ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவரம் – 9

17-11-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



புதிய கட்டடங்களும் கூடுதல் கட்டுமானங்களும்...



ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 1991-96 காலகட்டத்தில் புதிய கட்டடங்களைக் கட்டியதாகவும் பழைய கட்டடங்களில் கூடுதல் வேலைப்பாடுகள் மற்றும் பராமரிப்பு செய்ததாகவும் அரசுத் தரப்பு ஆவணங்களைச் சமர்ப்பித்தது.

சிறுதாவூர் பங்களா, நீலாங்கரை பங்களா, பையனூர் பங்களா, போயஸ் கார்டன்  உள்பட 19 கட்டடங்கள் இந்தப் பட்டியலில் வருகின்றன. இப்படி ஜெயலலிதாவால் செய்யப்பட்ட மராமத்து  வேலைகளின் மதிப்பு அசையா சொத்து என்ற வகையில் அவருடைய சொத்துப் பட்டியலில் சேருகின்றன. அதன் மதிப்பு 28 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 430 ரூபாய் என்று அரசுத் தரப்பு மதிப்பிட்டுள்ளது. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு வைத்த எதிர்வாதங்கள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்து நீதிபதி குன்ஹா இறுதி முடிவாக எடுத்தது என்ன..? தீர்ப்பின் அந்தப் பகுதிகள் :

சிறுதாவூர் பங்களா

புதிய கட்டடங்கள் மற்றும் பழைய கட்டடங்களில் செய்யப்பட்ட கட்டுமானங்கள் பற்றி எழுந்துள்ள இந்தச் சர்ச்சையில், பொதுப்பணித் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் சொர்ணத்தின் சாட்சி முக்கியமானது.

  

கடந்த 1996-ம் ஆண்டு சொர்ணம், அவருடைய குழுவில் இடம் பெற்ற உதவி செயற்பொறியாளர் சிவலிங்கம், உதவிப் பொறியாளர்கள் சங்கர், செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர்(எலெக்ட்ரிசிட்டி) திருத்துவராஜ் மற்றும் செல்வராஜ் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை இந்தக் கட்டடங்களில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

மகாபலிபுரம் சாலையில் உள்ள சிறுதாவூர் பங்களாவையும் இவர்கள்தான் சோதனையிட்டுள்ளனர். அது பற்றி சொர்ணம் தனது சாட்சியில், 'சிறுதாவூர் பங்களா, நீச்சல் குளம், ஜெனரேட்டர் அறை, இரண்டு தண்ணீர் தொட்டி, மூன்று மோட்டார் அறைகள், ஊழியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட இரண்டு கட்டடங்களுடன் பிரமாண்டமாக இருந்தது.

பங்களாவின் உள்ளே இரண்டு வட்டக் கிணறுகள், மீன்கள் வளர்ப்பதற்கான 6 பெரிய தொட்டிகள் இருந்தன. மேலும் மெயின் ரோட்டில் இருந்து பங்களாவுக்குள் செல்ல சிறப்புச் சாலை அமைக்கப்பட்டிருந்தது. தரைத்தளம், முதல்தளம் என்று இரண்டு தளங்களைக் கொண்ட சிறுதாவூர் பங்களாவை ஆர்.சி.சி. பில்லர்ஸ் என்ற நிறுவனம் கட்டிக் கொடுத்துள்ளது. அந்த நிறுவனம் இதற்காக பூமிக்கடியில் மிகப் பெரிய அஸ்திவாரம் அமைத்து பில்லர்களை நிறுவி உள்ளது.

பங்களாவின் உள்ளே, தரைத் தளத்தில் ஆறு படுக்கை அறைகள், மிகப் பெரிய முகப்பு அறை, வரவேற்பறை, சாப்பாட்டு கூடம், சமையலறை, சேமிப்பு அறை, உணவுப் பண்டங்களைச் சேமித்து வைக்க தனியாக ஒரு அறை, கை கழுவ ஒரு அறை, பூஜை அறை ஆகியவை இருந்தன. மேலும், அங்கு பணியாற்றும் வேலைக்காரர்களுக்கான அறை ஒன்றும் பங்களாவின் உள்ளே இருந்தது.

பங்களாவின் தரைகளில் மார்பிள்கள் பதிக்கப்பட்டிருந்தன. கலைநயத்துடன் கூடிய வேலைப்பாடுகள்கொண்ட வெள்ளை மார்பிள்கள் சுவர்களில் பதிக்கப்பட்டு இருந்தன. மெட்டாலிக் மற்றும் செராமிக் டைல்ஸ்களால் அமைக்கப்பட்ட குளியலறை மற்றும் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கதவுகள் மற்றும் ஜன்னல்களால் அந்தப் பங்களா அமைக்கப்பட்டு இருந்தது. கதவுகளின் சட்டங்கள் இரும்புக் கம்பிகளால் உருவாக்கப்பட்டு இருந்தன. முதல் தளத்தில் பாத்டப் வடிவமைக்கப்பட்டு இருந்தன. ரூபி ரெட் கிரானைட் கற்களால் பால்கனி அழகூட்டப்பட்டு இருந்தன.

அந்தப் பங்களாவில் இருந்த மின் இணைப்புகளை எங்கள் குழுவில் இடம்பெற்ற திருத்துவ ராஜ் மற்றும் செல்வராஜ் ஆய்வு செய்தனர். இந்தச் சோதனைகள் அனைத்தும் அந்தப் பங்களாவின் உரிமையாளர் நியமித்த பொன்னுராஜ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றன. கட்டடத்தின் மதிப்பை அறிய அவர் முன்னிலையிலேயே, சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டன.

நாங்கள் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோதும்கூட பங்களாவின் உள்ளே கட்டுமான வேலைகள் கொஞ்சம் நடந்து கொண்டுதான் இருந்தன. எங்களுடைய மதிப்பீட்டின்படி அந்த பங்களா, 1995-ல் தொடங்கி 1996-ம் ஆண்டு முடிக்கப்பட்டு இருக்க வேண்டும்' என்று  சாட்சியத்தில் பதிவுசெய்து உள்ளார்.

பையனூர் பங்களா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பையனூர் பங்களாவையும் இதே குழு 1996-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆய்வு செய்தது. பங்களா உரிமையாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்ட பொன்னுராஜ் என்பவர் அந்தச் சோதனையின்போது உடன் இருந்துள்ளார். இவர்கள் சாட்சிப்படி, 'பையனூர் பங்களாவில் இருந்த தரைத்தளத்தில் இரண்டு படுக்கை அறைகள்,  வேலைக்காரர்களுக்கான ஓர் அறை இருந்தன. முதல் தளத்தில் மூன்று படுக்கை அறைகள் இருந்தன. தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்துக்குச் செல்ல  நகரும் மாடிப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.  தரைத்தளத்தில் இருந்து பார்த்தால் முதல் தளத்தின் கூரை தெரியும் வகையில் இந்த பங்களா மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருந்தது. அனைத்து தளங்களும் மார்பிள்களால் அமைக்கப்பட்டவை. தேக்கு மரத்தில் செய்யப்பட்ட கதவுகள் ஜன்னல்களைக் கொண்டிருந்தன.  இதன்படி அந்தப் பங்களாவின் மொத்த மதிப்பு ஒரு கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 ரூபாய்.



(இதுபோல் 19 கட்டடங்களில் நடந்த ஆய்வு, அவற்றில் இருந்த அறைகள், வசதிகள் போன்றவை தீர்ப்பு நகலில் விவரிக்கப்பட்டு உள்ளன.)

ஆனால், குறுக்கு விசாரணையில் இந்த சாட்சி, அலங்காரப் பொருள்கள் மற்றும் கிரானைட் போன்ற பொருள்களை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டு, அதன் பிறகு சென்னை கோயம்பேட்டில் நூறு அடி சாலையில் உள்ள ஒரு கடையில் விலை விசாரித்து மதிப்பீடு தயாரித்ததாக சொல்லி உள்ளார். ஆனால், அதன் பிறகு அலங்காரப் பொருள்கள் பற்றி குறித்து வைத்திருந்த பேப்பரை கிழித்துவிட்டதாகவும் சொல்லி உள்ளார்.

ஆனால், திருத்துவராஜ் மற்றும் செல்வராஜ் ஆகியோர் தங்களின் மதிப்பீடு முடிந்ததும் அவற்றில் தங்கள் கையெழுத்திட்டு சொர்ணத்திடம் கொடுத்ததாகவே குறுக்கு விசாரணையில் தெளிவுபடுத்தி உள்ளனர்.

''ஜெயலலிதாதான் செலவு செய்தாரா?''

இந்த சாட்சிகளின் வாக்குமூலத்தை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார், சில வாதங்களை முன் வைக்கிறார். அதாவது, அரசுத் தரப்பு அளித்துள்ள மதிப்பீட்டு அறிக்கையில், கட்டடத்தின் அளவு பற்றிய தெளிவான புரிதலும், அறிவும் இல்லை. கட்டடத்தின் வயதையும் அவை கட்டப்பட்ட வருடத்தையும் அறிந்து கொள்ள அறிவியல்பூர்வமான ஆய்வு எதையும் அரசுத் தரப்பு மேற்கொள்ளவில்லை.

பொதுப்பணித் துறையிடம் விலைப் பட்டியல் இல்லாத பொருள்கள் மற்றும் கட்டடத்தில் இருந்த கட்டுமானங்கள் பற்றி அளிக்கப்பட்டுள்ள விலைப் பட்டியல் சந்தைகளில் கேட்டு அறிந்த மதிப்பிடப்பட்டதாக அரசுத் தரப்பு சொல்லி உள்ளது. ஆனால், அவை எல்லாம் 1991-96 வரையிலான விலைதான் என்பதற்கான உரிய ஆவணங்களை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. பொதுப்பணித்துறையின் விலைப் பட்டியல்படி கட்டடத்தின் செங்கல் மணல் போன்ற விலைகள் மதிப்பிடப்பட்டதாக அரசுத் தரப்பு சொல்கிறது. ஆனால், பொதுப்பணித் துறையின் விலைப் பட்டியல் புத்தகத்தை அவர்கள் தங்கள் அறிக்கையுடன் இணைக்கவில்லை.

இந்த மதிப்பீடுகள் அனைத்தும் 1996 அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குள் செய்யப்பட்டவை. கட்டடம் கட்டப்பட்டபோது பார்த்தவர்களோ, அது தொடர்பான பொறியாளர்களோ, வடிவமைப்பாளர்களோ இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இந்தக் கட்டடங்களுக்கான செலவுகளை ஜெயலலிதாதான் செய்தார் என்பதற்கும் எந்த ஆதாரங்களையும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லைஎன்று சொல்லி உள்ளார்.

''அனைத்துக் கட்டடங்களும் அவர்களுடையவைதான்!''

இந்த வாதங்களை எல்லாம் இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. இப்போது இரண்டு தரப்பு ஆவணங்களையும் வாதங்களையும் கவனமாகப் பரிசீலித்து நாம் முடிவுக்கு வரவேண்டும்.

ஜெயலலிதா தரப்பால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சி போர்செல்வம், தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றுவதாகவும், மணிமேகலை என்பவர்  பையனூர் பங்களாவுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் கொடுத்ததாகவும் தன்னுடைய சாட்சியில் சொல்லி உள்ளார்.

அதாவது பையனூர் பங்களா, ஜெயலலிதாவுக்கோ, சசிகலாவுக்கோ சொந்தமானது அல்ல என்று நிரூபிக்கும் பொருட்டு இந்தச் சாட்சியை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தி உள்ளனர். மணிமேகலை, மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார் என்பதற்கு ஆதாரமாக ஒரு ஜெராக்ஸ் நகலைக்கொண்டு வந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனர். ஜெராக்ஸ் நகல்களை எந்த நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளாது. இருந்தபோதிலும் மணிமேகலை சமர்ப்பித்த ஜெராக்ஸ் நகலையும் இந்த நீதிமன்றம் பரிசீலித்தது.

அதில், அவர் எந்த வீட்டுக்கு விண்ணப்பித்தார் என்ற விவரம் இல்லை. இது தொடர்பாக மின்சார வாரியத்திடமும் எந்த விதமான ஆவணங்களும் இல்லை. மேலும், இதில் இவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

அரசுத் தரப்பு வழக்கில், கட்டடங்கள் அனைத்தும் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானவைதான் என்பது பத்திரப் பதிவு ஆவணங்கள் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கங்கை அமரனின் சாட்சி, பையனூர் பங்களாவை தன்னிடம் இருந்து வாங்கியது சசிகலாதான் என்று சொல்லி ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.  

அவர் தன்னுடைய சாட்சியில், 'பையனூரில் கதை எழுதுவதற்காகவும் பாடல்களை கம்போசிங் செய்வதற்காகவும் தான் வைத்திருந்த பண்ணை வீட்டுக்கு ஒரு நாள் சுதாகரன் வந்தார். தன்னை ஜெயலலிதா பார்க்க வேண்டும் என்று சொன்னதாக போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு நான் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. சசிகலாதான் தன்னைப் பார்த்து பேசினார். பையனூர் வீட்டைக் கேட்டார். ஆனால், அதை நான் விற்பதற்குத் தயாராக இல்லை என்றேன். ஆனால், மறுநாள் என்னுடைய வீட்டுக்குப் பத்திரப் பதிவாளர்களுடன் வந்து அந்த வீட்டை எழுதி வாங்கிக்கொண்டனர்எனச் சொல்லி உள்ளார். மேலும், அந்தப் பத்திரத்தில் வாங்குபவரின் பெயர் குறிப்பிடாமல் வெறுமனே காலியாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால். அதன் பிறகு சில காலம் கழித்து அந்தப் பங்களா சசிகலாவின் பெயரில் பதிவாகி இருப்பதைத் தான் பத்திரப் பதிவு அலுவலகம் மூலம் அறிந்து கொண்டதாகச் சொல்லியுள்ளார். அதற்கான ஆவணங்களை அரசுத் தரப்பே நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டது. இதேபாணியில்தான், இந்த சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பது உரிய சாட்சிகளின் மூலம் நிருபிக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா இந்தக் கட்டடங்களுக்கு செலவழித்தாரா? இல்லையா? என்பதைவிட இந்தச் சொத்துகள் அவர் அனுபவத்தில் உள்ளதா, இல்லையா என்பதுதான் வழக்கு. அதன்படி பார்த்தால், இவை எல்லாம் அவருடைய அனுபவத்தில்தான் உள்ளன.

''தற்காத்துக் கொள்ளும் ஆவணங்கள் இல்லை!''

அதுபோல்,  அரசுத் தரப்பைப் பொறுத்தவரை கட்டடங்களுக்கான செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களைப் பொதுப்பணித் துறையின் விலையில் கணக்கிட்டுள்ளனர். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், பொதுப்பணித் துறையிடம் விலைப் பட்டியல் இல்லாத கிரானைட், மார்பிள், தேக்கு போன்ற பொருள்களைச் சந்தை விலையில் கணக்கிட்டுள்ளனர். அதுவும் 1999-ம் ஆண்டு விலையில் கணக்கிட்டுள்ளனர். அதுதான் உண்மையான விலை என்று அவர்கள் நிரூபிக்க முயல்கின்றனர். ஆனால், அதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை. ஆனால், அதேசமயம் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள எந்த ஆவணங்களையும் இந்த நீதிமன்றத்தில் அளிக்கவில்லை. இந்த கட்டடங்கள் இந்த விலையில்தான் கட்டப்பட்டன. அவற்றில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகளின் மதிப்பு இவ்வளவுதான் என்பதை ஆணித்தரமாகச் சொல்லி, அதற்கு ஆவணங்களைச் சமர்ப்பித்து தங்களை தற்காத்துக் கொள்ளமுடியவில்லை.

எனவே, அரசுத் தரப்பு மற்றும் எதிர்த் தரப்பு ஆகியவற்றில் உள்ள இந்தக் குறைபாடுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, அரசுத் தரப்பின் மதிப்பீட்டில் 20 சதவிகிதத்தை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. அதன்படி இந்தக் கட்டடங்களின் மதிப்பு 22 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரத்து 344 ரூபாய் என்று எடுத்துக்கொள்கிறது.''

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு எதிராக அரசுத் தரப்பு வைத்த வாதங்கள் ஆவணங்களின் அடிப்படையில் வலுவாக இருந்தன. அதை பரிசீலித்தே நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பை வழங்கினார்.
அதேசமயம், அரசுத் தரப்பு சார்பில் வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாத நிலையில், அவற்றை ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத் தள்ளுபடி செய்யவும் தயங்கவில்லை.

அது பற்றி அடுத்த இதழில்...


ஜோ.ஸ்டாலின்

நன்றி : ஜூனியர் விகடன்


1 comments:

ராஜரத்தினம் said...

அவர் சொக்கதங்கம்தான் சார். அப்ப அநியாயமா அந்த நியாயம் மத்தவங்களுக்குலாம் கிடைக்க கூடாதுன்னு அவரை திருப்பி ஹை கோர்ட் பதிவாளரா ஆக்கிட்டாங்களாம். இதை எதிர்த்து உங்க கூட்டத்தில யாராவது ஒரு ரிட் போடுங்க சார்.