கமல்ஹாசன் செய்வது சரியா..?

10-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


“வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும்.. வீட்டில் மின் விசிறி இருப்பினும், காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்து பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள்போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?”

- இத்தனையாண்டு காலமும் இந்தத் தமிழ்ச் சினிமாவுக்கே தனித்த அடையாளமாக இருந்துவரும் தனக்கே திரையுலகத்தில் தடை உத்தரவா என்ற ஆதங்கத்தில் அண்ணன் கமல்ஹாசன் இன்று சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை..!


கேபிள் டிவிக்கு மாதந்தோறும் 100 ரூபாய் கொடுக்கவே யோசிக்கும் நடுத்தர மக்களினும் பொருளாதாரத்தில் உயர்ந்த மனிதர்களான, மாதந்தோறும் 1700 ரூபாய் கொடுத்து செட்டப் பாக்ஸ் கனெக்சன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி என்பதால் மற்றவர்கள் நிச்சயம் திரையரங்கத்தை நாடி வருவார்கள் என்று அண்ணன் கமல் தரப்பில் 3 நாட்களாக கூக்குரலிட்டும் தியேட்டர் அதிபர்களின் மனதில் அச்சம் நீங்கியபாடில்லை.

திரைத்துறையினர் இது விஷயமாக மீண்டும் நாளை காலையில் கூடிப் பேசப் போகிறார்கள்..! இவர்களது பயமும், அவசரமும் சினிமாத் துறையினரில் பெரும்பாலோருக்கு தெரியும் என்றாலும், பலராலும் எதையும் வெளிப்படையாகச் சொல்லத்தான் முடியவில்லை. சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்கிற வாடிக்கையான மனநிலை அவர்களைத் தடுத்து வருகிறது..!

ஒரே ஒரு முறைதான் காட்டப் போகிறார்கள். அதுவும் 1000 ரூபாய்க்கு.. ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் இதில் 1 சதவிகிதமான ஏழு லட்சம் பேர் மட்டுமே பார்க்க வாய்ப்பு இருந்தும், இதில் எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்றும் தெரியாமலும் இதன் பிரதிபலிப்பு தியேட்டர் வசூலில் எதிரொலிக்கும் என்று கலங்குகிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

“நாங்கள் தியேட்டர் வைத்திருப்பதே சினிமாக்களை வெளியிடத்தான். இப்போதைக்கு பெரிய படங்களையும், சின்ன படங்களையும், மீடியம் பட்ஜெட் படங்களையும் படங்களுக்கேற்றவாறு திரையிட்டு வருகிறோம். ஒரு படத்தில் பெறுகின்ற நஷ்டத்தை மற்றொரு படத்தில் ஈடுகட்டும் வகையில்தான் எங்களது தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களின் தேர்வும் இருக்கிறது. 2 பெரிய பட்ஜெட் படங்களை நாங்களே வாங்கி வெளியிட்டு நஷ்டம் ஏற்பட்டால், அந்த மெகா நஷ்டத்தை ஈடுகட்ட அடுத்த பெரிய படம்தான் தேவை.. அப்போதுதான் எங்களால் விட்ட பணத்தை குறுகிய காலத்தில் உடனேயே மீட்டெடுக்க முடியும்..! 

கமல் சொல்வது போலவே இது பெரிய பணக்காரர்களின் வீட்டு வரவேற்பறையில் தெரியட்டும். ஆனால் அப்போது அந்தக் குடும்பத்தினர் மட்டுமே பார்க்கப் போவதில்லை. குறைந்தபட்சம் தங்களது ஒட்டு மொத்தக் குடும்பத்தையாவது பார்க்க வைத்துவிடுவார்கள். இவர்கள் மல்டிபிளெக்ஸ்களுக்கு வரும் வாடிக்கையான ரசிகர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் வீட்டில் பார்த்துவிட்டால், பிறகெப்படி தியேட்டருக்கு வருவார்கள்? மல்டிபிளெக்ஸ்களுக்கும் இதனால் நஷ்டம் வருமே..?  

சரி.. கமல் தன் படத்தின் விநியோகத்தை தானே பொறுப்பேற்று தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து படத்தை ஓட்டினாலும், டிடிஹெச்சில் படத்தை பார்த்துவிட்ட ரசிகர்கள் தாண்டிய பொதுமக்கள் கண்டிப்பாக தியேட்டருக்கு வர மாட்டார்கள். அப்போது டிக்கெட் கட்டண வசூல் குறையும்..  தியேட்டர் கேண்டீன்களுக்கு இழப்பு ஏற்படும்.. அனைத்து படங்களுமே இது போன்றே வெளியிடப்பட்டு, அனைவருமே வாடகைக்கு தியேட்டரை எடுத்து ஓட்டினால், எங்களுக்கு எப்படி லாபம் கிடைக்கும்..? தியேட்டரில் கிடைக்கும் வாடகை அந்த கட்டிடத்தின் நிலைப்பாட்டுக்கு மட்டுமே பயன்படும்.. ஆனால் நாங்களும் லாபம் பார்க்க வேண்டாமா..? தயாரிப்பாளர் மட்டும்தானே இதில் லாபம் பார்க்க முடியும்..? வெறுமனே வாடகையை மட்டும் வைத்துக் கொண்டு தியேட்டர் ஊழியர்களுக்குச் சம்பளத்தைக் கொடுத்துவிட்டு மிச்சம், மீதியை கவர்ன்மெண்டு எம்ப்ளாயிஸ் மாதிரி வீட்டுக்குக் கொண்டு போவதற்கா நாங்கள் தியேட்டர் நடத்துகிறோம்...?” என்கிறார்கள்.

இன்னொரு தரப்பினரோ, “தற்போது ஒரு பெரிய படம் வெளியிடப்பட்டால்.. நன்றாக இருக்கும்பட்சத்தில் அந்தப் படம் குறைந்தபட்சம் 4 வாரங்களாவது பெரிய தியேட்டர்களில் ஓட்டப்படுகிறது. இப்படி டிடிஹெச்சில் போட்டுவிட்டு தியேட்டருக்கு வரும்போது கூட்டம் குறைவாகி அந்தப் படம் 2 வாரங்கள் மட்டுமே ஓடும் சூழல் வரும்.. மிச்சம் இருக்கும் 2 வாரத்தில் வேறு படங்கள், குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்குமே..?” என்கிறார்கள்.

ஆனால் இதையும் மறுக்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். “இப்போதும் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் வாடகைக்கும், பெர்சண்டேஜுக்கும்தான் படத்தை திரையிடுகிறார்கள். இதில் எங்களுக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது..? வர்றதுக்கு வாய்க்கும், வயித்துக்குமே போதும்ன்னா நாங்க எதுக்கு இவ்ளோ பெரிய கட்டிடத்தை கோடிக்கணக்குல செலவு பண்ணி கட்டி நடத்தணும்..? பேசாம கல்யாண மண்டபமா மாத்திட்டு வீட்ல ஹாயா உக்காருவோமே..?” என்கிறார்கள்..!

“சினிமாக்களை மட்டுமே நம்பி.. அவர்களுக்காகவே நாங்கள் தியேட்டர்களை நடத்தி வருகிறோம். சினிமா தியேட்டர்களில் வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் முடியாது..! கமலை போலவே அடுத்து வரக் கூடியவர்களும் தங்களது படங்களை டிடிஹெச்சில் கொடுத்துவிட்டு பின்பு தியேட்டருக்கு வழங்கி, கூட்டத்தை குறைத்துவிட்டால்,  தியேட்டருக்கு ரெகுலராக வந்துபோகும் பார்வையாளர்களின் கூட்டம் குறையுமே..” என்று திரும்பத் திரும்ப அதே கோணத்திலேயே தங்களது பார்வையைச் செலுத்துகிறார்கள் தியேட்டர் அதிபர்கள்..!

“டிடிஹெச் சந்தாத்தாரர்கள் வெறும் 7 லட்சம் பேர் என்று கணக்கிட்டாலும், இதில் 3.5 லட்சம் பேர் 1000 ரூபாய் கொடுத்துவிட்டாலே, அதில் 35 கோடி வசூலாகிவிடும்..!   கமலுக்கு இப்போதைக்கு இது போதுமானதுதான்..! கமல் நடித்த படம் என்பதால்தான் 1000 ரூபாயை வசூல் செய்கிறது டிடிஹெச் நிறுவனம். இதையே வேறொரு தயாரிப்பாளர் மீடியம் பட்ஜெட் நாயகர்களைக் கொண்டு படமெடுத்து அதனை வெறும் 100 ரூபாய் கட்டணத்திற்கு காட்டினால், அப்போதும் மூன்றரை கோடி ரூபாய் சுளையாகக் கிடைத்துவிடும்..!

ஒரே நாளில், ஒரே செக்கில் 3.5 கோடி ரூபாய் கிடைத்துவிடும் என்று நினைத்து பலரும் இது போன்று மீடியம் பட்ஜெட் படங்களை எடுத்து டிடிஹெச்சுக்கே கொடுத்துவிட்டு காலப்போக்கில் தியேட்டர்களில் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்ற சூழலை உருவாக்கிவிட்டால், அப்போது நாங்களெல்லாம் என்ன செய்வது..?” என்கிறார்கள்..!

“இது இப்படியே தொடர்ந்து…… தமிழ்நாட்டில் கேபிள் கனெக்சன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வீட்டுக்கு 50 ரூபாய் என்று வாங்கிக் கொண்டு புத்தம் புதிய படங்களை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிபரப்புகிறோம் என்று சொன்னால் வாரத்துக்கு 50 ரூபாய்தானே என்ற எண்ணத்தில் மக்கள் தானாகவே முன் வந்து பணம் கொடுப்பார்கள். அப்போது இந்தத் தொகை 10 கோடி சுளையாகக் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும். இப்போதெல்லாம் மீடியம் பட்ஜெட் படங்களை 3.5 கோடியில் சுலபமாக தயாரித்துவிடலாம்.. கேபிள் ஆபரேட்டர்களுக்கு கொஞ்சம் தொகையைக் கமிஷனாகக் கொடுத்துவிட்டு இது போன்று மறுபடியும், மறுபடியும் டிடிஹெச்சுகளுக்காகவே படமெடுக்க துவங்கினால் சினிமாக்களை மட்டுமே நம்பி தியேட்டர்களை நடத்தி வரும் நாங்களெல்லாம் என்ன செய்ய..?” என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்..! இந்த பயம்தான் இப்போது தியேட்டர் அதிபர்களை பேயாய் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது..!

கமல் மட்டுமே இப்போதைக்கு கலக்ககுரலை எழுப்பியிருந்தாலும், மற்றவர்கள் இந்தப் படத்தின் ரிசல்ட்டை பார்த்துவிட்டு பின்பு யோசிக்கலாம் என்று காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மாதந்தோறும் குறைந்து கொண்டே செல்கிறது. சமீபத்தில் வெளியான துப்பாக்கி படத்தின் வசூல் ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. ஏதோ போட்ட காசு கிடைத்துவிட்டது என்று ஜெமினியும், தாணுவும் பெருமூச்சுவிட்டு ஓய்ந்திருக்கிறார்கள்.

தியேட்டர்களுக்கு கூட்டம் வராததற்கு தியேட்டர்களில் நடக்கும் அநியாயக் கொள்ளையான கட்டண உயர்வு மட்டுமே காரணம் அல்ல.. மக்களுக்கும் நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் பல புதுவித பிரச்சினைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. தியேட்டர்களுக்கு சென்று ரிலாக்ஸ் செய்யும் எண்ணம் வராத அளவுக்கு ஓட வேண்டிய நிலைமை இப்போது..! 

குடும்பப் பிரச்சினை.. குழந்தைகளின் படிப்புப் பிரச்சினை.. அலைச்சல் என்று பலதையும் மனதில் வைத்துக் கொண்டுதான் “வீட்டோடு ஓய்வை கொண்டாடுவோம்.. டிவியில் நிகழ்ச்சிகளை பார்த்து டென்ஷன் இல்லாமல் இருப்போம்..” என்ற மனநிலை அநேகம் நடுத்தர வர்க்கத்தினருக்கு வந்துவிட்டது..! 

புதுவசந்தம் படம் ரிலீஸான அன்று திண்டுக்கல் லஷ்மி தியேட்டரில் நான் காலை காட்சி படம் பார்த்துவிட்டு அந்த நாள் முழுவதுமான 5 ஷோக்களையும் தொடர்ந்து பார்த்தேன். அதே நேரம் அரசு அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் அண்ணன் ஒருவர், தனது மனைவியுடன் படம் பார்க்க வந்திருந்தவர்.. மதியம், மாலை, இரவு காட்சிகளையும் தொடர்ச்சியாக என்னுடன் இருந்து பார்த்தார்.. அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் அந்தப் படம் மிகப் பெரிய இளைப்பாறுதலை தந்தது..  ரிலாக்ஸை தந்திருந்தது..! இப்போது இப்படி யாராவது படம் பார்க்கிறார்கள் என்று கேள்விப்பட முடியுமா..?

முந்தானை முடிச்சு படத்திற்கு தினமும் புதுமையான விளம்பரங்கள் தினத்தந்தியில் வந்து கொண்டேயிருந்தன..! ஏதாவது ஒரு ஊரில் தொடர்ச்சியாக 4 ஷோ பார்த்த பெண்கள் புகைப்படத்துடன் பேட்டி கொடுத்திருப்பார்கள். 100 நாட்களும் தொடர்ச்சியாக பார்த்ததாகக்கூட சில பெண்கள் பேட்டியளித்திருந்தார்கள்.. அப்போதைக்கு அது சினிமாவின் விளம்பரத் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இன்றைக்கு அப்படியொரு விளம்பரத்திற்குக்கூட ஆட்கள் கிடைக்காது என்பதுதான் உண்மை.!

மக்களுக்கு ஓய்வெடுக்கும் நேரம் குறைந்துபோய் அந்த நேரத்திலும் உழைத்து, உழைத்து பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆவலும், ஆசையும் வெறியாகிவிட்டிருப்பதை கண்கூடாக உணர முடிகிறது..! இதில் அநாவசியமாக சினிமாவுக்காக ஆயிரம் ரூபாய் தனியாக செலவழிக்க வேண்டுமா என்ற அவர்களது சிந்தனை நியாயமானதுதான். அதே நேரம் தியேட்டர்காரர்களும் தங்களது டிக்கெட் கட்டணத்தைக் குறைத்து 10, 20, 30 என்று வைத்தால் பெரிய பட்ஜெட் படங்களைவிடவும், சின்ன பட்ஜெட் படங்களுக்கு அதிகக் கூட்டம் கூடும் என்பது நிஜம்..! 

முதலில் தியேட்டருக்கு வரும் மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். அதற்கான ஒரே வழி தியேட்டர் கட்டணத்தைக் குறைப்பதுதான்.. இதனைச் செய்யாமல் இப்போது இருக்கும் கட்டணம்தான் நியாயமானது என்று தியேட்டர் அதிபர்கள் சொன்னால், அதற்கான பலனையும் அவர்கள்தான் அனுபவிக்க வேண்டும்..! வேறு வழியே இல்லை..!  திருட்டு விசிடி பிரச்சினைக்கும் முழு முதற் காரணம் இந்தக் கட்டண உயர்வுதான்..  மிகப் பெரிய பட்ஜெட் படங்களுக்கும், மிக முக்கியமான படங்களுக்கு மட்டுமே திருட்டு விசிடி வெளிவந்து கொண்டிருக்கிறது.. அதிகம் அறியப்படாத.. வெளிநாட்டு உரிமை கொடுக்கப்படாத சில சின்ன பட்ஜெட் படங்களை திருட்டு விசிடியில் கொடுத்தால்கூட வாங்கவோ, பார்க்கவோ ஆளில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை..! டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்தி, குறைத்துவிட்டால் திருட்டு விசிடிகள் குறையும் வாய்ப்பு உண்டு.

போட்டியாக ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டிருந்த 2 திரையரங்கு உரிமையாளர் சங்கங்களும் இப்போது ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தில் கை கோர்த்துக் கொண்டிருப்பது கமலே எதிர்பார்க்காத ஒரு விஷயம்..! தற்போது கமல் யாருக்கும் நஷ்டமில்லாமல் தியேட்டருக்கு வாடகை கொடுத்தே படத்தை ஓட்டிக் கொள்கிறேன் என்று சொன்னாலும், டிடிஹெச்சில் படத்தைக் கொடுத்தால், அந்தப் படத்தை நாங்கள் எங்கள் தியேட்டரில் காட்ட மாட்டோம் என்பதுதான் இப்போதுவரையிலும் தியேட்டர் அதிபர்களின் ஒருமித்த முடிவாகவே இருக்கிறது..! கமலும் அவர் கருத்தில் பிடிவாதமாகவே இருக்கிறார்..!

என்னைப் பொறுத்தவரையில் இதில் திரையுலகத்தினருக்கு சாதகமும் உண்டு.. பாதகமும் உண்டு என்றே நம்புகிறேன்..! முன்பே சொன்னதுபோல கேபிள் டிவிக்காரர்கள் மூலமாக பொதுமக்களிடம் 50 அல்லது 100 ரூபாய் வாங்கி படத்தைத் தயாரித்து அவர்களுக்கு மட்டுமே காண்பித்துவிடும் திட்டம் வந்துவிட்டால் அப்போது தியேட்டர்களின் கதி அதோ கதிதான்..! கமல், ஷங்கர், மணிரத்னம் படங்கள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்து எடுக்கப்படும் படங்களை மட்டுமே தியேட்டருக்கு சென்று பார்க்க அவரவர் ரசிகர்கள் விருப்பப்படுவார்கள். குடும்பக் கதைகளையும், காமெடி படங்களையும் வீட்டு தியேட்டரிலேயே பார்த்துவிடலாம் என்று பொதுமக்கள் முடிவெடுத்துவிட்டால் தியேட்டர்கள் முற்றாக அழியும் நிலை ஏற்படும்..!

இன்னொரு பக்கம் படம் நல்லாயிருக்கோ.. இல்லையோ.. நல்ல டைரக்டர்.. நல்ல பேனர்.. நமக்குத் தெரிந்த நடிகர், நடிகைகள், சிறந்த இயக்குநர் என்ற நினைப்பில் மக்கள் 50 ரூபாயைக் கொடுத்துவிட்டு ஒரு மொக்கை படத்தை பார்த்துவிட்டு நொந்து போனாலும் பணம் போட்ட தயாரிப்பாளருக்கு முழுத் தொகையும் ஒரே நாளில் கிடைத்துவிடும் சூழல் உருவாகும் என்பதால் நிறைய தயாரிப்பாளர்கள் உடனுக்குடன் தமிழ்ச் சினிமாவில் நுழைவார்கள் என்பதிலும் எனக்கு  ஐயமில்லை..!

ஆக.. இதில் இருக்கும் பாதகங்களை திரையுலகத்தினர் அனைவருமே தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளும்வகையில் ஒரு கட்டுப்பாடுடன் கூடியவகையில் தியேட்டர்காரர்களுடன்  இணைந்து செயல்படுவதுதான் மிகச் சிறந்தது.. இதில் ஈகோ பார்க்காமல், சினிமா என்னும் துறையை மென்மேலும் வளர்ச்சியடைய வைக்க வேண்டியது கமல் போன்ற மகா கலைஞனின் கையிலும் இருக்கிறது..! 

29 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

//ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் இதில் 1 சதவிகிதமான ஏழு லட்சம் பேர் மட்டுமே பார்க்க வாய்ப்பு இருந்தும்,
//

உங்கள் கணக்கு எனக்கு புல்லரிக்க வைக்குது :-))

7.5 கோடி மக்கள் இருந்தால் ஆளுக்கு ஒரு டிவி வச்சு இருப்பாங்களா?

விரிவா என்பதிவிலும், பின்னூட்டத்திலும் சொல்லி இருக்கேன்,

இங்கே சுருக்கமா சொல்கிறேன்,

தமிழ்நாட்டில் சுமார் 21.85 லட்சம் டிடிஎச் இணைப்புகள் உள்ளன.

பல டிடிஎச் ஆபரேட்டர்கள் உள்ளார்கள், லோகநாயகர் அனைத்திலும் வெளியிடவில்லை.

டாடா ஸ்கையில் தான் வெளியிட போகிறார், அவர்களுக்கு 5 % தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்புண்டு.

அதை எல்லாம் தோராயமாக கணக்கிட்டு 87,500 பேர் என கணக்கிட்டுள்ளேன்,

எனவே அதில் 50% 1000 ரூ கட்டிப்பார்த்தால் சுமார் 4.5 கோடி தான் கிடைக்கும் !!!!

அப்போ நிறைய பேர் தியேட்டருக்கு வருவாங்களே என நினைக்கலாம், ஆனால் டிடிஎச் இல் போட்டதை எளிதில் டிவிடி தரத்தில் திருட்டு டிவிடியாக ரெக்கார்ட் செய்ய முடியும்,

எனவே படம் டிடிஎச் இல் வெளியானதும் அன்றே தரமான திருட்டு டிவிடி கடைக்கு வந்துவிடும், எனவே பெரும்பாலோர் திரையரங்குக்கே செல்ல போவதில்லை.

மேலும் படம் நன்றாக இல்லை எனில் இன்னும் திரையரங்குகள் அடிவாங்கும்.

நீங்கள் என்னவென்றால் எல்லா டிடிஎச் இணைப்பிலும் படம் வருவது போல தயாரிப்பாளருக்கு பணம் கிடைக்கும்னு சொல்கிறீர்கள்.

உண்மையில் சிறிய பட்ஜெட் படத்திற்கு தான் இது சரியாக வரும்.

சரி திரையரங்க கட்டணம் அதிகம் அதனால் தான் மக்கள் திருட்டு டிவிடி பார்க்கிறார்கள் என சொல்கிறீர்கள், டிடிஎச் இல் 1000 ரூ என்பது குறைவான தொகையா?

எனவே அதனையும் மக்கள் அவ்வளவாக பார்க்க போவதில்லை, ஆனால் டிடிஎச்சில் போட்டதால் உருவாகும் தரமான திருட்டு டிவிடியை 20 ரூக்கு வாங்கி பார்த்துவிடுவார்கள்.

லோகநாயகர் சொல்வது போல ரெக்கார்ட் செய்ய முடியாது என்பதெல்லாம் உண்மையில்லை. ரெக்கார்ட் செய்ய முடியும்.

மேலும் டிடிஎச் ஒளிபரப்பை லோக்கல் கேபிள் டிவியில் ஃபீட் எடுத்து ஒளிப்பரப்பினால், இன்னும் சேதம் தான், இப்பொழுதே பல ஊர்களில் டிடிஎச் ஒளிபரப்பு லோக்கல் கேபிளில் கொடுக்கப்படுகிறது.


முழு விவரம் அறிய எனது பதிவைப்பார்க்கவும்.

butterfly Surya said...

தமிழ் சினிமாவின் அபத்தங்கள் ஏராளம். அதை சொல்லி மாளாது..எழுதி எழுதி கை வலிக்கிறது. ஆனால் எப்பொழுதாவது வரும்ஒன்றிரண்டு நல்ல சினிமாக்களை கூட பார்க்க முடியாமல் செய்த பெரும் புண்ணியம் ஒப்பனிங் எனும் மாயையை ஆரம்பித்த தயாரிபாளர்களையும் மல்டிப்ளெக்ஸ் என்ற போர்வையில் கொள்ளையடிக்கும் தியேட்டர் அதிபர்களையே சேரும்..

முதல் வாரங்களில் கூடுதல் கட்டணம், ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியாமல் முடக்கம். பார்க்கிங்கில் பகல் கொள்ளை, குழந்தைகளுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கூட கொண்டு செல்ல முடியாத 1/2 லிட்டர் தண்ணீரை 30 ரூ பாய்க்கு விற்கும் அவலம், பாப்கார்ன் 50 ரூபா, சமோசா 25 ரூபா என்று கிஞ்சித்தும் எந்த வித வியாபார ethics இல்லாமல் இருக்கும் சினிமா தியேட்டர் அதிபர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார் உலக நாயகன்.

தியேட்டருக்கு கூட்டமே வருவதில்லை என்றும் திருட்டி விசிடி குறித்து ஒலமிடும் சினிமாகாரர்கள் சினிமா ரசிகர்களின் நிலைமை என்றேனும் உணர்ந்து பேசியிருக்கிறார்களா..? இது ஒரு வித்தியாசமான கதை ... இதுவரை தமிழ் சினிமா சொல்லாத கதை என்று பெரிய பெரிய சோபாக்களின் அமர்ந்து கொண்டு தொலைகாட்சிகளில் இவர்க்ளின் ஒவர் பில்டப்பை நம்பி ஏமாந்த சினிமா ரசிகர்கள் தான் தியேட்டரை விட்டே வெறுத்து போனார்கள்....

சென்னையில் எந்த ஒரு சினிமாவையும் குடும்பத்தோடு பார்க்க குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் செலவாகிறது.. நடுத்தர வர்க்த்தினரின் மாத பட்ஜெட்டில் இது ஒரு கணிசமான தொகை.. இதெல்லாம் தியேட்டர் அதிபர்களுக்கு தெரியாதா..??
. ஆயிரம் ரூபாய் கொடுத்து விஸ்வரூபத்தை பார்ப்பவர்கள் பார்க்கட்டும். எப்படியாவது டெக்னிக்கல் தில்லாலங்கடிகள் திருட்டி விசிடி எடுத்து வெளியிடத்தான் போகிறார்கள். கமல் அனைத்தும் அறிந்தே தான் செய்கிறார்.

அரசாங்கமே இதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கும் போது இதற்கு மாற்றாக ஏதும் இல்லை என்று நினைத்திருக்க DTH ஒளிபரப்பு ஒரு வகையில் கண்டிப்பாக வரவேற்க வேண்டியதே... இந்தியில் இது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. தமிழில் இதை கமல் தொடங்கி வைக்கிறார். இதனால் தமிழ் சினிமா ஒன்றும் அழிய போவதில்லை. வேறொரு பரிமாணத்திற்கே செல்ல இருக்கிறது.சின்ன பட்ஜெட் படங்களுக்கு 50/ 100 ருபாய் வைத்து DTH ஒளிப்பரப்பும் கண்டிப்பாக நடக்கதான் போகிறது...

Let us wait and watch.. Thanks to Kamal..




வருண் said...

///எனவே அதனையும் மக்கள் அவ்வளவாக பார்க்க போவதில்லை, ஆனால் டிடிஎச்சில் போட்டதால் உருவாகும் தரமான திருட்டு டிவிடியை 20 ரூக்கு வாங்கி பார்த்துவிடுவார்கள்.//

இது உண்மை என்றால், கமலோட இந்தத் தொண்டைப் பாராட்டி, "தியாகி கமல்" எனலாம்! :)))

Prem S said...

எப்படியோ லாபம் வந்தா சரின்னு நினைக்காங்க போல ..

உண்மைத்தமிழன் said...

வவ்வால்ஜி..

உங்களை மாதிரி முடியுமா..? நமக்கு உலக அறிவு கம்மிங்கண்ணே..!

அதுனாலதான் "வைத்துக் கொண்டால்" என்று குறிப்பிட்டேன். நீங்களும் ஊகமாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். இங்கே எந்த நிறுவனம் உண்மையான தகவல்களை வெளியிட்டிருக்கிறது..? தெரிந்தால்தானே சொல்ல முடியும்..

இன்று காலையில் கிடைத்தத் தகவல்படி டிடிஹெச் மூலமாக கமலுக்கு வெறும் 10 கோடிதான் கிடைத்திருப்பதாக சினிமா பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.. இதில் எது உண்மை..? நாம் நெருக்கிக் கேட்டால் என்ன வருமான வரித்துறைக்கு போட்டுக் கொடுக்கப் போறீங்களான்னு கேட்டு கேள்வில இருந்து ஜம்ப் பண்ணிட்டுப் போய்க்கி்டடே இருப்பாங்க..!

உங்களது கட்டுரை மிக அற்புதம்.. தெளிவாக பல விஷயங்களைக் குறிப்பிட்டு பட்டியலிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றிங்கண்ணா..!

வவ்வால் said...

சூர்யா,

//சென்னையில் எந்த ஒரு சினிமாவையும் குடும்பத்தோடு பார்க்க குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் செலவாகிறது.. நடுத்தர வர்க்த்தினரின் மாத பட்ஜெட்டில் இது ஒரு கணிசமான தொகை.. இதெல்லாம் தியேட்டர் அதிபர்களுக்கு தெரியாதா..??
//

இது முற்றிலும் உண்மை ,இதனால் தான் தியேட்டருக்கு போக யோசிக்கிறாங்க,

அதே போல டிடிஎச் இல் 1000 என்பது மட்டும் குறைவா?

எனவே மக்கள் அதை மட்டும் எப்படி பார்ப்பார்கள், நடுத்தர குடும்பத்துக்கு ஒரு படம் பார்க்க 1000 ரு என்பது டிடிஎச் இல் பார்க்க உதவுமா?

எனவே டிடிஎச் இலும் பார்க்க மாட்டார்கள், அதே சமயம் டிடிஎச் திரைவெளியிட்டுக்கு முன்னரே செய்வதால் தரமனான திருட்டு டிவிடி எளிதாக உருவாக்குவார்கள், அதனை 20 ரூக்கு படம் ரிலீஸ் ஆன அன்றே வாங்கிப்பார்ப்பார்கள் :-))

மேலும் லோக்கல் கேபிள் ஆபரேட்டர்கள் டிடிஎச் ஃபீட் எடுத்து ,அவர்கள் இணைப்பில் கொடுத்து ஊருக்கே படம் காட்டிவிடுவார்கள்.

எனவே டிடிஎச் இல் படம் ரிலீஸ் முன்னர் வெளியிடுவது , தியேட்டர், டிடிஎச் இரண்டுக்குமே வருவாய் கொடுக்கப்போவதில்லை.

உண்மையில் திருட்டு டிவிடிஐ கட்டுப்படுத்த வேண்டும் எனில் இந்தியில் செய்வது போல படம் திரையில் வந்த ஒரு வாரத்தில்,மலிவான விலையில் ,அதிகபட்சம் 150 ரூ தான், டிடிஎச் இல் மூவி ஆன் டிமாண்ட் ஆக கொடுப்பதே சரி.

இதன் மூலம் திருட்டு டிவிடி யும் குறையும்,ஒருவாரம் திரையரங்குகளும் ஓபனிங் கலெக்‌ஷன் பார்க்கும்.

தயாரிப்பாளர், திரையரங்கு என இரு தரப்பும் இந்தியில் செய்வது போல செய்தால் லாபம் அடையும்.

எனது கணிப்பு கடைசி நேரத்தில் லோகநாயகர் டிடிஎச் ஒளிபரப்பை ரத்து செய்வார் என்பதே, ஏனெனில் எத்தனை பேர் மூவி ஆன் டிமான்ட் வாங்கி இருக்கிறார்கள் என பார்த்தால் குறைவாக இருந்தால் போட மாட்டார் :-))

உண்மைத்தமிழன் said...

[[[அரசாங்கமே இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கும்போது இதற்கு மாற்றாக ஏதும் இல்லை என்று நினைத்திருக்க DTH ஒளிபரப்பு ஒரு வகையில் கண்டிப்பாக வரவேற்க வேண்டியதே. இந்தியில் இது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. தமிழில் இதை கமல் தொடங்கி வைக்கிறார். இதனால் தமிழ் சினிமா ஒன்றும் அழிய போவதில்லை. வேறொரு பரிமாணத்திற்கே செல்ல இருக்கிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு 50/ 100 ருபாய் வைத்து DTH ஒளிப்பரப்பும் கண்டிப்பாக நடக்கதான் போகிறது.]]]

அப்போது நிச்சயமாக இதே தயாரிப்பாளர்கள் கமலஹாசனை நன்றியுடன் நினைவு கூர்வார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

///எனவே அதனையும் மக்கள் அவ்வளவாக பார்க்க போவதில்லை, ஆனால் டி.டி.எச்.சில் போட்டதால் உருவாகும் தரமான திருட்டு டிவிடியை 20-ரூவாக்கு வாங்கி பார்த்துவிடுவார்கள்.//

இது உண்மை என்றால், கமலோட இந்தத் தொண்டைப் பாராட்டி, "தியாகி கமல்" எனலாம்! :)))]]]

ம்.. திருட்டு டிவிடி இதன் மூலமாக அமோகமாக பரவினால் அதன் பின்பு இந்த சிஸ்டத்தை தொடுவதற்கு தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள் என்றே நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Prem Kumar.s said...

எப்படியோ லாபம் வந்தா சரின்னு நினைக்காங்க போல.]]]

தியேட்டர்களுக்கு கூட்டம் வருவது குறைந்து கொண்டே போவதால், வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க முனைகிறார்கள். இதில் லாபத்தைவிட போட்ட காசு திரும்பக் கிடைப்பதே பெரிய விஷயம்..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

ஆகா ,நாம ஒரு பின்னூட்டம் போடும் சைக்கிள் கேப்பில் உங்களுது வருது,

பாராட்டுக்கு நன்றி!

நான் அனைத்து சாதக பாதகங்கலையும் ,கணக்கிட்டே சொல்லியுள்ளேன்.

இந்தியாவில் நிலவும் ஒளிபரப்பு தொழில்நுட்பத்தில் ரெக்கார்ட் செய்ய முடியாத ஒளிபரப்பே செய்ய முடியாது என்பது தான் உண்மை.

அமெரிக்காவில் செட்டாப்- டிவி காம்பேட்டியபில் லிஸ்ட் என உருவாக்கி, ரெக்கர்ட் செய்வதை தடுக்க பார்த்தும், கணினி மூலம் ஏமாற்றி செய்துவிடுவதால், எதுவும் செய்ய முடியவில்லை என படித்தேன்.

எனவே தான் அமெரிக்காவில் பெரிய படங்கள் முதலில் டிடிஎச் இல் வருவது இல்லை.

புதுமையான முயற்சி என்ற பெயரில் தொழில்நுட்ப சிக்கலை கவனிக்காமல் செய்வதாக படுகிறது,என்னைப்பொறுத்த இந்தி திரையுலகில் செய்வது தான் சரி, ஒரே வாரத்தில் டிடிஎசில் 25 ரூ 150 விலைக்குள் கொடுக்கிறார்கள்.

மக்களுக்கும் மலிவாக இருப்பதால் திருட்டுடிவிடி வாங்க மாட்டார்கள்.

எல்லாத்துக்கும் விலை ஒப்பீடு தான் முக்கியம்.

நன்றி!

உண்மைத்தமிழன் said...

[[[அதே போல டிடிஎச் இல் 1000 என்பது மட்டும் குறைவா? எனவே மக்கள் அதை மட்டும் எப்படி பார்ப்பார்கள், நடுத்தர குடும்பத்துக்கு ஒரு படம் பார்க்க 1000 ரு என்பது டிடிஎச் இல் பார்க்க உதவுமா? எனவே டிடிஎச் இலும் பார்க்க மாட்டார்கள்.]]]

வவ்ஸ்ஸூ.. ஆன்லைன்லதான் இருக்கீரா..? சந்தோஷம்..

மாசம் 1800 அளவுக்கு டிடிஹெச்சுக்கு கட்டுறவங்க என்ன நடுத்தர வர்க்கமா..? அதுலேயும் ஆன்லைன்ல பணத்தை ரீசார்ஜ் செய்ற அளவுக்கு வசதியிருக்கிறவங்களுக்கு ஆயிரம் ரூபாவெல்லாம் சாதாரணம்.. நிச்சயம் பாதிக்கு பாதி பேர் பார்த்திருவாங்கன்னு நினைக்கிறேன். அதுலேயும் இதுல கொஞ்சம் அவங்கவங்க ஸ்டேட்டஸும் இணைஞ்சிருக்கு. அதை விட்டுக் கொடுக்க மாட்டாங்க..!

[[[அதே சமயம் டிடிஎச் திரைவெளியிட்டுக்கு முன்னரே செய்வதால் தரமனான திருட்டு டிவிடி எளிதாக உருவாக்குவார்கள், அதனை 20 ரூக்கு படம் ரிலீஸ் ஆன அன்றே வாங்கி பார்ப்பார்கள் :-))]]]

இதை இப்போவரைக்கும் இல்லவே இல்லைன்னு கமல் எப்படி சாதிக்கிறாருன்னு தெரியலையே..! ஒருவேளை மறைமுகமாக டிவிடி வந்தாலும் தனக்குக் கவலையில்லைன்னு சொல்றாரு போல..!

[[[மேலும் லோக்கல் கேபிள் ஆபரேட்டர்கள் டிடிஎச் ஃபீட் எடுத்து ,அவர்கள் இணைப்பில் கொடுத்து ஊருக்கே படம் காட்டிவிடுவார்கள்.
எனவே டிடிஎச்-ல் படம் ரிலீஸ் முன்னர் வெளியிடுவது, தியேட்டர், டிடிஎச் இரண்டுக்குமே வருவாய் கொடுக்கப் போவதில்லை.]]]

ஊர்ல காட்டினா அந்த கேபிள்காரனுக்கு அடுத்து ஆப்புதான்..! கண்டிப்பாக அவனது தொழில் முடக்கப்படும் அளவுக்கு பிரச்சினைகள் வரும். அதைச் செய்ய மாட்டார்கள் என்றே நம்புகிறேன்..!

மற்றபடி டிடிஎச்சின் மூலம் கிடைக்கும் தொகை பெரியதாக இல்லை என்றாலும், பின் விளைவுகள் அதைவிட பெரியதாக இருப்பதால் தியேட்டர்காரர்களின் பயத்தில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

இருக்கேன், இப்போ ஒர்க், இராவுல வந்து குடையுறேன் இருங்க :-))

//மாசம் 1800 அளவுக்கு டிடிஹெச்சுக்கு கட்டுறவங்க என்ன நடுத்தர வர்க்கமா.//

அண்ணாச்சி 1800 என்பது டிடிஎச் வாங்கும் போது கட்டுவதாக இருக்கும், மாதம் எல்லாம் யாரும் 1800 கட்டுவதேயில்லை.

அதிகபட்சம் 300 ரூ தான்.

Average Revenue Per User(ARPU)= around 150 rs கூட இல்லை.

நீங்க இதனை நெட்டில் சரிப்பார்க்கலாம்.

மற்றவை பிறகு.

Unknown said...

கலைஞானி எப்பவும் சரியான வழியை தான் பின்பற்றுவார் எதிர்கமா கை கோர்த்து செல்லுதல் நலம்

Unknown said...

With internal TV tuner card along with windows media center any DTH programme can be recorded. Later there are programmes that can remove the water marks.

ஸ்ரீராம். said...

பட்டர்ஃப்ளை சூர்யா சொல்வது சரி. நடுத்தரக் குடும்பங்களுக்கு இன்றைய நிலவரத்தில் குடும்பத்துடன் ஒரு படம் பார்ப்பது என்பது 5 நட்சத்திர ஓட்டலில் சாப்பிடுவது போன்றது. கமல் கடைசி நேர ஒரு ஒப்பந்தத்தில் இந்த முடிவை வாபஸ் வாங்கினால் கூட அதற்குமுன் தியேட்டர்க் காரர்கள் செய்யும் இந்தக் கொள்ளைகளுக்கு ஒரு முடிவும் அதில் வந்தால் நல்லது. இதற்கு மேலும் கிரிக்கெட்டில் கிரேடு வைத்து சம்பளம் தருவது போல நடிகர் நடிகை முதல் டெக்னீஷியன்கள் வரை கிரேடு முறையில் சம்பள ஒப்பந்தம் போடப் பட்டால் தியேட்டர்க் கொள்ளைகள் கூடக் குறையலாம்! கமல் இப்போது டி டி ஹெச்சில் தராவிட்டால் திருட்டு வி சி டி வராமல் இருக்கப் போகிறதா என்ன? இன்னும் 2 நாள் தாமதமாகும். கொஞ்சம் தரம் குறைவாக இருக்கும்! அவ்வளவே.

P.P.S.Pandian said...
This comment has been removed by the author.
P.P.S.Pandian said...

கமல் சொல்வது மிகச் சரி . புதிய விஷயம் உடனே யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது .காலப்போக்கில் சரி என அனைவரும் உணர்வோம்
----P.Sermuga Pandian

pichaikaaran said...

" படம் எப்படியும் ஃப்ளாப் ஆக் போகிறது... திருட்டு விசிடி வந்தால் என்ன கெட்டு விடும்... நாம் கிடைத்ததை சுருட்டுவோம் “ என்ற மனோபாவத்தில் கமல் செயல்படுகிறார் என்பதுதானே முக்கிய குற்றச்சாட்டு...அதை மறைத்து விட்டீர்களா.. அல்லது மறந்து விட்டீர்களா

உண்மைத்தமிழன் said...

[[[இந்தியாவில் நிலவும் ஒளிபரப்பு தொழில் நுட்பத்தில் ரெக்கார்ட் செய்ய முடியாத ஒளிபரப்பே செய்ய முடியாது என்பதுதான் உண்மை.
அமெரிக்காவில் செட்டாப்- டிவி காம்பேட்டியபில் லிஸ்ட் என உருவாக்கி, ரெக்கர்ட் செய்வதை தடுக்க பார்த்தும், கணினி மூலம் ஏமாற்றி செய்துவிடுவதால், எதுவும் செய்ய முடியவில்லை என படித்தேன்.
எனவேதான் அமெரிக்காவில் பெரிய படங்கள் முதலில் டிடிஎச் இல் வருவது இல்லை.]]]

இவ்வளவு பெரிய விஷயத்தை கமல் ஏன் மறைக்கிறார் என்றும் தெரியவில்லை..! திருட்டு விசிடி வந்தாலும் பரவாயில்லை என்றாவது சொல்லியிருக்கலாம்..!

[[[புதுமையான முயற்சி என்ற பெயரில் தொழில்நுட்ப சிக்கலை கவனிக்காமல் செய்வதாகபடுகிறது. என்னைப் பொறுத்த இந்தி திரையுலகில் செய்வதுதான் சரி. ஒரே வாரத்தில் டிடிஎசில் 25 ரூ 150 விலைக்குள் கொடுக்கிறார்கள்.
மக்களுக்கும் மலிவாக இருப்பதால் திருட்டு டிவிடி வாங்க மாட்டார்கள்.
எல்லாத்துக்கும் விலை ஒப்பீடுதான் முக்கியம்.]]]

தயாரிப்பாளர்கள் ஒரு தனி இனம். பணம் லாபமாக கிடைத்தால் அனைத்தையும் அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். தோல்வியடைந்தால் மற்றவர்களும் அதில் பங்கெடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்..!

இந்த விஷயத்துக்கு அவங்க லேசுல ஒத்துக்க மாட்டாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[சக்கர கட்டி said...

கலைஞானி எப்பவும் சரியான வழியைதான் பின்பற்றுவார் எதிர்கமா கை கோர்த்து செல்லுதல் நலம்.]]]

அப்பாடா.. இந்த போஸ்ட் கலைஞானியின் ஆதரவாளர்களின் கண்ணிலும் பட்டிருக்கிறது.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Unknown said...

With internal TV tuner card along with windows media center any DTH programme can be recorded. Later there are programmes that can remove the water marks.]]]

எல்லாம் தெரிந்தும் கமல் மூடி மறைப்பதுதான் வருத்தமளிக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

பட்டர்ஃப்ளை சூர்யா சொல்வது சரி. நடுத்தரக் குடும்பங்களுக்கு இன்றைய நிலவரத்தில் குடும்பத்துடன் ஒரு படம் பார்ப்பது என்பது 5 நட்சத்திர ஓட்டலில் சாப்பிடுவது போன்றது. கமல் கடைசி நேர ஒரு ஒப்பந்தத்தில் இந்த முடிவை வாபஸ் வாங்கினால்கூட அதற்கு முன் தியேட்டர்காரர்கள் செய்யும் இந்தக் கொள்ளைகளுக்கு ஒரு முடிவும் அதில் வந்தால் நல்லது.]]]

இந்த விஷயத்தைக் கையில் எடுத்தால் உடனேயே எஸ்ஸாகிவிடுவார்கள் தியேட்டர்காரர்கள். அவரவர்க்கு அவரவர் பிஸினஸ்தான் முக்கியம்..!

[[[இதற்கு மேலும் கிரிக்கெட்டில் கிரேடு வைத்து சம்பளம் தருவது போல நடிகர் நடிகை முதல் டெக்னீஷியன்கள்வரை கிரேடு முறையில் சம்பள ஒப்பந்தம் போடப்பட்டால் தியேட்டர் கொள்ளைகள் கூட குறையலாம்!]]]

நி்ச்சயமாக குறையும். ஆனால் எந்த நடிகர் இதற்கு ஒத்துக் கொள்வார்..?

[[[கமல் இப்போது டி டி ஹெச்சில் தராவிட்டால் திருட்டு வி சி டி வராமல் இருக்கப் போகிறதா என்ன? இன்னும் 2 நாள் தாமதமாகும். கொஞ்சம் தரம் குறைவாக இருக்கும்! அவ்வளவே.]]]

சரியாச் சொன்னீங்க பிரதர்.. வருகைக்கு மிக்க நன்றி..!

R.Puratchimani said...

நல்ல பதிவு....

கமல் என்ன முட்டாளா?
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/12/blog-post_10.html

வவ்வால் said...

அண்ணாச்சி,

//திருட்டு விசிடி வந்தாலும் பரவாயில்லை என்றாவது சொல்லியிருக்கலாம்..!//

அதை எப்படி வெளிப்படையாக சொல்லுவார், ஆனால் அவரது மனநிலை அப்படித்தான் இருக்கிறது.

படம் ரிலீஸுக்கு முன்னர் டிடிஎச்சில் போட்ட முதல் ஆள்னு பேரு கிடைச்சாப்போதும்னு நினைச்சிருப்பார்!

மேலும் பிவிபி நிறுவனத்திடம் பெரும் தொகை வாங்கியுள்ளார், இன்னும் கொடுக்கவில்லை, படம் மூலம் கிடைக்கும் பணத்தில் இருந்து தான் கொடுக்கப்போவதாக பேச்சு, படம் ஓடவில்லை பிரமிட் சாய்மீராவுக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு மர்மயோகியாய் மாறி ராமம் போட்டது போல போடுவாராயிருக்கும்.

சொந்தப்பணம் என எதுவும் படத்தில் முதலீடு செய்திருக்க வாய்ப்பில்லை.

மீடியாவில் இருக்க உங்களுக்கு இன்னும் பல விஷயம் தெரிந்திருக்கும், படம் வந்த சில நாட்களில் பஞ்சாயத்து வரலாம் :-))

#//தயாரிப்பாளர்கள் ஒரு தனி இனம். பணம் லாபமாக கிடைத்தால் அனைத்தையும் அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். தோல்வியடைந்தால் மற்றவர்களும் அதில் பங்கெடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்..!

இந்த விஷயத்துக்கு அவங்க லேசுல ஒத்துக்க மாட்டாங்க..!

//

இந்தியில் அமீர்கான்,சல்மான்,அக்‌ஷய்,ரித்திக் படங்கலையே ஒரு வாரத்தில் இருந்து சுமார் 150 கட்டணத்தில் டிடிஎச்சில் போட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

முதல்வார கலெக்‌ஷன் தான் அங்கே வெற்றி,தோல்வியை நிர்ணயிப்பதே ,ஒரு வாரத்தில் படம் ஹிட் என்றால் 100 கோடியை தாண்டிவிடும்.அதற்கான கால அவகாசம் கொடுத்துப்பார்த்துவிட்டு டிடிஎச் இல் போடுகிறார்கள்.

மேலும் சில நாட்கள் கழித்து தான் திருட்டு டிவிடி மட்டமாக வரும் ,சரியாக அந்நேரம் டிடிஎச்சில் 150 ரூ என்ற விலையில் வருவதால், திருட்டு டிவிடிக்கு மதிப்பில்லாமல் போகிறது எனலாம்.

நான்காவது வாரத்தில் பெரும்பாலும் அஃபிசியல் டிவிடியும் போடுகிறார்கள்.

எனவே எல்லாமே சீராக வருமானம் தயாரிப்பாளருக்கு கொடுக்கிறது.

இதனால் தியேட்டருக்கும் பாதிப்பில்லை,தயாரிப்பாளருக்கும் பாதிப்பில்லை.

இதனாலேயே இந்தி நட்சத்திரங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க முடிகிறது.

எனவே அம்முறை தான் நீண்ட காலத்திற்கு பின்ப்பற்றக்கூடிய வியாபார யுக்தி, லோகநாயகர் சொல்வதெல்லாம் அனைவருக்கும் ஒத்துவராது.

ஒரு படம் நல்லா இல்லை என விமர்சனம் எழுதினாலே எத்தனைப்பேர் ,நல்ல வேளை தப்பித்தேன் 120 மிச்சம் என சொல்வதை நீங்களே பார்த்திருப்பீர்கள், அப்படி இருக்க 8 மணி நேரம் முன்னதே டிடிஎச் இல் வரும் போது படம் நல்லா இல்லைனு செய்தி பரவினால் முதல் காட்சிக்கு கூட ஆள் தேறாமல் போகலாம்.

இந்த அறிவிப்பால் தியேட்டரில் முன் பதிவு செய்வது கூட குறையலாம்.

#நடிகர்,நடிகையருக்கு அதிக சம்பளம் ,தயாரிப்பு செலவு அதிகம், எனவே தியேட்டருக்கு அதிக விலையில் எம்ஜி யில் கொடுப்பதால், சீக்கிரம் பணம் எடுக்க ,டிக்கெட் விலை ஏற்றம் .

ஏன் நடிகர் ,நடிகையர்கள் , அவர்கள் சம்பளத்தினை குறைத்துக்கொள்ள கூடாது.

இல்லை தெலுங்கில் உள்ளது போல அட்வான்ஸ் 10% வாங்கிக்கொண்டு படம் விற்பனையானதும் மீதி சம்பளம் பெறக்கூடாது.

இதனால் தயாரிப்பாளர் சுமை குறையும், தியேட்டருக்கு குறைவான விலையில் படம் கொடுப்பார் , கட்டணமும் குறையும்.

அதை விட்டுவிட்டு தியேட்டர் கட்டணம் மட்டும் தனியாக ஏறினாப்போல சொல்கிறார்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[P.P.S.Pandian said...

கமல் சொல்வது மிகச் சரி. புதிய விஷயம் உடனே யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. காலப்போக்கில் சரி என அனைவரும் உணர்வோம்
----P.Sermuga Pandian]]]

தங்களது வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[pichaikaaran s said...

"படம் எப்படியும் ஃப்ளாப் ஆக் போகிறது. திருட்டு விசிடி வந்தால் என்ன கெட்டு விடும். நாம் கிடைத்ததை சுருட்டுவோம்“ என்ற மனோபாவத்தில் கமல் செயல்படுகிறார் என்பதுதானே முக்கிய குற்றச்சாட்டு. அதை மறைத்து விட்டீர்களா. அல்லது மறந்து விட்டீர்களா?]]]

தம்பீ.. ராசா.. தனி மனித விருப்பு, வெறுப்புக்களையும் இந்த இடத்தில், இந்த விஷயத்தில் கொட்டக் கூடாது.. சாருவின் அல்லக்கையாக அல்லாமல் சாதாரண சினிமா ரசிகனாக யோசித்துப் பார்.. உனக்கே தெரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[R.Puratchimani said...

நல்ல பதிவு....

கமல் என்ன முட்டாளா?

http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/12/blog-post_10.html]]]

கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[அண்ணாச்சி,

//திருட்டு விசிடி வந்தாலும் பரவாயில்லை என்றாவது சொல்லியிருக்கலாம்..!//

அதை எப்படி வெளிப்படையாக சொல்லுவார், ஆனால் அவரது மனநிலை அப்படித்தான் இருக்கிறது.
படம் ரிலீஸுக்கு முன்னர் டிடிஎச்சில் போட்ட முதல் ஆள்னு பேரு கிடைச்சா போதும்னு நினைச்சிருப்பார்! மேலும் பிவிபி நிறுவனத்திடம் பெரும் தொகை வாங்கியுள்ளார். இன்னும் கொடுக்கவில்லை. படம் மூலம் கிடைக்கும் பணத்தில் இருந்துதான் கொடுக்கப் போவதாக பேச்சு. படம் ஓடலை, பிரமிட் சாய்மீராவுக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு மர்மயோகியாய் மாறி ராமம் போட்டது போல போடுவாராயிருக்கும்.]]]

அதெல்லாம் இங்க முடியாது.. மொத்தச் செலவையும் கைல கொடுத்தர்றேன்.. படத் தயாரிப்பு உரிமையை எனக்குக் கொடுத்திருங்க என்று சொல்லிவிட்டுத்தான் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கேர்டேக் செய்திருக்கிறார்.. படம் ஓடினால் காசு வந்து கட்டுவார்.. இல்லையெனில் சொந்தக் காசில் இருந்து தருவார்..

பிரமிட் கதை வேறு.. "உங்களால் படம் எடுக்க முடியாவிட்டால் வேறு தயாரிப்பாளரிடம் கை மாற்றிவிடுங்கள். அவருக்கு நான் கால்ஷீட் தருகிறேன். ஆனால் எக்காரணம் கொண்டும் கொடுத்த அட்வான்ஸ் திருப்பித் தரப்பட மாட்டாது.." - இதுதான் அந்த அக்ரிமெண்ட்டில் உள்ளது. அதனால்தான் பிரமீடின் பணம் 12 கோடி கமலிடம் தூங்கிக் கொண்டிருக்கிறது..!

swam said...

இதில் இருக்கும் சாதக பாதகங்களை சரியாக சொன்னவர் நீங்கள் தான் ஐயா எல்லோரும் ஒரு பக்க ஜால்ரா அடிக்க நீங்கள் நடு நிலைமையோடு சொன்ன கருத்து ஏற்றுக் கொள்ள கூடியதே