சாவி - சினிமா விமர்சனம்

07-01-2018

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

The Sparkland நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இந்த ‘சாவி’ திரைப்படம்.
மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் ‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் பிரகாஷ் சந்திரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ‘அறம்’ படத்தில் நடித்து பெயர் பெற்றிருக்கும் சுனுலட்சுமி நடித்துள்ளார்.
மேலும் ராஜலிங்கம், ஜெயசீலன், பிரகதீஷ்வரன், உதயபானு மகேஸ்வரன், ஸ்டில்ஸ் குமார், கவிஞர் நந்தலாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சுரேஷ் ராம், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், இசை – சதீஷ் தாயன்பன், கலை இயக்கம் – வீரசமர், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், நடனம் – விஜி சதீஷ், அபிநயஷ்ரி, தயாரிப்பு நிர்வாகம் – எம்.சிவக்குமார், மக்கள் தொடர்பு – நிகில், விளம்பர வடிவமைப்பு – சசி அண்ட் சசி, எழுத்து, இயக்கம் – ஆர்.சுப்ரமணியன்.

வருடத்தின் முதல் படமாக இதனை பார்த்தபோது மனதுக்குச் சந்தோஷமாக இருந்தது. வித்தியாசமான கதை, திரைக்கதையில் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பில், மிகச் சிறப்பான இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது இத்திரைப்படம்.
நாயகன் பிரகாஷ் சந்திரா பூட்டு ரிப்பேர், சாவி செய்யும் வேலையைச் செய்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் அவருக்குத் திருமணம். கல்யாணப் பெண்ணான சுனுலட்சுமி, ஒரு துணிக் கடையில் வேலை செய்து வருகிறார்.
பிரகாஷ் சந்திராவின் அண்ணன் ஆட்டோ டிரைவர். இவருக்குத் திருமணமாகி பையன் இருக்கிறான். இந்தக் குடும்பத்தில் பிறக்காவிட்டாலும் இன்னொரு அண்ணனாக இருக்கிறார் ஆனந்தன். இவர் கேஸ் அடுப்பு சர்வீஸ் செய்யும் வேலையைச் செய்து வருகிறார்.
இந்தச் சின்னச் சம்பாத்தியத்திலேயே ஆனந்தனுக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. கூத்தியாள் வீடே கதி என்றிருக்கும் கணவனை மீட்க நினைக்கும் ஆனந்தனின் மனைவிக்கு தோல்வியே மிஞ்சுகிறது. இந்தக் கூடா நட்பு கடைசியில் அந்தக் குடும்பத்தையே சிதைக்கும் அளவுக்குப் போகிறது.
ஆனந்தனின் சின்ன வீடான அந்தப் பெண்ணின் அம்மா ஒரு வீட்டில் வேலை செய்கிறார். அந்த வீட்டின் உரிமையாளரான பெரிய பாண்டி தேவர் வேறொருவரிடம் வாங்கிய கடனை வட்டியுடன் அடைக்க வேண்டி, தன்னுடைய நிலத்தை விற்று அதில் கிடைக்கும் 30 லட்சம் ரூபாய் பணத்தை வீட்டில் வைத்திருக்கிறார்.
இதையறியும் வேலைக்கார அம்மா தனது மகனிடமும், மகளிடமும் இதனை பற்ற வைக்கிறார். பக்கென்று அவர்களுக்குள் சாத்தான் இறங்குகிறான். முதலில் பயப்படும் ஆனந்தன், தனது கள்ளக் காதலியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு இதற்கு ஒப்புக் கொள்கிறான்.
பூட்டியிருக்கும் வீட்டை திறக்க தனது தம்பியான ஹீரோவை அழைத்து, அவன் மூலமாக வீட்டையும் திறந்து பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாகிறான்.
மறுநாள் பழனிக்கு போய் சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பிய பெரிய பாண்டித் தேவர் வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார். கடன் கொடுத்தவனோ, கடன் கொடுக்கவில்லையென்றால் அவரது பெண்ணைத் தூக்கிச் செல்லப் போவதாகக் கூறிவிட்டுப் போகிறான்.
இந்த அவமானம் தாங்காமல் பெரிய பாண்டித் தேவர் தற்கொலை செய்து கொள்கிறார். வழக்கு போலீஸுக்கு போகிறது. போலீஸ் விசாரிக்கத் துவங்க.. எதேச்சையாக அந்த நள்ளிரவில் அந்த வீடு இருக்கும் பகுதிக்கு வந்து சென்ற சாவி எக்ஸ்பர்ட் ஹீரோவின் மேல் சந்தேகம் வந்து போலீஸ் அவரைத் தேடுகிறது.
இந்த நேரத்தில் ஹீரோவின் அண்ணனான ஆட்டோ டிரைவர் திடீரென்று கொலை செய்யப்படுகிறார். ஏன், எதற்கு என்று தெரியாமலேயே இந்தக் கொலை நடைபெற.. அண்ணன் கொலையானதை அறிந்து வீட்டுக்கு வரும் தம்பியை போலீஸ் துரத்த… நாயகன் தப்பியோடுகிறார்.
போலீஸ் கையில் சிக்காமலேயே தான் நிரபராதி என்பதை நிரூபிக்க பெரும் போராட்டமே நடத்துகிறார் நாயகன் பிரகாஷ். அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றாரா.. இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் இடைவேளைக்கு பின்பான கதை.
இயக்குநர் சுப்ரமணியன் ஏற்கெனவே 2012-ம் ஆண்டில் ‘சேவற்கொடி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படமும் வித்தியாசமான கதை சொல்லலுக்காகவே அப்போதே பேசப்பட்டது. இந்தப் படமும், இப்போது அதே ‘வித்தியாசமான மேக்கிங்’ என்கின்ற காரணத்துக்காகவே புகழப்படும்.
முழுக்க, முழுக்க மதுரை நகரை மையப்படுத்தியே கதை நகர்கிறது. மதுரையின் நகர்ப் பகுதிகளையும், சுற்றுப் புறங்களையும்… இதுவரையிலும் நீங்கள் எந்தத் திரைப்படத்திலும் பார்த்திராத மதுரை மாநகரின் பல இடங்களை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார் இயக்குநர். இதற்காகவே அவருக்கு தனி பாராட்டுக்களை வழங்க வேண்டும்.
சின்ன கதைதான். ஆனால் வித்தியாசமான திரைக்கதையில் மிளிர்கிறது. நடித்தவர்கள் அனைவருமே மிகைப்படுத்தப்படாத நடிப்பை காட்டியிருக்கிறார்கள். நாயகன் மதுரையின் ஆயிரங்கால் மண்டபத்தின் வாசலில் சின்னதாக பெட்டிக் கடை போன்ற ஒரு கடையை வைத்து பூட்டு ரிப்பேர் செய்து வந்தாலும், ‘தவறான வழியில் பொருள் ஈட்டக் கூடாது’ என்கிற கொள்கையில் இருக்கிறார்.
‘வீட்டுக்கு வந்து பூட்டை திறந்து கொடு. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்’ என்று ஒருவர் அழைத்தபோதும் போக மறுக்கிறார் நாயகன். அப்படிப்பட்டவர் தனது அண்ணன் போன்றவர் முன் மொழிகிறாரே என்பதால்தான் திருட்டு போகும் வீட்டின் பூட்டை திறந்து கொடுக்கிறார். அதுவே வினையாகிவிட அந்த வினையை தானே தீர்த்து வைக்க விரும்பித்தான் இப்படியொரு போராட்டத்தில் இறங்குகிறார்.
இந்த நியாய, தர்மத்தை அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சே சொல்லிவிடுவதால், ‘பேசாமல் போலீஸ் போய் சொல்லியிருக்கலாமே’ என்று லாஜிக் கேள்வியைக் கேட்பவர்களுக்கு இக்கேள்வி தேவையில்லாதது என்பது புரியும்.
நாயகன் பிரகாஷ் சந்திரா அந்தக் கேரக்டராகவே மாறிவிட்டார். வெகு இயல்பான, மிகையில்லாத நடிப்பால் ‘அச்சச்சோ பாவம்’ என்கிற ரசிகனின் மனநிலையை தன்பால் ஈர்த்திருக்கிறார்.
ஆக்ரோஷத்தைக் காட்டாமல் இயல்பாக ‘வா.. போலீஸ் ஸ்டேஷன் போய் சரணடையலாம்’ என்று அண்ணனை அழைக்கும் பாங்கில் பழி வாங்கும் உணர்ச்சியில்லை. ஆனால் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தே தீர வேண்டும் என்கிற அந்த வெறியே தெரிகிறது..!
காதலுக்கென்று தனி கதையெல்லாம் இல்லை. ஆனால் காதல் இருக்கிறது. அழகான காதல் கவிதை. குடிகார அப்பனுக்கொரு மகளாய் பிறந்து அவஸ்தைப்படும் கேரக்டரில் சுனு லட்சுமி அழகாக நடித்திருக்கிறார்.
இன்ஸ்பெக்டரின் விசாரணையில் நறுக், நறுக்கென்று பதில் சொல்லும்விதமும், முதல் முறை பார்த்தவுடனேயே காதலாகி மனதுக்குள் சிக்கவிடும் காதலியாகவும் பிடித்துப் போகிறார் சுனுலட்சுமி.
இவருடைய அப்பாவாக நடித்திருக்கும் பிரகதீஷ்வரன் பின்னியெடுத்திருக்கிறார். குடி போதையில் மகளை பெண் கேட்டு வந்தவர்களை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கும்போது இவர் பேசும் பேச்சு காமெடியென்றால்.. அடுத்து நடுரோட்டில் நின்று கொண்டு தனது மகளை ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்கு புகழ்ந்து பேசும் அந்தக் காட்சியில் சிரித்து, சிரித்து வயிறே வலித்துவிட்டது..!
ஆனந்தனாக நடித்திருக்கும் ராஜலிங்கம் தனது சின்ன வீட்டின் பேச்சைக் கேட்டு திருடனாக மாறினாலும், அதனை நியாயப்படுத்தும்விதமாக பேசும் பேச்சும், பேசிய விதமும், நடிப்பும் பிடித்துப் போகிறது.
போலீஸ் விசாரணையை இதுநாள்வரையிலும் பார்த்திராத ஒரு புதிய கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர். இன்ஸ்பெக்டர் உதயபானு மகேஷ்வரனின் விசாரணை முறையும், அவர் பேசும் பேச்சும், கேட்கும் கேள்விகளும், போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளுமே படம் வேறு மாதிரியானது என்பதை வெளிக்காட்டுகிறது.
நாயகனின் அப்பா, ஆட்டோ டிரைவர் ஆறுமுகம்.. ஒரு காட்சியே ஆனாலும் மனதில் நிற்கும் ஹீரோவின் மதினி, பொய்ப்பூச்சு பேசும் வித்தகரான போலீஸ் ஏட்டு வேதகிரி, கந்துவட்டிக்காரர் என்று படத்தில் இடம் பெற்றிருக்கும் அனைவருமே வித்தியாசமான முறையில் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். எவரும் சோடை போகவில்லை.
திரைக்கதை, காட்சியமைப்புகள், காட்சி கோணங்கள்.. லொகேஷன்கள் என்று அனைத்திலுமே வித்தியாசம்தான்.  ஒளிப்பதிவாளர் சுரேஷ் ராமின் ஒளிப்பதிவும் படத்திற்குக் கிடைத்த இன்னொரு பலம். மிக முக்கியமான காட்சிகளில் நாயகர்களின் நடிப்பில் ரசிகர்களை ரசிக்க வைத்ததற்கு, ஒளிப்பதிவாளரும் ஒரு காரணமாகிறார்.
இசையமைப்பாளர் சதீஷ் தாயன்பனின் இனிமையான இசையில் ‘துளி துளி’ பாடலும், ‘கூத்தாடும் நாயகா’ பாடலும் கேட்க கேட்கப் பிடிக்கும். ‘கூத்தாடும் நாயகா’ பாடல் காட்சியைக்கூட நீக்கியிருக்கலாம். அந்தப் பாடல் படத்தின் வேகத்தை கொஞ்சம் தடை செய்திருக்கிறது.
‘துளி துளி’ பாடல் காட்சியை படமாக்கியவிதம் மிக அருமை. அந்தக் காட்சியில் நாயகன், நாயகி அணிந்திருந்த உடைகளின் டிஸைன்கூட கண்ணைக் கவர்ந்துவிட்டது..!
படம் மிகக் குறைவான நேரத்திலேயே முடிந்திருக்கிறது. அதுவும் இது முடிவல்ல என்று நாம் நினைக்கும் எதிர்பாராத ஒரு நேரத்தில் முடிந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் திரைக்கதையை நகர்த்தியிருக்கலாம். இன்னமும் 15 நிமிடங்களுக்கான திரைக்கதை எழுதுவதற்கான வாய்ப்பு இந்தப் படத்தில் இருக்கிறது. இயக்குநர் ஏன் இத்தனை அவசரமாக படத்தை முடித்தார் என்று தெரியவில்லை.
2018-ம் வருடத்தின் துவக்கத்தில் மிக அருமையான படம் வந்திருக்கிறது. அதுவும் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் என்கிற லிஸ்ட்டிலும் இடம் பிடித்திருக்கிறது..!
மிஸ் பண்ணிராதீங்க..!

0 comments: