01-07-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு வரும் இயக்குநர் இமயத்தின் படம் என்கிற ஆர்ப்பாட்டம்கூட இல்லாமல் வெளிவந்து, அவரது ரசிகர்களை மட்டுமல்ல, சினிமா விமர்சகர்களையும் சேர்த்தே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது இப்படம்..!
எந்த பெரிய இயக்குநராக இருந்தாலும் காலத்தின் போக்கை ஏற்றுக் கொண்டு, அதனூடேயே பயணம் செய்தால்தான் அவர் எப்போதும் வெற்றி பெற முடியும்.. தான் இப்படித்தான்.. தன் படம் இப்படித்தான் இருக்கும்.. இஷ்டம் இருந்தால் படம் பார் என்று சொன்னால் ரசிகர்களின் பதிலும் இப்படித்தான் இருக்கும்..!
தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு பார்த்தாலும் சலிக்காத விஷயம் காதல் மட்டுமே.. அதில் பாரதிராஜா எக்ஸ்பர்ட் என்பது இப்போது தாத்தாவாகிவிட்ட ரசிகர்கள் பேசும் பேச்சு.. காதலை எந்த அளவுக்கு ஸ்பீடு எக்ஸ்பிரஸ் போல் பாவிப்பது என்பதை இந்தக் கால காதலர்களிடத்தில்தான் நீங்கள் பார்க்க முடியும்..! அதற்கேற்றாற்போல்.. இப்போதைக்கு சினிமா தியேட்டர்களை நாடி வரும்.. ஓடி வரும் காதலர்களையும் கவரும்வகையிலாவது காதலை கொடுத்திருந்தால் இந்த விமர்சனத்தின் முதல் பாராவிலேயே அசத்தல் என்று சொல்லியிருப்பேன்.. இப்படி கந்தல் என்று சொல்ல வந்திருக்கவே மாட்டேன்..!
செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனுக்கும், சாராயம் விற்கும் பெண்ணின் மகளுக்குமான காதல்தான் கதை. இதில் வட்டி தொழில் செய்யும் அலப்பறையான ஒரு தாதா.. அவரது மகனான வில்லன்.. இவர்கள் எப்படி இவர்களது காதல் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள் என்பதை இயக்குநர் இமயம் தனது சாதி சார்ந்த பார்வையிலேயே பார்த்து பிலிமில் எடுத்துக் கொடுத்திருக்கிறார்..!
படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் எந்தவகையிலும் படத்தில் ஒட்ட முடியாமல் தவிக்கிறோம்.. அது என்ன என்றுதான் தெரியவே இல்லை..! ஒருவேளை இது எந்தக் காலத்திய படம் என்பதை துவக்கத்திலேயே ஸ்லைடு போட்டு விளக்கியிருந்தால் படம் பார்ப்பவர்களுக்கு சின்னக் குழப்பம் வந்திருக்காது என்று நினைக்கிறேன்..!
ஒரே ஊர்.. பலரும் ஜாக்கெட் அணிந்திருக்கிறார்கள். சிலர் மட்டுமே அணியாமல் இருக்கிறார்கள்.. போலீஸ் அணிந்திருக்கும் தொப்பி 1975-க்கு முந்தைய காலக்கட்டத்தைக் காட்டுகிறது..! 1 ரூபாய்.. 2 ரூபாய் நோட்டுக்களைக் காட்டுகிறார்கள். 5 ரூபாய்க்கு சந்தைக்குப் போகலாம் என்கிறார் மீனாள். ஆனால் கார்த்திகாவின் மேக்கப்பை பார்த்தால் வருட பிரச்சினை ஏகத்திற்கும் வருகிறது..!
பாரதிராஜாவின் டச் வேண்டும். இல்லையென்றால் படம் பார்க்க வர மாட்டோம் என்று எந்த ரசிகன் கூப்பாடு போட்டானோ தெரியவில்லை.. படத்தில் அதிகம் தெரிவது பாரதிராஜா மட்டுமே..! செருப்பு தைப்பவனின் மகன் என்பதாலோ என்னவோ ஒரு செருப்பும் இதில் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறது.. அது கடைசிவரையிலும் வருகிறது என்பதே இந்தப் படத்தின் மிகச் சிறப்பான ஒரு அம்சம்..! அந்தச் செருப்பு படும்பாட்டை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.. இயக்குநர் இமயத்திற்கு கற்பனை வறட்சி இந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டாம்..!?
காதலர்களின் காதல் விளையாட்டை காட்டுகிறேன் என்ற போர்வையில் இந்தக் காலத்திலும் இப்படியெடுத்தால் யார் பார்ப்பார்கள் என்று உதவி இயக்குநர்கள் முன்கூட்டியே எச்சரிக்காதது குறித்து பெரிதும் வருத்தப்படுகிறேன்..! பூச்சிக் கடிக்கு இதுதான் மருந்து என்று விரல்களை சூப்புவது..! ஆட்டுப் பாலை கறந்து ஹீரோவுக்கு வைத்தியம் செய்வது.. கை இருப்பதை மறந்துவிட்டு ஹீரோயின் தன் நாக்கால் நக்கியெடுப்பது..! செருப்புக்கு மாலை மரியாதை அணிவித்து மரியாதை செய்வது..! இப்படியெல்லாம் இம்சை செய்துதான் அந்தக் காதல் ஜெயிக்க வேண்டுமா..? கிராமத்துக் காதலில் ஒரு சதவிகிதம்கூட இப்போது இந்தப் படத்தில் காட்டப்பட்டதுபோல் இல்லை. அங்கேயும் காதலில் அடுத்த நூற்றாண்டுக்கே போய்விட்டார்கள்.. நம்ம டைரக்டர் மட்டுமே இன்னமும் 1977-லேயே இருக்கிறார்..!
வாங்கிய பணத்தைத் தரவில்லை என்பதற்காக மனைவியை அபகரித்துச் செல்வது பார்த்துப் பார்த்து சலித்த காட்சி. வில்லன் மனோஜ், ஹீரோயினை திருமணம் செய்வதுவரையிலும்கூட சரிதான்.. அதற்குப் பின்பு கிளி செத்த நிலையில் வில்லன் இருப்பது. இதனையொட்டியே மாமனார் மருமகளை மடக்கப் பார்ப்பது.. மருமகளின் முதுகை பார்ப்பது.. இடுப்பை பார்ப்பது.. கை விரல்களை சூப்புவது.. காலைச் சுரண்டுவது என்று பிட்டு பட ரேஞ்சுக்கு காட்சிகளைக் காட்டியிருப்பது யூ டூ இயக்குநர் இமயம் என்று கேட்கத்தான் தோன்றுகிறது..
இதனினும் உச்சக்கட்டமாக மனோஜ், ஹீரோவை பார்த்துவிட்டு வந்ததற்காக ஹீரோயினை நடுவீட்டில் அமர வைத்து தலையில் தண்ணீர் ஊற்றி கேவலப்படுத்துவது.. அரை நிர்வாணமாக்கி ஆட்டுக் கொட்டடியில் சிறை வைப்பது.. - இதெல்லாம் கிராமத்தில் நடக்கிறது.. நடந்தது என்றெல்லாம் சொன்னாலும் இதை இந்தக் கதையில் காட்ட வேண்டிய அவசியமென்ன என்றுதான் கேட்கத் தோன்றுகிறது..!
இதனினும் அசிங்கமான காட்சியமைப்பு.. மீனாள் சம்பந்தப்பட்டவை.. ஊருக்கு வெளியே பாலியல் தொழில் செய்யும் அவரிடமே சின்ன வயது பையன்கள் வந்து பைசாவை நீட்டி “வரட்டுமா..?” என்று பூடகமாகப் பேசுவதெல்லாம் எந்தக் கிராமத்து அத்தியாயத்திலும் சேர்க்கப்பட முடியாத விஷயங்கள்..! மீனாளின் பரந்து விரிந்த முதுகையும், லேசுபாசான ஜாக்கெட் அணியாத உடம்பையும் காட்டியிருக்கும் காட்சிகளெல்லாம் பிட்டு படங்களின் நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகப் பெரிய கொடுமை..! அப்பனும், மகனும் ஒரே பெண்ணிடம் வருகிறார்கள் என்பதையும் இறுதியில் காட்டி அதிரடி புரட்சி செய்திருக்கிறார் இயக்குநர் இமயம்..!
படம் வெளியானவுடனேயே மதுரை மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சியினர் தங்களது தேவரினத்தினரை கேவலப்படுத்தியிருக்கிறார் பாரதிராஜா என்று போர்க்கொடி தூக்கி அவரது வீட்டு முன் மறியல் செய்திருக்கிறார்கள். அதற்குப் பதில் அறிக்கையை பாரதிராஜா இன்றைக்கு அளித்திருக்கிறார். அதில் தான் எந்த சாதியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார்..!
ஏற்கெனவே தென் மாவட்டங்களில் முணுக்கென்று கம்பையும், அரிவாளையும் தூக்கிவிடுவார்கள்.. அரசியல்வியாதிகளிடமே சாதியைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இப்படி முழுக்க முழுக்க சாதிப் பெருமை பேசும் படத்தை எடுத்துக் காண்பித்து இதுதான் அந்தப் பகுதியில் நடக்கிறது என்று காட்டினால் எப்படி..?
பெண் கேட்டு போன இடத்தில் ரமாபிரபா பேசும் வசனங்களும், அதன் காட்சியமைப்புகளும் அப்பட்டமாக சாதி வெறி பிடித்தவை..! பெண் கேட்டு போகுமிடத்தில் இந்த அளவுக்கா பேசுவார்கள்..? பெரியவரை தள்ளிவிட.. ஹீரோ கோபத்தில் உதைத்துவிட.. ஹீரோவை கட்டிவைத்து அடிப்பது.. பெரியவர் மீது சாணித் தண்ணியை வீசுவது.. என்று பக்காவான கிராமத்து அடிதடியை காட்டினாலும் அதில் ஜீவன் இல்லை..!
சாதி வெறி அடையாளம் இது மட்டுமல்ல.. போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரும் அப்படியே தேவர் முக ஜாடை.. அவரும் பல பொய்க் கேஸ்கள் போட்டு ஹீரோவை உள்ளே தள்ளுகிறார்.. ஆனால் அந்த போலீஸ் ஸ்டேஷன் பெரியகுளம்..! பெரியகுளத்தை சுத்தி யார், யார் குடியிருக்கிறார்கள் என்று தோண்டிப் பார்த்தால் இதில் யாரை இவர் சொல்லியிருக்கிறார் என்பது தெரியும்..!
போலீஸ் ஸ்டேஷனில் நடிக்கும் அடிதடியில் ஹீரோ அடிக்கப் பாயும்போதுதான் அவரது பின்னணியில் அம்பேத்கரின் புகைப்படத்தைக் காட்டுகிறார்கள்.. இன்ஸ்பெக்டருக்கு பின்னால் காந்தியார் அநியாயத்திற்கு சிரிக்கிறார்.. அதுக்கும், இதுக்கும் சரியாப் போச்சாம்..!
படத்தின் மிக முக்கியமான இறுதிக் கட்டத்தில் ஒரு கனவுக் காட்சியை வைத்து கொலை செய்திருக்கிறார் திரைக்கதையை..! அரை நிர்வாணக் கோலத்தில்.. ஆட்டுக் கொட்டடியில்.. தான் கண்டெடுத்த அந்த பாழாய்ப் போன செருப்பை பார்த்தவுடன் ஹீரோயினுக்கு மீண்டும் ஹீரோவின் நினைப்பாம்.. உடனே டூயட்டாம்..! முடியல சாமி..!
ஹீரோ லட்சுமணன்.. கோடீஸ்வர பையன்.. பாவம் இப்படி வயக்காட்டிலும், ஊர்த் தெருவிலுமாக ஆடியோடி நடித்திருக்கிறார். ஹீரோவுக்கான களையே இல்லை என்றாலும்.. புதுமுக நடிகர் என்பதாலும் விட்டு வைப்பதுதான் நியாயமானது.. இன்னும் வாய்ப்பு கிடைத்து நடித்து பெயர் பெற்றால் சந்தோஷம்தான்.. பாண்டியனையே நடிக்க வைத்து அழகு பார்த்து தமிழ்த் திரையுலகம் என்பதை நாம் மறக்கக் கூடாது..!
படத்தின் மிகப் பெரிய பலம் பாரதிராஜாவுக்கு பின்பு ஹீரோயின் கார்த்திகாதான்.. நிச்சயம் கார்த்திகா பாரதிராஜாவுக்காகவே இப்படத்தில் இந்த அளவுக்குத் துணிந்து நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. வேறு இயக்குநர் என்றால் நிச்சயம் மறுத்திருப்பார்..! முதலில் ஹீரோ.. பின்பு கிராமத்துத் தெருக்களில் வெறும் காலோடு நடக்க வைத்திருக்கும் கொடுமை.. அரை நிர்வாணக் கோலத்தில் நடித்திருப்பது.. இதெல்லாம் பாரதிராஜாவுக்காக மட்டுமே என்பதால் அதற்கொரு பாராட்டை தெரிவிப்போம்..! படத்தில் அதிகபட்சம் நடித்திருப்பதும் இவர் மட்டுமே..!
மனோஜ்தான் இந்தப் படத்தின் ஹீரோ போல் நடித்திருக்கிறார். ஆனால் வில்லன். முக்காலே மூணு வீசம் காட்சிகளிலும் மனோஜ்தான் தென்படுகிறார்..! இவருக்கான பஞ்ச் டயலாக்குகள்.. பாடல்கள் என்று பலதையும் வைத்து மகனை ஸ்கோர் செய்ய வைத்திருக்கிறார் இயக்குநர் இமயம்.. ஆனால் வெற்றி கிடைக்குமா என்பதை அடுத்து வரும் வாய்ப்புகளின் மூலம்தான் தெரிய வரும்..! ஆனாலும் கார்த்திகாவை டார்ச்சர் செய்யும் காட்சிகளிலெல்லாம் இவரிடம் தெரியும் வெறியை பார்த்தால் தொடர்ந்து வில்லனாகவே இவர் நடித்து புகழ் பெறலாம் என்றே நினைக்கிறேன்..!
ஒரு பாடல்கூட முணுமுணுக்க வைக்கவில்லை.. பெயருக்கு போட்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.. பின்னணி இசையமைக்க நேரமில்லை என்றாரோ என்னவோ சபேஷ் முரளியை வைத்து செய்திருக்கிறார்கள். அதுவும் ஜவ்வு மிட்டாய்..! போலீஸார் ஊருக்குள் வந்து அதகளம் செய்யும் காட்சியை பாருங்கள்.. பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்று தெரியும்..!
இளையராஜா இல்லாத பாரதிராஜா பாதி பலம் குறைந்தது போலத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்..! அன்னக்கிளி செல்வராஜ், கலைமணி போன்றோரிடமிருந்து கதைகளை வாங்கி, திரைக்கதை செப்பனிட்டு, வசனமெழுதி இயக்கிய இவரது படங்களெல்லாம் அப்போதைய பொக்கிஷங்கள்தான்.. இப்போது இவர்களும் இல்லாமல் போக.. தனது மகனுக்காக படத்தை எடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முழுமையாக எதிர்கொள்ள முடியாமல் மிகத் தேவையான நேரத்தில் ஒரு முழுமையான தோல்விப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் இமயம்..!
முன்பே சொன்னதுபோல மாமனார் போர்ஷனை முழுமையாக நீக்கியிருந்தால் இப்படம் பாரதிராஜாவுக்கே மிக முக்கியமான படமாக இருந்திருக்கும். ஆனால் இப்போது தமிழ்ச் சினிமாவிலேயே மிக முக்கியமான படமாக வேறொரு கோணத்தில் சொல்லப்பட்டுவிட்டது. இதனை ரப்பர் வைத்தெல்லாம் அழித்துவிட முடியாது..
இதேபோன்று ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில்கூடத்தான் காட்சிகள் இருந்தன..! பாண்டியன் மைனர் வேடத்தில் நடித்திருப்பார். அவருக்காக பாடல் காட்சிகூட இருந்தன.. ஆனாலும் படம் வெற்றி பெற்றது. அதே பார்முலாவையே இதில் பாலோ செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் வெற்றிக்குக் காரணம் அதில் இருந்த அண்ணன்-தங்கை பாசம்.. ரத்னகுமாரின் கதைக்கு இயக்கம் மட்டுமே செய்தார் பாரதிராஜா.. இதில் எல்லாவற்றையும் அவரே செய்ததுதான் பெரும் கவனக்குறைவு..!
‘கிழக்குச் சீமையிலே’ படம் போலவே மாட்டு வண்டி பாடல் காட்சி.. சேலை பறந்து போவதற்குப் பதில் இங்கே சட்டை பறந்து வந்தது..! இறுதிக் காட்சிகூட புதிய வார்ப்புகள் படத்தின் காப்பிதான்..! அதில் வைக்கோல்போருக்குள் வைத்து சொக்கப்பானை கொளுத்துவார்கள்.. இதில் ஆழியில் வைத்து மலையில் இருந்து உருட்டிவிடுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்..!
படத்தின் இறுதியில் “இதெல்லாம் கிராமத்துக் கதைகளில் இருந்து நான் சொன்ன ஒரு அத்தியாயம் மட்டுமே..” என்கிறார் இயக்குநர் இமயம்.. இவர் சொல்வது மட்டும் உண்மையானால், இவ்வளவு கேவலமான சமூகச் சூழலை வைத்துக் கொண்டு தமிழ்க் கலாச்சாரம் எப்படி உயர்வானதாக கருதப்படும்..? மூத்தக்குடி தமிழ்க்குடி என்று எப்படி நாம் பெருமையாகப் பேச முடியும்..? இதுவே படு கேவலமான சமூகமால்ல இருக்கு..? இந்தக் கொடுமையை நாம எங்க போய்ச் சொல்றது..?
பாரதிராஜா அடுத்து படம் இயக்கத் தயாராகும் முன் ‘16 வயதினிலே’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘காதல் ஓவியம்’, ‘கடலோரக் கவிதைகள்’ என்று காதலுக்காகவே அவர் நினைக்கப்படும் அவருடைய பழைய படங்களை இன்னொரு முறை பார்த்துவிட்டு களத்தில் இறங்குவது அவருக்கும் நல்லது.. அவருடைய பரம ரசிகர்களாகிய என்னைப் போன்ற லட்சணக்கணக்கான ரசிகர்களுக்கும் நல்லது..!
சிறந்த கலைஞர்கள் தோல்வியடைவதை அவரது ரசிகர்கள் விரும்பவே மாட்டார்கள். அந்த வகையில் பாரதிராஜாவைவிடவும் எங்களுக்குத்தான் இது மிகப் பெரிய தோல்வி..! மிகவும் வருந்துகிறோம்..!
|
Tweet |
12 comments:
பா.ராஜா ஒரு கட்டத்திலேயே தேங்கி விட்டார். இப்பொழுது இன்னொரு சந்தேகமும் வருகிறது .. (வரக்கூடாது தான், வந்ததை அதக்கி வைப்பானேன்)?. செல்வராஜ் இல்லாமல் பா.ராஜாவால் ஒரு படம் கூட வெற்றியடைய முடியவில்லையோ?
//காதலர்களின் காதல் விளையாட்டை காட்டுகிறேன் என்ற போர்வையில் இந்தக் காலத்திலும் இப்படியெடுத்தால் யார் பார்ப்பார்கள் என்று உதவி இயக்குநர்கள் முன்கூட்டியே எச்சரிக்காதது குறித்து பெரிதும் வருத்தப்படுகிறேன்..!//
அவர்கள் எச்சரித்தாலும் அதைக் காதில் வாங்கிக் கொண்டு அதன்படி நடக்கக் கூடியவரா இவர்?
தலைவிதிங்கிறது இதுதான் போல. ஏன் வெளங்க்காத படமாப் போச்சு ன்னு போயிப் பார்த்தீகளாக்கும்?
//ஜாக்கெட் அணியாத உடம்பையும் காட்டியிருக்கும் காட்சிகளெல்லாம் பிட்டு படங்களின் நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகப் பெரிய கொடுமை..! // hahahahhaa.. Super அண்ணாச்சி... சரியா சொன்னீங்க...
நல்ல வேளை, பார்த்திபன் தப்பிச்சுட்டார்.. :) :) :) பாவம் மனுஷன், அவர் கிராஃபை இழுத்து மூடிருப்பார், இதில் நடித்திருந்தால்...
பாண்டியனையே நடிக்க வைத்து அழகு பார்த்து தமிழ்த் திரையுலகம் என்பதை நாம் மறக்கக் கூடாது..!
-- Whats wrong with Pandian personality or acting? No different from many other heroes of that time.
இதில் வருத்தப்பட என்ன இருக்கு? வாழ்ந்து கெட்டவர்களுக்கு எதையும் ஏற்றுக் கொள்ள மனமிருக்காது
அண்ணாச்சி,
பாரதிராசாவுக்கு வாய் வளந்திருச்சு,மூளை தேய்ஞ்சிடுச்சு :-))
கார்த்திகாவை முடிஞ்ச அளவுக்கு "காட்டியிருக்காரு"ன்னு சொல்லுறிங்க,அப்போ முன்வரிசை ரசிகர்களுக்கு ஓ.கே தான்!
அன்னக்கொடியும் கொடி(ய) வீரனும் னு பேரு வச்சிருக்கலாம் :-))
//ஏற்கெனவே தென் மாவட்டங்களில் முணுக்கென்று கம்பையும், அரிவாளையும் தூக்கிவிடுவார்கள்.. அரசியல்வியாதிகளிடமே சாதியைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இப்படி முழுக்க முழுக்க சாதிப் பெருமை பேசும் படத்தை எடுத்துக் காண்பித்து இதுதான் அந்தப் பகுதியில் நடக்கிறது என்று காட்டினால் எப்படி..?//
நீங்க தானே சார் சினிமாவை பாத்து அப்படியே நம்பறதுக்கு தமிழக மக்கள் ஒன்னும் முட்டாள் இல்லைன்னு விஸ்வரூபம் படத்தை பாத்துட்டு தத்துவம் சொன்னிங்க. இப்ப இந்த மாதிரி ஒரு சீன வந்தா தான் என்ன? இத பாத்து மக்கள் அப்டியே நம்பிடுவாங்களா என்ன?
//படத்தின் மிகப் பெரிய பலம் பாரதிராஜாவுக்கு பின்பு ஹீரோயின் கார்த்திகாதான்..//
நன்றி.
இப்படிக்கு,
கார்த்திகாவின் கொலைவெறி ரசிகர் பட்டாளம்.
கிளை எண்.10300
இந்த மணிரத்னம் , பாரதிராஜா மாதிரி பெருசுங்கள்லாம் இனி படமேஎடுக்கக்கூடாதுன்னு இந்தியன் பீனல் கோடுல லா எதுவும் பாஸ் பண்ணக்கூடாதுங்களா?
படம் எடுத்தே கொல்றாய்ங்க..........
bommalattam piragu migavum ethir partha padam. yemandu vitten..
Post a Comment