சூது கவ்வும் - சினிமா விமர்சனம்

06-05-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு காதல் கதை.. 4 டூயட்டுகள்.. ஒரு குத்துப் பாட்டு.. ஒரு சோகப் பாட்டு.. 3 பைட்டுகள்.. மொக்கை நடிகர்களை வைத்து மொக்கை நகைச்சுவை பிளாக்.. இப்படி ஒரு டெம்ப்ளேட் கதையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாவில் வெற்றி பெறுவது என்னவோ வித்தியாசமான கதைக்களன் கொண்ட சிறந்த இயக்கத்துடன் கூடிய படங்கள்தான்.. மற்றவைகளெல்லாம் தினசரிகளில் மட்டுமே வெற்றி என்று அவர்களே எழுதிய வாசகங்களுடன் விளம்பரமாக வந்து கொண்டிருக்கிறது..!

சமீப காலமாக புதிய இளம் இயக்குநர்களின் வருகை தமிழ்ச் சினிமாவுக்கு புத்துயிர் தந்து கொண்டேயிருக்கிறது.. மிகக் குறுகியக் காலக்கட்டத்தில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் வித்தியாசமாக, இன்றைய இளைஞர்களைக் கவருகின்றவகையில் இவர்கள் தரும் படைப்புகள் தியேட்டர்களில் கொண்டாடப்படுகின்றன..! 

இனி தமிழ்ச் சினிமா இயக்குநர்களின் பாடு பெரிதும் திண்டாட்டம்தான்.. எந்த மாதிரி படமெடுத்தால் ஓடும் என்பதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது. அது முற்றிலும் புதுமையாக இருந்தாக வேண்டும். பார்வையாளனுக்கு அவன் அதுவரையில் பார்த்திராத வகையில் காட்சிகளைத்  தர வேண்டும்.. இது இருந்தால்தான் வசூல் கல்லா கட்டும். இல்லையெனில் எத்தனை பெரிய இயக்குநர் என்றாலும் பெப்பேதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது இந்தப் படம்..!




சற்றே மனம் பிறழ்ந்த நிலையில் இருக்கும் விஜய் சேதுபதி, ஒரு சின்ன டைப் கிரிமினல்.. ஆள் கடத்தல் தொழில் செய்யும் இவருடன் சந்தர்ப்பவசத்துடன் கூட்டணி சேரும் 3 இளைஞர்களும் ஒரு அமைச்சரின் மகனைக் கடத்துகிறார்கள். அமைச்சரின் மகனோ இவர்களுடனேயே கூட்டணி சேர்ந்து பணத்தை பங்கீட்டுக் கொள்ள விரும்ப.. அதற்கும் தலையசைக்கிறார்கள். வேன் விபத்துக்குள்ளானதில் அந்தத் திட்டம் பணால் ஆனாலும், நேர்மையான அமைச்சரின் தீவிர முனைப்பினால் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்ஸ்பெக்டர் பிரம்மா சென்னைக்கு மாற்றலாகி வந்து இவர்களைத் தேட.. இவர்கள் தப்பித்து ஓட.. கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் கதை..!

வழக்கம்போல யதார்த்தத்தைக் காட்டுகிறேன் என்று படம் நெடுகிலும் தண்ணியடிக்கும் காட்சிகளும், சிகரெட் பிடிக்கும் காட்சிகளும் வலம் வருகின்றன.. கிரிமினல்களில் சின்ன, பெரிய என்றெல்லாம் வித்தியாசமில்லை.. அனைவருமே ஒன்றுதான் என்பதுபோல் காட்டியிருக்கிறார்கள்..!

படத்தில் பெரிய ரசிப்பே படத்தில் நடித்தவர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான்..! நயன்தாராவுக்கு கோவில் கட்டிவிட்டு சென்னைக்கு ஓடி வரும் இளைஞன்.. குளித்து முடித்து பவ்யமாக காலையிலேயே கட்டிங் போட அமரும் இன்னொரு இளைஞன்.. ஐடியில் பணியாற்றியும் வேலை கிடைக்காத தருணத்தில் இவர்களோடு கூட்டணி வைக்கும் ஒரு இளைஞன்.. இவர்களையும் தாண்டி மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி.!

இவரது காதலி உயிருடன் இருப்பதுபோலவும், இவரது கண்ணுக்கு மட்டுமே தெரிவதும், பேசுவதும் GHOST படத்தின் கதை, திரைக்கதைதான்..!  ஆனால் சுவாரசியம் பேசுகின்ற வசனத்தில் இருக்கிறது.. சொதப்பிட்டியே மாமா என்ற வசனத்தை ஹீரோயின் உச்சரிக்கும் பாணியே பிடித்துப் போய்விடுகிறது.. நல்லவேளை இந்தக் கதையை அடுத்த ரீலிலேயே உடைத்து நம் மண்டை உடைந்துவிடாமல் காப்பாற்றிய இயக்குநருக்கு நன்றி..!

அசட்டுத்தனமான காமிக்ஸ் காட்சிகள் படம் முழுவதும் நிரவியிருக்கிறது..! புட்பால் பிளேயாரான ஒரு பெண்ணை கடத்த முயற்சித்து.. அது முடியாமல் போவது.. மூன்று இளைஞர்களும் முதன்முதலில் விஜய்யுடன் இணைவது.. அமைச்சரின் மகனைக் கடத்தச் சொல்லி ஆர்டர் கொடுக்கும் ஆளைக் கண்ணைக் கட்டி அழைத்து வருவது.. அந்தாள் வரும் வழியை தெரிந்து கொண்டு பேச்சுவார்த்தையின் முடிவில் அதனைச் சொல்வது.. கடத்தலை செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை விஜய் சேதுபதிக்கு உண்டாக்குவது.. வேறொரு டீம் கடத்திய பின்பு போலீஸ் டிரெஸ்ஸில் மந்திரி மகனை இவர்கள் கடத்துவது.. இந்தக் காட்சிகளிலெல்லாம் வசனமே தேவையில்லாத அளவுக்கு காமெடியாகவே படமாக்கியிருக்கிறார்கள்..! 

இதற்கு முன்னதாகவே விஜய் சேதுபதி கடத்தல் தொழிலுக்கு தான் கடைப்பிடிக்கும் கொள்கைகளை விளக்கும் காட்சியும் சூப்பர். பெரிய ஆளுகளகிட்ட கை வைக்கக் கூடாது என்ற அந்த ஒரு கொள்கையே அவருடைய ஸ்மால் டைப் கிரிமினல் மைண்ட்டை காட்டுகிறது.  பணத்தைக் கைப்பற்ற இவர்கள் பயன்படுத்தும் ரோபா ஹெலிகாப்டர் காட்சி வித்தியாசமானது.. அசட்டுத்தனம் நிறைய இருந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்..!

பிரம்மா இவர்களை ஜீப்பில் துரத்தி ஒரு முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டவுடன் இவர்களைத் தப்பிக்க வைக்க துப்பாக்கி பயன்படுத்தும் ஒரு காட்சி மட்டுமே இவர்களின் புரொபஷனல் ஆக்ட்டிங்கை தெரிய வைத்திருக்கிறார் இயக்குநர்..! இறுதிக் காட்சியிலும் தப்பித்துப் போக அத்தனை வாய்ப்புகள் இருந்தும் அமைதியாக இவர்கள் எதிர்கொள்வதுகூட படம் பார்க்கும்போது நமக்குத் தோன்றாமல் இருக்கிறது..!

மந்திரி மகனின் ஐடியாவும், அப்பா எஸ்.எம்.பாஸ்கரின் கோபமும், ராதாரவியின் விறைப்பான பேச்சும் அந்த பிளாக்கிற்கே ஒரு சுவாரசியத்தைக் கூட்டுகிறது..! உட்கார்ந்த இடத்தில் இருந்தே தனது வாய்ஸின் மூலமாகவே அழுத்தமாக நடிப்பைப் பதிவு செய்யும் திறமை ராதாரவி போன்ற ஒரு சிலருக்கே உண்டு..! கடைசியாக மந்திரி மகனையே தேர்தலில் நிற்க வைக்கச் சொல்லும் அந்த ஐடியாவைச் சொல்லும்போது தியேட்டரே குலுங்கிவிட்டது கைதட்டலில்..! 

இதேபோல் இருட்டு  அறையில் சாத்து சாத்துவென்று சாத்துகின்ற காட்சியில் “இதைத்தான் இருட்டறையில் முரட்டுக் குத்துன்னு சொல்றாய்ங்களா..” என்று கேட்கும் வசனம் பெறும் கைதட்டலை பார்த்தால் ரசிகர்கள் நகைச்சுவைக்காக எத்தனை ஏக்கமாக இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.. 

இது போன்ற இண்ட்ரஸ்ட்டிங்கான கதைகளுக்கு பெரும் தடையே பாடல் காட்சிகள்தான். இந்தப் படத்திலும் அதுதான் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.. காசு, பணம், துட்டு பாடல் காட்சி எடுக்கப்பட்டவிதம் அருமை என்றாலும், படத்தின் வேகத்தை அது சற்றே குறைக்கத்தான் செய்திருக்கிறது..! காமிக்ஸ் படம் போல எடுத்திருப்பதாலோ என்னவோ, இசையும் சற்று அடங்கிப் போய்த்தான் இருக்கிறது..! பின்னணி இசை யூ டியூபில் வலம் வரும் பல காமிக்ஸ் கதைகளோடுதான் ஒத்துக் போகிறது.. இதுக்கு இதுவே போதுமென்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது..!

பிரம்மா வரும்வரையிலும் எப்படி முடிப்பார்கள் என்ற ஏக்கமும், பிரம்மா வந்த பிறகு சீக்கிரமா முடிய்யா என்ற பரிதவிப்பையும் ஏற்படுத்தும் அளவுக்கு நடித்திருக்கிறார். மனிதர் பேசாமலேயே தனது இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு செய்யும் போலீஸ் சேட்டைகள்தான் அசத்தல்.. கோளாறான துப்பாக்கியால் குண்டடிபட்டு சிக்கிக் கொள்ளும் பிரம்மா, அதே இறுகிப் போன முகத்துடன் புதிய மந்திரியின் பதவிப் பிரமாண காட்சியைப் பார்க்கும் அந்தக் காட்சி செம நரேஷன்..! 

அறிமுக இயக்குநர் நலன் குமரசாமியின்  குறும்படங்களில் இயக்கத்தைவிடவும் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளையே அதிகம் அலட்டலாக வடிவமைத்திருந்தார்.. அதுபோலவே இதிலும்.. தனது முதல் படத்திலேயே ஹிட்டடித்திருக்கும் இவரது அடுத்தடுத்த படைப்புகளும் ஜெயிக்க வேண்டுமாய் வாழ்த்துகிறேன்..!

(படம் வெளியாகி ஆறு நாட்கள் கழித்து விமர்சனம் எழுதும் பாக்கியத்தைக் கொடுத்த தமிழக மின்சார வாரியத்திற்கும், என் அப்பன் முருகனுக்கும் நன்றி..!)

18 comments:

maithriim said...

எப்பொழுதும் போல நல்ல விமர்சனம் :-) என் கணவர் படம் பார்த்துவிட்டு, குடி, புகைக் காட்சிகள் தவறான message ஐ சமூகத்துக்கு அனுப்பிகிறது என்று அபிப்பிராயப் பட்டார். இப்பொழுது வரும் படங்கள் எல்லாமே அவற்றை நமது பண்பாடாகவேக் காட்டுவது கொடுமை.

amas32

Nondavan said...

அண்ணாச்சி, இந்த பட விமர்சனத்திற்காக இவ்ளோ நாள் காத்திருந்தேன்... என்ன இருந்தாலும் நீங்க என்ன சொல்றீங்க, எப்படி இருக்கும் என படிக்க ஆர்வம் தான்...

முடிந்தால், இப்படம் சம்பந்தப்பட்ட ஆட்களிடம் கொஞ்சம் சொல்லி துபாயில் ரிலீஸ் பண்ண சொல்லுங்க :) :) :) காத்திருப்பு முடியுல... அப்புறம் திருட்டு பிரிண்ட் தான், வேற வழி... :)

Nondavan said...

போன வாரம் ரிலீசாகும் என்று போய் பார்த்தேன்... ஆகவில்லை.. மூன்று பேர் மூன்று காதல் என்ற காவிய படம் தான் ஓடிட்டு இருந்தது... நண்பர்களுடம் படம் எப்படின்னு தான் கேட்டேன், வசமா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஓடி வந்துவிட்டேன்

சீனு said...

//இதேபோல் இருட்டு அறையில் சாத்து சாத்துவென்று சாத்துகின்ற காட்சியில் “இதைத்தான் இருட்டறையில் முரட்டுக் குத்துன்னு சொல்றாய்ங்களா..” என்று கேட்கும் வசனம் பெறும் கைதட்டலை பார்த்தால் ரசிகர்கள் நகைச்சுவைக்காக எத்தனை ஏக்கமாக இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது..//

ஓ! இது தான் வசனமா? எனக்கு தியேட்டரில் (டிப்பீட் ஆடியன்ஸ்களின்) கைத்தட்டலில் கேட்கவே இல்லை.

உதயம் போன்ற சுமாரான படங்கள் கூட நன்றாக போவதற்கு காரணமே வேற படங்கள் இல்லை என்பதும், படம் பார்க்கும் பட்ஜெட் அதிகம் என்பதும் காரணம்.

பரங்கிமலை ஜோதியில் இந்த படத்தை பார்த்தேன். சுமாரான தியேட்டர் தான். ஆனால், கார் பார்க்கிங் கட்டணம் வெறும் 20 ரூ. இன்னும் கொஞ்சம் தியேட்டரை ஒழுங்கு படுத்தினால் நன்றாக இருக்கும்.

rajasundararajan said...

உங்களெத் திருத்தவே முடியாது, உ.த.! மொத்தக் கதையையும் சொல்லி, அத்தனை ஹைலைட்ஸயும் சொல்லிவிட்டீர்கள்!

சம்பந்தப்பட்டவன் எவனாவது ஆட்டோல ஆள் அனுப்பி இந்த ஆளே அடிச்சுத் திருத்த மாட்டீங்களாப்பா?

உண்மைத்தமிழன் said...

[[[amas said...

எப்பொழுதும் போல நல்ல விமர்சனம் :-) என் கணவர் படம் பார்த்துவிட்டு, குடி, புகைக் காட்சிகள் தவறான message ஐ சமூகத்துக்கு அனுப்பிகிறது என்று அபிப்பிராயப்பட்டார். இப்பொழுது வரும் படங்கள் எல்லாமே அவற்றை நமது பண்பாடாகவேக் காட்டுவது கொடுமை.]]]

கேட்டால் இதுதான் சகஜம் என்கிறார்கள். சினிமாக்காரர்கள் பலரது வாழ்க்கைப் போராட்டத்திற்கு இதன் பாவ, புண்ணியக் கதைகளும் ஒரு காரணம் என்றே நான் நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணாச்சி, இந்த பட விமர்சனத்திற்காக இவ்ளோ நாள் காத்திருந்தேன்... என்ன இருந்தாலும் நீங்க என்ன சொல்றீங்க, எப்படி இருக்கும் என படிக்க ஆர்வம்தான்.

முடிந்தால், இப்படம் சம்பந்தப்பட்ட ஆட்களிடம் கொஞ்சம் சொல்லி துபாயில் ரிலீஸ் பண்ண சொல்லுங்க :) :) :) காத்திருப்பு முடியுல... அப்புறம் திருட்டு பிரிண்ட்தான், வேற வழி... :)]]]

துபாய் என்றால் நிறைய கட் செய்வாங்களே..! அதுக்கு முன்னாடி தமிழ்நாட்டுலேயே நிறைய கல்லா கட்டிக்கிட்டு அப்புறமா ரேட்டை ஏத்தி அங்க விக்கலாம்ன்னு பிளான்ல இருக்காங்க போலிருக்கு. வெயிட் பண்ணுங்க.. வரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

போன வாரம் ரிலீசாகும் என்று போய் பார்த்தேன்... ஆகவில்லை.. மூன்று பேர் மூன்று காதல் என்ற காவிய படம் தான் ஓடிட்டு இருந்தது... நண்பர்களுடம் படம் எப்படின்னு தான் கேட்டேன், வசமா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஓடி வந்துவிட்டேன்.]]]

அதை பார்த்திருக்கலாமே.. காவியப் படமாச்சே..?

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

//இதேபோல் இருட்டு அறையில் சாத்து சாத்துவென்று சாத்துகின்ற காட்சியில் “இதைத்தான் இருட்டறையில் முரட்டுக் குத்துன்னு சொல்றாய்ங்களா..” என்று கேட்கும் வசனம் பெறும் கைதட்டலை
பார்த்தால் ரசிகர்கள் நகைச்சுவைக்காக எத்தனை ஏக்கமாக இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது..//

ஓ! இதுதான் வசனமா? எனக்கு தியேட்டரில் (டிப்பீட் ஆடியன்ஸ்களின்) கைத்தட்டலில் கேட்கவே இல்லை.
உதயம் போன்ற சுமாரான படங்கள்கூட நன்றாக போவதற்கு காரணமே வேற படங்கள் இல்லை என்பதும், படம் பார்க்கும் பட்ஜெட் அதிகம் என்பதும் காரணம்.]]]

இதுவும் ஒரு காரணம்தான்.. சுமாரான படத்தையாச்சும் பார்த்துத் தொலைப்போம்ன்னு நினைச்சுத்தான் எல்லாரும் தியேட்டருக்கு போறாங்க. அப்படி ஜெயிச்சதுதான் உதயம்..!

[[[பரங்கிமலை ஜோதியில் இந்த படத்தை பார்த்தேன். சுமாரான தியேட்டர்தான். ஆனால், கார் பார்க்கிங் கட்டணம் வெறும் 20 ரூ. இன்னும் கொஞ்சம் தியேட்டரை ஒழுங்குபடுத்தினால் நன்றாக இருக்கும்.]]]

இதை இந்த அளவுக்கு செஞ்சதே பெரிய விஷயம்ண்ணே.. இதுக்கு மேல செய்யவே மாட்டாங்கண்ணே.. நாமதான் வேற தியேட்டர் பார்த்துப் போகணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

உங்களெத் திருத்தவே முடியாது, உ.த.! மொத்தக் கதையையும் சொல்லி, அத்தனை ஹைலைட்ஸயும் சொல்லிவிட்டீர்கள்!]]]

என்ன அண்ணாச்சி.. நான் விமர்சனம்தானே எழுதியிருக்கேன். இதுல எங்க முழுக் கதையை சொல்லியிருக்கேன்.. ஆங்காங்கே கொஞ்சம், கொஞ்சம் பிட்டை போட்டிருக்கேன். இதுவே எழுதக் கூடாதுன்னா எப்படித்தான் எழுதறது..?

[[[சம்பந்தப்பட்டவன் எவனாவது ஆட்டோல ஆள் அனுப்பி இந்த ஆளே அடிச்சுத் திருத்த மாட்டீங்களாப்பா?]]]

இப்படி வேற ஆசையிருக்கா உங்களுக்கு..? தம்பியை பேண்டேஜோட பார்க்க அவ்வளவு ஆசையா..? இப்படிப்பட்ட அண்ணன் கிடைக்க கொடுத்துதான் வைச்சிருக்கணும்..!

joe said...

அண்ணே, சஞ்சிதா ஷெட்டி இடுப்பழக வருணிக்காத உன்னை முள்ளு மரத்துல கட்டி அடிக்கோணும். சிபி பதிவுல கடைசி 3 போட்டோபாத்து தூக்கமே போச்சு.

http://www.adrasaka.com/2013/05/blog-post_9552.html

வரவர எல்லாபடமும் குடிகாரபசங்களையே முன்னிருதராங்க. இந்த படம் தியேட்டர்ல பாக்க கூடா துன்னு முடிவு பண்ணியாச்சு

நீ சொன்னேன்னு எதிர் நீச்சல் படம் பார்த்தா, அதுலேயும் பாட்டுலோடத்தான் வராணுங்கள்
என்ன கொடுமை சரவணா

உண்மைத்தமிழன் said...

[[[joe said...

அண்ணே, சஞ்சிதா ஷெட்டி இடுப்பழக வருணிக்காத உன்னை முள்ளு மரத்துல கட்டி அடிக்கோணும். சிபி பதிவுல கடைசி 3 போட்டோபாத்து தூக்கமே போச்சு.]]]

அந்த அளவுக்கு என்னை கவரலையே சஞ்சிதாவோட இடுப்பு..? நானென்ன செய்யறது..?

[[[வர வர எல்லா படமும் குடிகார பசங்களையே முன்னிருதராங்க. இந்த படம் தியேட்டர்ல பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணியாச்சு. நீ சொன்னேன்னு எதிர்நீச்சல் படம் பார்த்தா, அதுலேயும் பாட்டுலோடத்தான் வராணுங்கள்
என்ன கொடுமை சரவணா..]]]

பாட்டில் இல்லாத படமே இனிமேல் வராதுன்னு நினைக்கிறேன்..!

ரிஷி said...

இப்போதான் படம் பார்த்துட்டு வந்தேன். படம் நல்லாருக்கு. இன்னொரு தடவை கூட பார்க்கலாம்.

அது சரி.. சென்னைல தானே இருக்கீங்க.. அப்புறம் ஏன் தமிழக மின்சார வாரியப் பிரச்சினை உள்ள வருது??

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

இப்போதான் படம் பார்த்துட்டு வந்தேன். படம் நல்லாருக்கு. இன்னொரு தடவைகூட பார்க்கலாம்.

அது சரி.. சென்னைலதானே இருக்கீங்க.. அப்புறம் ஏன் தமிழக மின்சார வாரியப் பிரச்சினை உள்ள வருது??]]]

லோ வோல்டேஜ் பிராப்ளம் ரிஷி.. எல்லா ஊர்லேயும் இருக்கும்..!

ராஜ நடராஜன் said...

உண்மைத் தமிழன் & நொந்தவன்!

சூது கவ்வும் படத்தை திருட்டு விடீயோவில் பார்த்ததில் ஒரு சுவராசியமான அனுபவம் கிடைத்தது.காரணம் ஏதோ ஒரு பய புள்ள திரையரங்கிலிருந்தே படம் புடிச்சு ரிலிஸ் செஞ்சுட்டதால் ஒரு காதுல படத்தோட நக்கல் நகைச்சுவை வசனங்கள் ஓடிகிட்டிருக்குது.இன்னொரு காதுல தியேட்டரில் உட்கார்ந்திருந்தவர்களின் மொத்த சிரிப்பின் ஒலிப்பதிவு இன்னொரு ட்ராக்கில் ஓடுது.கூடவே பில்டர் செய்யாத டங்கு டங்குன்னு திருட்டு சினிமாவின் சத்தம் வேற.இப்படியெல்லாம் இருந்தும் என்னைப்போன்றவர்கள் திருட்டு வீடியோவுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள்.

படத்தின் மையக் கருத்து வாய்மையை சூது கவ்வும் என்பதுதான்.அரசியலில் ஊழல் செய்யாமலிருக்க முயற்சி செய்யும் அரசியல்வாதியும்,கடத்தல் தொழிலை விட வேலை செய்ய விருப்ப படும் ஐ.டிக்காரனும்,குற்றங்களுக்கு எதிரான என்கவ்ண்டர் போலிஸ் அதிகாரியும் தோல்வியடைகிறார்கள் என்பதே.

ஆனால் பிரபல & பிராபல்ய பதிவர்கள் அனைவரும் வசனம் அப்படியாக்கும்,கதை இப்படியாக்கும் என கதையின் இன்னுமொரு மையப்புள்ளியான கடத்தலுக்கு சிரிப்பு வக்காலத்து வாங்குபவர்களாகவே இருக்கிறார்கள்.தவறும் நகைச்சுவையாக இருந்து விட்டால் அங்கீகரிக்கும் பதிவர்களின் மனநிலை பற்றி என்ன சொல்ல.ஒரு புறம் சொன்னதையே சொல்லும் இயக்க முறை மறுபுறம் புதிய முயற்சி என்ற போதிலும் தவறான இயக்க அணுகுமுறைகள் என்ற இருதலைக் கொள்ளி நிலையிலேயே நிற்கிறோம்.

இந்த மாதிரி படம் வராமலே எப்படி கடத்துவது,கொலை செய்வது என்று டிகிரி முடிச்ச கேடிகளுக்கு இப்படியும் ஐடியா கொடுத்தால் தமிழ்நாடு உருப்பட மாதிரிதான்.ஐ.பி.எல் மேட்ச்ல பந்தயம் கட்டி தோத்துட்டு 13 வயசு சொந்தக்காரப் பையனையே கடத்தி கொலை செய்த முந்தா நாள் செய்தி மாதிரி நாளைக்கு எவனோ ஒருவன் சூது கவ்வும் படம் பார்த்துட்டுதான் கடத்தல் செய்தேன் என சொல்லும் போது அதுக்கும் கூட பதிவுகள் வருமே!

திரைப்படங்கள் திரைப்படங்களே என்ற ஞானம் எல்லோருக்கும் அமைந்தால் இந்த பின்னூட்டத்திற்கு அவசியமிருந்திருக்காது.

வவ்வால் said...

//இப்படியெல்லாம் இருந்தும் என்னைப்போன்றவர்கள் திருட்டு வீடியோவுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள்.
//

ஒரு மானஸ்தர் திருட்டு டிவிடி பார்க்கக்கூடாதுனு எனக்கு அறிவுரை சொன்னாரு ,இப்போ அந்த மானஸ்தரை தான் தேடிக்கிட்டு இருக்கேன் :-))

பார்த்தா சொல்லும் ராச நட!
-----------

அண்ணாச்சி,

பல படங்களின் கலவையா எடுத்துப்போட்டா ஹிட் படம் ரெடி,இதான் இப்போதைய சூத்திரம் :-))

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

உண்மைத் தமிழன் & நொந்தவன்!

சூது கவ்வும் படத்தை திருட்டு விடீயோவில் பார்த்ததில் ஒரு சுவராசியமான அனுபவம் கிடைத்தது. காரணம் ஏதோ ஒரு பய புள்ள திரையரங்கிலிருந்தே படம் புடிச்சு ரிலிஸ் செஞ்சுட்டதால் ஒரு காதுல படத்தோட நக்கல் நகைச்சுவை வசனங்கள் ஓடிகிட்டிருக்குது. இன்னொரு காதுல தியேட்டரில் உட்கார்ந்திருந்தவர்களின் மொத்த சிரிப்பின் ஒலிப்பதிவு இன்னொரு ட்ராக்கில் ஓடுது. கூடவே பில்டர் செய்யாத டங்கு டங்குன்னு திருட்டு சினிமாவின் சத்தம் வேற. இப்படியெல்லாம் இருந்தும் என்னைப் போன்றவர்கள் திருட்டு வீடியோவுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள்.]]]

வேறு வழியில்லை.. தீவிர சினிமா ரசிகர்களாகிய உங்களுக்கு படத்தை உடனேயே காண்பிக்கும் அளவுக்கு வசதிகளை தயாரிப்பாளர்கள் செய்ய வேண்டும். அவர்கள் செய்யாவிடில் அவர்களுக்கு இப்படித்தான் நஷ்டமாகும்..!

[[[படத்தின் மையக் கருத்து வாய்மையை சூது கவ்வும் என்பதுதான். அரசியலில் ஊழல் செய்யாமலிருக்க முயற்சி செய்யும் அரசியல்வாதியும், கடத்தல் தொழிலைவிட வேலை செய்ய விருப்பபடும் ஐ.டிக்காரனும், குற்றங்களுக்கு எதிரான என்கவ்ண்டர் போலிஸ் அதிகாரியும் தோல்வியடைகிறார்கள் என்பதே.]]]

ஆனால் எத்தனை நாளைக்கு என்று இயக்குநர் சொல்லவில்லை..! இதன் பின் கவ்விய சூது விலகும் என்பதை அவர்தானே சொல்லியிருக்க வேண்டும்..!

[[[ஆனால் பிரபல&பிராபல்ய பதிவர்கள் அனைவரும் வசனம் அப்படியாக்கும், கதை இப்படியாக்கும் என கதையின் இன்னுமொரு மையப் புள்ளியான கடத்தலுக்கு சிரிப்பு வக்காலத்து வாங்குபவர்களாகவே இருக்கிறார்கள். தவறும் நகைச்சுவையாக இருந்து விட்டால் அங்கீகரிக்கும் பதிவர்களின் மனநிலை பற்றி என்ன சொல்ல. ஒரு புறம் சொன்னதையே சொல்லும் இயக்க முறை மறுபுறம் புதிய முயற்சி என்ற போதிலும் தவறான இயக்க அணுகுமுறைகள் என்ற இருதலைக் கொள்ளி நிலையிலேயே நிற்கிறோம்.]]]

நாங்கள் இதனை சினிமாவாக பார்க்கிறோம். அப்படியிருந்தும் குடி, கடத்தல் காட்சிகள் இதன் மீது ஆர்வமிருக்கும் இளைஞர்களை தப்பு செய்ய வைக்கும் என்பதை நானும் மறுப்பதற்கில்லை..!

[[[இந்த மாதிரி படம் வராமலே எப்படி கடத்துவது, கொலை செய்வது என்று டிகிரி முடிச்ச கேடிகளுக்கு இப்படியும் ஐடியா கொடுத்தால் தமிழ்நாடு உருப்பட மாதிரிதான். ஐ.பி.எல் மேட்ச்ல பந்தயம் கட்டி தோத்துட்டு 13 வயசு சொந்தக்காரப் பையனையே கடத்தி கொலை செய்த முந்தா நாள் செய்தி மாதிரி நாளைக்கு எவனோ ஒருவன் சூது கவ்வும் படம் பார்த்துட்டுதான் கடத்தல் செய்தேன் என சொல்லும் போது அதுக்கும் கூட பதிவுகள் வருமே!]]]

வரும்.. வரத்தான் செய்யும்.. இது போன்ற திரைப்படங்களை தடை செய்வதும் முடியாத விஷயமாச்சே..!

[[[திரைப்படங்கள் திரைப்படங்களே என்ற ஞானம் எல்லோருக்கும் அமைந்தால் இந்த பின்னூட்டத்திற்கு அவசியமிருந்திருக்காது.]]]

அந்த அளவுக்கான ஞானம் அனைவருக்கும் இல்லை என்பதால்தான் இது போன்ற குழப்பங்கள் ஏற்படுகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

//இப்படியெல்லாம் இருந்தும் என்னைப்போன்றவர்கள் திருட்டு வீடியோவுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள்.//

ஒரு மானஸ்தர் திருட்டு டிவிடி பார்க்கக் கூடாதுனு எனக்கு அறிவுரை சொன்னாரு, இப்போ அந்த மானஸ்தரைதான் தேடிக்கிட்டு இருக்கேன் :-))]]]

யாருண்ணே அது..? கொஞ்சம் சொல்லுங்களேன்..!

[[[அண்ணாச்சி,

பல படங்களின் கலவையா எடுத்துப் போட்டா ஹிட் படம் ரெடி,இதான் இப்போதைய சூத்திரம் :-))]]]

ம்.. ம்.. ம்..!