மன்னர் வகையறா - சினிமா விமர்சனம்

28-01-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

A3V சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விமலே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
படத்தில் விமல் ஹீரோவாகவும், ‘கயல்’ ஆனந்தி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ‘இளைய திலகம்’ பிரபு, ஜெயப்பிரகாஷ், ‘ரோபோ’ சங்கர், சாந்தினி தமிழரசன், சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, நீலிமா ராணி, மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பி.ஜி.முத்தையா & சூரஜ் நல்லுசாமி, இசை – ஜாக்ஸ் பிஜாய், படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை – கே. சம்பத் திலக், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், நடனம் – தினேஷ் & எம். செரீப் & தீனா, பாடல்கள் – மணி அமுதன் & சாரதி.

மதியழகன் மூரியர் என்னும் விமல் சட்டக் கல்லூரி மாணவர். தேர்வெழுதி பாஸாகாமல் இருக்கும் வெட்டி ஆஃபீசர். அவருக்கும் ஜே.பி. வாண்டையார் என்னும் வம்சி கிருஷ்ணாவின் தங்கை ‘கயல்’ ஆனந்திக்கும் இடையில் காதல் மலர்கிறது.
விமலின் தந்தை கோவிந்தராஜ் மூரியர் என்னும் பிரபு, விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால் கருணாகரன் என்னும் அபிஷேக் வினோத்தின் இறால் பண்ணையை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மூட வைக்கிறார் பிரபு. அதனால் இருவருக்குள்ளும் பகை மூள்கிறது.
விமலின் அண்ணன் கார்த்திக் குமார் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அவரைக் காப்பாற்றும் விமல், தனது அண்ணன் காதலித்த சாந்தினியைத் திருமண மேடையில் இருந்து கடத்திச் சென்று அண்ணனுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறார் விமல்.
இதனால் விமல் மீது, அபிஷேக்கும் வம்சி கிருஷ்ணாவும் கொலை செய்யுமளவிற்குக் கோபம் கொள்வதோடு, சாந்தினிக்குப் பார்த்த மாப்பிள்ளையை ஆனந்திக்கு நிச்சயமும் செய்து விடுகின்றனர்.
ஒரு டிராமா செய்து, தனது அண்ணன் அண்ணியை, இரண்டு குடும்பங்களும் ஏற்றுக் கொள்ளச் செய்து விடுகிறார் விமல். எனினும், விமலிடம் அவரது அப்பா பிரபு, ஆனந்தியுடனான காதலைக் கண்டிப்பதோடு, ஆனந்திக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடையின்றி நிகழவேண்டும் என்றும் சொல்லி விடுகிறார்.
அதற்கான முயற்சியை விமலே முன் நின்று எடுக்கிறார். ஆனால், கல்யாணத்தன்று ஆனந்தியை மண்டபத்தில் காணவில்லை. விமல் தான் கடத்தியிருப்பார் என்று அனைவரும் கருதுகின்றனர்.
விமல் பரீட்சையில் தேர்வு பெற்றாரா? ஆனந்திக்கு என்னானது? விமல் ஆனந்தியின் காதல் என்னானது? என்பதெல்லாம் படம் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
தனது மாப்பிள்ளை விமல் எப்படியும் வக்கீல் ஆகி விடுவான் என ஊரில் உள்ளவர்களை எல்லாம் வம்புக்கு இழுக்கும் மாமன் பாத்திரத்தில் ‘ரோபோ’ சங்கர் நடித்துள்ளார். அவருக்கு என்றே விசேஷமாக முழு நீள காமெடி ரோல் தரப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். படத்தின் க்ளைமேக்ஸில்கூட, தான் புதிதாய்ச் சேர்த்துக் கொண்ட பெண், சிங்கம்புலியைப் பார்க்கும்பொழுது, அதற்கு ‘ரோபோ’ சங்கர் தரும் ரியாக்ஷனுக்குத் திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது.
இறால் பண்ணை ஓனராக வரும் அபிஷேக்கை, இந்தப் படத்தில் வில்லன் என்றே சொல்லலாம். விமலைக் கொல்வதே தன்ல ட்சியம் என்று இருக்கும் அவர், க்ளைமேக்ஸில் தன் தம்பிக்கு ‘பிக் பாஸ்’ புகழ் ஜூலியோடு விமல் கல்யாணம் செய்து வைக்கும் பொழுது, அதைச் சுலபமாக ஏற்றுக் கொள்வது ஒட்டவில்லை.
வம்சி கிருஷ்ணாவிற்குத் தெரியாமல், அவரது அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா சரண்யா பொன்வண்ணன், பாட்டி மற்றும் மனைவி நீலிமா ராணி, சாந்தினியின் வளைகாப்பிற்காகக் கிளம்பும் காட்சி அசத்தல் நகைச்சுவை.
அந்த உண்மை தெரிய வரும் போது, வம்சி கிருஷ்ணா தனது தந்தையை எடுத்தெறிந்து பேசி விடுகிறார். அதே போல், ஆனந்தி காணாமல் போகும் போதும் வம்சி கிருஷ்ணா எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசுகிறார். அதற்கு ஜெயப்பிரகாஷ் தன் மகனிடம் பேசும் வசனம், குடும்பம் என்ற அமைப்பின் மீதான நம்பிக்கைக் கூட்டுகிறது.
படத்தில் கூட்டுக் குடும்பத்தை உயர்த்திப் பேசும் ஒரு வசனம் உண்டு. தான் மனைவியின் அனைத்து உறவினருடனும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறேன் எனச் சொல்லும் ‘லொள்ளு சபா’ சுவாமிநாதனை சிங்கம்புலி கலாய்த்ததும், ”அடடா அடடா வீடே கோயில்” என்ற பாடல் வரிகளோடு ஜாக்ஸ் பிஜாயின் இசையில் பாடல் வருகிறது.
இந்த குடும்ப செண்ட்டிமென்ட்டை நம்பித்தான் ‘மன்னர் வகையறா’ படத்தை இயக்குநர் பூபதி பாண்டியன் எடுத்துள்ளார் என்று சொல்லலாம். படத்தின் நீளத்தையும் அவர் கவனத்தில் கொண்டு குறைத்திருக்கலாம். ஆனால், படம் போரடிக்காதவாறு திரைக்கதை அமைத்து அக்குறையைப் போக்கி விடுகிறார் பூபதி பாண்டியன்.
பாடல்கள் எல்லாமே வண்ணமயமாய் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கட்டாயக் கவிஞராய்ப் புது அவதாரம் எடுத்திருக்கும் பூபதி பாண்டியன், ‘அண்ணன பத்தி கவலையில்ல’ எனும் பாடலை எழுதியுள்ளார். விமலுக்கும், ஆனந்திக்கும் அப்பாடலில் கொடுக்கப்பட்டுள்ள காஸ்ட்யூம்கள் ஈர்க்கின்றன. ‘ஒரு தட்டான போல்’ என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் இதமாய் உள்ளது.
சுப்ரீம் சுந்தரின் ஆக்ஷன் காட்சிகள் அனல் பறக்கின்றன. சண்டைகளில் யாரும் இறப்பதில்லை. படத்தின் க்ளைமேஸையும், ‘திருவிளையாடல் ஆரம்பம்’ போல் தனது வழக்கமான பாணியில் நகைச்சுவையாகவே முடித்து வைத்துள்ளார் இயக்குநர் பூபதி பாண்டியன்.
குடும்பத்தினரோடு பார்க்கலாம் என்று சொல்ல வைத்திருக்கிறது இப்படம்..!

0 comments: