உயிருக்கு உயிராக - சினிமா விமர்சனம்

‘உயிருக்கு உயிராக’ என்று டைட்டிலை பார்த்து படத்துக்குப் போனால் அது காதலுடன் நாட்டு நடப்பையும் சேர்த்து சொல்லுது..!

காதலையே வெறுத்து ஒதுங்கியிருக்கும் தங்களது மகன் கார்த்திக்கை காதலிக்க வைத்து அவனது வாழ்க்கையில் ஒளியேற்ற நினைக்கிறார் அப்பா பிரபு. இதற்காக உலகத்தில் எந்த அப்பனும் செய்யாத சாதனையாக பேப்பரில் தன் மகனுக்கு காதலிக்க பெண் தேவை என்று சொல்லியே விளம்பரம் செய்கிறார்.
இதனைப் பார்த்துவிட்டு வரும் பல மாணவிகளில் மருத்துவம் படிக்கும் பிங்கியை கார்த்திக்கின் பெற்றோர்களுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. ஆனால் கார்த்திக்கிற்கு காதலையும் பிடிக்கவில்லை. பிங்கியையும் பிடிக்கவில்லை.
நண்பனின் பிறந்த நாள் பார்ட்டியில் கார்த்திக்கின் கிட்டாரை ஒரு பிரெண்ட் எடுத்துப் பயன்படுத்த அவனை ரத்தம் வருமளவுக்கு அடித்து விடுகிறான் கார்த்திக். அடிபட்டவனோ போலீஸ் துணை கமிஷனரின் மகன். இதனால் போலீஸ் கார்த்திக்கை பிடித்துப் போய்விடுகிறது.
அப்போது ஸ்டேஷனுக்கு வரும் பிங்கி தனது செல்வாக்கால் கார்த்திக்கை விடுவிக்கிறாள். அப்போதுதான் பிங்கி தமிழக கவர்னரின் பேத்தி என்பது கார்த்திக்கும், அவனது பெற்றோர்களுக்கும் தெரிய வருகிறது. இதன் பின்பும் கார்த்திக் பிங்கியை நேசிக்காமலேயே இருக்கிறான்.
இந்த நேரத்தில் கார்த்திக்கின் செமஸ்டர் எக்ஸாமிற்கான ஹால் டிக்கெட் கிடைக்காமல் போகிறது. இது பெரிய இடத்து விவகாரம் என்று கல்லூரி முதல்வரும், தாளாளரும் சொல்லிவிட.. தான் காதலிக்க மறுத்த்த்தால் பிங்கிதான் தனது தாத்தாவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதனைச் செய்திருக்கிறாளோ என்றெண்ணி அவளைத் தேடி உத்தராஞ்சலுக்கே ஓடுகிறான் கார்த்திக்.
அங்கே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்த கவர்னரை பார்த்து கார்த்திக் காரசாரமாகக் கத்த.. கவர்னரின் பாதுகாவலர்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறான் கார்த்திக். அப்போது அவனை காப்பாற்றும் பிங்கி, அவனுக்கு தன் மேல் காதல் இல்லை என்றும் தான்தான் அவன் மீது காதல் கொண்டிருப்பதாகவும் தாத்தாவிடம் சொல்லி அவனை விடுவிக்கிறாள். ஹால் டிக்கெட்டையும் பெற்றுத் தருகிறாள்.
இப்போது தாத்தாவிடம் பிங்கி சொல்வதுதான் கார்த்திக்கின் காதல் வெறுப்புக்கான எபிஸோடாக திரையில் தெரிகிறது.
பிளாஷ்பேக்கில் கார்த்திக்கின் அண்ணனா சூர்யாவை அவனுடன் படிக்கும் பிரியா காதலிக்கிறாள். கல்லூரியில் கொடுத்த ஒரு பிராஜெக்ட்டுக்காக வித்தியாசமான ஒரு ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறான் சூர்யா. அதன்படி ஒருவரின் ஆழ்மனதில் என்ன நடக்கிறது என்பதை அவர் நினைக்கும்போது அது காட்சி வடிவத்தில் கம்ப்யூட்டர் திரையிலும் தெரியுமாம்..
இது போன்ற ஆராய்ச்சிக்கு துணையாக வந்த ப்ரியாவை சூர்யா ஏற்க மறுக்க.. அவள் அழுது கூட்டம் கூட்டி அவமானப்படுத்துகிறாள். அப்போது அந்த ஆராய்ச்சியின்படி ப்ரியா தன்னை காதலிப்பதை உணர்ந்துதான் சூர்யா அவளை புறக்கணிப்பதாகத் தெரிய வர.. அப்போதைக்கு சமாதானக்கொடியை பறக்க விடுகிறார் ஆசிரியர். இதனால் காதலர்கள் இருவரும் ஹேப்பி..
சூர்யா-பிரியா கல்யாணத்துக்கு சூர்யாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் திடீரென்று சூர்யாவிடம் வரும் பிரியா, கோடீஸ்வர மாப்பிள்ளை ஒருவன் தன்னை திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும், இதனையே தனது பெற்றோரும் விரும்புவதால் காதலை விட்டுத் தந்து ஒதுங்கிப் போய்விடும்படி கேட்கிறாள்.
எதிர்பாராத இந்த அதிர்ச்சியனால் சூர்யா நொறுங்கிப் போகிறான். அண்ணன் சூர்யாவின் மீது மிகுந்த பாசம் கொண்ட கார்த்திக் இதைக் கேட்டு கோப்ப்படுகிறான். சூர்யாவின் பெற்றோர் பிரியாவின் பெற்றோரைப் பார்த்து நியாயம் கேட்க..  அவர்கள் இவர்களை கேவலமாகப் பேசிவிட பிரச்னையாகிறது.
இந்த நிலையில் திடீரென்று மனம் மாறும் பிரியா,  சூர்யாவை மணக்க சம்மதிக்கிறாள். இந்த நேரத்தில் சூர்யா ஒரு புராஜக்ட் விஷயமாக கல்லூரி மூலமாக மலேசியா போக, பிரியாவுடன் உடன் செல்கிறாள். நல்லவள் போல் நடித்த ப்ரியாவின் முகம் அங்க, கிழிகிறது. தந்திரமாக சூர்யாவை மயக்கி.. அவன் குளிக்கப் போன சமயமத்தில் லேப்டாப்பில் இருந்த அவனது புராஜக்டை அழித்துவிட்டு.. அவனது பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்துவிட்டு தனது பொருட்களை எடுத்துக் கொண்டு சென்னைக்கே ரிட்டர்ன் ஆகிறாள்.
அவளைத் தேடிய சூர்யா ப்ரியா காணாமல் போய்விட்டதாக போலீஸுக்கு போக.. போலீஸ் அவனது பாஸ்போர்ட்டை கேட்கிறது. பாஸ்போர்ட் இல்லாத காரணத்தினால் அவனை கைது செய்கிறாள். அதே நேரம் இங்கே பிரியாவின் ஏற்பாட்டினால் சூர்யாவின் பெற்றோரையும், அவனது தம்பியையும் போலீஸ் கைது செய்து லாக்கப்பில் அடைக்கிறது..  குடும்பத்தையே புகைப்படம் எடுத்து கேவலப்படுத்துகிறார்கள்.
சூர்யா மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரக பெண் அதிகாரி மூலமாக தப்பித்து அவசரமாக ஊர் திரும்புகிறான். அங்கே தனது பெற்றோரை மீட்டு வீட்டுக்கு அழைத்து வருகிறான். ஆனால் காலையில் பேப்பரில் அவனது குடும்பப் புகைப்படம் வெளியாகியிருக்க. இதனைப் பார்த்து நொந்து போய் தற்கொலை செய்து கொள்கிறான். இந்தக் கொடூரமான பிளாஷ்பேக்கினால் இப்போது கார்த்திக் காதல் மீதே வெறுப்பாக இருப்பது தெரிகிறது.
செமஸ்டர் தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்பு கல்லூரியிலேயே பிளேஸ்மெண்ட்ஷிப் நடக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கும் அதிகாரிகள் முன்பாக சிறந்த மாணவர்கள் தங்களது பிராஜெக்ட்டை செய்து காட்ட.. அதில் கார்த்திக் வித்தியாசமான ஒன்றை முன் வைக்கிறான்.
ஒரு நாட்டின் செயற்கைக் கோள்களை இன்னொரு நாட்டின் செயற்கைக் கோள் தாக்கி தகவல் தொழில் நுட்ப தொடர்பை துண்டித்து அதன் மூலம் பொருளாதார பேரழிவை உண்டு பண்ணும் வருங்கால போர் முறையை தடுக்க, விண்வெளி ராணுவம் என்ற கருவியை கார்த்திக் கண்டு பிடித்ததாகச் சொல்கிறான்.
இதனைப் பார்த்துவிட்டு அமெரிக்கா மற்றும் வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் சம்பளம் தருவதாகச் சொல்லி கார்த்திக்கை தங்களது நாட்டுக்கு அழைக்க.. கார்த்திக்கின் தந்தை பிரபு அதை மறுத்து தனது மகன் சொந்த நாட்டுக்காக மட்டுமே உழைப்பான் என்று சொல்லி தனது தேச பக்தியை பறை சாற்றுகிறார். இந்த புகழோடு கூடவே பிங்கியின் உண்மையான காதலையும் உணர்ந்து அவளை ஏற்றுக் கொள்வதும்தான் கிளைமாக்ஸ்..!
‘மண்ணுக்குள் வைரம்’, ‘மருதுபாண்டி’, ‘வெள்ளையதேவன்’, ‘ராஜபாண்டி’, ‘பாண்டித்துரை’, ‘சாமுண்டி’, ‘மறவன்’, ‘வண்டிச்சோலை சின்ராசு’, ‘குருபார்வை’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கும் மனோஜ்குமார் 10 வருடங்கள் கழித்து இயக்கியிருக்கும் படம் இது.
நாயகர்களில் சரண் ஷர்மாவுக்குத்தான் அதிக ஸ்கோப்.. ஆனால் இடைவேளையில் வரும் சஞ்சீவ் அழுத்தமாக நடித்து மனம் கவர்ந்திருக்கிறார்.. நாயகிகளில் அறிமுக நாயகி பிரீத்திதாஸ் நடிக்கவும் செய்து கொஞ்சம் உடலை எக்ஸ்போஸ் செய்தும் செவ்வனே தனது அறிமுகத்தை நிறைவு செய்திருக்கிறார்.. பாடல் காட்சிகளில் அழகாக காட்சியளிக்கிறார். பிரியாவாக வரும் நந்தனா சிநேகாவுக்கு தங்கச்சி போன்ற முகம். ஏற்கெனவே கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இதில் கொஞ்சம் வில்லியாக நடித்தாலும் சஞ்சீவிடம் சண்டையிட்டு கல்லூரியையே கூட்டும் அந்தக் காட்சியில் கத்திக் கூப்பாடு போட்டிருக்கிறார். நல்ல நடிப்பு..
இளைய திலகம் பிரபுவின் அனுபவ அப்பா நடிப்பு பற்றிச் சொல்லவே வேண்டாம். இவரிடம் பெர்மிஷன் கேட்டு செய்தார்களா? அல்லது கேட்காமலேயே செய்தார்களா என்று தெரியவில்லை. சஞ்சீவ் கண்டுபிடித்த மனதில் இருக்கும் பிடித்த விஷயம் பற்றிய ஒரு காட்சியில் பிரபு அந்த கருவியை தன் தலையில் மாட்டியவுடன் அவருக்கு அவர் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் விஷயம் என்று கணினித் திரையில் ஓடுவது ‘சின்னத்தம்பி’ படத்தின் ‘போவோமா ஊர்வோலம்’ பாடல் காட்சி.. படத்தின் சுவைக்காக சேர்த்திருந்தாலும் இதுவும் ஒரு ட்விஸ்ட்டுதான்.. அம்மாவாக ஸ்ரீரஞ்சனி. குறையே வைக்கவில்லை..
‘அநாதை இல்லம்’ என்பதற்கு பதில் ‘உறவுகள் இல்லம்’ என்றும் ‘இலங்கை அகதிகள் முகாம்’ என்பதற்கு பதில் ‘ஈழத்து சொந்தங்கள் இல்லம்’ என்றும் சொல்ல வேண்டும் என்ற கருத்தெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. வசனங்களில் அதிகம் எல்லை மீறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆட்டக்காரி நாகு கேரக்டர்தான் இடிக்கிறது. இவர் அறிமுகப்படுத்திதான் நாம் அப்துல்கலாமை தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன? என்ன கொடுமை சரவணா இது..? இது மட்டும் அப்துல் கலாமுக்குத் தெரிஞ்சா.. அவ்ளோதான்..!
இசையமைப்பாளர் சாந்தகுமாரின் பாடல்கள் ஜிலீர் ரகம். ‘எனக்கு தெரியாமல் எங்கிருந்தாய்’ பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் ஓகேதான். பின்னணி இசை  பரவாயில்லை. அழுவாச்சி நேரங்களில் அதிகம் நம்மை சோதனைப்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். பாடல் காட்சிகளை படமாக்கியவிதமும், பாடல்களும் இந்த இயக்குநருக்குள் இன்னமும் இளமை கொப்பளித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது..
காதல், நட்பு, குடும்பம் என்பதை முன்னிறுத்தி சென்றிருக்க வேண்டிய படம்.. இடையிடையே படத்தின் தயாரிப்பாளர் என்ற ரீதியில் எஸ்.ஆர்.எம். கல்லூரியையும், அதன் நிறுவனர் பச்சைமுத்துவையும் முன்னிறுத்திப் போக.. கடைசியாக படம் அந்தக் கல்லூரிக்காக எடுக்கப்பட்ட பிரச்சார படமோ என்கிற கேள்விக்குறியோடு நின்றுவிட்டது இந்தப் படத்தின் துரதிருஷ்டம்..!
இந்த விளம்பர யுக்தி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் படம் காதலர்களால் நிச்சயமாக பார்க்கப்பட வேண்டிய படமாக இருந்திருக்கும்..!

0 comments: