சலீம் - சினிமா விமர்சனம்

31-08-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஆச்சரியமாக இருக்கிறது. முதல் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் படத்தின் கதையையும் கொண்டு வருவதென்பது ஒரு ஹீரோவாலும், இயக்குநராலும் மட்டும் முடியாது.. தயாரிப்பாளரும் நினைக்க வேண்டும். இங்கே 2 தயாரிப்பாளர்கள் கூட்டணியுடன் அதனை செய்து காட்டியிருக்கிறார்கள் விஜய் ஆண்டனியும், இயக்குநர் நிர்மல் குமாரும்..!
முதல் பாகமான ‘நான்’ படத்தில் இந்துவாக இருந்து சந்தர்ப்பவசத்தால், முஸ்லீமாக அடையாளம் காட்டி தவறான வழியில் மருத்துவ சீட்டை பெற்று மருத்துவம் படிக்கும் விஜய் ஆண்டனியின் வாழ்க்கையில் நடக்கும் குறுக்கீடுகளை காட்டினார்கள்..
இதில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சேவை செய்யும் மனப்பான்மையோடு நல்ல மருத்துவனாக இருக்க முயலும் ஹீரோவை, சிலர் மனதளவில் தாக்கிவிட.. இதன் பக்க விளைவுகள் என்னவாகின்றன என்பதுதான் கதை..!

சலீம் இப்போது ஒரு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். திருமணத்திற்கு பெண் பார்த்திருக்கிறார். அந்தப் பெண்ணும் இவரைப் பார்க்க வருகிறார். ஆனால் அந்தப் பெண் கூப்பிட்ட போதெல்லாம் உடனுக்குடன் ஓடி வரும் கணவர்தான் தனக்கு வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சலீமுக்கு அப்படியொரு டார்ச்சரை கொடுக்கிறார்.
இயல்பாகவே மிக நல்ல மனிதராக இருக்கும் சலீம் வரப் போகும் மனைவிக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறார். ஆனால் அவரது மருத்துவத் தொழில் அதனை செய்யவிடாமல் தடுக்கிறது. புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் வருங்கால மனைவி.
இந்த நேரத்தில் ஒரு இரவு வேளையில் 4 ஆண்களால் கசக்கி எறியப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்றி தன்னுடைய மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார் சலீம். போலீஸுக்கும் தகவல் சொல்கிறார். ஆனால் விடிந்தபோது அந்தப் பெண் அங்கில்லை. ஏற்கெனவே சலீம் மீது மிக கோபத்தில் இருக்கும் மருத்துவமனையின் எம்.டி. அன்றிரவு ஹோட்டலுக்கு அனைத்து மருத்துவர்களையும் அழைத்து அவர்கள் முன்னிலையிலேயே சலீமை அவமானப்படுத்தி டிஸ்மிஸ் என்கிறார்.
இந்த விரக்தியில் மதுவருந்திவிட்டு வெளியே வரும் சலீம் போதையில் மப்டியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் அருள்தாஸிடம் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் பேசுகிறார். சலீமை ஸ்டேஷனுக்கு கொண்டு போய் அமர வைக்கிறார். முந்தைய நாள் கல்யாணம் கேன்சல் என்று மணப்பெண்ணே சொல்லிவிட்டுப் போன விரக்தியில் இருக்கும் சலீமுக்கு மாமனார் போன் செய்ய.. அதையும் பேசவிடாமல் தடுக்கிறார் இன்ஸ்பெக்டர்.
கடுப்பான சலீம் போனை தூக்கிக் கொண்டு ஓட.. பின்னாலேயே போலீஸும் விரட்ட.. ஒரு தேடுதல் வேட்டைக்கப்புறம் சலீம் பிடிபடுகிறார். ஆனால் அவரை சிறையில் வைக்க ஜாமீன் கிடைக்காத வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டு அவனது மாமனாரிடமும் இதைச் சொல்ல முயல.. இப்போது சலீம் அந்த போலீஸ் காரை விபத்துக்குள்ளாக்குகிறார். இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை பறிமுதல் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடுகிறார்.
மீண்டும் ஹோட்டலுக்கு வந்து தனது மருத்துவமனை எம்.டி.யையும், சகாக்களையும துவம்சம் செய்துவிட்டு ஒரு தீர்மானத்தோடு வெளிநாடு செல்ல கிளம்புகிறார். போகும் வழியில் அவர் சந்திக்கும் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா வழிமறித்து தனது மகளையும், மனைவியையும் மீட்டுக் கொடுக்கும்படி சொல்ல.. சலீமின் மனம் மாறுகிறது.
இப்போது அவர் எடுக்கும் முடிவுதான் படத்தின் சுவையான இரண்டாம் பகுதி.. மாநில உள்துறை அமைச்சரின் மகனையும், அவது 3 நண்பர்களையும் ஹோட்டல் அறைக்குள் அடித்துப் போட்டு கட்டிப் போட்டு பிணைக் கைதிகளாக்கி போலீஸிடம் பணயம் பேசுகிறார். அது எதற்கு என்பதும் முடிவு என்ன என்பதுதான் மிச்சம் மீதிக் கதை.
இதில் இருக்கும் சஸ்பென்ஸை உடைத்தால் இனி படம் பார்க்கப் போகும் அன்பர்களுக்கு சுவையிருக்காது என்பதால் அதனை முற்றிலுமாக தவிர்க்கிறேன்..!
முதல் பாதியில் சலீமின் குண நலன்களை வெளிக்காட்ட விரும்பி பல காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கின்ற அளவுக்கு வைத்திருக்கிறார்கள். ஆனாலும் மனைவியாக வரப் போகின்றவர் செய்யும் டார்ச்சர்கள் படம் பார்ப்பவர்களையே டென்ஷனாக்குவதால் படம் முதல் பாதியும் ஓகே என்ற நிலைமைக்குத்தான் உள்ளது.
படத்தின் பிற்பாதியில் சஸ்பென்ஸ் திரில்லராக மிக வேகமாக பறக்கிறது.. அடுத்தது என்ன என்பதை யூகிக்காத அளவுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். நர்மதாவின் தந்தையைச் சந்தித்தது.. அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கி பிரிட்ஜுக்குள் வைத்திருப்பது.. வடசென்னை தாதாவை வரவழைப்பது.. உள்துறை அமைச்சரை வரவழைப்பது.. ஒவ்வொரு முடிச்சாக சுவாரஸ்யமாக அவிழ்ப்பது என்ற திரைக்கதையால் கடைசிவரையிலும் டென்ஷனை கூட்டியிருக்கிறார்கள்.
முதல் பாகம் ஓகே.. இரண்டாம் பாகம் டபுள் ஓகே.. மூன்றாம் பாகமும் வரப் போகிறதாம்.. அதனால் தொடரும் என்றே போட்டு முடித்திருக்கிறார்கள்..!
நான் படத்தில் பார்த்தே விஜய் ஆண்டனிதான். சலீமாக நடித்திருப்பதால் புதிதாக எதையும் செய்யவில்லை. அதே சாந்தமான முகம். அமைதியான, அடக்கமான, அலட்டல் இல்லாத நடிப்பு. ஆனால் இப்படியே தொடர்ந்து எத்தனை படங்களில் நடிப்பாரென்று தெரியவில்லை.. கிளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும் கண்ணீர் சிந்துகிறார். ஆனால் அது மனதைத் தொடவில்லை. ஆனால் காட்சியமைப்பு மட்டுமே உருக்குகிறது..!
இவருக்கும் சேர்த்து வைத்து நடித்திருக்கிறார் ஹீரோயின் அக்சா. படபடவென எண்ணெய் சட்டியில் பொரியல் வெந்ததை போல இவர் வெடிக்கின்ற அழகே அழகு.. தக்காளியாக இருக்கும் இவரது முகம் கோபத்தில் மேலும் சிவந்து போகிறது.. பாடல் காட்சிகளில் கொள்ளை அழகாக இருக்கிறார்.. போலீஸாரிடம் படபடவென பேசும் காட்சியில் நச் என்று இருக்கிறது அவரது கேரக்டர் ஸ்கெட்ச்.. பாராட்டுக்கள்.. டப்பிங் குரல் என்றாலும் அது தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.. வெல்டன் டைரக்டர்..
கிரைம் பிரான்ச் டெபுடி கமிஷனர் செழியனாக நடித்திருக்கும் சந்திரமெளலி அடக்கமாக தனது பாணி நடிப்பைக் காட்டியிருக்கிறார். உள்துறை அமைச்சரிடம் வந்து நீயும் பிடுங்கு என்று கோபத்துடன் சொல்லும்போது அரங்கம் அதிர்கிறது.. ஒரு காவல்துறை அதிகாரியாக தன்னுடைய கடமையைச் செய்யும்போதும் வரும் குறுக்கீடுகளை அவர் எதிர்கொள்ளும்விதத்தில் காவல்துறை மீது கொஞ்சம் பரிதாபத்தையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்.
ஓரிடத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒரு உண்மையை உரைகல்லாக்கியிருக்கிறார்கள் வசனகர்த்தாக்கள்.. “நீ எந்த நாட்டு தீவிரவாதிடா..? முஹாஜிதீனா? லஷ்கர் இ தொய்பாவா?”  என்று டெபுடி கமிஷனர் செழியன் கேட்கும்போது “என் பேரை வைச்சு இப்படி முடிவெடுக்காதீங்க ஸார்.. எல்லாரும் அப்படி இல்ல.. வேணும்னா என் பேரை விஜய்ன்னும் ஆண்டனின்னும் வைச்சுக்குங்க..” என்று சலீம் திருப்பி பதில் சொல்வதும் நல்லதொரு பதிலடி.. வசனங்கள்கூட மிக சின்னதாக.. ரத்தினச் சுருக்கமாக அழகாக இருக்கின்றன..!
அடுத்து பாராட்டுக்குரியவர் உள்துறை அமைச்சராக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர். அரசியல்வாதிகளுக்கே உரித்தான கவுரவமே முக்கியம் என்கிற கொள்கையை பின்பற்றுபவராக இருக்கிறார். அறிமுக்க் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ்வரையிலும் மகன் மீது பாசம் உள்ளவராகவும், பின்பு மகனையே போட்டுத் தள்ளும்படி அடியாட்களுக்கு சிக்னல் கொடுப்பவராகவும் மாறுவது இன்றைய அக்மார்க் அரசியல்வியாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான்..!
ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா அசத்தியிருக்கிறார். முதல் காட்சியில் இருந்து முற்றும்வரையிலும் பிரேம் பை பிரேம் அழகுதான்.. பாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழகைக் கூட்டியிருக்கிறார். பிற்பாதி விறுவிறுப்புக்கு எடிட்டரும் ஒரு காரணம்.. ஹோட்டல் அறைக்குள் நடக்கும் சண்டை காட்சியை தொய்வில்லாமல் மிக அழகாக தொகுத்திருக்கிறார் எடிட்டர். பாராட்டுக்கள்..!
‘உன்னை கண்ட நாள் முதல்’, ‘மஸ்காரா மஸ்காரா’ பாடல்கள் அருமை. நினைத்தாலே இனிக்கும் படத்தின் ‘சிவ சம்போ’ பாடலை இதில் ரீமிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார்கள். இது ஒன்றுதான் இப்படத்தின் மன்னிக்க முடியாத குற்றம்..! இப்படத்தின் பின்னணி இசையும் குறிப்பிடத்தக்க அளவு தனது பங்களிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறது. சொந்தப் படமென்றால் சாதாரணத்தைவிடவும் மிக நன்றாகவே இசையமைப்பார்கள் போலிருக்கிறது.
இது போன்ற படங்களில் லாஜிக்கெல்லாம் பார்க்கவே கூடாது என்றாலும் சிலவைகளை சொல்லியே ஆக வேண்டும்.. அவ்வளவு பெரிய மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பணம் வாங்குவது என்பது அறவே கிடையாது.. அது தனி பில்லாக ரிசப்ஷனிலேயே கட்டிவிடச் சொல்வார்கள். சின்ன மருத்துவமனையில் மட்டுமே அது சாத்தியம்..
“5 ரூபாய் வாங்கியிருக்கிறீர்களே…” என்று சலீமை எம்.டி. கடிந்து கொள்வது.. பின்பு அதே எம்.டி. “தனது மருத்துவமனையின் இந்த வருட வருமானம் 132 கோடி..” என்று சொல்வது மிகப் பெரிய முரண்பாடு..!
சமீப காலமாக இது போன்ற திரில்லர், சஸ்பென்ஸ் போன்ற படங்களில் போலீஸை மிகக் குறைவாகவே எடை போட்டதுபோலவே காட்சிகளை அமைக்கிறார்கள் நமது இயக்குநர்கள்..
ஒரே சமயத்தில் கதவை உடைத்துக் கொண்டும், ஜன்னல் பக்கம் உடைத்துக் கொண்டும் உள்ளே போனாலே கதை முடிந்துவிடும்.. போலீஸுக்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உள்துறை அமைச்சர் என்பதால் பேசியே சமாளிக்கலாம் என்பதால் இத்தனை பெரிய திரைக்கதையோ..?
கிளைமாக்ஸில் அவ்வளவு அதிகமான போலீஸ் படைகளைத் தாண்டியும் சலீமால் குருவை வெளியில் கொண்டு போக முடியுமென்பது படத்தின் மிகப் பெரிய லாஜிக் ஓட்டை.. இருந்தாலும் படத்தின் இறுக்கமான இயக்கத்தினால் நன்கு ரசிக்க முடிந்தது..! அந்த கிளைமாக்ஸ் டிவிஸ்ட்கூட சூப்பர்தான்..!
முயலைகூட சீண்டிக் கொண்டேயிருந்தால் அது ஒரு கட்டத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு திருப்பிக் கடிக்கத்தான் செய்யும். அதைத்தான் இந்தப் படத்தில் முடிந்த அளவுக்கு நம்பகத் தன்மையோடும், சமூக அக்கறையோடும் சலீம் செய்து காட்டியிருக்கிறார். அடுத்த பாகம் எப்படியோ..?
சலீமுக்கு நிச்சயம் ஒரு சலாம் போடலாமுங்கோ..!

2 comments:

bandhu said...

ஸார் ... நன்றாக எழுதுகிறீர்கள். கொஞ்சம் கதை சொல்லாமல் விமர்சனம் எழுதப் பாருங்களேன்... தயவு செய்து..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் படத்தைபார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-