டார்லிங்-2 - சினிமா விமர்சனம்

03-04-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த வாரத்திய பேய்ப் பட வரிசையில் வெளியாகியிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று. ‘டார்லிங்’ படத்தின் அமோக வெற்றியினால் அதன் பாதிப்பிலேயே இந்தப் படத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். அதனால்தான் ‘டார்லிங்-2’ தலைப்பையும் கேட்டுப் பெற்றார்களாம்..!

கலையரசன், காளி வெங்கட், ரமீஸ், ‘ஜானி’ ஹரி, அர்ஜுன் ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். இதில் அர்ஜூனுக்கு திருமணமாகிவிட்டது. கலையரசனுக்கு அடுத்த வாரம் நிச்சயத்தார்த்தம். அதற்கு முன்பாக ஒரு டூர் போகலாம் என்று அனைவரும் நினைக்கிறார்கள். டூரிஸ்ட் ஸ்பாட்டாக வால்பாறையை தேர்வு செய்தவர்கள் அங்கே கிளம்புகிறார்கள்.
ரமீஸின் தம்பி ஒருவரும் இந்தக் கூட்டத்தில் ஒருத்தராக இருந்தவர். ஆனால் கொஞ்ச நாளைக்கு முன்பாக அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறார். இந்தச் சோகம் இந்த நண்பர்களுக்கு இன்னமும் இருக்கிறது.
அதே வால்பாறையில்தான் ரமீஸின் தம்பி காதலித்த பெண்ணான மாயாவும் இருந்தாள். அவளே இவர்களை வந்து சந்திக்கிறாள். சாப்பாடு கொண்டு வந்து தருகிறாள். திடீரென்று ரமீஸின் தம்பி ஆவியாக வந்து இந்தக் கூட்டத்தில் முக்கியப் புள்ளியான கலையரசனை பிடித்துக் கொள்கிறான்.
இன்றைய இரவுக்குள் கலையரசனை தான் கொலை செய்யப் போவதாக அவன் உடம்பில் இருக்கும் ஆவியே சொல்ல.. நண்பர்கள் அந்த ஆவியிடம் சிக்கித் தவிக்கிறார்கள். அந்த ஆவியிடமிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை..!
நிஜவாழ்க்கையில் தான் சந்தித்த சம்பவங்களை மையமாக வைத்தே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியதாக பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சதீஷ் சந்திரசேகர். நல்ல கதைக் கருதான். ஆனால் சொன்னவிதம்தான் நம்மை பயமுறுத்தவில்லை.
ஒருவரின் வாழ்க்கையில் விளையாட்டாக பேசப் போகும் விஷயம், நாமே எதிர்பார்க்காத விளைவை ஏற்படுத்தும் என்பார்கள். அந்த விளையாட்டு விபரீதமான கதைதான் இந்தப் படத்தின் முடிச்சு. ஆனால் பாருங்கள்.. அந்த முடிச்சை படம் முடியும் தருவாயில்தான் இயக்குநர் அவிழ்த்திருக்கிறார். இதனாலேயே சஸ்பென்ஸுக்கான எதிர்பார்ப்பே இல்லாத தருணத்தில் இது உணர்த்தப்படுவதால் தியேட்டரில் ரசிகர்களிடம் இது எடுபடவில்லை.
பேய்ப் படம் என்று சொல்லப்பட்டுவிட்டதால் அந்த எதிர்பார்ப்போடு, திகில், சஸ்பென்ஸ், திரில்லரை எதிர்பார்த்து வரும் ரசிகர்களை கொஞ்சமேனும் திருப்திப்படுத்தும் அளவுக்குத்தான் காட்சியமைப்புகள் இருக்கின்றன.
படத்தின் முதல் பாதியில் நண்பர்களிடையேயான கலாட்டாக்கள், ஜாலியான வாழ்க்கை என பயணித்தபடியே சஸ்பென்ஸ் திகிலைக் கூட்டியிருக்கிறார் இயக்குநர். கலையரசனின் உடலில் ஆவி புகுந்ததும்தான் திரைக்கதை கொஞ்சமேனும் சூடு பிடித்திருக்கிறது.
அந்தக் காதல் கதையை முன்னதாகவே உடைத்திருந்தால் ரசிகர்களுக்கு குழப்பமில்லாமல் இருந்திருக்கும். ஆவி கலையின் உடலில் இருக்கிறது என்பதையே சொல்லிவிட்ட பின்பு அதில் என்ன சஸ்பென்ஸையும், திகிலையும் காட்டவிட முடியும்..?
நண்பர்கள் அனைவருமே தங்களால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார்கள். அனைவரிலும் முன்னணியில் இருப்பவர் காளி வெங்கட்டுதான். ‘ஜானி’ ஹரியின் பேயை பார்த்து பயப்படும் நடிப்புக்கு ஈடு கொடுத்து கவுண்டர் அட்டாக் வைக்கும் காட்சிகளில் கொஞ்சமேனும் சிரிக்க வைத்திருக்கிறார் என்றால் அது காளியினால்தான். மேலும், இடையிடையே அர்ஜுனின் மனைவி மீதான பயமும், செல்போனை வைத்து மிரட்டியிருக்கும் காட்சிகளும் ரசிக்க்க் கூடியவையாக இருந்த்து.
முனீஸ்காந்தின் தர்ம அடி வாங்கியும் எதுவுமே நடக்காதது போன்ற நடிப்பும், மாயாவின் அழகும் கவர்ந்திழுக்கிறது.. கலையரசன் கிளைமாக்ஸில் சஸ்பென்ஸை உடைக்கும்போதுதான் நடித்திருக்கிறார். ஆனால் அந்த பீலிங் பார்வையாளர்க்குக் கிடைக்கவேயில்லை என்பதுதான் சோகம். மாயா கேரக்டர் பற்றியும், அதன் சஸ்பென்ஸ் பற்றியும் சொல்லுமிடம் பாராட்டுக்குரியதுதான். இதுபோல் படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் அட போட வைத்தும், பல இடங்களில் கொட்டாவிவிடவும் வைத்துவிட்டார்கள்.
இசையமைப்பாளர் ரதனின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம்.. பின்னணி இசையில் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார். ஊட்டி, வால்பாறையின் வெளிப்புறக் காட்சிகளை அழகுற படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன்.
‘டார்லிங்-2’ என்று பெயர் வைத்ததினால் முந்தின பெயருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகிறது.. வேறு வழியில்லை. ‘டார்லிங்கை’ அடித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

0 comments: