ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவரம் – 10

17-11-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


''சேலைகளையும் செருப்புகளையும் தள்ளுபடி செய்கிறேன்!'' 

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பில், மிக முக்கியமான குற்றச்சாட்டுகளைக் கவனமாகப் பரிசீலித்து, அவர் நிறுவியவிதம் பற்றி இதுவரை விரிவாகப் பார்த்தோம். இந்தத் தீர்ப்பில், அரசுத் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்களை நீதிபதி குன்ஹாஅப்படியே ஏற்றுக்கொள்ளவும் இல்லை; ஜெயலலிதாவுக்கு எதிராக அரசுத்தரப்பு சமர்ப்பித்த சில ஆவணங்கள் முறையாக இல்லாதபோது, அவற்றை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும் அவர் தயங்கவில்லை. அது பற்றிய அவருடைய தீர்ப்பு...

சேலைகளின் மதிப்பை தள்ளுபடி செய்கிறேன்!

''ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தியபோது, அங்கு 914 பட்டுச் சேலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் மதிப்பு 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல 6,195 சாதாரண சேலைகளின் மதிப்பு 27 லட்சத்து 8 ஆயிரத்து 720 ரூபாய் என்றும், மேலும் பழைய சேலைகள் மற்றும் இதர உடைகளின் மதிப்பு 4 லட்சத்து 21 ஆயிரத்து 870 ரூபாய் என்றும் அரசுத்தரப்பு மதிப்பிட்டுள்ளது. இந்த விலை மதிப்பீட்டை கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் செங்கல்வராயன் செய்துள்ளார்.

ஆனால், ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து சேலைகளைப் பறிமுதல் செய்தபோது, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் அங்கு இல்லை. அவற்றின் மதிப்பைக் கணக்கிட்டபோதும், குற்றம்சாட்டப்பட்டவரோ, அவர்கள் தரப்பினரோ அந்த இடத்தில் இல்லை.

மேலும் ஜெயலலிதா, இந்தச் சேலைகளை 1991 - 96 காலகட்டத்தில்தான் வாங்கினார் என்பதற்கோ, யாரிடமிருந்து வாங்கினார் என்பதற்கோ எந்த ஆவணங்களையும் அரசுத் தரப்பு சமர்ப்பிக்கவில்லை. மேலும், அத்துடன் 1988, 1993, 1995 வாக்காளர் பட்டியலை பரிசோதித்தபோது, போயஸ் கார்டன் வீட்டில் 32 பேர் வசித்துள்ளது தெரிகிறது. அவர்கள் யாரும் இந்தச் சேலைகள் அனைத்தும் ஜெயலலிதாவுடையது என்று சொல்லவில்லை.  மேலும், இந்தச் சேலைகளை தங்களுடையவை என்று உரிமை கொண்டாடியும் யாரும் வரவில்லை.

அத்துடன் ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பே புகழ் பெற்ற திரைப்பட நடிகையாக இருந்தவர். அந்தத் துறையில் இருப்பவர்கள் எப்போதும் விலை உயர்ந்த ஆடைகளை அணிவார்கள் என்பதையும் மற்றவர்களைவிட ரசனையுடன் கூடிய உடைகளை அதிகளவில் வைத்திருப்பார்கள் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.

இந்தச் சேலைகள், அந்தக் காலகட்டத்தில் இருந்தே அவர் வைத்திருந்தவையா? அல்லது முதலமைச்சராக இருந்த 1991-96 காலகட்டத்தில்தான் வாங்கப்பட்டவையா என்பதற்கு எந்த முறையான ஆவணங்களையும் இரு தரப்பும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
எனவே, சேலைகளின் மதிப்பாக கணக்கிடப்பட்டுள்ள 92 லட்சத்து 44 ஆயிரத்து 290 ரூபாயை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வழக்கில் இருந்து இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.''

செருப்புகளின் விலையையும் தள்ளுபடி செய்கிறேன்!

''ஜெயலலிதாவின் இல்லத்தில் இருந்து 389 ஜோடி செருப்புகளை அரசுத் தரப்பு கைப்பற்றி அதன் மதிப்பாக இரண்டு லட்சத்து 902 ரூபாய் என்று கணக்கிட்டுள்ளது. தமிழ்நாடு தோல் மேம்பாட்டுத் துறையில் தரக் கட்டுப்பாட்டாளராகப் பணிபுரியும் ஜெரால்டு வில்சன் என்பவர் செருப்புகளின் விலையை மதிப்பீடு செய்துள்ளார்.

386 ஜோடி செருப்புகளுடன் அங்கு ஒற்றைச் செருப்புகளாக இருந்த 26 செருப்புகளுக்கும் தனியாக விலை கணக்கிடப்பட்டு உள்ளது. அதுவும் 26 ஒற்றைச் செருப்புகளை ஜோடிச் செருப்புகள் விலையில் கணக்கிட்டுள்ளனர். இதை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கடுமையாக ஆட்சேபித்துள்ளார். அத்துடன் அரசுத் தரப்பு கணக்குக் காட்டி உள்ள இந்தச் செருப்புகளில் ஆண்களின் செருப்புகள், விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பூட்ஸ்களும் உள்ளன. இவற்றை ஜெயலலிதா யாருக்காக வாங்கினார் என்பதை அரசுத் தரப்பால் நிரூபிக்க முடியவில்லை.

மேலும், 1991-96 காலகட்டத்தில்தான் இவை வாங்கப்பட்டவை என்பதற்கும் அரசுத்தரப்பு சரியான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை. அத்துடன், 26 ஒற்றைச் செருப்புகளையும் ஜோடி செருப்புகளின் விலையில் கணக்கிட்டுள்ளதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில், செருப்புகளின் விலையை ஜெயலலிதாவின் சொத்து மதிப்பாக எந்தவகையிலும் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, அதையும் இந்த நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத் தள்ளுபடி செய்கிறது.''

34 டைட்டன் கடிகாரங்கள்

''சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள டைட்டன் கடிகாரம் விற்பனை மையத்தின் உரிமையாளரான சஞ்சய் ஜெயின் தன்னுடைய சாட்சியில், 'எனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜவஹர் பாபு நன்கு அறிமுகம். அவர் ஒரு நாள் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு 34 டைட்டன் கடிகாரங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். முதலமைச்சர் வீட்டுத் திருமணத்துக்காக அவற்றை வாங்குவதாகத் தெரிவித்தார். மேலும் அதற்கான தொகையை ரொக்கமாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 565 ரூபாய் கொடுத்தார்என்றும் சொல்லியுள்ளார்.

ஆனால், குறுக்கு விசாரணையில் தன்னிடம் கடிகாரங்களை வாங்கிக் கொண்டு அதற்குப் பணம் கொடுத்தவர் யார் என்று தனக்கு அடையாளம் தெரியாது என்று சொல்லியுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜவஹர் பாபு தன்னுடைய சாட்சியத்தில், சஞ்சய் ஜெயினை தனக்கு முன் பின் தெரியாது என்றே சொல்லியுள்ளார். இதனை அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நேரில் கடைக்குப்போய் ரொக்கமாகப் பணம் கொடுத்து 34 கடிகாரங்களை வாங்கினார்; அதுவும் முதலமைச்சர் வீட்டுத் திருமணத்துக்காக வாங்கினார் என்று சொல்வதும் நம்பும்படியாக இல்லை. இந்தத் தொகையை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது''

- இது போன்று பல இடங்களில் ஜெயலலிதா தரப்பின் நியாயத்தை ஏற்றுக் கொள்ளவும், அரசுத் தரப்பு ஆவணங்களில் இருந்த ஓட்டைகளை சுட்டிக் காட்டவும் செய்துள்ளார் நீதிபதி குன்ஹா.

அடிப்படையே ஆறு பாயின்டுகள்தான்!

ஒட்டு மொத்தமாக இந்த வழக்கையே 6 பாயின்டுகளை முன்வைத்து ஜெயலலிதா தரப்பு கேள்விக்குள்ளாக்கியது. ஆனால், தன்னுடைய தீர்ப்பின் ஆரம்பத்திலேயே 60 பக்கங்களில் அவற்றுக்கு விளக்கம் அளித்து, இந்த வழக்கு சரியான முறையில் தொடுக்கப்பட்டு சரியான முறையில் நடத்தப்பட்டது என்பதையும் விளக்கி உள்ளார். அந்த ஆறு பாயின்டுகளும் அதற்கு குன்ஹா அளித்துள்ள விளக்கமும் இதோ...

1. வழக்குக்கு அனுமதி அளித்தது  சட்டப்படி செல்லாது.

பொது ஊழியர் மீது வழக்குத் தொடுக்க மாநில ஆளுநர் அனுமதி கொடுத்தது செல்லாது என்பது ஜெயலலிதா தரப்பு வாதம். இந்த வாதத்தின் அடிப்படையில் ஜெயலலிதா தரப்பு செய்த முறையீட்டில், தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், 'கவர்னர் அளித்த அனுமதி வெறுமனே அவருடைய சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க ஆவணங்களின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பில், 'உரிய ஆவணங்கள் இருக்கும்போது, மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு சட்டப்படியானதுதான்.

2. வழக்குப்பதிவு செய்தது மற்றும் விசாரணை நடத்தியது சட்டத்துக்கு உட்பட்டதே..

ஜெயலலிதா தரப்பு, சொத்துக் குவிப்பு வழக்கில் எஃப்.ஐ.ஆர் போட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி வி.சி.பெருமாள் எந்தக் காவல் நிலையத்திலும் பணியாற்றவில்லை. எனவே, அவர் இதில் எஃப்.ஐ.ஆர் போட்டதும், விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடுவுக்கு உத்தரவிட்டதும் செல்லாது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமிழக அரசாங்கம் பிறப்பித்த அரசாணை எண். எம்.எஸ். 963 லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தை காவல் நிலையமாக அறிவித்துள்ளது. அங்கு பணியாற்றும் ஆய்வாளர் தகுதியில் உள்ள அதிகாரிக்கு காவல் துறை ஆய்வாளருக்கான அதிகாரத்தையும் வழங்குகிறது. அதன்படி, அவர் ஒருவரை கைது செய்யவும் விசாரணை நடத்தவும் தகுதி உடையவர் என்றும் அந்த அரசு ஆணை தெரிவிக்கிறது. மேலும் குற்றவாளிகளிடம் இருந்து ஆவணங்களைக் கைப்பற்ற விசாரணை அமைப்புக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அந்த அடிப்படையில்தான், இந்த வழக்கில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் எந்த சட்டவிரோதமும் இல்லை.

3. நல்லம்ம நாயுடுவுக்கு அதிகாரம் உண்டு!

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் வி.சி.பெருமாள், தன்னுடைய சாட்சியத்தில், 'நான் இந்த வழக்கை விசாரிக்க ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17 மற்றும் 18-ன்படி 12 அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தேன். ஆனால், நல்லம்ம நாயுடுவுக்கு நான் தனியாக எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லைஎன்று குறிப்பிட்டார். அதனை ஜெயலலிதா தரப்பு பயன்படுத்தி, 'நல்லம்ம நாயுடு இந்த வழக்கை விசாரித்ததே செல்லாதுஎன்று குறிப்பிட்டது. 'நீதிமன்ற உத்தரவுப்படிதான் நல்லம நாயுடு நியமிக்கப்பட்டார். எனவே வழக்கை நல்லம்ம நாயுடு விசாரித்ததில் எந்த அதிகார மீறலும் இல்லை.

4. வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் சரியானதே..

ஜெயலலிதா மட்டும்தான் பொது ஊழியர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பொது ஊழியர்கள் அல்ல. அவர்கள் பெயரில் உள்ள நிறுவனங்கள் சம்பாதித்த சொத்துகளும், பொது ஊழியரான ஜெயலலிதா தலையில் மொத்தமாகக் கட்டப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஜெ. தரப்பு கூறியது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்திலும் இயக்குநர்களாகவோ, பங்குதாரர்களாகவோ இருந்த நிறுவனங்களின் பின்னணியில் ஜெயலலிதா இருந்துள்ளார். தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டோம் என்றோ, தவறான பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றோ குற்றவாளிகள் எப்போதும் புகார் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்குப் பதிவு செல்லும்.

5. சொத்துகளை இணைத்தல்

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், இந்த வழக்கில் ஏராளமான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சொத்துகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளாகத் தவறாக இணைக்கப்பட்டுள்ளன என்று சொன்னார். ஆனால், இணைக்கப்பட்ட நிறுவனங்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இருந்ததும், அவர்கள் ஜெயலலிதாவுக்காக அதில் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் தவறாக சொத்துகள் இணைக்கப்பட்டுள்ளன என்ற வாதத்தை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.

6. அரசியல் பழிவாங்கல்

ஜெயலலிதா மீதான இந்த வழக்கு அரசியல் பழிவாங்கல் அடிப்படையில் அவருடைய அரசியல் எதிரிகளால் தொடுக்கப்பட்டது என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை, இதே மனுதாரர்கள் உச்ச நீதிமன்றம் கொண்டு சென்றபோது, அது அங்கு தள்ளுபடியாகிவிட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தில், 'ஜனநாயகத்தில் எதிர்க் கட்சிகளுக்கு சட்டமன்றத்தைத் தாண்டியும் பல பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. அந்த வகையில் ஆள்பவர்களும், அரசாங்கமும் தவறான பாதையில் போகும்போது அதை மக்களிடம் தெரிவிக்கவும் அதைத் தடுப்பதற்கான வேலைகளில் இறங்கவும் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளது. அந்த வகையில் ஜெயலலிதா தரப்பின் அந்த வாதத்தையும் இந்த நீதிமன்றம் நிராகரிக்கிறது'' என்றார்.

தீர்ப்பு நிறைந்தது.

- ஜோ.ஸ்டாலின்


நன்றி : ஜூனியர்விகடன்

0 comments: