Showing posts with label மந்திரப்புன்னகை. Show all posts
Showing posts with label மந்திரப்புன்னகை. Show all posts

பெருமைப்படுத்திய வலைப்பதிவர்களுக்கு நன்றி..!

24-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று நடந்த மந்திரப்புன்னகை படத்தின் சிறப்புக் காட்சிக்கு வருகை தந்த அனைத்துப் பதிவர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

வருகிறேன் என்று சொல்லி கடைசி நிமிடத்தில் வர இயலாமல் போனதாகத் தெரிவித்த பதிவர்களுக்கும் எனது நன்றிகள்..!


இயக்குநர் திரு.கரு.பழனியப்பனை 15 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். நான் முதன் முதலாகச் சென்னைக்கு வந்த பொழுதில் இருந்தே எனக்கு அறிமுகமானவர்தான். பழகுவதற்கு இனியவர். நிறைய படிப்பாளி. ஆனந்தவிகடனில் மாணவ நிருபராக தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகமானவர்..!

நான் இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை அவரைச் சந்தித்துப் பேசியபடிதான் இருந்தேன். இருக்கிறேன். இந்த மந்திரப்புன்னகை படத்தினை சென்ற வெள்ளிக்கிழமையன்றே நான் சந்திரன் தியேட்டரில் பார்த்துவிட்டு எனது கருத்தை அவரிடம் தொலைபேசியில் கூறிவிட்டேன்.

மிக நேர்மையான முறையில் அதனை உள்வாங்கிக் கொண்டார். கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்டார். பதில் விளக்கமளித்தார். எனது சந்தேகங்களுக்கான தீர்வாக “இன்னொரு முறை அந்தப் படத்தை நீங்கள் பார்த்தால்தான் புரியும்” என்றார்.

அத்தோடு அந்தப் பேச்சு முடிவடைந்தது. திங்கள்கிழமையன்று அவரிடத்தில் இணை இயக்குநராக இருப்பவரும், எனது இன்னொரு நண்பருமான திரு.பிரபாகரன் அவர்கள் போன் செய்து “வலைப்பதிவர்களுக்கு தனியாக ஒரு ஷோ நடத்தலாம் என்று பழனி ஸார் விரும்புகிறார். ஏற்பாடு செய்யலாமா..?” என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் அப்போதே எனது சந்தேகத்தினை அவரிடமும் தெளிவுபடுத்திவிட்டேன்.

“பிரிவியூவில் பார்ப்பதினால் வலைப்பதிவர்கள் திரைப்படத்திற்குச் சாதகமாக எழுதுவார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். வலையுலகில் பலரும் இப்போது அறிமுக எழுத்தாளர்கள் நிலையில்தான் உள்ளார்கள். இதற்கெல்லாம் அசரவும் மாட்டார்கள். பிடிக்கவில்லையென்றால் முதல் வரியிலேயே மொக்கை என்றுதான் ஆரம்பிப்பார்கள்...” என்று நமது வலையுலகக் கலாச்சாரத்தை அவர் மூலமாக பழனியப்பனிடம் தெரிவிக்கச் சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னை போனில் அழைத்த பிரபாகரன், “அது ஒரு விஷயமே இல்லை. என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பல தரப்பட்ட விமர்சனங்களை இயக்குநர் எதிர்பார்க்கிறார். உங்களுக்கு அவரைப் பற்றித் தெரியாததல்ல.. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வளவுதான்..” என்றார். இதன் பின்புதான் நானும் இதற்குச் சம்மதித்தேன்.

நேற்றைய தினம் முழுவதும் பழனியப்பன் மந்திரப்புன்னகை படத்தின் பிரமோஷனுக்கான ஏற்பாடுகள் மும்முரமாய் இருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சிக்கான படப்பதிவு ஏவி.எம். ஸ்டூடியோவில் நடப்பதால், நமது திரையிடலையும் பக்கத்திலேயே வைத்துக் கொண்டால் அவரும் வந்து கலந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் ஏவி.எம். பிரிவியூ தியேட்டர் ஏற்பாடானது.

எப்படியும் இயக்குநர் பழனியப்பனே நேரில் வந்தால்தான் நமக்குத் திருப்தியாக இருக்கும் என்பதால் நேற்று காலை கரு.பழனியப்பனுக்கே போன் செய்து விஷயத்தைச் சொல்லி அவருடைய வருகையை உறுதிப்படுத்திக் கொண்டேன்..!

பல்வேறு போன் கால்கள். எனது போன் இத்தனை பிஸியாக இருந்தது நேற்று ஒரு நாளில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். நேற்றுபோல் என்றும் இருந்ததில்லை..! வருபவர்களெல்லாம் வாருங்கள்.. குடும்பத்தை அழைத்து வாருங்கள் என்று சொல்லியும் மூன்று பேர் மட்டுமே மனைவியருடன் வந்திருந்தார்கள். பலரும் அலுவலகத்தில் இருந்து அப்படியே நேராக வந்ததால் வீட்டுக்குச் சென்று அழைத்து வர முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள். ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையாக இருந்திருந்தால் நிச்சயம் குடும்பம் சகிதமாக சந்திப்புகள் நடந்திருக்கும். வந்தவரையில் மகிழ்ச்சிதான்..!

நேற்று மாலை ஸ்டூடியோ 5 தியேட்டரில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும் மந்திரப்புன்னகை படத்தைப் பார்க்க வந்திருந்ததால், பழனியப்பன் கொஞ்சம் திண்டாடித்தான் போனார். இதற்கிடையில் பிரசாத் கலர் லேப்பிலும் வேறொரு ஷோ ஓடியது.

ஆக.. இந்த மூன்று இடங்களுக்கும் மாறி, மாறி அவர் செல்ல வேண்டியிருந்ததால் பதிவர்களிடம் நீண்ட நேரம் பேச முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதாகக் கொஞ்சம் வருத்தப்பட்டுக் கொண்டார். அடுத்த முறை விரிவான முறையில் நன்கு திட்டமிட்டு ஒரு சந்திப்பை மேற்கொள்வோம் என்றேன்.

சமீபகாலமாக வலைப்பதிவர்களாகிய நாம் அனைவரும் சந்திக்கக் கூடிய சூழல் இல்லாத வருத்தம் நமக்குள் இருந்த நிலையில் திரையிடல் முடிந்தும் அரைமணி நேரமாக பேசியிருந்துவிட்டுத்தான் பல பதிவர்கள் கிளம்பினார்கள். இது மாதிரியான சந்திப்பு நிகழ்வுகளை இனி மாதத்திற்கு ஒரு நாள் வைக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.. இதற்கான வாய்ப்புகளைத்தான் நாம் இனிமேல் தேட வேண்டும்.

நாம் நேற்று பார்த்த திரையிடல் பற்றி தமிழ்சினிமா.காம்-ல்  கரு.பழனியப்பனின் புதிய ஏற்பாடு வலைப்பூ எழுத்தாளர்க­ளுக்கு வரவேற்பு
என்றும், தேட்ஸ்தமிழ்.காம் இணையத்தளத்தில்  கரு.பழனியப்பனின் 'பிளாக்கர்ஸ் ஷோ!' என்ற தலைப்பிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

தேட்ஸ்தமிழ்.காம்-ல்   வெளியான செய்தியில் இருக்கும் கோபம், கிண்டலை நாம் பொருட்படுத்த வேண்டாம்..! அவர்களுடைய செய்தியை நாம் பல இடங்களில் கொண்டு போவதும், அதில் அவர்களுடைய பெயர் மறைக்கப்படுவதினாலும் ஏற்படும் இயல்பான கோபம்தான் அவர்களுடையது என்று நினைக்கிறேன்..!

ஒரு பக்கம் அவர்களது கோபம் நியாயமானது என்றாலும், சில வார்த்தைகள் தேவையில்லாதது. மீடியாக்களின் வளர்ச்சி ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இணையம் இல்லையேல் தேட்ஸ்தமிழ்.காம் இல்லை. நாம் இல்லையேல் தேட்ஸ்தமிழ்.காமுக்கும் அதிகப்படியான விளம்பரங்கள் கிடைக்காது. ஓசியில் நாம் கொடுக்கும் விளம்பரங்களைக் கணக்கில் எடுக்காமல் புரிந்து கொள்ளாத சூழலில் நம்மைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.. விட்டுவிடுவோம்..!

மந்திரப்புன்னகையின் விமர்சனங்களை இயக்குநர் கரு.பழனியப்பன் பெரிதும் வரவேற்கிறார். படிக்கவும் ஆர்வமாக இருக்கிறார். எழுத விரும்புவர்கள் அவர்களது நியாயமான விமர்சனத்தை முன் வைக்கலாம். திரையிடல் நிகழ்ச்சி பற்றி நினைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அவர் சார்பில் மீண்டும் ஒரு முறை உறுதிமொழியை உங்களுக்கு வழங்குகிறேன்.

மேலும் நேற்று நண்பர் சுரேஷ்கண்ணன் கூகிள் பஸ்ஸில் இது போன்ற ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்தார். அந்த பஸ்ஸில் நானும் இது பற்றிய உண்மையை எழுதியிருந்தேன். இது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் இத்தகைய விளக்கம்..!

விமர்சனங்களை வரவேற்கும்விதத்தில் நம்மையும் மதித்து அன்போடு வரவேற்று கருத்துக்களைப் பகிர வைத்த இயக்குநர் கரு.பழனியப்பனுக்கும், எல்லா உதவிகளையும் செய்த இணை இயக்குனர் திரு.பிரபாகரனுக்கும், அவருடைய உதவி இயக்குநர்கள் குழுவிற்கும் வந்திருந்த வலைப்பதிவர்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

மிகக் குறுகிய காலமே இருந்தாலும் அழைப்பை ஏற்று பல சிரமத்திற்கிடையிலும் நேரில் வந்து கெளரவப்படுத்திய சகோதர வலைப்பதிவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது நன்றி..!