கண்ல காச காட்டப்பா - சினிமா விமர்சனம்

25-11-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1991-ம் ஆண்டு ‘வானமே எல்லை’ படத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் ஒரு நடிகராக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட, மேஜர் கெளதம் இயக்கியிருக்கும் முதல் படம் இது.
பழம் பெரும் நடிகரான மேஜர் சுந்தர்ராஜனின் மகனான கெளதம், அடிப்படையில் ஒரு பாலே நடனக் கலைஞர். இப்போதும் சென்னையில் இருக்கும் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் பாலே நடனம் கற்றுத் தரும் ஆசிரியராகவும் இருக்கிறார்.
‘வானமே எல்லை’ படத்திற்கு பிறகு பல படங்களில் கதாநாயகன்களில் ஒருவராகவும் பின்பு குணச்சித்திர நடிகராகவும் மாறி, தொலைக்காட்சிகளுக்கும் தாவி அங்கும் சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார்.
தன்னுடைய இத்தனையாண்டு கால திரையுலக அனுபவத்தை வைத்து இப்போதுதான் முதல்முறையாக தன்னுடைய நண்பர்கள் 3 பேரின் துணையுடன் படத்தின் தயாரிப்பாளராகவும் மாறி இயக்கமும் செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
பக்கா கமர்ஷியல் படமாகவும், அதிலும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான திரைக்கதையுடனும், அழுத்தமான இயக்கத்துடனும் படத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார் மேஜர் கெளதம்.

தமிழகத்தில் வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டித் தருவதற்காக மக்களுக்குத் தரப்பட்ட பணத்தில் 100 கோடி ரூபாயை அபேஸ் செய்கிறார் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர். அந்தப் பணத்தையெல்லாம் மலேசியாவிற்கு ஹவாலா மூலமாக அனுப்பியும் வைத்திருக்கிறார்.
இப்போது ஆட்சியில் சிக்கல். பதவிக்கு ஆபத்து வரும் சூழல் இருப்பதால் பணத்தை இன்னும் பத்திரப்படுத்த நினைக்கிறார் அமைச்சர். அவருடன் கூடவே இருக்கும் அல்லக்கையான கவிதாலயா கிருஷ்ணன், அந்தப் பணத்தை கொலம்பியா நாட்டில் இருக்கும் ஒரு வங்கியில் டெபாசிட் செய்ய ஐடியா கொடுக்கிறார்.
இதன்படி மலேசியாவிற்கு சென்று ஹவாலா பணத்தை வாங்கி, அதனை கொலம்பியா கொண்டு சென்று வங்கியில் டெபாசிட் செய்ய ஒரு பொறுப்பான நம்பிக்கையான ஆள் வேண்டும் என்று தேட, இதற்கு விச்சு விஸ்வநாத் கிடைக்கிறார். அமைச்சருக்கு நேரடி பழக்கமான பாலாஜி, விச்சுவை புக் செய்து மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்.
மலேசியா வந்த விச்சு ஹவாலா தொழிலை மறைமுகமாக செய்து வரும் மணி எக்சேஞ்ச் கடைக்குச் சென்று அசால்ட்டாக 20 கோடி ரூபாயை ஒரே பேக்கில் வைத்து தான் தங்கியிருக்கும் தனது தோழியின் வீட்டுக்கு கொண்டு செல்கிறார்.
அதே மலேசியாவில் தனது பூர்வீக வீடு கடன் தொல்லையால் ஜப்தியாகப் போகிறது என்பதால் அதைத் தடுப்பதற்காக கடத்தல், கொள்ளை, திருட்டில் ஈடுபடவும் தயங்காத எம்.எஸ்.பாஸ்கர், தனது பேரனான ஹீரோ அரவிந்தையும் இந்தக் கடத்தல் வேலைக்குள் ஈடுபடுத்துகிறார்.
இவர்களின் முதல் கடத்தல் சொதப்பலாகிறது. ஒரு பாரில் இருந்து பெரும் பணக்காரி என்று நினைத்து இவர்கள் கடத்தி வரும் அஷ்வதி, விடிந்ததும் இவர்களுடைய பொருட்களையே திருடிச் சென்றுவிடுகிறார்.
இன்னொரு பக்கம் விச்சு விஸ்வநாத்துக்கு உதவி செய்வதாக நடிக்கும் ஹீரோயின் சாந்தினி, முழு பணமும் கைக்கு கிடைத்தவுடன் சுருட்டுவதற்காக காத்திருக்கிறார்.
அரைவேக்காட்டுத்தனமான சிஷ்யனான யோகி பாபு, தனது பாஸான கல்யாணுடன் சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபடுகிறார். இவர்கள் 20 கோடி ரூபாயுடன் செல்லும் விச்சுவை பாலோ செய்து பணத்தைத் திருட எத்தனித்து தோல்வியடைகிறார்கள். ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் விச்சுவிடமிருக்கும் பணத்தைக் கையாடல் செய்ய துடியாய் துடிக்கிறார்கள்.
இந்த நேரம் விச்சுவை புக்கிங் செய்த பாலாஜி சென்னையில் ஒரு விபத்தில் சிக்கி கோமாவில் மூழ்கிவிட.. பணத்தை டிரான்ஸ்பர் செய்ய மலேசியாவுக்கு பாலாஜி யாரை அனுப்பியிருக்கிறார் என்பது தெரியாமல் அமைச்சர் முழிக்கிறார். இதற்காக அவர் ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜென்டை அணுகி அவனிடத்தில் விஷயத்தைச் சொல்லி அவனையும் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கிறார்.
இன்னும் சில நாட்களில் மீதமிருக்கும் 80 கோடியையும் ஹவாலா ஏஜென்ஸியிடமிருந்து பெற்று கொலம்பியா செல்ல திட்டம் தீட்டுகிறார் விச்சு. இந்த நேரத்தில் தன்னை சென்னையில் இருந்து அனுப்பி வைத்த பாலாஜி கோமாவில் மூழ்கிவிட்டதை அறிந்து மொத்தப் பணத்தையும் தானே ஆட்டையை போட எண்ணி திட்டம் தீட்டுகிறார். இதனால் ஒரு சேப்டிக்காக தன்னுடைய பாடிகார்டாக இருக்கும்படி ஹீரோ அரவிந்தை கேட்டுக் கொள்ள.. அவரும் சம்மதிக்கிறார்.
அதே நேரம் விச்சு விஸ்வநாத்திடமிருந்து அந்த 100 கோடியையும் சுருட்ட எம்.எஸ்.பாஸ்கர், அஷ்வதி டீம் ஒரு பக்கமும், சாந்தினி, யோகி பாபு, கல்யாண் கோஷ்டி இன்னொரு பக்கமும், தனியார் டிடெக்டிவ் ஏஜென்ட் மூன்றாவது பக்கமுமாக முட்டி மோதுகிறார்கள்.
கடைசியில் அந்த 100 கோடி ரூபாய் என்ன ஆனது..? யார் கையில் கிடைத்தது என்பதுதான் இந்த சுவாரஸ்யமான திரைக்கதையின் கிளைமாக்ஸ்.
படத்தின் மிகப் பெரிய பலமே நகைச்சுவையை மிளிர வைக்கும் வகையில் செய்திருக்கும் இயக்கம்தான். நகைச்சுவை கலந்த படத்தை இயக்கம் செய்வது அத்தனை சுலபமல்ல. அதிலும் முதல் படத்திலேயே அதனை செய்து காண்பித்திருக்கிறார் இயக்குநர் மேஜர் கெளதம். இவர், மேலும் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
இவருக்கு பக்க பலமாக இருந்து கை கொடுத்து உதவியிருக்கிறார் படத்தின் வசனகர்த்தாவான ராதாகிருஷ்ணன். சின்னத்திரையில் பல வருடங்களாக வசனம் எழுதிய அனுபவம் கொண்ட ராதாகிருஷ்ணன், திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக தனது சாதனைகளைத் தொடர்ந்து வருகிறார். அவருடைய வெற்றி திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது.
அத்தனை பேரையும் பிரித்து மேய்ந்தது போல இவர் எழுதியிருக்கும் டைமிங் வசனங்கள்தான் குபீர் சிரிப்பை வரவழைத்திருக்கின்றன. அதிலும் யோகிபாபுவும், எம்.எஸ்.பாஸ்கரும் ஒருவரையொருவர் வாரிவிட்டுக் கொள்ளும் காட்சிகளும், தங்களைப் பற்றி அவர்களை கொடுத்துக் கொள்ளும் பில்டப்புகளும், எம்.எஸ்.பாஸ்கரின் வழுக்கைத் தலையைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு எழுதப்பட்டிருக்கும் வசனங்களும்தான் படத்தின் சுவாரஸ்யங்கள்..! வெல்டன் ராதாகிருஷ்ணன்.
‘சென்னை-28’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் அரவிந்துக்கு இது தனிமையான ஹீரோ வேஷம்.  இதில் அதிகமாக கவனிக்க வைத்திருக்கிறார். அதேபோல் விச்சு விஸ்வநாத்துக்கும். சுந்தர்.சி.யின் ஆஸ்தான நடிகரான இவர் இந்தப் படத்தில்தான் அதிகமான காட்சிகளில் நடித்த பெருமையைப் பெற்றிருக்கிறார்.
சாந்தினி, அஷ்வதி இருவருக்குமே சம அளவுக்கான நடிப்புக்கான ஸ்கோப் படத்தில் இருக்கிறது. இருவருமே மிக அழகாக நடித்திருக்கிறார்கள். திருடி என்பதே தெரியாத அளவுக்கு அஷ்வதியும், வில்லி என்பதையே காட்டாத அளவுக்கு சாந்தினியும் படத்தை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்கள். அதிகமாக உடலை எக்ஸ்போஸ் செய்யாமல், கவர்ச்சி காட்டாமல் வெறுமனே நடிப்பினாலும், அழகினாலும் ரசிகர்களை கவர்கிறார்கள் இரண்டு ஹீரோயின்களும்..!
இதேபோல் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கரின் காமெடியும் சக்கை போடு போடுகிறது. எம்.எஸ்.பாஸ்கர் என்னும் நடிப்பு பல்கலைக்கழகத்திற்கு ஈடு கொடுத்து யோகி பாபு நடித்திருப்பதும், அவருடைய தனி ஸ்டைலான மாடுலேஷனும் தியேட்டரில் சிரிப்பலைகளை உருவாக்கியிருக்கின்றன.
அப்பாவியா, முட்டாளா என்கிற கேள்விக்கு விடையே கிடைக்காதது போல இருக்கும் யோகிபாபுவின் கேரக்டர் ஸ்கெட்ச் மிக, மிக சுவாரஸ்யமானதுதான். அவசர யுகத்திலும் முட்டாள்தனமாக பேசும் வசனம்.. அத்தனை டென்ஷனிலும் “அதென்ன..?” என்று கேட்டு பிரச்சனையை டைவர்ட் செய்யும்விதம் என்று யோகிபாபு இந்தப் படத்திற்காக கூடுதல் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
இந்தப் படத்தில் காட்டப்பட்ட ஒருவர்கூட நல்லவர் இல்லை என்பதுதான் படத்தின் மிகப் பெரிய பலம். அத்தனை திருடர்களையும் ஒன்றாகக் கூட்டி எண்ணிக்கையை பத்தாகக் காட்டியும் எதுவும் தவறாகப்படவில்லை என்பதுதான் இயக்குநருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.
அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவில் இதுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் பார்த்திராத பல மலேசிய இடங்களை காண்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றாற்போல் லொகேஷன்களை பார்த்து, பார்த்து படமாக்கியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளும் அழகுற படமாக்கப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்டுகள் எதிர்பாராதவை. ஆனால் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
திவாகர் சுப்ரமணியத்தின் இசையில் ‘கண்ல காச காட்டப்பா’ பாடலே தனியாக ஒலிக்கிறது. மற்றைய பாடல்களில் பாடல் வரிகள் காதிலேயே விழாமல் போனதுதான் துரதிருஷ்டவசமானது.
இத்தனை உழைத்தும், படத் தொகுப்பிலும், டப்பிங்கிலும் சில, பல தவறுகள் இருப்பது ஏற்புடையதாக இல்லை. இன்னும் கொஞ்சம் நிதானமாக சரி பார்த்து அனுப்பியிருக்கலாம். சில இடங்களில் பல வசனங்கள் சின்க் ஆகவே இல்லை. கட் செய்யப்பட்ட வசனங்கள் மியூட் செய்யப்படாமலேயே போயிருப்பதால் ஆங்காங்கே கட்டிங்குகள் தென்படுகின்றன. படத்தொகுப்பாளர் செல்வம் இந்தத் தவறுகளை எப்படி அனுமதித்தார் என்றே தெரியவில்லை. சரி செய்தால் நல்லது.
பக்கா கமர்ஷியல் படமாகவும், லாஜிக் ஏதும் பார்க்கவில்லையென்றால் கவலையை மறந்து சிரித்துவிட்டு வரலாம் என்று உறுதியாகச் சொல்ல வைத்திருக்கிறது இந்தப் படத்தின் மேக்கிங்.
இந்தக் காமெடியையும் தியேட்டருக்கு சென்று பாருங்களேன்..! நிச்சயம் பொழுது போகும்..!

1 comments:

dharma said...

அவர் பெயர் விஸ்வநாத்தா...இப்பதான் தெரியும்..என்னடா எல்லா சுந்தர் c படத்துல மட்டுமே வராருனு நினைச்சுகுவேன்