உன் சமையலறையில் - சினிமா விமர்சனம்

07-06-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மலையாள சினிமா ரசிகர்கள்தான் எத்தனை பெருமைக்குரியவர்கள்..? எந்த மாதிரியான புதிய படைப்புகளாக இருந்தாலும் அதற்கு தோள் கொடுத்து, ஆதரவளித்து, ஊக்கப்படுத்தி மலையாள சினிமாவுலகத்தை பெருமைப்படுத்துகிறார்கள்..! அவர்கள் அளவுக்கு நம் தமிழ்ச் சினிமா ரசிகர்களும் தங்களை மாற்றிக் கொண்டால்தான் இவை போன்ற படங்களை நாமே முதல்முதலாக எடுக்க முடியும்..!
2011-ல் ஆஷிக் ஆபு இயக்கத்தில் வெளிவந்த மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற மலையாளப் படம் ‘Salt N Peper’. வழக்கமான காதல் கதையாக இல்லாமல் காதல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணம், உணவின் மீதான ஆர்வம், ஆசை, வெறி என்று சொல்லி இந்தப் படம் சொல்லியிருந்த புதுமையான விஷயமே படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது..
இந்தப் படத்தைத்தான் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சொந்தத் தயாரிப்பில் ‘உன் சமையலறையில்’ என்ற பெயரில் தமிழிலும், ‘உலவுச்சோறு பிரியாணி’ என்ற பெயரில் தெலுங்கிலும் ‘Vaggarane’ என்ற பெயரில் கன்னடத்திலும் ஒரே நேரத்தில் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கிறார்.. வெல்டன் ஸார்..!

தொல்பொருள் ஆய்வுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் காளிதாசன் என்னும் பிரகாஷ்ராஜ் சிறு வயதில் இருந்தே எந்த உணவையும் விரும்பி, ருசித்து சாப்பிடும் பழக்கமுள்ளவர். பெண் பார்க்கப் போகுமிடத்தில்கூட அங்கே கொடுத்த வடையை ருசித்தவர், அந்த வீட்டில் சமையல்காரராக இருக்கும் தம்பி ராமையாவை கையோடு தன் வீட்டுக்குச் சமையல்காரராக அழைத்து வந்துவிடுகிறார். அந்த அளவுக்கு உணவில் ருசியை விரும்புபவர்.
சிநேகா என்னும் கெளரி ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட். தன்னுடைய தோழிகளுடன் ஒரே வீட்டில் ஷேர் செய்து வாழ்பவர். இவருக்கும் சுவையான உணவு என்றால் உயிர். ஒரு நாள் குட்டி தோசை ஆர்டர் செய்வதற்காக ஹோட்டலுக்கு போன் செய்ய நினைத்து தவறுதலாக பிரகாஷ்ராஜுக்கு போன் செய்துவிடுகிறார்.  ஏற்கெனவே சரக்கடித்த நிலையில் இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு சுள்ளென்று கோபம் வர.. வார்த்தைகளை வீசுகிறார். சிநேகாவும் பதிலுக்குக் கோபப்பட இருவரும் ஒருவரையொருவர் திட்டித் தீர்த்துக் கொள்கிறார்கள்.
பிரகாஷ்ராஜின் அக்கா மகன் பிரகாஷ்ராஜை சமாதானப்படுத்தி ‘ஐ ஆம் ஸாரி’ என்று ஒரு மெஸேஜை சிநேகாவின் செல்போனுக்கு அனுப்புகிறான். அதைப் படிக்கும் சிநேகாவின் தங்கை சிநேகாவை நச்சரித்து பிரகாஷ்ராஜிடம் போனில் பேச வைக்கிறாள். இருவரும் பரஸ்பரம் ‘ஸாரி’ சொல்லிவிட்டு தங்களது பேச்சைத் துவக்குகிறார்கள்.
அவர்களுடைய பேச்சு சாப்பிடும் அயிட்டங்கள் மீது வந்து நிற்க.. இருவருக்குமே இந்த விஷயத்தில் ஒரே அலைவரிசை என்பதோடு பேசுவதற்கும் ஒரு ஆள் இருக்கிறதே என்று நினைத்து தங்களது போன் நட்பைத் தொடர அது அவர்களையறியாமலேயே காதலுக்குள் தள்ளுகிறது.
இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்திக்க நினைக்கிறார்கள். அந்த நேரத்தில் பிரகாஷ்ராஜ் தன்னுடைய நரை முடியை நினைத்து சந்தேகப்பட்டு திரும்பி வர.. அங்கே சிநேகாவும் அதையேதான் செய்கிறார். பிரகாஷ்ராஜின் சார்பில் அவரது அக்கா மகன் செல்கிறான். அங்கே சிநேகாவின் சார்பில் அவளது தங்கை வருகிறாள். இருவருமே பரஸ்பரம் காளிதாஸ்-கெளரி என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். முதல் பார்வையிலேயே இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போய்விட.. பொய்யான பெயர்களோடு உண்மையான காதலர்களாக ஆகிறார்கள் இருவரும்..!
வயது பொருத்தம், உடல் பொருத்தம் கொஞ்சமும் இருவருக்கும் இல்லை என்று காதலர்கள் இருவரும் பிரகாஷ்ராஜ், சிநேகாவிடம் சொல்லிவிட காரணமே இல்லாமல் இருவரும் ஒருவரையொருவர் வெறுக்கத் துவங்குகிறார்கள். அதே நேரம் பிரகாஷ்ராஜ் தான் ஆய்வு செய்து வரும் மலைப்பிரதேசத்தில் வாழும் மலைவாழ் மனிதராக ஜக்கையாவை தன் வீட்டில் கொண்டு வந்து வைத்திருக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவன் போலீஸுடன் வந்து ஜக்கையாவை மீட்டுக் கொண்டு போக.. அந்த ஏமாற்றத்தில் இருந்த ஒரேயொரு பிடிப்பும் கையைவிட்டுப் போன ஏமாற்றத்தோடு இந்த நிகழ்வைக்கூட பகிர்வதற்கு ஆளில்லாமல் பதற்றமாகிறார் பிரகாஷ்ராஜ். இந்த நேரத்தில்தான் கெளரி அவருக்கு முக்கியமாகப்படுகிறது. இதேபோல் சிநேகாவுக்கும் ஒரு மோசமான சூழல் ஏற்பட அவருக்கும் காளிதாஸுடன் பேச வேண்டும்போல் தோன்றுகிறது.
இருவரும் சந்தித்தே தீர நினைத்து ஒரு நாளில் முடிவெடுக்க, காதலர்கள் இருவருக்கும் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் வந்துவிடுகிறது. அவர்கள் தப்பிக்க நினைத்தாலும், வழியில் மாட்டிக் கொள்ள.. இவர்தான் தான் பார்க்கப் போகும் காளிதாஸ் என்று சிநேகாவுக்குத் தெரியாத சூழலில், இவர்தான் நாம் தேடிக் கொண்டிருக்கும் கெளரி என்று தெரியாமல் பிரகாஷ்ராஜூம் ஒரே ஜீப்பில் பயணிக்கிறார்கள்.
கடைசியில் காதலர்களின் சரண்டரினால் உண்மை பிரகாஷ்ராஜுக்குத் தெரிய..  சிநேகாவைத் தேடி வருகிறார். “இத்தனை வயதுக்குப் பிறகும் இப்போது வந்திருப்பது காதலான்னு தெரியலை.. ஆனா நாம சேர்ந்து வாழ பொருத்தமான கம்பெனியன் கிடைத்திருக்கிறதென தான் நினைப்பதாக” பிரகாஷ்ராஜ் சொல்ல.. இதுதான் கிளைமாக்ஸ்.. நச் என்று முடித்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் லால், ஸ்வேதா மேனன் நடித்திருந்தனர். பிரகாஷ்ராஜ், சிநேகா இருவருக்குமே பொருத்தமான கேரக்டர்கள். ஒரு படத்தின் மெயின் கேரக்டர்கள் படத்தின் கிளைமாக்ஸில்தான் சந்திக்கிறார்கள் என்றால் அது இந்தப் படமாகத்தான் இருக்கும்..!
மத்திய வயதுடைய ஒருவருக்கு ப்ரீ மைண்ட்டோடு பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்துவிட்டால் என்னவெல்லாம் பேசுவார்களோ அதையே செய்து காட்டியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். சாப்பிடும் முகபாவனைகளுடன், ருசிக்கும் தன்மையையும் சேர்த்துக் கொள்ள சாப்பாட்டுப் பிரியர்களை மனிதர் தவிக்க விடுகிறார்.  சிநேகாவின் போனுக்காகக் காத்திருந்துபேசும் அந்த்த் தருணம், அவருடனான போன் பேச்சுக்கு பின்பு தானாகவே அவருடைய உடல்மொழியும், பேச்சும் மாறிவிடும் சூழலை மிக யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார்.
வளவள பேச்செல்லாம் இல்லாமல் நறுக்கி வெட்டினாற்போன்ற சின்னச் சின்ன வசனங்கள் மூலமாய் இதுவரையில் தனக்குக் கிடைக்காத அந்த காதல் உணர்வு இப்போது வந்துவிட்டதை உணர்த்தும் காட்சிகளிலெல்லாம் பிரகாஷ்ராஜ் அசத்தியிருக்கிறார். ஜக்கையாவை மீட்டுப் போகும் காட்சியில் யதார்த்தை உணர்ந்து நடைமுறைக்குத் திரும்பிய நிலையில் தம்பி ராமையாவிடம் கோபப்பட்டு கத்திவிட்டு பின்பு திரும்பி வந்து ‘ஸாரி’ சொல்லி நெகிழ வைக்கிறார். இந்தக் காட்சியில் இருக்கும் உள்ளர்த்தம்தான் அவர் சிநேகாவைத் தேட வைக்கிறது.. திரைக்கதை எழுதியவர்களுக்கு ஒரு ஷொட்டு..!
சிநேகாவை இந்த மூக்குக் கண்ணாடியோடு எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகாக இருக்கிறார். பேச்சில் ரசிக்க வைக்கிறார். நடிப்பில் ‘அட’ போட வைத்திருக்கிறார். டப்பிங்கின்போது திடீர் திடீரென்று கிளீர் என்று ஒரு சிரிப்பு சிரிக்கிறாரே.. அது போதும்.. இந்த ‘புன்னகை இளவரசி’ பட்டத்திற்கு..! கிளைமாக்ஸில் எங்கே இவரை வைத்து காவியம் பாட வைத்துவிடுவார்களோ என்று பயப்பட வைத்து பெப் ஏற்றியிருக்கிறார்கள்.
ஊர்வசியின் கதை.. அந்த அழகு நிலையத்தின் ரொட்டீன் கதை.. ‘சரி. எங்கயோ இருக்கானுகள்ள’ என்று அவரவர் ஹஸ்பெண்டுகளை பற்றிப் பேசும் அந்த ஒரு கமெண்ட்டுக்கு தியேட்டரே அதிரும் என்பது உண்மை. காலம் கடந்த திருமண வாழ்க்கையைப் பற்றி மிக யதார்த்தமாக வசனத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்கள். தேங்க்ஸ் டூ கதாசிரியர்..!
காதலர்களாக நடித்திருக்கும் புதுமுகங்களுக்கு இன்னமும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தால் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம்.. தமிழில் ஒரு வருடத்திற்கு 100 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். இதில் 2 அல்லது 3 பேர் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள். பார்ப்போம்..
இசைஞானியின் இசையில் அவரே பாடிய ‘காற்று வெயில்’ மனதைத் தாலாட்டுகிறது.. ‘தெரிந்தோ தெரியாமலோ’ திரைப்பாடல் ரொம்ப நாள் கழித்து அனைத்து வரிகளையும் காதுகளுக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது.. பின்னணி இசையில் வழக்கம்போல அடிக்காமலேயே இசைத்திருக்கிறார். ஜீப்பில் நால்வரும் பயணிக்கும் அந்தக் காட்சியின் இசை ரம்மியம்.. கிளைமாக்ஸ் காட்சியில் அந்தக் கொண்டாட்டத்தின் பாடல் காட்சியும், இசையும்தான் நம்மையும் தாளம் போட வைத்திருக்கிறது.. உற்சாகத்துடனேயே கதையை நகர்த்தி இளம் காதலர்களையும், முதிர் காதலர்களையும் ஒன்று சேர வைத்திருக்கிறார்கள்..
பெண் ஒளிப்பதிவாளர் ப்ரீதாவின் ஒளிப்பதிவு படத்தில் ஒரு தனி கேரக்டர்.. ஒவ்வொரு கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார். வாழ்த்துகள் பாராட்டுக்கள்.  இவ்வளவு நல்ல படத்தில் குடிக்கின்ற காட்சிகள் எதற்கு..? மலையாளப் படவுலகில் அதில்லாமல் இருக்க முடியாது. அவர்களது வாழ்க்கை வேறு.. புரிந்து கொள்வார்கள். நம்மவர்களுக்கு எதற்கு இந்தக் கொடுமை..? தமிழில் குடிப்பது போன்ற காட்சிகள் முழுவதையும் ரத்து செய்திருக்கலாம். அப்படியும் படம் நன்றாகத்தான் இருந்திருக்கும்..
சாப்பிடுவது என்பது வேறு.. சாப்பிடும் பழக்கத்தின் மேல் விருப்பமாவது என்பது வேறு.. இந்தப் படத்தில் ‘சாப்பிடுங்கள்.. ஆனால் ருசித்துச் சாப்பிடுங்கள்..’ என்று போதனை எடுத்திருக்கிறார்கள்.  இன்றைய அவசர பாஸ்ட்புட் காலக்கட்டத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் புரியும்படியாக ஒரு காதலையும் சேர்த்து இனிமையான உணவாக பரிமாறியிருக்கிறார்கள். நாம்தான் இதனை புரிந்து கொள்ள வேண்டும்..!
நல்ல படம் வரவில்லை.. குடும்பத்தோடு பார்க்க முடியவில்லை என்றெல்லாம் நினைப்பவர்கள் தயவு செய்து இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்த்து ஆதரவு கொடுத்து உயர்த்திக் கொடுத்தால்தான் இது போன்று அடுத்தடுத்து படங்கள் அவர்களுக்குக் கிடைக்கும். ‘உன் சமையலறையில்’ படத்திற்கு நல்லாதரவு கொடுத்து ஆதரிக்க வேண்டியது தமிழ்ச் சினிமா ரசிகர்களின் கடமையும்கூட..!
அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

5 comments:

Anonymous said...

அன்பு உண்மை (சரவணன்) சார்
மொட்டை ஞானியின் "ஈரமாய் ஈரமாய்" பாட்டை பற்றி மறந்து விட்டேர்களே நடுவில் அந்த விசில் மிக ரம்மியம் அல்லவே
உண்மையில் நீங்கள் சொன்னது போல் இந்த படத்தை நாம் எல்லோரும் தயவு செய்து ஆதரிக்க வேண்டும்

Unknown said...

SUPER MOVIE

Nondavan said...

பார்க்கும் ஆர்வம் இல்லாமல் இருந்தேன், உங்க விமர்சனத்தை படிக்கு வரை... சொல்லீட்டிங்கல.. பார்த்துவிட்டு சொல்றேன்...

ஆனால் மலையாளத்தில் ஏற்கனவே ரெண்டு முறை பார்த்திருக்கேன்

அமர பாரதி said...

சால்ட் அண்ட் பேப்பர் என்பதே தலையில் இருக்கும் நரை முடியும் கரு முடியும் கலந்த கலவையின் காரணப் பெயர். அதை சமையலறையில் என்று வைத்தது பொருத்தமில்லை.

அமர பாரதி said...

சால்ட் அண்ட் பேப்பர் என்பதே தலையில் இருக்கும் நரை முடியும் கரு முடியும் கலந்த கலவையின் காரணப் பெயர். அதை சமையலறையில் என்று வைத்தது பொருத்தமில்லை.