ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு - குன்ஹா தீர்ப்பு விவரம் - 4

15-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சிவாஜி வீட்டு சீதனம் தையல் கூலி மட்டும்தான்...!

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம் பற்றி சாட்சிகள் நீதிமன்றத்தில் பதிவுசெய்த வாக்குமூலங்களையும் 'அந்தத் திருமணத்துக்கு நான் எந்தச் செலவுகளையும் செய்யவில்லை’ என்ற ஜெயலலிதா, ஆதாரங்களுக்கு முன் எப்படி மௌனமாகிப் போனார் என்பதையும் கடந்த இதழில் பார்த்தோம்.

அந்தத் திருமணம் பற்றி ஜெயலலிதாவும் சிவாஜி கணேசனின் குடும்பத்தினரும் சொன்ன, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா விளக்கிய விதம் பற்றிப் பார்ப்போம்.



என் இதயபூர்வமான நன்றிகள்

''என் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனுக்கும் சத்தியலட்சுமிக்கும் 7.5.1995 அன்று நடைபெற்ற திருமணம் மற்றும் 06.05.1995 அன்று நடைபெற்ற மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில் நேரிலும் வாழ்த்துகள் அனுப்பியும் சிறப்பித்த ஒவ்வொருவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்... உங்கள் மீது கொண்டுள்ள அன்பு மற்றும் பாசத்தால் உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரிவிக்கும் நன்றியாக ஏற்கவும்.''

- ஜெ.ஜெயலலிதா

தமிழ்நாடு முதலமைச்சர்,

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர்.

- இது சுதாகரனின் திருமணம் நடந்து முடிந்த பிறகு பத்திரிகையில் ஜெயலலிதா கொடுத்த நன்றி அறிவிப்பு விளம்பரம். அரசுத் தரப்பு சாட்சியான தினத்தந்தி நாளிதழின் மூத்த விளம்பர மேலாளர் சுந்தரேசன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. தினத்தந்தி நாளிதழின் அனைத்துப் பதிப்புகளிலும் 11.09.1995 அன்று இந்த விளம்பரம் வெளியானது என்பதையும் சுந்தரேசனின் சாட்சி உறுதிப்படுத்தி உள்ளது. அவருடைய கூற்றை அரசுத் தரப்பு அந்த நாளில் வெளியான தினத்தந்தி நாளிதழ்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உறுதிப்படுத்தியுள்ளது. 

இதற்கான கட்டணமாக இரண்டு லட்சத்து 47 ஆயிரத்து 660 ரூபாய் ராக் ஆர்ட்ஸ் என்ற விளம்பர நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. குறுக்கு விசாரணையில், இது அரசாங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரம் இல்லை என்பது தெளிவாகி உள்ளது. இந்த விளம்பரம் ஆளும் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது நல்ல நகைச்சுவை. 

இது தொடர்பாக போலீஸுக்கு சுந்தரேசன் கொடுத்த பில்லில் தமிழ்நாடு முதலமைச்சர் என்பதற்குக் கீழே, அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்று அச்சடிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதே சமயம் அரசாங்கம் சார்பில் கொடுக்கப்படும் விளம்பரங்களில் கட்சியின் பெயரோ, கட்சியில் அவர் வகிக்கும் பொறுப்போ இடம் பெறாது என்றும் ஒப்புக்கொண்டு உள்ளார்.''

'கையும் கணக்குகளுமாகச் சிக்கிய ஆடிட்டர்!’

''அரசுத் தரப்பு சாட்சி ஆடிட்டர் ராஜசேகரன், இந்த வழக்கில் மிக முக்கியமான சாட்சி. இவர் ஜெயலலிதாவுக்கு 84-85, 96-97 ஆண்டுகளில் வருமானவரி, சொத்து வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்தவர். ஊழல் தடுப்பு போலீஸார் ராஜசேகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியபோது ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றினர். அப்போது, என்னென்ன கைப்பற்றப்பட்டன என்ற மகஜரில் ராஜசேகரன் கையெழுத்துப் போட்டுக்கொடுத்துள்ள பகுதி முக்கியமானது. 

அதில், 1996 அக்டோபர் 17-ம் தேதி, காலை 11.30 மணியில் இருந்து மதியம் 4.00 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் என்னுடைய வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். நல்லம்ம நாயுடு தலைமையில் வந்த போலீஸ்காரர்கள் ராயப்பேட்டையில் உள்ள எனது வீட்டிலும் எண்:57, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை என்ற முகவரியில் உள்ள எனது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அபிராமபுரம் வீட்டில் இருந்து 48 ஆவணங்களைக் கைப்பற்றினார்கள். 

அதில் 928 பக்கங்களைக்கொண்ட 38-வது ஆவணம் 'முழுக்க முழுக்க சுதாகரனின் திருமணச் செலவுகள் தொடர்பான ரசீதுகள், செலவுகள் பற்றிய விவரங்களைக் கொண்டவை’ என்று குறிப்பிட்டுக் கையெழுத்துப் போட்டுள்ளார். 

ஆனால், துரதிருஷ்டவசமாக ஆடிட்டர் ராஜசேகரனை அரசுத் தரப்பு, எதிர்த்தரப்பு... என இருவராலும் குறுக்குவிசாரணை செய்ய முடியவில்லை. அவரை இந்த நீதிமன்றத்துக்குக் கொண்டு வருவதில் இருவருமே தோல்வியடைந்து உள்ளனர். 

அதன் காரணமாக ராஜசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் நாம் ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் இந்தச் சாட்சியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அரசுத் தரப்பு, எதிர்த் தரப்பு என இருவருக்குமே பல வகையில் பயனுள்ளவையாக உள்ளன.

அதில் கிடைத்த முக்கியமான ஆவணங்கள் என்னவென்றால், சுதாகரனின் திருமணம் பற்றி, விவரங்கள் கேட்டு ஜெயலலிதா, சசிகலாவுக்கு வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸ், கோவிந்த் கேப்ஸ், கிரீஸ் மியூசியம் ஃபர்னிச்சர்ஸ், பந்தல் கான்ட்ராக்டர் குமரேசன் நாடார் கொடுத்த ரசீது, பாலு கலர் லேப், குமரன் சில்க்ஸ், நெல் மற்றும் அரிசி விற்பனையாளர் அப்பாஸ், மௌலிஸ் அட்வர்டைசிங் கம்பெனி, ஏ.ஜி.கே. டிராவல்ஸ், ஆங்கர் கேப்ஸ், வின்சென்ட் டிராவல்ஸ், வருமானவரித் துறை ரசீதுகள், அடையார் கேட் ஹோட்டல் ரசீது போன்றவை கைப்பற்றப்பட்டு உள்ளன.''

'போயஸ் கார்டனில் சுதாகரன்!’

''மற்றொரு முக்கிய சாட்சி, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜவஹர் பாபு. இவர் 1992 முதல் 1996 வரை போயஸ் கார்டன் இல்லத்தில் முதலமைச்சரின் உதவிச் செயலாளராகப் பணியாற்றிவர். இவருடைய அலுவலகம் தலைமைச் செயலகத்திலும் முகாம் அலுவலகம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலும் இருந்து செயல்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் சசிகலாவும் சுதாகரனும் போயஸ் கார்டனில்தான் வசித்தனர் என்பதையும் சுதாகரனின் திருமண நிச்சயதார்த்தம், நடிகர் சிவாஜி கணேசன் வீட்டில் நடைபெற்றதையும் மணமகன் வீட்டில் இருந்து விலை உயர்ந்த பொருள்கள் பல தட்டுகளில் அங்கு எடுத்துச் சென்றதையும் ஜெயலலிதா அதில் கலந்துகொண்டார் என்பதையும் தனது சாட்சியில் உறுதிப்படுத்தி உள்ளார்.

சுதாகரனின் திருமணம் மற்றும் வரவேற்பு இசைக் கச்சேரிக்காக மாண்டலின் ஸ்ரீநிவாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்புகொண்டு பேசியதையும் ஜவஹர் பாபு ஒப்புக்கொண்டு உள்ளார். அதோடு முதல் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள், கவர்னர்கள் உள்ளிட்ட 400 வி.ஐ.பி-க்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பியதையும் ஒப்புக்கொண்டு உள்ளார்.''

'வெள்ளித் தட்டுகளில் அழைப்பிதழ்!’

''இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சாட்சியில், முதலமைச்சரின் உதவிச் செயலாளர் ஜவஹர்பாபு தன்னை தொலைபேசியில் அழைத்து, முதலமைச்சரைச் சந்திக்கும்படி சொன்னதாகவும் இதையடுத்து மறுநாள் தலைமைச் செயலகத்தில் தன்னுடைய தாயாருடன் போய் ஜெயலலிதாவைச் சந்தித்ததாகவும் தெரிவித்தார். அப்போது, ஜெயலலிதா தன்னுடைய வளர்ப்பு மகன் திருமணத்துக்கு இசைக் கச்சேரி நடத்த வேண்டும் என்று கேட்டதாகவும் அதற்கு, தான் சம்மதித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து மறுநாள் பாஸ்கரன் அவரது மனைவியுடன் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டுக்கு வந்து, இரண்டு தட்டுகளில் அழைப்பிதழ் வைத்ததாகவும் ஒவ்வொன்றிலும் ஒரு பட்டுச் சேலை, ஒரு பட்டு வேட்டி, அங்கவஸ்திரம், குங்குமச் சிமிழ் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

பொறியாளர் முத்துச்சாமியும் தான் பந்தல் வேலைகளை மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தபோது, தனக்கு வெள்ளித்தட்டில் பட்டுச் சேலை, பட்டு அங்கவஸ்திரம், வேட்டியுடன் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதாகக் கூறி உள்ளார். 

அதன் மூலம் வி.ஐ.பி-க்களுக்கு வெள்ளித்தட்டுகளில் பத்திரிகை கொடுக்கப்பட்டது நிரூபணமாகி உள்ளது. முத்துச்சாமியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ள வெள்ளித்தட்டு மற்றும் பட்டுச் சேலை ஆகியவற்றை வைத்து அவற்றின் விலை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு என்ன என்பதைக் கண்டறிந்து அதைக் கணக்கிட்டு, இந்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாட்சியங்களை எதிர்த் தரப்பு குறுக்கு விசாரணையில் உடைக்க முடியவில்லை. மாறாக, கிடைத்த ஆவணங்கள் அனைத்தும் குற்றவாளிகள் தரப்புக்கு எதிராக மிக சக்தி வாய்ந்த ஆதாரங்களாக உள்ளன.''



'பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா!’

''சுதாகரனின் திருமணம்பற்றி ஜெயலலிதா நேரில் ஆஜராகி, சாட்சி சொன்னபோது, நான் திருமணத்துக்கு எந்தப் பணமும் செலவழிக்கவில்லை. இதை நான் 1995 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் வருமானவரித் துறைக்கு அளித்த பதிலிலும் தெளிவுபடுத்தி உள்ளேன். 

மேலும், திருமணம் நடைபெற்றது 1995-ம் ஆண்டு. ஆனால், அதற்கான செலவுகள்பற்றி மதிப்பீடு செய்துள்ள தங்கராஜ், அதை 1997-ம் ஆண்டு தயாரித்துள்ளார். அவர் இதுபோன்ற மதிப்பீடுகளைச் செய்வதில் திறமையற்றவர் என்பது அவரது மதிப்பீட்டில் இருந்து தெரியவருகிறது என்று நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொன்னார். 

ஆனால், அதே ஜெயலலிதா, 1996-97-ம் வருடம் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் 'திருமணச் செலவுகள்' என்று குறிப்பிட்டு 25 லட்சத்து 98 ஆயிரத்து 521 ரூபாய் என்றும் ரொக்கமாக 3 லட்சத்து 94 ஆயிரத்து 240 ரூபாய் செலவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் ஆடிட்டர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, சுதாகரனின் திருமணத்துக்கு ஆன செலவுகளாக அவர்கள் வருமானவரித் துறையினருக்குத் தாக்கல்செய்த கணக்கில் தெளிவாக 12 லட்சத்து 50 ரூபாய் பத்திரிகைகள் மற்றும் விளம்பரங்களுக்கு செலவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். 

உணவுப் பொருள்கள் சப்ளை செய்த அப்பாஸ் என்பவருக்கு கனரா வங்கி மூலம் 23 ஆயிரம் ரூபாய் கொடுத்த கணக்கு உள்பட பல கணக்குகள் தெரிய வருகின்றன.

திருமணத்துக்கான எல்லாச் செலவுகளையும் மணமகள் வீட்டாரே செய்தார்கள் என்றால், பந்தல், விளக்கு அலங்காரம், கார்கள், அழைப்பிதழ் செலவுகளுக்கு ஜெயலலிதா கையெழுத்துப்போட்டு செக் கொடுத்தது ஏன்? என்ற இந்தக் கேள்விகளுக்கு ஜெயலலிதா தரப்பால் பதில் சொல்ல முடியவில்லை.''

பகலில்கூட படிக்க முடியாத ஆதாரம்..!

சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், ''என்னுடைய தகப்பனார் நடிகர் சிவாஜி கணேசன். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மூன்றாவது குற்றவாளி சுதாகரன், என் இளைய சகோதரி சாந்தியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். அந்த நேரத்தில் எங்களுடைய தந்தை உயிருடன் இருந்தார். 

நாங்கள் இந்தத் திருமணத்துக்கான மொத்தச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டோம். இதற்காக தனியாக வங்கிக் கணக்குத் தொடங்கினோம். ஸ்டேட் பாங்க், கோபாலபுரத்தில் திருமணச் செலவுக்காக ரூ.92 லட்சம் போட்டு வைத்தோம் என்று சொல்லி உள்ளார். அதிலிருந்து எடுத்து செலவுகளைச் செய்தோம் என்று சொல்லி உள்ளார். 

ஆனால், வங்கிக் கணக்குப் புத்தகத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. பலமுறை கேட்ட பிறகு கணக்குப் புத்தகத்தின் ஜெராக்ஸ் காப்பியைச் சமர்ப்பித்தார். ஒரிஜினல் காப்பி இருந்தால்தானே ஜெராக்ஸ் காப்பி எடுக்க முடியும். அப்படியானால் நீதிமன்றத்தில் ஒரிஜினலையே சமர்ப்பிக்கலாமே? ஆனால் சமர்ப்பிக்கவில்லை.

இதைக் குறுக்கு விசாரணை செய்தபோது, இந்த வங்கிக் கணக்கு 14.08.1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கணக்கில் வரவு செலவு விவரங்கள் எதுவும் இல்லை.

கணக்குப் புத்தகத்தின் முகப்பு அட்டையின் போட்டோ காப்பி ஒன்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில் வங்கியின் சீல் இல்லை. வங்கிக் கிளையின் முகவரி இல்லை. அதில் அச்சாகி இருக்கும் விவரங்களை நல்ல வெளிச்சத்தில், பகல் நேரத்தில்கூட படிக்க முடியவில்லை. இதை எப்படி ஓர் ஆதாரமாக ஏற்க முடியும்...? 

மணமகள் வீட்டார்தான் செலவுகள் செய்தனர். அதுவும் மணமகளின் தாய்மாமன் ராம்குமார்தான் அத்தனை செலவுகளையும் செய்தார் என்றால், அதற்கு ஓர் ஆதாரத்தைக்கூட அவர்களால் தாக்கல் செய்ய முடியவில்லை. சுதாகரனுக்கு உடைகள் தைக்க டெய்லருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தது மட்டும்தான் ராம்குமார் செய்த செலவு. அதற்கு மட்டும்தான் ஆதாரம் உள்ளது.

ஆக, பந்தல் போடுவதற்கான உத்தரவுகள் ஜெயலலிதா வீட்டில் இருந்து போய் உள்ளன. அதற்கான செலவுக்கு ஜெயலலிதா  செக் கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து அழைப்பிதழ்கள் அச்சடிக்க உத்தரவு வந்துள்ளது. அதற்கான தொகையை ஜெயலலிதா  கொடுத்துள்ளார். வி.ஐ.பி-களுக்கான அழைப்பிதழ்கள் ஜெயலலிதா வீட்டில் இருந்து கொடுக்கப்பட்டு உள்ளன. அதற்கான தொகையையும் ஜெயலலிதா கொடுத்துள்ளார். 

மேலும், பட்டுப் புடவைகள், பட்டு வேட்டிகள், அங்கவஸ்திரங்கள், வெள்ளித் தாம்பூலத் தட்டுகள், பட்டாசுகள், கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட யானைகள், குதிரைகள், உணவுப் பொருள்கள், இனிப்புகள், வி.ஐ.பி-கள் தங்குவதற்கான ஏற்பாடுகள், திருமணம் நடந்த இடம், வரவேற்பு நடந்த சாலைகள் ஆகியவற்றில் செய்யப்பட்டு இருந்த விளக்கு அலங்காரங்கள், பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள்,  விலை உயர்ந்த பரிசுப் பொருள்கள்... போன்றவற்றின் மதிப்பு 3 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதை மறுக்க முயன்ற ஜெயலலிதா மற்றும் சுதாகரன் தரப்பால் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை.

மாறாக, இந்தச் செலவை அவர்கள்தான் செய்துள்ளனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் அரசுத் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அடுத்த இதழிலும் தொடரும்...

- ஜோ.ஸ்டாலின்

0 comments: