சொத்துக் குவிப்பில் கருணாநிதியையும் மிஞ்சிய ஜெயலலிதா..!

25-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வேட்பு மனு தாக்கல் துவங்கிவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களுடன் அவரவர் சொத்துப் பட்டியலையும் சேர்த்து வழங்கி வருகிறார்கள்.

இந்த வகையில் சென்ற 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆத்தா, தாத்தா இருவரின் சொத்துப் பட்டியலும் "கருணாநிதியை மிஞ்சிய ஜெயலலிதா" என்கிற இந்தப் பதிவில் உள்ளது. அதனை முதலில் படித்துக் கொள்ளவும்.

இதன் பின்பு இந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலின்போது அவர்கள் தாக்கல் செய்திருக்கும் சொத்துப் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்..!தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் சென்னை ராதாகிருஷ்ணா நகரில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

அந்த வேட்பு மனுவில் ஜெயலலிதாவிற்கு 118 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் அசையும் சொத்துகள் ரூ. 41. 63 கோடி எனவும், அசையா சொத்துக்கள் ரூ. 76. 95 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வேட்பு மனுவில் ஜெயலலிதாவிற்கு ரூ. 2.04 கோடி கடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அசையும் சொத்தின் மதிப்பு ரூ.41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395. அசையா சொத்தின் தற்போதைய மதிப்பு (போயஸ் கார்டன், மந்தைவெளி, தேனாம்பேட்டை, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள வணிக கட்டிங்கள், ஐதராபாத், காஞ்சீபுரத்தில் உள்ள விவசாய நிலங்கள் உள்பட) ரூ.72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190. அசையும் மற்றும் அசையா சொத்தின் மதிப்பு சேர்த்து ரூ.113 கோடியே 73 லட்சத்து 38 ஆயிரத்து 585 ஆகும்.

கையிருப்பு ரூ.41 ஆயிரம். 25 வங்கிகளில் டெபாசிட் தொகை ரூ.10 கோடியே 63 லட்சத்து 83 ஆயிரத்து 945. இதில், வழக்கில் முடக்கப்பட்ட தொகை ரூ.2 கோடியே 47 லட்சத்து 74 ஆயிரத்து 945. 5 நிறுவனங்களில் பங்கு முதலீடுகள் ரூ.27 கோடியே 44 லட்சத்து 55 ஆயிரத்து 450.
முடக்கப்பட்ட தங்கம் 21,280.300 கிராம். வெள்ளி பொருட்கள் 1250 கிலோ. இதில், ஒரு கிலோ 25 ஆயிரம் மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம். வங்கி கடன் ரூ.2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987.

ஜெயலலிதா கொடுத்துள்ள சொத்து மதிப்பில் 2 டோயோட்டா கார், 1980-ம் ஆண்டு அம்பாசிடர் கார், 1990-ம் ஆண்டு காண்டாஸாசா கார் என மொத்தம் உள்ள 9 கார்களின் மதிப்பு ரூ.42 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதில் அவர் குறிப்பிட்டுள்ள 1980 மாடல் அம்பாசிடர் காரை கடந்த 35 ஆண்டுகளாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா சென்ற 2015-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செயதபோது தனக்கு 117 கோடியே 13 லட்சத்து 89 ஆயிரத்து 637 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக ஜெயலலிதா. அதற்குப் பின்னர் கடந்த 11 மாதங்களில் அவரது சொத்து மதிப்பு 1 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 138 ரூபாய் அதிகரித்துள்ளது.

அதே சமயம் போன  2011 பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தனக்கு 51 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்திருருந்தார். அப்படிப் பார்த்தால் கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 67 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

இதேபோல் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருவாரூர் சட்டசபை தொகுதியில் போடடியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவோடு, பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளார். 

அதில் தனது பெயரிலும், தனது மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் பெயரிலும் உள்ள சொத்து மதிப்புகளை குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தாக்கல் செய்த சொத்துப் பட்டியலில் அசையும் சொத்துகள் 13 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 536 ரூபாய் என்றும், அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்றும், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ஏதும் இல்லை என்றும் கையில் உள்ள ரொக்கம் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தனது பெயரில் வீடு, வாகனங்கள் எதுவும் இல்லை எனவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

மனைவி தயாளு அம்மாள் பெயரில் கையில் உள்ள ரொக்கம் 10 ஆயிரம் என்றும், அசையும் சொத்தின் மதிப்பு 7 கோடியே 44 லட்சத்து 7 ஆயிரத்து 178 என்றும், அசையா சொத்தின் மதிப்பு 8 லட்சத்து 3 ஆயிரம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

துணைவியார் ராசாத்தி அம்மாள் பெயரில் கையில் உள்ள ரொக்கம் 56,850 ரூபாய் என்றும், அசையும் சொத்து 37 கோடியே 90 லட்சத்து 43 ஆயிரத்து 862 என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு 4 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு ராஜாத்தி அம்மாளுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய  கடனாக 11 கோடியே 94 லட்சத்து 37 ஆயிரத்து 427 ரூபாய் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பெருமூச்சு விடுவதைத் தவிர நம்மால் வேறொன்றும் செய்ய முடியாது..!

0 comments: