19-07-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கொஞ்சம் 'ரோஜா', கொஞ்சம் 'நீர்ப்பறவை', கொஞ்சம் 'கடல்' - இவைகளை எல்லாம் சேர்த்துக் கொண்டால் இந்த மரியான் கிடைக்கும்..! தன்னுடைய காதலிக்காக சூடானின் எண்ணெய் கம்பெனியில் இரண்டு வருட கான்ட்ராக்ட்டில் வேலைக்குச் செல்லம் தனுஷ், கான்ட்ராக்ட் பீரியட் முடிந்து ஊர் திரும்பும்போது வழியில் சூடானின் தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொள்கிறார்.. எப்படித் தப்பித்து ஊர் வந்து சேர்கிறார் என்பதுதான் கதை..!
'வந்தே மாதரம்' என்ற ஒரு ஆல்பத்தின் மூலமாகவே ஓவர் நைட்டில் இந்தியா முழுவதும் பிரபலமான பரத்பாலாதான் இப்படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார். வசனம் ஜோ.டி.குரூஸ்.. மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சினையைத்தான் இதில் அலசியிருக்கிறோம் என்று பல பிரஸ் மீட்டுகளில் இயக்குநர் சொல்லி வந்தது இப்போது ஜல்லி என்று தெரிகிறது..!
படத்தின் முதல்பாதி முழுவதும் தனுஷ்-பார்வதி காதல் பிரச்சினைகளிலேயே சிக்கித் தவித்து, காதலை சொல்லித் தொலைங்களேன்பா என்று நம்மை கதற வைக்கும் அளவுக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்..! சிறு வயதில் இருந்து பார்வதி தனுஷை விரும்புகிறாராம். ஆனால் தனுஷ் கடலை மட்டுமே விரும்புகிறாராம்.. பார்வதி தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மிகவும் கஷ்டப்படுவார் என்பதால் தான் அவரைத் தவிர்க்கிறேன் என்று தனது நண்பன் அப்புக்குட்டியிடம் சொல்கிறார்.. இதனாலேயே தனக்குள் இருக்கும் காதலை மறைத்து, பார்வதியிடம் நேரில் காதல் இல்லை என்கிறார்.. இப்படியே 5 ரீல் பேசிய பின்பு திடீரென்று காதல் வந்து பெண் கேட்டு வந்த ரவுடியிடம் சண்டைக்கு போகிறார்.. அப்பாடா ஒரு வழியாக காதல் பிறக்கிறது.. ஆனால் பிரச்சினையும் வருகிறது..
பார்வதியின் அப்பா வாங்கிய கடனை உடனேயே திருப்பிக் கொடுக்கும்படி அடி வாங்கிய ரவுடி சொல்ல.. அதற்காக தான் சூடானுக்கு எண்ணெய் கம்பெனியில் வேலைக்குப் போகத் தயார் என்று சொல்லிவிட்டு கிடைக்கும் அட்வான்ஸ் பணத்தை பார்வதியின் தந்தை சலீம்குமாரிடம் கொடுத்துவிட்டுப் போகிறார் தனுஷ்.. மிச்சக் கதையை சுருக்கமாகவே மேலே சொல்லியிருக்கிறேன்..!
காதல்.. காதல்.. காதல்.. மீனவர்களின் பிரச்சினைகளையெல்லாம் தாண்டி இதுதாங்க சினிமா இயக்குநர்களிடத்தில் பெரிய பிரச்சினையா இருக்கு. எத்தரப்பு மக்களாய் இருந்தாலும் அதுக்குள்ள ஒரு லவ்வை கிரியேட் செஞ்சு காதலிக்க வைக்கிறதுதான் இயக்குநர்களின் வேலை.. கடலுக்குள் போனவர்கள் சுடப்பட்டு பிணமாக கரையில் ஒதுங்குகிறார்கள். ஏதோ.. யாராலோ.. கொல்லப்பட்டதாகச் சொல்லி திரைக்கதையை ஒரு ரீலிலேயே முடித்துவிட்டார்கள். அதுக்கு தனுஷிடமிருந்து ஒரு பீலிங்.. அவ்ளோதான்..!
'ஆடுகளம்' படம் கொடுத்த ஹிட்டைவிட அதில் கிடைத்த விருதுதான் தனுஷை மிகவும் மாற்றிவிட்டது என்று நினைக்கிறேன்.. மனிதர் சாதா நடிப்பெல்லாம் நடிக்க மாட்டேன் என்று மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். '3', 'மயக்கம் என்ன', 'அம்பிகாபதி' இதைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் தனது நடிப்பை பிரேம் டூ பிரேம் அள்ளித் தெளித்திருக்கிறார். சந்தேகமே இல்லை.. சிறந்த நடிப்பு.. இந்தாண்டுக்கான சிறந்த நடிகருக்கான போட்டியில் அவரே 2 படங்களுக்காக மோதுவார் என்று நினைக்கிறேன்..!
ஆனால் இதில் ஒரு பயமும் ஏற்படுகிறது.. இப்படியே தொடர்ந்து தனது 360 டிகிரி நடிப்பையும் காட்டுகின்ற கேரக்டரில்தான் நடிப்பேன் என்று தனுஷ் பிடிவாதம் பிடித்தால் கடைசியாக பாலிவுட்டின் நானாபடேகர், ஓம்புரி லிஸ்ட்டில் சேர்ந்துவிடுவாரோ என்று பயமாகவும் இருக்கிறது..! இப்போதே சூர்யா, விக்ரம், கார்த்தி வரிசையில் இருந்து தனுஷும் கீழேயிறங்கிவிட்டதாகவே தோன்றுகிறது..! ஷாட் பை ஷாட்.. எந்தக் காட்சியிலும் தனுஷின் நடிப்பை நடிப்பாகச் சொல்லிவிட முடியாது.. இயல்பாகவே வாழ்ந்தது போலத்தான் இருக்கிறது..! வெல்டன் ஸார்..! அப்படியே படத்துக்கு படம் ஹீரோயின்களுக்கு லிப் கிஸ் கொடுத்துட்டே இருக்காரு.. இதென்ன சென்டிமெண்ட்ன்னு தெரியலை..?
பாரு என்ற பார்வதி மேனன்.. 'பூ' படத்துக்குப் பின்பு செலக்ட்டிவ்வாக தேர்ந்தெடுத்துதான் நடித்தேன் என்றார்.. 'பூ'வை விடவும் மிக அழகாக இருக்கிறார் இதில்.. அற்புதமாகவும் நடித்திருக்கிறார்..! தனுஷுக்கு ஏற்ற ஜோடியாகவும் தெரிகிறார்..! உமா ரியாஸ் தனுஷின் அம்மாவாகவும், தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார் பார்வதிக்கு அப்பாவாகவும் ஆக்ட்டிங் கொடுத்திருக்காங்க...!
“வாழ்க்கைல சாதிக்கணும்னு நினைக்கிறவன் எல்லாரும் பொம்பளை வாடையோடதான் இருக்கணும்..”னு இவர்தான் தனுஷை தூண்டிவிடுறார்..! அதுனாலதான் தனுஷ் தன்னோட வாழ்க்கையைப் பத்தி யோசிக்கிறாராம்.. நல்லாத்தான்யா வசனம் எழுதியிருக்காங்க.. கடல் வசனத்தைவிடவும் மிக இயல்பாக இருக்கிறது.. தெளிவாகப் புரியவும் செய்தது.. கன்னியாகுமரி மாவட்டம் 'நீரோடி' கிராமம்தான் படத்தின் தளம்..! அந்த வட்டார வழக்கு மொழியை.. தமிழைச் சிதைக்காமல், புரியும்படி கொடுத்த வசனகர்த்தாவுக்கு எனது நன்றிகள்..!
படம் முழுக்கவே தனுஷ், பார்வதியின் குளோஸப் காட்சிகள்தான் அதிகம்.. உணர்ச்சிகளைக் கொட்டிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஹீரோவும், ஹீரோயினும் இருப்பதால் காட்சிகள் அனைத்திலுமே நடிப்பை முழுமையாக ரசிக்க முடிகிறது.. ஆனால் இடைவேளைக்கு பின்பு இதுவே சற்று அயர்ச்சியையும் தருகிறது..!
காதலை ஜெயிக்க வைப்பதா? அல்லது தோற்க வைப்பதா? என்றெல்லாம் யோசித்த இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் யோசித்து செய்திருக்கலாம்.. இடைவேளைக்கு பின்பு தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் தனுஷ் இருக்கும்போது செய்யும் சாப்பாட்டு மோனோ ஆக்டிங்.. அதைத் தொடர்ந்த தீவிரவாதிகளின் அடிதடிகள்.. தப்பிப் போகும் முயற்சிகள் என்று அனைத்துமே படத்தின் நீளத்தை உணர்த்தியபடியே இருந்தன.. நிறையவே கட் செய்திருக்கலாம்.. அல்லது வேறு மாதிரியாகவே திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கலாம்.. இயக்குநரின் அதிமேதாவித்தனத்தை இப்படியெல்லாமா காட்டுவது..?
9 நாட்கள் கடந்த பின்புதான் மீட்கப்பட்டதாக இறுதியில் சொல்லப்படுகிறது.. இதில் இடையில் 5 அல்லது 6 நாட்கள்தான் எண்ணெய் நிறுவனத்திடம் பேசும்படி தனுஷிடம் சொல்கிறார்கள். சூடானின் இன்றைய அரசியல் நிலையை சொன்ன இயக்குநர் இன்னும் கொஞ்சம் யதார்த்தத்தை காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தின் பட்ஜெட்டுக்காக இரண்டே இரண்டு ஜீப்புகள்.. மொத்தம் 12 தீவிரவாதிகள் என்று திருப்பித் திருப்பிக் காட்டுவது லாஜிக்கில் மிகப் பெரிய ஓட்டை..!
அதற்குள்ளாக இங்கே என்ன நடந்தது என்பதற்காக பார்வதியை வைத்து மெலோ டிராமாவாக சீரியல்களே தோற்றுப்போகும் அளவுக்கு காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பார்வதிக்கு மனநிலை பாதிப்பு வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு காட்சிகள் இருக்கின்றன.. ஆனால் இறுதியில் அப்படி எதுவும் இல்லை என்றாகிறது..! படத்துக்கு பாஸிட்டிவ்வான முடிவு தேவை என்று முடிவு செய்த பின்பு எதற்கு இந்த சூடான்..? எண்ணெய் அரசியல்..? தீவிரவாதக் கும்பல்..?
பாடல்களில் 'நெஞ்சே எழு' பாடலும், 'கடல் ராசா' பாடலும் ரொம்ப நாளைக்கு பின்பு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் கேட்கத் தூண்டுகின்றன..! பாடலும், படமாக்கப்பட்டவிதமும் சூப்பர்..! இடையிடையே துண்டு துண்டாக பாடல்களும் ஓடி ஓடி ஒளிகின்றன..! இது ஏதோ விவிதபாரதியில் பாட்டுக்கு நடுவில் வரும் விளம்பரம் போல வருவதால் மனதில் ஒன்றவில்லை..!
பின்னணி இசையில் நான் ஏ.ஆர்.ரஹ்மானை அதிகம் நேசித்தவனில்லை.. ஆனால் இந்தப் படத்தில் கொஞ்சம் அதகளம் செய்திருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.. ரவுடியை தனுஷ் அடிக்கத் துவங்கியபோது ஒலிக்கின்ற இசை அபாரம்.. அந்தக் காட்சியையே தூக்கி நிறுத்தியிருக்கிறது.. தன்னையும் அகில இந்திய அளவில் மேலும் மேலும் பிரபலமாக்கிய இயக்குநர் என்பதால் பரத்பாலாவுக்காக இந்தப் படத்தை செய்தேன் என்றார் ஏ.ஆர்.ரஹ்மான். எப்படிச் செய்தாலும் நல்லவையாகவே செய்திருக்கிறார்..!
இத்தனை உழைப்பு.. பணம்.. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் போட்டது கைக்கு கிடைத்தாலே போதும் என்ற திருப்தியோடெல்லாம் தனுஷ் போன்ற ஹீரோக்களின் படங்களை எடுக்கக் கூடாது..! 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' போன்ற படங்களின் தன்மை வேறு.. ஆனால் அதில் இருந்த ரியலிஸம் மற்றைய படங்களில் காணாமல் போய், விருது வாங்கும் தன்மையே மேலோங்கி நின்றது.. இதனாலேயே அந்த மூன்று படங்களும் வெகுஜன ரசிகர்களிடத்தில் இருந்து விலகியே இருந்தன.. இந்தப் படமும் அதுபோலவே வந்துவிட்டதில் எனக்கு பெரும் அதிருப்தி..!
'அம்பிகாபதி' படம் சிறந்த காதல் கதையாக இருந்தும், முழுக்க முழுக்க பாலிவுட் ஆதிக்கமாகவே இருந்ததால் தனுஷ் ரசிகர்களே படம் பார்க்க வரவில்லை..! 'சிங்கம்-2' ஓடுகின்ற ஓட்டத்தைப் பார்த்தால் பொதுவான சினிமா ரசிகர்கள் தங்களுடைய இரண்டரை மணி நேர ஓய்வின் மூலம் இன்னொரு துன்பவியலை ஏற்றுக் கொள்ள தயாரில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது..!
தனுஷின் அடுத்தப் படமாவது அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும்வகையிலும், கல்லாப் பெட்டி நிரம்பும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அவரிடமே கேட்டுக் கொள்கிறேன்..!
'மரியான்' - ஒரு முறை பார்க்கலாம்..!
|
Tweet |
16 comments:
அண்ணே,
இது தான் சுட சுட விமர்சனமா. நான் நாளைக்கு போறேன். பார்த்திட்டு வந்து சொல்லுறேன்.
சரி பாத்துருவோம்...!
சார்... முதல் ஷோவே 11.30க்குதான... அதுக்குள்ள விமர்சனமே எழுதிட்டீங்க... க்ரேட்...
திரை உலகில் நண்பர்களை உடையவர் உ.த. அதனால்,அவர் எந்தப் படத்தையும், சாதாரணமாக, குறைத்து எழுத மாட்டார்.
நன்றி, உ.த. என் பணம், அது என் பணம் என் பணம்.
விமர்சனம் அருமை அண்ணே.
//காதல்.. காதல்.. காதல்.. மீனவர்களின் பிரச்சினைகளையெல்லாம் தாண்டி இதுதாங்க சினிமா இயக்குநர்களிடத்தில் பெரிய பிரச்சினையா இருக்கு//.. இது இல்லாமா சினிமாவா? சிங்கம்-2லே ஏற்கனவே காதலி இருந்தாலும் ஹன்சிகா என்ற பள்ளி மாணவி தேவைப்படும்போது, இதுலாம் சும்ம்மா...
நன்றி.
சிங்கம் 2 இன்னும் பார்க்கவில்லையா? விமர்சனத்தைக் காணோம்
[[[ராஜ் said...
அண்ணே, இதுதான் சுட சுட விமர்சனமா. நான் நாளைக்கு போறேன். பார்த்திட்டு வந்து சொல்லுறேன்.]]]
பார்த்தாச்சா..? படம் எப்படியிருக்கு..?
[[[MANO நாஞ்சில் மனோ said...
சரி பாத்துருவோம்...!]]]
அவசியம் பாருண்ணே..!
[[[kanavuthirutan said...
சார்... முதல் ஷோவே 11.30க்குதான... அதுக்குள்ள விமர்சனமே எழுதிட்டீங்க... க்ரேட்...]]]
பிரிவியூல பார்த்தேன் ஸார்..!
[[[rajasundararajan said...
திரை உலகில் நண்பர்களை உடையவர் உ.த. அதனால்,அவர் எந்தப் படத்தையும், சாதாரணமாக, குறைத்து எழுத மாட்டார்.
நன்றி, உ.த. என் பணம், அது என் பணம் என் பணம்.]]]
எதுக்கு ஸார் இதெல்லாம்..? படம் நமக்குப் பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லப் போறோம்.. இல்லைன்னா இல்லைதான். ஆனா அதுக்காக அவங்க உழைச்ச உழைப்பை இல்லைன்னு சொல்ல முடியுமா..? கடுமையா உழைச்சிருக்காங்கன்னு தெரியுது.. அதுக்காகவாச்சும் சின்னதா பாராட்ட வேணாமா..?
ஜீவா பரமசாமி said...
[[[விமர்சனம் அருமை அண்ணே.
//காதல்.. காதல்.. காதல்.. மீனவர்களின் பிரச்சினைகளையெல்லாம் தாண்டி இதுதாங்க சினிமா இயக்குநர்களிடத்தில் பெரிய பிரச்சினையா இருக்கு//
இது இல்லாமா சினிமாவா? சிங்கம்-2லே ஏற்கனவே காதலி இருந்தாலும் ஹன்சிகா என்ற பள்ளி மாணவி தேவைப்படும்போது, இதுலாம் சும்ம்மா. நன்றி.]]]
ஹி.. ஹி.. அதுதான் இப்போ ஓட்டமாய் ஓடுது.. மக்களின் ரசனையை யோசிச்சுப் பாருங்க..!
[[[ஒரு வாசகன் said...
சிங்கம் 2 இன்னும் பார்க்கவில்லையா? விமர்சனத்தைக் காணோம்.]]]
பார்த்தாச்சு.. எழுதியாச்சு.. லேட்டானதால பப்ளிஷ்தான் பண்ணலை..!
'மரியான்' - ஒரு முறை பார்த்திடலாம்
//எத்தரப்பு மக்களாய் இருந்தாலும் அதுக்குள்ள ஒரு லவ்வை கிரியேட் செஞ்சு காதலிக்க வைக்கிறதுதான் இயக்குநர்களின் வேலை//
1. இப்ப நடக்கற சம்பவங்கள பத்தி எதோ சொல்லனும்னு தொனுசானா தைரியமா சொல்லுங்களேன். ஏன் மறைமுகமா பேசறீங்க?
2. சினிமாவை பாத்து யார் சார் காதலிச்சா. சினிமாவா அவங்களுக்கு சொல்லி குடுக்குது?அந்த அளவுக்கு தமிழக மக்கள் முட்டாளா என்ன?
[[[சித்ரவேல் - சித்திரன் said...
'மரியான்' - ஒரு முறை பார்த்திடலாம்.]]]
சித்ரவேல்.. நலம்தானே..? நேரமிருந்தால் போன் செய்யவும்..!
[[[k.rahman said...
//எத்தரப்பு மக்களாய் இருந்தாலும் அதுக்குள்ள ஒரு லவ்வை கிரியேட் செஞ்சு காதலிக்க வைக்கிறதுதான் இயக்குநர்களின் வேலை//
1. இப்ப நடக்கற சம்பவங்கள பத்தி எதோ சொல்லனும்னு தொனுசானா தைரியமா சொல்லுங்களேன். ஏன் மறைமுகமா பேசறீங்க?]]]
இல்லையே.. நேரடியாத்தானே சொல்றேன்..! காதல் கதைதானே நம்ம சினிமாவின் உயிர்நாடி.. இது இல்லாத படத்தைச் சொல்லுங்க பார்ப்போம்..!
[[[2. சினிமாவை பாத்து யார் சார் காதலிச்சா. சினிமாவா அவங்களுக்கு சொல்லி குடுக்குது?அந்த அளவுக்கு தமிழக மக்கள் முட்டாளா என்ன?]]]
நிச்சயம் முட்டாளில்லை.. அதேபோல் ஏதாவது சொல்லிக் கொடு்ககணும்னு நினைச்சும் காதலை சினிமாக்காரங்க எடுக்கலை..!
Post a Comment