முகமூடி - சினிமா விமர்சனம்

02-09-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கமான மிஷ்கினின் படம்தான்..! நடிகர், நடிகையர்கள், கதை, திரைக்கதை மட்டுமே மாற்றம்..! எடுத்தவிதம் ஒன்றுதான்.. முதல் ஷாட்டிலேயே மிஷ்கின் தெரிகிறார்..! அவ்வப்போது அவரது ஸ்டைலில் கேமிரா, ஸ்கிரீன் முழுவதும் பரவிச் செல்கிறது..! சின்னச் சின்ன யதார்த்த நகைச்சுவைகளும், அசரடிக்கும் ஒரு சில காட்சிகளும், மயங்க வைக்கும் நடிப்பும் இதிலும் தொடர்கிறது..!


இதன் கதையை 2 விதமாகவும் சொல்ல்லாம்..! தொடர் கொள்ளை, கொலைகளைக் கண்டுபிடிக்க புதிய அப்பாயிண்ட்மெண்ட்டில் துணை கமிஷனர் நாசர் நியமிக்கப்படுகிறார். கொலைகாரர்களைப் பிடித்தாரா..? இல்லையா..?

காதலிக்காக பேட்மேன் வேடம் பூண்ட ஹீரோ, ஒரு கொலைச் சதியில் சிக்கிக் கொள்ள.. அதில் இருந்து மீண்டாரா..? இல்லையா..?

ஜீவாதான் ஹீரோ என்றாலும், முழுமையாக பாராட்டைப் பெறுவது நரேன்தான்.. “அஞ்சாதே” பிரசன்னாவை போன்று இந்த வில்லத்தனத்தை கேட்டுப் பெற்ற நரேனின் புத்திசாலினத்தை மிகவும் பாராட்ட வேண்டும்..! அவருடைய அறிமுகக் காட்சியில் துவங்கி, அஸ்தமிக்கும் காட்சிவரையிலும் அவர் இருக்கின்ற ஸ்கிரீனில் அவர் மட்டுமே தனித்து தெரிகிறார்..!

மருத்துவமனையில் மாஸ்க்கை எடுத்துவிட்டு தனது ஒரு புற முகத்தை மட்டும் காட்டிவிட்டு ஓடத் துவங்கும் நரேனின் அந்த ஸ்டைல் ஸ்கிரீனுக்கே அழகு சேர்க்கிறது.. செல்வாவை தேடி கொலைவெறியுடன் ஆனால் எந்தவித அலட்டலும் இல்லாமல் கையில் சுத்தியலுடன் படியேறி வரும் அந்த அலட்சிய நரேனை யாருக்கும் பிடிக்காமல் போகாது.. தியேட்டரில் முழு கைதட்டலையும் இந்தக் காட்சி பெறும் என்றே நினைக்கிறேன்..! 

இதே வேகத்தோடு இறுதியில் “சூப்பர்மேன்.. பேட்மேன்.. ஸ்பைடர்மேன்..” என்று ஜீவாவை கிண்டலடித்து பேசும் காட்சியில் நரேனைவிடவும் வேறொரு சிறப்பான வில்லன் மிஷ்கினுக்கு கிடைத்திருக்க மாட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது..!

மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் குங்பூ, கராத்தேயில் தானும் ஒரு கில்லிதான் என்பதை நிரூபிக்கும்வகையில் சண்டைக் காட்சிகளில் மிக பிரயத்தனம் செய்து நடித்திருக்கிறார் ஜீவா.. தமிழ்ச் சினிமாவில் இந்த குங்பூ கலை இந்த அளவுக்கு வியாபித்திருப்பது இந்தப் படத்தில் மட்டுமே என்று நினைக்கிறேன்..!

இந்த பேட்மேன் ஜீவாவைவிடவும், சாக்லேட் பாய் ஜீவாதான் அசத்தியிருக்கிறார்..! மீன் மார்க்கெட்டில் “என் கையை வெட்றா” என்று வம்புச் சண்டைக்கு இழுக்கும் அந்த ஸ்டைல்.. ஹீரோயினை பார்த்தவுடன் சொக்கிப் போய் நிற்பது.. அவள் அடிப்பதையும், செருப்பை எடுத்து வீசுவதையும்கூட அலட்சியமாக ஒதுக்குவது.. ஸ்பிரே செய்வதைக்கூட மாலை, மரியாதை லெவலுக்கு ஏற்றுக் கொண்டு சரிவதுமான அந்தக் காட்சியில் அனைத்து காதலர்களுக்கும் ஜீவாவை பிடிக்கும் என்று நினைக்கிறேன்..!

ஹீரோயினைத் தேடி கோபத்துடன் கிளம்பி வரும் காட்சியில் வரும் வசனங்களும், நண்பர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சியும் செம கலகலப்பு..! ஹீரோயினிடம் பேசுவதற்காக வந்து தன்னைப் பற்றி பீலாவிட்டுக் கொண்டிருக்கும்போது அவரது அப்பா வந்து குட்டையை உடைப்பதும் இயல்பான நகைச்சுவையில் ஒன்று..! 

மாஸ்டருக்கு ஒரு அவமானம் என்றால் அதனை தாங்கிக் கொள்ள முடியாத சிஷ்யர்களை வைத்திருக்கும் கேரக்டர் செல்வாவிற்கு.. அநியாயமாய் பரமபதம் அடையும்வரையிலும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருந்த ஒரு மர்மக் கதை சூப்பர்.. அதன் திருப்பம் திரைக்கதைக்கு அந்த இடத்தில் மேலும் ஒரு வேகத்தைக் கூட்டியிருந்தது..! செல்வா,. நரேன் மோதலில் சந்தேகமில்லாமல் நரேன் ஜெயித்தார் என்றாலும், செல்வாவின் அந்த ஈடு கொடுத்தலும் நிஜமான பைட்டுதான்..

ஹீரோயின் பூஜா ஹெக்டே புதுமுகம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.. இன்னும் 2 படங்களிலாவது நடிக்கட்டும். பின்பு பேசலாம்..! 

முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் இது மிஷ்கினின் படம் என்பதை பல காட்சிகளும், பல ஷாட்டுகளும் சொல்லிக் கொண்டே வருவதுதான் இப்படத்தின் சிறப்பு.. மக்களுக்கான சினிமா என்பதைவிட  கலைக்கான சினிமாவில் இதுவும் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..! 

ஜீவா சாப்பிடும்போது அங்கேயிருந்து கேமிரா நகர்ந்து படுக்கையில் படுத்திருக்கும் அவர் அப்பாவிடம் வருவதும். தொடர்ச்சியான வசனக் காட்சிகள் எடுக்கப்பட்டவிதம் கவர்கிறது..! கையில் சிக்கிவிட்ட ஒரு கொலையாளியிடம் உண்மையை வரவழைக்க நாசர், செல்போனில் போலீஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் பேசும்காட்சி உம்மணா மூஞ்சிகளைகூட சிரிக்க வைத்துவிடும்..! 

அதேபோல் மருத்துவமனையில் தன்னைக் கொல்ல வரும் பத்ரியை பிடிக்கும் இடத்தில் நடிப்பும் டைரக்ஷனும் ஏ ஒன்..! ஆனால் அதற்கடுத்து நரேன் கும்பலை பிடிக்க துவங்கும் நேரத்தில்தான் ஆயிரம் அனர்த்தங்கள்.. இதற்கு பின்புதான் முந்தைய மிஷ்கினின் படங்களைவிட இப்படம் திரைக்கதையில் அநியாயத்திற்கு நொண்டியடித்திருக்கிறது..!

நரேன் பணயக் கைதிகளை விடுவிக்க அரசுடன் பேரம் பேசும் திரைக்கதை இது மிஷ்கினின் படம்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவிட்டது.. லாஜிக் பார்க்க முடியாதவைகள் நகைச்சுவை படங்களும் சிலவகை கமர்ஷியல் படங்களிலும். ஆனால் தமிழ்ச் சினிமாவில் முதல் சூப்பர் ஹீரோ படம்.. இதுதான் இந்த வரிசையில் முதல் படம் என்றெல்லாம் பூதாகரமாக பிரச்சாரம் செய்யப்பட்ட படத்தில் சொத்தையான லாஜிக் ஓட்டைகள் என்றால் எப்படி..?

கிரீஷ் கர்நாட் மற்றும் அவரது குரூப்பின் செயல்பாடுகள் என்ன..? கிரீஷ் கர்நாட்டின் அந்த ரோபோ மனிதன் தயாரிப்பு எதற்காக..? பேட்மேன் உடையை போன்று பல உடைகள் அங்கே எதற்காக இருக்கின்றன..? அவர்களுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சில் கோட்டைவிட்டுவிட்டு, அவர்களை வைத்தே குழந்தைகள் தப்பிக்கிறார்கள் என்றெல்லாம் கொண்டு சென்றது சூப்பர் மொக்கைத்தனம்..!

ஒரு துணை கமிஷனர் சுடப்பட்டிருக்கிறார். ஒரு இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டிருக்கிறார்.. பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டாமா..? தமிழ்நாடு போலீஸை சப்பையாக்க் காட்டி அந்த மருத்துவமனை சண்டைக்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் கொலை செய்ய ஆட்கள் வருவதை பார்த்தவுடன் ஒரு இன்ஸ்பெக்டர் "ஹலோ" என்று செல்போனில் பேசியபடியே விலகி ஓடுவது ஒன்றுதான் இதில் இருக்கும் யதார்த்தம்..!

கடலோர காவல் படையின் அதிகாரியைக் கடத்திச் சென்றால், மாநில அரசுதான் விடலாம். மத்திய அரசுமா சும்மா இருக்கும்..? சாதாரண செயின் திருடர்களுக்கே ஸ்கெட்ச் போடும் போலீஸ் இதுக்கெல்லாம் பயப்படுவார்கள்.? இந்திய எல்லைக்கு அப்பால போயிட்டா இவங்களை கண்டுபிடிக்க முடியாதாக்கும்..? சோமாலிய கடற் கொள்ளையர்களை அவர்களது கடற் பிரதேசத்திற்கே நமது இந்திய விமானப் படையை அனுப்பி குண்டு போட்டு பரலோகம அனுப்பியவர்கள் இவர்கள்.. இதெல்லாம் பிளஸ்டூ கிளாஸ்ல ஆத்திச்சூடி சொல்லித் தர்ற மாதிரி இருக்கு..! இன்னொரு மிகப் பெரிய முரண்பாடு.. அதுவரையிலும் பேட்மேன் தமிழகத்து மக்களுக்கு அப்படியென்ன நல்லது செஞ்சுட்டாருன்னு தெரியலை.. ஆனா நாசர் பேட்டி கொடுக்குறாரு.. “தமிழகமே கொண்டாடும் பேட்மேன்..” அப்படீன்னு..! என்னத்த சொல்றது..? 

படத்தில் மொத்தமுள்ள 3 பாடல்களில் இடைவேளைக்கு முன்பே  2 பாடல்களை வைத்து நிரப்பிவிட்டார். துவக்கத்தில் வரும் அந்த நீண்ட ஷாட்.. அதைத் தொடர்ந்த ஈர்ப்பான நடனம்.. கண்ணதாசன் காரைக்குடி டைப்பில் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது..! வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா பாடல் துவங்கும் காட்சியும் ரசனையானது.. யாருமே எதிர்பார்க்கவில்லை.. அக்காட்சியை படமாக்கியவிதமும் சூப்பர்தான்.. ஆனால் இதற்காக சுவிட்சர்லாந்து போயிருக்க வேண்டுமா என்றும் கேட்கத் தோன்றுகிறது.. 

3-வது பாடலான "மாயாவி", மருத்துவமனையில் நாசரை கொல்ல வரும் ஆட்களை ஜீவா தாக்கி திருப்பியனுப்பிய பின்பு பூஜாவின் லீட் காட்சியோடு வரும்.. அது அந்த இடத்தில் படத்தின் வேகத்தைக் குறைக்கிறது என்று சொல்லி நீக்கிவிட்டார்களாம்.. இது மட்டுமல்ல மொத்தம் 3 மணி நேர படமாக திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.. அந்த பாடல் காட்சியை வைத்திருந்தால் நிச்சயம் அந்த இடத்தில் டொக்குதான்..!

"இந்தப் படத்துக்கு யு சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.. அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்.. ஒரு பாட்டியோட கதையைத்தான் இப்போதைய ஜெனரேஷனுக்கு ஏற்றாற்போல் கொடுத்திருக்கேன்.. இதில் எந்தக் காட்சியிலும் விரசமில்லை.. ஆபாசமில்லை.. தாராளமாக என்னை நம்பி வரலாம்..” என்று குரல் கொடுத்தார் மிஷ்கின்.. இப்படிச் சொல்லிவிட்டு, ஹீரோ ஒண்ணுக்கு போவதை ஹீரோயின் பார்த்து வெட்கப்பட்டு “பார்த்துட்டேன்” என்று குழந்தைகளிடம் சொல்லும் காட்சி ரொம்ப ஓவர்.. இதை நீக்கிவிட்டுத்தான் யு சர்டிபிகேட் கொடுத்திருக்க வேண்டும்.. சரி போகுது விடுங்க.. ‘கந்தசாமி’யையும், ‘சிவாஜி’யையுமே ‘யு’ சர்டிபிகேட்ல பார்த்த ஜனங்க நாம..! 

தமிழ்ச் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியவர்களில் மிஷ்கினும் ஒருவர் என்ற முறையில் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், பக்தியும் உண்டு. இது அவரது படைப்பின் மீது எழுந்த விமர்சனம் மட்டுமே.. அந்த வகையில் இப்படம் எனக்கு சற்று அதிருப்தியை தந்திருக்கிறது என்பதை மட்டுமே பதிவு செய்ய விரும்புகிறேன்.. 

இந்த ‘முகமூடி’ தொடர்ச்சியான படங்களாக வரப் போகிறது என்று மிஷ்கினும், தயாரிக்க நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என்று ‘யு டிவியும்’ சொல்லியிருக்கிறார்கள். வரவேற்கிறேன்.. ஆனால் அடுத்த பாகத்திலாவ்து இந்த ‘பேட்மேன்’ ரசிகர்களைக் கவரும்வகையில் இருக்கட்டும்..!

முகமூடி - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..!   

28 comments:

கோவை நேரம் said...

கொஞ்சம் நல்ல விதமா சொல்லி இருக்கீங்க...பார்க்கலாம்....

வவ்வால் said...

அண்ணாச்சி,

என்னாச்சி? முடியலை அவ்வ்வ் :-((

pikkali.paya said...

அண்ணே
படம் பாத்தவங்க, நரேன் சுத்தில மண்டைல அடிச்ச அடில இன்னும் வலி இன்னும் போகலன்னு சொல்லிட்டு இருகாங்க :)

settaikkaran said...

உங்க விமர்சனத்தையும் படிச்சுப்புட்டேன். இனி, படம் பார்த்துற வேண்டியதுதான் பாக்கி! நன்றி! :-)

ananthu said...

நரேன் சுத்தியலுடன் நடந்த காட்சியை நானும் ரசித்தேன் , ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் " பேட்மேன் , ஸ்பைடர் மேன் " என்றெல்லாம் வசனம் பேசிய போது தியேட்டரில் விழுந்து விழுந்து சிரித்தார்கள் , அந்த அளவிற்கு சகிக்க முடியவில்லை . அஞ்சாதே பிரசன்னா நிச்சயம் நரேனை விட பல படி மேல் ...
நீங்கள் மிஸ்கினின் மனம் நோகாமல் எழுதிய விமர்சனம் போல் தெரிகிறது ... நீங்கள் சொன்னது போல அவர் திறமைசாலி தான் ...

Unknown said...

அனைவருமே ஹீரோ அளவுக்கு உழைத்திருக்கிறார்கள் - பாராட்டவேண்டிய விஷயம்
இறுதி அரைமணி நேரம் யூகிக்க முடியாத காட்சிகள் # கடைசி வரை யூகிக்க முடியாமலேயே போய் விட்டது ..
நரேன் வில்லனாக நடிக்கவில்லை , வில்லனாக வாழ்ந்திருக்கிறார் - மிஷ்கினுக்கும் யூ டிவிக்கும்

சூனிய விகடன் said...
This comment has been removed by the author.
சூனிய விகடன் said...

இது அவரது படைப்பின் மீது எழுந்த விமர்சனம் மட்டுமே...................இந்த பீடிகைகள் நேற்று வரை எழுதிய விமரிசனங்களில் காணவில்லையே....உண்மைத்தமிழனுக்கு என்ன ஆச்சு...?.....படம் பார்த்து வந்த நண்பன் உங்கள் விமரிசனத்தைப் படித்து விட்டு சொன்னது " ஆனாலும் இந்த சவக்களை நரேனுக்கு இவர் ரொம்பதான் கொடி பிடிக்கிறார். மிஷ்கின் ஜீனியஸ் தான் ..சொல்லப்போனால் ஓவர் ஜீனியஸ் ( ப்ளஸ் ஓவர் அலட்டல் ) மிஷ்கினின் படங்களுக்கு முக்கிய எதிரியே இந்த ஓவர் ஜீனியஸ்த்தனம் தான்"

இருந்தாலும் " ச்சே " என்று செல்லமாகத்திட்டிவிடுவீர்கள் என்பதால் விமரிசனம் மிக அருமை என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

கொஞ்சம் நல்ல விதமா சொல்லி இருக்கீங்க... பார்க்கலாம்....]]]

தவறுகளே இல்லாத படம் எங்க வருது ஸார்..? இதுவும் நல்லாயில்லைன்னு சொல்றதெல்லாம் டூ மச்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, என்னாச்சி? முடியலை அவ்வ்வ் :-((]]]

அப்பாடா.. தப்பிச்சோம்டா சாமி.. வவ்வால்ஜி.. இனிமே எல்லா பதிவுலேயும் இதே மாதிரி 2 வரில பின்னூட்டம் போட்டுட்டு போயிட்டீங்கன்னா புண்ணியமா இருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[pikkali.paya said...

அண்ணே, படம் பாத்தவங்க, நரேன் சுத்தில மண்டைல அடிச்ச அடில இன்னும் வலி இன்னும் போகலன்னு சொல்லிட்டு இருகாங்க :)]]]

தலையை கொஞ்சம் தேய்ச்சு விட்டுக்கச் சொல்லுங்க.. சரியாப் போயிரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[சேட்டைக்காரன் said...

உங்க விமர்சனத்தையும் படிச்சுப்புட்டேன். இனி, படம் பார்த்துற வேண்டியதுதான் பாக்கி! நன்றி! :-)]]]

அவசியம் பாருண்ணே.. பார்த்துட்டு சொல்லுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ananthu said...

நரேன் சுத்தியலுடன் நடந்த காட்சியை நானும் ரசித்தேன் , ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் "பேட்மேன் , ஸ்பைடர் மேன்" என்றெல்லாம் வசனம் பேசியபோது தியேட்டரில் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அந்த அளவிற்கு சகிக்க முடியவில்லை. அஞ்சாதே பிரசன்னா நிச்சயம் நரேனைவிட பல படி மேல்.]]]

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை..!

[[[நீங்கள் மிஸ்கினின் மனம் நோகாமல் எழுதிய விமர்சனம் போல் தெரிகிறது. நீங்கள் சொன்னது போல அவர் திறமைசாலிதான்.]]]

மிஷ்கின் கொஞ்சம் வித்தை காட்டத் தெரிஞ்சவர் என்பதால் அவர் மீது கொஞ்சம் மரியாதை இருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Elanthenral Diraviam said...

அனைவருமே ஹீரோ அளவுக்கு
உழைத்திருக்கிறார்கள் - பாராட்ட வேண்டிய விஷயம்
இறுதி அரைமணி நேரம் யூகிக்க முடியாத காட்சிகள் # கடைசி வரை யூகிக்க முடியாமலேயே போய்விட்டது.
நரேன் வில்லனாக நடிக்கவில்லை, வில்லனாக வாழ்ந்திருக்கிறார் - மிஷ்கினுக்கும் யூ டிவிக்கும்.]]]

அப்பாடா.. ஒரு பாஸிட்டிவ் விமர்சனமாவது வந்திருச்சு.. நன்றிகள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

இது அவரது படைப்பின் மீது எழுந்த விமர்சனம் மட்டுமே. இந்த பீடிகைகள் நேற்று வரை எழுதிய விமரிசனங்களில் காணவில்லையே. உண்மைத்தமிழனுக்கு என்ன ஆச்சு?]]]

படம் நல்லாயில்லை என்று வந்திருக்கும் விமர்சனங்களெல்லாம் மிஷ்கின் மீதான தனிப்பட்ட கோபம் காரணமாய் எழுந்தவை என்றே நான் உறுதியாக நம்புகிறேன். அதனால்தான் இதில் இப்படி குறிப்பிட வேண்டியதாகிவிட்டது..!

[[[படம் பார்த்து வந்த நண்பன் உங்கள் விமரிசனத்தைப் படித்து விட்டு சொன்னது "ஆனாலும் இந்த சவக்களை நரேனுக்கு இவர் ரொம்பதான் கொடி பிடிக்கிறார். மிஷ்கின் ஜீனியஸ்தான். சொல்லப் போனால் ஓவர் ஜீனியஸ்(ப்ளஸ் ஓவர் அலட்டல்) மிஷ்கினின் படங்களுக்கு முக்கிய எதிரியே இந்த ஓவர் ஜீனியஸ்த்தனம்தான்"]]]

அவரது கருத்துக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துவிடுங்கள்..! திறமைசாலி பேசத்தான் செய்வான்..!

[[[இருந்தாலும் " ச்சே " என்று செல்லமாகத் திட்டி விடுவீர்கள் என்பதால் விமரிசனம் மிக அருமை என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.]]]

உங்களது அன்புக்கும், பண்புக்கும் எனது வந்தனங்கள் நண்பரே..!

முத்தரசு said...

நேரம் கிடைத்து வாய்ப்பு அமைந்தால் பார்கிறேன் - நன்றி

உண்மைத்தமிழன் said...

[[[மனசாட்சி™ said...

நேரம் கிடைத்து வாய்ப்பு அமைந்தால் பார்க்கிறேன் - நன்றி.]]]

அவசியம் பாருங்கள் நண்பரே..

வவ்வால் said...

அண்ணாச்சி,

//அப்பாடா.. தப்பிச்சோம்டா சாமி.. வவ்வால்ஜி.. இனிமே எல்லா பதிவுலேயும் இதே மாதிரி 2 வரில பின்னூட்டம் போட்டுட்டு போயிட்டீங்கன்னா புண்ணியமா இருக்கும்..!
//

பக்கம் பக்கமா எழுதி சரித்திரம் படைக்கும் சாதனையாளர் நீங்களே கொஞ்சம் பெருசா பின்னூட்டம் போடும் எனக்கு ஆதரவு தெரிவிக்கலைனா ...இந்த லோகத்திலே யாருண்னே ஆதரவு தெரிவிப்பா ?

அச்சு ஊடகத்தில் ஒரு படைப்பு எப்போ வரும்னே தெரியாது,அப்படியே வந்தாலும் நம்ம படைப்பை குறிப்பிட்டு யாராவது சொல்வாங்களான்னு உத்திரவாதமே இல்லை, ஆனால் இணையத்தில் நாம எழுதி உடனே வெளியிடலாம், அதற்கு உடனே ,ஒரு ரியாக்‌ஷனும் பார்க்கலாம், அப்படி ஒரு வசதி இணைய ஊடகத்தில் மட்டுமே இருக்கு.

அதில் விரிவா கருத்து சொல்லுறவங்க எத்தனை பேரு இருப்பாங்க, எல்லாம் நல்ல பகிர்வு த.ம.9 வகையறாக்கள் தான் ...ஏதோ நான் பதிவை முழுசா படிச்சிட்டு பேசுப்பொருளை ஒட்டி பேசினால் ... எல்லாம் அய்யோ சாமி என்பது , படைப்பாளியை உயர்த்தாது விரைவில் பொலிவிழந்து காணாமல் போகவே செய்யும்.

"தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டிங்கன்னு" சொல்லியே கவுத்துடுவாங்க :-))

புகழ்ச்சி அந்நேரம் இனிமையாக இருக்கும் ஆனால் அழித்துவிடும் ,இகழ்ச்சியோ ,விமர்சனமோ தான் மேலும் உத்வேகம் அளிக்கும்.

புகழ்ச்சியை விட கொடிய விஷம் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை :-))

ஹி..ஹி ரெண்டு வரின்னு சொன்னா விட்ருவோமா, இப்படி 10 வரியில் மீண்டும் ஒரு பின்னூட்டம் போடமாடோம்!

முத்துசிவா said...

அண்ணாத்த... படத்த எடுத்தவங்களுக்கு வேணா நீங்க இப்டி எழுதிருக்கது சந்தோஷமா இருக்கும்....
ஆனா பாத்தவங்களுக்கு அப்டி இருக்காது.. ஆத்தாடி... எவளோ பில்ட் அப்பு...

Tamilthotil said...

நடுநிலையான விமர்சனம். மிஷ்கின் படமா என்று இறுதிக் காட்சிகள் கேட்க வைப்பது உண்மை தான்

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

ஹி..ஹி ரெண்டு வரின்னு சொன்னா விட்ருவோமா, இப்படி 10 வரியில் மீண்டும் ஒரு பின்னூட்டம் போட மாடோம்!]]]

போடுங்க.. போடுங்க.. குத்தம் கண்டுபிடிச்சு போடும்போதுதான் சட்டுன்னு இயல்பா கோபம் வருது.. ஏதாவது பதில் சொல்லணும்னு தோணுது.. அது கொஞ்ச நேரம்தான்.. இருந்தாலும் கோபத்தை தவிர்க்க முடியவில்லை.. அதான் சொன்னேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[முத்துசிவா said...

அண்ணாத்த படத்த எடுத்தவங்களுக்கு வேணா நீங்க இப்டி எழுதிருக்கது சந்தோஷமா இருக்கும். ஆனா பாத்தவங்களுக்கு அப்டி இருக்காது. ஆத்தாடி. எவளோ பில்ட் அப்பு.]]]

என்னப்பா இது அவ்ளோ மோசமாவா இருக்கு..? நீங்கள்லாம் முக்கியமான படங்களை மட்டும்தான் பார்க்குறீங்க போலிருக்கு.. அதான் இவ்ளோ கோபப்படுறீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Tamilraja k said...

நடுநிலையான விமர்சனம். மிஷ்கின் படமா என்று இறுதிக் காட்சிகள் கேட்க வைப்பது உண்மைதான்.]]]

அப்பாடா.. நீங்க ஒருத்தராவது ஒத்துக்கிட்டீங்களே.. இது போதும் ராஜா.. வாழ்க நீர்..!

சூனிய விகடன் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

அண்ணாச்சி,

//போடுங்க.. போடுங்க.. குத்தம் கண்டுபிடிச்சு போடும்போதுதான் சட்டுன்னு இயல்பா கோபம் வருது..//

அப்போ எல்லாப்படமும் சூப்பர்னு விமர்சனமா எழுதுறாங்க, அவங்க, நீங்க எல்லாம் குத்தம் கண்டுப்பிடிச்சு பேரு வாங்கத்தான் விமர்சனம் எழுதுறிங்களா?

சிலர் முகமூடி படத்துல புத்தர் சிலை , சாக்ரட்டிஸ் தத்துவம் ,ஹிட்லர் ,சாப்ளின் படம் எல்லாம் வருது இதெல்லாம் செம காமெடின்னு கிண்டல் செய்றாங்க, படத்தில் அதை வைது ஆறுப்பக்க வசனமா பேசினாங்க சைலெண்டா காட்சியில் வருது ,வந்தா என்னன்னு இல்லாமல் குறை சொல்லுறாங்களே ஏன்?

குறை சொல்லி பதிவே போடும் போது குறை சொல்லி கமெண்ட் போட்டா தப்பா...தப்பா..தப்பா!!!

பதிவெழுத இருக்கும் சுதந்திரம் பின்னூட்டம் போடவும் இருக்கு.

பதிவில் எழுதப்படும் விமர்சனத்தினை சம்பந்தப்பட்டவங்க படிச்சா என்ன சொல்வாங்க தெரியுமா? இவங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு விமர்சனம் எழுதுராங்கன்னு தான் :-))

அப்போ நீங்க என்ன சொல்வீங்க?

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, அப்போ எல்லாப் படமும் சூப்பர்னு விமர்சனமா எழுதுறாங்க, அவங்க, நீங்க எல்லாம் குத்தம் கண்டு பிடிச்சு பேரு வாங்கத்தான் விமர்சனம் எழுதுறிங்களா?]]]

எல்லா படத்தையும் இல்லேண்ணே.. என் மனசுக்கு நல்லாயிருக்குன்னு தோணுறத படத்தை மட்டும்தான்..!

[[[சிலர் முகமூடி படத்துல புத்தர் சிலை, சாக்ரட்டிஸ் தத்துவம், ஹிட்லர், சாப்ளின் படம் எல்லாம் வருது இதெல்லாம் செம காமெடின்னு கிண்டல் செய்றாங்க, படத்தில் அதை வைது ஆறு பக்க வசனமா பேசினாங்க.. சைலெண்டா காட்சியில் வருது, வந்தா என்னன்னு இல்லாமல் குறை சொல்லுறாங்களே ஏன்?]]]

இது விமர்சன முறையில் வந்துள்ள பின்னவீனத்துவ விமர்சனம்..! கலை இயக்குநருக்கும் வேலை கொடுக்கணுமில்லையா.. அதுனால காட்சிக்குப் பொருத்தமா ஏதாவது வைக்கணுமேன்னு இயக்குநர் சொல்லியிருப்பாரு. செஞ்சிருப்பாங்க. அவ்ளோதான்..!

[[[குறை சொல்லி பதிவே போடும் போது குறை சொல்லி கமெண்ட் போட்டா தப்பா...தப்பா..தப்பா!!!]]]

தப்பே இல்லை.. தப்பே இல்லை.. தப்பே இல்லை..!

[[[பதிவெழுத இருக்கும் சுதந்திரம் பின்னூட்டம் போடவும் இருக்கு.
பதிவில் எழுதப்படும் விமர்சனத்தினை சம்பந்தப்பட்டவங்க படிச்சா என்ன சொல்வாங்க தெரியுமா? இவங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு விமர்சனம் எழுதுராங்கன்னுதான் :-))]]]

உண்மைதான்.. நானே தயாரிப்பாளர், இயக்குநரா இருந்தா இதைத்தான் யோசிப்பேன்..! பேசுவேன்.. எழுதுவேன்..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

உண்மையான உண்மைத்தமிழன் நீங்க தான், உண்மைய மறைக்காம சொல்லிட்டீங்க. நன்றி!!!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, உண்மையான உண்மைத்தமிழன் நீங்கதான், உண்மைய மறைக்காம சொல்லிட்டீங்க. நன்றி!!!]]]

நன்றி வவ்வால்ஜி..!