய காமெடியன்! புதுசாப் பிரசாரம் பண்ண வந்த ஜோர்ல என்ன பேசுறோம், எதைப் பேசுறோம்னே தெரியாம டயலாக் அடிக்கிறார்.

குறிப்பா, கேப்டன் விஜயகாந்த்தை ரொம்ப வம்புக்கு இழுக்கிறார். மக்கள் மத்தியில் செம செல்வாக்கோட பிரசாரத்துல தூள் கிளப்புற கேப்டனைப் பத்தி வடிவேலு வாய்க்கு வந்தபடி பேசுறது சுத்தமா சரியில்லே.

கேப்டன் தன்னோட லெக்கை சுழற்றிச் சுழற்றி கிக் பண்ணினார்னா... அது எப்படி பவர்ஃபுல்லா இருக்கும்னு தெரியுமா? சினிமாவில் தர்ம அடி வாங்கிப் பழக்கப்பட்ட வடிவேலு, அரசியலில் நம்ம கேப்டன்கிட்டே செமத்தியா அடி வாங்கப் போறார்.

கேப்டன்கிட்டே அடி வாங்கிட்டு 'அவ்வ்வ்வ்வ்...’னு வடிவேலு அழப் போறதை நாம் பார்க்கத்தான் போ​றோம்.'' என்று வடிவேலுவை வகுந்து எடுத்தவர் பிறகு, ''உங்க சைடு ஆளுங்​களோட லட்சணத்தைப் பேசுறதுக்கு எங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒண்ணே போதும்... என்னமோ சொல்றீங்களே... 'கொடநாடுக்குப் போயி அம்மா ரெஸ்ட் எடுக்கிறாங்க, ரெஸ்ட் எடுக்கிறாங்க’ன்னு. கொடநாடு தமிழ்நாட்டில்தானே இருக்கு! அங்கே அம்மா போறது தப்பில்லே. ஆனா, உங்க ஸ்டாலின் எதுக்காக வெளிநாட்டுக்குப் பறக்குறார்? அதுக்குப் பதில் சொல்லுங்களேன்!'' என்று அடித்தார் அடுத்த சிக்ஸரை.


செமத்தியாக லந்தடிக்கும் விந்தியாவின் பேச்சு பற்றி பரபர பிரசாரத்தில் இருந்த வடிவேலுவிடம் கேட்டதும், ''நடிகை விந்தியான்னா யாருண்ணே? ஏதாச்சும் சீரியல்ல அம்மா ரோல், ஆயா ரோல் பண்ணுதா?'' என்று எடுத்த எடுப்பிலேயே நக்கல் அட்டாக் கொடுத்தார்.

''உலகத்திலேயே விஜயகாந்த்​துக்கு மட்டும்தான் லெக் கிக் பண்ணத் தெரியுமா? இடுப்பில் கம்பியக் கட்டிட்டு நம்ம கிங்காங்கூடத்தான் பறந்து, பறந்து லெக் கிக் பண்றாப்ல. அவர் போடுற டான்ஸ் ஸ்டெப்ஸை அந்த ஆளாள போட முடியுமாண்ணே?! விடுங்கண்ணே, இந்தப் பொம்பளை பேச்சுக்கெல்லாம் பதில் பேசிட்டிருந்தா, சரிப்பட்டு வராது. அது பாட்டுக்கு  கூவிட்டுப் போவட்டும். கலைஞர் அய்யாவை முதல்வர் நாற்காலியில் ஆறாவது வாட்டி உக்கார வைக்குறதுக்காக இன்னும் தடபுடலாப் பிரசாரம் பண்ண வேண்டி இருக்கு. வரட்டா!'' என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தார் வைகைப் புயல்!

நன்றி : ஜூனியர் விகடன் - 10-04-2011

வளர்த்த கடா வடிவேலு..! புண்ணாக்கு குஷ்பு..!

04-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“என்னடா இது? பத்திரிகை செய்திகளையே போட்டுக்கிட்டிருக்க..?” என்று கோபப்படாதீர்கள் மக்களே..!

2011 சட்டமன்றத் தேர்தல் முடிகிறவரையில் இதை தொடர்ந்து செய்வதாகத்தான் உள்ளேன்.. தற்போதைய நிலையில் பத்திரிகைகளில் வரும் சில ஸ்கூப் நியூஸ்களை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கூடவே இணையத்தில் பதிவும் செய்து வைக்க வேண்டியுள்ளது.

உள்ளூரில் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவர்கள் படிப்பார்கள். வெளி மாநிலங்களில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களில் புத்தகத்தை இணையத்தின் மூலமாகப் படிக்காமல் இருப்பவர்களுக்காக இங்கே எனது தளத்தில் அவைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன..!

கோபித்துக் கொள்ளாமல் ஓ.பி. அடிக்கிறேன் என்றெல்லாம் நினைக்காமல் எனது உடன் பிறந்த சகோதரனான எனது கைகளுக்காக என்னைத் திட்டாமல் ‘போய்த் தொலைடா’ என்று பெரிய மனதுடன் மன்னித்து விட்டுவிடுங்கள்..!

இது திரையுலக அரசியல்வியாதிகளின் முதல் மோதல் கட்டுரை..!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியை, 'ஒண்டிக்கு ஒண்டி  வர்றியா?’ என சவால்​விட்டவர், வாழைப்பழ காமெடி நடிகர் செந்தில். இந்தத் தேர்தலிலும், தமிழகம் முழுக்க, தி.மு.க. கூட்டணிக்கு எதிராகப் பிச்சு உதறு​கிறார்.

''மதுரையில் நாடகத்தில் நடிச்சுட்டு இருந்தான் வடிவேலு. ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடிக்கிறதுக்கு சான்ஸ் கேட்டு மெட்ராஸ் வந்தான். அவனைப் பார்த்ததுமே, 'இவன் ஆளே சரி இல்லையே... ஒரு தினுசா இருக்கானேன்’னு கவுண்டமணி அண்ணன் கரெக்ட்டா கண்டுபிடிச்சுத் திட்டினார். நான்தான் அவரை சமாதானம் செஞ்சு, ''அண்ணே ஏதோ நாடகத்துல நடிச்சுப் பொழைப்பை நடத்துறான். சினிமாவுல நடிச்சா இன்னும் கொஞ்சம் கூடுதலா நாலு காசு பார்ப்பான், பாவம்’னு வடிவேலுக்கு வக்காலத்து வாங்கினேன்.

சினிமாவில் அவனுக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண். அந்தப் பாவத்துக்காக அவர் பக்கத்துல இருந்தவங்களை எல்லாம் தன்கிட்டே இழுத்து வெச்சுக்கிட்டான். கஷ்டப்படுற ராஜ்கிரணுக்கு கார் வாங்கிக் கொடுத்தேன்னு தப்பா ஒரு சேதியைக் கிளப்பிவிட்டு, தன்னை ஒரு வள்ளலா காட்டிக்கிட்டான். விஷயத்தைக் கேள்விப்பட்டு ராஜ்கிரணே நொந்துபோய்ட்டார். இது மாதிரி அறிமுகம் செஞ்சவரையே அசிங்கம் செஞ்சவன்தான் வடிவேலு.

ஆர்.வி.உதயகுமாரோட 'சின்னக் கவுண்டர்’ படத்துல நானும், கவுண்டமணி அண்ணனும் நடிச்​சோம். எங்ககூட வடிவேலுவும் நடிச்சான். ஷூட்டிங்கில் விஜயகாந்த் எங்களைவிட வடிவேலுவைத்​தான் விழுந்து, விழுந்து கவனிப்பார். அவனை எப்பவும் தன் கூடவே வெச்சுக்குவார். அவர் சாப்பிடுற ஐயிட்டங்களையே அவனுக்கும் பரிமாறச் சொல்லுவார். அந்தப் படத்துல வடிவேலு நிறைய ஸீன்ல நடிக்கறதுக்கு டைரக்டர்கிட்டே சிபாரிசுகூட பண்ணினார் விஜயகாந்த். 'என்னண்ணே இப்படிச் செய்றீங்களே?’ன்னு நான் விஜயகாந்த்கிட்ட கேட்டேன். 'அண்ணே, நீங்க ராமநாதபுரத்து ஆளு. வடிவேலு என் ஊர்க்காரன். என்னோட ஆளு. நீங்க வேணா பாருங்க.. அவன் பெரிய்ய ஆளா வருவான்’னு விஜயகாந்த் என்கிட்ட சொன்னார். அப்படி அவர் வளர்த்த கடா வடிவேலு, இப்போ அவர் மார்பிலேயே பாயுது. அவன், அவரை அசிங்க அசிங்கமாத் திட்டுறான்.

தருமபுரியில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிச்சுப் பேசியிருக்கார் விஜயகாந்த். அப்போ, வேனுக்குள்ளே மைக் விழுந்துடுச்சு. உதவியாளரிடம் குனிஞ்சு எடுக்கச் சொல்லி இருக்கார். அந்தச் சம்பவத்தை கேமரா ட்ரிக் மூலமா வேட்பாளரை அடிச்ச மாதிரி தப்பாப் பிரசாரம் பண்றாங்க. கருணாநிதியைக் கைது செஞ்சப்போ, பரிதாபமாக் கத்துற மாதிரி டப்பிங் வாய்ஸ் கொடுத்தவங்கதானே இந்த தி.மு.க-காரங்க.

இன்னோர் கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது,​ 'அ.தி.மு.க. கொடியைக் கீழே இறக்கச் சொல்லித் திட்டின மாதிரி’ கருணாநிதி டி.வி-யில் காட்டுறாங்க. அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சியோடு கொடிகளுக்கு மத்தியில் திடீர்னு ஒருத்தன் தி.மு.க. கொடியைத் தூக்கிக் காட்டுனான். அதைப் பார்த்துக் கடுப்பான விஜயகாந்த், தி.மு.க. கொடியைக் கிழே இறக்கச் சொல்லித் திட்டினார். டப்புன்னு கேமராவை அ.தி.மு.க. பக்கம் மாத்திக் காட்டி கூட்டணிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்துறாங்க.

சென்னையில் அம்மா பேசுன கூட்டத்துல ஜனங்க நெரிசலில் மாட்டுனதா காட்டுறாங்க. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, அந்தக் காட்சியைக் கை கட்டி வேடிக்கைதானே பார்த்தது? உண்மையிலே, தோல்வி பயத்தில், தி.மு.க-வோடு அந்தக் கட்சியின் சேனல்களும் திட்டம் போட்டு ஏற்பாடு செய்த தள்ளுமுள்ளு வேலைதான் அது...'' என்றவர் அடுத்து குஷ்பு விஷயத்துக்குத் தாவினார்.

''ஜெயா டி.வி-யின் ஜாக்பாட் நிகழ்ச்சி மூலமாத்தான் குஷ்பு தமிழைக் கத்துக்கிட்டாங்க. இப்போ, தி.மு.க-வை ஆரம்பிச்ச ஐம்பெரும் தலைவருங்க வாரிசு மாதிரி... தலை, கால் புரியாம ததிங்கிணத்தோம் ஆட்டம் போடுது.

கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த தமிழ்நாட்டில், 'கற்புன்னு ஒண்ணு இல்லவே இல்லை’ன்னு கேவலமாப் பேசி, நம்ம தாய்மார்களை இழிவுபடுத்தின மோசமான பொம்பளைதான் குஷ்பு. அதை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போட்ட கட்சிகள் பா.ம.க-வும், விடுதலைச் சிறுத்தைகளும்.

குஷ்பூ வெளியூர்ல கோர்ட்டுக்கு வந்தப்ப செருப்பு, விளக்குமாறைக் காட்டினது ராமதாஸ், திருமாவளவன் கட்சியோட மகளிர் அணிகள்தான். இப்போ, அவங்களே அந்தப் பொம்பளைக்கு ஆரத்தி எடுக்குறாங்க. எம்.எல்.ஏ. பதவிக்காக அந்த வட நாட்டுக்காரி காலில் போய் ராமதாஸும் திருமாவளவனும் விழுறீங்களே... உங்களுக்கு வெட்கமா இல்லையா..?

“ஆண்டிபட்டியில் போட்டியிடப் பயந்துக்கிட்டு அம்மா ஸ்ரீரங்கத்தில் நிற்கிறதா..” குஷ்பு பேசுது. தைரியசாலி கருணாநிதி எதுக்கு சென்னையை விட்டுட்டுப் பயந்துபோய் திருவாரூர்ல நிக்கிறார்? ஸ்டாலின் எதுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற கொளத்தூர்ல போட்டி போடுறார்? ஏற்கெனவே, போட்டியிட்ட ஆண்டிபட்டியை அம்மா அரசப்பட்டி ஆக்கிட்டாங்க. அதனால, இப்போ ஸ்ரீரங்கத்துல நிற்கிறாங்க. இந்த விவரம்கூட புரியாத புண்ணாக்குதான் குஷ்பு!'' கடகடக்கிறார் செந்தில்!

நன்றி : ஜூனியர் விகடன் - 04-04-2011