இருமுகன் - சினிமா விமர்சனம்

09-09-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘சியான்’ விக்ரம் இன்னமும் புதிது, புதிதாக வித்தையைக் காட்ட விரும்புகிறார். அதற்கான சரியான களம் கிடைக்கும்போது எதைப் பற்றியும் யோசிக்காமல் களம் இறங்கிவிடுகிறார். அப்படித்தான் இந்தப் படத்திலும் கால் வைத்திருக்கிறார்.
எதற்கு என்று கேட்காமல் அள்ளிக் கொடுக்கும் தயாரிப்பாளர்.. முதல் படம் கொடுத்த வெற்றியில் துடிப்புடன் இருக்கும் இயக்குநர்.. இப்படி இரண்டு பேர் கிடைத்திருக்கும்போது விக்ரம் தான் மட்டும் தயங்கி நின்றால் அது தனது கேரியருக்கு நல்லதல்ல என்பதால் சட்டென ஒத்துக் கொண்டுவிட்டார் போலும்..!
விஞ்ஞானபூர்வமான கதைகளை படமாக்கும்போது நிறைய செலவாகத்தான் செய்யும். அதற்கேற்றாற்போன்று நடிகர், நடிகையரை பிக்ஸ் செய்து பெரிய பட்ஜெட்டில் எடுத்தால் மட்டுமே இந்த விஞ்ஞான கதைகளெல்லாம் இங்கே ஓரளவுக்காவாவது பேசப்படும். இந்தப் படத்தையும் அது போலவே தங்களால் முடிந்த அளவுக்கு செலவு செய்து, இயக்கம் செய்து, நடிக்க வைத்து.. வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்..!
1940-களில் ஜெர்மன் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் ‘ஸ்பீட்’ என்னும் ஒரு புதுமையான மருந்தை தனது ஜெர்மானிய ராணுவ வீரர்களுக்கு வழங்கியிருக்கிறார். அந்த மருந்தை உட்கொண்டால் அவர் யானை பலம் கொண்டவராக.. பசி, தூக்கம், மழை, குளிர், வெப்பம் இதையெல்லாம் மறந்து கடுமையான சக்தி படைத்தவராக தோன்றுவார். ராணுவச் சேவையை அதிக நேரம் தொடர்ந்து செய்ய முடியும் என்று ஜெர்மன் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஏற்று இதனை அறிமுகப்படுத்தியுள்ளார் ஹிட்லர்.
இதனைப் பயன்படுத்தித்தான் இரண்டாவது உலகப் போரின் துவக்கக் காலத்தில் ஜெர்மனி, ஐரோப்பியா முழுவதையும் தனக்கு அடிமையாக்கியது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.  இந்த ‘ஸ்பீட்’ என்னும் மருந்துதான் இந்தப் படத்தின் மையக் கரு..!
நல்ல விஷயங்கள் அனைத்து நாடுகளுக்கும் பரவி இதன் மூலம் மனித குலம் செழித்தால் அனைவருக்குமே மகிழ்ச்சிதான். அதே நேரம் இந்த ‘ஸ்பீடு’ என்னும் மருந்தின் தாக்கம் பல நாடுகளுக்கும் பரவினால் மனிதர்களுக்குள் போர்க்குணம், பேய்க்குணமாக மாறி, உலகமே போர்க்களமாகிவிடும் என்று பயம் வருகிறதல்லவா..? இதைத்தான் இந்தப் படத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர்.

இந்தியாவின் அயல் நாட்டு உளவுத் துறை நிறுவனமான ‘ரா’-வில் அதிகாரியாகப் பணியாற்றியவர் அகிலன் என்னும் விக்ரம். சர்வதேச போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் ஒரு கும்பலை திட்டமிட்டு நிர்மூலமாக்குகிறார் விக்ரம். இதற்கு அதே உளவுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் மீரா என்னும் நயன்தாராவும் மீராவும் உதவுகிறார்.
விக்ரமும், நயன்தாராவும் காதலித்து திருமணத்திற்கு நெருங்குகிறார்கள். நேரமில்லை என்பதால் அவசரமாக தாங்கள் பணியில் இருக்கும் காஷ்மீரிலேயே கல்யாணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் செய்த 4 மணி நேரத்தில் நயன்தாரா யாரோ ஒருவரால் சுடப்பட்டு மலையுச்சியில் இருந்து கீழே விழுகிறார்.
இதனால் மனமுடைந்த விக்ரம் தனது அரசுப் பணியில் முழுமையாக ஈடுபாடு காட்ட முடியாமல் தவித்து வன்முறையாளனாக மாறி, இதன் பலனாய் பணியில் இருந்து சஸ்பெண்ட்டாகி வெளியேறுகிறார். இப்போது ஊர், ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் கோலாலாம்பூரில் இருக்கும் இந்திய தூதரகத்தில் வயதான நபர் ஒருவர் நுழைந்து செக்யூரிட்டிகளை கடுமையாகத் தாக்கியும், சுட்டுக் கொன்றும் தாக்குதலில் ஈடுபட்டு தானும் செத்துப் போகிறார்.
இது பற்றி இந்திய உளவுத் துறையான ‘ரா’ விசாரிக்கத் துவங்குகிறது. தாக்குதலில் ஈடுபட்ட பெரியவரின் பின்னங்கழுத்தில் ஒரு சிம்பல் பதியப்பட்டிருக்கிறது. “அது ‘லவ்’ என்கிற ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றின் சிம்பல்…” என்று சொல்லும் ‘ரா’ அமைப்பின் உயரதிகாரியான நாசர்.. இந்த வழக்கை விசாரிக்க விக்ரம்தான் சரியான நபர் என்று சொல்லி அவரை அழைத்து அவரிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறார். துணைக்கு அதே ‘ரா’ உளவுத் துறையில் கீழ் நிலை அதிகாரியாய் பணியில் சேர்ந்திருக்கும் நித்யா மேனனையும் விக்ரமுடன் கோர்த்துவிடுகிறார்.
மலேசிய தூதரகத்தில் சாகசம் செய்த அந்த வயதான நபர் மூச்சுவிட முடியாதவர்கள் பயன்படுத்தும் இன்ஹேலரை பயன்படுத்திய பின்புதான் வீரவேசம் கொண்டு செக்யூரிட்டிகளை சாய்க்கிறார். இது வீடியோவில் தெள்ளத் தெளிவாகத் தெரிய வர.. இதையே துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி மலேசியாவில் தனது துப்பறிதல் பணியைத் தொடர்கிறார் விக்ரம்.
இவருக்கு உதவி செய்வதற்காக மலேசிய போலீஸ் சூப்பிரண்ட்டெண்ட் தம்பி ராமையாவும் உடன் வருகிறார். மூவரும் இணைந்து என்ன செய்கிறார்கள்..?  உண்மையான குற்றவாளி யார்..? கண்டுபிடித்தார்களா..? இல்லையா..? என்பதெல்லாம் அவசியம் தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..!
‘அரிமா நம்பி’யை போலவே இந்தப் படத்திலும் கொஞ்சம் அதிகமாகவே தொழில் நுட்பத்தையும், விஞ்ஞான அறிவையும் கலந்து அடித்திருக்கிறார் இயக்குநர். வேதியியல் பாடத்தையும் அறிவியலின் அரிச்சுவடியையும் வசனத்தில் ஆங்காங்கே தொட்டுக் காண்பித்து இது வழக்கமான சினிமா அல்ல என்பதை நிரூபிக்க முனைந்திருக்கிறார் இயக்குநர்.
படத்தில் ஹீரோ, ஹீரோயின்களுக்கடுத்து பெரிய செலவு நிச்சயம் செட்டுகளுக்காகவே இருந்திருக்கும். அத்தனை செலவு செய்து காட்சிக்குக் காட்சி பிரமாண்டமாகவே இருக்க வேண்டும் என்பதை சொல்லிச் செய்திருக்கிறார் இயக்குநர். ’ரா’வின் அலுவலக உட்புறம்.. திருநங்கை விக்ரமின் விஞ்ஞானக் கூடம்.. கருணாகரனின் லேபரட்டரி.. மலேசிய போலீஸ் அலுவலகம்.. என்று பல காட்சிகளிலும் பணம் தண்ணீராய் பாய்ந்திருப்பதை காண முடிகிறது.
‘பிதாமகனா’ய், ‘அம்பி’யாய், ‘அந்நியனாய்’, ‘சேது’வாய், ‘கூனனாய்’ நடிக்க முடிந்த அனைத்துவித கேரக்டர்களிலும் மிச்சம் மீதி வைக்காமல் நடித்திருக்கும் விக்ரம், இந்தப் படத்தில் திருநங்கையாய் இன்னொரு கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார்.
ஹீரோ விக்ரமைவிடவும் வில்லன் விக்ரமே டாப் என்று விமர்சனங்கள் நிச்சயம் சொல்லவிருக்கின்றன. அந்த நளினம்.. கைகளை குவிக்கும் ஸ்டைல்.. விரல்கள் காட்டும் லயனம்.. முகம் காட்டும் நடிப்பு.. அவருடைய பாடி லாங்குவேஜில் ஒட்டு மொத்தமான நடிப்பையும் இறக்கி வைத்திருக்கிறார் விக்ரம்.
முகத்தில் எப்போதும் சோகத்தைக் காட்டியபடியே இருக்கும் விக்ரமுக்கும், சிரித்தே சாகடிக்கும் திருநங்கை விக்ரமுக்கும் ஏழு வித்தியாசங்களை நிறையவே காணலாம். ஆக்சன் காட்சிகளில் வழக்கம்போல தொழில் நுட்ப வசதிகளின் உதவியுடன் தப்பித்திருக்கிறார். ஆனால் ரொமான்ஸ்..? அதுக்கெல்லாம் நல்ல இயக்குநர் கிடைக்கணுமே..?
நயன்தாராவின் அழகெல்லாம் போயே போச்சு.. சிரித்தால்கூட முன்பு அழகு. இப்போது அமைதியாக இருந்தாலே போதும் என்றாகிவிட்டது. ரோஸியாக இருக்கும் நயன்ஸின் கெட்டப்பை பார்த்தவுடன் ஒரு ஜலீர் திகைப்பை உண்டாக்கியதால், திடுக்கிட வைத்த இடைவேளை கிடைக்க உதவியிருக்கிறார் நயன்ஸ். அவ்வளவுதான்..!
நித்யா மேனனுக்கு பெரிய லெவலுக்கான நடிப்பெல்லாம் இல்லை. ஆனால் அழுத்தமான வசன உச்சரிப்பினால் பல காட்சிகளில் தன்னை கவனிக்க வைத்திருக்கிறார்.  தம்பி ராமையா படத்தில் காமெடிக்காகவே திணித்திருக்கிறார்கள். பல இடங்களில் காமெடி போலீஸாகவே இருப்பதால் படத்தின் சீரியஸ்னெஸ் தெரியாமல்போக இவரும் உதவியிருக்கிறார்.
உருக்கத்துக்கு ரித்விகா, பேச்சுக்கு நாசர்.. என்று சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ் நன்றாகவே உழைத்திருக்கிறார்கள்.
நயன்ஸின் திடீரென்ற மன மாற்றம்.. தான் யார் என்று தெரிந்துவிட்டதை உணர்ந்து இத்தனை நாட்கள் அமைதி காத்ததாக சொல்வதும், அதற்கான திரைக்கதையின் நியாயமான வசனங்களும் ஏற்புடையதே..! நல்லதொரு திருப்பம்.. ஆனால் இதையெல்லாம் சொல்லிவிட்டு சட்டென்று, “எவ அவ.. உன்கூட ஒருத்தி வந்தாளே..? கல்யாணம் பண்ணிட்டியா..? இல்ல சும்மா சுத்திக்கிட்டிருக்கியா..?” என்று பக்கா லோக்கல் பாஷையில் கேட்பதெல்லாம் ரொம்பவே ஓவருங்கம்மா..! படத்தில் அதிக கைதட்டல் வாங்கியது இந்தக் காட்சிதான் என்பதையும் சொல்லியாக வேண்டும்..!
டிஸைன் டிஸைனான வேதியியல் வார்த்தைகள்.. அறிவியல்பூர்வமான செயல்பாடுகள்.. சிரிப்பூட்டும் வாயுவின் பணி, குளோராபார்மின் உதவி.. தோலில் பட்டால் எரியும் பாஸ்பரஸின் கொடுமை.. இன்ஹேலரின் உதவியோடு மூளையின் செயலை பன்மடங்காக்கும் வாயு.. இப்படி பலவற்றிலும் பொது அறிவை அநியாயத்துக்கு புகுத்தியிருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தினால் நமக்குக் கிடைத்திருக்கும் ஒரேயொரு ஆறுதல் இவைகள் மட்டும்தான்.
படத்தின் ஒளிப்பதிவும், சண்டை காட்சிகளும்தான் மிகப் பெரிய பலம். புத்ரஜெயா பாலத்தில் நடக்கும் சண்டை, திருநங்கை விக்ரமின் இடத்தில் நடிக்கும் சண்டை.. கிளைமாக்ஸில் நடைபெறும் பெரும் சண்டை அனைத்திலும் காதைக் கிழிக்கும் சப்தமாக இருந்தாலும் சண்டை பிரியர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.  தொழில் நுட்பம்தான் எத்தனை வீரியமாக வளர்ந்திருக்கிறது..?
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ‘ஹல்லோ’ பாடலும், காஷ்மீர் பாடலும்தான் பார்க்க முடிகிறது. பரபர திரைக்கதையில் இருக்கும்போது திடீரென்று இடையிடையே வரும் பாடல்கள் படத்திற்கு மிகப் பெரிய ஸ்பீடு பிரேக்கர்ஸ். இந்தக் காலத்துல பாட்டையெல்லாம் யார் கேட்டா..? 
வண்ணமயமான ஒளிப்பதிவில் மலேசியா, காஷ்மீரின் அழகையும் நயன்ஸ், நித்யாவின் அழகையும் ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். புவன் சீனிவாசனின் படத் தொகுப்பு சண்டை காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது.
இதெல்லாமே போதும் என்று நினைத்துவிட்டாரோ இயக்குநர்..?
மலேசிய காவல்துறையின் செயல்பாடுகளை இந்தப் படத்தில் பார்த்து முடிவு செய்தால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்களை காமெடியன்களாக  காட்டியிருக்கிறார்கள் இந்தப் படத்தில்.
கமர்ஷியல் சினிமாதான்.. திரைக்கதைதான் என்றாலும் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கொஞ்சம் உண்மைத்தனம் வேண்டாமா..? இப்படி ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டு அதிகாரிகள் நுழைந்து ஸ்பாட் விசாரணையே நடத்த முடியாது என்பது இயக்குநருக்கு ஏன் தெரியவில்லை..? அந்த நாட்டு போலீஸுக்கு நாம் உதவி செய்யலாமே ஒழிய.. நாமே நேரடியாக களத்தில் இறங்க முடியாது. ம்ஹூம்.. கூகிளாண்டவர் துணையிருக்கும் இந்தக் காலத்திலேயே இப்படியான திரைக்கதை என்றால் எப்படிங்க இயக்குநரே..?
அதிலும் தம்பி ராமையாவின் கேரக்டர் ஸ்கெட்ச் அநியாயமான வீணடிப்பு. இப்படியொரு போலீஸை தமிழ்நாட்டிலேயே பார்க்க முடியாது. பின்பு மலேசியாவில் எப்படி..? 2 நிமிடத்தில் வாயைத் திறக்க வைக்கிறேன் என்று சொல்லி குற்றஞ்சாட்டப்பட்டவரை விக்ரம் அடித்து உதைத்து, இந்தியாவின் தேர்ட் டிகிரி  முறையை அங்கேயும் செயல்படுத்திக் காண்பிப்பதில் யாருக்குப் பெருமை..?
நித்யா மேனனின் கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குநர். பணியோ ‘ரா’ உளவுத் துறையில். அவரோ மனிதம் பேசிக் கொண்டிருக்கிறார். முக்கியமான குற்றவாளியை பிடிக்க வந்த நேரத்தில், குண்டடிப்பட்ட ரித்விகாவை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போகவில்லையென்று விக்ரமிடம் சண்டைக்கு நிற்கிறார் நித்யா. இதெல்லாம் நடக்கிற காரியமா..? இப்படியொரு ஏஜெண்ட் ‘ரா’ உளவுத் துறையில் இருப்பாரா என்ன..?
தலையில் நெற்றிப் பொட்டில் குண்டு பாய்வதாகக் காட்டிவிட்டு, அப்படியும் நயன்ஸ் மூலிகைகளின் துணையோடு  உயிர் மீண்டார் என்பதெல்லாம் எந்தக் காலத்து கதை..? முடியற விஷயமா இயக்குநரே..?

தினமும் ஒரு புது பெண்ணை கேட்கும் கருணாகரன் மலேசியா போலீஸை பார்த்தும் பயப்படாமல் இருப்பது ஏனோ..? அதைவிட கொடுமையாக.. உடனுக்குடன் அப்ரூவர் ரேன்ஞ்சுக்கு மாறி விக்ரம் அண்ட் கோ-விடம் சரண்டராவதும் ஏன் என்று தெரியவில்லை..! இத்தனைக்கும் கருணாகரனின் அடியாட்களும் துப்பாக்கிச் சண்டையில் செத்துப் போகிறார்கள்.!

அந்த ‘ஸ்பீடு’ மருந்தை உட்கொண்டால் அடுத்த 2 மணி நேரத்துக்கு எழ முடியாது என்று முன்பே வசனத்தி்ன் மூலம் சொல்லிவிட்டு பின்பு விக்ரமே 2 நிமிடத்தில் கண் முழித்த நயன்தாராவின் அழைப்புக்கு ரெஸ்பான்ஸ் செய்வது போலவும், டிவைஸை வைத்து அனைவரையும் அழிப்பதெல்லாம் என்ன வகையான திரைக்கதை என்று தெரியவில்லை..!
‘லவ்’ குழுவினர் அனைவரையும் கட்டுப்படுத்தும் டிவைஸை திருநங்கை விக்ரம் கையில் எடுக்கும்போதே, நயன்ஸ் தன் துப்பாக்கியால் அதனை சுட்டு வீழ்த்த.. அது கீழே விழுந்து பொசுங்கிப் போவதையும் காட்டுகிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து அதே டிவைஸை ஆன் செய்ய வேண்டி திருநங்கை விக்ரமை தேடி வருகிறார் நித்யா மேனன். கடைசியில் இதை வைத்துத்தான் படத்தையே முடிக்கிறார் விக்ரம். எப்டிங்க இயக்குநரே..?
கடைசி காட்சியில் அந்த ‘ஸ்பீடு’ பற்றித்தான் பேச்சு போய் முடியும் என்று சாதாரண ரசிகனுக்கே தெரிந்த விஷயம். அதையேதான் நயன்ஸும், விக்ரமும் சுற்றி வளைத்து பேசி முடிக்கிறார்கள். அந்த ஸ்பீடை விக்ரம் உட்கொண்டால், நயன்தாரா தாங்குவாரா என்று சாதாரண ரசிகனே கேட்கிறான்.. இயக்குநர் என்ன பதில் சொல்வாரோ..?
இதற்கு முந்தைய விக்ரமின் தோல்விப் படங்களெல்லாம் கதையில்லாமல் வெற்று திரைக்கதையிலேயே திரைக்கு வந்த்தால்தான் தோல்வியடைந்தன. இந்தப் படம் நிச்சயமாக ‘ராஜபாட்டை’, ‘தாண்டவம்’, ‘10 எண்றதுக்குள்ள’ லிஸ்ட்டில் இல்லவே இல்லை. அவைகளைவிடவும் பரவாயில்லை என்று சொல்லலாம்.
ஆகவே, இருமுகனை – நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.