Showing posts with label பா.ம.க.. Show all posts
Showing posts with label பா.ம.க.. Show all posts

அடிக்கிறதைப் பத்தி மருத்துவர் ராமதாஸ் பேசலாமா? கூடாதா?

07-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சொந்தக் கட்சி வேட்​பாளரை விஜய​காந்த் அடித்தார்... இது நியாயமா என்று போகும் இடமெல்லாம் விவகாரத்தை விடாமல் கிளப்பிக்​கொண்டு இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்!

ராமதாஸ் மட்டும் யோக்கியமா என்று பிரசாரம் செய்து வருகிறது வன்னியர் கூட்டமைப்பு. அதன் நிறுவனத் தலைவர் சி.என்.ராமமூர்த்தியைச் சந்தித்தோம்..


''விஜயகாந்த் வேட்பாளரை அடித்துவிட்டார்... இவர் எல்லாம் ஒரு கட்சித் தலைவரா? என்று தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள், தாங்கள் ஏதோ உத்தம புத்திரர்கள் மாதிரி ஊரெல்லாம் முழங்கி வருகிறார்கள். அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராமதாஸ் மட்டும் யோக்கிய சிகாமணியா? விஜயகாந்த்தாவது மக்கள் மத்தியில் வெளிப்படையாக நடந்துகொண்டார். ஆனால், ராமதாஸ்..?

வன்னியர்களின் குரு என்று பெரும்பான்மை மக்களால் மனமார நேசிக்கப்பட்டவர் ஏ.கே.நடராஜன். 'அவர் வன்னியர்கள் மத்தியில் தன்னையும் தாண்டி அபரிமிதமான செல்வாக்கு உடையவராகத் திகழ்கிறார்’ என்ற சினம் நீண்ட நாட்களாக ராமதாஸுக்கு இருந்தது.

ஆரம்பத்தில் இலைமறை காயாகக் கோபத்தைக் காட்டி வந்த ராமதாஸ், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் பொருமிவிட்டார்.
 
விளைவு சில அடிப்பொடிகள் பாய்ந்தார்கள்.  ஏ.கே.நடராஜன் நையப் புடைக்கப்​பட்டார். அவர் உயிர் பிழைத்ததே அதிசயம். 'இன்றும் ஒரு காலை தாங்கித் தாங்கி அவர் நடக்கிறாரே... அதற்குக் காரணம் யார்?’ என்று தி.மு.க-வினர் மக்கள் மத்தியில் முழங்குவார்களா?

பா.ம.க-வின் முன்னாள் தலைமை நிலையச் செயலாளராக இருந்த மு.பாலசண்முகம் பெரும் உழைப்பாளி. நாளடைவில் ராமதாஸின் போக்குப் பிடிக்காததால், கட்சி செயல்பாடுகளில் பங்கேற்காமல் கொஞ்சம் விலகி இருந்தார். அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை பா.ம.க. தலைமையால். பட்டப் பகலில் நடுரோட்டில் பாலசண்முகத்தைப் பின்னி எடுத்தது ஒரு கும்பல். 'பல் உடைந்து பரிதாப நிலையில் பாலசண்முகம் மருத்துவமனைக்குப் போனது யாரால்?’ என்று கலைஞர் டி.வி-யில் விளம்பரம் போட்டால் நன்றாக இருக்கும்!

உத்திரமேரூர் ஆர்.விஸ்வநாதன் விவகாரம் இதைவிடக் கொடுமை... காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்த விஸ்வநாதனின் காரை மறித்துக் குப்புறத் தள்ளி, கண்ணாடிகளை உடைத்து தீவைத்துக் கொளுத்தியது ஒரு கும்பல்.

இவ்வளவு ஏன்... விஜயகாந்த்தைத் திட்டிப் பேசுகிறாரே வடிவேலு... அவரின் சொந்த ஊரான மதுரையில்தான்,  ராமதாஸுக்குக் கறுப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்களுக்கு ஓட ஓட பூசை விழுந்தது. இது குறித்துப் பேசுவாரா வடிவேலு?

ஈரோடு காருண்யமூர்த்தி, திருத்தணி சேகர்வர்மா ஆகியோருக்கு நேர்ந்த இன்னலையும் இந்த நாட்டு மக்கள் அறிய வேண்டும். பா.ம.க-வுக்காக பல ஆண்டு காலம் உழைத்த இவர்களை வீடு புகுந்து தாக்க உத்தரவு போட்ட மாமனிதர்களைக் கொண்ட கட்சிதான் பா.ம.க!

அவர்களின் வீட்டை அடித்து நொறுக்கிய ரவுடிகள், அந்தக் குடும்பத்து நபர்களின் கழுத்தில் அருவாளை வைத்து, 'அய்யாவுக்கு எதிரா செயல்பட்டா, நாங்க பேச மாட்டோம். இனி அருவாதான் பேசும்!’ என்று மிரட்டினார்களே.... அந்த வில்லத்தனம் குறித்துப் பேசுவாரா மு.க.ஸ்டாலின்?

மிக சமீபத்தில் நடந்த சம்பவமும் சொல்கிறேன். ராமதாஸின் தம்பி சீனிவாச கவுண்டரையும், அவர் மகன் சந்திரசேகரனையும் பா.ம.க-வில் இருந்து காங்கிரஸுக்கு அழைத்து வந்தார், காங்கிரஸின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பலராமன். சும்மா இருப்பார்களா?

பலராமனின் உடலில் பல இடங்களில் விழுந்தது அருவாள் வெட்டு. தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் அடித்து மிரட்டி, அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு அரியாசனத்தில் அமர்ந்து வந்த அந்தத் தலைமைக்கு, இந்தத் தேர்தலிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

'வன்னியர்கள் என் பின்னால்தான்’ என்று சொல்லி இனியும் ஏமாற்ற முடியாது. காங்கிரஸ், தி.மு.க. ஓட்டுகளில் சவாரி செய்து காலத்தை ஓட்ட நினைக்கிறார் டாக்டர் ராமதாஸ். வன்னியர்கள் மத்தியில் ராமதாஸுக்கு இருந்த செல்வாக்கு எப்போதோ காற்றில் பறந்துவிட்டது. உயிர்த் தியாகம் செய்த 25 வன்னியக் குடும்பங்களுக்குக்கூட ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாத மனிதர் அவர்.

ராமதாஸ் போன்ற நபர்களோடு, சூடு சுரணையற்ற கூட்டணி வைத்துள்ள தி.மு.க-வினர், 'விஜயகாந்த் வேட்பாளரை அடித்துவிட்டார்’ என்று இனி எங்காவது பேசினால், பொதுமக்கள் ராமதாஸ் குறித்து அதே இடத்தில் எதிர்க் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்!'' என்று உணர்ச்சியோடு முடித்தார் சி.என்.ராமமூர்த்தி.

இதற்கு பா.ம.க. தரப்பின் பதில்..?

''சி.என்.ராமமூர்த்தியோட வன்னியர் கூட்டமைப்பு போணி ஆகலை. எங்க அய்யாவுக்கு எதிராப் பேசினா, விளம்பரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இந்த மாதிரி எல்லாம் பேசுகிறார். அவர் நிலையைப் பார்த்தா, ரொம்பப் பாவமா இருக்கு. மற்றபடி இந்தத் தாக்குதல்களுக்கும், எங்க அய்யாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது...'' என்று அழுத்தமாக மறுக்கிறார்கள்!

நன்றி - ஜூனியர்விகடன் - 04-04-2011

இதுக்குக் கருத்துச் சொல்ல பயமாயிருக்கு..!!!