சண்டியர் சினிமா விமர்சனம்

06-08-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘ஜிகர்தண்டா’வின் அசுர வெற்றியிலும், ‘சரப’த்தின் மவுத் டாக் பரபரப்பிலும் இந்த ‘சண்டியர்’ தனித்து தெரிகிறார்.. வேலு பிரபாகரன் மற்றும் ரமணாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் சோழதேவன் இயக்கியிருக்கும் முதல் படம் இது.
முருகதாஸ், ‘கராத்தே’ வெங்கடேசன், சிங்கம்புலி, ஹீரோயின் கயல் ஆகியோரைத் தவிர மற்ற அனைவருமே சினிமாவுக்கே புதிதானவர்கள்.. தஞ்சை மண்ணின் வயல்வெளிகளை வெறும் காட்சிப்படுத்தலுக்காகவே இதுவரையில் காட்டிக் கொண்டிருந்த நிலையில், அங்கிருக்கும் அரசியல் நிகழ்வுகள்.. செய்யப்பட்ட அரசியல் படுகொலைகளை மையப்படுத்தி திரைப்படங்கள் உருவானதில்லை..
காவிரியின் பிறப்பிடத்தில் இருந்து அது செல்லும் வழியை கிராபிக்ஸில் படம் போட்டு காட்டி அது எங்கெல்லாம் தன் முகம் காட்டி செழிக்க வைக்கிறது என்பதை படத்தின் துவக்கத்தில் காட்டும்போதே இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதை யூகிக்க முடியாமலேயே போய்விட்டது.. ஆனால் அதற்கு நேரெதிர்தான் படத்தில் அவர் காட்டியது..
அரசியல்.. நம் நாட்டை சீரழித்த விஷயங்களில் முதலிடத்தில் இருக்கிறது.. குடும்பம் முதல்  பொருளாதாரம்வரையிலும் அரசியலால் சீரழியாத விஷயங்களே இல்லை.. இப்போதும் தமிழ்நாடெங்கும் அரசியலில் இருக்கும் இளைஞர்களின் கவனமெல்லாம் அவரவர் சார்ந்த கட்சிகளில் ஏதாவது பெரிய பதவிகள் மீதுதான் இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் பலன்கள்.. உழைக்காமல் உடனடியாக கிடைக்கும் பெரிய அளவிலான பணம்.. கேட்காமலேயே கிடைக்கும் மக்கள் செல்வாக்கு.. சாதாரண குடிமகனுக்குக் கிடைக்காத அரசியல் அதிகார பலம்.. இதெல்லாம் இன்றைய இளைய அரசியல்வாதிகளை மதிமயக்கி வைத்திருக்கிறது.
இந்த அரசியலுக்காக இந்தியாவெங்கும் எத்தனை படுகொலைகள்..? எத்தனை குடும்பங்கள் தங்களது உறுப்பினரை இழந்தன.. எத்தனை கட்சிகளுக்குள் வெட்டுக் குத்துகள்.. இன்று அரசியல் மிக எளிதான, முதலீடு போடாத தொழிலாக உருமாறிவிட்டதுதான் இதற்கு அடிப்படை காரணம்..!
அரசியலில் ஈடுபட்டு மிகப் பெரிய லெவலுக்கு உயர வேண்டும் என்று நினைத்த ஒருவன் அதனை அடையும் முயற்சியில் என்னென்ன ஜனநாயக விரோதச் செயல்களை செய்து உச்சத்தை அடைந்து இறுதியில் எப்படி அதே அரசியலால் வீழ்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை..!
பாண்டித்துரை என்ற அந்த இளைஞனை தந்திரமாக பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு முன்பு பொய் வழக்கொன்றில் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தான் தலைவராகத் தேர்வாகிறார் நாயகம். இந்த நாயகத்தின் அப்பா தஞ்சிராயரும், பாண்டித்துரையின் அப்பா ரவியும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் ஒரே ஜாதிக்காரர்கள் இல்லை. இது திரைப்படத்தில் மிகவும் நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது..
பாண்டித்துரை குடும்பத்தினருக்கு தஞ்சிராயர் மிகப் பெரிய உதவிகளை செய்திருக்கிறார். இப்போதும் செய்து வருகிறார். இதனாலேயே ரவி, தஞ்சிராயரை ‘மச்சான்’ என்றும் அவர் ‘மாப்ளை’ என்றும் பாசத்தோடு சொல்லி வருகிறார்கள். ஆனால் ஆடு நெருக்கமாக இருக்க, குட்டிகள் பகையாக மாறுகின்றன. காரணம் அரசியல்.
தன்னை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு நாயகம் தலைவரானதை பாண்டித்துரையில் ஏற்க முடியவில்லை. ஊர் கோவில் சாமி ஊர்வலம் வரும்போது தங்களது வீட்டு வாசலில் தனக்கு நியாயம் வழங்கினால்தான் தேர் நகரும் என்று தகராறு செய்கிறான் பாண்டித்துரை. அப்போதைக்கு ரவியின் சாமர்த்திய பேச்சினால் அது சமாதானமாகிறது.
நாயகத்தை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் ஒழிய தனக்குத் தூக்கம் வராது என்று நினைத்தே நாயகத்துக்கு நிறைய குடைச்சல்கள் கொடுக்கிறான் பாண்டித்துரை. பெய்த ஒரு மழையில் ரோடு சகதியும், குண்டும் குழியுமாக அதில் நாத்து நடும் போராட்டம் நடத்தி அதனை டிவியில் காட்டி போடாத ரோட்டுக்கு பில் போட்டு தலைவர் காசை கொள்ளையடித்துவிட்டார் என்று டிவியில் பேட்டி கொடுக்கிறான் பாண்டித்துரை.
இரு பக்கமும் அடிதடிகள் பறக்கின்றன. பொய் வழக்கும் போடப்படுகிறது.. ஆனால் சாதூர்யமாக பிசிஆர் வழக்கு.. இந்த வழக்கு தொடுத்தவரை.. போதையில் கிடந்தவரை தூக்கி வந்து வழக்கு வாபஸ் என்று சொல்ல வைத்துத் தப்பிக்கிறார் ஹீரோ. அப்போது அந்த வழக்குத் தொடுத்தவர் சொல்கிறார்.. “புகார் கொடுன்னு நீங்க அடிக்கிறீங்க.. புகாரை வாபஸ் வாங்குன்னு அவன் ரெண்டு அடி அடிக்கிறான்.. நான் என்ன செய்யறதுன்னு..?” இதுதான் இன்றைக்கு பி.சி.ஆர். வழக்கு தொடுக்கும் சில அப்பாவிகளின் உண்மையான நிலைமை.
வேறு வழியில்தான் நாயகத்தை மடக்க வேண்டும் என்று நினைத்து நாயகத்தின் அக்கா மகள் கயலை காதலிப்பதுபோல் நடிக்கத் துவங்குகிறார் பாண்டித்துரை. முதலில் மறுக்கும் கயல்.. பிறகு மெல்ல மெல்ல காதல் வலையில் விழுந்துவிட சமயம் பார்த்துக் காத்திருக்கிறார் பாண்டித்துரை..
கள்ளச்சாராயத்தைக் குடித்ததில் சிலர் மரணமடைய.. பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்களின் துணையோடு நாயகத்தை பதவி நீக்கம் செய்துவிட்டு அந்த இடத்துக்கு பாண்டித்துரை வருகிறார். வந்த வேகத்தில் மேலும் பல அரசியல் வேலைகளைத் தொடர்ந்து செய்து, மாவட்டச் செயலாளர்வரையிலும் உயர்கிறார்.. கடைசியில் என்னவானார் என்பது திருவாரூரில் நடந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வத்தின் அரசியல் படுகொலையோடு முடிச்சுப் போட்டு முடிந்திருக்கிறது..!
தஞ்சையைச் சுற்றியிருக்கும் சாலியமங்கலம், பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில்தான் அதிகமாக படப்பிடிப்பை நடித்தியிருக்கிறார்கள்.. ஆனால் மிகப் பெரிய பொருட்செலவில்தான் எடுத்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
தஞ்சை மண்ணின் எதார்த்தமான ஸ்லாங்கை இந்தப் படத்தில்தான் முதல்முதலாக பார்க்கவும், கேட்கவும் முடிந்திருக்கிறது. பாண்டித்துரையாக நடித்திருக்கும் ஜெகன் அந்த கேரக்டருக்கு அழுத்தம் கொடுத்து நடித்திருக்கிறார்.. புதுமுகமாகவும் தெரியவில்லை.. படத்தின் எந்தக் காட்சியிலும் ஒரு சின்ன ஸ்லிப்பிங்கூட இல்லாமல் மிக எதார்த்தமாக இருக்கிறார்.
இவருடைய கருப்புச் சட்டை, கடவுள் மறுப்பு கொள்கையெல்லாம் எதற்கு என்று தெரியவில்லை..? கடவுள் மறுப்பு கொள்கையையும், கருப்புச் சட்டையையும் அணிந்து கொண்டு ஒருவன் இத்தனை பெரிய அயோக்கியனாக வர விரும்புவான் என்பதெல்லாம் நம்ப முடியாத கதை.. ‘அவாள்’களே நம்ப மாட்டார்கள்.. இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்..
ஒவ்வொரு ஸ்டெப்பாக மேலே தாவிக் கொண்டேயிருக்கும் இந்த பாண்டித்துரைக்கு கிடைத்ததெல்லாம் தற்செயல்தான் என்று நினைக்கும்போது அத்தனையும் நான் செய்த திருவிளையாடல்கள்தான் என்று அவர் சொல்லும்போது அவருடைய கேரக்டரே செத்துவிட்டது.. இதனை சொல்லாமலேயே போயிருக்கலாம்.. இவருடைய வாழ்க்கைக் கதை இப்படித்தான் முடியும் என்று தெரிந்ததுபோல முடித்திருக்கலாம்..! ஹீரோவை வில்லனாக்கிவிட்டது அந்தக் காட்சி..!
கயல் என்ற ஹீரோயின்.. ஏற்கெனவே சென்ற ஆண்டு ‘அவன் அப்படித்தான்’ என்கிற படத்தில் அறிமுகமானவர். அழகு.. இயக்குநரின் திறமையால் மிக இயல்பாக நடித்திருக்கிறார். முதலில் காதலில் விழுகக் கூடாது என்று தவியாய் தவித்து பின்பு அதில் மாட்டிக் கொண்டு தவிக்கும் இள வயது உணர்வை தன் முகத்தில் இயல்பாகக் காட்டியிருக்கிறார். அந்த போண்டாவை வைத்து இயக்குநர் எடுத்திருக்கும் காதல் காட்சிகள் அருமை.
சிங்கம்புலியின் பல காமெடி டயலாக்குகள் சிரிக்க வைத்தவை என்றாலும் சில கதைக்குத் தேவையற்றவையாக இருந்தன.. ஆனாலும் சதா குடி.. புகை.. என்று படம் முழுக்கவே ஒரு டாஸ்மாக் கடையில் உட்கார்ந்திருந்த தோரணை இருந்ததால் சிங்கம்புலிகூட படத்தில் இல்லையேல் நாம் என்னவாகியிருப்போம் என்று யோசிக்கவும் வைக்கிறது.. புரோட்டா கடையில் போய் சலம்பல் செய்து மாட்டிக் கொள்ளும் சிங்கம்புலியின் காமெடி, ரசிக்க வைத்தது..!
தஞ்சிராயராக நடித்தவர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்.. ‘அரிமா நம்பி’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தவர்.. 40 வயதுதான்.. ஆனால் 60 வயது முதியவராக காலை நொண்டிக் கொண்டே படம் முழுவதும் ஒரு ஷாட்டில்கூட ஆக்சன் மாறாமல் நடித்திருக்கிறார்..
தனது மாப்ளை ரவிக்கும், தனக்குமான நட்பையும், உறவையும் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டேயிருப்பவர் தனது மகனது வருத்தத்தையும், சோகத்தையும் உணர்ந்து ஒரு நொடியில் மனம் மாறி ‘பாண்டித்துரையை போட்டிரு’ என்று சொல்லும் நேரத்தில் எந்தவொரு லாஜிக் மீறலும் இல்லை.. அசத்தல் நடிப்பு..
இரண்டு தந்தைகளின் நெருக்கத்தால் இரண்டு மகன்களுக்கும் இருக்கும் எரிச்சலையும் உண்மையாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.. அதிலும் நாயகமாக நடித்தவரின் புலம்பலும், எரிச்சலும்தான் மிக ரசிக்க வைத்தது..! போதையில் கைலி ஒரு பக்கம், ஆள் ஒரு பக்கமுமாக படுத்திருந்தவர்.. தந்தையைப் பார்த்தவுடன் பதற்றத்துடன் எழுந்து கைலியைக் கட்டிக் கொண்டு தள்ளாடி எழுந்து போகும் காட்சியும், இதைப் பார்க்கும் அப்பாவின் மனம் மாறும் காட்சியும் தத்ரூபம்..
இவருக்கு அப்படியொரு எதிர் பாய்ச்சலை காட்டியிருக்கிறார் பாண்டித்துரையின் தந்தையாக நடித்த கராத்தே வெங்கடேசன். ‘வெயில்’ படத்தில் பன்றி மேய்ப்பவராக வந்து கொலையாகும் அந்த கேரக்டரையே மறக்க முடியாது.. மறுபடியும் மீண்டும் ஒரு கேரக்டர்.. தனது மச்சானுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே கடைசியில் தனது உள்ளுணர்வால் மச்சானின் கொலை வேலையை உணர்ந்து கொண்டு அவரிடம் பேசும்காட்சியில் அசல் மனிதரை காட்டியிருக்கிறார்.. படத்தில் மிக சுவாரஸ்யமே இந்த இரண்டு அப்பன்களும்தான்.. நமக்கே ஒரு கட்டத்தில் எரிச்சல் வருகிறது.. ‘என்னடா உங்க பிரெண்ட்ஷிப்புன்னு..?’ இதைத்தான் இயக்குநரும் எதிர்பார்த்தார்போலும்..!
ஒளிப்பதிவு செய்திருக்கும் ஹரிபாஸ்கர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.. சில இடங்களில் காட்சிகளின்போதே லைட்டிங்ஸ் போய் வந்து கொண்டிருந்தது.. இசை ரொம்ப மெனக்கெடவில்லை.. பாடல் காட்சிகள் தேவையே இல்லை.. ஆனால் தமிழ்ச் சினிமாவின் வழக்கத்திற்காக வைத்திருக்கிறார்கள். காதல் சோகப் பாடல் ஒன்றும் படத்தின் பிற்பாதியில் வந்து நம்மை சோதிக்கிறது.. இந்த நேரத்தில் இது எதற்கென்று..?
இயக்குநரின் இயக்கத் திறன்தான் படத்தை இந்த அளவுக்கு பேச வைத்திருக்கிறது..! மிகப் பெரிய செலவுதான் செய்திருக்கிறார்கள். அத்தனை கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.. போராட்டக் காட்சிகளை படமெடுத்திருக்கிறார்கள்.. லஞ்சம் என்பது எப்படியெல்லாம் அரசியல்வாதிகளால் உருவாக்கப்படுகிறது.. கொள்ளை எப்படியெல்லாம் அடிக்கப்படுகிறது என்பதையும் துணிச்சலுடன் காட்டியிருக்கிறார். 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல்லை விற்கும்போது அரசு அதிகாரிகள் அடிக்கும் கொள்ளை.. டாஸ்மாக் கொள்ளை.. திட்டத்தில் கமிஷன்கள் என்று அத்தனையும் அத்துப்படியாகியிருக்கிறது.
நாயகத்தை போட்டுத் தள்ளும் முயற்சி தோல்வியடைந்து சோளக் காட்டுக்குள் பதுங்கியிருந்து வெளியேற செய்யும் திட்டங்களும், அந்தக் காட்சிகளும் மிக யதார்த்தம். அதேபோல் முருகதாஸ் மனம் மாறி திரும்பவும் பாண்டித்துரை பக்கம் வந்ததை பிளாஷ்பேக்கில் சொல்லி கதையை நகர்த்தியிருக்கும்விதம் அருமைதான்.. வித்தை காட்டினால்தானே இங்கே இயக்குநர்..?
ஒன்றியச் செயலாளர் ஆனவுடன்.. ஒரு மறியல் போராட்டம். டிவிக்களில் முகம் என்றாகி சட்டென்று மாவட்டச் செயலாளர் போஸ்ட்.. அரசியலில் என்ன செய்தால் மேலே வரலாம் என்பதை தெளிவாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.. தனது முதல் படத்திலேயே இத்தனை போல்டாக ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதனை தேர்ந்த நிலையில் கொடுக்க முனைந்திருக்கும் இவரது செயல் பாராட்டுக்குரியது..
இந்தப் படம் மார்க்கெட் உள்ள கதாநாயகர்களை வைத்து எடுக்கப்பட்டிருந்தால் இன்றைக்கு ‘ஜிகர்தண்டா’ வசூலையும், பெயரையும் தொட்டிருக்கும்.. சின்ன கலைஞர்களை வைத்து.. அறிமுக நடிகர்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.
புதிய இயக்குநர்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது நமது கடமை.. இந்த ‘சண்டியரை’ வரவேற்க வேண்டியதும் நமது கடமை.. வரவேற்போம்..
தமிழ்ச் சினிமா ரசிகர்கள் இந்த ‘சண்டியரை’ அவசியம் பார்க்க வேண்டும்..!

1 comments:

Unknown said...

படத்திற்கு இந்தத் தலைப்பை வைக்கக் கூடாதென்று இந்த முறை யாரும் போராட்டம் நடத்தவில்லையா?