மாலினி 22 பாளையங்கோட்டை - சினிமா விமர்சனம்

30-01-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


குடும்ப உறவுகளே முக்கியம் என்ற சிந்தனையின்பால் நிறைந்திருக்கும் இந்திய சமூகச் சூழலில் கற்பழிப்புகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது..! உலகளாவிய வர்த்தக கோட்பாடுகள் நமது நாட்டின் கடைக்குட்டி கிராமம்வரையிலும் பரவியிருக்கும் நிலையில் பெண்களை போகப் பொருளாகக் கொள்ளும் உணர்வுகள் மெல்ல மெல்ல அதிகரித்தே வருகிறது.. நாகரிகம் என்ற போர்வையில் ஆண், பெண் உறவுகள் பிரெண்ட்ஷிப் என்ற வகையில் பிரிக்க முடியாத வகையில் செல்லும்போது, அவ்வப்போது அந்த எல்லைக் கோட்டை தாண்டி இது போன்ற கொடூரங்களும் நிகழ்ந்துவிடுகின்றன..!

சாதாரணமாக கற்பழிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் மிகப் பெரிய ஒரு சமூகக் குற்றத்தை நாம் தாண்டிச் செல்கிறோம் என்பதுதான் உண்மை.. ஒழுக்கம் என்பது யாதெனில் என்று நாம் நமது வாரிசுகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் முன்பாகவே அதனைக் கடந்து செல்ல ஆணை பிறப்பிக்கின்றன இன்றைய வாழ்வியல் சூழல். திருமண பந்தம் தாண்டிய காதல்களும், கற்பழிப்புகளும் எல்லை தாண்டிய நிலையில் இன்றைய தலைப்புச் செய்திகளாவதற்குக் காரணம் நம் குடும்ப மரபுகளே.. பெண்கள், ஆண்களுக்கு அடிமைகள் என்ற இந்திய ஆணின் பொது புத்தியில் புதைக்கப்பட்டிருக்கும் விஷத்தை வெளியில் எடுப்பது அவ்வளவு சுலபமில்லை..!

பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தையையே கடந்த சில ஆண்டுகளாகத்தான் நாம் கேள்விப்படுகிறோம்.. அதற்கு முன்வரையிலும் கற்பழிப்புதான்.. இந்த வார்த்தையை கொண்டு வருவதற்கே நமக்கு இத்தனை ஆண்டுகளாகிவிட்டன.. இந்தக் கொடூரங்களை நிறுத்தத்தான் வேண்டும் என்று நாம் விரும்பினாலும், நாள்தோறும் நடக்கும் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன..! 

இந்தக் குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கும் குடும்பம், தாய், சகோதரிகள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனாலும் இன்னொரு பெண்ணை தன் குடும்பத்து பெண் போல நினைக்கும் பக்குவமும், எண்ணமும் பெரும்பாலானோர்க்கு வருவதில்லை. இந்தக் கொடுமைக்கு உள்ளான பெண், போலீஸ், நீதிமன்றம், சட்டம் என்று பெரும் போராட்டம் நடத்தி, தன்னையும் மீடியாவுக்கு வெளிப்படுத்திக் கொண்டு... அதன் பின்னர் அந்த வெளிச்சத்தின் அவலத்திலேயே மிச்சமான தனது வாழ்க்கையை கழிக்க வேண்டுமா..? இது முடியுமா..? சமூகம் அவர்களை இனிமேல் எப்படி கவனிக்கும்..? இதைத்தான் இதுவரையிலான திரைப்படங்கள் சொல்லி வந்தன.. அதே கொடுமைக்கு பெண்களே வேறு வகையிலான தீர்ப்பை தாங்களே எழுதிக் கொள்ள ஆரம்பித்தால் எப்படியிருக்கும் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்..!

2012-ம் ஆண்டில் மலையாளத்தில் '22 பீமேல் கோட்டயம்' என்ற பெயரில் வெளிவந்து பல விருதுகளை வாரிக் குவித்த படம்தான் தமிழுக்கு இந்தப் பெயரில் ரீமேக்காகியிருக்கிறது.. மலையாளத்தில் ரீமா கல்லிங்கால் செய்த கேரக்டரில் நித்யா மேனன்.  பஹத் பாஸில் செய்த கேரக்டரில் மலையாள நட்சத்திர தம்பதிகளான நடிகை ஜெயபாரதி-நடிகர் சத்தாரின் மகன் கிரிஷ் ஜெ.சத்தார்.. மலையாளத்தில் பயமூட்டிய பிரதாப்போத்தன் கேரக்டரில் தெலுங்கு நடிகர் நரேஷ்.. 

பாளையங்கோட்டையைச் சேர்ந்த நர்ஸான நித்யாவின் கனவு, கனடா சென்று நர்ஸிங் பணியாற்ற வேண்டும் என்பது. இதற்காக சென்னைக்கு வந்து ஒரு மருத்துவமனையில் 2 வருடங்களாக நர்ஸ் வேலை பார்த்து வருகிறார். கனடாவுக்கு விசா எடுக்கும் பணியையும் செய்து கொண்டேயிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த முதிர் கன்னி கோவை சரளா.. மற்றும் ஒரு பெரும் பணக்காரரின் கீப்பாக இருக்கும் நண்பியுடன் அந்தப் பணக்காரரின் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருக்கிறார்கள்.

டிராவலிங் ஏஜென்ஸி வைத்திருக்கும் சத்தார், அழகே அழகான நித்யாவின் அழகில் மயங்கி அவளை காதலிக்கிறான்.. உருகுகிறான்.. மருகுகிறான்.. அவளை இம்ப்ரஸ் செய்ய விரும்பி அவன் விரிக்கும்வலையில் நித்யா மயங்கிவிடுகிறாள்.. அவனுடைய பாஸ் என்ற நரேஷ்.. நித்யாவை சந்திக்கும் தருணத்தில் நல்லவனாகவே காட்சியளிக்கிறார்.. ஆனால் அவர்தான் கடைசியில் அவளுக்கு எமனாகிறார்.. உடன் இருக்கும் தனது காதலனும் நரேஷுக்கு துணை என்பதையறியும்போது, யோசிக்கக் கூட நேரமில்லாத சூழலில் திட்டமிட்ட சதியால் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறாள் நித்யா..

சிறையில் இருக்கும் அனுபவசாலிகளால் உலக அறிவு அவளுக்கு புகட்டப்பட.. தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய கயவர்களை சும்மாவிடக் கூடாது என்றே முடிவெடுக்கிறாள் நித்யா. சிறையில் அவளுடைய அறையில் தோழியாக இருக்கும் ஜானகியின் துணையுடன் வெளியே வரும் நித்யா நரேஷையும், சத்தாரையும் தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்காக பழி வாங்குகிறாள். அது எப்படி என்பதுதான் சஸ்பென்ஸான கதை.. இதனை தயவு செய்து வெளியில் சொல்ல வேண்டாம் என்று இயக்குநர் ஸ்ரீபிரியாவே தனது கைப்பட கடிதமெழுதி பத்திரிகையாளர்களிடம் கொடுத்திருக்கிறார்.(மேடம், உங்க கையெழுத்து சூப்பர்..) எனக்கும் இதுதான் சரியென்று படுகிறது.. ஆனால் அதுவென்ன என்பதை அவசியம் நீங்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

படத்தில் தான் வரும் காட்சிகளிலெல்லாம் கண்ணை இமை கொட்டாமல் பார்க்க வைக்கிறார் நித்யா மேன்ன்.. திமிரான அழகி என்பார்கள் அவரை.. அதுவும் ஒருவகையில் சரியானதுதான்.. அத்தனை அழகையும் தனது நடிப்பிலும் காட்டியிருக்கிறார்.. முதலில் அப்பாவியாக இயல்பாக கோட்டாவின் கல்யாண பிரபோஸலுக்கு அழகு காட்டுவதில் இருக்கிறது அவரது நடிப்பு..! சத்தாரின் தேன் தடவிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நம்பி தன்னைத் தொலைப்பதுவரையிலும்.. கேன் ஐ செக்ஸ் வித் யூ என்ற வார்த்தைகளைக் கேட்டதும் அரண்டு போய் கதறுவதிலும் வெகு இயல்பான நடிப்பு.. 

இதே நித்யாதான் கடைசியில் அந்த இரண்டு பழி வாங்கல்களைச் செய்கிறாரா என்ற சந்தேகமும் வரத்தான் செய்கிறது..! மென்மையான அவரை விஜயசாந்தி ரேஞ்சுக்கு மாற்ற ரொம்பவே கஷ்டப்படவில்லையாம் இயக்குநர். அவராகவே மாறிவிட்டார் என்றார் பத்திரிகையாளர் சந்திப்பில்.. நரேஷிடம் ஸ்டைலாக அதிகாரத்துடன் பேசும் காட்சியிலும்,  சிஸ்டர் என்று கெஞ்சியவுடன் எழுந்து சென்று நரேஷின் கன்னத்தில் அறையும் ஒரு கணத்தில் தியேட்டரில் கைதட்டல்கள் நிச்சயம்..! இதேபோலத்தான் சத்தாருடன் இறுதியில் செய்யும் சமரும், அவ்வப்போது அவனது தொலைந்து போன ஆம்பளைத்தனத்தை சுட்டிக் காட்டும் ஸ்டைலும் ரசிக்க வைக்கிறது..!  அம்மணி தனது இரும்புத் திரையைக் கழட்டிவிட்டு களத்தில் இறங்கினால் இங்கேயும் நடிப்புத் திலகமாக வலம் வரலாம்..!

சத்தாருக்கு தமிழில் இது முதல் படம். மலையாளத்தில் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருக்கிறாராம்..! அப்பாவியாய் நடிக்கத் துவங்கி.. அடப்பாவி என்று சொல்ல வைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார். எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அவருடைய அப்பாவின் ஜாடை அப்படியே தெரிகிறது..!  கிளைமாக்ஸில் அவருடைய பரிதவிப்பை பார்ப்பவர்களுக்கு அந்த எண்ணமே வராது என்று நினைக்கிறேன்..! வெல்டன்..

யார் நடித்தாலும் நம்ம பிரதாப்போத்தனை மிஞ்ச முடியுமா என்ற சந்தேகத்தோடுதான் இருந்தேன்.  அது வேறு களம்.. வேறு இயக்குதல் முறை என்பதால் நரேஷ் சில காட்சிகளே என்றாலும் தனது நடிப்பில் குறை வைக்கவில்லை.. அந்த பன்ச் டயலாக்கை இரண்டு முறை உச்சரிக்கும் விதம்தான், படத்தின் டர்னிங் பாயிண்ட்டே. அதனை உணர்ந்து நடித்திருக்கிறார்.. 

குறிப்பிடத்தக்க இன்னொரு கேரக்டர் ஜெயிலில் ரூம்மேட்டாக இருக்கும் ஜானகி.. இப்படியொரு முகத்தை, சினிமாவில் வெயிட்டான கேரக்டரில் பார்த்திருக்க மாட்டீர்கள். மிரட்டியிருக்கிறார்..  கூடுதலாக கோட்டா சீனிவாசராவ்.. ஆஸ்பத்திரி பேஷண்ட் கேரக்டர்.. தனது சொத்துக்களில் பாதியை தர தயார் என்று சொல்லி நித்யாவிடம் தன்னை கல்யாணம் செஞ்சுக்கோயேன் என்று சொல்லும் செல்லமான பேஷண்ட்.. இவரது உதவியும் கடைசியில் நித்யாவுக்கு வந்து சேர்வதை போன்ற திரைக்கதை படத்துக்கு ஒரு வெயிட்டை கொடுத்திருக்கிறது..!

எப்போதும் மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்கள், தமிழில் வெற்றி பெறாது.. அது ஒருவகையான சாபக்கேடு.. ஏனெனில் மலையாளத்தின் இயக்கமும், கதையாக்கமும் வேறு.. சொல்லப்படும் விதமும் வேறு வேறு.. தமிழில் இயக்கத்தின்போது சில சமரசங்கள் செய்யத்தான் வேண்டும். இதற்காகவே இதில் கோவை சரளா கேரக்டரும்.. அதையொட்டிய காட்சிகளும் இருக்கின்றன. இது கொஞ்சம் போரடிக்கிறது என்றாலும், இதைத் தவிர்த்து இயக்குநரின் இயக்கத்தில் ஒரு குறையும் சொல்ல முடியவில்லை..!

மலையாளத்தில் நண்பிகளின் பேச்சுகளிலேயே ஒரு எல்லை மீறிய கமெண்ட்டுகள் நிறையவே இருக்கும்.. ரெஸ்ட்டாரெண்ட்டில் ஹீரோவை பார்த்த நண்பி அவனது பின்புறம் கவர்ச்சியா இருக்குல்ல என்று கேட்டு சிரிப்பார்.. இது தொடர்பாக அவர்களுக்குள் நடக்கும் பேச்சுக்களே சுவாரசியமா இருக்கும். இதை அப்படியே தமிழாக்கம் செய்தால் தொலைந்தது கதை என்பதால் கோவை சரளாவை வைத்து முதிர் கன்னி கதையாடல் செய்திருக்கிறார்கள்..! அதேபோல் ஜென்ஸி என்ற நண்பியின் தற்போதைய தொழில், அவளுடைய கீப் வாழ்க்கை பற்றியெல்லாம் மலையாளத்தில் துவைத்துப் போட்டிருப்பார்கள். இதில் அவற்றை அடியோடு நீக்கியிருக்கிறார்கள்.. போகட்டும். விட்டுவிடுவோம்..!

மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு.. அரவிந்த் சங்கரின் இசை.. முத்துக்குமாரின் பாடல்கள்.. இதையும் தாண்டி இயக்குதலும் சிறப்பாகவே இருக்கிறது.. பல வருடங்களுக்கு பிறகு தமிழ்ச் சினிமாவை இயக்கியிருக்கும் ஸ்ரீபிரியா மேடத்திற்கு பாராட்டுக்கள். இப்படியொரு படத்தை தயாரிக்க யாரும் முன்வர மாட்டார்கள் என்ற நிலையில் துணிந்து தயாரித்திருக்கும் அவரது கணவரும், நடிகருமான ராஜ்குமார் சேதுபதிக்கும் எனது பாராட்டுக்கள்..!

நல்ல படம் வர்றதில்லையே என்று புலம்புவர்களும்.. மாற்று சினிமா வேணாமா என்று கதறுபவர்களும்.. பெண்களுக்கு ஒரு தீர்வு சொல்லக்கூடாதா என்று முழக்கமிடுபவர்களும் ஒரு சேர பார்த்து, அனுபவிக்க வேண்டிய திரைப்படம்.. தயவ செய்து மிஸ் பண்ணிராதீங்க..!

0 comments: