துப்பறிவாளன் - சினிமா விமர்சனம்

16-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை, விஷால் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ். ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கார்த்திக் வெங்கட்ராமன், படத் தொகுப்பு – அருண், இசை – அருண் கொரோல்லி, பாடல்கள் – மிஷ்கின், கலை இயக்கம் – அ.அமரன், சண்டை பயிற்சி – தினேஷ் காசி, உடைகள் – கவிதா, கதாபாத்திரத் தேர்வு – நித்யா ஸ்ரீராம், ஒப்பனை – பாலாஜி, ஸ்டில்ஸ் – ஹரி சங்கர், தயாரிப்பு நிர்வாகம் – ஜோயல் பென்னட், இணை தயாரிப்பு – எம்.எஸ்.முருகராஜ், தயாரிப்பு – விஷ்ணு விஷால் பேக்டரி, தயாரிப்பாளர் – விஷால், எழுத்து, இயக்கம் – மிஷ்கின்.
தமிழின் துப்பறியும் கதாபாத்திரங்களுக்கெல்லாம் முன்னோடியான ‘ஷெர்லாக் கோம்ஸின்’ தமிழ் பதிப்பாளன்தான் இந்தத் ‘துப்பறிவாளன்’. இவனது தமிழ்ப் பெயர் ‘கணியன் பூங்குன்றன்’.
புகழ் பெற்ற எழுத்தாளர் ‘ஆர்தர் கானன் டோயலின்’ இன்றைக்கும் மறக்க முடியாத அந்த துப்பறியும் கேரக்டரான ‘ஷெர்லாக் கோம்ஸின்’ கதைகளின் நீட்சிதான் இந்தப் படம் என்பதை படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே வெளிப்படையாக தெரிவித்ததோடு இல்லாமல் டைட்டிலிலும் அதற்கான கிரெடிட்டை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கியிருக்கும் இயக்குநர் மிஷ்கினின் நேர்மைக்கு முதற்கண் பாராட்டு..!

ஒரு பெரும் தொழிலதிபர் ஐம்பது லட்சம் ரூபாயை பீஸாகக் கொடுத்தும் காதல் கணவனுடன் ஓடிப் போன அவரது மகளைக் கண்டுபிடித்துத் தர மறுக்கிறார் துப்பறிவாளன் கணியன் பூங்குன்றன் என்னும் விஷால்.
ஆனால் சிறிது நேரம் கழித்து தனியே வரும் ஒரு சிறுவன், தனது நாய்க்குட்டியை யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டதாகச் சொல்லி அந்தக் குற்றவாளியை கண்டுபிடித்துத் தரும்படி சொல்ல இதனை ஒரு வழக்காக ஏற்றுக் கொண்டு களத்தில் குதிக்கிறார் விஷால்.
இந்த வழக்குதான் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து பல பெரிய கொலை, கொள்ளைகளை அடையாளம் காட்டுகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் சுவையான திரைக்கதை.
ஒரு போலீஸ் உயரதிகாரி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவருடைய உடலில் ஏதோ ஒன்று செலுத்தப்பட்டு அதன் மூலமாக அவருக்கு மரணம் நிகழ்கிறது. தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் எதிர்பாராதவிதமாக மின்னல் அடித்து மரணிக்கிறார். இவர்களுடன் தொடர்புடைய இன்னொரு தொழிலதிபரும் திடீரென்று காணாமல் போயிருக்கிறார்.
காணாமல் போன தொழிலதிபரை தேடியலையும் விஷாலை சிலர் கொலை செய்ய முயற்சிக்க.. இப்போதுதான் தான் தேடியலையும் விஷயம் மிகப் பெரியது என்பதை உணரும் விஷால் இதன் பின்னர் முழு மூச்சாக இதில் குதிக்க.. நிறைய எதிர்பாராத திருப்பங்களையும், சுவாரஸ்யமான கதைகளையும் காட்டுகிறது இந்த ‘துப்பறிவாளன்’ திரைப்படம்.
தமிழ்ச் சினிமாவில் இருக்கின்ற இயக்குநர்களில் 100 பேர் எனில் அதில் தனித்துவம் வாய்ந்தவர் மிஷ்கின். மிஷ்கினின் இயக்கம் என்றாலே அது இப்படித்தான் என்பார்கள். அப்படியேதான் இந்தப் படத்திலும் இருக்கிறது.
கேமிரா கோணங்கள், காட்சியமைப்புகள், திரைக்கதையின் வேகம், கேரக்டர்களின் ஸ்கெட்ச், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் கிடைக்கும் டிவிஸ்ட்டுகள், லைட்டிங்குகள், சிறப்பான இயக்கம்  – இப்படி எல்லாமே மிஷ்கின் சாம்ராஜ்யத்தில் வித்தியாசமாக இருக்கும். இந்த வித்தியாசங்கள்தான் இதுவரையிலும் வந்த அனைத்து துப்பறியும் படங்களில் இருந்து இந்தப் படத்தை மிக, மிக வித்தியாசமாக்கிக் காட்டியிருக்கிறது.
விஷாலின் நடிப்பு கேரியரில் இது மிக, மிக முக்கியமான படம். விஷால் தனது வழக்கமான நடிப்பில்லாமல் மிஷ்கினுக்கு தேவையானதை மட்டுமே திரையில் காண்பித்திருக்கிறார். வேகம், வேகம்.. வேகம்.. அத்தனை வேகத்தில் பரபரவென ஓடும் திரைக்கதையில் விஷாலும் கூடவே ஓடியிருக்கிறார்.
துப்பறிவாளனுக்கு ஐம்புலன்களும் எப்போதும் திறனுடன் இருக்க வேண்டும். அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும். சட்டென முடிவெடுத்தல் வேண்டும். தைரியத்துடன் அணுகுதல் வேண்டும் என்கிற அடிப்படை உண்மையுடன் விஷாலின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இது சாதாரண ஒரு சினிமா என்கிற பார்வையில் பார்த்தால் நிச்சயமாக விஷாலின் கேரக்டர் நகைப்புக்குரியதாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு துப்பறிவாளனின் படம் என்று பார்த்தால் விஷாலின் பெருமையும், அருமையும் புரியும்.. தெரியும்.
வந்தவர்களின் ஜாகத்தையே அலசி, ஆராய்ந்து சட்டென தெளிக்கும் அதி சூப்பர் துப்பறிவாளனாக விஷால் இருப்பது திரைக்கதையின் லாஜிக்படி எல்லை மீறலாகவே இருந்தாலும், இதுதான் துப்பறிவாளனின் குணம் என்று பார்த்தால் இதுவும் சரியே. இவர்களைப் பற்றியெல்லாம் ஏற்கெனவே நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் கணியன் என்று நினைத்துப் பாருங்கள். படம் புரியும்..!
இவருடைய தனிப்பட்ட இன்னொரு குணாதிசயம்தான் ஏன் என்பதற்கான காரணம் தெரியவில்லை. அது எதுக்கெடுத்தாலும் கோப்ப்படுவது.. மல்லிகாவிடம் வள், வள்ளென்று விழவது.. டீயை குதிரை மூத்திரம் போல உள்ளது என்று கொதிப்பது.. பெண்களிடம் இயல்பாக பேச முடியாமல் தவிப்பது..
மல்லிகாவின் கையில் விளக்கமாற்றைக் கொடுத்து வீட்டுக்குள் தள்ளிவிடுகின்ற காட்சி இதுவரையிலும் எந்தப் படத்திலும் வராத புதுமையான காதல் காட்சி. அதற்கு ஹீரோயின் அனு இம்மானுவேல் காட்டும் ரியாக்சன் சூப்பர்.. இதுவும் ஒரு வகையிலான காதல் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஒரு பக்கம் தன்னை திருட வைத்திருக்கும் மாமா.. இன்னொரு பக்கம் தனது தம்பி, தங்கை.. இவர்களுக்கிடையில் தன்னை யார் என்று தெரிந்தும் மன்னித்து வேறு பாதைக்கு போ என்று திசை திருப்பிய இளைஞன்.. அந்த இளைஞனின் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்.. தான் நினைத்த்தை விரும்பியதை அடைந்துவிட்ட திருப்தியில் அந்த வீட்டுக்குள் வலம் வரும் காதலியாக அனுவின் கேரக்டர் ஸ்கெட்ச் தப்பேயில்லை.
மாலில் விஷாலை கொல்ல ஆண்ட்ரியா முயற்சிக்கும் தருணத்தில் அவரைக் காப்பாற்றிய பின்பு அந்த நேரத்திலும் ஒரு பெண்ணிடம் தனது நன்றியுணர்வை காட்டத் தெரியாத ‘துப்பறிவாளன்’ படும்பாடும், கடைசியாக கையைப் பிடித்திழுத்து முத்தம் கொடுத்து நன்றியைத் தெரிவிப்பதும் மிஷ்கின் டச்..
அனு இம்மானுவேல் மரிக்கும் தருவாயில்கூட அவருடைய திருட்டுத்தனம் ஒரு மிகப் பெரிய டிவிஸ்ட்டை கொடுப்பதில் இருந்து, எந்தக் கேரக்டரும் படத்தில் தேவையில்லாமல் இல்லை என்பதையே காட்டுகிறது.
பிரசன்னாவுக்கு பெரிய வேடமில்லை என்றாலும் ‘துப்பறிவாளனு’க்கு உதவியாளராக சில பல வேலைகளைச் செய்வதோடு அவரது கேரக்டர் முடிந்துவிட்டது. கிளைமாக்ஸில் பிரசன்னாவின் உதவியும், அந்த உதவிக்காக விஷால் பேசும் பேச்சும் பல கைதட்டல்களை ஒட்டு மொத்தமாய் வாங்கிய காட்சிகள்..! வெல்டன் இயக்குநர் ஸார்..!
கே.பாக்யராஜ் இதுவரையிலும் தான் செய்யாத ஒரு வில்லன் கேரக்டரை இதில் செய்திருக்கிறார். ஆனால் இப்படியொரு குடும்பச் சூழலில் இவர் ஏன் இந்த வேலையைச் செய்தார் என்பதற்கு சரியான விளக்கம் இல்லாததும் ஒரு பெரிய குறைதான்.
பாக்யராஜ் தனது மரணத்தின்போது கூடவே தான் இதுவரையிலும் பார்த்துக் கொண்டிருந்த மனைவியையும் சேர்த்தே இழுத்துக் கொண்டு போக நினைப்பது பரிதாப உணர்வை வரவழைக்கிறது.
வினய்யின் வில்லன் கேரக்டர் விஷாலுக்கு பின்பு படத்தில் அனைவரையும் கவர்ந்திழுத்த கேரக்டர். அறிமுகக் காட்சியில் நூடூல்ஸ் செய்து கொண்டே இந்த ஒட்டு மொத்த திருட்டுக் கும்பலின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளையும் இயக்குநர் அறிமுகப்படுத்துவது இயக்குதலின் சிறப்பு.
தான் பட்ட தோல்வியைத் தாங்கிக் கொள்ளாமல் முட்டைகளை வரிசையாக உடைத்து, உடைத்துப் போட்டுவிட்டு பின்பு சட்டியையே தூக்கியெறிந்து தனது கோபத்தைக் காட்டும் வினய்யின் ஆவேசம் அடக்கமான வில்லனைக் காட்டியிருக்கிறது.
கிளைமாக்ஸில் அந்த சண்டை காட்சியை படமாக்கியவிதம் சிம்ப்ளி சூப்பர்ப். உச்சக்கட்ட சண்டையில் நான்கே நான்கு குத்துக்களில் வினய்யை சாய்ப்பதும், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்திருந்த நிலையில் வினய்யின் மரணம் நிகழ்வதும் ஒரு குறியீடுதான்..!
இந்தச் சண்டை மட்டுமில்லை.. சைனீஸ் ரெஸ்ட்டாரெண்ட்டில் விஷால் போடும் சண்டையே அமர்க்களம். கேமிராமேன், சண்டை பயிற்சியாளர், படத்தின் தொகுப்பாளர் என்று அனைவருமே திறமையாக வேலை பார்த்திருக்கிறார்கள் என்பதைக் காட்டியிருக்கிறது இந்த சண்டை பயிற்சி களம்.
மிஷ்கினின் ஆஸ்தான நடிகராக இருக்கும் ஷாஜியின் நடிப்பு கிளைமாக்ஸில்தான் தெரிகிறது. வினய்யின் உண்மையான பெயர் தெரிந்தவுடன் அதனை் சொல்லி ஷாஜி பேசும் வசனத்திற்கே தியேட்டர் அதிர்கிறது. இப்படி பல இடங்களில் சாதாரணமான காட்சிகளில்கூட இயல்பான நகைச்சுவையைத் தெறிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
சிம்ரன் இரண்டு காட்சிகள் என்றாலும் அசத்தல். “உங்க புருஷனை ஏன் கொன்னீங்க..? என்று விஷால் திரும்பத் திரும்ப கேட்க.. சிம்ரன் ஆவேசப்பட்டு மொட்டை மாடிக்கே அழைத்து வந்து நடந்தவைகளை சொல்ல.. விஷால் தெரிந்து கொண்டு கிளம்புவது ‘துப்பறிவாளனின்’ கதைக்கு ஓகேதான். ஆனால் நிஜமான லைஃபுக்கு மிகப் பெரிய லாஜிக் எல்லை மீறல்தான்..!
அநியாயமாய் செத்துப் போகும் போலீஸ் அதிகாரியாய் நரேன்.. கருப்பு ஆடாய் போலீஸ் துறைக்குள் இருக்கும் அபிஷேக்.. நாய்க்குட்டியின் வழக்கிற்கான 857 ரூபாயை பீஸாக கொடுக்க வந்த அந்தப் பையன்.. ஜாலிலோ ஜிம்கானாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் புரோக்கர் ஜான் விஜய், காண்ட்ராக்ட்டுக்காக கொலை செய்யவும் தயங்காத ஜெயப்பிரகாஷ் என்று பலரது கேரக்டர்களையும் மறக்க முடியாதபடிக்கு படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஜெயப்பிரகாஷின் மரணத்திற்காக கே.பாக்யராஜ் டீம் செய்யும் அந்த அதிரிபுதிரி வேலை செம.. சிரிப்பூட்டும் வாயுவை செலுத்தி காரை ஆக்ஸிடெண்ட்டாக்கி கொல்வதுகூட தமிழ்ச் சினிமாவில் புது ஸ்டைல்தான்.
பாக்யராஜ் டீமில் ஒரு அங்கமாக இருக்கும் ஆண்ட்ரியா.. அதிகமாக வசனமில்லாமல் குற்றச் செயல்களைச் செய்யும் கேரக்டர். ஜான் விஜய்யை படுகொலை செய்துவிட்டு தப்பித்துப் போகும் பரபரப்பு காட்சியில் ரசிகர்களுக்கு டென்ஷனை கூட்டியிருக்கிறார்.
இந்தக் காட்சியில் பிடிபடும் மொட்டைத் தலையன் தன் வயிற்றைத் தானே கிழித்துக் கொண்டு சாகும் காட்சியும், இந்தக் களேபரத்தில் ஆண்ட்ரியா தப்பிக்கும் காட்சியும்கூட மிஷ்கினின் டச்சுதான்..! ஆண்ட்ரியாவின் முடிவு என்ன என்பது சாதாரண ரசிகனுக்குத் தெரியாத அளவுக்கு செய்திருப்பதுதான் மிஷ்கின் செய்த மிகப் பெரிய தவறு எனலாம்.
ஒரு புல்லட் சைஸ் உலோகத்தின் உள்ளே உடல் உறுப்புகளைச் செயல் இழக்கச் செய்யும் விஷத்தை ஏற்றி வைத்து, அதன் வாய்ப்பகுதியை மெழுகால் பூசி அடைத்துவிட்டு இதனை இன்ஜெக்ட் மூலமாக மற்றவரின் உடலில் செலுத்துவது இந்தப் படத்தில் மிக முக்கியமான பகுதி.
உடலுக்குச் செல்லும் அந்த உலோகம்.. உடலுக்கள் இருக்கும் வெப்பத்தால் மெழுகு உருகி மூடியைத் திறக்கும். அதனுள் இருக்கும் விஷம் உடலுக்குள் இறங்கத் துவங்க.. சில நிமிடங்களில் அனைத்து உறுப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக செயல் இழக்க சாவு உறுதி. இதன்படிதான் நரேன் இறக்கிறார். பிரசன்னா காப்பாற்றப்படுகிறார்.
இதுவொன்றும் நவீன டெக்னிக் அல்ல. இதே போன்று ஏற்கெனவே பல காட்சியமைப்புகள் தமிழ்த் திரைப்படங்களில் வந்துவிட்டது என்றாலும் ஷெர்லாக் கோம்ஸின் அடையாளங்களில் இதுவும் ஒன்று என்பதால் இது மிஷ்கினால் புதுமையாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
கார்த்திக் வெங்கட்ராமின் ஒளிப்பதிவும், அரோல் கொரல்லியின் இசையும், அருணின் படத் தொகுப்பும், அமரனின் கலை இயக்கமும் படத்தின் சிறப்புக்குக் காரணங்களாக இருக்கின்றன.
விஷாலின் வீட்டின் உட்புறத்தில் எப்போதும் ஒரே மாதிரியான லைட்டிங்ஸ் வசதியோடு பிசிறு தட்டாமல் படமாக்கியிருக்கிறார்கள். சண்டை காட்சிகளில் கேமிராமேனின் உழைப்பு எப்படிப்பட்டது என்பதையும், படத் தொகுப்பாளரின் திறமை எப்படிப்பட்டது என்பதையும் உணர முடிகிறது.
அரோல் கொரல்லியின் இசையில் மெல்லிய வயலின் இசை படம் நெடுகிலும் ஓடிக் கொண்டேயிருப்பது படத்தை பெரிதும ரசிக்க வைத்திருக்கிறது. இந்த பின்னணி இசையின் மகத்துவம் அறிந்தவர் மிஷ்கின். நம்முடைய தமிழ்ச் சினிமாக்களில்தான் இன்னமும் பின்னணி இசையை பாடலுக்கான இசையாகவே கருதி காதைக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டு மொத்தமாய் இந்தப் படம் சுட்டிக் காட்டுவது மிஷ்கின் என்னும் ஒரு இமாலய திறமைசாலியின் ஒட்டு மொத்த திறமையை. விஷால் என்னும் நடிகர் தன்னை மிஷ்கினிடம் ஒப்படைத்துவிட்டு நடிக்க மட்டுமே செய்திருப்பதால்தான் இந்தப் படத்திற்கு இத்தனை பாராட்டுக்களும், வெற்றிகளும் கிட்டியிருக்கின்றன.
‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்று விஷால் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. மிஷ்கின் போன்ற சிறந்த இயக்குநர்களால்தான் தமிழ்ச் சினிமாவுக்கு பெருமைகள் பல கிடைத்து வருகிறது..! இந்தப் படமும் அந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறது.
‘துப்பறிவாளன்’ பார்த்தே தீர வேண்டிய படம். மிஸ் பண்ணிராதீங்க..!

1 comments:

Unknown said...

//மிஷ்கின் போன்ற சிறந்த இயக்குநர்களால்தான் தமிழ்ச் சினிமாவுக்கு பெருமைகள் பல கிடைத்து வருகிறது..!//

பரதேசி பாலா இதை படிச்சா நிச்சயம் வருத்தப்படுவாரூரூஊஊ