Showing posts with label டக்ளஸ். Show all posts
Showing posts with label டக்ளஸ். Show all posts

இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு மனைவியின் அறச்சீற்றம்..!

11-07-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அறச் சீற்றம் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. பார்த்திருக்கிறீர்களா..? நான் சென்ற வாரத்தில் ஒரு நாள் இலங்கை பாராளுமன்றத்தில் நடந்ததை பார்த்தேன். வீடியோ வடிவில்..!

அநியாயமாக பட்டப் பகலில் கொல்லப்பட்ட தனது கணவருக்காக ஒரு மனைவி, கொலை செய்த கொலையாளி ஒருவருடன் நேருக்கு நேராக மோதிய சம்பவத்தை பார்த்தேன்..!




சில நிமிடங்கள் பேச்சுற்றுப் போனேன்.! அந்த மனைவியின் பெயர் விஜயகலா மகேஸ்வரன். ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். இவரது கணவர் மகேஸ்வரன்தான் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

“தனது கணவரின் கொலைக்குக் காரணமானவர்கள் இன்றைக்கும் இதே அரங்கத்தில் கொஞ்சமும் குற்றவுணர்வில்லாமல் அமர்ந்திருக்கிறார்கள்” என்று தற்போதைய நாடாளுமன்றத்தின்  கன்னிப் பேச்சிலேயே குற்றம்சாட்டியிருந்தார் விஜயகலா.

அதன் தொடர்ச்சிதான் சென்ற வாரம் இலங்கை அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கையின் மீது நடந்த விவாதத்தில் பேசிக் கொண்டிருந்த விஜயகலாவை குறுக்கிட்டு பேசிய டக்ளஸ் என்னும் அந்த குள்ள நரி மனிதரைப் பார்த்து விஜயகலா சீறித் தள்ளிய அறச் சீற்ற நிகழ்வு..!

அதற்கு முன் மகேஸ்வரனைப் பற்றி சிறிது பார்த்துவிடுவோம்..!

அந்தக் கொடூரம் நிகழ்ந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அது 2008 ஜனவரி முதல் நாள். புத்தாண்டு தினம். புது வருடப் பிறப்பையொட்டி கோவிலுக்குச் சென்று ஆண்டவனை தரிசிக்க எண்ணினார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாச்சாரத் துறை அமைச்சருமான திரு.தியாகராஜா மகேஸ்வரன். 




கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலுக்கு காலை 9 மணியளவில் தனது குடும்பத்தினருடன் சென்றார் மகேஸ்வரன்.

ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு உள் பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தபோது அங்கே நின்று கொண்டிருந்த துப்பாக்கி ஏந்திய ஒருவர் மகேஸ்வரனை சராமரியாகத் துப்பாக்கியால் சுட்டார். தடுக்க முனைந்த மகேஸ்வரனின் பாதுகாவலர்களும், கூட்டத்தில் இருந்த பொதுமக்களும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்டார்கள்..!




மகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு உடனடியாக சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்ததார். மகேஸ்வரன் உயிரிழந்த சிறிது நேரத்திலேயே காயமடைந்திருந்த அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்தார். 




மகேஸ்வரனின் மெய்க்காப்பாளர்கள் திருப்பிச் சுட்டதில் அந்தக் கொலையாளியும் குண்டு காயத்துடன் உயிருடன் பிடிபட்டதாக பல நாட்கள் கழித்து இலங்கை அரசு தெரிவித்தது. அவர் பெயர் ஜோன்ஸடன் கொலின் வெலன்டென். இப்போதும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது..!




பட்டப் பகலில் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இநத்ப் படுகொலை இலங்கையை உலுக்கி எடுத்தது. காரணம். இந்தக் கொலையின் பின்னணியில் இருந்ததே இலங்கை அரசுதான் என்றும், இலங்கை அரசின் கைக்கூலியான டக்ளஸ் தேவானந்தாவின் அடியாட்கள்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள் என்று மகேஸ்வரன் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சியும், மகேஸ்வரனின் மனைவி விஜயகலாவும் ஒருமித்தக் குரலில் கூறியிருந்ததுதான்..!




இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அப்போது கூறுகையில், “மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குறைத்துக் கொண்டது அரசாங்கம். அதன் தொடர்ச்சியாகவே மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்ததன் விளைவாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். கொலைச் சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அரசாங்கம்தான் அவரைப் படுகொலை செய்யும் உத்தரவை வழங்கியுள்ளது” என்று கூறியிருந்தார்.







மகேஸ்வரன் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இலங்கை தொலைக்காட்சியான "சக்தி"யில் ஒளிபரப்பாகும் "மின்னல்" என்ற நேருக்கு நேர் நிகழ்ச்சயில் கலந்து கொண்ட மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் அப்போது இடம் பெற்று வந்த பல படுகொலைகளுக்கு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

அத்துடன், தென் பகுதியிலிருந்து மாதம் ஒரு முறை சுமார் 10 பேர்வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களை வைத்தே படுகொலை சம்பவங்கள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நபர்கள் தொடர்பான பெயர்கள் மற்றும், விபரங்களையும் 2008 ஜனவரி 8-ம் திகதி கூடவிருக்கும் பாராளுமன்றக் கூட்டத் தொடர்களின்போது வெளியிடப் போவதாகவும் மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அப்போது, யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவருக்கு இதனுடன் தொடர்பிருப்பதாகவும் மகேஸ்வரன் தெரிவித்தார். “அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைதானே குறிப்பிடுகிறீர்கள்..?” என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டபோது, “நான் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் நாட்டில் எல்லோருக்குமே அது யார் எனத் தெரியும்..” என பதிலளித்திருந்தார்.




மேலும் 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது கொச்சிக்கடை ஜிந்துப்பிட்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருந்த மகேஸ்வரனை கொலை செய்யும் முயற்சி நடந்தது. இதில் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார் மகேஸ்வரன்.

இதையும் அன்றைய மின்னல் நிகழ்ச்சியில் நினைவுபடுத்திய மகேஸ்வரன், அந்தச் சம்பவத்திலிருந்து தமது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத் துறையினர் தம்மிடம் தெரிவித்ததையும் சுட்டிக் காட்டினார்.

இந்த நிலையில் தமக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து நேரப் போவதை தான் உணர்வதாகவும், அப்படியொன்று நிகழ்ந்தால் இதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அவர் பயந்தது போலவே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான ஒரு வாரத்திற்குள்ளாகவே மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.. 




பாராளுமன்றத்தில் மகேஸ்வரன் தனக்குத் தெரிந்த தகவல்களைக் கூறிவிட்டால் அப்போதைய அரசியல் சூழலில் வெளிநாடுகளிடம் நல்லெண்ணம் பெற முடியாது என்கிற காரணத்துக்காகவே இலங்கை அரசின் கைக்கூலியான டக்ளஸின் அடியாட்கள் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக மகேஸ்வரனின் மனைவி விஜயகலா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.




கொல்லப்பட்ட மகேஸ்வரன் அடிப்படையில் இலங்கையின் பிரபலமான வர்த்தகப் பிரமுகர்களில் ஒருவர். யாழ்ப்பாணம் காரைநகர்தான் இவரது சொந்த ஊர். மகேஸ்வரனுக்குச் சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுட்டு வந்தன.

ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு ஆட்சியில் இருந்தபோது யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்ற பெற்ற மகேஸ்வரன், ரணிலின் அமைச்சரவையில் இந்து கலாச்சார அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

இவரது நெருங்கிய நண்பரான பேபியன் எனப்படும் முத்துக்குமார் சிவபாலன் 2007-ம் வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் மகேஸ்வரனும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

2007 நவம்பரில் கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மகேஸ்வரன், பாதிக்கப்பட்ட மக்களை திரட்டிக் கொண்டு பூசா தடுப்பு முகாமுக்கு சென்றதுடன் ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி  பேரணி ஒன்றையும் நடத்தியிருந்தார்.

அப்போதைய நிலைமையில் பிரபாகரனது தமிழ் ஈழத்தைக் கொன்றொழிக்க வேண்டும் என்கிற வெறியில் இருந்த இலங்கை அரசு, கொழும்புவில் தமிழர்களுக்கு ஆதரவாக யாருமே இருக்கக் கூடாது என்று எண்ணத்தைக் கொண்டிருந்தது.

முதலில் இங்கேயிருக்கும் நல்லவர்களையெலலாம் மேல் உலகத்துக்கு அனுப்பிவிட்டு பின்பு வடக்கு கிழக்கில் கால் வைப்போம் என்ற சூழ்ச்சியின்படிதான் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தனைக்கும் மகேஸ்வரன் விடுதலைப்புலிகளையும் கண்டித்துப் பேசியவர்தான். எதிர்ப்பாளர்தான்..! ஆனாலும் இலங்கை அரசையும் எதிர்க்கிறாரே.. இலங்கை அரசுக்கு கைக்கூலியாக இருக்கும் வடகிழக்கு மாகாண தமிழ் அரசையும் எதிர்க்கிறார். டக்ளஸையும் எதிர்த்து போர்க்குரல் கொடுக்கிறாரே என்கிற விசனத்தோடு அவர் கதையை முடித்தது இலங்கை பேரினவாத அரசு..!

கொல்லப்படும்போது மகேஸ்வரனின் வயது 45-தான். இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஐந்து வயதான ஆண் குழந்தை என்று மூன்று வாரிசுகள் அவருக்கு..!

கொழும்புவில் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டாலோ அல்லது சட்டமீறலுடன் சிறையில் அடைக்கப்பட்டாலோ தானே வழக்கறிஞர்களை நியமித்து அந்தத் தமிழர்களை மீட்கின்ற வேலையையும் மகேஸ்வரன் செய்து வந்ததால் கொழும்பு தமிழர்களிடையே மகேஸ்வரனுக்கு நல்ல பெயர் இருந்து வந்ததாம்..!

இது அத்தனையும் குலைத்துப் போடப்பட்ட பின்பு மகேஸ்வரனின் மனைவி விஜயகலா சமயம் கிடைக்கும்போதெல்லாம் தனது கணவரின் கொலைக்குக் காரணமான குற்றவாளி டக்ளஸ்தான் என்பதை மறைமுகமாக சொல்லி வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு விஜயகலா மகேஸ்வரனின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சி முன் மொழிந்தது. அதன்படி தேர்தலில் வெற்றி பெற்ற விஜயகலா தான் தனது கணவரின் வழிப்படியே நடக்கவிருப்பதாகவும், அவரது கொலைக்குக் காரணமானவர்களை நிச்சயம் நீதியின் வசம் நிறுத்தி தண்டிக்க வைப்பேன் என்றும் சொன்னது என்னவோ அரசியல் வசனம் போலத்தான் இருந்திருக்கும் ஆளும்கட்சியினருக்கு..!

ஆனால் சென்ற வாரத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் திடீரென்று கடுமையான வாய்த் தகராறு  இடம் பெற்றது.

உரையாற்றிக் கொண்டிருந்த விஜயகலா மகேஸ்வரன் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தில்  4 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். எனினும் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் தங்களுக்கு தேவையான 50 பேருக்கு மாத்திரமே பயன்களை பெற்றுக் கொடுப்பதாகக்  குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட டக்ளஸ் தேவானந்தா,  “நீங்கள் அப்படி யாரை குறிப்பிடுகின்றீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விஜயகலா மகேஸ்வரன் “அரசாங்கத்தில் பல கட்சிகள் இருப்பதாகவும் குற்றம் செய்தவர்களுக்கே உறுத்தும்..” என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா மைக் இணைப்பு அவருக்குக் கொடுக்கப்படாத நிலையிலும் விஜயகலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு போன விஜயகலா, இத்தனை நாட்கள் மனதிற்குள் வைத்திருந்த வார்த்தைகளையெல்லாம் வெளியில் கொட்டித் தீர்த்துவிட்டார்.

“நீங்கள்தானே மகேஸ்வரனை கொலை செய்தீர்கள்..?” என்று டக்ளஸ் தேவானந்தாவை பார்த்து சிங்கள மொழியில் ஆவேசமாக குற்றஞ்சாட்டினார்.

இவர்கள் இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் நடந்தபோது ஆளும் தரப்பினர் டக்ளஸுக்கு ஆதரவாகக் கூச்சலிட பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக கூச்சலிட்டனர்.

அந்தக் காட்சியை கீழே இருக்கும் காணொளியில் காணலாம்..!



தன்னுடைய கணவருக்காக அவர் சீறியிருக்கலாம்.. அவருடைய மரணத்திற்கு பழி வாங்கும் விதமாக அரசியலில் அவர் கால் வைத்திருக்கலாம்.. தனது குடும்பத்திற்காக அவர் களத்தில் குதித்திருக்கலாம்.

ஆனால் பெரும் அதிகார வர்க்கத்தை அசைத்துப் பார்க்கும் வெறியும், வேட்கையும் கொண்ட ஒரு பெண்மணியும் அந்தத் தேசத்தில் இருக்கிறார் என்பதைக் காட்டும் இந்தச் செய்தி, தமிழகத்தைச் சேர்ந்த பெண் அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமாச்சும் சூடு, சொரணையை உருவாக்கட்டும்..!

தகவல்கள் - புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : பல்வேறு இணையத் தளங்கள்

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு - சூளைமேட்டில் அன்றைக்கு நடந்தது என்ன..?

17-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்கிற குரல்கள் ஆக்ரோஷமாக எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் தலைவரான டக்ளஸ், தேவானந்தா தற்போது இலங்கையில் ராஜபக்சே அமைச்சரவையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் துறை மந்திரியாக இருக்கிறார்.


கடந்த வாரம் டெல்லி வந்த ராஜபக்சேவுக்கு இந்திய  அரசியன் பாரம்பரிய மரியாதையும், விருந்தும் கொடுத்து கெளரவித்தனர் ஜனாதிபதியும், பிரதமரும். ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்ட அதே வரவேற்பும், மரியாதையும் அவருடன் வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் கொலை, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் வழக்குகளில் தமிழகக் காவல்துறையில் தேடப்படும் குற்றவாளியாகக் கருதப்படும் டக்ளஸூக்கு மத்திய அரசின் மரியாதையா..? அவரை கைது செய்து தமிழகக் காவல்துறையிடம் ஒப்படைக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என்று கருத்து உருவாக.. விவகாரம் பூதாகரமானது.

அதே சமயம், “டக்ளஸ் தேவானந்தா மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார் டக்ளஸ். இந்தத் தகவலை டெல்லி போலீஸாருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம்..” என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவிக்க.. இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது.

இந்நிலையில் தங்களின் இந்தியப் பயணத்தை மிக ஜாலியாக முடித்துக் கொண்டு ஹாயாக இலங்கைக்குச் சென்றுவிட்டனர் ராஜபக்சேவும், டக்ளஸூம்.

தமிழகத்தின் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் மீது மிக வலிமையாக இருப்பது. இளைஞர் திருநாவுக்கரசை சுட்டுக் கொன்ற வழக்கு.

1986-ல் சென்னை சூளைமேட்டில் முத்துஇருளாண்டி காலனியில் நடந்த இந்த கொடூரம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை வழக்கு உட்பட நிலுவையில் உள்ள வழக்குகளின்படி டக்ளஸை கைது செய்ய தமிழகத்திற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்கிற கருத்துக்கள் எதிரொலிக்கும் நிலையில் "அப்போது நடந்தது என்ன..?" என்பதை அறிய முத்து இருளாண்டி காலனிக்குச் சென்றோம்.

திருநாவுக்கரசு பற்றி அங்கேயிருந்த பொதுமக்களிடம் விசாரித்தபோது, "மறக்கக் கூடிய சம்பவமா அது..? மிக கொடூரமாக நடந்த துப்பாக்கிச் சூடு. சினிமாவுல கூட பார்த்திருக்க மாட்டீங்க.. அப்படி இருந்தது அன்னிக்கு.." என்ற காலனி மக்கள், "திருநாவுக்கரசுவின் அப்பா, அம்மால்லாம் இறந்து போயிட்டாங்க. அவரோட அண்ணன் நடராஜன் குடும்பம் இங்கதான் இருக்கு. அவரைப் போய் பாருங்க.." என்றனர்.

தனது மனைவி ரத்னாவுடன் ஒண்டுக் குடும்பத்தில் வசித்துக் கொண்டிருக்கிறார் நடராஜன். அவரைச் சந்தித்து திருநாவுக்கரசு பற்றி பேசித் துவங்கியதும் அப்படியே சோகத்தில் மூழ்கிவிட்டார் நடராஜன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "இலங்கையிலும் சரி.. இங்கேயும் சரி.. தமிழன் உயிருன்னா அவங்களுக்கு கேவலமா போயிருச்சு. இந்த 24 வருஷத்துல ஒரு முறைகூட போலீஸ்காரங்க இந்த விஷயத்தைப் பத்தி எங்ககிட்ட விசாரிக்கவே இல்லைங்க.." என்று ஆதங்கப்பட்டார். அப்போது அவரது முகத்தில் கடந்த கால சம்பவத்தை நினைத்து ஆத்திரமும், கோபமும் கொப்பளித்தது.

மீண்டும் ஒரு முறை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசிய நடராஜன், "சின்ன வயசிலேயே எங்கப்பா செத்துட்டாரு. எங்கம்மாதான் எங்களை வளர்த்தாங்க. அவங்களும் என் தம்பி திருநாவுக்கரசு கொல்லப்பட்ட மறு வருஷம் இறந்துட்டாங்க. திருநாவுக்கரசுக்கு நேர் மூத்தவன் நான். எங்களுக்கு 1 அக்கா. 4 தங்கைகள். மொத்தம் ஏழு பேர் நாங்க.

இந்தக் காலனி முழுக்க அரிஜன மக்கள்தான். எங்க காலனிலேயே என் தம்பி திருநாவுக்கரசுதான் அப்போ அதிகம் படிச்சவன். எம்.ஏ. பட்டதாரி. அதனால அவனுக்கு ஏக மரியாதை. அவனும் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைன்னா முன்னால வந்து நிப்பான். பொது சேவையைத்தான் தனது உயிராக நினைச்சான்.

இந்தப் பகுதி மக்களுக்காக 'உடற்பயிற்சிக் கழகம்'னு ஆரம்பிச்சு சேவை செஞ்சான். இந்த ஏரியா முனையில இப்போ கார்ப்பரேஷன் ஸ்கூல் ஒண்ணு இருக்கு. 1986-ல அந்த இடம் காலியா கெடந்துச்சு. அந்த இடத்துல ஒரு ஜிம் ரெடி பண்ணினான். எங்க காலனி மக்கள் மட்டுமல்லாது இதனையொட்டியுள்ள திருவள்ளுவர்புரம் மக்களும் ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்வாங்க.

இப்போ இருக்குற மாதிரி அன்னிக்கு வீடுகளெல்லாம் இல்ல. ஒரே ஒரு மாடிதான் வீட்டுக்கு. இந்த ஏரியாவுல ஒரு வீட்ல 10 இளைஞர்கள் தங்கியிருந்தாங்க. 25, 26 வயசு அவங்களுக்கு இருக்கும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான பத்மநாபா இயக்கத்தை(அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) சேர்ந்த இளைஞர்கள்ன்னு அரசல்புரசலா எல்லாருக்கும் தெரியும். இந்த குரூப்புக்கு டக்ளஸ்தான் லீடர் மாதிரி. ஆனா எல்லாருமே அவரைப் பேரைச் சொல்லியே கூப்பிடுவாங்க. காலையிலேயும், சாயந்தரமும் திருநாவுக்கரசோட ஜிம்முலதான் உடற்பயிற்சி செய்வாங்க. ராத்திரியானா தண்ணியடிச்சிட்டு ஒரே கும்மாளமாக இருக்கும். இலங்கையில பிரச்சினைங்கிறதால இங்க வந்து தங்கியிருக்காங்கன்னு நாங்கள்லாம் நினைச்சோம். ஆனா அந்தப் படுபாவிங்க.. என் தம்பியை சுட்டுக் கொல்லுவாங்கன்னு தெரியாமப் போச்சு..

1986 நவம்பர் 1-ம் தேதி. அன்னிக்கு தீபாவளி. ஊரே பட்டாசு வெடிச்சு கொண்டாடிக்கிட்டு இருந்துச்சு. மதியம் ரெண்டரை, மூணு மணி இருக்கும். தீபாவளிங்கிறதால அந்த 10 பேரும் இங்குள்ள சாராயக் கடையில நல்லா குடிச்சிட்டு ஒரு பொட்டிக் கடையில நின்னு முறுக்கும், பழமும் வாங்கித் துன்னுட்டு காசு கொடுக்காம போகப் பார்த்திருக்காங்க.

'காசு கொடுங்க'ன்னு கடைக்காரர் கேட்க.. அவங்களுக்குள்ளே வாய்த் தகராறு. அந்த கடைக்காரரை அவங்க அடிக்க.. அப்போ அங்க நின்னுக்கிட்டு இருந்த எங்க காலனி ஆள் ஒருத்தர், கடைக்காரருக்கு சப்போர்ட் பண்ணி கடுமையா பேசியிருக்காரு. உடனே அவனுங்க எங்க ஆளைப் போட்டு கண்ணு மூக்கு தெரியாம தாக்க.. அவரோட அலறல் சப்தம் கேட்டு காலனி மக்கள் நாங்க எல்லாம் ஓடினோம்.

காலனி மக்கள் ஓடி வர்றதை பார்த்து அவனுங்க வீட்டுக்குள்ளே ஓடிப் போய் ஆளாளுக்கு தூப்பாக்கியைத் தூக்கிட்டு வந்துட்டானுங்க. டக்ளஸ்ங்கிற ஆளோட கையில ஏ.கே.47 துப்பாக்கி.

'எவனாவது நெருங்கி வந்தீங்க.. சுட்டுப் பொசுக்கிருவேன்'னு காட்டுக் கத்துக் கத்திக்கிட்டே வானத்தை நோக்கி டக்ளஸூம் இன்னும் ரெண்டு, மூணு பேரும் படபடன்னு துப்பாக்கியால சுட்டாங்க. இதனால, மக்களெல்லாம் அப்படியே நின்னுக்கிட்டு கற்களைத் தூக்கி அவங்க மேல வீசினோம்.

அதுக்குள்ளே 'துப்பாக்கியால சுடுறானுங்க.. சுடுறானுங்க'ன்னு மக்கள் கூச்சல் போட.. அப்போ வீட்ல சாப்பிட்டுக்கிட்டிருந்த என் தம்பி திருநாவுக்கரசுவும், மச்சான் குருமூர்த்தியும் வெளில ஓடி வந்தாங்க. டக்ளஸ் கும்பல் துப்பாக்கியை வைச்சுக்கிட்டு வீதியில அங்குமிங்கும் நடந்துக்கிட்டே ஆக்ரோஷமா குரல் கொடுத்ததைக் கேட்டுக்கிட்டே 'சுட்டுடாதீங்க ஸார்.. சுடாதீங்க ஸார்'ன்னு அவர்களை நோக்கி என் தம்பி போனான்.

'போகாத தம்பி.. போகாத தம்பி'ன்னு காலனி மக்கள் சொல்ல.. அதைப் பொருட்படுத்தாம அவர்களைச் சமாதானப்படுத்துறேன்னு திருநாவுக்கரசு முன்னேற.. இதனால ஆத்திரமடைஞ்ச டக்ளஸ், என் தம்பியைப் பார்த்து படபடவென சுட.. நாலஞ்சு குண்டுகள் திருநாவுக்கரசு நெஞ்சைத் துளைத்தது. அதுல ஒரு குண்டு அவன் நெஞ்சைத் துளைச்சு வெளியேறி பக்கத்துல இருந்த சுவத்தைத் தூக்கியது. அந்தச் சுவத்துல அரை அடிக்குப் பள்ளம். அப்படின்னா அந்தத் துப்பாக்கியின் வேகம் எவ்வளவு இருந்திருக்கும்னு பார்த்துக்குங்க..

துப்பாக்கிக் குண்டுகள் பட்டு அப்படியே கீழே விழுந்து உயிருக்குப் போராடினான் என் தம்பி. டக்ளஸின் வெறிச்செயலைக் கண்டு கொதிச்சுப் போன எங்க மக்கள், 'டேய்.. டேய்.. டேய்..'ன்னு கத்திக்கிட்டே அவனுங்களை நோக்கி ஓடினோம். இதைப் பார்த்து மீண்டும் சுட்டது அந்தக் கும்பல். இதில் என் மைத்துனர் குருமூர்த்திக்கும் ரவி என்கிற இளைஞனுக்கும் குண்டடிபட்டது.

அவனுங்க துப்பாக்கியைக் காட்டி மிரட்ட காலனி மக்கள் எல்லாம் கற்களை வீசியும், டயர்களை கொழுத்தியும் அவனுங்க மீது வீசினோம். எரியாவே களவரமானது. பயந்த சுபாவம் உள்ள மக்களெல்லாம் வீட்டுக்குள்ளே போய் கதவைச் சாத்தி அடைச்சுக்கிட்டாங்க. உடனே அவனுங்க வீட்டுக்குள்ளே போய் ஹெல்மட்டையும் ராணுவ உடையையும் மாட்டிக்கிட்டு மொட்டை மாடிக்கு ஏறிட்டானுங்க. ஒவ்வொரு வீட்டு மொட்டை, மொட்டை மாடியா தாவிக்கிட்டே நடை போட்டானுங்க..

கையில இருந்த துப்பாக்கியைத் தூக்கித் தூக்கி வானத்துல சுட்டு மிரட்டுனாங்க.. அவனுங்க வீட்டுக்குள்ளே ஓடிய சமயத்தில் சட்டென ஓடிப் போய் என் தம்பியைத் தூக்கிட்டு வந்து ஆட்டோவில் ஏத்திக்குட்டு பறந்தோம். ஆனா.. போற வழியிலேயே என் தம்பி உயிர் போயிருச்சு.." என்று சொல்லி கண் கலங்கினார்.

மேலும் தொடர்ந்த நடராஜன், "மொட்டை மாடியில் நின்னுக்கிட்டு துப்பாக்கியால் மக்களை மிரட்டிக் கொண்டிருக்க.. ஏரியாவே பதட்டமாயிருச்சு. இந்தச் சம்பவத்தை அறிந்து ஒரு வேனில் போலீஸ்காரங்க வர.. வேனில் இருந்த அவங்களை இறங்கவிடாமல் வேனை நோக்கி சராமரியா சுட்டாங்க. வேன் அப்படியே யூ டர்ன் எடுத்துக்கிட்டுப் பறந்தது.

கொஞ்ச நேரத்துல அப்போதைய சட்டம் ஒழுங்கு ஐ.ஜி.ஸ்ரீபால், போலீஸ்காரங்களோட வந்து இறங்கினார். ஏரியாவை முழுக்க தங்கள் கஸ்டடியில் எடுத்துக் கொண்டது போலீஸ். சரணடையுமாறு எவ்வளவோ கெஞ்சியும் அந்த கொலைகாரக் கும்பல் ஒப்புக் கொள்ளவில்லை. போலீஸ் கமிஷனர் தேவாரம் இங்கு வர வேண்டும் என்று அவர்கள் சொல்ல.. அவரும் வந்தார். அதன் பிறகு அவரிடம்தான் அந்த 10 பேரும் சரணடைந்தார்கள்.

டக்ளஸ் உட்பட 10 பேர் மீதும் கொலை வழக்குப் போட்டது போலீஸ். ஆனா ஒரு முறைகூட எங்ககிட்ட விசாரிச்சு, சாட்சிகளை சேர்த்து அவனுங்களுக்குத் தண்டனை வாங்கித் தர போலீஸ் முயற்சி எடுக்கவே இல்லை.. என் தம்பியை சுட்டுக் கொன்னதுமில்லாம மக்களைக் கொல்லவும் துணிஞ்சிருக்கானுங்க..

ஆனா அவனுங்களுக்குத் தண்டனையே இல்லை. தமிழன் உயிரென்ன இவனுங்களுக்கு மயிரா..? இலங்கையிலும் சுட்டுக் கொல்றானுங்க.. இங்கேயும் சுட்டுக் கொல்றானுங்க.. இந்தச் சம்பவம் நடந்து 24 வருஷமாச்சு. தேடப்படுற குற்றவாளின்னு சொல்லுது போலீஸ். ஆனா அந்த டக்ளஸ் ராஜமரியாதையோட இந்தியாவுக்கு வர்றான். பிரதமரோட விருந்து சாப்பிடுறான். அவனை கைது பண்ண எந்த நடவடிக்கையும் எடுக்கலை. என் தம்பியோட சாவுக்கு இந்தியாவுல நீதி கிடைக்காதா?" என்றார் கதறியபடியே..

நடராஜனின் மனைவியும், திருநாவுக்கரசின் அண்ணியுமான ரத்னா, "என் கொழுந்தனார் உயிரோட இருந்திருந்தா எங்க காலனியும், எங்க குடும்பமும் எவ்வளவோ வளர்ச்சி அடைஞ்சிருக்கும். அன்னைக்கு நடந்த சம்பவத்தை இப்போ நினைச்சாலும் குலை நடுங்குது. மக்களை மிரட்டி, ஜனங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு கொலைகாரன் வெளிப்படையா உயிரோடு இருக்கான்னு தெரிஞ்சும் அரசாங்கம் கம்முன்னு இருக்குன்னா செத்துப் போனது ஒரு ஏழை. அதுவும் தாழ்த்தப்பட்டவன்கிறதாலதானே..? தாழ்த்தப்பட்டவங்க சுட்டுக் கொல்லப்பட்டா இந்தியாவுல நீதி கிடைக்காதா..? இலங்கையில் தமிழர்களைச் சுட்டுக் கொன்ற ராஜபக்சேவுக்கும், தமிழகத்தில் தமிழனைச் சுட்டுக் கொன்ன டக்ளஸூக்கும் விருந்து கொடுக்கிற இந்திய அரசாங்கமே.. எங்களுக்கு நீதி கிடைக்காதா..? அந்தக் குற்றவாளியை தூக்குல போட்டாத்தான் என் கொழுந்தன் ஆன்மா சாந்தியடையும்.." என்று குமுறினார்.

டக்ளஸ் கும்பலால் குண்டடிபட்டவரும், திருநாவுக்கரசுவின் தங்கை கணவருமான குருமூர்த்தி, "என் கை விரலில் குண்டுபட்டதால், ஓட்டை மட்டுமே விழுந்துச்சு. என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனா என் மச்சினன் மாதிரியே ரவிங்கிற ஒருத்தருக்கும் குண்டடிபட்டுச்சு. அவனையும் தூக்கிக்கிட்டு ஆஸ்பிட்டலுக்கு போனாங்க. கே.எம்.சி.ல ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு பிறகு ஸ்டான்லியில் அட்மிட் பண்ணினாங்க. ஒரு நாள் அந்த ரவி உயிரோட இருந்தான். மறுநாள் செத்துட்டான். ஹாஸ்பிட்டலில் உயிர் போனதால இந்த மரணத்தை மறைச்சிட்டாங்க.." என்று கூறினார்.

மேலும் தொடர்ந்த குருமூர்த்தி, "இந்த கேஸ் ஹைகோர்ட்ல வந்தப்போ முதல் ஹியரிங்குக்கு என்னையும் அழைச்சுக்கிட்டு போனாங்க. அப்போ டக்ளஸ், ரமேஷ், ராஜன், முரளின்னு 10 பேரை நிறுத்தனாங்க.. அவ்வளவுதான்.. ரெண்டாவது ஹியரிங்கிற்கு போனப்போ அதுல 2 பேரை காணோம். அவங்க செத்துப் போயிட்டதா சொன்னாங்க. அப்புறம் 3-வது ஹியரிங்ல 3 பேர் செத்துப் போயிட்டதா சொன்னாங்க. 4-வது ஹியரிங் வந்தப்போ, 'எல்லோருமே செத்துப் போயாச்சு.. கேஸை மூடிட்டோம். இனிமே நீங்க வரத் தேவையில்லை'ன்னு அரசு வக்கீல் சொன்னாரு.  

அதுக்குப் பிறகு அந்த வழக்கு பத்தின நியூஸே வரலை. ஆனா இப்போ திடீரென டக்ளஸ் இந்தியாவுக்கு வரவும்தான் எங்களுக்கு அந்த கொலைகாரன் உயிரோட இருக்கிறதே தெரியுது. இவ்வளவு காலமும் உயிரோடுதான் இருந்திருக்கிறான். இலங்கையில மந்திரியாவும் இருக்கான். தேடப்படும் குற்றவாளின்னு இப்போ அறிவிக்கிற போலீஸ்.. இவ்வளவு காலமும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தது..? என் மச்சான் சாவுக்கு நீதி கேட்க தமிழக மக்கள்தான் உதவணும்.." என்றார்.

இந்த நிலையில் 'தமிழக போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் கைது செய்யப்பட வேண்டும்' என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

அப்போது டெல்லியில் இருந்த டக்ளஸ், "1987-ல் நடந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி எனக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது" என்றார்.

இது பற்றி வக்கீல் புகழேந்தியிடம் பேசியபோது, "1987-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 'இலங்கையில் போராளிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெற வேண்டும். அந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்' என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர.. தமிழகத்தில் நடத்தப்பட்ட குற்றச் செயல்கள் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

மேலும் திருநாவுக்கரசை டக்ளஸ் சுட்டுக் கொன்றது 1986-ல். ஒப்பந்தம் கையெழுத்தானது 1987-ல். அடுத்து டக்ளஸ் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் வழக்கு 1988-1989-களில் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்திற்குப் பிறகும் இவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதால் ஒப்பந்தத்தைக் காட்டி டக்ளஸ் தப்பிக்கவே முடியாது.

போலீஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி இலங்கை அரசில் மந்திரியாக இருப்பதும், இந்தியாவுக்கு சுதந்திரமாக வந்து போவதும் கண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்.. இந்தியச் சட்டத்திற்கு தலைக்குனிவையே ஏற்படுத்தும்.." என்றார்.

இதே நேரத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவானதில் முக்கியப் பங்காற்றியவரும் இப்போது தே.மு.தி.க. கட்சியின் அவைத் தலைவருமாகவும் இருக்கும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இது பற்றி அளித்துள்ள பேட்டி இது.

கேள்வி : இந்திய இலங்கை அரசுகள் செய்து கொண்டு ஒப்பந்தத்தின்படி டக்ளஸுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது சரியா..?

பண்ருட்டி பதில் : "1987-ல் இந்திய இலங்கை அரசுகள் உடன்பாடு செய்து கொண்டபோது தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆரால் அனுப்பி வைக்கப்பட்டு அந்த நிகழ்வில் பங்கு கொண்டவன் நான். டக்ளஸ் சொல்வதுபோல அவர் செய்த குற்றங்கள் மன்னிக்கப்படவில்லை. அத்தகைய பிரிவு எதுவும் அந்த ஒப்பந்தத்தில் இல்லை. போராளிக் குழுக்கள் முன் வந்தால் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க மட்டுமே அதில் ஒரு ஷரத்தில் வழி வகை செய்யப்பட்டது. தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டால் அதற்குச் சம்பந்தப்பட்டவர்கள்தான் பொறுப்பு.

டக்ளஸை பொறுத்தவரை சென்னை சூளைமேடு பகுதியில் சட்டவிரோதமாகத் துப்பாக்கியால் ஒருவரைச் சுட்டுக் கொன்றார். அதில் நான்கு பேர் காயம் அடைந்தனர். இதில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்றுவரை தேடப்படும் குற்றவாளிதான். எந்த மன்னிப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை."

கேள்வி : டக்ளஸ் உங்களை அந்தச் சமயத்தில் சந்தித்தாரா..?

பண்ருட்டி பதில் : "இப்போது இலங்கையில் அமைச்சராக இருக்கும் அவர் அப்போது பெரிய ஆள் இல்லை. போராளிக் குழுக்களின் சார்பில் பத்மநாபா, முகுந்தன், சிறீசபாரத்தினம், பாலகுமார், பிரபாகரன், பாலசிங்கம் போன்றவர்கள்தான் எம்.ஜி.ஆரை சந்திக்க வருவார்கள். நான் உடன் இருப்பேன்.

1980-களின் கடைசியில் ஒரு முறை டக்ளஸ் என்னைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து 'யாழ்ப்பாணம் சென்று விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்த நிதியுதவி தாருங்கள்' என்று கேட்டார். நான் திருப்பியனுப்பிவிட்டேன். அதைத் தவிர எப்போதும் அவர் என்னைச் சந்தித்ததில்லை."

கேள்வி : டக்ளஸ் மீதான வழக்குகள் பற்றி, பத்திரிகை மூலம்தான் தெரிந்து கொண்டேன் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளாரே..?

பண்ருட்டி பதில் : "சட்டம், ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் என்றாலும், தமிழகத்திலும் மத்திய உளவுத்துறை செயல்படுகிறது. டக்ளஸ் பற்றி அவர்களுக்குத் தெரியாமல் இருக்க நியாயம் இல்லை. இவரைப் போல யார் வெளிநாட்டில் இருந்து வந்தாலும் மத்தியஉளவுத்துறை அவர்களைக் குறித்து அறிக்கை அளிப்பது வழக்கம். பார்வதி அம்மாளுக்கு முதலில் விசா கொடுத்துவிட்டு உளவுத் துறை கூறியதன் பேரில்தானே பின்னர் திருப்பியனுப்பினார்கள். எனவே உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சு நம்பத் தகுந்ததாக இல்லை.

போபர்ஸ் ஊழல் வழக்கு குவாத்ரோச்சி, போபால் விஷ வாயு கசிவு வழக்கு ஆண்டர்சன் என அரசுக்கு வேண்டியவர்கள் எத்தகைய தவறு செய்தாலும் அவர்களை வரவேற்பதும், வேண்டாதவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் தொல்லை கொடுப்பதும்தான் இங்கே நடைமுறையாக இருக்கிறது." என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் இது தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் தங்களது நிலையைத் தெரிவிக்க வேண்டுமென்று கூறி வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

நன்றி : நக்கீரன் வார இதழ் - ஜூன் 16-18, 2010
 
ஜூனியர் விகடன் - 20-06-2010